முகிழ் – 14

 

மருத்துவமனைக்கே உரிய வசானை, செவிலியர், மருத்துவர்கள், நோயாளிகள், இப்படி அனைத்துடனும் விடிந்த மறுநாள் காலை அழகாகவே விடிந்தது மதியின் தந்தை, இளமாறனுக்கு. தன் அக்காவை சந்தித்தது, தன் காதல் மனைவி ஆபத்து நீங்கி உயிர் பிழைத்தது, தன் ஆசை மகள் தன் அக்காவின் மகனான ஆதியை மணந்தது இப்படி எல்லாமே அவருக்கு நிம்மதி அளித்தது.

 

சிவகாமி அம்மாளும், இளமாறனும் அவர்களின் கடந்த காலத்தை பற்றி பேச்சில் இறங்கினார்கள் மதியழகியின் அறை வாசலில். அப்பொழுது தற்செயலாக அவர்களை கடந்து சென்ற பெண்ணொருத்தி இளமாறனிடம், “அங்கிள் நீங்க….? மதியோட அப்பா தான? எப்படி இருக்கீங்க அங்கிள் நான்…என்ன தெரியலையா? நிவேதித்தா…. மதியோட காலேஜ் ப்ர்ண்ட்” என்று கூற இளமாறன் யோசித்து, “அட நிவேதிதா, எப்படி மா இருக்க, பார்த்து நாளாச்சுல, அதான் டா எனக்கு தெரியல ” என்று கூற ஒரு சில நல விசாரிப்பின் பிறகு, அவள் ஹாஸ்பிட்டல் வந்ததிற்கான காரணம் அவளுடைய மாமியாருக்கு உடல் சுகம் இல்லை என்று கூறியவள் அவர்கள் வந்ததிற்கான காரணமும் கேட்டு அறிந்தவள் மதியை பார்த்து வருவதாக கூறி மதியின் அறைக்கு வந்தாள் மதியின் கல்லூரி தோழி.

 

மதிக்கு சிறு விபத்து என்று மட்டுமே கூறியிருந்தார் அவருடைய தந்தை நிவேதிதாவிடம். இந்த திருமணம் பற்றி அவர் கூறாததற்கு காரணமும் இருக்கவே செய்தது. மதிக்கு இப்போது இந்த திருமணம் நிச்சயம் அதிர்ச்சியே அப்படி இருக்க மேலும் அதை பற்றி மற்றவர்கள் கேள்வி கேட்க நேர்ந்தால் மதி ஏதையேனும் யோசித்து குழப்பி கொள்ளுவாள் என்ற ஐயமே. மேலும் அவளை கடத்த முயன்றார்கள் என்பதும், அதுவும் மற்றவர்களுக்கு தெரிய வேண்டாமே என்ற எண்ணம் தான்.

 

ஆதலால் அவரும் பின்னோடு வந்து, மதியின் முன்னிலையிலே நிவேதிதாவிடம், “மதிக்கு சிறு விபத்து தான், வண்டியில் வரும் போது தவறி விழுந்து விட்டாள், எங்க…? இந்த காலத்து பொண்ணுங்க பெத்தவங்க சொல்றத கேட்குறீங்க” என்று அவர் அழுத்தி கூற அவரின் பேச்சிலிருந்து நிவேதிதாவிடம் அவர் எதுவும் கூறவில்லை என்று மதி புரிந்துக் கொண்டாள்.

 

ஆதலால் மதியும் அதற்கு ஏற்றவாறு கல்லூரி தோழியிடம் பேசிகொண்டிருந்தாள். அதன் பின் மதியின் தந்தை அவ்விடம் விட்டு அகன்ற பின், கல்லூரி நண்பர்கள், தோழிகள் என பேச ஆரம்பித்த இருவரும் மற்ற தோழிகளின் வாழ்கை பற்றிய பேச்சில் இறங்கினார்கள்.

