Advertisement

மயிலிறகு – 24

 

எந்த பாதத்தை கண்டு காதல் கொண்டானோ, எந்த பாததடத்தை பின் தொடர்ந்து அவளை அறிய முயன்றானோ, அதே பாத தடங்களை கொண்டு இன்றும் அவளை தேடுகிறான் ஆதவன். அன்று…அப்பெண் யார் என்று அறிய அவளை தேடினான்…இன்று அவனின் உயிரே அவள் தான் என்று அறிந்து தேடுகிறான்….

 

அந்த பாத சுவடுகள் ஓர் இடத்தில் முடிந்துவிட, அவ்விடத்தில் இரு பாதைகள் செல்ல, அதில் ஒன்று சாலையுடன் இணைவது என்றும், மற்றொன்று அவனது தேங்காய் கிடங்கு என்றும் அறிந்தவன், உள்ளுணர்வின் அடிப்படையில் தேங்காய் கிடங்கை நோக்கி நடைப்போட்டான்….

 

அந்த தேங்காய் கிடங்கு, பெரிய அளவு இருக்காது..காய்களை இறக்கியதும் அனுப்பிவிடுவதனால், சிறிய அளவிலே தேங்காய்களை அங்கே கிடப்பில் போடாவென சிறிய அளவில் கட்டப்பட்ட ஒரு ஓட்டு வீடு…அதில் தேங்கைகளை நிரப்பி வைக்க ஓர் அறையும், அதை தவிர ஒரு நிலவறையும் மட்டுமே இருக்கும்… அதில் யாரையும் ஒழித்து வைத்தல் கடினமே… அந்த ஓட்டு வீட்டில் நுழைந்ததும், வேகமாக கண்களை சுழலவிட்ட ஆதவனுக்கு ஏமாற்றமே… அங்கே தேங்காய்களை தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை…..

 

மறுபுறம் சிலம்பு கற்றுக்கொள்ள சென்று இருந்த மகிழன், நிவனை பற்றி தகவல் கூற, ஆதவன் வீட்டுக்கு வர, நடந்தவைகளை கேட்டு மகிழன் குழப்பத்தில் ஆழ்ந்தான்… ஆதவனின் வருகைக்காக காத்திருந்த மகிழன், ஒரே ஒரு முறை மட்டும் சென்று, வேதா அம்மாளின் நிலையை பார்த்துவிட்டு வந்தான்… சென்று வெகுநேரம் ஆகியும், ஆதவன் வீட்டிற்கு திரும்பாமல் இருக்க, பொறுமை இழந்த மகிழனோ ஆதவனுக்கு அழைக்க, ஆதவன் சற்று நேரத்தில் வருவதாகவும், மகிழன் அதுவரை ஆதவனுக்காக அங்கே இருக்கும் படியும் கூற, மகிழனும் ஆதவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான்….

 

சிறிது நேரத்தில் வந்த ஆதவன் முகத்தில் குழப்பங்கள் அதிகமாக மண்டிக்கிடப்பதை மகிழன் தெளிவாக உணர்ந்துக் கொண்டான்…. வந்தவன், மகிழனிடம், “ஒரு நிமிடம் மகிழ், வேதா அம்மாவ பார்த்துட்டு வரேன்…” என்று கூறியப்படி உள்ளே செல்ல, வேதா அம்மாள் உறங்கிய நிலையில் இருந்தார்….

 

அப்படி அவர் இதுவரை ஓர் நாள் கூட படுத்து பார்த்திராத ஆதவனுக்கு மனதில் ஒரு வலி தோன்றியது… பார்வதி பாட்டியை அழைத்த ஆதவன், வேதா அம்மாள் மருந்து உண்டார்களா என்று வினவ, அவர் இல்லை என்றும்.. மருத்துவர் கொடுத்த மருந்தை பார்வதி பாட்டி அலமாரியில் வைத்தார் என்றும் கூற, ஆதவன் சென்று..அது என்ன மருந்து என்று பார்த்து…வேதா அம்மாளை மெல்ல எழுப்பி..கொஞ்சம் சுடு கஞ்சியும், அந்த மாத்திரைகளையும் கொடுக்க, வேதா அம்மாள் மாத்திரை வேண்டாம் என்று மறுக்க, ஒரு குழந்தைக்கு கொடுப்பது போல், அவரை வற்புறுத்தி உண்ண வைத்தான் ஆதவன்….

