Advertisement
முகிழ் – 15
மதி மனதில் தீர்கமான முடிவுகளை எடுத்த பிறகு நிலாவோடு ஓரளவு ஒன்றி பேச்சில் கவனமானாள். அதன் பின் அந்த வீட்டை சுற்றி பார்க்க மதியை நிலா அழைத்துக் கொண்டு செல்ல பெரியவர்கள் ஓய்வு எடுக்க சென்றார்கள்.
ஆதியின் அன்னை கீழ் தளத்திலே வாசம் செய்ய அதற்கு அருகில் உள்ள பெட்ரூமில் மதியின் பெற்றோர்கள் தங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலே இருந்த 4 பெட்ரூமில் ஒன்று நிலாவின் அறை ஆகும் அது நல்ல விசலாமாக இருந்தது. அதை அவள், அழகாகவும் வைத்திருந்தாள். மற்ற 2 அறைகள் நிலாவின் அறையை விட கொஞ்சம் சிறியது, ஆனாலும் அதில் எந்த வசதிக்கும் குறைவில்லை.
கடைசியாக மதியை அழைத்து சென்ற அறை ஆதியின் அறை. அவன் அறையில் கால்வைப்பதே அவளுக்கு இனம் புரியா மகிழ்ச்சி அளித்தது. பெரிய அறை, அதில் இடப்பக்கமாக மட்டும் ஒரு சிறிய அறை இருந்தது, அதை பார்த்தவுடனே அது அவனின் அலுவல் சம்மதம்மான அறை என்று புரிந்துக் கொண்டாள். வல பக்கமாக குளியலறை. அந்த படுக்கை அறையில் இருந்து நேராக பார்த்தால், அவள் வீட்டின் வெளியிலிருந்து பார்த்த சாளரம் இருந்தது.
அந்த சாளரத்திற்கு அவள் கால்கள் அவள் அனுமதி இன்றியே நடந்து செல்ல அங்கு டெரஷ் கார்டன் முறையில் புல்வெளியும் பூக்களும் அமைக்கபட்டிருந்தது. அதன் நடுவே இருந்த பெரிய மரஊஞ்சலும் எதிரே தெரிந்த அந்த பெரிய அலை கடலும் மதியின் கால்களை அங்கே கட்டிப்போட்டது.
அந்த உஞ்சலில் தானும் தன்னுடைய க்ரிஷ்ணவும் அமர்ந்து ஆடுவதை போல அவள் கற்பனை ஓட, அந்த கற்பனையை கலைக்குமாறு மதியின் தந்தை குரல் கேட்டது.
சுய நினைவிற்கு வந்த மதி நிலாவின் கேலி பார்வையில் முகம் சிவந்தாள்.
“என்ன மதி, ஆதி அத்தான் கூட டூயட் அஹ? ஹ? சொல்லு சொல்லு… என்கிட்டே என்ன வெட்கம்… ப்ளீஸ் சொல்லு மதி…. “என்று சீண்ட மதியோ அவசரமாக, “இல்லை இல்லை அதலாம் இல்ல நிலா, நான் இந்த கடலை ரசிச்சுட்டு இருந்தே… கடல்னா எனக்கு ரொம்ப இஷ்டம்… அதுக்குள்ள நீ என்ன….டானா என்ன…. என்ன……மோ பேசுற….” என்று கூறி மழுப்பிவிட்டு தந்தை அழைப்பதாக கூறி நிலாவையும் இழுத்து சென்றாள்.
அவர்கள் இறங்கி வரவும், அங்கே பெரியவர்கள் சூழ ஆதியும் வந்திருக்க அருகினில் சிநேகனும் இருந்தான். ஆதியை பார்வையால் வருடியவள் சிநேகனிடம் புன்னைகைத்தாள், “வா சினேகன், எப்ப வந்த” என்று கேட்க சிவகாமி அம்மாளோ நிலாவிடம் அனைவருக்கும் பருக குளிர் மோர் கொண்டு வருமார கூற வேகமாக அதை தடுத்த மதி, “நான் எடுத்துட்டு வரேன் அத்தை” என்று ஓடினாள்.
மின்னல் வேகத்தில் சென்று வந்தவள் அங்கிருந்த வேலை ஆட்கள் குடுத்த மோரை அனைவரிடமும் கொடுக்க சிவகாமி அம்மாளோ அவளின் உடல் நலம் தேரும் வரை ஓய்வெடுத்து கொள்ளுமாறு வலியுறுத்த, மதியோ இல்லை இப்பொழுது அவள் நன்றாக இருப்பதாகவே கூறினாள்.
இதை எல்லாம் அமைதியுடன் சிநேகனும் மதியின் பெற்றோர்களும் பார்த்துகொண்டிருந்தனர். மதிக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என அன்றே கூறியிருந்தாள், ஆனால் இன்று அவள் ஓரளவு சமாதனம் அடைந்ததாகவும் தெரிகிறது, அவள் திருமணத்தை ஏற்க ஆரம்பித்துவிட்டாளா? இல்லை அன்னைக்கு உதவிய காரணத்தினால் மௌனம் காக்கின்றாளா? என்பதை அவர்களால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.
