Advertisement

 

 

முகிழ்  – 28

 

ஓரிரு நிமிடங்கள் அந்த அழகிய கொண்டை ஊசி வளைவுகளில் தாமதித்து அனைத்து வாகனங்களும் நகர ஆதித்யன் மலை உச்சியை நோக்கியும், பூதபடையன் அடிவாரத்தை நோக்கியும் ஒருவர் மற்றொருவரை பார்க்காமல் கடந்து சென்றனர்.

 

மலையில் ஏற ஏற யூக்கலிப்டஸ் மரத்தில் இருந்து பரவும் அந்த இதமான நறுமணம் குளிர் காற்றோடு கலந்துவர, அது உறங்கி கொண்டிருந்த மதியின் நாசியில் தவழ, அந்த சுவாசத்தை ஆழ்ந்து நுகர்ந்தவளின் உறக்கம் மெதுவாக கலைய, அந்த நறுமணம் அவளுக்கு அடுக்கத்தையும் அடுக்கத்தில் நிகழந்ததையும் சேர்த்து நினைவு படுத்த இமைகளை பிரிக்காமலே அவளுக்கு அவளே இப்பொழுது சென்னைக்குத்தான் செல்கிறோம் என்று கூறிக்கொண்டே கண்களை திறந்தவள் முன்னால் இருந்தது ஆதித்யன் தங்கி இருந்த நக்ஷத்திர வடிவிலான குடில்.

 

அதை பார்த்ததும், நினைவுகள் தான் இன்னும் கலையவில்லையோ என்று கண்களை கசக்கி விட்டு பார்க்க அப்பொழுதும் அதே குடில் கண்முன் இருக்க, ஒருநிமிடம் மதி ஸ்தம்பித்தாள். அவள் கண் முன் அன்று ஆதி மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டது… அதன் பின் நிகழ்ந்தவை யாவும் அடுக்கடுக்காக அவள் மனதில் வலம் வர, அசையாமல் மதி அமர்ந்திருந்தாள்.

 

அவள் மனதிலோ, “நான் சொல்றதுக்கு முன்னாடி, இங்க என்ன இதற்கு முன் பார்த்த மக்கள் சொல்லிட்டா… என்ன தெருஞ்சது போல காட்டிட்டா, அதுக்கு அப்புறம் நான் சொல்றத க்ரிஷ்ணவ் நம்புவாரா? … இல்ல இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்….” என்று தீவரமாக யோசித்து இறுதியாக, “இன்னைக்கு எப்படியும் அவர்கிட்ட மத்த யாரும் சொல்றதுக்கு முன்னாடி நம்ம சொல்லிடனும்… அத எப்படி சொல்றதுன்னு மட்டும் இப்ப யோசிக்கலாம்.. ஏன்னா நிச்சயம் இதுக்கு வேற வழி இல்ல” என்று எண்ணமிட்டாள்.

 

முடிவு எடுத்தவளாக மதி சற்று ஆசுவாச பெரு மூச்சு விட்டாலும், தான் செய்த தவறை ஆதித்யன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணமும் அவள் நெஞ்சில் நெருஞ்சியை விதைத்தது.

 

இன்னமும் வண்டியை விட்டு இறங்காது இருக்கும் மனைவியை ஆதித்யன் அழைக்க, பயம் கலந்த அவள் மான் விழியை கண்டு ஆதித்யன் சற்று குழம்பினான்.

 

ஆதித்யன் யோசனையை தள்ளி வைத்து…. மதியிடம், “மதி… இது எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்… நம்ம ரிசார்ட் கூட இங்க இருக்கு… இந்த இடத்துக்கு உன்ன கூப்பிட்டு வரணும்னு தோனுச்சு… அதான்… உனக்கும் பிடிக்கும்னு நினைகிறேன்… ஷால் வீ கோ?” என்று கூறிக்கொண்டே இறங்க மதியும் சம்மதமாய் தலை அசைத்துவிட்டு இறங்கி அவனுடன் நடந்தாள்.

 

 

தொடுவானமாய்

துணையவன்

அருகினிலே தெரிந்தாலும்

அவளுடன் இருந்தாலும்

அவளை தொடர்ந்தாலும்

தொடுகிற தூரத்தில்

வானம் இல்லாதது போல்

அந்த மன்னவனும் இல்லை

அவன் மனதை தொடும்

அவளின் காதல் சொல்ல

மங்கைக்கு துணிவும் இல்லை

                                 

 

அந்த குடிலை மதி எத்தனையோ முறை பார்த்திருக்கிறாள், அவனுடன் அந்நாளில் ஒரு வாய் மொழி பேச ஏங்கிய பேதை அவள்….. ஆனால் இன்றோ அவனின் மனைவியாய், சரி பாதியாய், அவனின் மனம் கவர்ந்தவளாய் அந்த குடிலில் அவனோடு இணைந்தபடி அவளின் செந்தாமரை பாதத்தை பதித்து உள்ளே சென்றாள்.

 

அந்த தருணத்தில் மதியின் மனதில் காதலும், கரை புரண்ட சந்தோசமுமே நிகழ்ந்திருக்க வேண்டும்….

 

அதற்கு மாறாய், அவள் மனம் வெம்பி கொண்டு இருந்தது…..

