முகிழ் –  26

 

அந்த விஜய ராஜசேகரன் என்பவனை தேடி வந்த மதியும் சிநேகனும் அந்த ஆட்டோ ஓட்டுனரை சந்தித்திருந்தனர். அவனது வீடு சற்று தொலைவில் இருக்க, அந்த வீடு கண்களில் தெளிவாக படும்படியாக இவர்கள் நின்றுக்கொண்டு அதே சமயம் இவர்களை ஒருவேளை அவன் பார்த்தால் தெரியாதவாற மறைவாக நின்றுகொண்டனர். 

 

வேங்கையின் வேகத்துடன் காரின் ஆக்சீலேட்டரை அழுத்தி அவன் குடுத்த வேகத்தில் அவன் மதியின் மீது கொண்ட காதல் அந்த காருக்கு கூட புரிந்திருக்கும், அந்த எந்திரத்துக்கும் புரிந்ததால் தான் என்னவோ அவன் மனவேகத்துக்கு ஈடு குடுத்து அந்த வண்டியும் பறக்க தொடங்கியது   ஆனால் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குத்தான் அவனின் மனவேகமும், காதலின் அழுத்தமும் புரியாமல் போனது. 

போக்குவரத்து நெரிசலில் அவன் காத்திருக்க நேர்ந்ததில் அவனால் வண்டியை பின் நோக்கி இயக்கவும் முடியவுமில்லை முன்னகரவும் முடியாமல் போகவே அந்த டைடல் பார்க் சிக்னலில் அவன் வெகு நேரம் காக்க நேரிட்டது. 

 

அதே நேரம் சினேகன் மதியிடம், “மதி, நம்ம ஏன் இங்க வெயிட் பண்ணனும்…. அதான் அந்த விஜய்யோட வீடு தான் தெருஞ்சதே… அப்புறமும் ஏன் காத்திருக்கணும்? போகலாமே” என்று கூற, மதியோ தன் பார்வையை அந்த வீட்டிலிருந்து எடுக்காமலே எச்சரிக்கையுடன் சிநேகனிடம், “இல்ல சினேகன், நமக்கு அவன் வீடு தெருஞ்சிடுச்சு தான்… ஒருவேள அவன் இப்ப நம்மகிட்ட உண்மை சொல்லலாம் அதே நேரம் சொல்லாம தப்பிச்சு போகவும் அதாவது 2க்கு சரிசமமான வாய்ப்பு இருக்கு…அதனால இப்ப நம்ம அவனோடு வீடு தெருஞ்சதுபோல காட்டிக்கிட்டு அங்க போய் நின்னுட்டா..   ஒருவேள எதிர்மறையா நடந்துட்டா அடுத்து அவன் தலை மறைவு ஆகிடுவான்…அப்புறம் அவன நம்மால தேட முடியாது… இப்ப நம்மகிட்ட சரியான ஆள்பலமும் இல்ல… அதுனால அவன் வெளிவரும்போது அவன வழி மறச்சா, ஒருவேள அவன் தப்பிச்சிட்டா கூட நம்ம அடுத்த முறை சரியான திட்டத்தோடு அவன அணுகமுடியும்.. காரணம் அவன் வீடு தெருஞ்சுருகாதுன்னு நினச்சு அவன் வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு… ஒரு வேலை நான் நினைக்கிறது போல எதுவுமே நடக்காம அவன் இப்பவே நம்மகிட்ட மாட்டிக்கிட்டாலும் நமக்கு நல்லதுதான்” என்று கூற சிநேகனோ மனதினுள், “அம்மாடியோ எப்படில்லாம் பிளான் போடறா…ஆதி சார் க்கு இவ கொரஞ்சவ இல்ல….ஏன்னா இவ என் தோழி” என்று நினைத்துக்கொண்டான்.  

 

அவன் மனதினுள் அவளை பெருமையாக எண்ணிவிட்டு வாய் மொழியாக, “எப்படி மதி…. இப்படி எல்லாம்” என்று கிண்டலாக கேட்க, அவளோ, அவன் கிண்டலை உணரும் நிலையில் இல்லாமல்…. அவனுக்கு பதிலாக இன்னமும் பார்வையை விளக்காமலே, “ஆமாம் சினேகன், எப்பவும் ஒரு விஷயம் பண்ணும் போது முதல்ல அந்த காரியத்தோடு எதிர்மறை விளைவுகள்தான் முதல்ல நமக்கு தோணனும் அப்பத்தான் நம்மனால சமாளிக்க முடியும்..” என்று கூறிவிட்டு காரியத்துலே கண்ணாக இருந்தாள். 

 

 

 

சிநேகனோ அவளது பதிலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து அவனும் விளையாட்டு பேச்சுகளை தள்ளிவைத்துவிட்டு சற்று தள்ளி போய் ஆதித்யனுக்கு வீடியோ காலில் அழைத்தான்.

 

“சொல்லுங்க சினேகன்” என்று வீடியோ காலில் ஆதித்யன் கேட்டாலும், அவனது பார்வை மதியை கேட்பதை புரிந்துக் கொண்ட சினேகன் ஆதியிடம், “ஆதி சார்” என்று தொடங்கி இதுவரை நடந்ததை சுருக்கமாக கூறினான். மேலும் இப்பொழுது அவன் வீடியோ காலில் அழைத்ததன் காரணம் நடப்பவைகளை நேரிடியாக ஆதித்யனுக்கு தெரியவைக்கத்தான் என்று கூறினான். 

 

அவன் கூறியபடியே, அவனது மேல் சட்டையின் மீதிருந்த சட்டை பையில் வைத்தவன் அது பெரிய கைபேசி என்பதால் அந்த பையை விட பெரிதாக அந்த கைபேசி இருக்க கைபேசியோடு அமைந்திருந்த கேமரா தெளிவாக வெளி உலகத்தை ஆதித்யனுக்கு காட்டியது. 

 

கேமரா வழி தெரிந்த மதியின் செயல்களை ஆதித்யன் ‘சிக்னலில்’ நின்றுக் கொண்டு கண்காணிக்க அதை பார்க்க தொடங்கிய 2 நிமிடங்களிலே மதி பார்த்துக் கொண்டு இருந்த வீட்டிலிருந்து ஒருவன் பைக்யை எடுத்துக்கொண்டு வெளி வருவது தெரிய மதி பரபரபானாள். 