சினேகன் ஆதியிடம், “ஆதி சார், மதிட்ட ஆபீஸ் விஷயமா சதா சார் (Chief Editor) கொஞ்சம் டீடைல்ஸ் சொல்ல சொன்னாரு அத சொல்லிட்டு போக தான் வந்தேன்…. மேலும் மதி இன்னும் கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும்னு எனக்கு தோனுது, நீங்க என்ன சொல்றீங்க ” என்று கேட்க மதியோ “இதை ஏன் இவன் ஆதியிடம் பேசுகிறான் என்னிடம் தானே பேச வேண்டும்” என்று மனதிற்குள் நினைத்தாள்.
அதுவே ஆதிக்கும் தோன்றியது போல, உடனே அவன் சிநேகனிடம், “சினேகன் நீங்க இது எல்லாம் மதி கூட டிஸ்கஸ் பண்ணுங்க, நான் எதுவும் சொல்லுவேன்னு நீங்க என்கிட்ட சொல்றது புரியிது… பட் இது மதியோட கரீயர், ஷி ஹாஸ் டூ டேக் டிசிசன்.” என்று முடிக்க மதிக்கு சொத்தென்று ஆனது.
அவன் அவளின் விருப்பத்தற்கு முக்கியத்துவம் குடுப்பது போல இருந்தாலும், தன் மீது ஒரு அக்கறை இல்லையோ என்று மதியின் மனதிற்கு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
சினேகனே தான் இங்கு வந்ததிற்கான காரணம் பற்றி கூறலானான். “மதி நம்ம சதா சார் கிட்ட நடந்தத சொன்னேன், அவரு உன்கிட்ட பேசனும்னு சொன்னாரு, அதோட உன்ன இந்த ப்ராஜெக்ட் ல இருந்து பிரேக் எடுக்க சொன்னாரு, அத நான் ஹான்டில் பண்றே மதி, இனி மறுபடியும் உனக்கு ஒரு ஆபத்து வரவேணாம்னு தோனுது” என்று கூறி முடிக்க, மதியோ சற்று யோசித்துவிட்டு “இல்லை சினேகன் என்னால அப்படி விடமுடியாது, இதுவரை நான் சேகரிச்ச விஷயங்கல வச்சு பாதிக்கப் பட்டவங்களுக்கு எப்படியும் உதவி பண்ணனும், நான் எடுத்த காரியத்தை, பாதியில் நிச்சயம் விடமுடியாது…. வேணும்னா சதா சார் ட்ட சொல்லிட்டு 2 பேரும் வொர்க் பண்ணலாம், இதுக்கு மேல என்ன சமாதனம் படுத்த முயற்சி பண்ணாத” என்று முடித்தாள்.
அவளின் பதிலிக்கு ஆதி மௌனமாகவும், அவளின் பெற்றோர் அவளின் பிடிவாதம் அறிந்து அமைதியாகவும், நிலா பார்வையாளராகவும், சிவகாமி அம்மாள் மட்டும் மதியிடம், “மதி மா, நீ இப்படி சொல்றது எல்லாம் சரி தான், ஆனா எல்லாத்தவிடவும் நீ ரொம்ப முக்கியம், அன்னைக்கு நடந்தது என் கண்ணுலயே நிக்கிது, சரி முதல்ல நீ 2 வாரம் விடுப்பு சொல்லிடு, மற்ற தகவல் சினேகன் தம்பிட்ட சொல்லு, எதுனாலும் 2 வாரம் க்கு அப்புறம் முடிவு எடு, இந்த 2 வார விடுப்ப உன்னோட கல்யாணத்துக்கு எடுத்ததா நினச்சுக்கோ” என்று மென்மையாக கூறினார்.
அவரின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மதியை கட்டிப்போட அவளும் அமைதியாக, “சரி அத்தை அதுபோலவே செய்றேன்” என்ற மதியை அவளின் பெற்றோர்கள் விநோதமாக பார்த்தனர்.
மேலும் சிவகாமி அம்மாளிடம், “அத்தை நான் இந்த கேஸ் பத்தி தகவல்கள சிநேகனிடம் சொல்லிவிட்டு வரேன், ஆனா பாதிக்க பட்டவங்கள காப்பாத்தனும், அதுக்கு நீதியும் கிடைக்கணும் அதுனால இதுல பின்வாங்க முடியாது, ஆனா 2 வாரத்துக்கு நான் எங்கயும் போகல, இந்த கேஸ் முடிச்சதும் நீங்க என்ன சொல்றீங்களோ அதையே நான் செய்றேன்” என்று மதி கூற இம்முறை தலை ஆட்டுவது சிவகாமி அம்மாளின் முறையாக இருந்தது.
அதற்குள் மருமகள் சொல்வதை மாமியாரும், மாமியார் சொல்வதை மருமகளும் கேட்கும் அதிசயம் இங்கே மட்டும் தான் நடக்குது என சினேகன் மனதினுள் நினைக்க இளமாறன் வாய்விட்டே சொன்னார் அதை.
அங்கு ஒரு மெல்லிய சிரிப்பலை தோன்றி மறைந்தது.