 

இன்று, நிகழ்ந்த யாவும் அவள் சொல்ல துணிந்துவிட்டாள், ஆனால் சொன்ன பிறகு… ஆதித்யன் எப்படி எடுத்துக் கொள்ளுவான்…. என்ற கேள்வி எழுந்து அவள் மனதை ரணமாக்கி கொண்டு இருந்தது.

 

அவளின் மனதில் ஓடும் எண்ணங்கள் அறியாது அவள் கணவன், அவளை ஓய்வெடுத்துவிட்டு தயாராகி இருக்கும்படியும் அவன் ரிசார்ட்டுக்கு சென்று விட்டு, அவளை வெளியே அழைத்து செல்வதாகவும் கூறிவிட்டு பூதபடையனை அழைக்க ஆதித்யன் சென்றான்.

 

அதோட அவன் வரும்பொழுது எல்லாம் நிச்சயமாக அந்த மலைவாழ் மக்களை அவன் சந்திக்க தவறவும் மாட்டான்…..

 

அதன் படியே அன்றும் அவர்களை கண்டுவிட்டு வரும் பொழுது பூதபடையனை அழைக்க மெலிதாக விசில் அடித்தபடியே இதழில் ஒரு அளவான குறுஞ்சிரிப்போடு உல்லாசமாக நடைப்போட்டான்.

 

அவன் மனதில் சந்தோசம் குமிழியிட்டது…. அவன் தேடி திரிந்த தேவதையை முழுதாக அவன் பெற போகிற நாள்…. தன்னை நேசித்தவளை, தனக்கு உயிர் தந்தவளை…. அவள் வாயால் அவளின் காதலை சொல்ல போகிற நாள்…. அவனின் காதலை அவன் சொல்ல போகிற நாள், அவளை அவன் முழுதாக ஆள போகிற நாள்…

 

அவன் மனம் முழுக்க நிறை பிறையாய் மதியே நிறைந்திருக்க, அவன் கால்கள் கம்பீரமாய் நடைபோட்டன………………..

 

அவன் ரசனையோடு நடந்து சென்ற பாதையில் ஒரு ஆரஞ்சு வண்ண செம்பருத்தி பூத்திருக்க, சற்று முன் தூறிய தூரலால், அதன் பூவிதழ்கள் மலை துளி ஏந்தி குடை சாய்ந்திருந்தது. அதை கண்ட ஆதித்யனுக்கு ஏனோ அவை மழை துளியோடு காதல் கொண்டதனால் வெட்கப்பட்டு நாணி தலை தாழ்ந்து உள்ளதாக எண்ணி ரசித்துக்கொண்டே அந்த மழை வாழ் மக்களின் இருப்பிடத்திற்கு சென்றான்.

 

அங்கு சென்று விசாரித்தபின்னரே ஆதித்யன் அறிந்துக் கொண்டான், பூதபடையன் சற்று முன்பு தான் சென்னை கிளம்பி சென்றார் என்பதை. அவருக்கு தகவல் போகவில்லை என்பதை அறிந்து ரிசார்டிற்கு அழைத்து கேட்க, தகவல் சொல்ல வேண்டியவன் மருத்துவமனையில் இருப்பதாக தெரியவர, ஆதித்யனின் கோவம் குறைந்து இப்பொழுது பூதபடையன் இல்லாமலே மதியின் காதலை வெளி கொண்டு வர ஒரு யுத்தி செய்தான்.

 

அதே நேரம் மதியோ ஆதியிடம் தன் காதலையும் அதோடு அவள் செய்த காரியத்தையும் கூற முடிவெடுத்து அவன் கண்களை பார்க்கும் சக்தி இல்லாததால், நடந்த அத்தனையும் ஒரு கடிதமாக எழுத தொடங்கி இருந்தாள்.

 

அவள் மனதில் உள்ள அனைத்தையும், அவள் காதல் பொய்யில்லை என்பதையும் ஆழமாக அதில் அவளது உணர்வுகளை எழுதியவள், அதை ஆதித்யன் பார்வை படும்படியாக ஒரு மேஜை மீது வைத்தாள்.
 

அதை எழுதி முடித்து வைத்த சிறுது நேரத்துக்கு எல்லாம், அவர்கள் இருந்த குடிலின் கதவு தட்டப்படும் சப்த்தம் கேட்டவள், வேகமாக சென்று கதவை திறக்க அங்கே ஆதித்யன் சிரித்த முகத்துடன் இருந்தான். அவன் மதியை பார்த்தவுடன் அவளிடம், “மதி, நீ இன்னுமா ரெடி ஆகல?… உன்ன குளிச்சு வெளில போக தயார இருக்க சொன்ன்னேன் தான? ” என்று கேட்க மதியோ அவசரமாக அவனிடம் பதில் கூறிவிட்டு குளியல் அறை நோக்கி சென்றாள். 

அவள் குளித்துமுடித்து தயாராகி வரும் பொழுது ஆதித்யன் அவனது மடி கணினியில் ஏதோ செய்துக் கொண்டு இருக்க அவனை பக்கவாட்டு ஜன்னல் வழி பார்த்தவள், அவன் இன்னும் அந்த கடிதத்தை பார்க்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டு அந்த கடிதத்தையும், ஆதித்தியனையும் மாறி மாறி பார்த்தாள்.