 

அவன் (விஜய்) அந்த தெரு முனையை கடக்க முயன்ற போது மதி கூறியபடி சினேகன் சென்று ‘லிப்ட்’ கேட்டபடி கை அசைக்க தனது வண்டியின் வேகத்தை விஜய ராஜசேகரன் என்று கூறபடுபவன் குறைத்து வண்டியை நிறுத்தவும், மறைந்திருந்த மதி மற்றும் அந்த ஆட்டோ ஓட்டுனர் வேகமாக வந்து அவனை சுற்றி வளைத்தனர். அவன் திகைத்து சுதாரிக்கும் முன் வண்டியின் சாவியை சினேகன் முன் எச்சரிக்கையுடன் கைப்பற்றி இருக்க மூவருக்கு நடுவில் மாட்டிய விஜய் அவர்களிடம் சற்று எச்சரிக்கையும், குழப்பும் நிறைந்தபடி, “நீங்கலாம் யாரு…? எதுக்கு என்ன மடக்கி இருக்கீங்க?”  என்று கேட்க இதுவரை பின்னால் நின்ற மதி அவன் முன்னே வந்து, “அத நான் கேட்கணும்…” என்று கூற இப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சினேகன் இருவரும் அவனது இரு பக்கவாட்டில் நின்று அவனை பிடித்துக் கொண்டனர். 

 

உடனே அவன் மதி பார்த்து திகைத்து, “நீ? நீ எப்படி இங்க?” என்று நாகுழறி கேட்க மதியோ வெகு அலட்சியமாக அவனிடம் வரிசையாக பொய்களை அடுக்க தொடங்கினாள், “மிஸ்டர். விஜய்… இன்னும் கொஞ்ச நேரம்ல நீங்க ரொம்பவும் பிரபலம் ஆகபோறீங்க…அட ஆமாங்க… உங்கள பத்தி எல்லா தகவலும் சேகரிச்சுட்டோம்…. போலீஸ்க்கும் தகவல் சொல்லியாச்சு….இங்க உங்களோட வீடு மட்டும் எங்களுக்கு தெரியல அதுதான் இந்த தெரு முனையில காத்துட்டு இருந்தோம்… போலீஸ் இன்னும் 10 நிமிடத்துல இங்க இருப்பாங்க, அதுக்கு அப்புறம் 48 பேரு கடத்தலுக்கு நீ தான் தலைவன்னு சொல்ல எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு…இப்ப சொல்லுங்க, நீங்க பிரபலம் ஆக போறீங்க தான?” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி கூற அவனோ உணர்ச்சி வசப்பட்டு, “என்ன நானா? இல்ல நானா எதுவுமே பன்னல” என்று ஒரு வார்த்தை உளறிவிட்டு பிறகு சுதாரித்து மதியிடம், “ஆமாம்ங்க நான் எதுவும் செய்யல, நீங்க என்ன பேசுரீங்கனே எனக்கு தெரியல…. ப்ளீஸ் நம்புங்க” என்று கெஞ்ச தொடங்க மதியோ சட்டை செய்யாமல், கைபேசி எடுத்து யாருக்கும் அழைக்காமலே அழைத்ததாக பாவலா காட்டி, “ஆமாம் ஏ.சி. பி சார், இங்க தான்… என்ன இன்னும் 5 நிமிசத்துல வரீங்களா? ஒகே” என்று கூறி கைபேசியை வைக்கவும் பீதியில் உழன்ற விஜய், “மதி, இங்க பாருங்க… நிஜமா எனக்கு எதுவும் தெரியாது… என்ன பிடிச்சு அடிச்சு கேட்டா கூட தெரியாது… என்னால சொல்லவும் முடியாது, எனக்கு எதுவாச்சும் தெருஞ்சதான நான் சொல்ல… புருஞ்சுக்கோங்க மதி” என்று கூறியன் மதியிடம் சிநேகனிடம் என மாற்றி மாற்றி கெஞ்ச தொடங்கினான். 

 

ஆனால் மதியோ மனதினுள், ‘அவன் நானா எதுவும் பண்ணலன்னு சொல்றான்… அப்போ இவனுக்கு மேல யாரோ இருக்காங்க, அது பதட்டத்துல உளறின வார்த்தை, அது நிச்சயம் பொய்யா இருக்காது…அதே போல இவனுக்கு எந்த அளவு இந்த விஷயத்துல தகவல் தெரியும்னு தெரியல… சரி எதுவானாலும் இவன நம்ம விட்டுவிட கூடாது’ என்று எண்ணமிட்டவள் சிநேகனிடம், “சினேகன் இவன இழுத்துட்டுவாங்க… இவன மீடியா முன்னாடி காமிச்சு இவன் முக திரை கிழிக்கணும், இவனுக்கு குடும்பம் இருக்குமான்னு தெரியல.. ஒருவேள இருந்தா இவன் பேரு நாரனும், ஏ.சி.பியும் வந்துட்டு இருக்காரு” என்று கம்பீரமாக கூற இதை அனைத்தையும் ஆதித்யன் வீடியோ கால் மூலம் பார்த்துக் கொண்டு இருந்தான். 

 

அதே நேரம் சிக்னலில் பச்சை நிறம் விழ புயலென வண்டியை இயக்கியவன் தனது முன் அந்த கைபேசியை வைத்து நடப்பவைகளை பார்த்துக்கொண்டே வண்டியை தாமதிக்காமல் இயக்கினான். 

 

அங்கு அந்த விஜயோ, “ஐயோ ப்ளீஸ் அப்படி செஞ்சுராதீங்க… நீங்க சொல்றது போல எனக்கு இதுல சம்மதம் இல்ல, அதோட எதோ 48 பேருன்னு சொல்றீக அதுகூட எனக்கு சரியா தெரியாது…. ஆனா என் அம்மா என் அம்மா எனக்கு ரொம்பவும் முக்கியம் அவுங்க உயிர் காப்பாற்றியவங்களுக்கு, அவங்க சொல்ற வேலைய பார்க்குறே, இதுக்கு மேல எனக்கு தெரியாதுங்க, அவுங்க யாருன்னு என்னால சொல்ல முடியாது, அதோட அவுங்கள பத்தி முழு விவரம் எனக்கு தெரியவும் தெரியாதுங்க…. ப்ளீஸ் நம்புங்க.. மீடியால என் முகத்த காமிச்சிடாதீங்க’ என்று கதறினான்.