 

மணமானவர்கள், ஆகாதவர்கள் வரிசையில் அந்த பெண் காவ்யாவின் பெயரும் அடிப்பட்டது. காவ்யா என்றதும் ஒரு சில நிமிட யோசைனை மதியின் மனதில் ஓடியது, மீண்டும் நிவேதிதா கூறுவதில் கவனமானது அவள் மனமோ.

 

மதியிடம் நிவி, “நம்ம காலேஜ்ல பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் (B.A. Public Administration) டிபார்ட்மெண்ட் காவ்யா தெரியும் தானே உனக்கு, அந்த காவ்யாக்கு இப்ப கல்யாணம் மதி. யாரையோ லவ் பண்ணிட்டு இருந்தா… பையனும் நல்ல பையன் தான்…ஆனா இவ தான் அவன விட்டுட்டா, காரணம் என்ன தெரியுமா? ‘பணம்’. இப்ப வீட்ல பாத்து வச்சுருக்க பையன் அவன விட பணக்காரனாம்” என்று கூற மதி ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தாள்.

 

நிவேதிதாவிடம் மதி, “நிவி நீ என்ன சொன்ன இப்ப, அந்த அடுக்கம் வந்தாளே அவளையா சொல்ற?” என்று கேட்க அவளோ ஆமாம் என்பதாய் தலை அசைத்தாள்.

 

அதன் பிறகு நிவேதிதா பேசிய அனைத்திலும் ஒரு குழப்பமான மன நிலையோடே கேட்டு கொண்டிருந்தவள் அந்த காவ்யா பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் நிவேதிதாவிடம் எதுவும் அவள் கேட்கவில்லை ஏனெனில் என்னவென்று கேட்பாள், எங்கிருந்து ஆரம்பிப்பாள், அப்படி கூறினாலும் க்ரிஷ்ணவ் பற்றி சொல்லவேண்டி வருமே.

 

அவனை மற்றவர் முன் குறைத்து பேசவோ இல்லை தன் கணவனான அவனின் செயல்களை மற்றவர் முன் சந்தேகித்து பேசவோ அவளுக்கு மனமில்லை.

 

மணாளன் ஆகவிடிலும் கூட அவள் மணம் கவர்ந்தவனை பற்றி மற்றவர் முன் பேச மதி எப்பொழுதுமே விரும்பியது இல்லை. இப்பொழுது அவன் அவளின் கணவனான பின்னா பேசபோகிறாள்? ஆதலால் அமைதியாக நிவி பேசியதை உள் வாங்கிக் கொண்டாள்.

 

ஒருவழியாக அவள் பேசி சென்றவுடன் மதிக்கு யோசிக்க நிறைய இருந்தன. மதியின் மனமோ அவளிடம், “இந்த காவ்யா பணத்திற்காக மாறியவளாக இருக்கும் பட்சத்தில் அவள் அன்று ஏன் பொய் சொல்லி இருக்க கூடாது?, அவள் பொய் சொல்லியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். ஏனெனில் க்ரிஷ்ணவை உளமார விரும்பியதாக கூறியவள் எப்படி அடுத்தவனை அத்தனை சீக்கிரம் காதலித்தாள்?, அப்படியே காதலித்தாலும் இப்பொழுது திருமணமோ வேறு ஒருவனுடன், அதற்கும் அவள் மனம் தயாராக உள்ளது என்றால் அவள் அன்று பொய் சொல்லி இருக்க வாய்ப்பும் உள்ளது” என்று கூற மதிக்கு தான் தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று ஐயம் தோன்றியது.

 

முன்பு அறிவு கூறியதை மறுத்து பேச இப்போது அவள் மனதிற்கு திடம் கூடி இருந்தது. காரணம், “அவன் பெண்களிடம் தவறாக நடப்பவனாக இருந்திருந்தால் அன்று மின் தூக்கியில் ஏற்பட்ட நிகழுவுக்கு பிறகு தனக்கு ஏன் மொட்டைமாடியில் காவல் இருக்க வேண்டும்? அதுவும் கண்ணியமாக. என்னை பார்த்தால் சிடு சிடுப்பார். என்னிடமே கண்ணியம் காத்தவர், அன்று அடுக்கத்தில் அப்படி நடந்ததிற்கு ஏதேனும் காரணம் இருக்குமோ?” என்று வாதிட்டு கொண்டிருந்தது அவள் மனம் அறிவிடம்.

