Advertisement

மயிலிறகு – 25

 

எழுந்து அமர கூட ஜீவனற்று கிடந்தவர், இப்படி உரக்க குரல் கொடுத்து, தெளிவாக பேச முடியுமா…? என்ற கேள்வி அங்கு இருந்த அனைவரது மனதிலும் ஒரு சேர எழ, முதலில் சுதாரித்தவராக பார்வதி பாட்டி, ” ஏ என்னடி இவ.. இம்புட்டு நேரம் படுத்துக்கிடந்தவ, இப்படி தெம்பா நிக்கிறதும் இல்லாம… இத்தனைக்கும் காரணமான அந்த படுபாவிய நீ கூப்பிடுற, அவன் உள்ள இருந்து வரான்… இங்க என்ன கூத்து நடக்குது…ஏன் டி இப்ப ஏன் இப்படி சிரிக்கிற…” என்று ஒன்றும் தெளிவாக புரியாமல், அதே நேரம் ஏதோ சரி இல்லை என்று மட்டும் புரிந்துக் கொண்ட பார்வதி பாட்டி கேட்க, அவரது கேள்வியை கேட்ட வேதா அம்மாள், கடகடவென சிரிக்க தொடங்கினார்….

 

“கிழவி…என்ன? ‘டி’ போட்டு பேசுற… நான் இப்ப இந்த ஒட்டு மொத்த சொத்துக்கும் சொந்தக்காரி… இளா கூப்பிடுறா நம்ம ஆளுங்கள…” என்று வேதா அம்மாள், இதுவரை அழைக்காத குரலில் ஆணவம், திமிர் கலந்து கூற, அவர் கூறியப்படியே இளனும் குரல் கொடுத்த இரண்டு நிமிடங்களில் ஆறு நபர்கள் முரடாக வந்து நின்றனர்…

 

“ஏ வேதா.. என்ன பண்ற..? தெரிஞ்சு தான் பண்றியா…” என்று ருத்ரன் உருமியப்படி வேதா அம்மாளின் அருகே வரப்போக, அந்த ஆறு நபர்களும் வேதா அம்மாளை நெருங்க முடியாதப்படி அரணாக வந்து நின்றனர்.

 

“என்ன அண்ணா… எதுக்கு இப்ப உன் அப்பா? அப்பத்தானு எல்லாரும் துள்ளுறாங்க? இன்னும் அண்ணி உன்கிட்ட பத்திரமா வரவில்லையே… அதுவரைக்கும் கோபம்லா நீங்க யாரும் படக்கூடாது….” என்று நக்கல் இழையோடிய குரலில் நிவன் கூற, அப்போது தான் நினைவு வந்தவர்களாக அவ்வீட்டின் பெரியவர்கள் மாற்றி மாற்றி முகத்தை பார்த்துக் கொண்டு, அனைவரும் ஒரு சேர ஆதவனை பார்க்க, ஆதவன் உணர்சிவசப்பட்டதாகவோ, கோபப்பட்டதாகவோ தெரியவில்லை.

 

ஆதவனின் அமைதியை பார்த்த, ராஜ சக்ரவர்த்தி கலங்கியவராக, “ஆதவா… ஏன் அமைதியா இருக்க ? எதுனாலும் வாய் தொறந்து சொல்லிடு… இப்படி மனசுக்குள்ள வைக்காத ராசா…” என்று ஆதவன் அருகில் வர, பார்வதி பாட்டியோ, “ஏன்டா சின்னவனே… சொந்த அண்ணனுக்கே இப்படி துரோகம் பண்ணுவியாடா? எப்படி டா..உன்னால இப்படி ஒரு ஈன செயல செய்ய முடுஞ்சது….?” என்று நிவனை பார்த்து பார்வதி பாட்டி கதறி அழ, பார்வதி பாட்டிக்கு பதிலோ நிவனிடம் இருந்து இல்லாது, ஆதவனிடம் இருந்து வந்தது….

 

“முடியும் பாட்டி… நிவனால கண்டிப்பா செய்ய முடியும் .. ஏன்னா அவன் என் கூட பிறந்தவன் இல்லையே…” என்று அமைதியாக, அதே சமயம் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து ஆதவன் கூற, வேதா, இளா இருவரை தவிர, அங்கிருந்த அனைவரின் திகைத்த பார்வையும் ஆதவனை தழுவியது.

 

“ஆதவா..நீ என்னப்பா சொல்ற? ” என்று கம்மிய குரலில் ருத்ரன் ஆதவன் அருகில் நெருங்க, ஒரு வெற்று பார்வையை தந்தையை நோக்கி செலுத்தினான் ஆதவன்.

 

“எனக்கு தெரியும்பா… நானும் முதல்ல இவுங்க தான் என் அம்மா-னு நினச்சேன்…. ஆனா இவுங்க என் உண்மையான அம்மா இல்லன்னு தெரியாதப்பா கூட என்னால முழுமையா இவுங்ககூட நெருங்க முடியல. அதுக்கான காரணத்தை நான் யோசிக்கல. இல்லை யோசிக்கிற வயசு எனக்கு வரவில்லையான்னு தெரியல… என்னோட 13 வயசுவரை.

 

ஆனா அதுவரை என் வாழ்கை அழகா தான் இருந்தது… உங்க எல்லார் கூடவும். தாத்தா, பாட்டி, என்ன உயிரா நேசிக்கிற அப்பானு… ஆனா அம்மான்னு நான் நம்பின, இவுங்க பாசத்துல மட்டும் ஏதோ நெருக்கம் இல்லாதது போலவே உணர்ந்தே. ஆனா பெரிது பண்ணிக்கல. இப்படி தான் எல்லா அம்மாவும் இருப்பாங்க போலன்னு நம்புனேன்…

 

என்னோட 14-வது வயசுல தான் எனக்கு தெரிய வந்தது…இவுங்க என்னோட வளர்ப்பு தாய்-னு. அதுவும், இவுங்களுக்கு கொடுமை நடந்திருக்குன்னு. எங்க அம்மா உயிரோட இருக்கும் பொழுதே,  என்னோட அப்பா செய்த தவறால, இவுங்க வாழ்க்கையை இழந்துருக்காங்க… அம்மா இறந்த பிறகு, அப்பா பண்ணின தப்புக்கு பரிகராம…நீங்க எல்லாரும் இவுங்க விருப்பத்த கூட கேட்காம கல்யாணம் பண்ணி வைத்திருக்கீங்க….

 

நீதி நேர்மைனு பேசுற என்னோட அப்பாவும், தாத்தாவும் இப்படி நடந்திருப்பாங்கனு அந்த வயசுல என்னால நம்பக் கூட முடியல. ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுத்த என் அப்பா, அதை தட்டிகேட்காம, அந்த பொண்ணையே என் அப்பாக்கு இரெண்டாவது தாரமா கட்டி வச்சு இன்னும் ஒரு தப்பு செய்த என் தாத்தா…

 

என்னோட 14 வயசு வர எனக்கு தெரியாது.. வேதா அம்மா-க்கு இரெண்டாவது தாரமா, அதுவும் என் அப்பாக்கு மனைவியா வாழ பிடிக்கலன்னு. ஆனா அது தெரிஞ்ச பிறகு நான் மனசுளவுல உங்க எல்லாரையும் வெறுத்துட்டேன்….