அவள் அவனையே பார்ப்பதை அவன் உணர்ந்தும் பார்க்காதவன் போல அவன் மனதினுள், “எனக்கே தெரியாம என்ன சுத்தி சுத்தி வந்து காதலிச்சிருக்க, உன் காதல எத்தனையோ முறை உன் கண்ணுல பாத்துருக்கே… இப்ப எனக்கே தெரியாம என்ன மறஞ்சு இருந்து பார்க்கிறியா?.. இது எல்லாத்துக்கும் இன்னைக்கு எண்டு கார்ட் போடறேன்….” என்று எண்ணமிட்டுவிட்டு, அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அன்று அவன் தொட்ட அதே சுவிட்சை போடுவதற்காக எழுந்து அவன் செல்ல அதை பார்த்துக் கொண்டே இருந்த மதிக்கு, அவள் மனதில், “அன்னைக்கும் இதே போல தான் இந்த சுவிட்ச் போடா போனாரு…” என்று ஒரு மனம் எண்ணி படபடக்க, மறு மனமோ, “ஏதாச்சும் நீயே கற்பனை பண்ணாத…. அப்படிலாம் ஒன்னும் இல்ல” என்று எண்ணமிடுபோதே ஆதித்யன் அந்த சுவிட்ச் போர்டு ல இருந்து சற்று எட்ட தள்ளி விழுந்தான். 

அவன் விழுந்ததை பார்த்தவுடன் மதியின் மனம் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட அடுத்த நொடி அவள் மடி அவனை தாங்கி இருந்தது. கண்ணீர் பெருக, தனது கணவனின் மூச்சரையான நிலை கண்டு பதறியவள் வேகமாக க்ரிஷ்ணவ் என்ற கதறலுடன், குரலில் பரிதவிப்புடன் அவனை அழைத்து பார்த்தாள், அவன் மார்பில் வேகமாக குத்தியவள் அவள் காதுகளை அவன் இதயத்திற்கு அருகில் வைத்து இதய துடிப்பை கேட்டாள். இதய துடிப்பு இருக்கவே சற்று புத்துயிர் கொண்டவள் வேகமாக அவன் இதழோடு இவள் இதழ் சேர்த்து அன்று போலவே இன்றும் அவள் மூச்சு காற்றை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.

அவள் க்ரிஷ்ணவ் என்று அழைத்த போதே மயங்கியது போல படுத்திருந்த ஆதித்யனுக்கு அன்று அவனின் அரை மயக்கத்தில் கேட்ட குரல் மெல்ல மெல்ல புலனாகா ஆரம்பித்திருந்தது. அவன் மனமோ, “இதே குரல் தான், இதே பரிதவிப்புத்தான், இத்தன நாட்களா மதி என்ன பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்காதான்… ஆனா அதே அளவு பரிதவிபோடு கூப்பிட்டது இன்று தான்…. அதுனாலா தான் என்னால இன்னைக்கு சரியா.. இந்த குரல இனம் காண முடியுது” என்று எண்ணமிட்டான். அழுகையோடு, பயத்தோடு, காதலோடு இப்படி அனைத்து உணர்ச்சிகளும் கலந்த தன் மனைவியின் குரலை கேட்ட ஆதித்யனுக்கு, க்ரிஷ்ணவ் என்று அவன் பெயரை உச்சரித்த விதத்திலிருந்து அவன் கண்டுகொண்டான்.. இவள் தான், இவளே தான் அவனை அன்று காப்பாற்றியவள்… அவனை காதலித்தவள் என்று. 

ஆனால் அவனுக்கு இது மட்டும் போதாதே, அவள் வாயால் அவள் காதலை சொல்ல வேண்டுமே… அதற்காக தானே அன்று நடந்த அந்தே சம்பவத்தை ஆதித்யன் நாடகமாக அரங்கேற்றியது…. ஆதலால், அசையாமல் மௌனம் காத்தான். 

அந்த நொடியில் தான், அவனின் மனைவி அவனது இதயத்துடிப்பை பார்த்தவள் அவன் இதழோடு அவள் இதழ் சேர்த்திருந்தாள். 

அந்த முத்தம், அவனுக்கு அவள் தான் அவனின் காதலி என்பதை ஐயமற தெளிவு படுத்தியது… அதே ஸ்பரிசம்…. இத்தனை நாள் அவளை அவன் நெருங்கி இருக்கிறான்… ஆனால் இதழ் அணைப்பு? அன்று இதே இடத்தில் நிகழ்ந்ததை அடுத்து, இன்று தான் அவனின் மனையாளின் இதழ் சேரும் பாக்கியம் அவனுக்கு கிடைத்திருந்தது. 

இந்த முத்தம் ஒன்றே அவர்களின் காதல் வாழ்க்கையை முகிழ்த்த போதுமானாதாய் இருந்தும், அவளின் ஒரு வார்த்தைக்காக ஆதித்யன் நெஞ்சம் ஏங்கியது. 

