Advertisement

 

முகிழ் –  30

 

“சினேகன், நீ இப்ப சொன்னத மறுபடியும் சொல்லு… எனக்கு சரியா கேட்கலன்னு நினைகிறே ” என்று சற்று உள்ளே போன குரலில் வரவழைக்கப்பட்ட நிதானத்தோடு, ஒருவேளை அவனது செவிகள் தான் தவறாக வார்த்தைகளை உள்வாங்கிவிட்டதோ என்ற ஏக்கத்தோடு, அப்படி தான், அவன் செவிகள் தான் சரியாக உள்வாங்காமல் இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடு ஆதித்யன் கேட்க அதற்கு சினேகன் பதில் சொல்லும் முன்னரே அவனது வீட்டின் அழைப்பு மணி விடாது அடிக்க, சினேகன் ஆதியிடம், “ஒரு நிமிஷம் சார்” என்று அழைப்பை துண்டிக்காமலே சென்று கதவை திறந்தான்.

 

அந்த ஒரு நிமிட கணங்கள், ரணங்களாக தோன்ற அடுத்த நொடி ஆதித்யன் இதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டுவிட்டு உதட்டில் ஒரு மென் முருவல் தவழவிட்டபடி மறுமுனையில் கேட்ட பேச்சு குரலில் லயித்தான்.

 

“டே சினேகா, கதவ திறக்க உனக்கு இவ்ளோ நேரமா? … நீ என்ன ஹீரோஆ எதுக்கு இப்ப போய் இப்படி அடி பட்டு வந்து நிற்கிற…” என்று அவன் கதவை திறக்க தாமதித்ததால் வந்த கோவமும் நண்பனின் உடலில் இருந்த காயத்தை பார்த்ததனால் வந்த அக்கறையும் இரண்டும் சேர்ந்து இறுதியாக சிநேகனுக்கு அவளிடம் இருந்து வசவு மழை பொழிய காரணமாய் இருந்தன.

 

என்ன கோவமாக பேசிய பொழுதும் ஆதித்யனின் கோவத்தினால் அவள் முகம் வேதனை பூசி இருந்தது சிநேகனின் கண்களுக்கு தப்பவில்லை.

 

அவளது முகத்தை ஊடுருவுவது போல பார்த்த சிநேகன், “மந்தி உன் பேச்சுக்கும் முகத்துக்கும் சம்மந்தம் இல்லையே… உன் முகம் நீ ஏதோ ரொம்ப தாங்க முடியாத வேதனைய சுமக்குற மாதி காட்டுது.. ஆனா பேச்சு…? அதுக்கு சம்மந்தம் இல்ல… என்ன மேட்டர் மந்தி…” என்று ஆதித்யன் அழைப்பினில் இருப்பதை மறந்து வழக்காமாக பேசுவது போல அவளுடன் வளவளத்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக கைபேசியை பார்க்க ஆதித்யன் இன்னமும் அழைப்பினில் இருப்பது தெரியவந்து அவனது கருவிழியை மேலும் கீழும் உருட்டினான் ஆதித்யன் இதை கேட்டிருக்க கூடாதே என்ற கவலையுடன்.

 

அவன் முகமாற்றத்தை கவனிக்காத மதி, அவன் கேட்ட விஷயத்தில் நேற்றில் இருந்து அழுத்திக்கொண்டு இருந்த அவள் மன துயரம் அவளையும் அறியாமல் அவள் உதட்டில் இருந்து சிந்தும் துயர முத்துக்கள் ஒரு சில வார்த்தைகளாக மாறி உதிர்வது போல சிநேகனிடம், “பிடிச்சவங்களே புருஞ்சுக்காத மன வலிய இப்ப நானும் அனுபவிக்கிறே.. சரி அத விடு… இப்ப அந்த ஆஷிக் பத்தி சொல்லு… நீ சொல்ற தகவல் வச்சு தான் நான் அடுத்த ஸ்டெப் யோசிக்கணும்….” என்று கூறிவிட்டு அவள் உள்ளே நடக்க அவளை மந்தி என்று கூறியதை ஆதித்யன் கேட்டு இருப்பானோ என்ற அவனுக்கே உரிய கவலையில் மதி சொல்லியதை ஊன்றி கவனிக்காது மதி சென்றதும் தொடர்பினில் இருந்த ஆதித்யனிடம், “சார்…” என்று தயக்கத்துடன் இழுத்தான்.

 

மறுமுனையில் இருந்த ஆதித்யனின் மனநிலையோ, மதி காணவில்லை என்றவுடன் அவன் உயிரே தொலைந்தது போலவும், அவள் குரல் கேட்ட நொடி பாலையின் சாரல் போலவும், அவள் சிநேகனிடம் காட்டிய குழந்தை கோவத்தில் ரசிக்கும் கலைங்கனாகவும், சிநேகன் அவளிடம் பேசியதை கேட்டபோது சிறந்த நண்பர்கள் என்றும், இறுதியாக துயரம் தொனிக்க ஒலித்த அவள் குரலும் அந்த வார்த்தைகளும் ஆதித்யனுக்கு நேற்று நிகழ்ந்தவைகளை நினைவு படுத்த அவன் மனம் மீண்டும் கோவத்தால் இறுக தொடங்கியது.

 

தனக்குரியவரிடமும் கோவமும், அவர்களுக்கு ஆபத்து வரும் சமயத்தில், சூரியன் முன் கரையும் பனித்துளியாய் கோவமும், மலை அளவு உயரும் நேசமும், மறுபடியும் அவர்களுக்கு ஆபத்தில்லை என்று அறிந்தவுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோவமும் மனித இயல்பு என்றால், காதலில் அது ஒரு அங்கம். அதற்கு ஆதித்யனும் விலக்கு அல்லவே.

 

வெவ்வேறு மனநிலையில் புரட்டப்பட்டிருந்த ஆதித்யன், மதி மீது கொண்ட அதீத காதலால் அதீத கோவமும் கொண்டு, மனமும் குரலும் ஒரு சேர இறுக இருந்த நேரம் சிநேகனின் அழைப்பு, “சார்…” என்று இருக்க, இறுகிய குரலிலே ஆதித்யனோ, “ஹ்ம்ம் சொல்லுங்க சிநேகன்…” என்று கூற சிநேகன் ஓர் நிமிடம் எச்சிலை விழுங்கினான் சிறு பயம் கலந்த சங்கடத்தால்.

 

சிநேகனது மனமோ, “என்னாவா… இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இவரு இஷ்திரிப்பெட்டியில ஆம்புலேட்ட போட்டமாதி சூடா இருக்காரு…. பேச்சுவாக்குல மந்தினு சொல்லிட்டே… ஆனா அதுவும் உன்மைதான… இந்த மதி எப்பவாச்சும் மதிசிருக்கா என்ன…” என்று மனதினுள் பொலம்பிக் கொண்டே மறுபடியும் ஆதித்யனிடம், “சார், அது வந்து மதி வந்துட்டாங்க….. லேட் ஆகவும் என்னமோ ஏதோனு கால் செய்துட்டே…” என்று கூற ஆதித்யன் இப்போது இயல்புக்கு திரும்பி, “ஹா சரி சிநேகன் ஒகே… மதி அங்க இருக்கட்டும்… நான் மத்தது சொல்றேன்… பட் மதி கிளம்ப போறதுக்கு முன்னாடி கண்டிப்பா என்கிட்ட சொல்லுங்க.. என்கிட்ட சொன்ன பிறகு தான் மதி கிளம்பனும்… உங்க உடம்பு எப்படி இருக்கு… ஆர் யு பைன்? …” என்று ஆதித்யன் கேட்க, “ஹா நான் பெட்டெர் ஆதி சார்.. ” என்று கூறிவிட்டு மனதினுள், “ஒஹ் இவுங்க ஒய்ப நம்ம அவுங்க இவுங்க னு தான் கூப்பிடுனும் போல… அந்த மந்தியை ‘ங்க’ போட்டு மரியாதையா சொல்லவும் ஆதி சார் நல்லா பேசுறாரு…எல்லாம் என் நேரம் மந்திக்கு மந்திரி அந்தஸ்த்து வரும்னு கனவா கண்டே… சரி ஒகே அப்படியே கூப்பிடுவோம்.. ஆதி சார்க்காக…” என்று சிநேகன், ஆதியுடைய இறுகிய குரலுக்கும், இலகு வார்த்தைக்கும் அவனே அர்த்தம் கர்ப்பித்துக் கொண்டான். 