 

அதை சாப்பிட்ட சில நிமிடங்களில், அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல…. மணியை பார்க்க அது இரவு 9 என்று காட்டியது… வெளியில் தனக்காக காத்திருக்கும் நண்பனின் நினைவு வந்தவனாக ஆதவன் சென்றாலும், அவனின் மனம் முழுவதும், அவனின் இழையாவே நிறைந்திருந்தாள்….

 

“நண்பா.. நடந்தது எல்லாம் கேள்விப்பட்டேன் டா… ராகவன் சார் கிட்ட சொல்லிட்டியா ? இந்த இளா பையன் ஏன் இப்படி நடந்துக்கிட்டான்…. தங்கச்சி எங்க போச்சு டா” என்று உண்மையான பரிதவிப்போடு கூறினான் மகிழன்.

 

ஆதவனிடம் எதுவும் பதில் இல்லை… தலை முடியை அழுந்த கோதியப்படி, இருகைகளையும் கொடுத்து, அவனது தலையை தாங்கியபடி  அமர்ந்திருந்தான் ஆதவன்…

 

அவனின் நிலை புரிந்தாலும், மகிழன் மனதில் முளைத்த சந்தேகத்தை இப்பொழுதே சொல்வது தான் சரி என்று தோன்ற, அதை மெல்ல பீடிகையுடன் ஆரம்பித்தான் மகிழன்…

 

“நண்பா..அது வந்து நான் இணைக்கு கும்பகோணம் ரூட் ல… இளாவ பார்த்தேன் டா.. நம்ம இழையினி அத்தை மகன்னு அவன் பேருக் கூட..ஹான் மாணிக்கம், அவன் கூட. இளா பணம் கொடுக்க, அந்த குடிகாரன்..இளா கிட்ட ஒரு பாட்டுல கொடுத்தான் டா… அப்போ அதை பார்த்ததும் உன்கிட்ட இதை ரவைக்கு (ராத்திரிக்கு) வந்து பேசணும்னு நினைத்தே… ஆனா அதுக்குள்ளே என்னவெல்லாமோ நடந்துருச்சு….

 

எனக்கு ஒன்னும் புரியல டா… ஆனா நான் பார்த்ததுக்கும் இதுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குனு மட்டும் புரியிது…அதான் உன்ட சொல்லலாம்னு….” என்று வாக்கியத்தை முடிக்காமல், மகிழன் இழுக்க… மகிழனின் மூலம் அறிந்த தகவலை ஒருமுறை மனதினுள் ஓடவிட்டு பார்க்க தொடங்கினான் ஆதவன்.

 

அவன் மனதில் ஓட்டி பார்த்ததும், வேகமாக மாறனை அழைத்தான் ஆதவன்….

 

“மாறா… இழையினி மாமான்னு ஒருத்தன் வந்தான்ல, அவன் வந்தது இருந்து, நடந்த எல்லாத்தையும் ஒரு முறை மறுபடியும் சொல்லு….” என்று அவனது கம்பீரமான குரலில் கூற, மாறனோ மீண்டும் ஒருமுறை கூறினான்… அவன் கூறுவதை இடையிட்டு தடுத்த ஆதவன், “இழையினி தோப்புக்கு போறதா, உன்கிட்ட யாரு சொன்னது..? இல்லை நீயே பார்த்து சொன்னியா… ” என்று கேட்க, மாறனோ, “அய்யா..நான் பார்க்கல, சின்ன அம்மா கிட்ட சொல்றதுக்காக வீட்டுக்குள்ள போனேன்… அப்ப நம்ம சின்ன தம்பி தான்…அண்ணி தோப்புக்கு கிளம்பிட்டாங்கன்னு சொல்லுச்சு…. அதை தான் அந்த ஆளு கிட்ட சொன்னேன்….” என்று கூற, அதை குறித்துக் கொண்ட ஆதவன், அடுத்த கேள்வியை மாறனிடம் கேட்டான்….