 

மேலும் அந்த காவ்யாவின் காதலில் ஏற்பட்ட மாற்றங்கள் நிவி சொல்லி அவள் தெரிந்துக் கொண்ட அவள் நடவடிக்கைகள் எல்லாமே அவள் ரிப்போட்டர் அறிவுக்கு புலப்பட்டு ஆதியின் மீதிருந்த தவறான எண்ணம் மறைய தொடங்கி இருந்தது.

 

அவன் மீது காதல் கொண்ட மனமோ கிடைத்த சிறு துடுப்பை பற்றிக்கொண்டு அவனோடு ஆன வாழ்வு என்னும் கரை சேர மெல்ல மெல்ல நீந்தி வந்துக்கொண்டிருந்தது.

 

எல்லாமே இப்பொழுது சரியாக நடப்பது போல தோன்றினாலும் அன்று என்ன தான் நடந்தது, அந்த பெண் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்பதும் அவள் மனதில் அந்த கேள்வியும் எழாமல் இல்லை.

 

ஆனால் அவள் பொய் சொல்லி இருக்கிறாள் என்பது மட்டும் மதிக்கு தோன்றி விட்டது.  இனிமேல் தன்னுடைய வாழ்க்கை ஆதியுடன் என்று யோசித்தவளுக்கு விடை தெரியவில்லை. ஏனெனில் ஆதிக்கு மனதில் என்ன உள்ளது என்ற கேள்வி எழ மதியின் மதியில் உரைத்தது ஆதி முதலில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதே.

 

என்ன முயன்றும் அவளால் அதற்கான காரணத்தை யூகிக்க முடியாமல் போனது.

 

சினேகன் அலுவலகம் சென்றிருக்க, ஆதி அவன் ஏதோ வேலை நிமித்தமாக போயிருக்க, மதியின் அன்னை கண்விழித்துவிட்டதால் அவர் அருகில் இளமாறனும், சிவகாமி அம்மாளும் அமர்திருக்க, நிலா உணவு எடுக்க வீட்டிற்கு சென்றிருக்க, மதி தூக்கத்தில் ஆழ்ந்திருக்க அந்த நேரம் மெதுவாக நகன்று கொண்டிருந்தது.

 

அதை கலைக்கும் விதமாக மதியின் தொலைபேசி அழைக்க மதியின் தந்தை அதை ஏற்று காதிற்கு குடுத்தார். எதிரில் பேசியது இனியன் என்பதை அறிந்தவர் அவனிடம் நல்ல முறையில் பேசி மதிக்கு சிறு விபத்து என்று தகவல் கொடுக்க அவனோ மதியை பார்க்க மருத்துவமனை வருவதை கூறி தொடர்பை துண்டித்தான்.

 

அவர் அழைப்பை துண்டிக்கவும் ஆதி அவ்விடத்தில் ஆஜர் ஆகவும் சரியாக இருந்தது. மதியழகியிடம் இனியன் வருவதாக கூறியவர், சிவகாமி அம்மாளிடம் இனியன் செய்த உதவியை பற்றி கூறிகொண்டிருக்க அதை கேட்டு கொண்டிருந்தவர் சிவகாமி அம்மாள் மட்டும் அல்ல அவரின் மகனான ஆதியும் தான்.

 

வரவேற்பரையில் கேட்டு விட்டு மதியின் அறைக்கு செல்ல மதி அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள்.  மதியின் அருகில் அவன் செல்ல, அந்த நேரம் கதவு திறக்கப்பட்டு மதியின் தந்தையும் சிவகாமி அம்மாளும் வந்தார்கள். அவர்களிடம் அவன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே விழிப்பு தட்ட கண் விழித்தவள் இனியனிடம் இனிமையாக பேசினாள்.