 

மேலும் ஒரு சில விஷயங்களை சிநேகனிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு அழைப்பை துண்டித்தவன், அவனுடைய பாடி கார்ட்ஸ்கு அழைத்து சிநேகனின் விலாசத்தை தெரியபடுத்தி மதிக்கு அவன் சொல்லும்வரை நிழலாக தொடர சொல்லியவன் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களையும் திட்டங்களையும் செய்யல் படுத்த தொடங்கினான்.

 

இங்கு சிநேகனது வீட்டில் மதியோ, சிநேகன் கூறிய தகவல்கள் மற்றும் ஆஷிகின் தொழில் அவனது புகைப்படம் என்று அவன் சேகரித்திருந்த அனைத்தையும் மதியிடம் கொடுக்க, மதி ஆஷிக்கின் புகை படத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

அதேநேரம் செழியன், ஆதித்யன் சொன்ன சில வேலைகளை திறம்பட செய்தவன் ஆதித்யன் இன்று அலுவலகம் வராததால் அவன் ஆதித்யனின் தலைமை அலுவலகம் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தான்.

 

அன்று ஞாயிறு தான் என்றாலும் கூட சமீபத்தில் ஆதித்யன் எடுத்திருந்த ஒப்பந்தப்படி இன்னும் இரண்டே நாட்களில் அவன் எடுத்துக்கொண்ட பொறுப்பை முடிக்கவேண்டும் என்பதற்காக ஞாயிறு அன்று கூட ரொம்பவும் தேவைப்பட்ட பணியாளர்கள் வந்து பணி செய்துக் கொண்டு இருந்தனர் ஆதித்யனின் ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனியில்.

 

குறிப்பிட நேரத்துக்குள் வேகமாக ஆதித்யன் சொன்ன வேலைய செய்து முடிக்க செழியன் விரைந்து ஆதித்யன் அறைக்குள் வர, அவனுடைய வேகத்தையும், வந்ததும் அவன் துணிகரத்தோடு ஆதித்யன் அறைக்கு சென்றதையும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பலரது கண்ணில் பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் அவரவர் பணியில் ஆழ, இனியனின் அறையை கடந்து சென்றதனால் செழியனின் வரவு இனியனுக்கும் தெரிந்திருந்தது.

 

இனியனது முன்நெற்றியில் பலமான சிந்தனை ரேகை ஓட, ஆதித்யன் வாராததும், செழியனது வரவும் ஒருசேர இனியனுக்கு குழப்பத்தை தர, அதன் பின்னணி என்ன என்பது இனியனது சிந்தனையில் ஓட தொடங்கி இருந்த வேலை இனியனுடைய இண்டர்காம் அவன் சிந்தனைக்கு தடைப்போட்டு நடப்புக்கு அழைப்பு விடுத்தது.

 

இண்டர்காமில் அழைத்தது செழியனே, இனியனிடம் ஒரு முக்கியமான கோப்பை கேட்க அதை கொண்டு வந்தான் இனியன், ஆதித்யன் அறைக்கு. இனியன் வந்ததும் ஒரு சக ஊழியர் என்ற முறையில் புண் முறுவலுடன் இனியனிடம், “மிஸ்டர் இனியன்… இன்னைக்கு ஆதி சார் வரமாட்டாரு, அதுனால இத பத்தின டீடைல்ஸ் என்ன கலெக்ட் பண்ண சொன்னாரு… என்று கூறிக்கொண்டே வேகமாக வேறு சில கோப்புகளில் உள்ள தகவல்களை குறித்துக்கொண்டவன் இனியனிடம் இருந்து அவன் கொண்டு வந்த கோப்பை வாங்கி விட்டு அவனிடம் வேறு சில தொழிற்சார்ந்த தகவலும் கேட்டுக் கொண்டான்.

 

அவன் அதை புரட்டிக்கொண்டு இருக்கும் பொழுதே செழியன் நினவு வந்தவானாக ஒரு கோப்பை காண்பித்து அதற்கு உரிய ஒரு ஆவண நகலை கேட்க, இனியனோ அதை எடுக்க அவன் அறைக்கு சென்றான்.

 

யாரின் நல்லநேரமோ அல்லது கெட்டநேரமோ, இனியன் வாசலை தாண்டும் தருவாயில் செழியனது அழைபேசி அடிக்க, வாசலை ஒருமுறை பார்த்துவிட்டு செழியன் அதை ஏற்று காதுக்கு கொடுத்து யாரிடமோ, “ரிபோர்ட்டர் இளமதி. எஸ்… சாரோட மனைவி மிசெஸ் ஆதித்யன தான் கிட்னாப் பண்ண போறாங்க…” என்று கூற வாசலை தாண்டி சென்ற இனியனது காதில் மதி என்ற சொல் ஒலிக்க அவனது கால் அவனது கட்டுப்பாடு இன்றி தரையில் வேரூண்டி நிற்க அவனது செவிகளோ ஆதித்யனின் அறைக்குள் நிகழும் உரையாடலில் லயித்தது.

 

மதி என்ற பெயரின் உச்சரிப்பால் சென்றவேலையை மறந்து கதவின் ஓரத்தில் நின்று செழியன் பேசுவதை கேட்ட இனியன் மன நிலை, நிலச்சரிவின் போது ஏற்படும் நிலை இல்லா பூமி தாயின் தட்டாய் அங்கும் இங்கும் நகர்ந்துக்கொண்டு இருந்தது. 

அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே மேலும் செழியன் கைபேசியில், “நீங்க விடுங்க… யூ கேன் ஸ்டாப் ப்ரம் ஹியர், ஆதி சார் பார்த்துபாரு… ஹா நீங்க சொல்றது புரியிது… ஆனா ஆதி சார் ஏன் இப்படி ரியாக்ட் பண்றாரு னு தெரியல, மதி மேடம் க்கு பிரச்சனைனு தெருஞ்ச பிறகு கூட அவரு நம்மள பின் வாங்க சொல்றதுக்கான காரணம் எனக்கு கூட புரியல… ஒகே… நான் இப்ப இங்க ஆபிஸ் வேலையா வந்தே… நான் மறுபடியும் சொல்றே… ஆதி சார் நமக்கு வேலை இப்ப செய்யவேணாம் சொல்லியதால நம்ம நம்மள்ளுடைய வேலையை கவனிப்போம்…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க அவர்களின் முழு உரையாடலை கேட்ட இனியன் நெற்றில் சிந்தனை கோடுகள் படர்ந்தன. 

