Advertisement

மயிலிறகு – 16

 

சில வருடங்களுக்கு முன்புவரை அரிசியை புடைக்க உதவும், மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்ட சொலவு (முறம்) போல, அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் அதனுடைய பெரிய தலையை தூக்கிய வண்ணம், படையும் அஞ்சும் படி, தனது நீண்ட நெளிந்த உடலை சுருட்டிக்கொண்டு பசுமாட்டிற்கு வெகு அருகில் படமெடுத்து நின்றுக்கொண்டு இருந்தது, அந்த ராஜ நாகம்….

 

அந்த ராஜநாகத்தை பார்த்த பசு, உரலுடன் கட்டிப்போட்டிருந்தபடியால், எங்கும் செல்ல இயலாது அப்புறமும் இப்புறமும் மிரண்டு, கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுக்கும் நோக்குடன், ஆபத்து நேரத்தில் எழுப்பும் குரலை எழுப்பிக் கொண்டு இருந்தது….

 

பசுவின் அலறல் கேட்டு, அதன் குரலிலே வித்யாசத்தை உணர்ந்த அவர்கள், வேகமாக தொழுவத்திற்கு வர, மாப்பிள்ளை பெண்ணை வழி அனுப்ப நின்று இருந்த பன்ணை ஆட்களும், வீட்டாட்க்களுடன் சேர்ந்து அங்கு போக, அவர்கள் கண்ட காட்சி தான், சீறும் ராஜ நாகமும் மிரளும் பசுவும்….

 

“மாறா… பாம்பை லட்சுமி(பசு) கிட்ட இருந்து எடு.. போ ஒரு பெரிய கம்பை கொண்டு வா…” என்று கூறிய ஆதவன், வேகமாக அவனும் ஒரு நீள் கம்பை கையில் எடுக்க, அதற்குள்ளாக, அப்பாம்பு பசுவை தீண்டி மின்னல் வேகத்தில் புதரில் மறைய, பசு “ம்மா….” என்ற கத்தலுடன் சரிந்து அமர்ந்தது…. வினாடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்துவிட, ஆதவன் வேகமாக, பன்ணை ஆட்களை அழைத்து விடு விடுவென கட்டளைகளை பிறப்பித்தான்…

 

“மாறா… போ.. உன்கூட நாலு பேர கூப்பிட்டுக்கோ.. அந்த பாம்பை விடாத… அதை கொல்ல வேணாம்.. பிடிச்சு… கால்நடை மருத்துவ நிலையத்துல ஒப்படை… நான் அவுங்க கிட்ட பேசிக்கிறேன்…குப்புசாமி, இங்க வா… நீ போய் சீக்கிரம் மருத்துவர இல்ல பாம்பு விஷம் முறிக்கிறவர சீக்கிரம் கூப்பிட்டு வா… மகிழ், எதுக்கும் டாக்டரையும் வர சொல்லு டா… ” என்று விடு விடுவென கட்டளைகளை பிறப்பித்தவன், வேகமாக சென்று ஒரு பெரிய கயிற்றை எடுத்து, விஷம் பசுவின் உடல் முழுதும் பரவாமல் இருக்க, இறுக்கி கட்டினான், பாம்பு கடித்த இடத்திற்கு சற்று மேலே….

 

பன்ணை ஆட்கள் அனைவரும் ஏதோ வித்தை நடப்பது போல வேடிக்கை பார்க்க, அக்கம் பக்கம் இருப்பவர்கள் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு வாய் மீது கைவைத்தப்படி தங்களுக்குள் ஏது ஏதோ முணுமுணுத்துக் கொண்டு இருந்தனர்… இழையினி வீட்டினரும், ஆதவனின் வீட்டினரும் திகைத்து நிற்க, வேதா அம்மாளும், பார்வதிப் பாட்டியும் லக்ஷ்மியிடம் விரைந்து சென்றனர்…

 

வேதா அம்மாள் ஆதவனிடம், “அய்யா… பசு மாடு வீட்டுக்கு லட்சுமி.. அதுக்கு ஒரு நோவும் வராம காப்பாத்திடு பா…” என்று கண்ணீருடன் கூற, பார்வதி அம்மாளும் அருகிலிருந்த வேலையாட்களை அழைத்து, “ஏல முத்து, பாண்டி… எங்கவ போனீங்க.. வைத்தியரா கூட்டியார போனவைங்க என்ன ஆனங்கனு விரசா போய் பாத்து கூட்டியாங்க…” என்று கூறினார். ருத்ரனும், ஆதவனின் தாத்தாவும் வீட்டு பெண்களின் புலம்பலை அடக்கி, அவர்களை பின்னுக்கு இழுத்தனர்….

