Advertisement

மயிலிறகு – 15

 

பிருவங்கள் இரண்டும், யோசனயை பலமாக காட்ட…அவ்வறையை இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாய் அளந்த ஆதவன், தன் மனைவியின் சீலை தளவில் மண்ணெண்ணெய் வந்த மாயத்தை சிந்தித்துக்கொண்டு இருந்தான்…. அதற்கு காரணமும் இருந்தது… அவர்களது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பு கிடையாது… ஓரிரு அறிக்கை விளக்குகளில் மட்டுமே மண்ணெண்ணெய் பயன்படுத்துவர்… ஒன்று தோட்டத்தில் இருக்கிறது… மற்றொன்று, முந்தின இரவு, தான் இழையினியின் மனம் தெளிவதற்காய் அதை அவன் மேல் தளத்திற்கு கொண்டு வந்திருந்தான்…. ஆகையால் மண்ணெண்ணெய் வீட்டில் வேறு எங்கும் பயன்படுத்த வாய்ப்பில்லை… என்று இவ்வாறாக எண்ணம் தோன்ற, அதிலே அவன் லயித்திருந்தான்….

 

அதே நேரம், மகிழனோ வைக்கோற்போர் கொட்டாரத்தின் கீழ் நின்றுக்கொண்டு இதழாவை பற்றி சிந்தனை செய்துக்கொண்டு இருந்தான்…

 

“அப்ப மயிலுக்கு சிலம்பு பிடிக்கும்னு சொன்னது, காற்சிலம்பு இல்ல… கம்பு சண்டைய சொல்லிருக்கா… சண்டைனு வந்தால், நம்ம சந்து பொந்துனு பூந்து பூந்து ஓடுவோம்.. இது சரியான சண்ட கோழியா இருக்கும் போலவே… ” என்று மகிழன் எண்ணமிட, அவனது மைண்ட் வாய்ஸ் அப்பொழுது வந்து, “அவள முன்னாடி மயிலு சொன்ன? இப்ப கோழின்னு சொல்ற? அப்போ அவ மயிலா? கோழியா? ” என்று அந்நேரத்திலும் கேள்விகேட்க, அவனே ஒரு நிமிடம் கடுப்பாகி போனான்.

 

பிறகு அவளுக்காக சிலம்பு கற்றுக்கொள்வது என்று முடிவெடுக்க, அவன் மனமும், அறிவும் சண்டை இட தொடங்கின….

 

அவனது அறிவு ” உனக்கு இதுலாம் தேவையா… ? இது சண்ட போடுற பாடி இல்ல .. சைலெண்டா சாங் கேக்குற பாடி .. சொன்னா கேளு, அவள் வேணாம்”

அவனது மனம் “அவன் அவன் காதலுக்காக என்ன என்னமோ பண்றான்? நீ இதுக்கூட பண்ணமாட்டியா? “

அவனது அறிவு, “அப்ப சிலம்பு கத்துகிட்டு ஹீரோ ஆகப்போற? “

அவனது  மனம் , “நான் எப்ப அப்படி சொன்னேன்… ஹீரோ ஆகணும்னு கத்துக்கல… கல்யாணம் பிறகு, அவ சிலம்ப வச்சு அடித்தால், தற்காப்புக்கு கத்துக்கணும்ல.. அது தான்.. பார்த்தல, நேத்தே எப்படி ரௌண்டு கட்டி விரட்டினானு….”

அவனது அறிவு, “எப்படியோ போய் தொல.. நீ எல்லாம் சொல்லி திருந்தமாட்ட…” என்று கூறிவிட்டு, அவனது மைண்ட் வாய்ஸ் விடைபெற, அருகில் கம்பு போல ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று தேடினான்… தானே ஒருமுறை சுழட்டி பார்க்கலாம் என்று….

 

அவ்வாறு அவன் தேட, அவன் கண்ட விஷயத்தில், அவன் முகம் ஒரு நிமிடம் யோசனயை சுமந்து, பிறகு நொடியும் தாமதிக்காமல், அவன் அக்கட்டையை எடுத்துக்கொண்டு ஆதவனை தேடி விரைந்தான்…

“நண்பா… நண்பா… ” என்று அவசரமாக ஓடி வந்தவன், சொல்ல வந்ததை சொல்வதற்கு முன் ஒருமுறை ஆதவனது அறையை கண்களால் அளவெடுத்து, அங்கு இழையினி இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சொல்ல முனைந்தான்…..