இனியனது மனதில் மதி கடத்தப்பட போகிறாள் என்பது மட்டுமே சீறி தாவும் கருப்பு குதிரையாய் ஓடிக்கொண்டு இருக்க, வேகமாக இனியன் அவனது அறை சென்று செழியன் கேட்ட கோப்பை எடுத்துவந்துக் கொடுத்தவன் செழியன் கிளம்பவும் அடுத்த நொடி இனியனும் ஏதோ ஏதோ எண்களை அழுத்த, அதில் வந்த பதிலோ அல்லது அழைத்ததில் திருப்தி ஏற்படாததாலோ அவனது கை முஷ்டி இறுக காற்றில் ஓங்கி குற்றியவன் தலை முடியை அழுந்த கோதிய படி இருமுறை அங்கும் இங்கும் அவனது அறையில் நடந்தான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அதாவது செழியன் ஆதியுடைய அலுவலகம் வந்ததும் வந்த பிறகு கைபேசியில் பேசியதும், இனியன் மதியின் ஆபத்தை உணர்ந்துக்கொண்ட அதே நேரம், மதி ஆஷிக்கை பற்றி முழு தவகல் தெரிந்துக்கொண்டு இருந்தாள். மதி தெரிந்துக் கொண்டு இருந்த, அதே தருணத்தில் ஆதியின் பாதுகாவலர் இருவர் சிநேகனது வீட்டிற்கு வெளியில் வந்து மதியின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினர். 

அதே நேரம் அகிலன், ஆதித்யன் சொன்ன படி ஒரு வண்டியை, ஆதித்யன் கொடுத்த வண்டி எண் கொண்டு ஏற்பாடு செய்திருந்தான். மேலும் நம்பிக்கைக்குரிய இரு காவலைரையும் ஏற்பாடு செய்திருந்தான் குறிப்பிட்ட இடத்தில் மாறுவேடத்தில் நிற்பதற்காக. 

அதே தருணத்தில், மதி விதைத்த காதல் விதை நெஞ்சில் வேர்விட்டு ஊடுருவி செல்ல, அவள் அவனை நம்பாததால் ஊடுருவி சென்ற வேர் இன்பத்துக்கு பதில் ரணத்தை அவன் நெஞ்சில் படர செய்துக்கொண்டு இருக்க, சிநேகனின் அழைப்பை துண்டித்துவிட்டு கையிலிருக்கும் காகிதத்தில் மீது பார்வையை ஓடவிட்டவன் அதை பிரித்து படிக்க தொடங்கினான்.

 

‘ “க்ரிஷ்ணவ்…. 

எனக்கு உங்கள பார்த்து என்னோட காதலா சொல்ற தயிரியம் இல்லாததால இந்த லெட்டெர் மூலமாச்சு சொல்லலாம்னு தான் இத எழுத தொடங்குறேன்… ஆமாம் நான் உங்கள காதலிக்கிறேன், உங்கள மட்டுமே… எப்ப இருந்துன்னு கேட்குறீங்களா? நிச்சயமா இது இப்ப வந்த காதல் இல்ல, ஏன் நம்ம கல்யாணம் ஆனா பிறகு வந்ததுக்கூட இல்ல, உங்கள உங்க ஆபிஸ் ல இண்டர்வியு பண்ண வந்தபோதும் கிடையாது… 4 வருசத்துக்கு முன்னாடி இருந்து உங்கள காதலிக்கிறேன்… 

ஆனா இப்ப வர என்னால இத சொல்ல முடியல, நான் சொல்ல வரும் போது எல்லாம் ஏதாச்சும் ஒரு தடை, என்னோட முட்டாள் தனத்த எனக்கே ஞாபக படுத்துற என் அறிவு… உங்க கிட்ட காதல சொல்ல சொல்ற என் மனசு, சொல்ல முடியாம தவிக்கிற என் குற்ற உணர்ச்சி…. இப்படி எல்லாம் சேர்ந்து என்ன ரொம்ப பலவீனப் படுத்திருச்சு…..

உங்கள நான் முதன் முதலா தெருஞ்சுக்கிட்டது, ஒரு சின்ன குழதைக்கூட சரி சமம்மா உ ர்க்காந்து பேசுற கிருஷ்ணவ தான்… என்னோட பெயர வச்சிருந்த அந்த குழந்தை…. அப்படியே உங்கள தற்செய்யலா சந்திக்க நேர உங்க முகம் தெரியாமலே உங்க குணம் வச்சும் என்ன கட்டி போடுற உங்க குரல் வச்சும் என் மனசுல ஏதோ பிடிப்பு….

எப்ப காதல் வந்தது முதல்லன்னு எனக்கு தெரியாது… ஆனா நான் என் காதல உணர்ந்தது நீங்க மூச்சு இல்லாம படுத்திருந்த நொடி, நீங்க உயிர் பிழைச்சதும் சந்தோசமும் கண்ணீரும் ஒரு சேர எனக்கு வந்த நொடி…..

உங்ககிட்ட நான் காதல சொல்ல வந்தேன்… மனசுல ஆயிரம் ஆசைகளை சுமந்திகிட்டு, ஆனா உங்கள பத்தி காவ்யா சொன்ன தகவலும் நான் என் கண்ணாலா பார்த்த ஆதாரமும் என் காதல வெளிபடுத்தாம என்ன அந்த இடத்தைவிட்டு போக வச்சது… அந்த இடத்தைவிட்டு போனது நிஜம் தான், ஆனா நீங்க என் மனச விட்டு போகல…. என் மனசு உங்கள பிரிஞ்சு இருந்தாகூட, காதல சொல்லாடிக்கூட, உங்கள தவிர வேற யாரையும் என் வாழ்க்கையில ஏத்துக்க முடியாது அப்படிங்கிறத தெளிவா சொல்லுச்சு….

உங்கள மறுபடியும் சந்திச்சதும் என் மனசுக்கும் அறிவுக்கும் பெரிய யுத்தமே நடந்தது. நீங்க லிப்ட் ல என்கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்ட முறை வச்சு நான் முன்னாடி புருஞ்சுக்கிட்டது தப்போ னு தோன ஆரம்பிச்சது… கல்யாணத்துக்கு அப்புறம் உங்க நடவடிக்கை வச்சு என் மேல தான் தப்புன்னு நான் முழுசா உணர்தேன்… உங்கள முன்னைவிட அதிகமா நேசிச்சே… 

உங்ககிட்ட காதல சொல்ல வரும் போது எல்லாமே உங்களுக்கு ‘நம்பிக்கை’ அப்படிங்கிற விசயத்து மேல இருந்த பிடிப்பு என்ன சொல்லவிடாம ஊமை ஆக்கிடுச்சு……

எங்க நான் சொல்லவந்து, நம்பிக்கை இல்லாதவ என் வாழ்க்கை க்கு வேணாம் னு சொல்லிடுவீங்கலோனு…. இந்த பயம் தான் என் காதல சொல்லமுடியாம நான் தவிக்கிறதுக்கு காரணம்…..

நான் ரசிச்சு ரசிச்சு கேட்ட உங்க குரல் ல, அதே குரல் வெறுப்புல நிறைஞ்சு என்கிட்ட பேசுறத கேக்குற சக்தி என்கிட்ட இல்ல க்ரிஷ்ணவ்… அதுனால தான் இத எழுதுறேன்…..