ஆதித்யனின் எண்ண ஓட்டங்கள் இவ்வாறாக இருக்க, மதியோ கணவனிடம் அசைவு தெரியாததை பார்த்து பரிதவித்தாள்… நிமிடத்துக்கும் நிமிடம் அவளது இதய துடிப்பு பயத்தினால் அதிகரித்தது. எண்ண பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்பதை அறவே அறியாது மயங்கிய தன் கணவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள் அந்த பேதை.

 

“க்ரிஷ்ணவ்… க்ரிஷ்ணவ்… எழுந்துறீங்க….. உங்களுக்கு ஒன்னும் ஆகாது, எழுந்துறீங்க…..”என்று அவள் மொத்த உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

 

“க்ரிஷ்ணவ், இத்தன நாட்கள் ல உங்க பக்கத்துலயே இருந்தேன்… ஆனா என் காதல சொல்லமுடியல… இன்னைக்கு சொல்லிடணும்னு நினச்சே… ஆனா இப்பவும் சொல்லமுடியாம போய்டக்கூடாது… இத்தன நாள் உங்க கூட இருந்தும் என் வாழ்க்கை எனக்கு முழுமை ஆகல, அது ஏன்னா.. நான் உங்ககிட்ட என் காதல சொல்லாதது தான், ஆனா இப்போ ஒரு வேலை இனி உங்கள பாக்கவே முடியாட்டி, என் வாழ்க்கையும் முழுமை ஆகாது க்ரிஷ்ணவ். என்னால கண்டிப்பா உயிர் வாழ முடியாது க்ரிஷ்ணவ், எழுந்துறீங்க” என்று அவன் சட்டையை பிடித்து கதறினாள். 

 

 

 

இந்த வார்த்தைகள் அவன் செவியில் விழுந்த நொடி அன்று அவள் சொன்னவை, அவனுக்கு நினைவு இருந்தவரை இருந்த வார்த்தைகள் அவன் மனதில் வலம் வந்தன. அன்று அவள் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுகளில் மங்கலாக ஒரு கோர்வை இல்லாமல் ஒரு சில வார்த்தைகள் வந்து வந்து போனது “க்ரிஷ்ணவ…., முழுமை ஆகல……,……., என் வாழ்க்கையும் முழுமை ஆகாது னு தோனுது, எழுந்துறீங்க.” இவை அனைத்தும் அவனுக்கு நினவு வர அவளது ஆழ் மனம் அன்றும் இன்றும் மாறா காதலை அவன் மீது வைத்திருப்பதை அவன் உணர்ந்துக் கொண்டான். அதோடு அவள் அவனை காதலிக்கிறாள் என்ற உண்மையையும் அவள் கதறலின் போது அழுகை உடன் சேர்ந்து வெளிவரவே அவன் மனம் சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் கடலாய் இருந்தது. 

 

 

அவள் பதறிக்கொண்டே மீண்டும் அவனுக்கு மூச்சு காற்றுக் கொடுக்க, அவள் பூவிதழ் அவனின் கம்பீரமான உதடுடன் இணைய ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் உயிர் காற்றை தருவதாக நினைத்தவள், பிறகே உணர்த்துக் கொண்டாள் அங்கே ஒரு அழகிய முத்தம் முகிழ்ந்துக் கொண்டு இருப்பதை. 

 

 

அன்று அவள் தந்த முத்தத்தில் அவளின் காதலை அவள் உணர்ந்துக்கொள்ள, இப்போது அவன் தருகின்ற முத்தத்தில் இருவரது காதலும் வார்த்தை பரிமாற்றம் தேவை இல்லை என்பதை போல முகிழ்ந்துக்கொண்டு இருந்தது. 

 

ஒரு சில நிமிடங்கள் நீடித்தமுத்ததில் இருந்து விடுப்பட்ட மதி அவனிடம், “க்ரிஷ்ணவ்… உங்களுக்கு ஒன்னும்…. ஒன்னும் இல்லையே… நீங்க நல்லா தான இருக்கீங்க….” என்று கேட்டுக்கொண்டே அவன் கண் விழித்துவிட்டான் என்பதை உறுதி செய்துக்கொள்ளும் பொருட்டு அவனை தொட்டு தொட்டு பார்த்தவள் அவன் மாரோடு சாயிந்து அழ தொடங்கினாள். 

 

அவள் விசும்பலில் கிருஷ்ணவ் என்ற பெயர் மட்டுமே கேட்க, அவளை சமாதனம் படுத்த முயன்றவன் முடியாமல் போகவே, அந்தே நேரம் லேசான தூறல் தொடங்கவும் அவளை அழைத்துக்கொண்டு குடிலுக்குள் சென்று தாழ் போட்டுவிட்டு அவளுடன் பிரம்பால் பின்னப்பட்ட வேலைபாடு அமைந்த ஒரு கூடை நாற்காலியில் அமர்ந்தான்.  

 

 

அவள் அருகினில் அமர்ந்தவன், “கண்மணி… இங்க பாரு டா… இது அழ வேண்டிய நேரம் இல்ல… இத்தன நாளா நான் வெயிட் பண்ணினது உன் வாயால உன் காதல் சொல்றத கேட்கனும்னு தான்… எனக்கு ஒன்னும் இல்ல… என்ன பாரு…” என்று அவன் கூற, சற்று மட்டுப்பட்ட அழுகையின் ஊடே அவனை பார்த்துவிட்டு அவள் எழுதி வைத்த கடிதத்தின் மீதும் பார்வையை பதித்தாள். 