 

“நண்பா.. நான் கம்பு சுத்த கத்துக்க… நம்ம கொட்டத்துல சுத்திக்கிட்டு இருந்தேன்….” – மகிழன்

“இரு…… நீ கம்பு சுத்த போறியா? சும்மா காமெடி பண்ணாத டா.. நானே குழப்பத்துல இருக்கேன்… ” – ஆதவன்

‘அடிங்க என்ன பார்த்தா காமிடியா தோணுதா? நான் கில்லி விஜய் போல மாறி, உன்ன சொல்லி , சொல்லி…………. அடிக்கலாம் மாட்டேன்.. ஏன்னா நீ என்ன திரும்பி அடிப்ப … சோ ஜஸ்ட் சொல்லி மட்டும் காட்டுவேன்…’ – மகிழன் மனதில்

 

“நண்பா.. சொல்றத கேளேன் டா.. நான் ஒரு கம்பு தேடுனேன்… அப்ப  எரிந்து   போன  வைகோர் போர்-க்கு கொஞ்சம் தள்ளி இந்த கொள்ளிகட்ட கிடந்தது டா…. ” என்று அவன் பாதி எறிந்த நிலையில் இருந்த ஒரு மரக்கட்டையை காண்பிக்க, அதை பார்த்த ஆதவன், வேகமாக மகிழனது கையில் இருந்து வாங்கிப்பார்க்க, அவன் மனதில். “வைகோர் போர் பக்கத்துல இது போல நெருப்பு கொழுத்திட்டு பச்ச புள்ள கூட போக வாய்ப்பு இல்லையே… தெரியாம இதை யாருமே செய்திருக்க முடியாது… ஆனா வேணும்னு செய்ய ஒரு காரணம் வேணும்.. அது என்ன காரணம் ? அது யாரு ? ” என்று எண்ணங்கள் ஓட தொடங்கியது.

 

ஆதவன் நினைத்ததையே, மகிழனும் வாய் வார்த்தையாக , “நண்பா…  நேற்று இப்படி நடந்ததுன்னு பன்ணை ஆளுங்க வரும் போது பேசிட்டு இருந்தாங்க…. நான் தான் உன்கிட்ட காலையிலிருந்து எதுவும் கேட்டுக்கிடல.. மறுப்படியும் அதை ஏன் பேசணும்னு… ஆனா இதை பார்க்கும் போது.. இத்தனை வருஷம் இல்லாம ஏன் இப்படி வைகோர்போர் தீ பிடிக்கணும்னு எனக்கு கேள்வி வருது நண்பா… உனக்கு இது தோணலியா இதை பார்க்கும் போது…?  ” கூறினான்.

 

“ஹ்ம்ம் எனக்கு இது மட்டும் இல்ல, இன்னைக்கு நடந்ததுல கூட, சந்தேகம் வந்திருக்கு.. சரி நீ இதைப்பத்தி யாருக்கிட்டையும் பேசாத… நான் பார்த்துகிறேன்…” என்று ஆதவன் எதையோ யோசித்தவனாக கூறினான்.

 

சிறுது நேரத்தில் ஆதவன், மகிழன் கீழே இறங்க… வேதா அம்மாள், அவர்களது தோட்டத்தில் பூத்திருந்த முல்லை மலரை பறித்து சரமாக கோர்த்துக்கொண்டு இருக்க, இதழா பார்வதி பாட்டியுடன் வாயாட…இழையினி ஏதோ பன்ணை ஆளிடம் கூறிக்கொண்டு இருந்தாள்….

 

“என்ன வேதா அம்மா… ஏன் நீங்க இதை பண்றீங்க? வேற வேலை பார்க்கிறவங்க கிட்ட கொடுக்க வேண்டியது தானே…. என்ன இதழா… போர் அடிக்கிதுன்னு பாட்டிக்கிட்ட பேசுறியா ? இல்ல பாட்டிக்கிட்ட பேசுறதே ஐயோ போர்-னு போக முடியாம முழிக்கிறியா…” என்று கூறிக்கொண்டே புன்னைகை புரிந்தான்….

 

அவன் வருவதை கவனித்திருந்த இழையினி, அவனது புன்னகையில்… முதல் முறையாக… வாய் விட்டு சிரித்ததில் அந்த நொடி அவனது ஆண்மைக்குள், இறுகிய முகத்திற்குள் இருக்கும் மென்மையை உணர்ந்தாள்…. கணவனது முகத்தை விட்டு விழி எடுக்க முடியாது அவனை பார்க்க, அவனது பார்வையும் ஒரு முறை அவள் மீது படிந்து மீண்டது… அந்த ஒற்றை பார்வையில் அவள் கன்னங்கள் ரத்தமென சிவந்தது…..