இத நீங்க படிச்சு, என் காதலையும் என்னையும் முழுசா புருஞ்சிகிட்ட அடுத்த நொடி நம்ம வாழ்க்கையை சந்தோசமா ஆரம்பிக்கணும்னு ஆசைபடுறேன்.

என் காதலை முகிழ்த்த வருவாயா?  

                                          எதிர்பார்ப்புடன் மதி’

 

அதை படித்து முடித்த ஆதித்யன் தான் என்ன உணருகின்றோம் என்பதே புரியாமல் உதட்டில் சிரிப்பும் கண்கள் லேசாக நீர் படர்ந்தும் இருந்தது. அந்த கடிதத்தை ஒருமுறை அவனது இரும்பு கரம் கொண்டு வருடி பார்த்தவன் மனதினுள், “என் மதி….” என்று சொல்லிக்கொண்டான். 

அவன் மனம் நிறைந்திருந்தது…. தான் நேசித்த ஒருத்தி, தன் மனைவி, அவனோடு கலந்து சரி பாதி ஆகிவிட்டவள் அவனை உளமாற அவனை நேசிக்கிறாள் அவனை நம்புகிறாள் என்ற எண்ணம் எழ அவன் கால்கள் நிம்மதியிலும் பெருமையிலும் காட்டில் வாழும் சிம்மத்தை போல நடை போட்டன. அவன் மனமோ அழகிய பொம்மை கண்ட குழந்தையை போல கொட்டமடித்தது. பார்வைக்கு அறிமாவை போலவும், மனதில் காதல் வெற்றியால்  குதூகலிக்கும் குழந்தையை போலவும் அவன் முகத்தோற்றமும், அகதோற்றமும்  இருந்தது. 

அவளை இப்பொழுதே காண வேண்டுமென எண்ணம் எழ, அவளை கையில் ஏந்தி இந்த உலகத்தையே சுற்றவேன்டும் என்ற உத்வேகம் தோன்ற, அவள் குரலக்கு, அவளின் க்ரிஷ்ணவ் என்ற அழைப்புக்கு இப்பொழுதே செவி மடுக்க எண்ணம் கொண்ட மதியின் நாயகன் அவள் எண்னை அழுத்த எண்ணிய வேலை சினேகனே ஆதித்யனுக்கு அழைத்திருந்தான்.

 

“சார், மதி கிளம்புறேன்னு சொல்…றாங்க…. அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்” என்று கூற ஆதித்யனோ சிநேகனிடம், “இன்னும் ஒரு 15 நிமிஷம் மதியை அங்க இருக்குறமாதி பண்ணுங்க சிநேகன்…” என்று கூறிவிட்டு ஓரிரு நபர்களுக்கு அழைப்பேசியில் அழைத்தவன் முகத்தில் திருப்த்தி நிலவ வேகமாக அவன் முன்னேற்பாடாக செய்த இடத்தை நோக்கி பயணித்தான்.

மறுபுறம் சாதரணமாக மதியிடம் பேச அழைத்தவன் போல மதிக்கு அழைத்த இனியன் அவளிடம் பொதுவாக பேசிவிட்டு அவளை காணவேணும் எங்கு எப்பொழுது வர என்று அவளுக்கு சந்தேகம் வாராதவாறு அதாவது அவளுக்கு ஆபத்து என்று அவளுக்கு தெரியாதவாறு லாவகமாக பேச, மதியோ இப்பொழுது சிநேகன் வீடு இருக்கும் பகுதியை குறிப்பிட்டு பிறகு அவள் விசாரிக்க போக வேண்டிய காணாமற் போனவரின் வீடான எஞ்சிய ஒருவரின் வீடு இருக்கும் பகுதியின் பெயரையும் குறிப்பிட்டவள் இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப போவதாகவும் இனியனை மாலை சந்திப்பதாகவும் கூற இனியனும் சம்மதமாய் அவளிடம் தலை அசைத்துவிட்டு அவள் சொன்ன இருபகுதியில் இடையே உள்ள ஒரு நடு பகுதியை அவன் அறிவு தேர்ந்தெடுத்து வேகமாக அவனது பயணத்தை தொடர்ந்தான்.

 

மதி சம்மந்தப்பட்ட காரியங்கள் நிறைவேற ஆதித்யன் அகிலன் இனியன் சிநேகன் செழியன் என்று அனைவரும் ஒவ்வொரு புறமும் இயங்கி வர அவளது வழக்கு விசாரணையில் மும்பரமாக ஈடுப்பட்டிருந்த மதிக்கு அவளை சுற்றி தோண்ட பட்டிருந்த புதைகுழி பற்றியும் தெரியவில்லை, அவளை காப்பாற்ற பின்னப்பட்ட பாதுகாப்பு வலையையும் அறியவில்லை. 

ஆஷிக்கை பற்றி தெரிந்துக்கொண்ட மதிக்கு ஏனோ எஞ்சி இருக்கும் ஒருவரது வீடையும் சென்று பார்வையிட்டால் அவர்களிடம் உரையாட முடிந்தால் நிச்சயமாக அவள் எதிர்பார்த்த தகவல் தெரியும் என்று அவள் உள்ளுணர்வு கூற வேகமாக கிளம்ப எத்தனிக்க சிநேகனோ அவளை இன்னும் 15 நிமிடங்கள் பிடித்து வைக்க என்ன செய்யவேண்டும் என்று சிந்தனை வயப்பட்டான்.

 

“ஹே மதி ஒன் செக், வீடு வர வந்துட்டு எதுவுமே சாப்பிடாம போனா எப்படி, ஒரு நிமிஷம் இரு வரேன்” என்று கூறியவனை தடுத்த மதி, “வேண்டாம் சிநேகன், இப்ப இது எல்லாம் முக்கியம் இல்ல, நான் இதுவர விசாரிச்ச வர பாதி பேருக்கு மேல ரோட்ல அடிபட்டு அப்படியே காணமா போய் இருக்காங்க….. அவுங்களுக்கு உதவி போற வரவங்க செய்து இருக்காங்க… இப்போ என்கிட்ட விஜய் அப்புறம் ஆஷிக்கோடா போட்டோ இருக்கு, அத பாதிக்க பட்டவங்ககிட்ட காமிச்சா எனக்கு நிச்சயமா ஏதேனும் க்குளு கிடைக்கும்னு தோனுது… அதுனாலா நான் உடனடியா கிளம்பனும், எல்லா ஆதாரமும் திரட்டி நம்ம தகவல் வெளியிட்டா நிச்சயம் இதற்கு ஒரு முடிவு வரும்” என்று கடமை உணர்ச்சியில் அவளை மறந்து கனவுலகில் சஞ்சரிப்பவள் போல பேசிக்கொண்டு இருந்தாள் மதி. 

கடமை, வேலை என்று வந்தவுடன் அவள் சொந்த வாழ்வில் உள்ள துயரத்தை ஒதிக்கி தள்ளி அவள் எடுத்துக்கொண்ட காரியத்தில் மனதை முழுதும் செலுத்தி அவள் இயங்க தொடங்கி இருந்தாள். 

சிநேகனோ அவளிடம், “எல்லாம் ஒகே தான்… அதுக்காக 10 நிமிஷம் லேட்டா போன ஒன்னும் இல்ல” என்று கூறியபடி அடுக்களையை நோக்கி சென்று அவளை அவன் வீட்டில் இருத்தி வைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டான்.