 

“நீ அப்போ இளன் கிட்ட பேசும் பொழுது…அவன் தண்ணி அடிச்சிருந்தானா? ” என்று வினவ, மாறனோ யோசித்துவிட்டு, இல்லை என்பதாய் தலை அசைத்தான் …. உடனே அடுத்த கேள்வியாக…” நீ இளன்ட்ட பேசுனது எப்போ? அப்புறம் இளன் வீட்ல வேதா அம்மா கூட தகராறு பண்ணினது எப்போ…. நினைவு இருக்க… ” என்று கேட்க, மாறனோ தலையை சொரிந்தப்படி, “நேரம் சரியா தெரில… குடுதாழிக்கு புண்ணாக்கு கலக்க போனேன்… கலக்கிட்டு இருக்கும் போதே வீட்டுக்குள்ளாற சத்தம் கேட்கவும் ரெண்டு தொட்டி கலந்ததோட வந்துட்டேன்…” என்று கூறினான்.

 

அதற்கு மேல் மாறனிடம் கேட்க எதுவும் இல்லை என்பதை உணர்ந்த ஆதவன், அவனை அனுப்ப, நண்பனின் கேள்விகளுக்கு காரணம் புரியாமல்  அவனே மேற்கொண்டு கூறட்டும் என்பது போல மகிழன் அமைதி காத்தான்…..

 

ஆனால் மகிழன் எதிர்ப்பார்த்தது போல எதுவும் கூறாமல், ஆதவன் அப்புறமும் இப்புறமும் நடை பழக, சிறிது நேரம் ஆதவனின் சிந்தனையை கலைக்காமல் மகிழன் அமைதி காத்தான்… பிறகு பொறுமை இழந்தவனாக, “நண்பா…. இழையினிய காணோம்…இன்னும் அவுங்க வீட்டுக்கு தகவல் வேற சொல்லல… எங்க எந்த முடிச்சு இருக்கு…எப்படி அவிழ்க்கிறது அப்படின்னு எதுவும் புரியல… ஆனா நீ எதுவும் சொல்லாம இப்படி இருக்க, பேசாம ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போமா டா..?” என்று மகிழன் கேட்க, ஆதவனோ தனது நடையை நிறுத்தி விட்டு நிதானமாக திரும்பி பார்த்தான்… பிறகு ஏதோ முடிவு செய்தவனாக, மகிழனை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு சென்றான்….

 

மாடியில் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு, ஆதவன் பேச தொடங்கினான்….

 

“மகிழ் நீ சொல்றது போல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்… ஆனா இதுல வேற ஒரு விஷயம் இருக்கு.. அவளோட மாமான் இழையாவ தேடி குடி போதைல வந்தது, இழையா எதார்த்தமா என்ன பார்க்க போனதுன்னு, இது இரெண்டையும் இணைச்சு பேசுவாங்க… கம்ப்ளைன்ட் கொடுகுறதுனால எனக்கு கௌரவ குறைச்சல் வந்தா சரி, ஆனா என் இழையா பேரு எங்கையும் தப்பா வந்திடக் கூடாது….

 

உனக்கு தெரியாத மகிழ், ஒரு பொண்ண காணோம்னு நம்ம ஸ்டேஷன் போனால், முதல்ல அவுங்க கேட்குற கேள்வி…பொண்ணு யாரையும் லவ் பண்ணுச்சா… ? பொண்ணுக்கு பிடிச்ச கல்யாணமா? இல்லை பிடிக்காத கல்யாணமா…? இது தான் அவுங்களோட முதல் கேள்வியா இருக்கும்..இதை நம்ம எதிர்த்து கேட்டா… நாங்க எங்க கடமையா செய்றோம்னு சொல்லுவாங்க….

 

யாரோ ஒருத்தன் என் இழையா பத்தி விமர்சிக்கிறத நான் விரும்பல” என்று கூறினான்.

