Advertisement

 

கருவறைக் குரல்

 

“பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க” என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.

 

வானவன் வருவதற்கு முன்னே அவனின் புகழ் பாடும் கோஷங்கள் மதுரைமாநகர் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கின. அதிமுக்கிய காட்சிகள் அரங்கேறும் நாளாக அந்நாள் மாறக்கூடுமென்று யூகித்த பாண்டிய மக்கள் ஜனதிரளாய் கோட்டை வாயிலில் கூடியிருக்க, அனைவரது விழியோட்டமும் ராஜப்பாட்டை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது. மக்களோடு சேர்ந்து, அகன்று விரிந்து பரந்திருந்த கோட்டையும், கோட்டையைச் சுற்றியுள்ள அகழியும், விண்ணுலகை தொட்டுவிடும் உயரம்கொண்ட கோட்டை மதிலும், சுவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த போர் கருவிகளும், கோட்டைக்குச் சற்று அப்பால் ஓடிய வைகையாரும், கம்பீரமாய்க் கோட்டை மீது பறந்துக்கொண்டிருந்த மீன் இலட்சனை பொறிக்கப்பட்டிருந்த கொடியும் வானவனின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தன.

 

அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் விடையாய், இடியென முழங்கப்பட்ட கோஷங்களின் பேரொளியையும், சலசலவென்று ஓயாது ஓசையெழுப்பிய வைகை ஆற்றின் சப்த்தங்களையும் ஒடுக்கும் வல்லமை கொண்டதாய் காற்றைக் கிழித்துக்கொண்டு டக் டக் என்ற குளம்படி ஒலியை கிளப்பியபடி முன்னேறி வந்துக்கொண்டிருந்தது வானவனின் புரவி.

 

கம்பீரமாய்ப் புரவிமீதமர்ந்தவனின் கண்கள் கோவைநிறமாய்த் தகிக்க, அவனது முகமோ அகத்திலிருக்கும் ரௌத்திரத்தை அப்பட்டமாய்ப் பிரதிபலித்தது. மக்களின் ஆராவாரமோ, கூச்சலோ அவன் செவிகளை எட்டியதாகவும் தெரியவில்லை, தான் கொண்ட வெற்றியின் களிப்பும் அவனது சிந்தையை தொட்டதாகவும் தோன்றவில்லை. எவ்வித செருக்கோ ஆணவமோ இல்லாது அதே வேலையில் முகந்தன்னில் கோபத்தின் ஜுவாலைமட்டும் கொழுந்துவிட்டெறிய பாண்டிய நாட்டு துரோகி வீரபாகுவை குதிரையின் சேணக்கயிற்றில் கட்டி இழுத்துவந்தான்.

 

வழியெங்கும் கல்லும் முள்ளும் உரசி கிழிந்த நாராக வந்தவனின் அலறல் பாண்டியதேசமெங்கும் எதிரொலித்தாலும் அதில் சிறிதும் பாதிக்கப்படாதவனாக அவனை இழுத்துவந்து கோட்டை வாயிலில் விட, மக்கள் அனைவரும் வீரபாகுவிற்கு எதிராகக் முழக்கங்களை எழுப்ப, பாண்டிய தேசத்து முதல் அமைச்சர் கோட்டைவாயிலிற்கு நேரடி விஜயம் தந்தார்.

 

அவர்முன் “வணங்குறேன் அமைச்சரே” என மரியாதையுடன் வானவன் சிரம்தாழ்த்த, “உனது புகழ் ஓங்கட்டும் வானவா” என வாழ்த்திய மந்திரி வானவனின் தாய்மாமன் ஆவார்.

 

“வானவா, நமது பாண்டிய தேசத்து சுரங்க வழிகளின் பாதையை எதிரியிடம் அம்பலப்படுத்தவிருந்த துரோகியை தக்கத்தருணத்தில் நீ சிறை செய்தது மன்னருக்கு மிக்க மகிழ்ச்சி. உனது வீரத்திற்குச் சன்மானமாக, உனது துணிச்சலை கௌரவிக்கும் விதமாய் இவனுக்குரிய தண்டனையை உன்னையே நிர்ணையிக்கும்படி நமது அரசர் கட்டளையிட்டுள்ளார்.” என அனைவரின் முன்பு கூற, மக்கள் அனைவரும் ஒருகணம் வானவனின் முடிவிற்காக மௌனம் காத்தனர்.