தோட்டத்திற்கு சென்று, சிநேகனிடம் அனைத்தும் கூறாமல், ஓரளவு தகவல்களை குடுத்தவள் மேலும் அவனுடன் சிறிது நேரம் பேசிகொண்டிருந்தாள். அப்போது அன்று தந்தை ஏன் அப்படி கூறினார், 2 முறை தன்னை ஆதி காப்பற்றியதாக என்று மனதில் தோன்ற அதை சிநேகனிடம் கேட்டாள்.
இந்த கேள்வியை எதிர்ப்பார்க்காத சினேகன் மனதினுள், “இந்த கல்யாணம் இவளுக்கு பிடிச்சிருக்கா? இல்லையான்னு? இன்னும் நமக்கு சரிவர தெரியவில்லை, நாம தான் மறைமுகமா ஆதியோட அம்மாகிட்ட ஹாஸ்பிட்டல்ல வச்சு இந்நேரம் மதிக்கு ஒரு முறை பையன் இருந்தா கல்யாணம் பண்ணிருக்கலாம் என்று எடுத்து குடுத்ததையும், மதியின் அப்பாவிற்கு ஆதியை மருமகனாக்குவது பரம திருப்தி என்றாலும் மதியின் விருப்பம் எண்ணி ஒரு நொடி தயங்கிய மதியின் தந்தையிடம் இதுக்கு முன்பும் மதிக்கு பிரச்சனை 2 முறை வந்த போது ஆதி சார் தான் காப்பாத்தினாரு, கண்டிப்பா மதிக்கு அவர பிடிக்கும் தான்….. அப்படி இல்லாட்டி கூட நல்ல ஒபினியன் நிச்சயம் இருக்கும்… எந்த பிரச்சனையும் வராது பா, நம்ம கல்யாணம் பண்ணி வைக்கலாம் இப்போ அம்மாவோட ஆப்ரேஷன் ரொம்ப முக்கியம்னு இரண்டு பக்கமும் பேசி கல்யாணம் செய்ய வச்சது தெரிஞ்ச என்ன சொல்லுவான்னு தெரியலையே.
ஆனா நான் ஒன்னும் பொய்யும் சொல்லலியே… அன்னைக்கு அந்த மெசேஜ் ல கூட 2 தடவ காப்பாத்திட்டே, இனி கவனமா இருங்கன்னு ஆதி சார் தான் சொல்லி இருந்தாரே… அப்போ ஆதி சார மதிக்கு பிடிக்காமலா போகும்? அதே போல ஆதி சாரும் அன்னைக்கு மதியை வண்டிக்குள்ள இழுத்து போட்டவன எப்படி அடிச்சாரு, நிச்சயம் இவருனால மட்டும் தான் மதியை நல்லா பாத்துக்க முடியும்
என்ன பொருத்தவர ஆதி சார் ரொம்ப நல்லவரு, மதியோட சந்தோசம் எனக்கு ரொம்ப முக்கியம், ஆதி சார கல்யாணம் பண்ணிகிட்டா அவ நிச்சயமா நல்லா இருப்பா, அதுனால தான் இப்படி செஞ்சேன், இது எல்லாம் அந்த மந்திக்கு புரியவா போகுது… நான் தாணு தெருஞ்சா என்ன கொத்து பொரோட்டா போட்டாலும் போற்றுவா இவளுக்கு மதினு வச்சத விட மந்தினு வச்சுருந்தா ரொம்பவே பொருத்தமா இருந்துருகும்ல…டே சினேகன் உன்னோட அறிவே அறிவுடா.
சொந்த காசுல சூனியம் வச்சுகிறதபோல இந்த மந்திக்கிட்ட வாலெண்டியரா மாட்ட நான் என்ன மடயனா சமாளி சமாளி” என்று மனதிற்குள் எண்ணமிட்டு கொண்டிருந்தான்.
அவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக மதி, “என்ன? நான் பாட்டுக்க கேட்டுட்டு இருக்கே… நீ என்னடானா ஏதோ மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருக்க, என்ன மேட்டரு? என்ட எதுவும் மறைக்கிரியா? சினேகன் சொல்லு” என்று கேட்க உடனே சுதாரித்தவன், “ஒய் அன்னைக்கு தான் உன் செல்லுக்கு மெசேஜ் வந்ததுல “AGC” ல இருந்து உன்ன கவனமா இருக்க சொல்லி, அது ஆதி சார் அனுப்பியதுன்னு எனக்கு தெரியும், அத தான் அப்பாகிட்ட சொன்னேன், இதுல மைண்ட் வாய்ஸ்ல பேசலாம் ஒண்ணுமில்ல, பெரிய சி.ஐடினு நினைப்பா உனக்கு? போ மா போய் வேலயபாரு” என்று கூறிவிட்டு அவன் விறு விறுவென்று செல்ல மதி சினேகன் போகின்றதயே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ இவன் இனியன் அனுபின்ன மெசேஜ ஆதி அனுப்பினதா நினச்சுட்டானோ…?” என்று சிறிது நேரம் யோசித்தவள் பிறகு மனதினுள், “என் காதல முட்டாள் தனமா தொலைக்க தெருஞ்சேன், அத என்கிட்டே சேர்த்துட்ட சினேகன், உன்ன நான் கண்டிப்பா மறக்கமாட்டே” என்று மனதார அவனுக்கு நன்றி கூறிவிட்டு, “என்ன போக சொல்லிட்டு, இவன் போறான்…. லூசு தான் இவன்” என சத்தமாக முணுமுணுத்து விட்டு அங்கு இருந்து அகன்றாள்.