 

“அதுமட்டும் இல்லை… இதுல வேற ஒன்னு இருக்கு…” என்று தொடர்ந்த ஆதவன், சில நிமிடங்களுக்கு பிறகு, அவனே மீண்டும் பேச்சை தொடங்கினான்…

 

“மகிழ்… இந்த பிரச்சன்னைக்கு எல்லாம் காரணம் இளநிவன்-னு தோணுது… ஒரு யூகம் தான் ஆனா அது நிச்சயம் சரியா தான் இருக்கணும்…. ஏதோ ஒரு காரணத்துனால நிவன்க்கு நான் இழையினியை விரும்புறது பிடிக்கல…. அது மட்டும் இல்லை எங்கள பிரிக்கணும்னு அவன் முயற்சி பண்ணி இருக்கான்… ” என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் அமைதிகாட்க, மகிழனுக்கோ ஆதவனின் அமைதி மேலும் குழப்பத்தை தந்தது… ஆதவன் சொல்வதை நம்பவும் முடியாமல், அதே சமயம், ஆதவன் யோசிக்காமல் பேசுபவன் இல்லை என்று அறிந்த அவன் மனம், மேலும் அவன் கூறிய விஷயத்தை எண்ணி குழம்பியது…

 

“நண்பா என்ன சொல்ற டா..? ” – குழப்பம் நிறைந்த குரலில் மகிழன்.

“நிஜம் தான் மகிழ், அன்னைக்கு கோத்தகிரில நான் தேடுற பெண் இழையினி-னு தெரிந்தும், அவன் என்கிட்ட இருந்து இழையினிய மறைத்து, அவனிக்காவை காட்டி இருக்கான்… அது மட்டும் இல்லை, பார்வைக்கு அவனிக்காவை காட்டிய அவன், இழையினியோட குணங்கள சுடலை மூலமா என் காதுக்கு எட்டுறது போல வேலை பார்த்திருகான்…இது இன்னைக்கு சாயுங்காலம் தான் சுடலை மூலமா எனக்கு தெரிய வந்தது…

 

அது மட்டும் இல்லை….

 

அவனிக்கா, ஆரியன் வந்த போது… வேணும்னே இழையினி காதுப்பட, அவனிக்காவை நான் தேடி அலைந்ததாகவும், அவனிக்காவை பற்றி விஷயங்கள் சேகரித்ததாகவும் சொல்லி இருக்கான்….

 

இழையினி மனசுல என்ன பத்தி ஒரு தவாறன எண்ணம் உருவாக… ” என்று கூறி முடித்து மகிழனை பார்க்க, மகிழனோ இன்னமும் குழப்பம் தெளியாமல், “இதை சொன்னா, அப்படியே இழையினி உன்ன தப்பா நினைக்குமா ? ” என்று புரியாமல் கேட்டான் மகிழன்.

 

“நினைக்கமாட்டா… ஆனா குழப்பம் வரும்ல… ஏன்னா… நான் கோத்தகிரி-ல இவள் தான் நான் நேசிக்கிற பொண்ணு-னு தெரியாமல் இவள்கிட்டையே, நான் வேற ஒரு பொண்ண காதலிக்கிறதா சொல்லிடேன்… அதுனால நிவன் குழப்புறதுக்காக சொன்ன விஷயங்கள், இழையினி மனசுல..அவனிக்கா என் முன்னால் காதலின்னு பதிய ஆரம்பிச்சிடுச்சு… ” – ஆதவன் முகத்தில் கோவம் துளிர்க்க ஆரமபித்தது…

 

“என்ன சொல்ற நண்பா… நம்ம நிவனா?” – என்று ஆதங்கம் குரலில் தொனிக்க ஒலித்தது மகிழனின் குரல்.

 

“அது மட்டும் இல்லை… அன்னைக்கு தோப்புல…” என்று தொடங்கிய ஆதவன், அவனிக்கா அன்று ஆற்றில் தவறி விழுந்த சம்பவத்தை சுருக்கமாக கூறினான்….

 

“சரி, இதுக்கும் நிவனுக்கும் என்ன சம்மந்தம்…. ? ” புரியாமல் மகிழன் கேட்க,

 