 

இது ஒருபுறம் நடக்க, ஒரு சில கிராம மக்கள், இழையினியை பார்ப்பதும், தங்களுக்குள் பேசுவதுமாய் இருக்க, அது ராகவன் கண்களுக்கு தப்பவில்லை….

 

இவை அனைத்தும் சில நொடிகளில் நிகழ்ந்துக்கொண்டு இருக்க, இழையினிக்கு அந்த ஜீவன் துடித்துக்கொண்டு இருப்பது மட்டுமே அவள் கண்களில் பட்டு, கருத்தில் பதிந்தது…. வேகமாக யோசித்த இழையினி, பார்வதி பாட்டியிடம் சென்று, “பாட்டி….பாட்டி கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க.. இப்ப சிறியாநங்கை தழை கிடைக்குமா? உடனே…” அவரின் பதிலிற்காக துரிதப்படுத்தினாள் இழையினி…

 

“அதை எதுக்கு பேத்தி இப்ப கேட்குற… ?” என்று பார்வதி பாட்டி கூற, அவள் பேசுவதை கேட்ட ஆதவன், “எதுக்கு இழையா இப்போ இது..” என்று கேட்டான்.

 

“அது வந்துங்க, சிறியாநங்கை இலை சாறு கொடுத்தா விஷம் பரவாதுங்க… அப்புறம் வாழை தோல் பட்டை, அதுவும் கிடச்சா, பாம்பு கடிச்ச இடத்துல அதோட சாறு பிழியலாம்.. கண்டிப்பா பாம்பு தீண்டி அஞ்சு நிமிஷம் தான் ஆகி இருக்கும்.. சீக்கிரம் இதை செஞ்சா, இந்த பசு உயிர் பிழைக்கும்… சீக்கிரம் சீக்கிரம் இதை எடுத்திட்டு வர சொல்லுங்க….” என்று வேக வேகமாக படத்துடன் இழையினி கூற, அங்கிருந்த  பன்ணை  ஆட்கள் மூலம் அடுத்தடுத்து வேகமாக காரியங்கள் நிறைவேறின.

 

அடுத்த ஐந்து நிமிடங்களில் அவ்வூரின் தலைமை வைத்தியர் அவ்விடம் வந்து சேர்ந்தார்… அதே நேரம் மகிழனும் கால்நடை மருத்துவரை அழைத்துவர, சித்த மருத்துவர் பசுவிற்கு செய்யப்பட்ட முதல் உதவி மற்றும் எந்த பாம்பு கடித்தது அதன் அங்க அடையாளங்கள் கேட்க, ஆதவன் கூறிய பதிலில் அவரது பிருவங்கள் சற்றே ஆச்சர்யத்தில் ஏறி இறங்கின….

 

ஆதவன் சொன்ன முதல் உதவி மிக சரியானது என்றும், நிச்சயம் விஷம் பரவி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியவர்… கையோடு கொண்டு வந்திருந்த ஒரு சில மூலிகைகளை எடுத்துக்கொண்டு இருக்க, அந்நேரம் சரியாக கால்நடை மருத்துவர் வந்து பசுவை பரி சோதிக்க, அவர் பரிசோதிக்கும் வரை வைத்தியர் அமைதி காத்தார்….

 

பரிசோதித்த மருத்துவருக்கு ஆச்சர்யம்…. “எப்படி சார்… விஷம் பசு ரத்தத்துல கலக்கல…ரொம்ப கம்மியான அளவு தான் அதுவும் கடிப்பட்ட இடத்தை சுற்றி தான் விஷம் இருக்கு.. அதோட அளவு சதவீதம் கூட குறைவு தான்… இதுக்கு உங்க முதல் உதவிதான் காரணம்… சரி மருத்துவரும் வந்திருக்காரு… நீங்க எந்த மருத்துவ முறைய பின்பற்ற போறிங்களோ… அது ஒன்னு மட்டும் பாலோ பண்ணுங்க சார்…

 

உங்க முதல் உதவி மூலிகை கேட்டேன்.. சோ யூ கோ அஹெட்” என்று கூற, ஆதவனும் அதுவே சரி என்று கூற, மருத்துவர் கிளம்ப, வைத்தியர் மட்டும் ஏதோ கலவையில் மூலிகை கொடுத்து, அதை பசுவிற்கு கொடுக்கும் முறையும், கொடுக்கும் வேலையும் அறிவுறுத்தினார்.