 

நான் முன் மாதிரியா அத்தனை நாள் நினைத்த என்னோட அப்பா நீங்க இல்லன்னு. அதுனால தான் மெல்ல மெல்ல உங்ககிட்ட இருந்து என்ன நானே தனிமை படுத்திக் கிட்டேன். வேதா அம்மா பார்க்கும் போது எல்லாம் அவுங்க என்கிட்ட சொல்லி அழுதது மட்டுமே எனக்கு நினைவு வரும். அவுங்க வாழ்க்கைய கெடுத்தது என் அப்பானு. அதுனாலா தான் அவுங்களுக்கு மட்டும் நான் மரியாதை கொடுத்தேன்.

 

நான் உங்ககிட்ட இருந்து தனிமைப்படுத்திகிட ஆரம்பித்ததும், நிவன் உங்க கூட ஒட்ட ஆரம்பித்தான்… அதுனால நான் உங்க மேல வச்சுருந்த பாசத்த காட்ட எனக்கு அப்ப தோனல அதுக்கு காரணம் உங்கமீது இருந்த கோவம். அதோட, வேதா அம்மா தான் பிடிக்காத வாழ்க்கைய வாழுறாங்க… அவுங்க புள்ளையாச்சும், உங்க எல்லார் கூடையும் சந்தோசமா, உறவோட சேர்ந்து வாழணும்னு நினைத்தேன். என்னோட பாசமும் சேர்த்து அவனுக்கே கிடைக்கணும்னு நினைத்தேன். எங்க அம்மா உயிரோட இருக்கும் போதே தப்பு செய்த என் அப்பாக்கு தண்டனை கொடுக்கணும்னு நினைத்தேன். ஆனா நான் விலக ஆரம்பிச்சதும், நீங்களும் என்ன பார்க்கல.

 

குடும்பத்தோட இருந்தும், ஒரு குடும்பத்து வாழ்க்கையில கிடைக்கிற பாசம் எனக்கு கிடைக்கல. அந்த பாசத்த நான் என் இழையா கிட்ட தான் பார்க்கிறேன்…

 

அதுனால தான் அவளுக்காக எதையும் செய்ய துணிந்து, இதுல கை எழுத்து போட்டேன்…

 

நிவன் இப்படி பண்ணி இருப்பான்னு நேத்து தான் எனக்கு தோணுச்சு… ஆனா அப்பா………. நீங்க வேதா அம்மாக்கு பண்ணின துரோகத்துக்கு, இது கம்மி தான்… அதுனால தான் நான் கோபப்படல….” என்று நீளமாகவும், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி உச்சரிக்க, ஊரே மெச்ச வாழ்ந்த ருத்ரனும், ராஜ சக்ரவர்த்தியும் கூனி குறுகி பேரன் முன் நின்றனர்.

ருத்ரனோ மனதினுள் அடிவாங்கியவராய் தலை தாழ்ந்து நின்றார்….

 

ஆனால் ஆதவன் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த பார்வதிபாட்டியோ, “ஆதவா… என்ன பெத்த ராசா… என்னையா சொல்லுற? உன்ன நாங்க கவனிக்கலையா… உன்கிட்ட நெருங்கும் போது எல்லாம் இங்க நிக்கிற விஷ நாகந்தான், ‘எனக்கு நான் பெத்த நிவன விட முக்கியம் ஆதவன் தான்… ஆதவன நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன்… அதுல தான் என் நிம்மதி இருக்கு,  நிவன வேணும்னா நீங்க பாத்துக்கோங்க அத்தை… ‘ அப்படின்னு சொல்லி உன்கிட்ட வரும்போது எல்லாம் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தடுத்து வச்சிருந்தா இந்த சதிக்காரி… நீ கொஞ்சம் கொஞ்சமா விலகினபோதுகூட நானும் உம்ம ஐயனும் இந்த பாவிமவட்ட கேட்ட போது, நீ ரொம்ப கோப படுற, முன்ன போல இல்லை… ஒருவேள நாங்க ஏதாவது பேசிக் கேட்டா, நீ கோச்சுகிட்டு வீட்ட விட்டே போய்டுவா, நம்ம தான் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துடோம் அத்தை, எனக்கு அவகாசம் தாங்க… நான் நம்ம தங்கத்த பழயப்படி மாத்திரேன்… இப்ப பேசாதீங்க… அப்படின்னு எங்க வாய மூடிட்டா….” என்று , அவர்கள் பக்கத்து காரணத்தை பார்வதி பாட்டி ஒரு பரிதவிப்போடு கூற, ராஜ சக்ரவர்த்தி, ருத்ரன் என அனைவரும் ஆதவன் இதை நம்பவேண்டுமே என்ற எதிர்ப்பார்போடு அவனை ஏறிட்டனர். ஆனால் ஆதவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

 

இவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்த வேதாவோ, ஒரு பலத்த சிரிப்புடன், “இதோ பாருப்பா ஆதாவ, நான் ஆயிரம் சொல்லுவே.. உம்ம அப்பத்தாக்கு அப்பனுக்கும் எங்க போச்சு அறிவு… ? கிழவி நீ சொல்றது என்னவோ சரிதே… ஆனா உங்க யாரையும் நெருங்கவிடாம, ஆதவன நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன். ஆனா நான் அவன பார்த்துக்கல. இவன் மேல பாசத்த கொட்டி வளர்க்க, நான் என்ன இவன பெத்தவளா? அப்படி நடிச்சது, இவனுக்கும் உங்களுக்கு இருக்க பாசத்த பிரிச்சு என் பையன உங்க கூட ஓட்ட வைக்கத்தே… அப்படியே ஆதவன பத்தி தப்பா சொல்லி குடும்பத்த விட்டு பிரிக்கலாம்னு நினச்சே… ஆனா எங்க, அது நடக்கல.” என்று ஒரு பெருமூச்சுடன் கூறி முடித்தார் வேதா…

 

வேதா கூறியதை கேட்டு இரத்தம் கொதித்தாலும், ருத்ரனுக்கு இப்போது வேதா மீதிருந்த கோவத்தை விட, தன் மகன் தன்னை பற்றி என்ன நினைப்பானோ, தன்னை வெறுத்தேவிட்டானோ, என்ற ஐயமே தலை தூக்கி நின்றது.

 

மகனுக்கு எந்த உண்மை தெரிய கூடாது என்று நினைத்திருந்தாரோ, அந்த உண்மை தெரிந்தவிட்டத்தில் ஏற்பட்ட வலி. அதோடு இத்தனை காலமாய், எந்த தவறை அவர் மறக்க போராடி ஒவ்வொரு நாளும் தோல்வியை தழுவிகிறாரோ அந்த உண்மை, தனது மூத்த மகனின் வாயிலாக கேட்க நேரிட்ட கொடுமை. இது ஒருபுறம் இருக்க, தன்னுடன் வாழ்வது தான் பாக்கியம் என்று கூறிய வேதா, தன் மகனிடம் எதற்காக, இந்த வாழ்க்கையை பிடிக்கவில்லை என்று கூற வேண்டும் என்ற எண்ணமும், அந்த துன்ப வேளையிலும் அவர் நெஞ்சினில் கேள்வியை எழுப்பியது.

 

ருத்ரனின் மனதில் எழுந்த அதே கேள்வி பார்வதி பாட்டியின் நெஞ்சிலும் துளிர்த்தது… “அடியே வேதா… எம் மவ பண்ணினது நாங்க யாரும் சரின்னு சொல்லல… அதுக்காக, அவன் பண்ணின பாவத்துக்காக, உன்ன கட்டாயப்படுத்தியும் நாங்க கண்ணாலம் முடிச்சு வைக்கல. அப்படி இருக்குறப்ப ஏதோ உன்ன எம் மவனுக்கு கண்ணாலம் கட்டி வச்சு, உன் வாழ்க்கைய சீரழிச்சதா எம் பேரன்ட்ட சொல்லி இருக்கியே… இது உனக்கே அடுக்குமா… ஈஸ்வரா… இப்படி நா கூசாம பொய் புழுகுறாளே… அத்தை அத்தைனு எப்படி சுத்தி வந்த, எனக்கு மறுமகள வரது உன்னோட பாக்கியம்னு சொன்னவளா நீ… இப்படி எம் பேர மனச இல்லாது பொல்லாதும் சொல்லி களச்சு வச்சுருக்கியே…. ” என்று மாரில் அடித்துக்கொண்டு பார்வதி பாட்டி அழ, அந்த நேரம் வேதா அம்மாளின் சிரிப்பொலி அந்த அரண்மனையே அதிரும்படி ஒலித்தது.