 

அவன் கூறிய வார்த்தைகளில் சிநேகனும் மதியும் சற்றே குழம்ப அந்த குழப்ப வேளையை பயபடுத்துக் கொண்ட விஜய் அவர்களிடம் இருந்து திமிறி ஓட எத்தனிக்க அந்த போராட்டத்தில் அவனிடம் இருந்து 2 கைபேசிகள் வெளியில் எகிறி விழுந்தன. 

 

அந்த கைபேசியின் மீது மதியின் கவனம் விழ அதற்குள் மூவரின் கண்களிலும் மண்ணை தூவியவன் அந்த கைபேசியை பற்றிக்கொண்டு வெகுவேகமாக ஓடி மறைந்தான். 

 

கண்களில் மண் விழுந்து உறுத்த, மதிக்கோ கிடைத்தவனை விட்டு விட்டோமே என்று மனதும் சேர்ந்து உறுத்தியது. இவை அனைத்தையும் ஆதித்யன் பார்த்து முடிக்கவும் சினேகன் கூறிய பகுதிக்கு ஆதித்யன் வந்து சேரவும் சரியாக இருந்தது. 

 

 

ஆதித்யன் இதுவரை பார்த்திருந்த சம்பவங்கள் இறுதியாக அந்த விஜய் தப்பி சென்றது என மனதினுள் மீண்டும் ஒருமுறை ஓடவிட்டு பார்த்தவன், வெகுவேகமாக அவன் தப்பி சென்ற வழியே காரை செலுத்தாமல் அந்த பகுதியின் மறுப்பக்கமாக சுற்றி வளைத்து அவன் அகபடுகிறானா என்ற நோக்கோடு வண்டியை இயக்கினான். 

 

இங்கு மதியோ அவனை சுற்றும் முற்றும் கண்களால் வெகு வேகமாக துலாவிவிட்டு அவன் அகபடாததால் அக்கம் பக்கத்தில் அவனை விசாரிக்கக முனைந்தாள். 

 

அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்துக் கொண்ட சிநேகனும் கூட அவளுக்கு உதவினான் கூடவே அந்த வீடியோ கால் அழைப்பு துண்டிக்க பட்டு இருக்க ஆதித்யனுக்கு மீண்டும் மீண்டும் முயற்சித்து அழைப்பு எடுக்கப்படாமல் போகவே சினேகன் சற்று குழம்பவும் செய்தான் ஆதித்யன் இன்னும் இந்த பகுதிக்கு வந்து சேராததை நினைத்து. 

 

அந்த இடைப்பட்ட நேரத்தில் துரிதமாக செயல்பட்ட மதி, அந்த விஜய் பணி புரியும் அலுவலகத்தை வெகு லாவகமாக தெரிந்துக்கொண்டு வந்துவிட்டாள். இந்த அரைமணி நேர இடைவேளையில் ஆதித்யன் வராததை நினைத்து யோசித்துக்கொண்டிருந்த சினேகனின் சிந்தனையை களைத்த மதி அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் நன்றி தெரிவித்து விட்டு இதில் அவர்க்கு எந்த தொந்தரவும் நேராது என வாக்குறுதி கொடுத்து அனுப்பினாள். 

 

அவரை அனுப்பிவிட்டு, “என்ன யோசிக்கிற சினேகன்…” என்று மதி கேட்க, அவனோ, “அது வந்து… ஆதி சார்….” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே சரட்டென்று வழுக்கிக்கொண்டு வந்து நின்றது ஆதித்யனின் கார். 

 

 

 

மதியை விட வேகமாக முன்னேறி, ஆதித்யனை அணுகிய சினேகன், “சார், என்ன ஆச்சு சார்… ஏன் லேட்டு…அவன் அவன் தப்புசுட்டான் சார்? ” என்று கேட்டுகொண்டே கூற ஆதித்யனோ அவனிடம், “பதறாத சினேகன், இப்ப நீங்க அவன பாத்தது மூலமா அவனுக்கே தெரியாம உங்ககிட்ட கண்டிப்பா ஒரு தடயம் விட்டு போய் இருப்பான்…. அதுனால இப்ப இத வச்சு முன்னேறுங்க… இப்ப 2 பேரும் ஏறுங்க, நான் உங்கள ட்ராப் பண்றேன்….” என்று கூற சிநேகனோ, “இல்ல சார்.. வண்டியில வந்தேன்… நான் அத எடுத்துட்டு வரேன்… நீங்க மதியை கூப்பிட்டு போங்க… மதியோட கண்லதான் அவன் மண்ணை தூவிவிட்டான்” என்று கூற மதியை, ஆதித்யன் கண்களாலே விசாரித்தான். 

 

அந்த ஒரு நொடி பார்வை பரிமாற்றத்துக்கு பின்னே சிநேகனிடம், “சரி அப்போ கிளம்புங்க சினேகன்… நானும் மதியை கூப்பிட்டு போறேன்… மதியோட கண்ணு ரொம்பவும் சிவப்பா இருக்குது…” என்று கூற சிநேகனும் கிளம்ப எத்தனித்தான். 

 

அவனை தடுத்த மதி “சினேகன் ஒரு நிமிஷம்… இது தான் அந்த விஜய் வேலை பாக்குற அட்ரெஸ்… நீ போய் அவனோட டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு எனக்கு சொல்லு சினேகன்…. ரொம்ப முக்கியம் அவனோட மொபைல் நம்பர்… பண்ணிட்டு சொல்லு சினேகா… நான் ஆபிஸ் வந்துறேன்” என்று கூற தனது மனையாளின் மீது பெருமை நிறைந்த காதல் பார்வையை பார்த்தான் ஆதித்யன்.  

 

ஆனால் சிநேகனோ மனதினுள், “இந்த ரணகளத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது… என்ன சினேகா னு கூப்பிடுற, உன்ன…” என்று மனதினுள் நினைத்துக்கொண்டு வெளியில் அவளை குறை சாட்டும் பார்வை பார்த்தான், ஆதித்யன் முன்பு மதியை இப்படி மனதினில் நினைத்ததை சொல்லும் துணிவு இல்லாததால். 

 

அவன் புறப்பட, அவர்களும் வண்டியில் ஏறி பயணமானார்கள். அவர்கள் கிளம்பிய சற்று நேரத்துக்கு எல்லாம் கார்காலம் என்பதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இருட்டிக்கொண்டு வந்தது. மேகம் திரண்டு   நீர்த்துளிகளை தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு வானில் தவழ்ந்து செல்ல, காரினுள் பயணமான மதி கண்களை லேசாக கசக்கி கொண்டே வந்தாள். தங்களுக்கு முன் இருந்த காரின் ரியர் வியூ கண்ணாடியை சற்று எட்டி பார்த்து கண்ணில் என்ன உறுத்துகிறது என்பதை பார்க்க முயன்ற படி வந்துக்கொண்டு இருந்தாள். 