பால் இருக்கிறதா என்று பார்வையிட ஒருவர் குடிக்கும் அளவு மட்டுமே இருக்க வேகமாக அதை காயிச்சி சூடு பண்ணியவன் ஆதித்யன் அழைக்கவும் பாலை மறந்து ஆதித்யன் சொன்ன விஷயங்களை உள்வாங்கி கொண்டு இருந்தான் அடுப்பில் வைத்த பால் பொங்கி வற்றி போகும் வரை.

 

இங்கு மதியோ அவளிடம் இருந்து கோப்புகளின் பட்டியலில் ஏதேதோ திட்டமிட்டபடி சில நபர்களின் பெயர்கள் மீது வட்டமிட்டு கொண்டு இருந்தாள். பால் பொங்கி முக்கால் பாகம் வற்றிவிடவே கருகிய வாடை உணர்ந்த சிநேகன் வேகமாக திரும்பி அடுப்பை அணைத்துவிட்டு ஆதித்யனிடம் அனைத்தும் கேட்டுக்கொண்டு அழைப்பை துண்டித்தவன் மிச்சமிருக்கும் வற்றிய பாலை அதுவும் கருகிய வாசம் பூசிய பாலை ஒன்றும் செய்ய இயலாது போகவே அவனது அடுப்படியில் இருந்த குளிர் சாதன பெட்டியை திறந்து ஆராய அதனுள் ஒரு சில பிரட் துண்டுகளும் ஒரே ஒரு முட்டையும் கொஞ்சமாக பதபடுத்தபாட்ட குளிர் பானமும் மட்டுமே இருக்க வேகமாக யோசித்தவன் மதிக்கு பிரட் ஆம்லெட் உடன் பழச்சாறு குடுத்து அவளை மேலும் 10 நிமிடங்கள் இருத்துவதற்காக எண்ணமிட்டான்.

 

தோசை கல்லை அடுப்பில் ஏற்றியவன் வேகமாக அதில் ஒரு முட்டை ஊற்றி விட்டு மிளகு தூள் போட்டவன், உப்பை தேடி கொண்டே மிளகு தூள் அடங்கிய டப்பாவை சரியாக வைக்காமல் உப்பை எடுத்து அந்த ஆம்லெடின் மீது தூவினான்.

 

மிளகும் உப்பும் சேர்ந்து ஆம்லெட் வெந்துக்கொண்டு இருக்க சிநேகனுகோ அது தன்னை வா வா என்று அழைப்பது போல இருக்க அவனது மனமோ, “ச்ச ஒரே ஒரு முட்ட இருக்கும் பொழுது தான் அத சாப்பிடனும்னு ஆச வரும்… ஹ்ம்ம் பெப்பர் வாசம் தூக்குதே…. கொஞ்சமா கட் பண்ணி நம்ம சாபிட்டுருவோமா? அப்படி சாப்பிட்டா மதிக்கு…? ஹ மதிக்கு பாதி ஆம்லெட்ட பிரட் குள்ள வச்சு குடுத்திடலாம், அதோட கொஞ்சம் ஜூசும்…. சூப்பர்” என்று எண்ணமிட்டவன் வேகமாக பழ சாரு இருந்த அந்த பாட்டில்லை எடுத்து தோசை கல்லுக்கு அருகில் நின்றுக் கொண்டு ஒரு குவளையில் ஊற்ற, அவன் சரியாக வைக்காமல் விட்டு இருந்த மிளகு டப்பா படுத்த நிலையில் இருக்கவும் உருண்டு உருண்டு மேல் பலகையிலிருந்து சரியாக தோசை கல் மேல் விழ, அது திடீர் என்று விழுந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிநேகன் கையில் இருந்த பழச்சாறு பாட்டிலை தவற விட்டான்.

 

 

இருந்த மொத்த பழச்சாறும் கொட்டிவிடவே ஆம்லெட் மீதும் மிளகு தூள் அளவுகடந்து சிதறிவிடவே அதை பரிதாபமாக பார்த்து கொண்டு நின்று இருந்தான் சிநேகன். அவன் மனமோ, “அய்யோ, இந்த வாசம் எனக்கு பசிய கிளப்பி விட்டுருச்சு… வெளியில இருக்க மந்திக்கு வேற எதாச்சும் கொடுக்கணும், இல்ல அவ வேற சலங்கைய கட்டி ஆடுவா…. கிளம்புறேன்னு….” என்று பரிதாபமாக கெட்டு விட்ட முட்டையை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு கொண்டு இருக்க மதியின் குரல் கேட்டது.

 

 

“சிநேகன், நான் கிளம்புறே, ரொம்ப லேட் ஆச்சு….” என்று குரல் கொடுக்க, அவன் மனமோ, “ஐயோ சிநேகா எதாச்சும் பண்ணு. கண்டிப்பா இன்னும் 5 நிமிஷம் பிடிக்கணும் இவள, ஆதி சார் கிட்ட இருந்து மெசேஜ் வரணுமே….” என்று எண்ணமிட்டபடியே வேகமாக ஒரு யோசனை தோன்ற அடுத்த 2 நிமிடத்தில் கையில் ஆவி பறக்கும் ஒரு குவளையுடன் மதி முன் சென்று நின்றான்.

 

 

“மதி… இந்தா” என்று அவள் முன் நீட்ட, அதை எடுத்து பருக போனவள் பருகுவதற்கு முன், “டே எரும… என்ன டா இது…?” என்று அவனை திட்டிக்கொண்டே கேட்க சினேகனோ, “தெரியல… சுடு தண்ணி மதி….” என்று சர்வ சாதரணமாக கூற இப்போது மதியோ, “இத பண்றதுக்காட 15 நிமிசமா உள்ள இருந்த… ? போ ஒன்னும் வேண்டாம்… நான் கிளம்புறே” என்று கூற சினேகனோ அவளிடம், “ப்ளீஸ் மதி, நான் உனக்காக கஷ்டப்பட்டு பண்ணி இருக்கே… எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்… குடி மந்தி… இல்ல இல்ல மதி” என்று கூற அவளோ, “சரி அதுக்கு பச்ச தண்ணி கொடுக்கவேண்டியது தான, ஏன் சுடுதண்ணி” என்று அந்த தண்ணியை விட சூடாக மதி அவனிடம் கேட்க அவனோ மனதினில், “பச்ச தண்ணி கொடுத்தா மடக்குனு குடிச்சுட்டு, சடக்குன்னு கிளம்பிடுவ.. ஆதி சார் க்கு யாரு பதில் சொல்றது…” என்று எண்ணமிட்டபடியே அவளிடம் ஒரு அசட்டு சிரிப்புடன், “அது… அது வந்து மதி, சுடு தண்ணி குடிச்சா, சூட்டிக்கையா வேலை பார்க்கலாம்னு எங்க அப்பத்தா சொல்லி இருக்காங்க.. அதான்” என்று கூறி முழியை உருட்டினான்.

 

 

மேலும் ஏதோ கேட்க போனவளை தடுத்து சிநேகன் அவளிடம், “இதோ பாரு, இதுக்கு மேல கேள்விகேட்ட அப்பறம் நா…” என்று தொடங்க மதியோ அவனிடம், “என்னடா செய்வ” என்று கேட்க சினேகனோ சினிமா பாணியில், “அழுதுருவேன்…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கூறவும் மதி கிளுக் என்று சிரித்து விட்டாள்.