 

ஆளுக்கொரு மனநிலையில் துவண்டு இருக்க, ஆதவன் மட்டும் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாது, முன்பு இருந்தது போலவே அமைதியாக இருக்க, வேதா அம்மாளின் சிரிப்பை கூட அவன் இலச்சியம் செய்யவில்லை. ஆனால் அவரது சிரிப்பு ருத்ரனுக்கு, ரௌத்திரத்தை கிளப்பியது. மகன் முன் இப்படி நிற்கவேண்டிய சூழ்நிலைக்கு தான் தள்ளப்பட்டதுக்கு வேதா தான் காரணம் என்றும், மேற்கொண்டு சொத்து முழுமையையும் கைப்பற்றியதோடு இல்லாது, இன்னமும் அவரின் மருமகள் இருக்கும் இடத்தை சொல்லாது, ஆணவமாய் சிரிக்கும் வேதாவிடம் ஒரு ருத்ர தாண்டவம் ஆட தயார் ஆனார் ருத்ரன்.

 

“ஏ… இப்ப ஏன் டி இப்படி சிரிக்கிற? உன் வாழ்க்கைய கெடுத்தேன் தான்.. இல்லன்னு சொல்லல. அதுக்காக என் மகன் வாழ்க்கைய பாழாக்கிடாத. இழையினி எங்க இருக்கா… ?

 

சொத்துக்காக தான, அவள கடத்தின. இதோ இப்போதான் உன் கைக்கு மொத்த சொத்தும் வந்திடிச்சே… அப்புறமும் ஏன் டி இப்படி ராட்சசி மாதிரி சிரிக்கிற.. இன்னும் உனக்கு என்ன தான் வேணும். உனக்கு என்ன அந்த அளவு பிடிக்கலைன, நான் நிதானத்துல இல்லாம உன் வாழ்க்கைய கெடுத்தப்பவே, என்ன செருப்பால அடிச்சுருக்கணும். இல்லை உன் கழுத்துல தாலி கட்டும் போதாவது என்ன தடுத்திருக்கணும்.

 

அப்போ எதுவும் பண்ணாம இருந்து, அதுக்கு பழிவாங்குறேன்னு என் புள்ள மனசுல நஞ்ச விதைச்சு, இப்ப எம் மருமவள  எம் மகன்ட இருந்து பிரிச்சு ஏன் டி ஏன் இப்படி பண்ற? நான் பண்ணின பாவத்துக்கு உன்ன ராணி மாதிரி தான வாழ வச்சேன்…” என்று கண்களில் சிவப்பு ஏற, அந்த கட்டிடமே அதிரும்படி அவர் கேட்க, அவர் குரலில் வேதா சற்று நடுங்கி தான் போனார் என்றாலும், அதை வெளிக்கு காட்டாது தைரியமாகவே அவரது கேள்விக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தார்.

 

“என்ன? என்ன சொன்னீங்க? ராணி மாதிரி வாழவச்சீங்க ? சரி தான்…. ராணி மாதிரி மட்டும் தான் வாழ வச்சீங்க… ஆனா நான் வாழ ஆசைப்பட்டது மாதிரி ராணியா இல்லை. ராணியாவே வாழணும்னு ஆசைப்பட்டேன்…

 

அதுக்காக நான் என்ன என்ன செய்தேன்… அப்படிலாம் செய்துக் கூட, நான் ஆசைப்பட்டத அடைய முடியலனா, பொறவு  நான் பண்ணினதுலாம் வீ னாவுல போய்டும்…. ” என்று வேதா குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டே கூற, பார்வதி பாட்டியோ, “நீ பண்ணினது எல்லாமா…? இன்னும் வேற என்ன களவாணித்தன பண்ணி வச்சுருக்க…என் குடிய கெடுத்தவளே சொல்லு டி…” என்று கோபக்குரலில் பார்வதி பாட்டி கேட்க, வேதாவோ சிரிப்புடன், “அட கிழவி… உனக்கு எம்புட்டு வாய்.. என்ன பார்த்து குடிய கெடுத்தவனா சொல்லுற, இருக்கட்டும்… மொதல்ல உனக்கு உன் குடும்பத்துக்கு என்ன செஞ்சேன்னு சொல்லுறே… பொறவு என்ன திட்டுன உன் வாயிக்கு ஒரு வாய் கஞ்சி கூட இல்லாம உன்ன ஓட ஓட ஊரவிட்டே தொரத்துறேன்…” என்று கூறிய வேதாவின் குரலில்,  கோபமும், அதே நேரம் எதையோ சாதித்த வெறியும் கலந்து ஒலித்தது.

 

வேதாவின் பார்வையில் காட்சிகள் விரியதொடங்கியது……

 

‘சக்தி…. வேதாவின் நெருங்கிய தோழி. சக்தி மிகவும் சாந்தமான பெண், வாழ்க்கையில் அன்பும், உண்மையும் மட்டுமே பெரிது என்று நினைப்பவள். வேதா, வாழ்வில் பணம் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவள். இருவரும் நல்ல தோழிகள். ஆனால் வேதாவின் சுயரூபம், சக்திக்கு தெரியவில்லை. அல்லது தெரிவதற்கான சந்தர்ப்பம் அதுவரை அமையவில்லை போலும்.

 

அந்த நிலையில், சக்தியின் தூரத்து உறவான செல்வந்தர் ஒருவர் குடும்பம், சக்தியின் குணநலன்களை கேள்விப்பட்டு, பெண் கேட்க வந்தனர் அன்று.

 

சக்தியை அலங்காரம் செய்த வேதா, சக்தியை மணமகன் வீட்டினர் முன்பு அழைத்து செல்ல, மாப்பிள்ளையான ருத்ரனுக்கு சக்தியை முதல் பார்வையிலேயே பிடித்துப்போக, சக்திக்கும் அதே நிலை தான்…

 

சக்தியின் கண்களுக்கு ருத்ரன், பார்வதி, ராஜ சக்ரவர்த்தி மட்டுமே தெரிய, வேதாவின் கண்களுக்கு வந்தவர்களின் செல்வாக்கும், செல்வமும் மட்டுமே கண்ணில் பட்டது…

 

விரைவாக, சக்தி ருத்ரன் திருமணம் ஆடம்பரமாக முடிய, நாளுக்கு நாள் தோழியின் பெயரில் பொறாமை கொண்டாள் வேதா….

 

ஒரு அரண்மனையில், ராணி போல வாழும் சக்தியை காண வேதாவிற்கு, அந்த வாழ்க்கை மீது பேராசை எழுந்தது. அதே போல செல்வாக்கு உடையவன் தான் தனக்கு கணவனாக வர வேண்டும் என்று எண்ணி இருக்க, வேதாவின் தந்தையோ ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று  ஒரு பலசரக்கு கடைவைத்திருப்பவனை அழைத்துவர, வேதாவின் எண்ணம் சிதைந்து விடுமோ, பணக்கார வாழ்க்கை கிடைக்காதோ என்ற எண்ணம் துளிர் விட தொடங்கியது.