 

மறுப்புறம், இந்த பார்வைபரிமாற்றங்களை கவனிக்காத, வேதா அம்மாளும், இதழும் ஆதவன் கேள்விக்கு பதில் தந்தனர்….

 

“இல்ல ராசா… எம் மருமவளுக்கு என் கையால தொடுக்கணும்னு தோணுச்சு ஐயா… அது தான்… இது ஜாதி முல்லை.. வாசமா இருக்கும்.. அதான் நம்ம செவ்வந்திய பறிச்சார சொன்னேன்…” என்று கூறிக்கொண்டு மேலும் காரியத்தில் தீவிரமாக இறங்க, இதழாவோ, “ஐயோ மாமா.. பாட்டி செம ச்வீட், எனக்கு அவுங்க கூட பேசுறது பிடித்திருக்கு….” என்று கூறினாள்.

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே வேகமாக அடுக்களைக்குள் நுழைந்த இழையினி, அனைவருக்கும் சிறு சிறு தட்டில் வாழை இலை வைத்து வடை கொண்டு வந்தவள்…. ஆதவனுக்கு மட்டும் ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து கொடுத்தாள்….

 

பஜ்ஜியும், வடையும் செய்து இருக்க, அனைவருக்கும் அதை தட்டில் பரப்பி  கொடுத்தவள், ஆதவனால் பிட்டு சாப்பிட இயலாது.. அவனது வலது கை ரணமாகி இருப்பதை உணர்ந்து… வடையை மதியம் வைத்திருந்த சாம்பாரில் ஊறவிட்டு, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதன் மீது தூவிவிட்டு, ஒரு சிறு கரண்டி போட்டு மணமணக்கும் சாம்பார் வடை, அவன் உண்பதற்கு ஏதுவாக கொடுக்க, ஆதவன், தனக்காக அவள் பார்த்து பார்த்து செய்யும்  வேலையின் அழகை ரசிக்க தொடங்கினான்….

 

சிற்றுண்டி உண்டு முடிப்பதற்குள், இழையினி பேசிக்கொண்டு இருந்த பன்ணையாளுடன் ஒரு மருத்துவர் வர, ஆதவன் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை தன் மனைவியின் மீது பதித்தான்….

 

மருத்துவர், அவனது தீ காயத்திற்கு மருந்திட்டு, இரண்டு மூன்று நாட்களுக்கு, தீ காயத்தில் நீரோ அல்லது, அக்கையை பயன்படுத்தி கடினமான காரியமோ செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தி செல்ல, அவீட்டில் அனைவரது உள்ளத்திலும் இடம் பிடித்தாள் ஆதவனின் இழையினி…. ஆதவன் மனமோ, “எப்படி ஒரே நாள் ல இவ்ளோ பாசம் காட்டுறா… ? ஒருவேளை என்னை போலவே இவளுக்கும் என் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்குமோ திருமணம் முன்பே…” என்று என்ன, ஆதவன் மனது சிறு பட்டாம்பூச்சியை பிடித்து விட்ட பாலகனது மனமாய் கொட்டம் அடித்தது….

 

அன்று இரவு, ஆதவன் அவளின் வருகைக்காக காத்திருக்க, அவசரமாக வந்த இழையினி, “சாரிங்க… லேட் ஆகிடுச்சா..? ” என்று கூற, ஆதவனோ, “அட… நம்ம பேசணும்னு நினைத்தத, இழையாவே பேச வந்துட்டாளா?” என்ற எண்ணமிட்டவன்  மருத்துவர் கொடுத்த கழும்பை அவள் எடுத்துக்கொண்டு வந்ததை அவன் கவனிக்கவில்லை…. அவள் கையில் கழும்பு இருப்பதை கவனிக்காது, இழையினியின் வரவை மட்டுமே கவனித்த ஆதவன், மனதில் ஏது ஏதோ எண்ணங்கள் உலா வர, மனைவியை கண்களால் பருகிக்கொண்டு இருந்தான்… அவனின் அருகில் நெருங்கியவள், ஒரு சிறு பார்வையை அவன் மீது செலுத்திவிட்டு, மீண்டும் இமை தாழ்த்திக் கொண்டாள்….

 

“என்னங்க… உங்க கை கொஞ்சம் காட்டுறீங்கள…?” – இழையினி குரல் தயக்கத்துடன் ஒலிக்க, பதில் பேசாது, அவனது கையை காட்ட, அவள் கொண்டு வந்திருந்த கழும்பை, சிறு மயிலிறகு கொண்டு அவன் தீக்காயத்தில் மிருதுவாக தடவி விட, ஆதவனது விழிகளோ,  இழையினியை பருகியப்படி பார்வை விலக்காது இருந்தன….. அவன் உள்ளமோ, “ச்ச, இதுக்கு தான் என் பொண்டாட்டி இத்தனை வேகமா வந்தாளா ? ஹ்ம்ம்ம்ம் ” என்று பெரு மூச்சுவிட்டான் கணவன். 