 

 

அவன் கொடுத்த சுடு நீரை இரண்டு மிடறு குடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஆதித்யனிடம் இருந்து சிநேகனுக்கு குறுந்தகவல் வர வேகமாக மதியிடம், “மதி போதும் கிளம்பு… லேட் ஆச்சு..” என்று கூற மதி இப்பொழுது நம்பாத பார்வை பார்த்தாள்.

 

 

“சிநேகன், நீ என்ன லூசா, கிளம்ப போன என்ன தடுத்த, இப்ப இருக்க என்ன கிளம்ப சொல்ற…” என்று சரியாக அவள் அவனின் நடவடிக்கைகளின் காரணத்தை பிடித்துவிடவும் சிநேகன் ஒரு சின்ன அசட்டு சிரிப்புடன் அவளிடம், “அப்படிலாம் ஒன்னும் இல்ல… நமக்கு டைம் இல்லைல மதி… அதோட சுடு தண்ணீர் நிறைய குடிச்சா நினைச்ச காரியம் நிறைவேறாதாம்… அப்படின்னு” என்று கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே மதி இடையிட்டு, “இதுவும் என்ன உங்க அப்பாத்த சொன்னாங்களா..” என்று கேட்க சினேகனோ, “இல்ல எங்க அப்பச்சி சொன்னங்க.. இதுலாம் ஒரு கேள்வியா …நீ மொதல்ல கிளம்பு…” என்று அவளை வம்படியாக இழுத்து சென்று வெளியில் அனுப்பி வைத்தான்.

 

 

அவள் சென்றவுடன் ஆதித்யனுக்கு தகவல் கொடுத்துவிட்டு சிநேகனும் அவளை பின் தொடர ஆதித்யனின் பாதுகாவலர்களும் மதியை பின் தொடர்ந்தனர்.

 

 

சாதாரண சமயமாக இருந்திருந்தால் மதி இவை அனைத்தையும் கவனித்திருப்பாள். ஆனால் சிநேகனின் நடவடிக்கை, ஆஷிக் பற்றிய விவரம், எஞ்சி இருக்க ஒருவரை பற்றி அறியும் ஆவல் என்று அவள் சிந்தை உழன்று கொண்டு இருக்க, இனியன் அழைத்ததும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதும் அவள் எண்ணத்தில் சுழலாமல் இல்லை. 

 

 

அந்த சமயத்தில் தான் அவள் எதிர்பாரா விதமாக ஒரு இருசக்கர வாகனம் அவளது வண்டியை உரசி செல்ல, திடீர் என்று ஏற்பட்ட நிகழ்வால் நிலைதடுமாறி மதி வண்டியில் இருந்து தடுமாறி விழுந்தாள்.  அவள் நல்ல நேரமோ அல்லது யார் செய்த வேலையோ அவள் விழுந்தது அருகினில் கட்டிடம் கட்டுவதற்காக குவித்து வைக்க பட்டு இருந்த ஆத்து மணல் குவியலின் மீது.

 

 

ஆங்காங்கே ஒரு சில சிராய்ப்புகளை தவிர ஒன்றும் இல்லை என்றாலும் மதி எழுந்து நிற்க ஒரு சில நிமிடங்கள் பிடிப்பட்டன.

 

 

இவை அனைத்தையும் சற்று தொலைவில் இருந்து ஆதித்யன் அகிலன் பார்த்துக்கொண்டு இருக்க, அந்த சம்பவம் நடந்த 100 மீ இடைவேளையில் இரு காவலாளிகள் மாறுவேடத்திலும், இரு பக்கவாட்டு சாலையில் சற்று தள்ளி ஒரு புறம் சிநேகனும் மறுபுறம் செழியனும் நின்று இருந்தனர் அவர்களது வண்டிகளோடு.

 

 

அவளுக்கு உடலில் அடி இல்லை என்றாலும் அந்த நிமிடம் ஆதித்யனது மனம் துடிக்க தான் செய்தது. அவளிடம் ஓடி செல்ல நினைத்த கால்களுக்கு தடை இட்டவன், அவளை கைகளில் தாங்குவதற்கு துடித்த அவனது வலிய கரத்தை கட்டிப்போட்டான்.

 

 

மதி, ஒரு இரு சக்கர வாகனம் உரசி கிழே சரிவதை சற்று தொலைவில் பார்த்துவிட்ட இனியன் வேகமாக முன்னேற அதற்குள் ஒரு ஆம்புலன்ஸ் மதியின் அருகில் வந்து நின்று, எழுந்து நிற்க தடுமாறிய மதியை அதில் ஏற்ற முயன்றது.

 

 

ஒரு சில நிமிடங்களில் நிகழ்தவை யாவும் நடந்துவிட்டிருக்க மதிக்கு ஏனோ அந்த ஆம்புலன்ஸ் அத்தனை சீக்கிரம் வந்தது நெருடலை தந்தது. அவளை ஆம்புலன்ஸ் ஏற்ற முயல, மதியோ தனக்கு ஒன்றும் இல்லை என்று அதில் ஏற மறுக்க பொது மக்கள் போல சுற்றம் இருந்த 4, 5 நபர்கள் அவளை அதில் ஏறுமாறு வலியுறுத்த, அதற்குள் இனியன் அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

“மதி” என்ற அழைப்புடன் இனியன் அங்கு வர மதிக்கு அப்பொழுது தான் மூச்சு சீராக உள்ளது போல ஒரு பிரம்மை ஏற்பட்டது.

 

 

அவனை பார்த்ததும், “இனியன்… எனக்கு ஒன்னும் இல்ல… ஜஸ்ட் ஸ்கிட் ஆகிட்டேன்… ஆம்புலன்ஸ்லா ஏற சொல்றாங்க… ப்ளீஸ் இவுங்க கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்…” என்று கூற இனியனோ அவர்களிடம், “இவுங்க என்னோட பிரின்ட்… நான் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போறேன்…” என்று அங்கு இருந்த பொது மக்களிடமும் வார்டு பாயிடம் கூற மதியோ இனியனிடம், “இல்ல இனியன்.. ஐ அம் பைன்… நான் கிளம்புறேன்….” என்று கூறினாள்.

 

 

அதற்கு இனியன் மதியிடம், “சரி வாங்க ஒரு டூ மினுட்ஸ் ரிலாக்ஸ் ஆகிட்டு போங்க… ஹாஸ்பிட்டல் வேணாட்டி ஒகே…” என்று அக்கறையாக அவளை அழைத்தான்.

 

 

அதற்குமேல் அங்கு போவோர் வருவோரும் கூட்டம் சேர அந்த ஆம்புலன்ஸ் கிளம்பி சென்றது. இவை அனைத்தையும் ஆதித்யன் அகிலன் பார்த்துக் கொண்டு இருக்க, அகிலனோ வாய் விட்டு, “இவன் யாரு டா?… இடைல வந்து நம்ம திட்டத்த சொதப்பிட்டான்…. இந்நேரம் மதியை வண்டில ஏத்தி இருந்தா, நமக்கு ஏதாச்சும் தகவல் கிடைச்சிருக்கும்…” என்று அகிலன் கூற ஆதித்யனோ எதுவும் கூறாமல் மதி மற்றும் இனியனை நோக்கி பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தான்.