“இருக்கு டா… நிறையவே, அவன் தான் அவனிக்காவ என்ன பார்க்க சொல்லி இங்க அனுப்பி இருக்கான்… அதை அவளே என்கிட்ட சொன்னா… பிறகு இழையினிக்கிட்ட குடைய கொடுத்து என்ன பார்க்க அனுப்பி இருக்கான்.. அதன் பின்ன, அவனிக்காவ தேடி ஆரியான அனுப்பி இருக்கான்… இப்படி எல்லாமே அவன் திட்டம் போட்டு செய்திருக்கான்.. எதையோ எதிர்ப்பார்த்து, அவனிக்காவும் ஆரியனும் என்கிட்ட இதை பேச்சு வாக்குல சொன்னாங்க… ஆனா இழையினி அதுக்கு பிறகு என்ன விட்டு ரொம்ப விலகி போக ஆரம்பிச்சிட்டா… நானும் தான்… பிறகு எங்களுக்குள்ள நாங்க சந்தேகத்தை பேசி முடித்த பிறகு தான், அன்னைக்கு நிவன் சொல்லிதான் வந்ததாக சொன்னா.. அது மட்டும் இல்லை, அவள் மன குழப்பங்களுக்கும், நிவன் அவனிக்காவின் பேச்சு தான் காரணம்-னு சொன்னா… அப்போ நான் பெருசா எடுக்கல….பட் இப்ப எல்லாம் சேர்த்து பார்த்தால், நான் யோசிக்கிற படி தான் நடந்து இருக்கும்னு தோணுது…. ” – என்று முழுவதுமாக கோவத்தை உள்ளடக்கிய குரலில் கூறினான் ஆதவன்.

 

“அப்ப… நம்ம வீட்ல நடந்த அசம்பாவிதங்கள், அது எல்லாம் கூட நிவன் பண்ணி இருப்பானா? ஆனா அவன் அப்ப இங்க இல்லையே… ”  என்று தனது சந்தேகத்தை முன் வைத்தான் மகிழன்.

 

“அதை இனி தான் தெரிஞ்சுக்கணும் மகிழ்…. ” ஆதவன் பிருவங்கள் முடிச்சிட, ஆழ்ந்த யோசனைக்கு சென்றான்…

 

“சரி, இத்தனை வேலை பார்த்தவன், அதுக்கு பிறகு ஏன் எதுவும் செய்யல…இன்னைக்கு ஏன் திடிர்னு அந்த மாணிக்கத்தை பார்க்கணும்…?” என்று தனது அடுத்த கேள்வியை கேட்க, ஆதவனோ சிறு யோசனையின் பிறகு…”அநேகமா, நிவன் அந்த மாணிக்கத்தோட பகைய தெரிந்து, அவன் பகைய, இவனுக்கு சாதகமா பயன் படுத்த முயற்சி செய்திருக்கலாம்…

 

அவன இங்க வரவைத்து, தற்செய்யலா போன இழையினிய, அவன் கூட சம்பந்த படுத்தி பேசி, பழில இருந்து இவன் தப்பிச்சிட்டு… என் மனசுல இருந்து இழையினியை நிரந்தரமா பிரிக்க முயற்சி செய்திருக்கலாம்… ” என்று கூற, மகிழனோ, “அது எப்படி டா.. இவன் இவ்ளோ பெரிய திட்டத்த போட்டுட்டு, குடிச்சு நிதானம் இல்லாம போயிருப்பான்…ஒரு வேலை, அந்த மாணிக்கமே இழையினிய மறைத்து வைத்திருப்பானோ…” என்று கேட்டான் மகிழன்.

 

“அதுக்கு வாய்ப்பு இல்லை… மாணிக்கம் வரும் போது நிதானத்துல இல்ல..அதுவும் அவன் தனியா தான் வந்திருக்கான்… இழையாக்கு அவனை சமாளிக்கிறது ஒரு விஷயம் இல்லை…

 

அதே சமயம், மாறன் சொன்னத கவனிச்சியா… அந்த மாணிக்கம் வந்த போது… குடி இல்லாம நிதானமா இருந்த நிவன், அடுத்த 10 இல்ல 15 நிமிஷத்துல குடி போதைக்கு வந்திருக்கான்…

 

அவ்ளோ சீக்கிரம், நிதானம் இழக்குற அளவு போதை வருமா…? அதுனால அவன் குடித்திருக்க வாய்ப்பு இல்லை… குடிக்காமலே நடிச்சு, வீட்ல இருக்கவங்களோட கவனத்தை திசை திருப்பி இருக்கான்….