 

வெளியே இதைக் கூறினாலும் அமைச்சரின் உள்ளத்திலோ, “வீரபாகுவின் மரணம் எவ்வாறு நிகழவேண்டுமென்று நீ ஜனிக்கும் முன்பே அவள் நிர்ணையித்துவிட்டாள் வானவா. அவளின் எண்ணம் யாதென்று நீ அறிய வாய்ப்பில்லை. ஆனால் நீ அறிந்திருப்பாய் என்பது அவளது நம்பிக்கை. அதை நான் உன்னிடம் இதுவரை கூறும் அவசியம் ஏற்படவில்லை. இப்பொழுது அவசியம் இருந்தாலும், நான் கூறினால் அது மன்னரின் ஆணையை மீறுவதாகும். இவனின் மரணம் நான் கூறி நீ நிறைவேற்றியதாக இருக்கக் கூடாது. உனது முடிவாகவே இருக்கவேண்டுமென்பது மன்னரின் ஆணை. இக்கணம் நான் என்ன செய்வேன்” என எண்ணங்களை ஓட்டியவர், ராட்சச கோட்டை கதவுகளில் பொறிக்கப்பட்டிருந்த கொற்றவையின் உருவத்திற்கு முன் மனதார உருகி சிரம் தாழ்த்தி, “அவளின் எண்ணங்களை வானவன் நிறைவேற்ற அருளவேண்டும் தாயே” என மெல்ல முணுமுணுத்தபடியே வேண்டுதல் வைத்தார்.

 

அவரின் குரல் கொற்றவையை எட்டியதோ அவர் அறியார், ஆனால் வானவனின் செவிகளை எட்டியது அவளின் குரல்.

 

ஆம், வீரபாகுவிற்கான தண்டனையாக வாழ்நாள் முழுவதும் சிறை என்று எண்ணம் கொள்ள, அதைத் தடுக்கும்விதமாய் அசிரீரியாய் ஒலித்தது ஒரு பெண்ணின் குரல். அத்தனை கூட்டத்திலும் மக்களின் ஆராவாரத்திலும், ஆங்காங்கே இருந்த புரவியின் கணைப்புகளையும் மீறி ஒரு பெண்ணின் ஓலம் ஓயாது வானவனின் காதில் தனித்துக்கேட்க தொடங்கியது.

 

அக்குரலில் அழுகையுடன் ஆக்ரோஷமும் நிறைந்திருந்தது. அந்த ஆக்ரோஷத்தில் ஓர் திண்ணம் நிறைந்திருந்தது. அவளின் கூக்குரல் வானவன் செவிகளை எட்ட, எட்டுத்திசைகளிலும் பார்வையைச் சுழற்றி சுழற்றி எங்கிருந்து குரல்வருவதென்று ஆராய, அதற்கான சுவடு கொஞ்சமும் அவன் கண்களுக்கு அகப்படவில்லை.

 

தணலாய் தகித்த வானவனின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் ஓட, புரவிமீதிருந்து இறங்கி வீரபாகுவின் கைவிலங்கை அகற்றியவன், அவனுக்கான தண்டனை யாதென்று அறிவிக்க முற்பட்டான்.

 

“வீரபாகு நம் நாட்டில் நம்மோடு கலந்து நம்மோடு வாழ்ந்து நமது ரகசியங்களை அம்பலப்படுத்தவிருந்த குற்றத்திற்காக, பாண்டிய படைகளின் தளபதியான நான் இவனுக்கு…” எனக் கம்பீரமாகக் கூறியவனின் சொற்றொடரை நிறைவு செய்ய விடாது அப்பெண்குரல் அவன் செவிகளை மட்டும் எட்டும் படி அவசரமாகத் தடுத்தது.

 

“வானவா, வேண்டாம். இக்கயவனிற்கான தண்டனை இதுவல்ல” என அவசரமாக அந்தப் பெண்ணின் குரல் கூற, அவனுள் குழப்பம் நிறைந்த சிறு தடுமாற்றம். மீண்டும் ஜனத்திரளை நோக்கி பார்வையை ஓட்ட அவனால் அழும் குரலின் சொந்தக்காரியை கண்டறிய இயலவில்லை. அவனின் அலைப்புறுதலும் தேடலும் சுற்றியிருந்தோர் கருத்தில் பதிய மக்கள் சலசலக்க தொடங்கினர்.