 

 

அவளது வண்டியை எடுத்து ஓரங்கட்டிய இனியன் அவளுக்கு அருகில் இருக்கும் கடையில் இருந்து கொஞ்சம் தண்ணீர் வாங்கி வந்து கொடுக்க அதை பருகியவள் இனியனிடம், “தேங்க்ஸ் இனியன்… எனக்கு ஆபத்து வரும் போது எல்லாம் நீங்க… வந்து காப்பாத்துருகீங்க… ரொம்ப தேங்க்ஸ்…” என்று கூற இனியனோ அவளிடம், “ஆபத்தா? .. உங்கள ஹாஸ்பிட்டல் தான கூப்பிட்டு போக பார்த்தாங்க?” என்று செழியன் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு மதியிடம் எதையும் காமிக்காமல் கேட்க அவளோ, “அப்படியும் இருக்கலாம்.. ஆனா எனக்கு என்னமோ என்னோட உள்ளுணர்வு இந்த ஆம்புலன்ஸ் பார்த்ததும் ஏதோ எச்சரிக்க பண்ணுச்சு… அதுல போகாம இருக்குறது தான் நல்லதுன்னு தோனுச்சு… ஏனா… நான் பார்க்குற வழக்கு சம்மந்தப்பட்ட..” என்று தொடங்கி பாதியில் அந்த பேச்சை கைவிட்டாள் மதி.

 

 

அவர்களின் உரையாடல் போதே செழியனை அழைத்து ஒரு விலாசத்தை கொடுத்து அங்கு வருமாறு    கூறிய ஆதித்யன், சினேகனை அழைத்து முன்பு சொன்ன திட்டத்தை செய்யல் படுத்த தொடங்க   கூறினான்.

 

 

ஆதித்யன் சிநேகனிடம் பகிர்ந்தது இது தான். மதி அந்த ஆம்புலன்ஸ் விட்டு இறங்கி விட்டாலோ, அல்லது சற்று தூரம் சென்று அவளை காப்பாற்ற யாரேனும் வந்தாலோ அந்த தருணத்தில் சரியாக சென்று அவர்களிடம் இருந்து மதியை சிநேகன் அழைத்து செல்ல வேண்டும் என்பதும் மேலும் அவளுடனே ஆதித்யன் சொல்லும் வரை இருக்க வேண்டும் என்பதே ஆதித்யன் முன்பு கூறி இருந்தவை. 

 

அதன் படி சிநேகனும் தற்செய்யலாக வந்தது போல மதி மற்றும் இனியன் அருகில் வந்து ஒரு முக்கியமான வேலை என்று மதியை சிநேகன் அழைத்துக் கொண்டு சென்றான்.

 

 

ஆனால் மதி சென்ற பிறகும் அசையாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்த இனியனுக்கு மதிக்கு வந்த அந்த ஆபத்தை சுற்றியே எண்ணம் சுழன்று கொண்டு இருந்தது. இன்று மட்டும் அவன் வாராமல் இருந்திருந்தால்? என்ற கேள்வி அவன் உள்ளத்தே எழுப்பி அவனை நிலை குலைய செய்திருந்தது. ஆதித்யன் தனது மனைவி க்கு வரும் ஆபத்தை தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கும் அவசியம் என்னவென்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டு இருந்தது.

 

 

மதியை அழைத்து சென்ற சிநேகன் மதியிடம் பேசிக்கொண்டே போக, மதியிடம் அசைவேதும் இல்லாததால் சினேகன் வண்டியை ஓரமாக நிறுத்தி அவள் மௌனத்தின் காரணம் கேட்க மதியோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

 

 

“மதி உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” என்று சினேகன் அவளது தோளை உலுக்கிய பிறகே சிந்தனையில் இருந்து வெளியில் வந்த மதி சிநேகனிடம், “பிடிச்சிட்டேன்… சினேகன்….” என்று பரவச குரலில் கூற சிநேகனோ மனதினுள், “நாம்ம தான இவள பிடிச்சிருகோம்… இவ என்ன லூசு மாதி ஏதோ பேசுறா… இவ இப்படின, இவளோட ஹஸ்பன்ட் என்ன ஏதுனே சொல்லாம ஏது ஏதோ செய்ய சொல்றாரு… ஒன்னுமே விளங்கல” என்று எண்ணமிட்டுக்கொண்டே மதியே மேற்கொண்டு தொடரட்டும் என்று அவளை பார்க்க அவள் பேச தொடங்கினாள்.

 

 

“சினேகன், இன்னைக்கு எனக்கு நடந்தது போலவே… இதே சம்பவம் அன்னைக்கு வேற ஒரு பொண்ணுக்கு நடந்தது… இதே போல ஒரு டூ வீலர் அந்த பொண்ண ஆக்ஷிடெண்ட் பண்ணுச்சு, அப்புறம் ஆம்புலன்ஸ் வந்துச்சு… ஏதோ இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கும்னு எனக்கு தோனுது…. ஆனா எப்படி? … அந்த பொண்ணு ஒன்னும் காணமல் போகலியே…” என்று சிநேகனிடம் அன்று நடந்த விஷயங்களை கூறிவிட்டு யோசித்தவள் சட்டென்று, “இன்னும் ஒருத்தர் வீடு பாக்கி இருக்கு, அந்த பொண்ணு வீட்டுக்கு போனா விஷயம் தெரியும்… ஒருவேளை இரண்டுமே ஒரே பொண்ணா இருக்குமா? பட் அன்னைக்கு அடிபட்ட பெண்ணோட முகம் எனக்கு நாபகம் இல்லையே” என்று அவள் கூற சிநேகனும் அதை பற்றி சிந்திகலானான்.

 

 

மேலும் மதியே மனதினுள், “ஒருவேள நான் நினைக்கிறது சரியா இருந்தா…  நம்ம முடிவு நோக்கி முன்னேறனும்னு நினைக்கிறேன்… நல்லவேள இந்த முறையும் இனியன் வந்து காப்பாதிட்டாரு… நான் சந்தேகபடுறது போல இருந்தா, இந்நேரம் எனக்கு என்ன ஆகி இருக்குமோ? இனியன சந்திச்சு நிச்சயமா இதுக்கு நாம நன்றி சொல்லணும்….” என்று எண்ணமிட்டாள்.

 

 

மறுபுறம் ஆதித்யனோ நடந்த அனைத்தையும் மறுபடியும் அவன் மனதினுள் ஓடவிட்டு பார்த்தான். ஆதித்யன் சொன்னது போல செழியன் ஒரு குறிப்பிட விலாசத்திற்கு சென்று ஆதி சொன்ன வேலைகளை கவனிக்கலானான்.

 

 

அகிலனோ, இடையில் வந்து திட்டத்தை கெடுத்துவிட்ட இனியன் மீது கடும் கோபத்தில் இருந்தான். சிநேகனும், மதியும் காணாமற் போனவரின் பட்டியலில் இருந்த கடைசி நபரின் வீட்டை நோக்கி முன்னேறி கொண்டு இருந்தனர். மதியின் மனம் அவளது விபத்துக்கும், அன்று நடந்த விபத்துக்கும், இந்த வழக்குக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று அதை பற்றியே சிந்தனையை ஓடவிட்டு கொண்டு இருந்தாள்.

 

 

இனியன் ஆதித்யன் செய்கைக்கான காரணம் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தவன் அதே சிந்தனையோடு அலுவலகம் வந்து சேர்ந்தான்.

 

 

இவை அனைத்தும் நடந்து முடிந்து சரியாக 3 மணி நேரம் களித்து: ஆனால் அந்த 5 மணி நேரத்தில் கற்பனையும் செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள நடந்து முடிந்திருந்தது.