 

ஆனால் அவன் பார்வை மட்டும் அவளை விட்டு பிரியாமல், அவளையே வட்டமிட, அவனது  பார்வை வீச்சை தாங்க இயலாது, “ஐயோ ஏன் இவரு இப்படி பார்க்கிறாரு….” என்று எண்ணியப்படியே கட்டிலில் அமர்ந்திருந்த ஆதவனுக்கு மருந்துப்போட்டப்படி, அவன் அருகில் சங்கடத்துடனும், சிறு நாணத்துடனும், அவனின் மனைவி நின்று இருந்தாள்…..

 

அவள் கண்களில் பதிந்திருந்த அவனது விழி, மெல்ல தன் பார்வையின் திசையை மாற்றிக்கொண்டு, அவளை மேலிருந்து கீழாக வருட தொடங்கியது…. அப்படி வருடிக்கொண்டே வந்த, அவனது விழிப்பயணம், காற்றில் படபடத்துக்கொண்டு இருந்த அவளது இடை சீலையின் மீதும், லேசாக அப்புறமும், இப்புறம் காற்றில் ஆடி, செதுக்கப்பட்ட வளைவு போல, சிறிது தெரிந்தும், தெரியாமலும் தெரிந்த அவளது இடையில் ஆதவனது மனம் சிக்கிக்கொள்ள, அவள் உணராத வண்ணம், அவளை நெருங்கி வந்தான்….  

 

அவன் தீ காயத்திற்கு மருந்திடுவது ஒன்றே தனது கடமை என்பது போல, அவனுக்கு அவள் மருந்திட்டு கொண்டு இருக்க, இழையினியின் தாழ்ந்த இமைகள்  தாழ்ந்தப்படி இருக்க, இத்தனை நேரம் சில்லென்று அவள் மேனியில் தழுவிய தென்றல் ஏனோ, இப்போது தகிப்பது போல தோன்ற, மெல்ல அவளது பணியை விட்டு, இமை விரித்து தனது கணவனை பார்க்க, அவன் அவளுக்கு வெகு அருகில்… அவனது கூர் நாசிக்கும் அவளது இடைக்கும் உண்டானா இடைவேளை நூல் இழையோ… என்று எண்ணும் அளவு, அவன் முகம், அவளது மெல்லிடைக்கு வெகு அருகினில் இருந்தது….

 

அவளின் அசைவுகள் உணர்ந்த, அவளது கணவன்…. காதல் ஏக்கம் தாபம் உரிமை என்று அனைத்தையும் தேக்கி வைத்து ஆழ்ந்த குரலில் அவளை… “இழையா….” என்று அழைக்க, இழையினிக்கு அந்த நொடி ஒரு பெரிய ஆனந்த ஊஞ்சலில் அவள் உள்ளம் ஆடுவது போல தோன்றிட்டு…..

 

அவன், அவளுடன் மேலும் நெருங்கும் ஆவலுடன் முன்னேற, குப்பென்று உடலின் மொத்த இரத்தமும், அவளது முகத்தில் பாயிந்து…அவளது அழகுக்கு அழகு சேர்த்தது… கன்னங்கள் செவ்வல்லியாய் மலர, அவன் நோக்கம் அறிந்து, பெண்மைக்கே உரிய நாணத்துடன் ஓரிரு அடி பின் வைக்க, ஆதவன் அவளது இடையில் முகம்பதிக்க வந்தவனுக்கோ ஏமாற்றமே….

 

சற்று எட்டநின்று கணவனை பார்த்த இழையினி கண்கள் நாண மொழி பேச, மனையியை பார்த்த ஆதவன் கண்கள் காதல் போதை ஏற, அவளை இழுத்து இறுக்கி இப்போதே அணைக்கும் எண்ணம் மேலிட, சரெடென்று, எட்டி அவள் தளிர் கரம் பற்றி இழுக்க, அவளை தன் கை வளைவில் கொண்டு வர அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் துடிக்க, அவன் காயத்தையும், கை வேதனையும் மறந்து, அவனது வலக்கரம் கொண்டு அவள் தளிர் கரம் பற்ற, பிடித்த வேகத்திலே சரட்டென்று அவனது கை விலகியது…..