 

அழுததுனாலும், அடுக்கதின் குளிரினாலும், பொழிந்துக்கொண்டு இருக்கும் மழை தந்த சிலுசிலுப்பாலும் அவள் உதடு லேசான நடுக்கத்துடன் இருக்க அவளை நெருங்கி அவளை அவன் புறமாக திருப்பி வேகமாக அவர்களின் மூன்றாம் முத்தத்தினை பதித்தான்.

 

நீண்ட நேரம் தொடர்ந்த அந்த முத்தத்தில், மென்மையும் இருந்தது ஆதித்யனின் வேகமும் இருந்தது. . . 

 

திடீர் என்று பிடித்துக்கொண்ட மழை வேகமாக தூறல் போடா, சட சடக்கும் அந்த மழையும் அதற்கு தூபமிட, வேட்கை ஏறிய அவன் கண்கள் அடுத்து என்ன நிகழும் என்பதை மதிக்கு பறை சாற்றியது. 

 

அவளை பற்றி அவள் கழுத்து வளவில் முகம் பதித்தவன், அவன் கைகள் எல்லை மீறியது……

 

மதியின் மனமோ, அவளது காதலை ஆதித்யன் தெரிந்துக்கொண்டான் என்பதை அறிந்தாலும், இன்னும் காவ்யா பற்றி சொல்லவில்லையே என்பதை நினைத்து மருகியது… அவள் சிந்தனை ஓட்டம் இப்படி இருக்க ஆதித்யன் அவள் மீது முழுதாக படர்ந்தான். 

 

 

அதோடு மதிக்கு, சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் தற்செயல் போல இல்லாதது என்று தோன்றவும், ஆதிக்கும் முன்பு நிகழ்தவை ஏதோ தெரிந்திருக்கிறது என்றும் அவளுக்கு தோன்ற அவளின் மோன நிலை மெல்ல அறுப்பட்டு அவனிடம் அவளின் தவறையும், ஆதித்யனின் செயல்களுக்கு காரணத்தையும் அறிய எண்ணி ஆதித்யனை தடுத்து, கேட்க இதழ் பிரித்த நேரம், ஆதித்யனோ அதை புரிந்துக் கொண்டவனாக பேச முனைந்த அவளின் பவள இதழை மீண்டும் சிறை செய்திருந்தான். மீண்டும் மீண்டும் மனைவியின் இதழை நாடியவன் ஒரு கட்டத்தில் அவளிடம், “ப்ளீஸ் கண்மணி….. எதுவும் சொல்லாத…. உனக்காக 4 வருசமா வெயிட் பண்ணிட்டேன்… இனிமேலும் முடியாது… ஐ நீட் யூ…. ஐ நீட் யூ இம்மீடியட்லி….ஐ நீட் யூ பேட்லி…. இப்ப எதுவும் பேசாத மதி…. நீ எனக்கு வேணும்…” என்று ஆழ்ந்த குரலில் கூறியவன் அவனின் இரும்பு பிடியில் அவளை கொண்டு வந்து காதல் யுத்தத்தை தொடங்கினான். 

 

 

அவன் பேசிய வார்த்தை, அவளை எப்பொழுதும் கட்டி போடா வல்லமைக் கொண்ட அவனது குரல், காதல் போதை ஏறி இருந்த அவனது விழி, அவனது காதல், இதில் எது அவளை கட்டி போட்டு இருந்ததோ? அல்லது அனைத்துமே அவளை கட்டிப்போட்டதோ அவள் அறியாள்…..

 

 

ஆனால் அவன் பிடியில் அவள் ஊமை ஆனாள்………………..

 

கோதை மனதின்

கோமகன், பெண்ணவளை தொட 

குங்குமாய் சிவந்தாள் கன்னியவள்

கூடல் பொழுதினிலே

கலைந்திட்ட அவள் கூறப்புடவையோ

கூடத்தின் ஒரு ஓரத்தினிலே

அல்லியை ஆதித்யன் ஆளும்

அழகிய காலை விடியலிலே  அதை போல் இந்த

அல்லியின் ஆடைகள் கலையப்பட்டு

அன்னம் அவள் மேனியின் மீது

நாணம் மட்டும் மிச்சமாய் ஒட்டிக்கொண்டது

 

                                    

அங்கே அழகியை உறவு முகிழ்ந்தது….ஒருவரில் மற்றுஒருவர் கலந்துவிட்டனர்…….ஆனால் மதியின் மனம் மதில் மேல் பூனையாக பரிதவிக்க, தன் காதலை தனது கணவன் உணர்ந்துக்கொண்டு தான் தனது பெண்மையை ஆண்டு இருக்கிறான் என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அவள் காதல் சொல்லாமல் போன கதை…… அதை சொல்ல முடியவில்லையே என்பதை நினைத்தவளுக்கு கண்ணில் ஒரு துளி நீர் பெருக, அந்த ஈரம் ஆதித்யனின் மார்பில் அவள் சாய்ந்திருந்ததால் அவன் ஈரம் உணர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவளிடம், “கண்மணி…. இங்க பாருடா….அதான் எனக்கு ஒன்னும் இல்லையே…. ஹ்ம்ம் நான் உன்கிட்ட நிறைய சொல்லணும்… நிறைய பேசனும்… ஆனா அதுக்கு முன்னாடி… நீ என்ன இவ்ளோ தூரம் லவ் பண்ணிட்டு ஏன் மதி.. எதுனாலா என்கிட்டே சொல்லாமலே போய்ட்டே…. அதுக்கு என்ன காரணம் மதி” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லும் குரலில் தொடங்கி, குழப்பம் துணிக்க ஏக்கம் நிறைந்த குரலில் நான்கு வருடமாய் அவனுள் எழுந்த கேள்வியை முன்வைத்தான் ஆதித்யன். 