ஆனால் சினேகன் கூறியதை கேட்டது மதி மட்டும் அல்ல அந்த பக்கம் தற்செயலாக வந்த ஆதியும் தான். அங்கிருந்து மதி சென்று விட்டாள். ஆனால் ஆதிக்கோ ஒன்றுமே புரியவில்லை… “நான் எப்பொழுது அவளுக்கு மெசேஜ் அனுபினேன்? அதுவும் 2 முறை…இதற்கு அந்த மதியும் எதுவும் மறுத்து சொல்லவில்லையே?” என்று பலவாறாக எண்ணமிட்டவன் இதற்கு நிச்சயம் விடை காண வேண்டுமென முடிவெடுத்தான்.
அதன் பின் சினேகன் சென்றுவிட, ஆதி அவன் அலுவல் அறையில் முடங்கிவிட, நிலாவும் மதியும் தோட்டத்தில் உலா வந்தனர்.
பெரியவர்களோ, ஆதி மதி திருமணம் முடிந்து 10 நாட்கள் மேலாகியும் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசிகொள்வதால் அதற்கு ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவெடுத்தனர்.
அதற்கு தீர்வாக, சிவகாமி அம்மாள், மதியை இன்றிலிருந்தே ஆதியின் அறையில் தங்கவைக்க முடிவெடுத்தார். ஒரே அறையில் இருக்கும் பொழுது நிச்சயம் பேசி கொள்ள வாய்ப்புள்ளது மேலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் உதவும், மெல்ல அவர்கள் வாழ்க்கை பயணத்தை தொடரட்டும் என தனது கருத்தை தெரிவிக்க இளமாறன்னும் மதியழகியும் கூட அதுவே சரி என்பதாய் தலை அசைத்தனர்.
அதன் பின் ஆதியிடம் சிவகாமி அம்மாளும், மதியிடம் மதியழகியும் வாழ்கையின் நிதர்சனத்தை மறைமுகமாக ஓரிரு வார்த்தைகளில் கூற ஆதி அமைதியாக இருக்க, மதி பூம் பூம் மாடு போல தலையை உருட்டி வைத்தாள்.
இதுவரை இளம் நீல நிற பட்டு உடுத்தி இருந்த வான தேவதையோ, சூரியன் மறைய, கருநீல நிற புடவைக்கு மாறியிருந்தாள்.
அவர்கள் திருமணத்தில் தூவபடாத அச்சதைக்கு பதிலாக அந்த அழகிய இரவில் தாரகைகளே அச்சதையாக தூவப்பட்டது போல நக்ஷத்திரங்கள் ஜொலித்தன.
அழகிய மென் பருத்தி உடுத்தி கொடி இடை அசைய தன் காதல் கணவனின் அறைக்குள் செல்ல மதியின் மனதில் நிலை கொள்ளா சந்தோசம். இன்று அவன் நிச்சயம் அவளை மனைவியாக ஏற்க போவது இல்லைதான். ஆனாலும் அவன் அருகில் இருப்பதே சுகம் என்று எண்ணியவள் விரைவில் அவள் காதலை புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அடி எடுத்துவைத்தாள்.
இளம் தென்றல் அவள்
இடை தீண்ட
கதை பேசுகின்றது குடைஜிமிக்கி
அவள் காதோரம்
மல்லிகை மலர்ந்தாடி
அவள் தோள் சரிய
பெண்ணவள்
வெண் பட்டுடுத்தி
அண்ண நடை நடகின்றாள்
அவனின் அறை நோக்கி
ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு, ஓரிரு வார்தைகளாயினும் பேசமாட்டானோ என்ற ஏக்கத்தில் மதி அங்கு செல்ல வெற்று அறையே அவளை வரவேற்தது. அங்கும் இங்கும் தன் கருவிழியை சுழலவிட்டவள் அவன் சாளரத்தின் ஓரத்தில் நின்று இருக்க, நிலவொளியில் அது வரிவடிவமாக தெரிந்தது.
அவள் அரவம் உணர்ந்து அவன் திரும்ப, அவனை பார்த்த பார்வையில் என்ன கண்டானோ மதியிடம், “மதி, இந்த திருமணம் இப்ப நான் எதிர்ப்பார்க்கல, என்னால இத இப்ப ஏத்துக்க முடியல…. அதே போல உனக்கும் இது பிடிக்கல அப்படின்னு உங்க அப்பாகிட்ட சொன்னத நான் கேட்டுட்டேன்… எனக்கு இப்ப நிறைய யோசிக்கணும்…. நீ… நீ… நீ உள்ள போய் படுத்துக்கோ… இப்ப எதுவும் நம்ம பேச வேணாம், அப்புறம் பார்த்துக்கலாம்” என்று அவளை பேச விடமால் பேசிமுடித்துவிட்டு அவ்வளவுதான் என்பது போல அவளுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டான்
இந்த வார்த்தைகள் அவள் ஓரளவு எதிர்ப்பார்த்தாள் தான் என்றாலும் அதை ஆதியின் வாய்மொழியாக கேட்க நேர்ந்த நொடி அவள் ரத்த நாளங்களுக்கு மடையிட்டது போல தோன்றிட்டு.