 

அவளது செய்கைகளை பார்த்துக்கொண்டே வந்த ஆதித்யன், சற்று ஒத்துகுபுறமாக தனது வண்டியை நிறுத்த, அந்த இடம் சென்னையின் புறநகர் பகுதி என்பதால் ஏற்கனவே ஆள் நடமாட்டம் குறைவாக இருக்க இப்போது மழை இருட்டிக் கொண்டு வந்ததால் ஆள் நடமாட்டம் அந்த பகுதியில் அறவே இல்லாமல் இருந்தது. 

 

“மதி, இங்க என்ன பாரு…” என்று உரிமையுடன் ஆழ்ந்த குரலில் கூற ஏதோ மந்திரத்துக்கு உட்பட்டது போல மதி அவனின் புறம் திரும்பினாள், அரைகுறையாக திரும்பி இருந்த தனது மனையாளை, தோளை தொட்டு திருப்பினான் முழுமையாக அவளது கணவன் அவனின் புறமாக.

 

மண்வாசனையோடு கலந்த ஈரகாத்து, காற்றில் மிதந்து வந்து மதியின் முகத்தில் மோதி செல்ல அந்த பரவசத்தையும் ஆதியும் ஸ்பரிசத்தையும் ஒரு சேர அனுபவித்த மதி, மண் விழுந்ததால் சிவந்த அவள் மான் விழிகளை அவளது கணவனின் விழியோடு உறவாட விட்டாள்.

 

அவளது தோள்களில் மீதிருந்த அவனுடைய கை சற்று முன்னேறி அவள் கன்னக்கதுப்புகளை 2 கைகளாலும் ஏந்தி அவனது கம்பீரமான அழுத்தம் படிந்த உதடுகளை அவளை நோக்கி கொண்டு வர, தன் கணவன் தன்னை முத்தமிட போகிறானா என்ற எண்ணம் தோன்ற அவள் மூச்சு வேகமாக வெளியிற தொடங்கியது. 

 

இதுவரை அவனது அணைப்பில் இருந்திருக்கிறாள் தான்… அவனது இதழ் தீண்டல்களும் தீண்டி அவளுள் குளிர்கின்ற தீயை மூட்டி இருக்கின்றதுதான். 

 

 

ஆனால் அவனுடைய இதழ் இவள் இதழை இன்னமும் சங்கமத்திருக்கவில்லை. அன்று அடுக்கத்தில் நடந்த இதழ் தீண்டலை தவிர. 

 

அவன் அருகில் வர, இமைகளை அவள் தாழ்த்த, ஆதித்யனோ அவள் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கும் விதமாய் மூடிய இமைகளை பூவின் செவ்விதழ்களை கை ஆள்வது போல மெல்ல பிருத்து அவள் கண்களில் படிந்த மண்ணை போக்கும் பொருட்டு ஊதிவிட தொடங்கினான். 

 

அந்த செய்கையில் ஒரு நிமிடம் கண்களை திறந்து பார்த்தவள், அவளை அவன் முத்தமிட்டு முகிழ்த்தாவிடிலும், அவள் கண்களில் துரும்பு விழுந்தது கூட பொறுக்காமல் அவளுக்கு ஊதிவிட்டதின் அன்பில் அவள் நெகிழ்ந்துதான்விட்டாள். 

 

அவன் மெல்ல ஊதி ஊதி அவளது கண் உறுத்தல்களை சரி செய்ய, மெல்ல அவளது கண்ணில் ஏறி இருந்த சிவப்பு நிறம் குறைவதை கண்டு அவளிடம் மிக மென்மையாக, “இப்ப ஓகையா? ” என்று கேட்க அவள் அவளுக்கே கேட்காத குரலில் மெதுவாக “ஹ்ம்ம்ம்ம் ” என்று இதழ் பிரித்து கூற, அவன் ஸ்பரிசத்தில் ஆட்கொள்ளப்பட்டு இருந்த மதியின் இதழ்கள் மெல்ல நடுங்க தொடங்கி இருந்தது. 

 

அந்த இதழ்களில் மீது பார்வையை பதித்த ஆதித்யனால் பார்வையை விலக்கமுடியாமல்போக சரியாக அந்த நேரத்தில் இத்தனை நேரம் இருட்டிகொண்டிருந்த வானம் சட சடவென மழை பொழிய தொடங்கி இருந்தது. காரின்குள்ளும் தூவானம் சிந்திய நீர்தூவாளைகள் சிதற தொடங்க, மதி வேகமாக காரின் பக்கவாட்டு கண்ணாடியை ஏற்றி விட்டு திரும்ப அவளின் துடிக்கும் இதழ்களை கண்ட ஆதித்யன் அசைவற்று இருந்தான். 

 

 

 

அவள் கண்ணாடியை மூடும் போது அவள் மீது தெறித்த ஒரு சில மழைத்துளிகளில் ஒன்று ஒய்யாரமாய் அவள் உதட்டில் மையம் கொண்டிருக்க, கண்ணாடியை அடைத்துவிட்டு திரும்பிய மதியை பார்த்த ஆதித்யன் வெகுவேகமாக அவளை இழுத்து அனைத்து அவள் இதழில் அவனின் கம்பீரமான இதழை பொருத்தி இருந்தான். பொருத்திய அதே நொடி அந்த சங்கமம் நடக்கவிடாமல், அருகில் சென்ற ஒரு பெரிய லாரி ஆதித்யனின் பக்கவாட்டு கண்ணாடி சரியாக மூடபடாததால் சாலையில் தேங்கி நின்ற மழை நீரை பாயிச்சி பெரிய ஹாரன் ஒலியுடன் அவர்களை கடந்து செல்ல இருவரும் சுய நினைவை பெற்றனர்கள்.

 

ஒருநிமிடம் கட்டுப்பாடை இழந்த ஆதித்யன் அவனது சிகைக்குள் அவனது நீண்ட விரல்களை கொடுத்து கோதிவிட்டவன் ஒரு ஆழ்ந்த மூச்சுடன் வண்டியை கிளப்பினான். காரினுள், தான் இப்படி நடந்திருக்க கூடாதோ என்ற எண்ணம் அவனை சங்கடத்துக்கு உள்ளாக்க அவன் அமைதியாக வண்டியை இயக்கினான்.