 

இனியன் அவள் உடல் நலனை பற்றி அக்கறையோடு பேசி கொண்டிருக்க அப்போது அவள் போர்வையை விலக்கி எழுந்து அமர அவள் மார்பில் தவழ்ந்த மாங்கல்யம் கண்ட இனியன் மதியின் முகத்தை பார்க்க மதியின் கண்களோ வாசலை தழுவி நின்றது.

 

அவள் பார்வை சென்ற திக்கை நோக்கி அவன் பார்வையை திருப்ப கதவருகே சாய்ந்து தனது கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி கொண்டிருந்தது ஆதித்யன், ஆதித்ய க்ரிஷ்ணவ்.

 

ஆதியை அங்கே சற்றும் எதிர்பார்க்காத இனியன் அவனிடம், “சார் நீங்க இங்க எப்படி” என்று கேட்க, ஆதியோ மதியை பார்க்க, மதியின் தந்தை இனியனிடம், “இவரு தான் என் மாப்பிள்ளை பா, மதியின் கணவன்” என்று கூறினார்.

 

இனியனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அது அவன் முகத்திலிருந்தே கண்டுகொண்டான் ஆதித்யன். இனியனது கண்களோ குழப்பத்தில் ஆழ்ந்து, கோவத்தில் சிவந்து, இயலாமையில் தவித்ததை நன்றாக பிரதிபலிக்க அதை மதி கண்டுகொண்டாள். ஆனால் அவளுக்கு காரணம் தான் புரியவில்லை. மதியின் தந்தையோ, அவரின் அக்காவோ இதை கவனித்ததாக தெரியவில்லை. அவசரமாக மதி ஆதியை பார்க்க அவனும் கவனித்ததாக தெரியவில்லை. ஆனால் ஆதி இதை அனைத்தையும் மதி அறியாமலும், ஏன் இனியனே அறியாமலும் கவனித்து விட்டவன் அதை தொடர்ந்து அவன் முகத்தில் சிந்தனை ரேகை படிந்து மீண்டது. 

 

மருத்துவமனை விட்டு வெளியே வந்த இனியனுக்கு இன்னும் அதிர்ச்சி குறைந்த பாடில்லை. அதிர்ச்சியை விட இயலாமை. அதே யோசனையுடன் அவன் வண்டியை கிளப்பிக்கொண்டு வேறு எங்கும் செல்லாமல் அவன் அப்பார்ட்மெண்ட்க்கு சென்று விட்டான். அவனுக்கு அடுத்து என்ன என்பதே வாழ்க்கையில் முதல் முறையாக புரியாமல் போனது. மதி, ஆதியின் மனைவி என்பதை அவன் மனம் ஏற்க மறுத்தது.

 

அதன் பிறகு சமயம் கிடைக்கும் போதெல்லாம் சினேகன் வர, நிலாவின் கலகலப்பான பேச்சு, அத்தையின் பாசம், அம்மா உடல் நலம் நன்கு தேர்ச்சி அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி என அடுத்த 3 நாட்கள் கழிய ஆதியின் மௌனம் மதியை தாக்கியது. ஒரு சில முறை அவன் பார்வை அவளை தீண்டி சென்றது. அதறக்கு மேல் எதுவுமில்லை. சிவகாமி அம்மாள் சொன்னால் ஏதேனும் ஒரு சில வார்த்தை பேசுவான், ஓரிரு முறையே அறையில் அமர்தானும் கூட. இதையெல்லாம் யோசிக்க மதியின் மனது அதற்கான காரணம் பற்றி ஆரைய முடிவெடுத்தது.

 

ஒரு காலத்தில் அவனின் குரல் மட்டுமே அறிந்து அவனை பின் தொடர்ந்த நேரங்கள் யாவும் அவளுக்கு கானால் நீராக தோன்றி மறைந்தது. அவன் பேசுவான? அவளிடம்? ஏன் மற்றவர்களிடம் பேசினாள் கூட அவன் குரலையாவது கேட்கலாமே என்று எண்ணியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாலைவனத்தில் சிந்தும் சாரல் போல அவன் பேச்சும் அபூர்வமாக இருந்தது.