 

இப்படி தான் நடந்து இருக்கணும்னு தோணுது… இழையினி காணமல் போனதுக்கு நிச்சயம் நிவன் தான் காரணமா இருப்பான்…ஆனா அவன் இப்படி எல்லாம்.. அதுவும் அண்ணன் வாழ்க்கையில இவ்ளோ குழப்பத்தை அவன் ஏன் ஏற்படுத்துறான் அப்படிகிறது தெரியல… ” என்று தனது யூகத்தையும், விளக்கத்தையும் ஆதவன் சொல்லி முடிக்க, “அப்போ , இழையினி-ய இப்ப எங்க வச்சுருப்பான் நிவன் ? ” என்று மகிழன் கேட்டான்…

 

ஆதவன் அமைதி காட்க, மகிழனோ, “டே இவன பத்தி நம்ம யோசிக்கிறத விட்டு இழையினிய தேடலாம் டா.. ” என்று படபடக்கும் குரலில் மகிழன் கூற, ஆதவனோ, “இல்லை.. .இழையினிய நிவன் கடத்தல, ஆனா ஏதோ பொய் சொல்லி அவளையே அவன் இங்க இருந்து போக வைத்திருகான்…” என்று கூறிய ஆதவன், அவன் ஆற்றங்கரையில் இருந்து நடந்த விஷயங்களை எடுத்து கூறினான்….

 

“அதுனாலா, இழையினிக்கு பிரச்சனை வராது… அதோட, ராகவன் அப்பா கிட்ட, அந்த மாணிக்கத்தை எங்க இருந்தாலும் தேட சொல்லி தகவல் சொல்லி இருக்கேன்…

 

இழையினிக்கு எதுவும் ஆகாது.. நான் சொல்றதுலாம் சரினா… நிச்சயம் இதுக்கு எல்லாம் காரணம் நிவனா தான் இருப்பான்… அவன் தஞ்சை வழியாவோ, கும்பகோண வழியாவோ…எங்கையும் போகாம இருக்க, நான் ஏற்பாடு பண்றேன்…” என்று கூறி அவன் கை பேசி எடுக்க, சரியாக அந்த நேரம் ஆதவனுக்கு அழைப்பு வந்தது….

 

அழைப்பை ஏற்று ஆதவன் காதுக்கு கொடுக்க, மறுமுனையில் ஒலித்தது இளநிவனின் குரலே….

 

“அண்ணா…அண்ணிய தேடி தேடி அலைஞ்சு களைச்சு போயிருப்பீங்கணு நினைக்கிறேன்… அதான் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல கால் பண்ணேன்… என்ன தான் இருந்தாலும் நீங்க என் அண்ணனாச்சே… நீங்க ரொம்ப வருத்தப்பட கூடாதுன்னு தான் கால் பண்ணேன்….

 

என்ன அண்ணா நான் பேசுறத கேட்டு ஷாக்கா இருக்கா…அல்லது நான் தான் இதை செய்தேனு கெஸ் பண்ணிட்டீங்களா.. ?

 

சரி எது எப்படியோ… இப்ப நான் மேட்டர்க்கு வரேன்… அது என்னனா….நாளைக்கு காலையில, என்னோட ஆளுங்க ரெண்டு பேறு… டான்னு 10 மணிக்கு அங்க இருப்பாங்க… அவுங்ககிட்ட சில பத்திரங்கள் இருக்கும்… அது என்ன ஏது-னு எதுவுமே படிச்சு பார்க்காம, நீயும் வேதா அம்மாவும் அதுல கை எழுத்து போடணும்… பத்திரம்..ரொம்ப பத்திரமா என் கைக்கு வந்தால் மட்டுமே உன்னோட காதல் மனைவி உன்கிட்ட வருவாங்க…

 

என்னடா… நான் என்ன பண்றேன் .. ஏன் இதுலாம் பண்றேன்…என்ன பத்திரம் இப்படி எதுவுமே புரியாதே உனக்கு… இப்ப புரியவேனாம்… என் கைக்கு பத்திரம் வந்ததும், உனக்கு எல்லாத்தையும் நான் விளக்கமா சொல்றேன்…

 

போலிஸ் கீலிஸ்னு போகாத, ஏன்னா உன் பொண்டாட்டிய உயிரோட பார்க்க முடியாது…. எப்பவும் நினச்சத சாதிக்கிற பழக்கம் உனக்கும் மட்டும் இல்லை அண்ணா…உன்னோட தம்பி எனக்கும் இருக்கு… ” என்று கூறியப்படி அழைப்பை துண்டித்தான் இளநிவன், ஆதவனின் இளையவன்…….