 

அதை கொடுத்தவர், ஆதவனிடம், “அய்யா.. நீங்க விவசாயத்துலதான் கெட்டினு பார்த்தா, இந்த விஷயத்துலயுமா…? நீங்க சரியான மருந்த தான் கொடுத்துருக்கீங்க… ” என்று மருத்துவர் மெச்சினார். அதற்கு , “இல்ல வைத்தியர் அய்யா… இது என் மனைவி சொன்ன முதலுதவி… அவுங்க சொன்னப்படி தான் இதை கொடுத்தேன்…” என்று ஆதவன் கூற, அந்த வைத்தியர் இழையினியிடம் இதமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவளது துரிதமான நடவடிக்கையையும், அவளது அறிவையும் பாராட்டி செல்ல, சற்று முன் இழையினி மீது இருந்த கிராம மக்களின் வதந்தி நிறைந்த பார்வை இப்போது மரியாதையை ஏந்தி நின்றது….

 

நேற்று ஆதவனுக்காக இழையினி பார்த்து பார்த்து செய்ததை கூட மெச்சாத, ருத்ரனும், ஆதவனது தாத்தா ராஜ சக்கரவர்த்தியையும் கூட இழையினியை இன்று இந்த சம்பவத்திற்காக பாராட்ட, பார்வதி பாட்டியும், வேதா அம்மாளும் இழையினியை கொண்டாடினர்….

 

ஆனால் இழையினிக்கு தான் இப்பொழுது மனதில் முழுமையாக பாரம் ஏறி இருந்தது.. வந்த மூன்று நாட்களில், மூன்று அசம்பாவிதங்கள்…. அவளுக்கு காரணம் தான் புரியவில்லை… ஏனோ அவளது மனதை, கலக்கம் சூழ்ந்துக்கொண்டது…

 

அடுத்து அரை மணி நேரம் கழித்துதான் புதுமண தம்பதிகள் கிளம்ப நல்ல நேரம் என்று, மீண்டும் நேரம் குறிக்க, மருத்துவரை விட்டு வந்த மகிழன், ஆதவனை தனியே அழைத்தான்….

 

“நண்பா… ஒரு 10 நிமிஷம்.. தோப்புக்கு போயிட்டு வந்திடலாம்.. “- மகிழன்

“ஹ்ம்ம் ” – ஆதவன்

 

இருவரும் சிறுது தூரம் நடந்ததும், ஆதவன் பேச்சை தொடர்ந்தான்…

 

“சொல்லு மகிழ், என்கூட தனியா எதுவும் பேசணுமா?” என்று நேரடியாக ஆதவன் தன் நண்பனிடம் கேட்க, மகிழனோ மனதினுள், “அடப்பாவி நான் மனசுல நினைக்கிறத கூட சொன்னா, அப்புறம் என் மைண்ட் வாய்ஸ்க்கு என்ன டா மரியாதை?” என்று அந்நேரத்திலும் அவன் புலம்பினான்…

 

ஆனால் வெளியே அதை காட்டிக்காது, “ஆமாம் நண்பா.. ஒரு முக்கியமான  விஷயம் ” என்று கூறினான் மகிழன்.

 

“இப்போ நீ சொல்ல வர்றது பாம்பு பத்தியா? ” – ஆதவன்

“நண்பா… உனக்…… உனக்கு எப்படி டா தெரியும் ? ” – மகிழன்

“உன்னோட முகம், நீ டாக்டர விட்டு வந்தது இருந்து என்கிட்ட தனியா பேச  வெயிட் பண்ணிட்டு இருக்கிறது… அது போக… எனக்குமே இதுல ஒரு சந்தேகம் இருக்கு…” – ஆதவன்

 

“நண்பா, நீ சொல்றது சரிதான் டா… நான் இந்த தோப்பு வழி காலையில் வரும்போது பாம்பு வைக்கிற ஒரு பெட்டி, அதான் நண்பா.. வட்டமா ஒரு பாக்ஸ் இருக்குமே.. அது நம்ம தோப்புக்குள்ள பார்த்தேன்… ” என்று கூறியப்படி, மகிழன் அவ்விடத்திற்கு சென்று காண்பிக்க, அவன் காலையில் பார்த்த இடத்தில் அப்பெட்டி இல்லை. குழப்பங்கள் மண்டி கிடக்க, ஆதவனை ஏறிட்டன மகிழனது விழிகள்.