அதுவும் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று சொல்லும் போது தான் அடியோடு துவண்டாள் என்றே சொல்ல வேண்டும். ஆயினும் அவனே அறியாமல் “என்னால இத இப்ப ஏத்துக்க முடியல” என்று கூறியிருந்த வார்த்தைகளால் அவள் சற்று மனதை தேற்றிக் கொண்டாள். மனைவியை கை விடமாட்டான் என்பதை காலையில் நடந்த சம்பவம் கொண்டு அறிந்தாலும், அது மட்டும் போதாதே அவளுக்கு. அவனின் காதலும் வேண்டுமே, இல்லை அவளுக்கு அவனின் காதல் தான் வேண்டும், அவனின் காதல் மட்டும் தான் வேண்டும் என தெள்ளிய நீர்போல அவள் மனம் அவளுக்கு புரிய அவனுக்கு தனிமை குடுத்து இதை இந்த காதல் போராட்டத்தை காலத்தின் கையில் விட்டுவிட்டு அவனின் தோழியாக முன்னேற மனதை திடப்படுத்தினாள்.
மதி மனதை சற்று தேற்றிக் கொண்டு அந்த அறையில் ஒரு மூலையில் இருந்த சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள். மதி சிறிது நேரத்தில் கண் அயர, ஆதியின் மனபெட்டகம் திறக்க தொடங்கியது அவனின் நினைவலைகளில்.
“மதியின் பார்வையில் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு, ஆனால் அவளுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று கதறவும் செய்தாள், இப்பொழுது அன்னையிடம் சகஜமாக பேசவும் செய்கிறாள், சிநேகனிடம் ஏதோ மறைகின்றாள், அவளுக்கு வேறு யார் மெசேஜ் அனுப்பியது? அதை ஏன் நான் அனுப்பியதாக கூறும் பொழுது அவள் மௌனம் காத்தாள்? இனியனின் கண்களில் ஏன் இயலாமை, ஏமாற்றம் உணர்வு? ஆனால் இந்த மதி நிச்சயம் அந்த பெண் போல அல்ல, ஏனென்றால் இந்த வீட்டில் உள்ள தோட்டங்கள் கட்டியிருக்கும் முறை மட்டுமே ரசித்தாளே தவிர இந்த வீட்டின் செல்வ நிலையில் ஆர்வம் காட்டவில்லை, இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, என்னால் இந்த திடீர் திருமணத்தை ஏற்க முடியவில்லை என் மனதில் இருக்கும் காதலை என்னால் மறக்கவும் முடியவில்லை, இதற்கெல்லாம் தீர்வு என்ன? அதே சமயம், இவள் இந்த மதியிடம் ஏனோ… ஏனோ… என் உள்மனது ஏதோ உணருகின்றது… ஆனால் அதுவும் என்னவென்று புரியவில்லை…. ஆனால் என் மனதில் தான் அவள் இருகின்றாளே, இது எப்படி சாத்தியமாகும்… இதற்கெல்லாம் பதில் நிச்சயம் அறிய வேண்டும் “இப்படி பலவாறாக யோசித்தவன் இறுதியில் மதியின் பின்புலம் அறிய முடிவெடுத்தவன் கட்டிலில் சென்று அதே யோசைனையோடே கண்யர்ந்தான்…
அழகிய ரம்யமான பொழுதாக விடிந்தது மறுநாள் காலை மதிக்கு, நேற்று என்னதான் அவன் பேசி இருந்தாலும், திருமணமான பிறகு மற்றவரின் தூண்டுதல் இல்லாமலே அவனே மதியிடம் பேசி இருக்கான். பெரியவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக பேசுபவன் அவனே பேசவும் அதுவே மதிக்கு நிம்மதி அளித்தது. அவள் காதல் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக நிச்சயம் அவன் மனதை வெல்ல முடியுமென நம்பினாள்.
வெளிர் மஞ்சள் நிற புடவையில் மரகத பச்சை வேலைப்பாடு அமைந்திருக்க அதெற்கு ஏற்ப மரகத பச்சையில் ரவிக்கை அணிந்து புது மஞ்சள் கயிறு மார்பில் தவழ, நடுவகுட்டில் குங்குமம் மிளிர, அவள் பெரிய விழிகளை மையிட்டு தீட்டி, முகத்திற்கு ஏதும் ஒப்பனை இல்லாது தழைய தழைய புடவை அணித்து படி இறங்கி வருபவளை பார்க்க அவள் பெற்றோர்க்கும் சிவகாமி அம்மாளுக்கும், ஏன் நிலாவிற்கும் கூட தெவிட்ட வில்லை.
வந்தவளை நிலா சென்று கட்டி அனைத்து, “அய்யோ மதி, ரொம்ப அழகா இருக்க, அதுவும் இந்த புடவையில” என்று கூற மதியும் நிலாவிடம், “நீயும் தான் இந்த டிரஸ்ல அழகா இருக்க” என்று கூற நிலா தன்னை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள். மதிக்கு மதி கழண்டு விட்டதோ என்று கூட எண்ணினாள்.