 

அந்த நேரத்தில் ருத்ரனுக்கும் சக்திக்கும் அவர்களது அன்பின் அடையாளமாய் ஒரு ஆண்மகன் பிறக்க, அவனுக்கு ஆதவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

 

குழந்தை பிறந்து 40 நாட்களில், பெயர் சூட்டும் விழா நடக்க, அதற்கு வந்த வேதா… சக்தியின் வாழ்க்கையை பார்த்து பார்த்து உள்ளுக்குள் குமைந்தாள்…

 

வேதாவின் கெட்ட என்னமோ, சக்தியின் விதியோ..எதுவோ ஒன்று, அடுத்து வந்த இரு தினங்களில் சக்திக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவர, மேற்கொண்டு, சக்தியை பரிசோதித்த மருத்துவர்…சக்திக்கு இதயமும் பலவீனமாக உள்ளதாகவும், எந்த ஒரு அதிர்ச்சியான விஷயமும் சொல்லக்கூடாது என்றும், மாத்திரை, மருந்து 6 மாதத்திற்கான பத்திய சாப்பாட்டு முறை என்று அடுக்கடுக்காய் பட்டியிலிட்டு செல்ல, தோழிக்கு உதவுகிறேன், தோழியின் குழந்தையை கவனிக்கிறேன் என்று வேதா அடிக்கடி ருத்ரனின் அரண்மனை வர தொடங்கினாள்….

 

சக்தியின் உடலில் முன்னேற்றமே இல்லாமல் போக, ருத்ரன் மனம் வெம்பி கொண்டு இருந்தார்… இந்த நிலையில் வேதாவின் தந்தை, அவர் பார்த்த மாப்பிளையுடன் வேதாவிற்கு திருமணம் நிச்சயம் செய்துவிட, வேதா உடனடியாக ஒரு முடிவெடுத்தாள்…. அதை செயல்படுத்த நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள் வேதா… அன்று, என்றும் இல்லாத புது பழக்கமாக, ருத்ரன் லேசான தள்ளாட்ட நடையுடன் வர, இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி கொள்ள முடிவு செய்த வேதா, வழக்கம் போல, சக்தியை பார்த்துக்கொள்வதாக சென்று, ருத்ரனுக்கு குடிக்க பால் தருவதாக, அவர் தனித்திருந்த அறை-க்கு சென்றாள்.

 

சிறிது நேரத்தில் வேதாவின் அழுகை குரல் போல கேட்க, அப்புறம் வந்த  பார்வதி பாட்டி கண்டது, அலங்கோலமாய் இருந்த வேதாவையும், தன்னிலை மறந்து கிடந்த ருத்ரனையும்.’

 

இதுவரை தனது எண்ணத்தை கூறிய வேதா, இதை சொல்லிவிட்டு, மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் ருத்ரனின் முகத்தை கவனிக்க, அவரோ தலை நிமிர முடியாமல் நின்றார்.

 

அதை பார்த்த வேதா, நக்கல் இழையோட சிரிக்க, எரிச்சலான ருத்ரன், “அன்னைக்கு நான் ஒரு நாள் பண்ணின பாவத்துக்கு இப்படி, இப்படி ஆட்டி படச்சுருக்கியே டி… ஆனா அதுக்கூட, இப்படி நீ திட்டம் போட்டு வந்திருப்பனு நான் நினைக்கவே இல்லையே….

 

ச்சீ… உன்ன போய்….” என்று மேலும் சொல்ல முடியாமல் அவர் கண்கள் சிவக்க, உதடு துடிக்க பேச, வேதா அதற்கும் சிரித்து வைத்தார்…

 

“சபாஷ்… நல்லா கோபம் வருதே… இதுக்கே இம்புட்டு கோபம்னா, அப்ப உண்மைலயே அன்னைக்கு நீ என்ன நாசம் பண்ணவே இல்லன்னு சொன்னா உமக்கு எம்புட்டு கோபம் வரும்… ” என்று கூறிவிட்டு, மீண்டும் நக்கல் இழையோட சிரிக்க, அவர் சொல்வதின் அர்த்தம் புரிந்த ருத்ரன், வேதாவின் கழுத்தை நெரிப்பதற்காய் அவரை நெருங்க, அந்த 6 அடியாட்களும் மீண்டும் வேதாவிற்கு அரணாய் வந்தனர்.

 

“அட…ஆதவா..என்ன உன் அய்யனுக்கு இம்புட்டு கோபம்.. உன் பொண்டாட்டி இன்னும் என் கைல தான் இருக்கா…” என்று ஆதவனை பார்த்து கூற, ஆதவன் “அப்பா…” என்று அழுத்தமாக குரல் கொடுக்க, ருத்ரன் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாதவராய் நின்றார்.

 

பார்வதியும், ராஜ சக்ரவர்த்தியும், ஒரு நல்ல பாம்பை வீட்டிற்குள் விட்ட முட்டாள் தனத்தை எண்ணி வேதனை கொள்ள, மகிழனோ நடப்பவைகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

“ஹா… எங்க விட்டேன்… ஹ்ம்ம் நீங்க குடிச்சிட்டு வந்தது என் வாழ்க்கைய நாசம் பண்ணினதுல… ஏங்க உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ? நீங்க அன்னைக்கு உங்க அறைக்குள போனதுமே விழுந்துட்டீங்க… ஏதோ முனங்கிகிட்டே கிடந்தீங்க… என்னனு கிட்ட போய் உத்து கேட்டா… ‘சக்தி சக்தி’ னு ஒரே உளறல், சரி நீங்க வேலைக்கு ஆகமாட்டீங்க, நம்ம தான் ஏதாவது பண்ணனும்னு நினைக்குறப்ப, உங்க அறை பக்கம் இந்த கிழவி வந்தது… சரி இந்த சந்தர்ப்பம் பயன்படுத்திகிடலனா இந்த வாழ்க்கைய அனுபவிக்க முடியாம போய்டும்னு, உங்க மேல பழிய போட்டேன்…. எல்லாரையும் நம்ப வைத்தே, உங்களையும் சேர்த்து.

 

சரி நம்மகூட கல்யாணம் பண்ணி வைப்பானுங்கனு பார்த்தா, இந்த பெருசுங்க ரெண்டும் சக்தி இருக்கும் போது ரெண்டாதாரமானு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க.

 

சரி அந்த சக்தி இருக்குறவர ஒன்னும் ஆவபோறது இல்லனு முடிவு பண்ணி, அவ அறைக்கு போய்… நீங்க என்ன கெடுத்துடீங்கனு சொல்லி லேசா கண்ண கசக்குனே…

சரியான சீக்காளி போல அவ, பொட்டுனு செத்து போய்ட்டா..

 

பொறவு, புள்ள மேல பாசத்த பொழியிறது போல நடிச்சு, இவன் கிட்ட என்ன அம்மா அம்மானு சொல்லி கொடுத்து என்னஎன்னமோ பண்ணி இவரு கையாள தாலி வாங்குனா, இந்த மனுசே நான் இருக்க திசை பக்கமே வராம, அந்த சக்தி போடோ கூடவே குடும்ப நடத்திக்கிட்டு திரிஞ்சாரு….

 

இப்படியே 4 வருஷம் ஓடிட, மெல்ல மெல்ல இவரு மனச கரைச்சு, முடிஞ்சளவு நடிச்சு, எனக்குனு ஒரு வாரிச பெத்துக்க முடிவு பண்ணினேன். நடக்கவும் செஞ்சது. ஆனா என் தங்கம் இளா பொறந்த பொறவு மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏற, எம்புள்ளகிட்ட முகம் கொடுத்து இவரு பேசவே இல்லை.