 

 

இந்த 5 மணி நேரத்தில் என்ன என்ன நிகழ்ந்தனவோ? ஆனால் இந்த நிகழ்வுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல வழக்கத்தை விட உற்சாகம் கூட்டி, அதிக நிதானத்தோடு இருந்தது ஒருவனின் முகம். அது மதியின் நாயகனான ஆதித்ய க்ரிஷ்ணவின் முகம்.

 

 

ஆனாலும் எதுவுமே நடவாதது போல அவனுக்கே உரிய கம்பீர நடையுடன் அலுவலகம் வந்த ஆதித்யனை அங்கு பணி புரிந்துக் கொண்டு இருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது பார்வையிலே புரிந்தது. அதற்கு காரணம் காலையில் செழியன் வந்து ஆதித்யன் இன்று வரமாட்டான் என்று சொல்லி சென்ற தகவல் பரவி இருந்த காரணத்தால்.

 

 

அவர்களை போலவே இனியனும் ஆதித்யனது வருகையை எதிர்ப்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொல்ல, மேலும் இனியனை யோசிக்க விடாமல், சில பல தொழிற்சார்ந்த விஷயங்களை இனியன் மற்றும் இன்னும் இருவருடன் ஆதித்யன் அவனது தனி அறையில் சேகரித்துக் கொண்டும் விவாதிதுக்கொண்டும் இருக்க இப்படியே ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.

 

 

தொழிற் சார்ந்த விஷயங்கள் பேசி முடிக்கும் தருவாயில் இனியனை தவிர மற்ற இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் உள்ள கிளைகளுக்கு செல்லுமாறு கட்டளை இட்ட ஆதித்ய க்ரிஷ்ணவ், இனியனிடம் மேலும் சில விஷயங்களை விவாதிக்க தொடங்கினான்.

 

 

அவர்கள் பேச தொடங்கிய சில நிமிடங்களில் அவர்கள் அமர்ந்திருந்த அறை கதவு தட்டப்பட, ஆதி, இனியன் இருவரது கவனமும் தடைப்பட்டு “எஸ் கம்மின்” என்ற ஆதித்யனது குரல் வெளிவர அதை அடுத்து அகிலன் காக்கி உடுப்பில் மிக கம்பீரமாக உள்ளே பிரவேசித்தான்.

 

 

உள்ளே வந்த அகிலனை ஒரு மென் முறுவலோடு வரவேற்ற ஆதித்யன் அமருமாறு கூறி ஒரு இருக்கையை காட்ட, இனியன் நாகரீகம் கருதி வெளியில் செல்ல எத்தனிக்க அதை அகிலன் ஆதித்யன் என இருவருமே தடுத்து அவனையும் அவர்களுடன் இருக்குமாறு கூறினார்.

 

 

அகிலனும் ஆதித்யனும் நண்பர்களாக சில நிமிடங்கள் உரையாட, இனியனையும் முறையாக அகிலனிடம் ஆதித்யன் அறிமுக படுத்தினான். ஆதியின் அறையில் ஒரு சிறு பக்கவாட்டு பகுதியில் செஸ் போர்டை பார்த்த அகிலன் ஆதியிடம் அதை பற்றி விவரம் கேட்க, ஆதியோ, “உனக்கு தெரியாதா மச்சி… எனக்கு செஸ்னா ரொம்ப பிடிக்கும்னு… அது தான்…. எப்பவாது தோனும் போது இங்க நான் சும்மா ப்ளே பண்ணுவே… ஐ லவ் மைண்ட் கேம்ஸ்…” என்று கூற உடனே அகிலனோ, “ஹ்ம்ம் ஆமாம்ல… நீ இன்னும் இந்த பழக்கத்த விடலையா சரி இப்ப ப்ரீ ஆகிடீங்களா?… நம்ம ஒரு கேம் விளையாடலாமா?” என்று கேட்க, இருவர் மட்டுமே ஆட முடியும் என்பதால் அகிலன் இனியனை பார்க்க இனியனோ நாகரீகமாக, “நீங்க விளையாடுங்க… எனக்கு வொர்க் இருக்கு” என்று கூறினான்.

 

 

ஆனால் அதித்யனோ, “ஹே கமான் இனியன்… வொர்க் டைம் ஓவர்… சோ நாங்க விளையாடுறோம்… நீங்க இங்க இருங்க…” என்று கூறிவிட்டு அவனது கடை இதழில் ஒரு மென் முறுவல் தவழவிட்டான்.

 

அகிலன் ஆதித்யன் இருவரும் சதுரங்க ஆட்டத்தை தொடர இனியன் அமைதியாக விளையாட்டை கவனித்துக்கொண்டு இருந்தான். இடை இடையே பொழுது போகாமல் இனியன் அவனது கைபேசியை அழுத்திக் கொண்டு இருந்தவன் அதில் வந்த குறுந்தகவல் பார்த்து மெல்லிய கீற்றாக ஒரு புன்னகையை உதிரவிட்டான் இனியன்.

 

 

அதை பார்த்துவிட்ட அகிலன் இனியனிடம், “என்ன இனியன் கார்ல் பிரின்டா? ” என்று கேட்க இனியன் மௌனம் கலந்த புன்னகையுடன் மறுப்பாய் தலை அசைக்க அடுத்து அகிலன் ஆதித்யனின் காதல் பற்றிய பேச்சை எடுத்தான்.

 

 

மதியை பற்றிய பேச்சு எடுத்தவுடன், அந்த பேச்சு அவர்களின் காதலை பற்றியதா? அல்லது அவளது பணியை பற்றியதா என்று ஐயப்படும் அளவு அவர்களது பேச்சின் திசை இருந்தது.

 

 

அவளது வழக்கு சம்மந்தமாக பேச்சு தொடங்க அந்த பேச்சு வார்த்தைகளும் அதே சமயம் சதுரங்க ஆட்டமும் சூடு பிடித்தது. ஒரு கட்டத்தில் அகிலன் ஆதித்யனிடம், “சரி மச்சான், கடைசில இந்த 48 பேர் காணாம போனதுக்கு காரணமானவன கண்டு பிடிச்சாச்சா இல்லையா?” என்று கேள்வி எழுப்ப ஆதித்யனோ, “ஹ்ம்ம் செக். இனி தப்பிக்க முடியாது, கண்டுபிடிச்சாச்சு மச்சான்…” என்று இரு பொருள் பட சதுரங்க ஆட்டத்துக்கும் அகிலன் கேட்ட கேள்விக்கும் ஒரு சேர பதிலடி கொடுத்தவன், இனியனை பார்த்து, “என்ன இனியன்?… இனி தப்பிக்க முடியாது… சரி தான?  கேம் ஓவர்… ஆம் ஐ ரைட்?” என்று அவனுக்கே உரிய பாணியில் அவனது இடது புருவம் தூக்கி ஆதித்யன் கேட்க ஆதித்யனது பார்வையை இனியனது பார்வை சந்தித்து நின்றது.

 

 

“என்ன இனியன், இத்தன விஷயங்கள் போயிட்டு இருக்கும் போது… நாங்க இத்தன சாதரணமா விளையாடும் போதே உனக்கு புருஞ்சு இருக்கும்னு நினைக்றே… சரி தான இனியன்?”  என்ற கேள்வியோடு குரலில் கம்பீரம் கலந்து ஒரு உறுதியுடன் அதே சமயம் அவனது உதட்டில் தவழ்ந்த வெற்றி புன்னைகையுடன் இனியனிடம் கேட்டான் ஆதித்யன்.

 

Advertisement