 

நெருங்கி வந்து விலகி போகும் தங்களது கண்ணாமூச்சி நிலை என்று நிறைவு பெறுமோ? காதலை எப்பொழுது சொல்வேனோ? மன்னிப்பை எப்படி பெறுவேனோ? அவன் தோள்களில் எப்போது சாய்வேனோ? போன்ற எண்ணங்கள் பௌர்ணமி நாள் பேரலையாய் அலைமோத மதி பேசாமடந்தையை போல் தவமிருந்தாள். 

 

அதன் பின் இருவரும் ஒருவர் மற்றோரிடம் பேச முனையாததால் சடசடக்கும் மழையின் சப்தத்தை தவிர வேறு சப்தம் இல்லாமல் போனது……

 

பிறகு சிறுது நேரத்தில் வண்டியில் உள்ள வானொலியை உயிர்பிக்க அவர்களில் மன நிலைமை புரிந்து ஒலிக்கப்பட்ட பாடலோ என்று என்னும் அளவுக்கு அந்த பாடல் காற்று வழி கலந்து அவர்களின் நெஞ்சில் கேள்வியை எழுப்பியது…

 

 

“காதலை யாரடி முதலில் சொல்வது 
நீயா இல்லை நானா 
காதலை யாரடி முதலில் சொல்வது 
நீயா இல்லை நானா 
காதலை யாரது முதலில் சொல்வது 
நீயா இல்லை நானா 
நான் சொன்னால் நீ வெக்கத்தில் சிவப்பாயா 
இல்லை அடிப்பாயா 
நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா 
இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணில் இருப்பேனா தொலைவேனா 
மரிப்பேனா “

 

என்ற பாடலின் முதல் வரி வந்ததும் இருவரும் ஒரு சேர ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்து ஒரு நொடி விழி உறவாட்டத்தின் பின் சாலையில் பார்வை பதித்தனர்.

 

சிறுது நேரத்தில் மதியின் அலுவலகம் வர கண்களாலே விடைபெற்றவள் அதற்குமேல் தாமதிக்காது வண்டியை விட்டு இறங்கி உள்ளே சென்றாள்.

 

வண்டியில் பயணமான ஆதியின் மனதிலோ மதியே தேயாத பிறையாக மிளிர்திருந்தாள்……..

 

“ஹாய், சினேகன் வந்தாச்சா” என்று வரவேற்பறையில் இருந்த கீதாவிடம் கேட்க அவளோ இன்னும் சினேகன் வரவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே சினேகன் வந்து சேர்ந்தான்.

 

 

“வா சினேகன்… உள்ள போய் பேசலாம்” என்று கூறிவிட்டு சினேகனுடன் கருத்தரங்கு அறைக்கு சென்றவள் சிநேகனிடம் விஜயை பற்றிய தகவல்களை கேட்டாள்.

 

“விஜய்க்கு ஒரு அம்மா மட்டும். ஒரு 6 மாசம் முன்னாடி ஏதோ அம்மாக்கு உடம்பு முடியலன்னு ஒரு லோன் அப்ளை பண்ணி இருக்கான்… அவன் வேலையில ஜாயின் பண்ணி 2 வருடம் ஆச்சு, அப்புறம் இது தான் அவனோட மொபைல் நம்பர்… வீட்ல வேற லான்ட்லைன் எதுவும் இல்ல போல… இது ஒன்னு தான்…” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து மதியிடம், “இத வச்சு நம்ம என்ன பண்றது, உருப்படியா எதுவும் கிடைக்கலியே…. மே பீ இந்த நம்பர் டிரேஸ் பண்ணலாம், அவ்ளோதான்.. அதுக்கும் நமக்கு தெருஞ்ச ஆள் கிட்ட சொல்லிட்டேன்…” என்று கூறிவிட்டு அவ்வளவுதான் என்பது போல மதியின் பதிலுக்காக காத்திருந்தான்.

 

மதியோ சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக கண்களை மூடி இருந்தாள். ஆனால் அவளது மூடிய இமைகளில் அலைப்பாயிந்த விழிகள், நெற்றியில் ஏற்பட்ட சுருக்கங்கள் அவளின் சிந்தனை வெகு தீவிரமாய் உள்ளதை பறை சாற்றியது.

 

சிறிது நேரத்தில் கண் திறந்தவள், “சினேகன் எனக்கு ஒரு ஐடியா கிடைச்சுருக்கு… க்ரிஷ்ணவ் என்ன சொன்னாரு யோசிச்சியா” என்று கேட்க சிநேகனோ மனதினுள், “அடிப்பாவி அப்ப இவ்ளோ நேரம் உன் புருஷன தான் யோசிச்சியா..? நான் கூட கேஸ்க்கு ஏதோ யோசிச்சிருக்கனுல நினச்சேன்” என்ற நினைக்க அவனது பதிலை எதிர்பார்க்காமல் மதியே தொடர்ந்தாள்.

 

“ஆமாம் சினேகன், அவன் அவனுக்கே தெரியாம ஒரு தடயம் விட்டிருப்பான்னு, அப்படி அவன் ஒன்னு விட்டுட்டு போய் இருக்கான்” என்று கூற சிநேகனோ மீண்டும் மனதினில், “ஒகே ஒகே பயபுள்ள கேஸ் பத்திதான் யோசிச்சிருக்கு” என்று கூறிக்கொண்டு அவளிடம் சொல்லு என்பதாய் தலை அசைத்தான்.

 

“அவன் நம்ம கண்ணுல மண்ணை தூவும் போது அவன்கிட இருந்து 2 மொபைல் விழுந்துச்சு அவன் பாக்கெட் இருந்து, ஆனா எல்லா இடத்துலயும் அவனோட ஒரு நம்பர் தான் இருக்கு, இப்படி அப்பிசியலா இருக்குற நம்பர இல்லீகல் விஷயத்துக்கு பயபடுத்தமாட்டான்னு தோனது…  ஏன்னா இவன் மேல சந்தேகம் வந்தா    இவனோட மொபைல தான் மொதல்ல ட்ரேஸ் பண்ணுவாங்க அப்படின்னு அவனுக்கும் தெரியும்ல….