 

“ஐயோ நண்பா காணோம்.. ஆனா நான் நிச்சயமா பார்த்தேன் டா…” என்று மகிழன் கூற, ஆதவன் ஆழ்ந்த சிந்தனைவையப்பட்டான்…

 

“நண்பா…” – மகிழன்

“சொல்லு மகிழ்” – ஆதவன்

“என்ன யோசிக்கிற டா..? என்ன நம்பவில்லையா? ” – மகிழன்

“உன்னோட ரெண்டு கேள்விக்கு, ஒன்னுக்கு நான் பதில் சொல்றேன், இன்னும் ஒன்னுக்கு நீயே புருஞ்சிக்கோ.. அந்த பெட்டி இப்ப எங்க போச்சு ?, எதுக்காக அந்த பாம்பு அடைக்கிற பெட்டி நம்ம வீட்டு தோப்பு பின்னாடி இருக்கணும்? இது தான் மகிழ் நான் யோசிக்கிறது….” – ஆதவன்

ஆதவனின் பதிலில் இருந்து நண்பன் தன்னை முழுதாக நம்புகிறான் என்று மகிழனுக்கு தெளிவாக புரியவே, அவனது இரெண்டாம் கேள்வியின் பதிலை அறிந்துக்கொண்டான்…

“இது எல்லாம்..எனக்கு குழப்பமா இருக்குது நண்பா…” – மகிழன்

“நீ எதையும் குழப்பிக்காத, நான் பார்த்துகிறேன்… இப்போ கிளம்பலாம்… எதுனாலும் மறுவீடு முடுஞ்சு வந்து நான் பார்க்கிறேன்… போற நேரத்துல இது வேண்டாம்.. இழையா வீட்ல பயந்திடுவாங்க….” என்று கூறிவிட்டு ஆதவன் அவர்கள் வீட்டை நோக்கி நடக்க, அடுத்த சில நிமிடங்களில், அவர்களது பயணம் விராலிமலையை நோக்கி தொடங்கியது…

 

ஒரு பெரிய தவேராவில் ராகவன், மரகதம், மகிழன், இதழா மற்றும் புதுமண தம்பதிகளான ஆதவன் மற்றும் இழையா என்று அப்பயணம் தொடங்க, ஒரு சில உறவுகள், அவர்களுக்கு பின்னால் ஒரு சிறு வேனில் வந்துகொண்டு இருந்தனர்…

 

இழையா கிளம்புபோது இருந்த கலகலப்பு முற்றிலும் வடிந்துவிட்டவளாக அமைதியாக சன்னல் வழி சாலையை வெறித்துக்கொண்டு வர, அங்கிருக்கும் அனைவருக்கும் அவளது மன நிலை புரிந்தது….

 

இழையாவின் மனது அடுத்தடுத்து நடந்த சம்பவகளை நினைத்து உழன்றுக் கொண்டு இருக்கிறது என்று கணித்த அவளது பெற்றோர், வீடிற்கு சென்றதும் அவளுடன் பேச வேண்டும் என்று நினைத்து தற்காலிகமாக பொறுமை காட்க, மகிழன் இதழா கூட கிளம்பும் நேரத்தில் இப்படி நிகழ்ந்ததை எண்ணி அமைதியாக வந்தனர்…

 

மற்றவர்கள் இப்படி இருக்க, ஆதவனுக்கோ, இழையினி யார் என்று தெரியாத அந்நாளில் கூட அவளது வாடிய முகமும், கண்ணீரும் பார்க்க முடியாமல் போக, இன்றோ அவள், அவனது மனைவி…இப்படி வாடிய முகத்துடன் வருவதை ஆதவனால் பார்க்க இயலவில்லை…

ஆதலால் அதை துடைத்தெரிய எண்ணினான்… இக்கணமே…..ஏதாவது அவளிடம் பேசி, அவள் கவனத்தை முதலில் திசை திருப்புவதற்காய்…..

“இழையா…” – ஆதவன்

“ஹ்ம்ம் … சொல்லுங்க…” – இழையினி

“நான் அப்பவே கேட்கணும்னு நினச்சேன்… உனக்கு எப்படி அந்த வைத்தியம் பற்றி தெரியும்….” என்று ஆதவன் கேட்க, அனைவருக்குமே அதை கேட்க ஆவல் இருந்ததால், வண்டியில் இருந்த அனைவரும் அவளது பதிலிற்காக இழையினி முகம் பார்க்க, ஆதவன் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்வதற்காய், அவளது கலக்கத்தை தற்காலிகமாக ஒதிக்கிவிட்டு, கூற தொடங்கினாள்…..