 

எப்ப பார் ஆதவன் ஆதவனே சுத்துனாரு… பேசாம இவன கொண்ணுடலாமனு கூட யோசிச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது சொத்து பூராவும் இந்த கிழவன், இந்த பையன் பொறந்ததும் சந்தோசத்துல இவன் பேருல எழுதிட்டான்னு…

 

இப்ப அந்த சக்தி பெத்த மவன கொண்ணுட்டா, அப்படினு யோசித்தப்ப தான் தெரிஞ்சது, இந்த பிசாசுக்கு ஏதாச்சும் ஆச்சுன, அம்புட்டு சொத்தும்  கோவிலுக்கு போயிடுமாம்….

 

அதுனால கொஞ்ச வருஷம் அமைதியா இருக்குறது போல நடிச்சேன்… வீட்ல எல்லாரும் ஆதவன் ஆதவனு தலைல தூக்கி வச்சு கொண்டாடுறத பார்க்க சகிக்கல. அதுனால, அவனுக்கு விவரம் புரியிற வயசுல, அவன் காதுக்கு நான் அவனோட சித்தின்னு போறது போல ஏற்பாடு பண்ணினேன். என்கிட்டே அவன் கண்ண கசக்கிட்டு வந்து கேட்டப்ப, அவனைவிட நான் அதிகமா அழுது, அவனோட சொந்த அப்பா, தாத்தா, பாட்டின்னு எல்லாரு மேலையும் வெறுப்ப ஏற்படுத்தினேன்…

 

அப்பவாது, இந்த ஆதவன் பையன் வீட்ட விட்டு ஒடுவான்னு எதிர்ப்பார்த்து, நான் இதை பண்ணினா, இவன் என்னடான வீட்ட விட்டு ஓடாம, இங்கயே இருந்து இன்னும் என்கிட்டே மட்டும் நெருக்கமானான்.

 

மத்தவங்கள வெறுக்க ஆரம்பித்தான். சரி இதுவும் நல்லதுக்கு தான்னு .. எல்லாருக்கிடையும் இவன ஒரு திமிர் பிடிச்சவனா காட்ட ஆரம்பிச்சேன்… எம் மவன, இந்த வீட்டு செல்ல புள்ளையா ஆக்குனேன்…

 

இவன படிக்கவிடாம, பரதேசியாக்க முடிவு பண்ணி, விவசாயம் பாருன்னு சொன்னா, இவன் அந்த விவசாய படிப்பே படிச்சு, என் திட்டத்துல மண்ணள்ளி போட்டுட்டான்… எம் மவன, கம்பூட்டர் படிப்பு படிக்க வச்சேன்….

 

எல்லாத்தையும் இந்த ஆதவன் ஒன்னு ஒண்ணா தப்பிச்சிட்டே வந்தான்… அது எல்லாம் தப்பிச்சா கூட, ஆதவனுக்கு கல்யாண விசயத்துல நான் தோற்க கூடாதுன்னு, உறுதியா இருந்தேன்…ஆதவனுக்கு கல்யாணம் ஆனாத்தான பிரச்சன்னை…அதுனால அந்த பேச்சே எடுக்காம இருந்தே, அவனோட 29 வயசு வர.

 

ஆனா இந்த கெழவி நச்சரிக்க தொடங்கவும், வேறு வழி இல்லாம, அவனுக்கு ஒரு பொண்ண பார்க்க முடிவு செய்தேன். என் விருப்பபடி.

 

இந்த பட்டிக்காட்டுல வாழாம, வெளிநாட்டுக்கு கூப்டற பொண்ணு, இல்ல அப்பா செல்லம், ஒரே வாரிசா இருக்க பொண்ணுனு தேட முடிவு பண்ணேன் ….

 

ஒண்ணு இந்த பய, வெளிநாடு போகணும் இல்ல வீட்டோட மாப்பிள்ளையா போகணும். அப்பத்தான் அதே காரணம் காட்டி இந்த சொத்த எம் மவன் பேருக்கு மாத்த முடியும். அப்படி பட்ட பொண்ணா, நான் உசுரு கொடுத்து தேட, இந்த ஆதவா எதுக்கும் ஒத்துவரல. விவசாயம் ஊரு மண்ணு மண்ணாங்கட்டின்னு பேசிட்டு திரிஞ்ச்சான்….

 

அப்பத்தான் தற்செயலா, அந்த இழையினி கல்யாணத்துக்கு போனது. கல்யாணம் நிண்ட போது என் மனசுல தோணின ஒரே விஷயம், “திருமணம் வரை வந்து நின்று போன பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானது… நிச்சயம் இதுக்காகவேணும் ஏதாவது செய்யணும்”  அப்படிங்கிறது தான்….

 

அட உடனே என்ன தப்பா புரிஞ்சுக்காதீங்க, அதாவது இப்படி மோசமான நிலையில வாழ்க்கை கொடுத்து கூப்பிட்டு வந்தால், நாளைக்கு இதை வச்சே அவள பத்தி ஆதவன் கிட்ட தப்பா சொல்லி, இவள வீட்ட விட்டு தொரத்தி, ஆதவன பொண்டாட்டி இல்லாதவனா வாழவைக்கலாம். அடுத்து, கல்யாணம் எதுவும் பண்ணாம, அவன் வாழ்க்கைய, பட்டு போன மரமா மாத்தலாம்னு திட்டம் போட்டு தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.

 

ஆனா என்னோட திட்டம் ஒரே நாள்ல தவிடு பொடி ஆகிடிச்சு… எல்லார்க்கிட்டையும் இந்த ஆதவனும், இழையினியும் ஆசிர்வாதம் வாங்குன பொழுது தான் தெரிஞ்சது, அவள பத்தி இந்த ஆதவன்ட்ட ஒரு வார்த்தை கூட தப்பா சொல்ல முடியாதுன்னு….

 

ஏன்னா… இந்த குடும்பத்தோட பரம்பர சங்கலி, புதுசா தாலி கட்டிட்டு வந்திருந்த அந்த இழையினிகிட்ட. கல்யாண முடிஞ்சதுல இருந்து கூடவே இருக்கேன்… இந்த ஆதவன் அதுக்குள்ள சங்கலிய கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. அதோட கோத்தகிரி போயிட்டு வந்த பிறகு, ஆதவன் கழுத்துல அந்த சங்கலிய நான் பார்க்கல.

 

அப்படினா, இவுங்களுக்கு முன்னாடியே பழக்கம் இருக்குனு புரிஞ்சது.

 

அடுத்து இவள எப்படி தொறத்தலாம்னு திட்டம் போட்டேன்… அப்ப தான் நம்ம செவ்வந்தி, அபசகுனமா ஏதாவது பண்ணி, அதுக்கு இழையினிய காரணம் காட்டி, அவளே இங்க இருக்க பிடிக்காம ஓட வைக்கலாம்னு சொன்னா…

 

அதுக்கான என் முதல் திட்டம் தான் வைகோல் தீ. தீ வச்சதும் நான் தான், அந்த தீ, இவ ராசி இல்லாதவனு வதந்தியா மாத்தினதும் நான் தான்…. அவ மனசுல குழப்பத்த ஏற்படுத்தத்தான், அவளுக்கு சமாதனம் சொல்றது போல, நானே அவள ராசி இல்லை, அபசகுனம்னு வருத்தப்பட  கூடாதுன்னு மறுபடியும் மறுபடியும் ஆறுதல் போல, அவள் மனசுல பதியிறது போல அழுத்தி சொன்னேன்.