 

அப்ப இது போல விஷயத்துக்கு இவன் ஏன் இன்னுமொரு நம்பர் வச்சுருக்க கூடாது?, அந்த நம்பர் தெருஞ்சா, அதுல யார்கூடலாம் தொடர்புள்ள இருக்கான் என்ன பேசுறான் இதுலாம் தெருஞ்சுகிட்டா நம்ம கண்டிப்பா இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கனு தெருஞ்சுக்க முடியும்” என்று கூற சிநேகனோ மதியிடம், “அது ஒகே தான்.. ஒருவேள அது அவுங்க அம்மாவோட நம்பரா இருந்திருந்தா…?” என்று கேட்க அதற்கு மதியோ, “நீ சொல்றமாதியும் நடக்க வாய்ப்பு இருக்கு… ஆனா அது இரண்டுமே டச் போன்… பெரியவங்க அத பயன்படுத்துவாங்கனு எனக்கு தோனல… அது தான் இப்படி மூவ் பண்ணி பார்ப்போம்” என்று கூற மீண்டும் சினேகன், “சரி அப்படி பண்ணலாம்… ஆனா எப்படி அந்த நம்பர் கண்டு பிடிகிறது” என்று கேட்க மதி மெளனமாக சிரித்துவிட்டு கீதாவை இண்டர்காமில் அழைத்து ஒரு 5 நிமிடம் வேறு யாரையேனும் அமர்த்திவிட்டு வருமாறு கூற மதி கூறியபடியே கீதாவும் அங்கே வந்து சேர்ந்தாள்.

 

மதி, சிநேகனிடமும் கீதாவிடமும் திட்டத்தை விவரிக்க விவரிக்க அவர்கள் இருவரும் வியப்பின் உச்சிக்கு சென்றனர்.

 

அந்த திட்டத்தை செயல்படுத்த மதி இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது, அந்த விஜயின் வீடு இருக்கும் பகுதியிலே. அவன், அதன் பின், அலுவலகம் வேறு எங்கும் தென் படாததால் மதி அவளுக்கு நம்பிக்கை மிக்க நண்பர்களை வைத்து அவரவர் செய்யவேண்டியவற்றை மட்டும் கூறி அந்த பகுதியை நோட்டமிடுமாறு கூறி இருந்தாள்.

 

அதே இரண்டு நாள் ஆதித்யன் மற்றும் அகிலன் அவரவர் பாதையில் முன்னேறி இருந்தனர்.

 

ஆதித்யன் பழனிவேல் மற்றும் விஜய ராஜசேகிரன் என்ற பெயர்களை பச்சை நிற குறியீட்டுக்கு மாற்றியவன் அலமேலு என்ற பெயரை மட்டும் சிவப்பு நிறத்தில் குறித்துவிட்டு அவன் மனதினில், “இன்னைக்கு… நான் இதுக்கான விடைய கண்டுபிடிச்சிடுவேன்” என்று கூறி குருஞ்சிரிப்பை தவழவிட்டான் அவன் கடை இதழில்.

 

ஆதித்யன் சிரிப்பை நிம்மதியுடன் தவழவிட்ட அதே நேரம் அங்கே செழியன் அலமேலுவின் இடத்தில் ஒரு புகை படத்துடன் நுழைந்துக் கொண்டு இருந்தான்.

 

ஒரு ருபாய் நாணயத்தை விட பெரிய அளவு பொட்டு இட்டு, 40களில் இருந்த அலமேலு பார்வைக்கு சற்று முரடாகவே தெரிந்தார். செழியன், அலமேலுவிடம் தன்னை பொய்யான முகவரியோடு அறிமுகபடுத்திக்கொண்டு அவன் வந்த காரியத்தை விளக்கலானான்.

 

“என்னோட பேரு சரண், என்கிட்டே ஒரு பொண்ணு ரொம்ப வாலாட்டிட்டா…அவள, நான் உண்டு இல்லன்னு நிச்சயம் பண்ணனும், அதுக்கு உங்க உதவி எனக்கு வேணும்… பணம் முக்கியம் இல்ல, அந்த பொண்ண எப்படியாச்சும் தூக்கிட்டு வரணும். முடியுமா? … எனக்கு இத பசங்கள வச்சு பண்ணலாம்னு யோசிச்சேன்…ஆனா எனக்கு அதுபோல எந்த காண்டாக்ட்டும் இல்ல, அதான் உங்கள பத்தி கேள்விப்பட்டு வந்தேன்…இது அந்த பொண்ணோட படம்” என்று கூறி நிரல்யா வரைந்துக் கொடுத்திருந்த படத்தை ஒரு புகைப்படம்போல மாற்றி அதை எடுத்து காமிக்க அதை பார்த்த அலமேலுவோ, “பொண்ணு நல்லாத்தான் இருக்கு தம்பி, ஆனா நீ தப்பான இடத்துக்கு வந்திட்டியே…. நான் இங்க இந்தமாதி சின்ன பொண்ணுங்கள கடத்திட்டு வர ஆள் நான் இல்ல, இங்க தொழில் பண்றே.. ஆனா கடத்தல் இல்ல…. அதோட இங்க இருக்க எல்லாரும் வழி தவறி போனவங்க, குடும்ப கஷ்டம் கைவிடப்பட்டவங்குனு தான்… அவுங்கள வச்சு தான் தொழில் ஓடுது… குடும்ப பொம்பளைங்க மேல இந்த அலமேலு கை வைக்கமாட்டா… அதுலயும் இது சின்ன பொன்னா இருக்குது… போ பா… மறுபடியும் இந்தமாதி இங்க வந்து நிக்காத…” என்று கூறிவிட்டு மேலும், “டே, இந்த பையன வெளில போக சொல்லுங்கட.. வந்துட்டானுங்க கடத்தல் பண்ணு கொலை பண்ணுனு தொழிலே மாத்திருவாங்கபோலயே..” என்று கூறிக்கொண்டு அவர் எழுந்து சென்றுவிட செழியனும் அவ்விடம் விட்டு அகல அதே நேரம் அந்த தெருமுனையில் இருந்து அகிலன், செழியன் வருவதை வண்டிக்குள் இருந்து குறித்துக்கொண்டான்.

 

செழியன் போன 10 நிமிடங்களில் மாற்று உடுப்பில் இருந்த காவல்காரர் ஒருவர் அந்த அலமேலுவின் இடத்திலிருந்து வெளியில் வந்து மறைவாக நிறுத்தபட்டிருந்த அகிலனின் காரில் ஏறிக்கொள்ள கார் வேகம் பிடித்தது.