ஏனெனில் நிலவோ அப்பொழுது தான் எழுந்து இரவு உடையுடன் நின்றிருந்தாள், கேசம் களைந்து அந்த களைந்த கேசத்தை ஒரு கிளிப்பில் அடிக்கி கையில் காபி உடன் நின்றவளை பார்த்து மதி கூறினாள் அதை அப்படியே நம்புவதற்கு நிலா என்ன முட்டாளா?
நிலாவின் பார்வையே அவளுக்கு அதை உணர்த்த மதி நிலாவிடம், “இல்ல நிலா டியர், நீ எப்பயுமே அழகுதான், அது தான் அப்படி சொன்னேன்” என்று கூற நிலா மதியின் அருகில் வந்து அவள் காதோரோம், “மதி, உன் நினைப்பு எங்கயோ இருக்கு போல, இன்னும் ஆதி அத்தான் கூட டான்ஸ் ஆடுதா?, நான் ஏன் கேட்டேனா காதல் வந்தா தான் பாக்குற எல்லாமே அழகா தெரியும்னு கேள்வி பட்டிருக்கேன் அதான் கேட்குறேன் ” என்று கண்ணடித்து ரகசியம் போல கூற மதி தான் வெக்கத்தை சமாளிக்க அரும்பாடு பட்டாள்.
அந்த வெக்கத்தை மீறியும் அப்பொழுது அவள் எண்ணத்தில் ஆதியின் வார்த்தைகள் நினைவு வர மெல்ல தன்னை சமன் செய்துக் கொண்டு நிச்சயம் க்ரிஷ்ணவின் காதலை பெறமுடியுமென மீண்டும் மீண்டும் சொல்லி சமன் செய்தாள்.
அதன் பின் அவர்கள் வழக்கப்படி வாழவந்த பெண் முதலில் இனிப்பு சமைக்க வேண்டுமென சிவகாமி அம்மாள் கூற மதி திரு திருவென முழித்துவிட்டு, “அத்தை எனக்கு பாயாசம் மட்டும் தான் செய்ய வரும், அதுவே செய்யட்டுமா? ப்ளீஸ் … ” என்று கேட்க அவரும் புன்னைகையுடனே, “சரி டா, நீ தண்ணில சக்கரை போட்டு தந்தாலும் போதும்” என்று கூற மதியின் அன்னையோ மனதினுள், “இவுங்களும் இவளுக்கு சப்போர்ட்டா அப்ப இவ (மதி) உருப்பட வழியே இல்ல” என்று நொந்துக் கொண்டார்.
மதி அடுக்களைக்குள் சென்று ஏதோ உருட்டி கொண்டு இருந்தாள் ஆதி எழுந்து குளித்து தயாராகி வரவும் அனைவரும் டைனிங் அறையில் கூடினர்.
அப்பொழுது மதியின் தந்தை தான் அக்காவிடம் மதுரை பற்றியும் வேலை மற்றும் மகளின் படிப்பு பற்றியும் கூறிக்கொண்டு இருந்தார். அவர் பேச்சின் நடுவே மதி படித்த கல்லூரி பெயர் வரவும் ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தான்.
இதை கேட்டுக்கொண்டே பாயசம் செய்வதில் இறங்கி இருந்த மதி, மனதினுள், “இந்த அப்பா ஏன் இப்படி கல்லூரி பற்றி எல்லாம் பேசவேண்டும் , நல்ல காலம் அவர் கொடைக்கானல் என்று வாய் திறவாத வரை சந்தோசம், ஏனெனில் அவள் கல்லூரி முதல்வர் தங்கள் பகுதி மாணவர்கள் கொடைக்கானல் பக்கம் போகவில்லை என்று கூறி இருந்தாரே, மேலும் எந்த ஒரு சிறு விஷயமும் க்ரிஷ்ணவிடம் அவள் சொன்னால் தான் சரியாக இருக்கும்” என்று மனதில் எண்ண அவள் சந்தோசத்திற்கு இந்த விசயத்தில் ஆயுள் குறைவு என்பது போல அடுத்த நொடியே அவர், “ஆமாம் அக்கா, நம்ம மதி பண்ணின ப்ராஜெக்ட் ரொம்ப நல்ல இருக்குனு அந்த பத்திரிக்கையிலே அவளுக்கு வேலை கூப்பிட்டு குடுத்தாங்க, ஏதோ மலைல இருக்கவங்கள பத்தி, கோடை….” என்று கூறி கொண்டு இருக்கும் போதே “அப்பா, ஒரு நிமிஷம்” என்ற அழைப்போடு மதி வெளிப்பட்டாள்.
வந்தவள் கொஞ்சம் தடுமாறி, “அப்பா நான்… நான் பாயாசம் செய்திட்டேன்… நீங்க என்கூட வந்து ருசி பாருங்களேன் ப்ளீஸ் அப்பா… “என்று ஏதோ சொல்லி அவரை இழுத்து சென்றாள்.