 

இரண்டாவது திட்டமா, அவகிட்ட ஒரு கனமான புடவைய கொடுத்து கட்ட சொன்னேன்… என் திட்டப்படி கோலம் போடசொன்னேன், அவ கோலம் போடும் போது, செவ்வந்திய விட்டு மண்ணெணைய முந்தானைல ஊத்த சொன்னேன்….

 

லேசான புடவைனா ஒருவேள இவள் கோலம் போட்டு முடிக்கும் முன்ன காய்ந்துக் கூட போய்டலாம், அதான் அந்த மண்ணெண்ணெய் சீலைல இருந்து வெரசா உலர்ந்திடாம, அது சொட்டுற அளவு கனமான சீலை கொடுத்தேன்.

 

நெருப்பு பத்தனும்னு திட்டம் போட்டு தான், பூஜை அறை முழுக்க அகல் தீபம் ஏற்றி வச்சேன். என்ன நான் அவள காப்பதலாம், இன்னும் கொஞ்சம் புடவை எரியட்டும், அப்பத்தான் அவ பயப்படுவான்னு காத்திருந்தேன்… அதுக்குள்ள இந்த ஆதவன் முந்திரிக்கொட்டையாட்டம் முந்தி பொண்டாட்டிய காப்பாத்திட்டான்…..

 

சரி இதை வச்சு, காய் நகர்த்தலாம்னு பார்த்தா, அவ என்னடானா, உருகி உருகி ஆதவன் காயத்துக்கு மருந்து போட்டு எல்லார் மனசுலையும் இடம் பிடிச்சிட்டா…. வேற வழி இல்லாம என் வாயாலையே பாராட்டா வேண்டியதா போச்சு…

 

சரி-னு அடுத்த திட்டத்த, அவளோட அப்பன் வரும்போது பண்ணலாம்… மகள எல்லாரும் அபசகுனமா பார்க்குறது தெரிந்தால், பொண்ண உசுரா நினைக்கிற அந்த பெரிய மனுஷன்  ராகவன், சண்ட போடுவாரு…. குட்டைய குழப்பி சண்டைய பெருசாக்கி,  நான் குளிர் காயலாம்னு யோசித்து, செவந்திட்ட ஒரு நல்ல பாம்ப கொண்டுவர சொல்லி, மாடு பக்கத்துல போட்டு ஏற்பாடுலாம் நல்லாத்தே பண்ணே… ஆனா அதையும் அந்த வீனா போன இழையினி மருந்து மாயம்னு அந்த பசுவ காப்பாத்தி என் திட்டத்த நாசம் பண்ணிட்டா…

 

சரி இது எதுவும் வேலைக்கு ஆகலையே..அடுத்து என்ன பண்ணலாம்னு யோசித்தப்பதான் எம் மவன் சிங்ககுட்டியாடம் வந்தான்… வந்தவன் கல்யாண போட்டோ பார்த்துட்டு, ஏதோ திட்டம்மிருக்குன்னு சொல்லிட்டு, இனிமேல் அவுங்கள பிரிக்கிற வேலைய அவன் எடுத்துகிறதா சொல்லிட்டான்….” என்று கூறி முடித்து, வேதா அம்மாள், இளநிவனை பெருமையாக பார்க்க, நிவனோ அதை விட பெருமையாய் தாயை பார்த்தான்…

 

இதுவரை வேதா கூறிய உண்மைகளை கேட்ட அனைவரும் ஓவ்வொரு மனநிலையில் நின்றிருக்க, ஆதவன் மட்டும் தளர்ந்து அமர்ந்திருந்தான்… அவனது நெஞ்சம் முழுவதும் ரணமாக வலித்துக் கொண்டு இருந்தது… அவன் மனமோ, “என்னதான் நான் உங்கள அம்மா அம்மானு சுத்தி வந்தாலும், உங்ககிட்ட ஒரு விலகல் இருந்துட்டே இருந்தது. அது காரணம் எண்ணலா அப்ப சரியா புரிஞ்சிக்க முடியவில்லை. ஆனா நீங்க என்கிட்டே சொன்ன கதைய நம்பி, என்ன உயிரா நேசித்த அப்பா, தாத்தா, பாட்டிகிட்ட இருந்து என்ன நானே விளக்கி வச்சுக்கிட்டேனே… சொத்த அடையறதுக்கு இந்த தாய் பாசம் தான் கிடைத்ததா… ? அப்போ முழுக்க முழுக்க நான் முட்டால இருந்திருக்கேன்… அம்மா அம்மா னு இவுங்கலையா நான் கூப்பிட்டேன்… இவுங்க அம்மா இல்லை சித்தினு தெரிந்த போது கூட வலிக்காத இதயம், நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு பொய் தாய் பாசத்த உண்மைன்னு நம்பி ஏமாந்திருக்கேன்….. அப்படின்னு தெரிந்த போது ரொம்ப வலிக்கிறது ” என்று அவன் மனம் எண்ணி, எண்ணி எது உண்மை எது பொய் என்று எதையும் நம்பமுடியாமல் சிறு குழந்தை போல, பாசத்திற்கு ஏங்க தொடங்கியது.

 

ராஜ சக்ரவர்த்தியும், பார்வதி பாட்டியும்… தன் மகன் மீது நம்பிக்கை இல்லாமல், வேதா சொன்னதை நம்பி, இத்தனை கீழ்தரமானவளை, தனது மகனை கட்டாயப்படுத்தி, இவளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்க்கையில் மன்னிக்க முடியாத பாவத்தை செய்ததாக, தங்களுக்குள் வெம்பிக் கொண்டு இருந்தனர் அந்த வயதான தம்பதியர்.

 

இவர்கள் நிலை இப்படி என்றால் ருத்ரனோ நொறுங்கி அமர்ந்துவிட்டார்…

 

இப்போது பேசுவது நிவனின் முறை ஆகிற்று.

 

“அட எல்லாரும் என்ன இப்படி ப்ரீஜ் ஆகி நிக்குறீங்க… இப்படி உங்க எல்லாரையும் பார்க்க கண் கொள்ளா காட்சியா இருக்கு… நான் உங்க எல்லார்க்கிட்டையும் எப்படி கலகலப்பா பேசுனேன்… தாத்தா பாட்டின்னு சுத்தி சுத்தி வந்தேனே… எனக்கும் 24 வயசாச்சு… இப்பவாவது, எனக்குனு சொத்து எழுதி வைக்கணும்னு தோணிச்சா…

 

அவ்ளோ ஏன் இந்த வீட்டு பன்ணையாளுங்க கூட, அவன ஐயனும் என்ன தம்பின்னும் கூப்பிடறாங்க… அப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும்… எதுனால அவன அய்யான்னு கூப்பிடுறானுங்க..எல்லாத்துக்கும் காரணம் சொத்து. அந்த சொத்து என் கைக்கு வரணும்னு முடிவு பண்ணினேன்…

 

இந்த வீட்ல எதுக்கு எடுத்தாலும் ஆதவன் ஆதவன். அவன் உங்களலாம் சீண்டக்கூட மாட்டான். ஆனா நீங்க எல்லாரும் அவன தலை தூக்கி வச்சு கொண்டாடுனீங்க..அது எனக்கு சுத்தமா பிடிக்கல.

 

அதுனால, அம்மாவோட யோசனைப்படி வெளிநாட்டுக்கு போற பொண்ணா இவனுக்கு கட்டி வைக்க முடிவு பண்ணேன். அது எப்படி செய்யலாம்னு யோசித்தப்பதான் அந்த கோத்தகிரி ட்ரிப் பிளான் ஆச்சு….