 

அந்த காவல் காரர் அகிலனிடம் வண்டியில் செல்லும்போதே, அங்கே இருக்கும் ஒரு பெண்ணிடம் வாடிக்கையாளராக உள் நுழைந்து, பணம் மூலமாக தகவல் கேட்டதாகவும் அவர் கொண்டு சென்ற காணமல் போன பெண்கள் புகைபடங்களில், எந்த பெண்ணும் இந்த இடத்தில் அந்த பெண் பார்க்கவில்லை என்றும், அதோடு அவளுக்கு தெரிந்து அலமேலு இது போல கடத்துவது இல்லை என்றும் கூறினதாக அவர் அகிலனிடம் கூறவே அகிலன் சிந்தனை வையப்பட்டன்.

 

இந்த வழக்குக்காக ஏகபத்தினி விரதனான அவர் இவ்விடம் சென்றதுக்கு மனதார அவரிடம் நன்றி கூறிய அகிலன் அவரிடம் மேலும் ஒரு சில கேள்விகளை கேட்டு விட்டு அவரை காவல் நிலையத்தில் இறக்கி விட்டு நேராக ஆதித்யனை தேடி சென்றான்.

 

காரணம் அகிலன் அலமேலுவின் கைபேசியை கண்காணித்ததில் அந்த தண்டாயுதபாணியின் எண்ணிற்கு தகவல் போய் இருப்பதும், மேலும் ஆதித்யன் அவன் அறையில் இந்த அலமேலுவின் பெயரை குறித்து வைத்திருப்பதும், அதோடு இன்று ஆதித்யனின் அலுவலக ஆள் செழியன் இங்கு வந்து சென்றதும் என ஆத்தியனிடம் பேச கேட்க நிறைய விஷயங்கள் அகிலனுக்கு இருந்தன.

 

அகிலன் ஆதித்யனை நோக்கி சென்று கொண்டிருந்த அதே நேரம், மதியின் திட்டம் நிறைவேறும் தருணம் அங்கே நெருங்கி கொண்டு இருந்தது.

 

கீதா பருதாவுடன் கையை பிசைந்துக்கொண்டு நிற்க சற்று கண்மறைவான தொலைவில் சினேகன் மதி இன்னும் அவர்களுக்கு நம்பிக்கையான 5 நண்பர்கள் ஆங்காங்கே மறைந்து நிற்க, தொலைவினில் விஜய ராஜசேகிரன் பதுங்கி பதுங்கி அவன் வீட்டு பின் வாசல் வழி வந்துக்கொண்டு இருந்தான்.

 

அவன் கடக்கும் போது விசும்பல் சப்தத்துடன் கீதா அழுகையை தொடங்க, அந்த சப்த்தம் கேட்டு ஒரு நிமிடம் தயங்கிய விஜய் மீண்டும் நடையில் வேகம் கூட்ட இப்பொழுது கீதா அவனருகில் வந்து, “அண்ணா… ப்ளீஸ் ஒரு ஒரே ஒரு போன் பண்ணனும் எங்க வீட்டுக்கு… தயவு பண்ணி” என்று கெஞ்சி மன்றாடும் குரலில் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவன் ஆள் அரவம் அற்று அந்த இடம் இருக்க அவளிடம், “நீ யாரு எதுக்கு இங்க வந்த” என்று கேட்க அவளோ, “இல்ல அண்ணா… என்ன 2 பேரு குடுச்சிட்டு தொரத்திட்டு வந்தாங்க.. தப்பிச்சுட்டேன்… ஆனா போக வழி தெரியல… ப்ளீஸ் எங்க வீட்டுக்கு ஒரு கால்… ஒரே ஒரு கால்…” என்று அழுகையின் ஊடே கேட்க அவன் அவனது கைபேசி எடுத்துக்குடுத்தான்.

 

அதை வாங்கி கொண்டு மறுபுறம் திரும்பி கைபேசி பயன்படுத்துவதுபோல பாவலாக்காட்டி கண் இமைக்கும் நேரத்தில் அந்த கைபேசியின் மின்கல அடுக்கை (மொபைல் பேட்டரி) நீக்கி விட்டு அவனிடம் அப்பாவியாக திரும்பி, “அண்ணா, இது ஆன் ஆகல, சார்ஜ் இல்லன்னு நினைக்கிறே.. ப்ளீஸ் வேற வழி இருக்கா… இப்ப நான் என் வாப்பாட்ட சொல்லணும்” என்று கதறியவள், நினைவு வந்தவளாக,”ஹா உங்ககிட்ட வேற போன் எதுவும் இருக்கா… ப்ளீஸ் அண்ணா” என்று அவள் கெஞ்ச தொடங்க, அதே சமயம் அவனை நகரவிடாமலும் அவன் கூடவே நடந்துக் கொண்டே கேட்க அவனோ கைபேசி ஆன் ஆகாததை பார்த்துவிட்டு வேறு வழி இல்லாததால் அவனிடம் ரகசியமாய் வைத்திருந்த போனை கொடுக்க அதில் இருந்து மதிக்கு அழைத்துவிட்டு, அழைத்த எண்னை அழித்துவிட்டும் வைத்துவிட்டாள்.

 

 

“ரொம்ப தாங்க்ஸ் அண்ணா… நான் உங்க கூட தெரு முனை வர வறேன்.. கொஞ்சம் பயமா இருக்கு.. இதோ உங்க மொபைல், எங்க அந்த ஆன் ஆகாத மொபைல் கொடுங்க.. நான் ஒருமுறை முயற்சி செய்யுறேன்” என்று அவன் நம்பு படி கூற, அவன் தலைமறைவாய் செல்லும் பதட்டத்தில் அவளிடம் யோசிக்காமல் அவள் கேட்டதை கொடுத்துவிட்டு அக்கம் பக்கம் பார்த்து நடக்க, அதற்குள் அவள் மின்கல அடுக்கை பொருத்தி கைபேசியை அவனிடமே உயிர்பிக்க முடியவில்லை என்று கூறி குடுத்துவிட்டு தெருமுனை வரவும் அவளது அண்ணன் என்று ஒருவன் வந்து அழைத்து செல்ல இருவரும் விஜய்க்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர்.

 

 

ஆனால் இவை எதுவும் அவன் பெரிது படுத்தாமல், யார்க்கும் தெரியாமல் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு இரண்டு தெருக்கள் தள்ளி நின்ற வண்டியில் ஏறி மாயமானான்.