அவளின் தடுமாற்றம், மதி படித்த கல்லூரி, மதியின் தந்தை கோடை என்று ஆரம்பித்தது ஏன் கொடைகானாலாக இருக்க கூடாது என்ற கேள்வி இது எல்லாம் ஆதியின் மனதில் வலு பெற ஆரம்பித்தது. அவன் மனதினுள், “இவள் நிச்சயம் அவளின் தந்தையை பேசவிட விருப்பம் இல்லாமலே அழைத்து சென்று இருக்கிறாள், ஆனால் காரணம் என்ன” இப்படி யோசித்தவன் மதியை தன் விழிகளால் அலச ஆரம்பித்தான்.
தந்தையை அழைத்து சென்ற மதியிடம் அவர் பாயாசத்தை கேட்க ஒரு நிமிடம் முழித்தவள், “இதோ 2 மினுட்ஸ் பா… இப்ப தந்துறேன்… உங்களுக்கு தான் முதல்ல கொடுக்கணும்னு கூப்பிட்டு வந்தேன்” என்று கூறி அப்பாவியாக சிரித்தாள்.
அதற்குள் மதியின் அன்னை அங்கு வந்து அவர்க்கு இனிப்பு ஆகாது என்று கூறி மதியின் அப்பாவை அவர் வெளி கிளப்பினார். பாயசத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே அவரும் வெளியில் சென்றார்.
இந்த நிகழ்வுகளின் நடுவே சினேகன் ஒரு சில கோப்பை பற்றிய தகவல்களை மதி தராது போனாதால் அவளிடம் அதை கேட்க வந்தவனின் விழிகளில் பட்டது மதியை ஆதியின் பார்வை தீண்டிக்கொண்டிருந்ததை.
இதை பார்த்தவன், “ஆதி சார் மதிகிட்ட ஏதோ சொல்ல நினைக்கிறாரோ… இல்ல ஒரு வேலை இப்படி இருக்குமோ, அவருக்கு மதியை பிடிச்சுருச்சு போல… இல்லாட்டி ஏன் இப்படி பாக்கணும்? இந்த மந்தி தான் கல்யாணம் பிடிக்கலன்னு அன்னைகே சொல்லுச்சே, நம்ம கண்டிப்பா இதுல ஆதி சார் க்கு ஹெல்ப் பண்ணனுமே… அவரு மதிக்கிட்ட பேசுறதுக்கு நம்ம எப்படி உதவி செய்யலாம்” என யோசித்துக்கொண்டே வந்தவனுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
அதற்குள் அவனை பார்த்து விட்டு வீட்டினர் அவனை வரவேற்கவும் சினேகன் அவனிடம் பேசி விட்டு ஆதியை பார்க்க ஆழ்ந்த சிந்தனையிலிருந்த ஆதி அப்போது தான் சினேகனை கவனித்தான்.
சிநேகனிடம் புன்முகம் காட்டி அவனை வரவேற்றவனின் அருகில் சென்று சினேகன் அமர்ந்து தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான், “ஆதி சார் நீங்க ஏன் இப்படி மதியை பாக்குறீங்கன்னு தெரியும், அவகிட்ட பேசனும்னு நினைகிறீங்க..ஆனா எப்படி பேசனு தான் தெரியல…நான் சொல்வது சரிதானே?… நான் உங்களுக்கு எப்படியாச்சும் உதவனும்னு நினைக்கிறேன்… அதனால … என் வருங்கால மனைவிக்கு ஆசை ஆசையாய் ஒரு கவிதை எழுதிருக்கே… அது என்னோட கற்பனை வளத்தில உருவான கவிதை… நீங்க அதை மதிகிட்ட சொல்லி உங்க மனச மறைமுகமா சொல்லிடுங்க” என்று சினேகன் கூற முதலில் இவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் கவனித்த ஆதி பிறகு அவனை இவன் ஏன் இப்படி உளருகின்றான் என்னும் பாணியில் பார்த்து வைத்தான்.
அதை எதுவும் கவனிக்காமல் சிநேகனோ அவன் ஒரு காதலுக்கு அடித்தளமாக இருக்க போகிற தன்னுடைய கவிதையை எண்ணி பூரித்துக் கொண்டே, முகம் அறியா, வருங்கால மனைவியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுவிட்டு அதை ஆதியிடம் கூற தொடங்கி இருந்தான்.
உயர்ந்ததோ தென்னை
உயர்ந்ததோ தென்னை
நான் நினைத்ததோ உன்னை
நீ பார்த்து நடப்பதோ மண்ணை
நீ பார்த்து நடப்பதோ மண்ணை
நீ ஒரு அழகிய ஊத்துகுழி
வெண்ணை வெண்ணை வெண்ணை
என்று கவிதை வாசிப்பின் ஏற்ற இறக்கங்களோடு கண்ணும் கருத்தும்மாக கூறிவிட்டு ஆதியின் பதில்காக அவனின் முகம் பார்க்க, ஆதியோ இத்தனை நேரம் இருந்தா இறுக்கம் தளர்ந்து சினேகனை பார்த்து மனம்விட்டு சிரித்தான்.