 

அந்த கேள்வியை கேட்டநொடி மதியின் இதயம் ஒருமுறை துடிக்க மறந்தது போல…. அசையாமல் இருந்த மதியை பார்த்த ஆதித்யன், “என்னாச்சு மதி” என்று கேட்க, மதியோ இந்த நேரடி கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் திகைப்பா? மலைப்பா? பயமா? என்னவென்று சொல்வது என்று புரியாமல் விழித்தவள் இனியும் மறைப்பதில் பயனில்லை என்பதை புரிந்துக் கொண்டு, அதே சமயம் 4 வருடத்திற்கு முன்பே கிருஷ்னவை அவள் காதலித்த விவரம் அவன் எப்படி அறிந்தான் என்ற கேள்வியுடனும் அவனிடம் கம்மிய குரலில் ஒரு பயத்தோடு அவன் கண்களை நேரே சந்திக்கும் துணிவு இல்லாது குற்ற உணர்ச்சியில் முகத்தை மறுபுறமாக திருப்பிக்கொண்டு அன்று நடந்தவைகளையும், ஆதி மீது அவள் கொண்ட நேசத்தையும், அதை உணர்ந்துக்கொண்ட தருணத்தையும், அவனை பார்க்க ஓடி வந்த நொடி, காவ்யா மற்றும் ஆதித்யனின் பேச்சு காதில் விழுந்ததையும் அதில் அவள் நொருங்கியதயும் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே ஆதித்யனின் ஆக்ரோஷமான குரல் அவள் பேச்சை தடை செய்தது, “வில் யூ ஸ்டாப் இட்….” .

 

அவனது குரலில் திகைத்து திரும்பிய மதி, ஆதித்யனை பார்க்க அவனிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு மேலும் திகைத்தாள். “க்ரிஷ்ணவ்… அது வந்து…” என்று உள்ளே போன குரலில் மதி பேச, ஆதித்யனோ, “போதும்…. எதுவும் பேசாத மதி….நீ கொஞ்ச நேரம் முன்னாடி என் மேல சாஞ்சு இருந்தபோது நீ சிந்துன கண்ணீர்… என் மேல உள்ள பாசத்துலன்னு நினச்சே … ஆனா அது இல்ல. என்ன காதலுச்ச அப்புறம் கண்டவ சொன்னத நம்பி என் மேல சந்தேக பட்டு போய்ட்ட… உண்மையான காதல் இருந்திருந்தா எப்படி எப்படி டி சந்தேகம் வரும்…. நான் வேண்டாம்னு விலகி போன உன்ன 4 வருசமா தேடி திருஞ்சே… இப்ப இப்ப கூட நீ  சிந்துன கண்ணீர் க்கு காரணம் என் கை உன்மேல பட்ருச்சுனு தானோ…. உன்னோட கணிப்பு படி ஒரு ….. ” என்று கூறி கண்களை அழுந்த மூடி திறந்தவன், அவன் தாடை இருக மதிக்கு முதுகு காட்டி நின்றுக்கொண்டு…. வறண்ட குரலில், “ஒரு பொம்பள பொருக்கி கை உன் மேல பட்டுருச்சுனு… ஆம் ஐ ரைட் ? .. இது தெரியாம நான் முட்டால் தனமா… ச்ச….” என்று வேகமாக சென்றவன் குளியல் அறைக்குள் நுழைந்து நீரின் அடியில் நின்று அவன் கோவத்தையும் மதி அவனை நம்பவில்லை என்பதனால் வந்த மனவேதனையும் ஆற்ற முயன்றான். 

 

 

ஆனால் அவனின் கோவத்தை போக்கும் சக்தி, நெருப்பினையே அணைக்கும் அந்த நீர் துளிகளுக்கு இல்லாமல் போனது. . . 

 

 

அவன் உதடுகளோ, “ஏண்டி… ஏன் இப்படி பண்ணிட்ட… நான் வாழ்கையில ரொம்ப முக்கியமா நினைக்கிறது நம்பிக்கை தான்… அந்த நம்பிக்கை என் மேல உனக்கு இல்லாம போச்சே டி… இதுக்காகவா?… இதுக்காகவா? நான் இத்தன நாள் காத்து இருந்தேன்…” என்று முணுமுணுத்தது. 