 

அவன் கையை விலக்கியதில் இருந்தே, அவனது கை ரணமாகி வலி தருவதை உணர்ந்த அவனின் காதல் மனைவி, அவன் முகம் பார்க்க, ஒரு நொடி ஒரே நொடி அவன் முகம் வலியை பிரதிப்பளித்ததோ….இல்லை அவளது கண்கள் தான் தவறாக கண்டுவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு அடுத்த நொடி அவன் முகம் மீண்டும் அதே கம்பீர சாயல் படர்ந்தது…. அவனது கண்கள் மட்டும் இப்பொழுதும் சிரிக்க, அவளது கண்களோ, கணவனின் காயத்தை பார்த்து வேதனை கொண்டது….

 

“ரொம்ப வலிக்குதாங்க ? என்னால தானே… ந நா நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்… இப்ப என்னால உங்களுக்கு கஷ்டம்” – இழையினி

 

“நீ என்ன நினச்சிட்டு இருக்க, உன் புருஷன் கை மண்வெட்டி பிடிக்கிற கை…. இது ரெண்டே நாள்-ல சரி ஆகுற விஷயம்… பட் நீ கொஞ்சம் பார்த்து இருக்கணும் இழையா… நான் சொல்றது புரியிதா.. ?” – ஆதவன்

 

“ஹ்ம்ம்…., கழும்பு இப்போ உங்க காயத்துல இல்ல… நீங்க என் கைய .. அது அது … இருங்க நான் மறுப்படியும் கழும்பு போட்டுவிடுறேன்…” என்று அவன் அவளை இழுத்ததனால், அவனது கழும்பு காயத்தில் ஒட்டவில்லை என்று சொல்ல முடியாமல், சொல்ல வந்த வார்த்தைகளை மென்று விழுங்கி, ஒருவாறு வாக்கியத்தை பூர்த்தி செய்து, அவனுக்கு மீண்டும் கழும்பிட தொடங்கினாள்….

 

“நீங்க காயம் குணம் ஆகுற வரைக்கும்.. இந்த கைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க… ப்ளீஸ்…. ” என்று குறிப்பாக, நமக்குள் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று உணர்த்தியவள் கண்களில் வலி அப்பட்டமாக தெரிய, அதை பார்த்த ஆதவன், அவளிடம் பேச்சுக்கொடுத்தான்…

 

“ஏன் இழையா…. உனக்கு கண்ணு கலங்குது…. எனக்கு தானே காயம்..?” என்று பிருவம் உயர்த்தி, அவனது கூர் விழிகள் கொண்டு, அவளை கூறு போடுபவன் போல பார்த்தான் ஆதவன்.

“இல்ல… அப்படிலாம் ஒன்னும் இல்ல… கொஞ்சம் கஷ்டமா இருக்குது… காராணம் … எனக்கு சரியா தெரியல…” – இழையினி

“காதல பத்தி நீ என்ன நினைக்கிற இழையா.. ? ” – ஆதவன்

“க காதலா.. ?” – இழையினி

“ஹ்ம்ம் ஆமாம், காதல் ஒரு அழகான உணர்வு… அது எப்படி, எப்போ வரும்னு உனக்கு ஏதாவது கருத்து இருக்கா.. ? ” – ஆதவன்

“அது அது எதுக்குங்க இப்ப… நீ நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்களே…” – இழையினி

“சொல் இழையா… ” – ஆதவன். என்று கூறியவாறு அவளை அவன் அருகில் அமர்த்திக்கொண்டான்….

 

“காதல்… கா..காதல் அது…” – இழையினி

“காதல் தான்.. அதை பற்றி தான் கேட்குறேன்.. சொல்லு இழையா” – ஆதவன்

“அது ஒருத்தர ஒருத்தர் புருஞ்சிகிட்ட பிறகு, வரும்… வேற…. வேற… அது வந்துங்க… எனக்கு தூக்கம் வருதுங்க…” என்று தட்டு தடுமாறி, தயக்கத்துடன், முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சொல்லும் மனைவியை பார்த்த ஆதவன், ஒன்றும் சொல்லாமல், “சரி படுத்துக்கோ…” என்று மட்டும் கூறினான்.

 

அவனது மனமோ, “உன்ன யாருன்னு தெரியாமலே, நான் காதலிக்க தொடங்கிட்டேன்… உன்னோட பாதம், உன்னோட எண்ணங்கள், உன்னோட பயத்தை அப்படியே வெளிப்படுத்துற உன் கண்கள் இப்படி எல்லாமே உன்னோட ரசிகனா என்ன மாத்திடுச்சு… நீயும் என்ன விரும்புறத நான் உணருறேன்….