 

ஆதவன் அழைப்பை ஏற்ற நொடி இருந்து, எதுவுமே பேசாமல் அழைப்பில் சொன்ன செய்தியை மட்டும் கேட்டுக் கொண்டு இருக்க, மகிழனுக்கோ இருப்பு கொள்ளவில்லை.

 

“நண்பா..யார்டா போன் ல….?” என்று கேட்க, ஆதவனோ அமைதியாக…இளநிவன் கூறியதை கூறினான் மகிழனிடம்…

 

“டே..நம்ம பார்த்து வளர்ந்தவன்டா…அவனுக்கு இவ்ளோ திமிரா… பத்திரம்னு தான சொன்னான்… அப்போ இது எல்லாம் சொத்துக்காக பண்றானோ…அப்படி பண்ணினா ஏன்டா உங்கள பிரிக்க பார்க்கணும்… ? ஏன் வேதா அம்மாவையும் கை எழுத்து போட சொல்றான்….” என்று மகிழன் கேட்க, ஆதவனோ, “இது தாத்தா வழி சொத்து, என் பேருல எல்லா சொத்தையும் தாத்தா என் பேருக்கு சின்ன வயசுலையே…அதாவது நிவன் பிறக்குறதுக்கு முன்னாடியே எழுதி வைக்க, நிவன் பிறந்த பிறகு, அப்பா புதுசா வாங்கின ஒரு சில சொத்துக்கள, வேதா அம்மா பேருல வாங்குனாரு….. அதுனால இருக்கலாம்…. ” என்று இலகுவாக கூற, மகிழன் கோவத்தால் கொதித்தான்.

“நண்பா… எப்படி டா.. நீ பதறாம இருக்க..எனக்கு அவன் மேல வர கோவம் கூட உனக்கு ஏன் வரல டா… ?” என்று ஆதங்கத்துடன் ஒலித்தது மகிழனின் குரலில், ஆதவனின் அமைதியை பார்த்து.

 

“கோபப்பட்டா.. பதட்டப்பட்டா பிரச்சனைல இருந்து வெளில வர முடியாது… இதுல இருந்து வெளில வரது மட்டும் தான் முக்கியம்…. இப்போ கோப படுற நேரம் இல்லை…கோப படுறதுக்கு நேரம் வரும்… என்னோட சிந்தனை எல்லாம் இப்ப இழையா பத்தி மட்டும் தான்….” என்று ஆதவன் தீர்கமாக ஆரம்பித்து, வருத்தம் இழையோடிய குரலில் முடித்தான்…

 

“சரி இப்ப என்ன தான் பண்ண போற…?” – மகிழன் நண்பனிடம் கேட்க, “காலையில தெரியும் மகிழ் உனக்கு… இப்ப எனக்கு சொத்தை விட, இழையா மட்டும் தான் முக்கியம்… அதுனால நாளைக்கு காலையில 10 மணி வர காத்திருக்க போறேன்…. ” என்று கூறிய நண்பனை விசித்திரமாக பார்த்தான் மகிழன்.

 

“நண்பா… இழையினியை மாணிக்கம் கூட சம்பதபடுத்த தானே அவன் அப்படி செய்திருப்பான்னு நீ சொன்ன…? இப்ப ஏன் நிவனே களத்துல இறங்கி இருக்கான்…?” என்று மகிழன் கேட்க, ஆதவனோ, “அதுக்கு காரணம் நீ… நீ அவனை பார்த்ததுனால் வந்த மாற்று திட்டம்…இப்படி இருக்கலாம்…. ஆனா அதை அவன் தான் சொல்லணும்…பார்போம் நாளைக்கு என்ன சொல்றான்னு… ” என்று கூறிய ஆதவன், அமைதியாக எழுந்து தூரத்து இருளை வெறித்துக் கொண்டு நின்றான்.

 

இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்த ஆதவன், யாருக்கோ அவ்வபொழுது தொலைபேசியில் அழைத்து தகவல் பரிமாற, நண்பனின் செய்கையில் இருந்து எதுவும் கண்டுக் கொள்ள முடியாமல், இத்தனை வருடம் பழகிய நிவன் தான் இதற்கு பின்னால் இருக்கிறான் என்பதை மனதால் ஏற்கவும் முடியாமல் தடுமாறி போனது என்னவோ மகிழன் தான்….