 

 

மேலும் அவன் மனமோ, “எனக்கு இப்ப தான் புரியிது, நீ ஏன் இத்தன நாட்களா காதல சொல்லாம இருந்தன்னு… உன்னால அந்த காவ்யா சொன்னத உன் மனச விட்டு விலக்க முடியல… என் மேல உனக்கு காதலும், அதே சமயம் அவ சொன்னத உன் மனசும் நம்பிடுச்சு… இது இதுதான… உன்ன நீயே இத்தன நாள் என்கிட்டே இருந்து விலக்கி வைக்க காரணம்…. உன் மனசுல சந்தேக இருக்கு மதி… இது நம்பிக்கை இல்லாத உறவு… ஒருவேள இது எல்லாம் நீயே என்கிட்ட முதல்ல சொல்லி இருந்தா கண்டிப்பா என் மனசு இவ்ளோ வேதனைப்பட்டு இருக்காது… ஆனா இத கூட நான் கேட்ட பிறகு தான சொன்ன மதி ? .. ஏன் அத்தன தூரம் என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று எண்ணி எண்ணி எதற்கும் கலங்காத ஆதித்யனது மனமே காதலின் அஸ்திவாரமான நம்பிக்கை ஆடிவிட்டதோ என்று வேதனை கொண்டது.

 

 

குளியல் அறையில் இருந்து வெளி வந்த ஆதித்யன் முகம் கடுமை பூசி இருந்தது…. அவனது கண்கள் எந்த உணர்ச்சிகளும் பிரதிபலிக்காது வறண்டு இருக்கவே மதி பேசும் சக்தி இழந்து தன்னையே நொந்துக்கொண்டு செய்வதறியாது கணவனின் மனதை மாற்ற வழி தெரியாமல் மூக்கு விடைக்க அழுதுக்கொண்டு இருந்தாள். 

 

 

 

அந்த நேரம் சரியாக வெளியில், “க்டிஷ்ணவ் அய்யா….”, “க்ரிஷ்ணவ் அய்யா… நான் பூதபடையன் வந்துருக்கேனுங்க அய்யா…” என்று குரல் ஒலிக்க, ஆதித்யன் வேகமாக கதவை நோக்கி நடக்க மதி குளியல் அறை சென்று குளிர்ந்த நீரை முகத்தில் வேகமாக அடித்து சிவந்த விழிகள் தெரியாமல் மறைக்க முயன்றுக்கொண்டு இருந்தாள். 

 

அவள் குளியல் அறையில் இருந்த பொழுது உள்ளே வந்த பூதபடையன்….”அய்யா… நீங்க வந்துருக்கீங்கனு, நம்ம மலைச்சாமி அடிவாரத்துல பஸு மாற நின்னப்ப, என்ன பாத்து சொன்னானுங்க… அதான் வெரசா ஓடியாந்தீங்க… அய்யா வர தகவல் தெரியலைங்க…. நீங்க இந்த வார வர சொன்னதும்… அய்யா உசுர காப்பாத்திய பொண்ண பத்தி தகவல் தெருஞ்சதோனு தோனுச்சுங்க அய்யா… விவர ஏது இருக்கா? நீங்க எப்படி அய்யா இருக்கீங்க… சோளியா வந்தீகளா?” என்று அவர் பேசிக்கொண்டே போக இதை அனைத்தையும் கேட்ட மதி சுக்கு நூறாக உடைந்து சிதறி போனாள். 

 

அவள் மனமோ, “என்ன என் க்ரிஷ்ணவ் தேடி அலஞ்ச்சிருக்காரா? … நா…நான் தான் என் முட்டாள் தனம் தான் காரணம்… என் கிருஷ்ணவ நான் முழுசா நம்புறேன்…ஆனா அத… அத எப்படி புரியவைப்பேன்” என்று எண்ணமிட்டபடியே வெளியே வர… அவளை பார்த்த பூதபடையன், “தாய்… வந்துட்டியா?”, “அய்யா .. க்ரிஷ்ணவ் அய்யா…இந்த…இந்த மக தான் அன்னைக்கு உங்க உசுர காப்பாத்தின பொண்ணு…” என்று அவர் நாதழுதழுக்க கூறியவர் மேற் கொண்டு சொல்ல போகும் முன் அதை கேட்க கூட மனம் இல்லாத ஆதித்யன் அவரிடம், “ஆமாங்க அய்யா… இவள… நான் கண்டுபிடிச்சுட்டேன்… கல்யாணம் கூட பண்ணிட்டேன்… இவ தான், என் மனைவி…” என்று எங்கோ பார்த்துவிட்டு கூற, அவனின் அறிவிப்பால் மனம் குளிர்ந்த அவர், அவர்களை மனமார வாழ்த்தினார். 

 

ஆனால் அந்த இருவரின் ஒதுக்கமும் ஏதோ அவர்களுக்குள் ஊடல் என்பதை புரிந்துக்கொண்டு, விரைவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அவர்களுக்கு தனிமை குடுத்து அவர் சென்று விட, ஆதித்யனோ மதிக்கு தனிமை குடுத்து குடிலை விட்டு வேகநடையுடன் சென்றான். 