 

உன்னோட கண், உன்னோட செய்கை, திருமணம் முன்தினம் உன்கிட்ட இருந்த கலக்கம், திருமணம் என்னோடு முடிந்த பிறகு, உன் உதட்டில் மெலிதாக தோன்றிய புன்னகை கீற்று… இப்படி எல்லாமே உன்னோட காதல என்கிட்டே சொல்லுது… ஆனா அதை நீ இன்னும் உணரல… உனக்கு என் மீது காதல் வந்ததே உணராத நீ, என்னோட காதலை இப்போ சொன்னால், நிச்சயம் என்னோட உணர்வுகள் உனக்கு புரியுமான்னு தெரியல…

 

காதல், சொல்லி புரியவைக்கிற உணர்வு கிடையாது… நீயே அதை பீல் பண்ணனும் இழையா… கூடிய சீக்கிரம் செய்வ… லவ் யூ….” என்று கூறி தனது அருகில் விழி மூடி துயில் கொள்ளும் மனையாளை பார்த்து மனதினுள் பேசினான்.

 

துயில் கொள்வது போல பாசாங்கு செய்து படுத்திருந்த ஆதவனின் மயிலோ.. மனதினுள் “இது தான் காதலா.. ? அவரை நான் காதலிக்க தொடங்கிட்டேனா.. ? எனக்கு தெரியல… ஆனா அவருக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்க முடியல, அவரு கேட்ட பொழுது, என்னால சொல்ல முடியல… நான் என்ன சொல்லுவேன்… காதல் பற்றி அபிப்ராயம் சொல்லும் அளவுக்கு எனக்கு அதில் விஷயம் தெரியாதே… எனக்கே எதுவும் தெரியாமா நான் என்ன பேச.. ? நான் ஏதாவது சொன்னா, அவரு மனசுல என் மீது காதல் இருக்குமா? … ஒருவேள அவரு, அவருடைய பழைய காதல பற்றி பேச வந்திருப்பாரோ… நான் தான் லூசு தனமா என்ன நினைத்து கற்பனை வளர்கிறேனோ….

 

அவரே என்கிட்டே காதல் சொல்லுவாரா.. ? இல்லை மனைவிங்கிற பாசம் மட்டும் தான் இருக்கா… அவர் என்கிட்டே நெருங்கி வராரு தான்… ஆனா காதல் சொல்லலியே….” என்று இவ்வாறாக எண்ணி எண்ணி உழன்று கொண்டு இருந்தாள் அவளது மனதில்.

 

மறுநாள் விடியல்… யாருக்கு எப்படி இருந்ததோ…. இழையினிக்கு மகிழ்ச்சியையும், மகிழனுக்கும் வருத்தத்தையும் ஒரு சேர அளித்தது….

 

இழையினிக்கு தன் தந்தை மறுவீட்டிற்கு அழைக்க வருகிறார்…  மகிழனுக்கு, அவனது மயில் அவனை விட்டு செல்கிறாள்…. இவ்வாறு இவர்கள் எண்ணம் இருக்க, ஆதவனுக்கோ நேற்றும், முன்னாள் இரவும் நிகழ்ந்த நிகழ்வுகள் நிழலாக அவன் மனதில் வந்து வந்து சூழ்ந்து கொண்டு இருந்தன…. இந்த குழப்பத்திலும் கூட, அவள் மனைவி நேற்று ‘காதல்’ என்ற வார்த்தைக்கே தட்டு தடுமாறி பதில் சொல்லிய விதம் அவனுக்கு சிறு புன்னைகையும், அவள் எப்போது தான் அவன் மீதான நேசத்தை உணருவாள் என்ற ஏக்கத்தையும் ஒரு சேர அளித்தன.

 

காலை 9 மணி அளவில் ராகவன், மரகதம் சில முக்கிய உறவுகள் வர, ஆதவனின் குடும்பமும் அவர்களை முறையாக அழைத்து உபசரிக்க, ராகவன் தனது மகளுக்கு சீர் பரப்பி, பட்டு துணி, பணம் வைத்த தாம்பூலம் கொடுத்து, அவர்களது முறைய சரியாக செய்தார்…

 