 

“தளபதியாரே, தண்டனை யாதென்று அறிவியுங்கள்” என ஒரு சிலர் குரல் கொடுக்கவும், மீண்டும் வானவன் இதழ்பிரிக்கும் வேளை, “வானவா, நான் கூறுவதை மட்டும் கேள். அந்த நயவஞ்சகனுக்குச் சிறை போதாது அவனின் சிரம் கொய்வதே சிறந்தது” எனக் கூறிய அப்பெண்ணின் அசரீரி அழுகுரலிலிருந்து கோபக்குரலுக்கு மாற்றம் கொண்டிருந்தது.

 

இக்குரல் தன் செவிகளை மட்டுமே எட்டுவதை உணர்ந்த வானவன் தனக்குள் மெல்ல, “என்ன ? சிரம் கொய்வதா? இல்லை. மரணத் தண்டனையை அளிக்க நான் யார்? பாதாள சிறை தான் நான் அவனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனை” எனக் கூற, இப்பொழுது அப்பெண்ணின் குரல் மிகவும் உக்கிரத்துடன் ஒலிக்கத் தொடங்கியது.

 

“வானவா, இவன் என்றோ மடிந்திருக்க வேண்டியவன். வாழ தகுதியற்றவன். நயவஞ்சகத்தால் என் கணவனைக் கொன்றவன். முறையற்ற பார்வையினால் நிறைமாத கர்ப்பிணியான என்னைக் கூனிக்குறுக செய்தவன். இவன் இனியும் வாழ்ந்தால் பெண்களுக்கு அது சாபக்கேடு. இவனின் கதையை உன் வாள் கொண்டு முடித்துவிடு” எனக் கோபமும் உறுதியும் கலந்த குரலில் கூறினாள்.

 

அவளின் அசரீரி குரலுக்கு ஏதோ பதில்கூற முனைந்தவனை மீண்டும் தடுத்த அக்குரல், “பொறு, இவன் மரணம் தான் வேண்டும் எனக் கூறிவிட்டேன். அஃது எவ்வாறு நிகழவேண்டும் என்று நான் இன்னும் கூறவில்லையே. நன்றாகக் கேள்.

 

கூட்டத்தில் இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உண்டா என்று கேள். அப்படியிருந்தால் அவர்களின் கைகளில் பிரம்பை கொடு. இக்கயவனால் அவர்கள் சிந்திய கண்ணீர் துளிகளுக்கு ஈடாக இவனது உதிரம் இந்த மதுரை மண்ணில் உதிர வேண்டும்.

 

பிறகு உனது வாள்கொண்டு அவனது சிரம் கொய்து விடு. இவன் செய்த காரியத்தை இனி ஒருவரும் செய்ய அஞ்சும் விதமாய் மதுரை கோட்டை வாயிலில் இவனது சிரத்தை தொங்கவிடு. நயவஞ்சக சிந்தனைகளை ஒட்டிய இவனது மூளை சுட்டெரிக்கும் ஆதவன் முன் உருகி ஓடவேண்டும். முறையற்ற பார்வையைப் பிறர் மனையாளின் மீது ஓட்டிய இவனது விழிகளோ காக்கைக்கும் கழுகுக்கு இரையாகவேண்டும். இது தான் எனது ஆணை வானவா” எனக் கட்டளையிட்ட குரல், ஒரு சில கண்ணிமைகள் தாமத்திது மீண்டும் தொடர்ந்தது.

 

இப்பொழுது தாழ்ந்த அவளின் குரல் இரும்பு உள்ளமும் உருகும் வண்ணம் ஒலிக்கத்தொடங்கியது. “இஃது எனது ஆனைமட்டுமல்ல வானவா. ஆசை, எனது கடைசி ஆசை. நான் மரணிக்கும் தருவாயில் நீ ஜனிக்கும் கண்ணிமைகளில் நான் எடுத்த சபதமிது. நிறைவேற்றுவாயா? உன்னை ஈன்றேடுத்த தாயின் ஆசையைச் செய்வாய்தானே மகனே” எனக் கூறியதோடு அந்தப் பெண்ணின் குரல் அமைதியானது.