 

நீளமான இரவும் ஒரு முடிவுக்கு வர, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர்.

 

யாராலும், நிவன் இப்படி செய்திருப்பான் என்று நம்ப இயலவில்லை… இதற்கு பின்னால் ஏதேனும் இருக்குமோ…ஆனாலும் இழையினியை காணவில்லையே… இப்படி பலதரப்பட்ட கேள்விகளோடும், குழப்பங்களோடும் அனைவரும் கூடி இருக்க, வேதா அம்மாள் கூட ஒரு நாற்காலில் அமர்ந்து, நிற்க கூட தெம்பு இல்லாமல், அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டையிடவும் தோனாதவராய், வாசலை பார்ப்பதும் ஆதவனை பார்ப்பதுமாய் இருந்தார்….

 

“ஏன் பா…ஆதவா.. நிவனா ? நம்ம நிவனா…போன் பண்ணினது…நிசமாத்தான் சொல்றியா ராசா… ” என்று ஈன ஸ்வரத்தில் ஒலித்தது வேதா அம்மாளின் குரல்.

 

“அம்மா.. நீங்க ஒன்னும் குழப்பிக்காதீங்க… கொஞ்சம் அமைதியா இருங்க…” என்று ஆதவன், அவர் கைகளை அழுத்தியப்படி கூற, நிவன் சொன்ன இருவர் வீட்டினுள் நுழைய சரியாக இருந்தது….

 

“ஆதவன்…நாங்க நிவன் அனுப்பி வந்திருக்கோம்… இந்த பத்திரத்துல உங்களையும்..உங்க அம்மாவையும் கை எழுத்து போட சொன்னாரு… அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எக்காரணம் கொண்டும் இந்த பத்திரத்தை படிக்க கூடாது….” என்று கூற, கோபத்தில் ருத்ரனும், ராஜ சக்கரவர்த்தியும் அவர்களை நெருங்க, பார்வதி பாட்டிக்கூட புலம்பலை தொடங்க, அனைவரையும் பார்வையால் அடக்கினான் ஆதவன்…

 

“அப்பா..எனக்கு தெரியாதா இது ? அங்க இழையா இருக்கா… அவ தான் நமக்கு முக்கியம்… ராகவன் அப்பா’வ கிளம்பி வர சொல்லி இருக்கேன்…ஆனா அவரு பொண்ண கானாலன்னு இன்னும் நான் சொல்லல… அவரு வரதுக்குள்ள இழையா இங்க இருக்கணும்… இழையாக்கு முன்னாடி எதுவும் முக்கியம் இல்லை… மிஞ்சிபோனா இந்த சொத்து முழுக்க, அவனுக்குன்னு எழுதி இருப்பான் அவ்ளோ தானே…. விடுங்க….” என்று முடிவான குரலில் கூற, பெரியவர்கள் ஏது ஏதோ சொல்ல… அதை ஆதவன் காதில் போட்டு கொள்ளவில்லை.

 

வேதா அம்மாளும், தன் பங்கிற்கு எடுத்துக்கூற, ஆதவன் எதற்கும் செவிமடுக்கவில்லை.

 

அவ்விருவரும் கொடுத்த பத்திரத்தில், அவர்கள் காட்டிய இடத்தில் கை எழுத்து போட்டவன், வேதா அம்மாளிடம் கொடுக்க, அவரும் ஆதவன் முகத்தை பார்த்துக் கொண்டே கையொப்பம் இட்டார்…

 

கையொப்பம் போட்ட அடுத்த நொடி, யாருமே எதிர்பார்க்காத விதமாய், “இளா…வெளில வா டா… இந்த சொத்து முழுக்க இப்ப என் பெயர்ல….” என்று கூறியப்படி, கம்பீரமாக எழுந்த வேதா அம்மாள், அவிழ்திருந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டுவிட்டு… இடுப்பில் ஒரு கை வைத்தப்படி, மறுகையில் பத்திரத்தை சுருட்டி பிடித்தப்படி சிரிக்க…. விருந்தினர் அறையில், பதுங்கி இருந்த இளநிவன் வஞ்சகம் கலந்த வெற்றி சிரிப்புடன் வெளிவந்தான்…..

Advertisement