 

“இல்ல அது வந்து ஒரு பழங்குடி மக்கள் கிட்ட இருந்து செவி வழி செய்தியா தெரிஞ்சுக்கிட்டே… அவுங்க தொழில்-க்கு போகும் போது இந்த தழை, அப்புறம் அதோட வேர பயன் படுத்துறாங்க…” – இழையினி

“அக்கா.. கோத்தகிரி? அங்க அவுங்க சொன்னாங்களா?” – இதழா

“பாப்பா..அவுங்க இதை பயன்படுத்துவாங்களா? நான் அப்படி கேள்விபட்டது போல தோணலியே… குட்டிமா..” – ராகவன்

“அப்பா…இது அங்க இருந்து தெரிஞ்சுகிட்ட விஷயம்… அங்க கோத்தர்கள், பானை, அப்புறம் இரும்பு தொழில், விவசாயம்னு பார்க்குறது போல… இன்னும் 6 பிரிவுகள் இருக்குறாங்க… அதுல பெட்ட குறும்பர்னு ஒரு பிரிவு, மீன் பிடிக்கிறது, தேன் எடுக்கிறதுன்னு தொழில் செய்றாங்க… அவுங்க பிரிவிலையே, ரொம்ப தாழ்ந்த நிலை பிரிவு இருளர் இனம்…அவுங்க பாம்பு அப்புறம் எலி பிடிக்கிறத தொழிலா செய்றாங்க….

 

பாம்பு பிடிச்சு, பாம்பு விஷம் முறிக்கும் மருந்து செஞ்சு இந்திய அரசுக்கு கொடுக்குறாங்க…  6 பேறு சேர்ந்து இப்ப இதை தொழிலா செய்றாங்க… அதுல சரோஜான்னு ஒரு அக்கா, அவுங்க கோத்தகிரி திருவிழாக்கு வந்திருந்தாங்க.. அவுங்க தான் சொன்னாங்க… பாம்பு பிடிக்கிறப்ப சிறியாநங்கை இலை சாப்பிட்டு போன, பாம்பு கடிச்சாக்கூட விஷம் பரவாதுன்னு…அந்த இனம் மட்டும் இப்ப மலை-ல இருந்து இடம் பெயர்ந்து, நம்மள போல சாதாரண நில பகுதில வாழறாங்க… காஞ்சிபுரம் மாவட்டத்துல இப்ப அந்த சரோஜா அக்காவும் அவுங்க குடும்பமும் இருக்கிறதா சொன்னாங்க… அதை வச்சு தான் சொன்னேன் ங்க…” என்று நீளமாக பேசிய இழையினி, பதிலை தந்தையிடம் ஆரம்பித்து, கணவனிடம் முடித்தாள்.

“ஒ… ” என்ற ஒற்றை சொல்லோடு ஆதவன் அவள் சொன்னதுக்கு பதில் சொல்ல, அவனது மூளை, அவன் மனைவியின் கலக்கத்தை போக்க வழி தேடியது…

 

அவளது கலக்கத்தை போக்க, ஒரு வழி தோன்ற, அவளை பேசியே கரைக்கும் யுக்த்தியை கையில் எடுத்தான் இழையினியின் கணவன்… மாமனார், மாமியார் இருப்பதை எல்லாம் அவன் பெரிதுபடுத்தாது, அவளது முகம் பழைய தெளிவை பெற, அவளது அருகில் சற்று  நெருங்கி  அமர்ந்தவன்  அவளிடம் பேச  தொடங்கினான்…

 

“பரவா  இல்லையே .. என்  பொண்டாட்டி  நான் நினச்சதவிட  கொஞ்சம்  புத்திசாலி தான்.. அவ்ளோ தத்தி இல்ல” – ஆதவன்

“மாமா என்ன இப்படி சொல்றீங்க, அக்கா அறிவு.. என்ன விட” என்று இதழா வேகமாக தன் அக்காவின் புகழ் பாடினாள்.

“ஆமாம் மயிலு, சரியா சொன்ன, உனக்கு அறிவு கம்மி தான்… இல்லனா நான் விட்ட கதைய நீ நம்பி இருப்பியா ? ” – மகிழன் மனதில்

“அப்படியா இதழா? எனக்கு அப்படி தோணல, ஏதோ அக்கம் பக்கம் கதை கேட்டு வந்து நம்ம கிட்ட சொல்லுறா என் பொண்டாட்டி.. கண்டிப்பா படிப்புல கெட்டிலாம் கிடையாது…” – ஆதவன்

“ஏன் அப்படி சொல்றீங்க.. நான் தான் டிபார்ட்மெண்ட் பர்ஸ்ட்… அப்பா சொல்லுங்க அவர்க்கிட்ட ” – ரோஷத்துடன் ஒலித்தது இழையினி குரல்

“அப்பா கண்டிப்பா உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு… நான் ஒத்துக்க மாட்டேன்.. சரி எத வச்சு நீ தான் பர்ஸ்ட்னு சொல்ற ?” – ஆதவன்