 

அங்க போன முதல் நாளே, நான் அண்ணிய பார்த்துட்டேன்… ஆதவா, சாரி டா… சும்மா சொல்லக்கூடாது, இழையினி செம ஹோம்லி… நாம அங்க போன, முதல் நாள் ஈவுனிங்கே பார்த்துட்டேன் அண்ணிய. அழகா இருக்காங்களேனு கொஞ்ச தூரம் பாலோ பண்ணினேன். ஆனா இவுங்க போய் அங்க இருக்க ட்ரைப்ஸ் கிட்ட பேசினப்பதான் தெரிந்தது இந்த பொண்ணு செட் ஆகாதுன்னு… இது லேடி ஆதவன்னு தோணிச்சு.

 

அப்ப தான் எனக்கு அந்த ஐடியா வந்தது…எக்காரணம் கொண்டு இந்த பொண்ண நீ மீட் பண்ணக்கூடாதுன்னு. இது போல ஒரு பொண்ணு மட்டும் எனக்கு அண்ணியா வந்தா, என்னோட அப்புறம் அம்மாவோட பிளான் க்ளோஸ்.

 

சரி நீ எங்க அவுங்கள பார்க்க போறன்னு அசால்ட்ட விட்டுடேன். ஆனா மறுநாள் காலையிலையே நீ ஏதோ ஆட், சூட் னு கதை சொல்லி அண்ணிய தேட கிளம்பிட்ட. ஆனா அண்ணி போகிறபோதே நான் பார்த்துட்டேன்.

 

எங்க நீ அவுங்கள மீட் பண்ணி இருப்பியோ அப்படின்னு தான் வேக வேகாம வந்தேன். அப்புறம் உன்ன சமாளித்து, நான் அவுங்க போன பாதையில போய், இழையினி அண்ணிக்கு பதிலா, அங்க இருந்த வேற ஒரு பொண்ண காட்டிட்டேன்….

 

அது தான் நம்ம ஆரியன் அண்ணா பொண்டாட்டி…. அவனிக்கா… பார்த்தே…செம ஸ்டைல இருந்தாங்க. சரி எப்படி ஆச்சும், இந்த பொண்ண உன்கூட சேர்த்து விட்டுட்டா, நிச்சயம் எங்க பிளான் சக்சஸ்னு நினைத்து, சுடலை மூலமா, இழையினி அண்ணி பத்தி விவரங்கள உன் காதுக்கு வரவச்சேன்…. அந்த டீடைல்ஸ் கேட்டு நீயும் இம்ப்ரஸ் ஆகுன.

 

ஆனா… அந்த விவரங்களுக்கு சொந்தக்காரியா அவனிக்காவை உன்கிட்ட காண்பித்திருந்தேன்.

 

ஆனா நீ அவனிக்கா பார்த்து இம்ப்ரெஸ் ஆகததுனால, அவுங்கள ரூம்க்கே கூப்பிட்டு வந்தேன். ஒரு வேளை, அவுங்க அழக பார்த்து இம்ப்ரெஸ் ஆகலாம்னு. எது எப்படியோ இழையினி போல பொண்ணு மட்டும் உனக்கு அமைய கூடாதுன்னு உறுதியா இருந்தேன்.

 

பட் ரூம் வந்த பொழுதே நீ கண்டுபிடிச்சிட்ட, அவனிக்கா வேறனு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசித்தப்பதான், தற்செய்யலா இழையினி ஊருக்கு போற வண்டிய பார்த்தேன்.

 

தாங்க காட்… அப்படினு காட்க்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு உன்ன பார்த்தேன். உனக்கும் சுடலை மூலமா, நீ லவ் பண்ணின பொண்ணு கிளம்பிட்டானு தெரிய வந்தது.

 

சோ நான் என்ன நினைத்தேனா, நீ எப்படியும் அந்த பொண்ண பார்க்காம, தாடி வைத்து சுத்துவ, சோ உனக்கு மேரேஜ் இப்போதைக்கு இல்ல. இன்னும் சில வருசங்கள் போகும்னு நினைத்து, நான் சந்தோசமா என் பிரண்ட்ஸ் கூட ட்ரிப் கிளம்புனேன்…

 

ஆனா… நீ அவுங்களையே கல்யாணம் பண்ணினது எனக்கு ஷாக் தான்….” என்று கூறி முடித்தான் நிவன்.

 

“அடப்பாவி…. நீயா எல்லாத்துக்கும் காரணம். நேத்தே என் நண்பன் சொன்னான்… அவனோட யூகம் சரியா போய்டுச்சு… இப்பதான் புரியிது.. நீ ஏன் கோத்தகிரில, அந்த பொண்ண தேட அவ்ளோ ஆர்வம் காட்டினணு. ஏன்டா… உனக்கு போய் ஆதவன் நல்லது செய்யணும்னு நினைத்தானே டா… ச்சீ.. அப்போ, இங்க ஆரியன் அவனிக்கா வந்ததாவது எதார்த்தமா இல்லை அதுவும் உன் வேலையா…?” என்று கோபத்துடன் மகிழன் கேட்க, நிவனோ வேதா அம்மாளின் மகன் என்பதை நிரூபிக்கும் விதமாய் பலமாக சிரித்தான்.

 

“வாவ் கரெக்ட் மகிழ் அண்ணா… அட அண்ணா லாம் உனக்கு எதுக்கு.. வெறும் மகிழனே போதும். சூப்பர் மகிழன், அதுவும் என் வேளை தான்… அவுங்க இரண்டு பேரையும் நான் திருச்சி ஏர்போர்ட்ல பார்த்தேன்… அவுங்க ஆரியன் வீட்டுக்கு போறது தான் பிளான்… நானும் சரினு அவுங்கள பெருசா மைண்ட் பண்ணல. பட் வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது, பொண்ணு இழையினினு… சரி அப்படின்னு வேகமா யோசித்து, திருச்சில ஆரியன் அப்பா இல்லாதனால, ரூம் போட்டு தங்கி இருந்தவங்கள, நான் போன் போட்டு இங்க வரவச்சேன்….

 

அதுக்கு அப்புறம் ஆதவன் பத்தி சந்தேகம் வர்றது போல இழையினி அண்ணிக்கும், இழையினி அண்ணி பத்தி சந்தேகம் வரதுக்காக ஆதவன்கிட்டையும் சில கேம் ப்ளே பண்ணேன். அதுக்கான காயின்ஸ் தான் ஆரியன் அப்புறம் அவனிக்கா அண்ணி…

 

கேம் சக்சஸ் தான்… இரண்டு பேரும் பேசுறத நிறுத்துனாங்க…பட் அது போதாதே, இழையினி அண்ணி வீட்டவிட்டுல போகணும். அதுக்கு என்ன செய்றதுன்னு திங் பண்ணினப்பதான், என்னோட மாம் ப்ரில்லியண்டா ஐடியா பண்ணாங்க….

 

இப்படி சோகமா இருக்கிற இழையினிய அவுங்க அப்பா பார்த்தால், நிச்சயம் ஏதாவது சண்டை வரும் அப்படின்னு நினைத்து எங்க மாம் அவர வரவைக்க, வந்தவரு பொண்ண சமாதனம் பண்ணினது மட்டும் இல்லாமல், மாப்பிள்ளையும் சமாதனம் செய்ய கிளம்பிட்டாரு….