அவன் சிரிப்பதை பார்த்து குழம்பிய சினேகன், “சார் ஏன் இப்ப இப்படி சிரிக்கிறீங்க” என்று கேட்க அதே சிரிப்புடனே ஆதியும், “ஒண்ணுமில்ல சினேகன், இந்த கவிதைய நான் சொன்னதும் நானும் மதியும் சேருவோம்னு நீங்க சொன்னீங்கள, அதான் அப்படி நடந்தா சந்தோசம்ல அதுக்காக தான் சிரிச்சே” என்று சிரித்துக் கொண்டே மழுப்பினான், ஆனாலும் ஆதியின் சிரிப்பு நின்றபாடில்லை. பிறகு சிநேகனிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்து தன் கைபேசி எடுத்துக் கொண்டு அகன்றான்.
ஆதித்யன், அவளின் ஆதித்யன் சிரித்து பல வருடங்களுக்கு பிறகு பார்கின்றாள் மதி. அந்த சிரிப்பு மெல்லிய மயிலிறகாக வருட அதை ரசித்தவள் மனதிற்குள் பதித்துக் கொண்டாள்.
பெரியவர்களும் கூட அவன் சிரிப்பை பார்த்து சந்தோசம் அடைந்தவர்கள், சிநேகனிடம் அவன் என்ன கூறினான் என்பதை கேட்க, சிநேகனோ மனதினுள், “இவரு எதுக்கு கெக்கபிக்கேன்னு சிரிச்சாருன்னு எனக்கே புரியல்ல, இவுங்ககிட்ட நான் என்ன சொல்றது? ஒருவேல நம்ம கவிதைய தான் கிண்டல் பண்ணி சிரிச்சிருப்பாரோ, அப்படி என்ன மோசமாவா இருக்குது…? நல்லா தானே எழுதிருக்கே” என்று குழம்பியவன், அவர்களிடம் கூற, முழிப்பதை தவிர சிநேகனிடம் வேறு பதில் இல்லாமல் போனது.
சிவகாமி அம்மாளோ மதியிடம், “மதி சினேகன் தம்பிக்கு பாயாசம் கொண்டு வா மா… முதல்ல இந்த புள்ள குடிக்கட்டும்” என்று கூற மதியும் பாயசத்தை அவனிடம் குடுத்தாள்.
அவள் சக்கரை போடபோகும் சமயம் தான் அவளின் தந்தை கொடைகானால் பேச்சை எடுக்கவும் சக்கரையே போடாமல் மறந்து அவனிடம் நீட்ட, சிநேகனோ வெகு ஆவலாக அவளிடம் இருந்து அந்த கிண்ணத்தை வாங்கினான்.
வாயில் வைத்தவன் சட்டென்ன மனதினுள், “அடி பாவி பாயசத்த கூட உப்புமா மதி சப்புன்னு குடுத்துருக்காளே…. இவளுக்கு உண்மையிலே பாயாசத்துல சக்கர போடணும்னு தெரியாதா? இல்ல எனக்குனு வேணும்னே கொடுக்கிறாளா? “என்று மனதினுள் புலம்பிக்கொண்டு இருக்க, மதியின் அன்னையோ, “என்னப்பா சினேகா, பாயாசம் எப்படி இருக்கு” என்று கேட்க அவனோ,” இது வேறைய? இவுங்க நம்மள்ள வச்சு ஏது காமெடி கீமடி பண்றாங்களோ” என்று சினிமா பாணியில் புலம்பிவிட்டு அவர்களிடம், “ம்ம்ம் ந… ந நல்ல இருக்குது அம்மா” என்று கூறி மதி ஒரு நிமிடம் என்று அழைத்தான்.
சினேகனுடன் சென்றவள், “என்ன சினேகன் கேஸ் பத்தி தானா?” என்று கேட்க அவனோ, “கேஸ்அ பத்தி அப்புறம் பேசலாம் லூசு… முதல்ல பாயாசம் னா சுகர் போடணும்… அதாவது சீனி… ஏன்னா பாயாசம் ஒரு ச்வீட் புரியிதா? இப்படி சப்புன்னு பண்ண உன்னால மட்டும் தான் முடியும்” என்று கூற மதி உடனே, “ஐயோ சினேகன் சாரி… நான் மறந்துட்டேன்… இரு முதல்ல சுகர் போட்டு வரேன்… நம்ம வந்து டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று கூறி விட்டு விரைந்து சென்றாள்.
மறுப்பக்கம் ஆதி கையில் தொலைபேசியுடன் சென்றவன் மதியின் ப்ராஜெக்ட், அது செய்யப்பட்ட இடம், அதில் உள்ள தகவல்கள் பற்றி அறிய ஒரு சில நபர்களை தொடர்பு கொண்டு அந்த பணியை அவர்களிடம் ஒப்படைத்தான்…
பேசி முடித்துவிட்டு வைக்க, அதே நேரம் ஆதியின் வீட்டின் வெளில் சற்று தள்ளி நின்றுக் கொண்டு, “ஆமாம் டா, தலைவரு இந்த வீட்டாண்ட இருக்க ஒரு பொண்ண வேவு பார்க்க சொல்லி இருக்காரு, தூக்க சொல்லிருந்தா சட்டுன்னு முடிச்சிருப்பே… இப்படி வேவு பாக்க சொல்லிட்டாரு டா, சரி நான் அப்புறமா கூப்பிடுறே உன்ன” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் கையிகளில் மதியின் புகை படம் இருந்தது.