கிளம்புவதற்கு ஏதுவாக, இழையினி தங்களது அறையில் தயார் ஆகி கொண்டு இருக்க, கீழ் கேட்ட சப்தத்தில், தந்தை வந்துவிட்டத்தை அறிந்து வேகமாக கீழே வந்த இழையினி கண்களுக்கு அவளது தந்தை மட்டுமே தெரிந்தார்… அதே இரெண்டரை வயது உற்சாகத்துடனும், பாசத்துடனும் இழையினி “அப்பா…..” என்று அவரது உயிர் வரை தீண்டி செல்லும் குரலில், அவளது மொத்த பாசத்தையும் தேக்கி வைத்து ராகவனை நோக்கி விரைவாக வந்தவள், ராகவனது கை பற்றி, “அப்பா.. வந்ததும் ஏன் பா.. என்ன கூப்டல… எப்ப வந்தீங்க ? ஏன் லேட் அப்பா… என்ன இந்த 3 நாள் தேட செய்தீங்களா?? ” என்று ஆதவன் அருகில் இருப்பதை கூட அறியாது, வெளிநாடு போய் வரும் தந்தையை பார்க்கும் குழந்தை போல, இழையினி பேச, ஆதவனுக்கு ஏனோ லேசாக பொறாமை துளிர் விட தொடங்கியது….

 

ராகவனும் மகளின் சிறு பிள்ளை தனம் தன்னிடம் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்ந்து, லேசாக சிரித்தப்படி, “பாப்பா… நாங்க இப்போ தான் வந்தோம் டா… மாப்பிள்ளை கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் மா… அது தான் உன்ன கூப்பிடல…” என்று கூற, மரகதம் அருகில் வந்த இதழாவோ தன் தமக்கை, தந்தை பாசத்தில் நெகிழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக்காது, “கிரீன் ஸ்டோன்…. என்ன மீசை காலையிலையே  பாச ராகம் பாடுறாரு…. ” என்று கூற, மரகதமோ, “என்ன டி க்ரீ சோன்.. ஏதோ உளறுற…? ” என்று கேட்க, இதழாவோ, “ஐயோ கடவுளே என்ன மட்டும் ஏன் இத்தன புத்திசாலியா படைச்ச, மம்மி.. அது க்ரீ சோன் இல்லை , கிரீன் ஸ்டோன்.. அப்படினா பச்சை கல்லு னு அர்த்தம்.. உன் பேரு தான் மம்மி மரகதம்… ” என்று கூற, “அடிப்பாவி” என்று மகளை செல்லமாக கடிந்தார் மரகதம்…..

 

“ஏன் மம்மி எனக்கு ஒரு டவுட், அது என்ன அக்கா… நம்ம ராகத்துக்கிட்ட மட்டும் பாச மழை பொழியிறா… இன்னும் உன் பக்கம் எட்டிக்கூட பார்க்கல போலியே….” என்று அன்னையை வழக்கம் போல ஏற்றிவிட, மரகதமோ, “நீ எதுக்கு எனக்கு எடுத்துகொடுகிறனு தெரியும் சின்ன கண்ணு… அப்பாவும் பொண்ணும் அப்படி தான்…. ” என்று பெருமையாக சொல்ல இதழாவோ, “அம்மாடியோ… பாசமலர் படத்தைவிட, இந்த ரீல் பெருசா இருக்கும் போலவே…” என்று கூறிவிட்டு தன் தந்தை தமக்கையுடன் இணைந்துக்கொண்டாள்…..

 

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதவன் மனதில்… இழையினி-க்கு அவள் தந்தை மீதான அதீத பாசம் சிறு பொறமை உணர்வை தூண்டிக்கொண்டு இருந்தது…. ஏனோ அவளின் அன்புக்குரிய முதல் நபர் தானாக இருக்க வேண்டும் என்று தோன்றியது… ஆனால் அந்த யோசனையில் ஆதவன் வெகு நேரம் உழலாமல், அதை அப்படியே ஒதிக்கிவிட்டான்.

 

அதே நேரம், இதழா கிளம்புவதற்கு முன் பார்த்துவிட வேண்டும் என்று மகிழன் வேக வேகமாக அவனது வீட்டில் இருந்து தோப்பின் வழி வர, வரப்பில் நடக்கையில் மண் சரிந்து அவனது ஒரு கால் மட்டும் இடற, அவன் காலில் ஏதோ ஒரு வட்டவடிவ கூடை தட்டுப்பட்டது… அதை ஒருநிமிடம் பார்த்தவன், அதற்கு மேல் அங்கிருந்து அதை கவனிக்காது, இதழாவை காண விரைந்து வந்தான்…

 

அனைவரும் கிளம்பிக்கொண்டு இருக்க, ஆதவன் இழையினி இருவரும் உறவுகளில் மூத்தவர் கால்களை பணிந்து ஆசி பெற்றுக்கொண்டு இருக்க, இதழாவின் கண்கள் சுழன்று ஒருமுறை மகிழனை தேடிவிட்டு, “ஹப்பாடா… அந்த மன்கி வரல, வருவதற்கு முன்னாடி ஓடிடணும்…” என்று எண்ணமிடும் போதே அவள் முன் மகிழன் வந்து நின்றான்….