“தேர்வு தான்… எல்லாத்துலையும் நான் தான் முதல் மார்க்.. அப்புறம் நோட் பண்ணிக்கோங்க.. நான் புருஞ்சு படிக்கிற ஆளு…” – இழையினி, கலக்கம் மொத்தமும் மறந்த குரலில், தன்னை நிரும்பிக்க, கணவனிடம் கூறிக்கொண்டு இருந்தாள்…

“தேர்வுகளா?.. சரி, எதுக்காக இது போல டெஸ்ட்லாம் வைக்குறாங்க இழையா? ” – ஆதவன்

“என்னங்க கேள்வி இது, நம்ம திறமைகளை வெளியில கொண்டு வரவும், நிரூபிக்கவும் தான்…” – இழையினி

“ஒஹ்…எக்ஸாம் அப்படிகிறது ஒரு நல்ல விஷயம் இல்லையா? ” – ஆதவன்

“இதுல என்ன மாப்பிள்ளை சந்தேகம்.. நிச்சயம் நல்ல விஷயம் தான்…” – ராகவன்

“இவிங்க ஏன் எக்ஸாம் பத்தி இவ்ளோ பேசுறாங்க.. சரியான படிப்ஸ் குடும்ப போல… நம்ம எக்ஸாம் நாளே எட்டு அடி ஓடுவோம்” – மகிழன் மனதில்.

“சரியா சொன்னீங்க அப்பா.. இழையா நீயும் இதை ஒப்புகொல்றியா?” – ஆதவன்

“ஹ்ம்ம் ஆமாம் நிச்சயமா” – இழையினி, மேலும் கீழுமாய் மண்டையை ஆட்டியப்படி.

“இப்போ இதழா.. நீ சொல்லு உனக்கு எஷம்ஸ்னா பிடிக்குமா? மகிழ் நீயும் சொல்லலாம்.. உனக்கு பிடிக்குமா? ” – ஆதவன்

“பயப்புள ஏன் என்ன இதுக்குள்ள இழுத்துவிடுது? இப்ப பிடிக்கும்னு சொல்லனுமா? இல்ல பிடிக்கலன்னு சொல்லனுமா? ஸ்கிரிப்ட் இல்லாம கூப்பிட்டு வந்துட்டானே…” – மகிழன் மனதில்.

“ஐயோ மாமா எனக்கு எக்ஸாம்ஸ்னா சுத்தமா பிடிக்காது.. உலகத்துலயே ரொம்ப கெட்ட விஷயம்னா இந்த பரிச்சை தான்” என்று புலம்பியப்படி ஒலித்தது இதாழவின் குரல்.

“ஹப்ப்பா…. மயிலுக்கும் இந்த மாமாக்கும் ஒரே டேஸ்ட்…. அப்படி சொல்லு டி என் லட்டுக்குட்டி…” – மகிழன் மனதில்

“நண்பா.. எனக்கும் தான் டா சுத்தமா பிடிக்காது… வெரி பேட் வெரி பேட்” – மகிழன்

“சோ..அப்போ… நிறைய பேர் பார்வையில கெட்டதா, பிடிக்காத விஷயமா தோன்ற தேர்வுகள் கூட, ஒருத்தரோட திறமைய வெளில்ல கொண்டு வரதுனால நல்ல விஷயம்னு சொல்றீங்க.. சரியா ? ” என்று ஆதவன் அனைவரையும் பார்த்து கேட்க, அனைவரும் ஆமாம் என்பதாய் தலை அசைத்தனர்.

 

“அப்போ இழையா… உன்னக்கு தெருஞ்ச விஷயத்தை.. அங்க இருந்த அத்தன பேருக்கும் இன்னைக்கு நடந்த ஒரு சம்பவத்தால சொல்லி கொடுத்திருக்க… இனிமேல் விஷகடிக்கு மருந்து இது தான்னு எல்லாருக்கும் தெரியவரும்…

 

உன்னோட அறிவும் வெளி உலகத்துக்கு தெரிய வந்திருக்கு, நிறையப்பேருக்கு முதற்கட்ட முதல் உதவியும் தெரியவந்திருக்கு.. நம்ம லட்சுமியையும் காப்பாற்றி ஆச்சு… அப்போ இன்னைக்கு நடந்தது நல்ல விஷயம் தானே…

 

எனக்கு தெரிந்து, யாரும் நல்ல விஷயத்துக்கு இப்படி உம்முன்னு உக்காந்துருக்க மாட்டாங்க…” என்று கூறியப்படி, அவளது கைகளை எடுத்து, தனது கைகளுக்குள் வைத்து, அவனது இமைகளை அவளை பார்த்து ஒருமுறை திறந்து மூட, அவனுடைய விழி அசைவில் “எல்லாத்துக்கும் நான் இருக்கிறேன்… எதற்கும் கலங்காதே!!!” என்ற வாக்கியம் மறைந்துக்கிடந்தது….