 

 

அவன் சென்றவுடன், இத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை மடை திறந்துவிட்ட வெள்ளம் போல பொங்க, அழுதுக்கொண்டே போனவள் ஷவரின் அடியில் நீண்டநேரம் இருக்க, எத்தனை நேரம் இருந்தாளோ அவள் அறியாள். சற்று முன்பு தன் கணவனோடு இருந்த முகிழ்தலில் ஏற்பட்ட அனைத்து சந்தோசங்களும் தண்ணீர் வழி வடிந்து போவதை போல தோன்றியது. நீர் அவள் பூவுடல் மீது விழுந்து அவள் சந்தோசத்தை அள்ளி சென்றது மட்டும் அல்லாது துக்கத்தை அவள் மனதில் நிரந்தரமாய் நிறுத்தி சென்றது போல பிரம்மை ஏற்பட்டது மதிக்கு. 

 

அவள் உடல் பாரத்தையே அவள் கால்கள் தாங்க சக்தி இல்லாதது போல துவள, கட்டிலில் வந்து படுத்தவள் அழுது அழுது ஓய்ந்து அப்படியே உறங்க தொடங்கி இருந்தாள். 

 

வெளியில் சென்ற ஆதித்யன், உள்ளே வந்து அழுதிருந்த தடம் கோடாக, அழுகையினால் வெளிறி போய் இருந்த அவள் கன்னத்தில் தெரிய, அவள் மீது கோவம் இருந்த போதும் அவன் மனம் வலித்தது. குளிராலும் நீண்ட நேரம் ஷவரில் நின்றதாலும் குளிர் காச்சல் பரவ தொடங்க அவள் உடல் நடுங்க தொடங்கியது. அந்த நடுக்கத்தை பார்த்து, ஆதித்யனின் கால் அவனின் கட்டுப்பாடு இல்லாமலே அவளிடம் முன்னேறியது. அவளுக்கு ஒரு அடர் ஜமுக்காளத்தை போர்த்திவிட்டான் ஆதித்யன். 

 

போர்த்திவிடும் போது அவன் விரல் அவள் மேனியில் தீண்டிவிட சட்டென கையை விலகியவன் ஒரு கசந்த மெல்லிய சிரிப்புடன் அவன் மனமோ, “ஹ்ம்ம் நான் தொடுறது..உனக்கு தான் பிடிக்காதுல…” என்று எண்ணிவிட்டு வெளியில் சென்றவன் மலை வாழ் மக்களில் இருந்த மருத்துவரை அழைத்துவர ஏற்பாடு செய்தான்.

 

அதே நேரம் உறங்கும் மதியை வெறுமை படர்ந்தை பார்வை பார்த்துக்கொண்டே மேஜை மீது இருந்து அவனது உடமைகளை அவனது பெட்டியில் வைக்க அதற்கு கீழ் மதி வைத்திருந்த மதியின் மனதை சொல்லும் கடிதமும் சேர்ந்து அவன் பெட்டிக்குள் அடைக்கலம் ஆனது அவன் பார்வைக்கு வராமலே…..

 

அவர் வந்து சில நாட்டுவைத்தியங்களை செய்ததும் சற்று தெம்பு பெற்று இமை பிரித்தவள் வேகமாக ஆதித்யனை பார்க்க அவன் கூர் விழியில் வெறுமை மட்டுமே…..

 

அவள் உடல் நலனை மருத்துவரிடம் கேட்டுவிட்டு அன்றே அந்த அடுக்கத்தை விட்டு கிளம்ப ஆதித்யன் முடிவெடுத்தான்…..

 

அவர்களின் மதிப்பிற்கு உரிய க்ரிஷ்ணவையும் அவனின் மனைவியையும் வழி அனுப்ப அவர்கள் அனைவரும் ஆவலுடன் திரண்டு இருந்தனர். குழுமி இருந்த கூட்டத்தை பார்த்த மதிக்கு அழுகை குமுறிக்கொண்டு வந்தது…….

 

ஆதித்யன் முகம் வெறுமை படர்ந்தே இருந்தது…..

 

வண்டியில் ஏறி அவள் அமர்ந்தவுடன் ஆதித்யன் அனைவரிடமும் கூறிக்கொண்டு கிளம்ப மதியின் மனமோ, “அன்னைக்கு கிளம்ப போதும்… 4 வருடத்திற்கு முன்னாடியும் துக்கத்தோடு தான் போனே… இன்னைக்கும் அதே நிலைமை… அப்ப நான் அவர புருஞ்சுக்கள, இப்ப அவரு என்ன புருஞ்சுக்கள…..” என்று எண்ணமிட்டது.

 

மழை துளி ஏந்தி நிற்கும்

செம்பருத்தியே…

தூறல் சிந்த சிந்த

சிப்பிக்குள் முத்தாய்,

துளிகள் உன் பூவிதழுள் சரண்புக

கணம், கணம் தூறல்

தூறிக்கொண்டே இருக்க,

கனமோ மலர் மீது ஏறிக்கொண்டே போனதடி

 

கனம் தாளாது மலர் குடைசாய,

செம்பரித்தி மலர் குடை சாய

காரணம் மழை துளிக்கும் மலர்க்கும்

மலர்ந்த காதல் என்று எண்ண

காரணமோ காதல் அல்ல

கனம் தாளமுடியாத துளியின் பாரமாகி போனதென்னடி

                                              

 

அவர்களது பயணம் சென்னை நோக்கி புறப்பட….. இருவரின் காதலும் இனி அவர்களின் வாழ்க்கையில் பயணமாகுமா? என்ற கேள்வியுடன் தேங்கி நின்றது.

Advertisement