“ஐயோ வந்துட்டானே…” – அவனை பார்த்தபடி இதழா மனதில்

“வராமல் இருப்பேன்னு நினைத்தாயோ? ” அவளை பார்த்தப்படி, மகிழன் மனதில்

“சரி இன்னும் ஒரு சில நிமிடம் தான், அப்புறம் இதழ் ஜூட்… சீக்கிரம் இவன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடுடி பட்டுக்குட்டி….” – இழையினி மனதில்

“உன்ன மட்டும் தனியா போகவிடவா வந்தேன்… அப்படிலாம் நீ போக முடியாது டி கண்ணுக்குட்டி…” – மகிழன் மனதில்.

 

ஒருவரது பார்வையும், அசைவுமே மற்றவருக்கு அவர்கள் நினைப்பதை பறைசாற்ற, இதழா ஒரு அலட்சிய பார்வையுடன் முன்னே நடந்தாள் வண்டியை நோக்கி….

 

இழையினி முகம் முழுக்க சந்தோசத்துடன் கிளம்ப, அவளை பார்த்த ஆதவனுக்கு, இப்போது சற்று முன் அவன் மனதில் தோன்றிய எண்ணங்கள் காணாமல் போயின… அவளது சிரிப்பிற்காக எதையும் செய்யலாம் என்று தோன்றவே, அவனும் உற்சாகமாகவே கிளம்பினான்… அப்போது மகிழனை பார்த்தவன், “மகிழ்… ஏன் டா இவ்ளோ லேட்…? ” என்று கேட்க, மகிழனோ, “அதெல்லாம் ஒன்னும் இல்ல நண்பா… சரி நீ மட்டும் தனியாவா போற ? ” என்று கேட்டு வைத்தான்.

 

“ஏன் டா… இத்தனை பேரு இருக்காங்களே….” – ஆதவன்

“நண்பா… இந்த பொண்ணுக்கு தோழி போல, மாப்பிள்ளை க்கு தோழன் லாம் இல்லையா… ? ” – மகிழன்

“இப்போ நீ என்கூட வரணும்னு முடிவு செய்துட்ட… சரி வா… ” – ஆதவன்

“ஆனா எப்படி டா .. ” – மகிழன்

“நான் பார்த்துக்கிறேன்… ஆனா, அடிவாங்குறது போல எதுவும் செஞ்சு வச்சிடாதடா…” – ஆதவன்

“அப்பா… நாங்க வந்த கார், சாவி மிஸ் ஆகிடுச்சு… அது இந்த பரபரப்புல மறுப்படியும் எடுக்க மறந்துட்டேன்… இப்ப மகிழன் நம்ம கூட வந்து எடுத்துட்டு வரட்டும்… மகிழ் அதோட டுப்ளிகட் கீய் எடுத்துட்டு வா டா…” என்று ராகவனிடமும், மகிழனிடமும் கூற, ராகவனோ, “மாப்பிள்ளை.. என்ன இது.. அவரு வரட்டும், வந்துட்டு உங்க கூடவே திரும்பி வரட்டும்… உங்க தோழன் அப்படிங்கிறபோது, அவரு நம்ம வீட்டு புள்ள போல… எதுக்கு உடனே அவரு ஊருக்கு திரும்பனும், நம்ம வீட்டுலையே தங்கட்டும்… தம்பி வெரசா சாவிய கொண்டு வாங்க…” என்று கூறிவிட்டு வண்டியில் ஏற, இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த இதழா தலையில் அடித்துக்கொண்டாள்.

 

அனைவரும் வண்டியில் ஏற, ஒரு பசு வித்தியாசமாக கத்தும் சத்தம் ஒரு அபசகுன ஒலி போல கேட்க, வண்டியை கிளப்ப தொடங்கியவர்கள், ஒரு நிமிடம் திகைத்தனர்…. ஆனால் அப்பசு கத்தும் சப்த்தம் அதிகமாக, அது நிச்சயம் ஏதோ மாட்டு தொழுவத்தில் நிகழ்கிறது என்று பறைசாற்ற, ஆதவன் முதலில் வண்டியில் இருந்து இறங்கி ஓட, ஒருவர் பின் ஒருவராக ஓடினர்….

 

அங்கே அவர்கள் கண்ட காட்சியில், ஒரு நிமிடம் அனைவரும் திகைத்து நின்றனர்….  

Advertisement