 

கணவனது சாமத்தியமான பேச்சில் தன்னை தொலைத்துக்கொண்டு இருந்தாள் இழையா….

 

அவன் இறுதியாக முடித்தவிதம், வண்டியில் பயணித்த அனைவருக்கும் ஒரு வித இதத்தை தர, ராகவனுக்கோ மகளின் திருமண வாழ்க்கை பயணத்தை பற்றி இருந்த கவலைகள் அந்த பயணத்தோடு நிறைவுக்கு வந்தன.. ஆதவன் மீது மரியாதையும் துளிர்த்தது ராகவனுக்கு… மரகதமோ மனதளவில் நிறைந்து இருந்தார்.. மருமகனின் நடவடிக்கைகளில்….

 

பேசிக்கொண்டே அவர்கள் ராகவனது இல்லம் வர, புது மண தம்பதிகளுக்கு  செய்யவேண்டிய சடங்குகளை அவர்கள் சிறப்பாக செய்ய, பெரிய வீட்டு திருமணம் என்பதால், ஆங்காங்கே மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.. மரகதமோ, இழையினியிடம் ஆதவனை அழைத்துக்கொண்டு அவளது அறைக்கு செல்ல சொன்னவர், ஆதவனுக்கு தேவையானதை கவனிக்கும் பொறுப்பை கொடுத்து அனுப்பி வைத்தார்…

 

அவளது அறைக்கு ஆதவனை இழையினி அழைத்து சென்று, அவனை ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு, அறை-யை விட்டு அகல முயன்றாள்…. ஆனால் இந்த அறைக்குள் வந்ததும், இழையினியின் கலக்கம் மறைந்து, புது பெண்ணிற்கே உண்டான நாணம் குடியேறி இருந்தது.

 

அவளது முகம் மாற்றம்.. ஆதவனது நெஞ்சில் ஏதோ ஏதோ எண்ணங்களை விதைக்க, “இழையா…” என்று ஆதவன் அழைக்க, வெக்கத்தில் சிவந்திருந்த அவளது முகம், ஆதவனது கிறங்கிய குரலில் மேலும் சிவந்தது…”சொல்லுங்க..” என்று தயக்கத்துடன், ஒரு வித புது படபடப்புடன் கூறினாள்…

 

“மேடம் எங்க இவ்ளோ அவசரமா போறீங்க? என்னோட மாமியார் எனக்கு வேண்டியது கவனிக்க சொன்னதா, எனக்கு ஞாபகம்…” என்று கள்ள சிரிப்புடன் ஆதவன் கூற, இழையினி பதில் சொல்லாமல் தடுமாற்றத்துடன் நின்றாள். அவளின் நிலை, அவனுக்கு ஒரு உத்வேகம் தர, இந்த பேச்சின் இடைவேளையை பயன்படுத்தி, அவர்கள் நின்றுக்கொண்டு இருந்த இடைவெளி தூரத்தை குறைத்தான் ஆதவன். அவளுக்கு வெகு நெருக்கமாக வந்தப்படி…

 

அவன் அருகில் வரவும், நாணம் பொங்க, இழையினி அவனை விட்டு சற்று எட்டி நிற்க முயல, அவளது செய்கையை ஆதவனது குரல் தடுத்தது…

 

“இழையா… இப்ப நீ பின்னாடி நகரணும்னு நினச்சா… நான் உன்ன என் பக்கத்துல இழுக்க, என் தீ காயம் பட்ட கையாள பிடிச்சு இழுப்பேன்… அப்போ எனக்கு தான் இந்த காயம் ஆறாம, இன்னும் வேதன தரும்.. உனக்கு சம்மதம்னா , நீ என்ன விட்டு தள்ளி நில்லு.. இல்ல எனக்கு வலிக்க கூடாதுன்னு நினைத்தா, என் பக்கத்துல வா…” என்று மாய கண்ணன் புன்னகையுடன், முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு அந்த ஆறடி உயர ஆண்மகன், அவளிடம் ஏதோ ஏதோ கதை சொல்லி தன் காரியத்தை சாதிக்க முயன்றுக்கொண்டு இருந்தான்.