 

சரி அங்க போய், பாலோ பண்ணி பார்க்க, ஆதவன் அவர லெப்ட் ரைட் வாங்கிட்டான்,…. அட இது சூப்பர் நியூஸ் ஆச்சேன்னு… அம்மா கிட்ட ஓடோடி வந்து சொன்னா, அந்த டைம் கரக்டா அப்பா வந்தாரு… சோ அம்மா எனக்கு ஏதோ அட்வைஸ் பண்றது போல சமாளிச்சிட்டு வேகமா போய்ட்டாங்க.

 

சரி நம்மளே, இதை அண்ணி காதுக்கு போறது போல பண்ணலாம்னு, அண்ணி வருவத கன்பார்ம் பண்ணிக்கிட்டு ஆதவன் கிட்ட பேச, அதை அண்ணி கேட்க, கண்டிப்பா நிரந்தரமா பிரிந்திடுவாங்கனு உல்லாசமா பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிட்டு வந்து பார்த்தால், அதுக்கு அப்புறம் பெவி க்விக் போட்டு ஒட்டுனது போல இரண்டு பேறு ஆகிட்டாங்க….

 

அடுத்து என்ன டா பண்றதுன்னு நானும் அம்மாவும் யோசித்தோம்….

 

அப்ப தான், எங்களுக்கு மாணிக்கம் பத்தி தெரிய வந்தது…. அதுனால அவன இங்க வரவச்சு… இழையினி அண்ணிய கடத்திட்டு, இரண்டுபேரும் ஓடி போயிட்டதா நம்பவைக்கலாம்னு பிளான் பண்ணினோம். என்னதான் அண்ணன் லவ் பண்ணினாலும், இழையினி அண்ணி இரண்டு நாள் காணமல் போயிட்டு வந்தா, ஆதவன் சதேகப்படாட்டிக்கூட, மத்தவங்க நிச்சயம் சந்தேகப்படுவாங்க… ஏன்ன காட் சீதாவவே சந்தேகப்பட்ட மக்கள் நம்ம மக்கள். ஆப்டரால் இழையினிய சந்தேகப்படமாட்டங்களா….. இதுல கண்டிப்பா கசமுசா வரும், நிச்சயம் இதுல நீங்க பிரியிரதுக்கு வாயிப்பு அதிகம்னு நினைத்தோம்.

 

அதுக்காக, ஒரு நாள் முன்னமே இழையினி அண்ணியோட ட்ரெஸ் எல்லாம் எடுத்து எங்க அம்மா ரூம்ல ஒழித்து வைத்து, அவுங்க எழுதுனது போல லட்டெர் ரெடி பண்ணி… இப்படி நிறைய வேளை பண்ணினேன்.

 

ஆனா நான் அந்த மாணிக்கத்துக்கு பணம் தருவத, இந்த மகிழன் பார்த்துட்டான்… அவன் பார்த்த அடுத்த செகண்டே யோசிக்க ஆரம்பிச்ச்ட்டேன். அடுத்து என்ன செய்யலாம்னு.

 

ஏன்ன கண்டிப்பா இந்த மகிழன் உண்ட வந்து ஒப்பிப்பான்… நிச்சயம் நீ என்ன கார்னர் பண்ணுவனு. அப்போ அம்மாவும் நானும் அவசரமா திட்டம் போட்டோம்.

 

அதோட வீட்டுக்கு வந்து யோசிக்கும் போது.. நான் சொன்ன படி சரியா மாணிக்கம் வந்தான்… ஆனா நான் அவ்ளோ சொல்லியும் அந்த ராஸ்கல் குடிச்சிட்டு வந்திருந்தான்… இப்படி குடிச்சிட்டு வந்தவன் எப்படி இழையினிய கடத்தமுடியும். அவனுக்கு அவனோட வேட்டியே இடுப்புல நிக்கல. இவன் எப்படி பொண்ண தூக்க. சரி இருந்தாலும் இவனும் இருக்கட்டும்…. குழப்பங்கள் உருவாகும்னு நான் அவன தடுக்கல.

 

இன்னும் எத்தன நாள் தான் ஒவ்வொரு திட்டமா போடறது, அதுல இருந்து நீ தப்பிக்கிறது. அதுனால இந்த முறை ஒரேடியா மொத்த சொத்தையும் எழுதி வாங்க முயற்சி செய்தோம்….

 

உன்னோட கவனத்த திசை திருப்ப, இழையினி அண்ணிய பாதுக்காப்பான இடத்துல மறைத்து வைக்கணு எங்களுக்கு டைம் தேவை பட்டுச்சு….

 

அதுக்காக தான் எனக்கு நானே போட்டுக்கிட்ட குடிகாரன் வேசம், அம்மாக்கு நெஞ்சு வலி வேசம் எல்லாம். நாங்க நினைத்தது போலவே, உன் கவனம் அம்மா மீதும், பொண்டாட்டி மீது பாதியா சிதறுச்சு.

 

செவந்திய இழையினி அண்ணிக்கிட்ட அனுப்பி, உனக்கு விபத்துன்னு சொல்ல வச்சு, அதைக்கேட்ட அவங்க உடனே அலறிப்புடைச்சுட்டு அவள் பின்னாடியே போய்ட்டாங்க . அந்த சமயத்துல,  குடிகாரன் வேசம் போட்டிருந்த நான், சுத்தி போய் அந்த மாணிக்கத்தை ஓரங்கட்டி அடைச்சுப்போட்டுடேன்..

இப்படி எங்க மாஸ்டர் பிளான்ல  நீங்க எல்லாம் கன்பியுஸ் ஆகிடீங்க…அதிலயும் என் அம்மாவோட ஆஸ்க்கர் நடிப்புல… நீங்க இழையினிய மறந்தே போய்டீங்க…

 

அத நாங்க சரியாய் யூஸ் பண்ணிக்கிட்டோம்…

 

இப்ப மொத்த சொத்தும் எங்ககிட்ட….. ” என்று கூறி ஒரு வஞ்சக சிரிப்பை தவழவிட்டான் இளநிவன்.

 

அனைவரும் கேட்ட அனைத்தையும் ஜீரணிக்க முடியாமல் அசையாத கற்சிலையாய் சமைந்திருக்க, ஆதவன் முகம் அப்பொழுதும் நிர்மலமாக இருந்தது.

 

அதை பார்த்த நிவனோ மனதினுள், ‘தன்னை இத்தனை நாளாய் மட்டம்தட்டிய ஆதவன் இன்று வாயடடைத்து தன் முன் தோல்வியை தழுவி அமர்ந்திருப்பதாய் நினைத்தான்….’

 

அவனே மேற்கொண்டு தொடர்ந்து, “அம்மா…இந்த சொத்து முழுக்க வந்த போது கூட எனக்கு இவ்ளோ சந்தோசம் இல்லை மா… ஆனா நம்ம பண்ணினதுலாம் சொல்ல, இவனுங்க ஒண்ணும் பேசமுடியாம, அதே  சமையம் நம்மள கொல்லுற அளவு வெறி இருந்தாலு கூட, இழையினி அண்ணிக்காக கோவத்த கட்டுப்புத்தி, தலைய வெட்டுன கோழி போல தொங்க போட்டு நிக்கிறத பார்த்தா…. ரொம்ப, ரொம்ப சந்தோசமா இருக்கு….” என்று கூறி நகைக்க, வேதா அம்மாளின் சிரிபொலியும் நிவன் சிரிபோடு கலந்து ஒலித்தது.

 

அப்போது சரியாக, கடல் அலைகளை கிழித்துக்கொண்டு முன்னேறும் படகின் முகப்பை போல, அவர்களின் சிரிப்பு சத்தத்தை கிழித்துக்கொண்டு ஆதவனின் கை தட்டல் ஒலிக்க, தாயும் மகனும், ஆதவனின் செயலுக்கு காரணம் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்தனர்.

 

Advertisement