 

உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி கூறிய மதி, சிநேகனிடம் அந்த எண்னை குடுத்து அது யார் யாருடன் தொடர்பில் இருந்து உள்ளது என்னும் தகவலை கண்டறிய சொல்ல சினேகன் சரி என்பதன் அறிகுறியாய் தலை அசைத்து அதை பெற்றுக்கொண்டு காரியத்தில் இறங்கினான்.

 

அதே நேரம் நடந்த நிகழ்வுகளை, மதி கை ஆண்ட முறையை ஆதிதயனிடம் சொல்லவும் அவன் தவறவில்லை. நடந்ததை கேட்ட ஆதித்யன் தன் மனைவிக்கு மனதினுள் ஒரு சபாஷ் போட்டுக்கொண்டு மெலிதாக சிரிப்பை உதிர்க்க அதில் அவனுக்கு மனையாளை குறித்த பெருமிதம் இருந்தது.

 

அவன் இதழ் மெலிதாக பிரிந்த அதே நேரம், அகிலன் ஆதித்யனின் அறையில் நுழைந்தான் பல கேள்விகளோடு……

 

ஆதித்யன் அகிலனை கண்டநொடி அவனை வரவேற்க, அகிலனோ, “மச்சான்.. என்ன தான் டா நடக்குது” என்று ஆரம்பித்து அவனுக்கு இருந்த சந்தேகங்களை அடுக்கடுக்காக ஆதித்யன் மீது உள்ள நம்பிக்கையில் கேட்க, ஆதித்யனோ அமைதியாகவும் நிர்மலாமாகவும் அவன் கேள்விகளை உள்வாங்கி கொண்டு இருந்தான்.

 

 

“இரு இரு… இப்ப உனக்கு என்ன தெரியனும்… அத நான் எல்லாம் சொல்றேன்.. காரணம் இப்ப எல்லாமே சொல்ற நேரம் வந்துருச்சு… பொறுமையா கேளு, மதி பாக்குற வழக்கு 48 பேர் காணமல் போனது, என்னோட யூகம் சரினா, நீயும் அத பத்தி விசாரிக்க தான் வந்துருக்க. மதி இதுல தலையிட கூடாதுன்னு அவள 3 முறை தாக்க முயற்சி பண்ணி இருக்காங்க…. அது மட்டும் இல்லாம 2 பேரு தண்டாயுதபாணி அப்புறம் வீரமாறன் இவுங்க இந்த வீட்டுக்கு முன்னும் பின்னும் காவல் இருக்காங்க…. இது நான் உங்கிட்ட    முன்னாடியே சொல்லி இருக்கேன்” என்று கூற அகிலனும் ஆமாம் எபதற்கு அறிகுறியாய் தலை அசைத்தான்.  

 

அதன் பின் ஆதித்யனே தொடர்ந்து, “ஹ்ம்ம் அவுங்கள நான் உன் உதவியோடு ட்ராக் பண்ணின போது, பழனிவேல், அலமேலு, விஜய ராஜசேகிரன்… இப்படி 3 பேருக்கூட அவுங்க தொடர்புல இருக்குறது தெரிய வந்தது….அதுல நான் அந்த 3 பேரோட மொபைல் நம்பரும் யாரு யாருகூட தொடர்புல இருக்குதுன்னு பார்க்கும் போது… பழனி வேல், ஆஷிக் அப்படின்னு ஒரு நம்பர் கூட காண்டாக்ட்ல இருந்து வரார்… அந்த அலமேலும், விஜய ராஜேசேகர் அப்படிகிறவனும் பெருசா சொல்றமாதி யார்கூடயும் தொடர்புல இல்ல…இந்த நிலைமைல தான் எனக்கு ஒரு ஆதாரம் கிடைச்சது ” என்று கூறியவன் மதி அந்த ஆட்டோ ஓட்டுனர் அன்று நடந்த சந்திப்பு இவ்வற்றை விளக்கி விட்டு மேலும் தொடர்ந்தான். 

 

“இதுக்கு அப்புறம்… என்னோட கவனம் அலமேலுகிட்ட திரும்புச்சு…. இத பாத்தியா, இதுல இருக்க படம் காணமல் போன பொண்ணுங்கள ஒரு பெண்ணோட படம்… ஒரு வேலை இதுல அலமேலுக்கு சம்பந்தம் இருக்குமான்னு தெருஞ்சுக்க தான் செழியன் மூலமா நான் ஒரு சின்ன கேம் ப்ளே பண்ணினே… அதுல இருந்து செழியன் சொன்ன தகவல் படி அலமேலுக்கு இதுல சம்பந்தம் இல்ல… ஆனா நான் முழுசா ஒரு முடிவுக்கு வரணும்னா… இப்ப நீ சொல்லு, உன் ஸ்டைல்ல விசாரிச்சியே, அதோட முடிவு என்ன? …என்ன அப்படி பார்குற, உன்ன பார்த்ததா செழியன் சொன்னான்” என்று கூறி ஒரு சிரிப்போடு அகிலனின் பதிலுக்கு காத்திருந்தான் ஆதித்யன்.

 

நண்பனின் நுண்ணிய அறிவை கண்டு வியந்த அகிலன் ஒரு சில நொடிகளில் சுதாரித்து வியப்பை ஓரம் கட்டிவிட்டு ஆதித்யனிடம் அவன் அறிந்ததையும் அலமேலுவிடம் அந்த பெண்கள் வரவில்லை என்பதையும் கூறினான். அதை கேட்டுக்கொண்ட ஆதித்யன் அவன் அறையை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து விட்டு ஏதோ பேச திரும்பி சற்று நிதானித்து அவனது நெற்றியை அவன் கைகளால் அழுந்த தேய்த்துக் கொண்டான்.

 

“ஹ்ம்ம் அப்படினா… இதுக்கெல்லாம் பின்னாடி இருக்குறவன் ஆஷிக்” என்று கூறி அவனது பெயரை அந்த வெள்ளை பலகையில் கருப்பு நிறம் கொண்டு எழுதினான்.

 

“என்ன சொல்ற?, அது எப்படி அவ்ளோ உறுதியா… ஏன்னா அந்த விஜய ராஜசேகிரன் அவன் இன்னும் பாக்கி இருக்குறானே….” என்று கூற அதற்கு பதிலாக ஆதித்யன் சொன்ன பதிலில் அகிலன் வியப்பின் எல்லையை கடந்தான்.