ஆனால் உண்மையில், அவன் காயம் நேற்றை விட, இன்று நன்றாகவே உலர்ந்து, வற்றி இருந்தது…

அவனது தீ காயத்தை பற்றி சொல்லவும், இழையினி அதற்கு மேல் ஒரு அடி கூட பின்நோக்கி வைக்காமல், அவன் அருகில் வர, ஆதவன் இழையினியை மெல்ல நெருங்கினான்…

 

அவனது இடம் கரம் கொண்டு மெதுவாக அவளை ஒரு தூணில் சாய்த்தவன், அவனது வலது கையின் விரலால் முகத்தில் கோலம் வரைய தொடங்கினான்… அவனது மூச்சுக்காற்று அவளுக்கு வெகு அருகில் பட, அந்த உஷ்ணத்தில் கரையும் பனித்துளியாய் இழையினி கரைந்துக்கொண்டு இருந்தாள்…

 

அவள் பூவுடலோடு, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அணைவாக அணைத்தது போல அவன் நிற்க, அவனது விரலும் மூச்சுக்காற்றும் மட்டுமே இழையினியை தீண்டி கொண்டு இருந்தது… மெல்ல குனிந்து, அவள் காது மடலுக்கு வந்தவன், சிவந்த அவள் காதுமடலின் அருகே, இவனது அழுத்தமான உதடுகள் உரசும் படி… சரசமாடும் கிறங்கிய குரலில்…”இழையா பிடிச்சிருக்கா…என்ன ” என்று கேட்க, “ஹ்ம்ம்ம்ம்… ” என்ற குரல் மட்டும் மெதுவான ஸ்வரத்தில் முணுமுணுப்பாக அவள் இதழ் வழி வந்தது….

 

அவளின் “ஹ்ம்ம்..” என்ற பதில் அவனுக்கு மகிழ்ச்சி தந்தாலும்… அவளது வார்த்தைக்கு ஏங்கியவன்.. அந்த மோன நிலை கலைந்துவிடாமலே, அவள் கூந்தலில் சூடி இருந்த , மல்லிகை மனத்தை சுவாசித்தபடி, நின்றுக்கொண்டே முழுதாக அவள் உடலோடு மிக நெருங்கி, அவள் கழுத்துவளைவில் முகம் பதிக்க, அவனது கரம் அவளது இடையை சுற்றி வளைத்திருந்தது…..

 

“ஹ்ம்ம் மட்டும் தானா இழையா?.. உன் வாய திறந்து சொல்லமாட்டியா டி..” என்று அவளது கழுத்துவளைவில் முகம் பதித்தப்படி கேட்க, அவனது உதட்டின் ஈரம் உணர்ந்த இழையினி வாய் திறந்து பதில் சொல்லும் நிலையில் இல்லாமல், மதி மயங்கி, கணவனின் அணைப்பில் கட்டுடுண்டு கிடந்தாள்…  அவனது கரம், அவளது இடையை வளைத்து, மனைவியை இறுக தழுவ, காதலின் வேகத்தில், அவளது இடை நொறுங்கும் அளவு  அழுத்தி பிடித்தான் ஆதவன், அவனது அணைப்பு இறுகவே பதறி விலகினாள் இழையினி…

 

“என்னங்க.. என்ன பண்றீங்க.. ? கை வலிக்க போகுது….” என்று கூறி, அவன் கைகளை எடுத்துப்பார்க்க, ஆதவனோ உல்லாசமாக விசிலடித்தான், கண்களில் அப்பட்டமாக கள்ள சிரிப்பு பொங்க… கணவனின் செய்கையில் அவனின் நடிப்பை கண்டுக்கொண்ட இழையினி, பிடித்திருந்த அவனது கையை உதறி, வேகமாகவும், லாவகமாகவும் கதவருகில் செல்ல, ஆதவனோ, “இழையா… பிடிச்சிருக்குன்னு சொன்னியே.. அதை மட்டும் ஆச்சு தெளிவா சொல்லிட்டு போ டி…” என்று கூற, “பிடிச்சுருக்கா..? நான் எப்ப சொன்னேன்… அப்படி ஒன்னும் இல்லையே…” என்று நாக்கை துருத்திக்காட்டி அவனது பிடியில் அகப்படாமல் புள்ளி மான் போல, துள்ளி ஓடினாள் அவ்வறையை விட்டு….

 

அவள் வேகமாக செல்ல, ஆதவனின் சிரிப்பொலி மட்டும் அவளை பின்தொடர்ந்தது… அவளது முகம் அந்தி மந்தாரையாய் சிவந்திருக்க, தனக்கு தானே சிரித்துக்கொண்டு படி இறங்க, ஒரு குரோதத்துடன்  இருவிழிகள் அவளை அளவெடுத்தன….

 

Advertisement