 

அந்த அழுகுரல் இறுதியாகக் கூறிய வாக்கியத்தைக் கேட்கநேர்ந்த வேளை வானவன் திக்பிரம்மை கொண்டு அசையாது நின்றான். ஒலித்த வார்த்தைகளைத் தன்னுள் மீண்டும் மீண்டும் ஓட்டி பார்த்து, கேட்டவைகள் யாவும் கனவோ கற்பனையோ என எண்ணத்தை ஓட்ட, இல்லை கேட்க நேரிட்ட அத்தனையும் மெய் எனப் பறைசாற்றுவதாய் அவனது கடைக்கண்ணின் ஓரத்தில் சிறுதுளி கசிந்துக்கொண்டிருந்தது.

 

அதற்குமேல் கண்ணிமையும் தாமத்திக்காமல், தன் தாய் கூறிய தண்டனைகளை ஆணைகளாகப் பிறப்பித்தான்.

 

அக்குரல் கூறிய அனைத்தும் அடுத்த ஓரிரு நாழிகைக்குள் நிறைவேற்றப்பட, நிகழ்ந்தவை யாவையும் நம்ப இயலாத தன்மையுடன் பாண்டிய அமைச்சரும் வானவனின் தாய்மாமனும் ஆனா அக்கிழவர் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

அவரது உள்ளதே, “அல்லி தேவி, இஃது எவ்வாறு சாத்தியமாகிற்று ? நீ எவ்வாறு வீரபாகுவின் மரணம் இருக்கவேண்டுமென்று நிர்ணையத்தையோ அவ்வாறே நிகழ்ந்துள்ளது” எனத் தனக்குள் எண்ணத்தை ஓட்டியவர், பல வருடங்கள் முன் நிகழ்த்தவைகளைக் கண்முன் கொண்டுவந்தார்.

 

பாண்டிநாட்டு அமைச்சர், தன் தங்கையின் நலன் அறிய அவளின் ஊருக்குச் சென்றிருக்க அங்கோ அவர் காண நேர்ந்த காட்சிகள் அவரது உடலை உறையவைத்தது.

 

தங்கையின் காதல் கணவன் அவனது நண்பனின் துரோகத்தால் குருதிவெள்ளத்தில் மிதக்க, தங்கையோ கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தாள். நிறைமாத கர்பணியான அல்லி தேவி, கருவினில் இருந்த தன் குழந்தையிடம் வீரபாகுவின் மரணம் எவ்வாறு நிகழவேண்டுமென்று வேதனை தாளாத குரலில் கூறியபடியே தன் அண்ணனின் புறமாகத் திரும்பி, ” தமையனே, என் கணவன் துரோகத்திற்குப் பலியான செய்தி எவரையும் எட்டாது பார்த்துக்கொள். நயவஞ்சகன் வீரபாகுவின் மரணம் என் மகன் கைகளில் தான். எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அவன் கருவறையில் கேட்ட குரல் நிச்சயம் அவன் செவிகளில் ஒலித்தே தீரும். வீரபாகுவின் மரணம் என் மனம் குளிர நிகழ்ந்தே தீரும். அதுவரை தாங்கள் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது தமயனே. நீர் எங்களுக்கு நேர்ந்த நிலையை எவரிடமும் தெரிவிக்கக் கூடாது. அடுத்தவரின் பரிதாபங்கள் எனக்கும் எனது மகனுக்கும் வேண்டாம்” எனக் கூறியபடியே அடுத்தச் சில நாழிகைகளில் வானவனைப் பிரசவித்துவிட்டு அவள் உயிர்துறந்தாள்.

 

பழையவைகளை மனத்திரையில் ஓட்டி பார்த்த அமைச்சர், தன் தங்கையின் சொல் இன்று மெய்யானதை கண்டு மெல்ல இமைமூடி திறக்க ஓர் துளி விழி நீர் மண்ணில் சிதறியது. தன் மருமகன் கருவறையில் கேட்ட குரலை மீண்டும் கேட்கவைத்த மதுரைக்காவல் தெய்வமாம் கொற்றவவைக்கு உளமார நன்றிக்கூறியவர் வானவன் மீது பார்வையை ஓட்ட, அதே பாவனையுடன் அவனும் அவரைத்தான் அக்கணத்தில் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

பிறர் அறியாவண்ணம் வானவன் விழியால் கேட்ட வினாவிற்கு விடையாக அமைச்சர் விழிமோடி ஆமோதித்தார்.

Advertisement