 

மதியின் தந்தை கண்களில் இது பட்டாலும் கூட அக்காவின் வளர்ப்பில் அவருக்கு இருந்த அதிக நம்பிக்கை, ஆதியின் நேர்கொண்ட பார்வை, தாயை மதிக்கின்ற பண்பு என அலசி ஆராய்ந்தவர் அவரின் வயதின் அனுபவம் கொண்டு நிச்சயம் ஆதி நல்லவன் என்று உளமார நம்பினார். மகளின் வாழ்வும் செழிக்குமென அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்.

 

திடீர் திருமணத்தால் இருவருக்கும் இருக்கும் அதிர்ச்சியே என்று பெரியவர்கள் மூவர் மற்றுமல்லாது இளையவர்களான நிலா, சிநேகனும் கூட நம்பினார்கள்.  திருமணத்தில் தான் அவசரப்பட்டுவிட்டோம், இனி வாழ்க்கையில் அவர்கள் நிதானமாக ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பிக்கட்டும் என்று அவர்கள் போக்கில் விட்டுவிட்டு கண்டும் காணாமலும் இருந்தார்கள்.

 

அன்று மதிக்கும், அவள் அன்னைக்கும் டிஸ்சார்ஜ் என்று இருக்க, சிவகாமி அம்மாள் வற்புறுத்தி மதியின் குடும்பத்தை அவர்கள் இல்லத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்திருந்தார். நிரந்தரமாக தங்க சொல்லி சிவகாமி அம்மாள் கூற, இளமாறன் பிடிவாதமாக மறுக்க, சிவகாமி அம்மாள் வேறு வழி இல்லாது மதியழகிக்கு சற்று உடல் தேரும் வரை குறைந்தது 2, 3 வாரங்கள் மட்டுமாவது இருக்குமாறு கூற அவர்களும் சம்மதித்தார்கள்.

 

மதிக்கோ தந்தை தாயை உடனே பிரிய வேண்டாம் என்பது சற்று ஆறுதல் அளித்தாலும் கண்டிப்பாக பிரிந்து தானே ஆகவேண்டும் என்பதும் மனவலியை தந்தது. இந்த திடீர் திருமணத்தால் அவளின் பெற்றோர்களை விட்டு பிரிவதை அவள் மனம் ஏற்க மிகவும் சிரம்மபட்டது. ஆயினும் அவளின் அத்தை அவர்களை தன்னுடன் அழைத்தது மதிக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது.

 

இந்த இடைப்பட்ட நாட்களில் மதி நிலா இருவரும் நல்ல தோழிகளை போல பழக ஆரம்பித்திருந்தார்கள். நிலாவிற்கு மதியை ரொம்பவும் பிடித்து போக, மதிக்கோ நிலாவின் ஓயாத பேச்சை கேட்க கேட்க தெவிட்டவில்லை. ஆவலுடன் நிலாவின் வருகையை எதிர்பார்க்க தொடங்கி இருந்தாள். மதிக்கும் சற்று குறும்பு தனம் தளிர் விட தொடங்கி இருந்தது.

 

இதற்கிடையில் மதிக்கு ஏன் தன் தந்தையும் அத்தையும் இத்தனை காலம் சந்திக்கவில்லை என்ற சந்தேகம் முளைக்க அதை கேட்கவும் செய்தாள். பெரியவர்கள் முதலில் தயங்கினாலும் அவர்கள் கூற தொடங்கி இருந்தார்கள்.

 

‘சிவகாமி அம்மாள் ஆதியின் தந்தையான பிரபாகரனை காதலித்து மணமுடித்தவர். பிரபாகரன் பெரிய கோடீஸ்வரன் நல்ல பண்பு நல்ல குடும்பம் இப்படி எத்தனை இருந்தாலும் சிவகாமி அம்மாளின் குடும்பத்திற்கு அவர் வேறு ஜாதியினர் என்று மட்டுமே தென்பட்டது. அவர்களின் காதலை எதிர்க்க சொந்த பந்தத்தை எதிர்த்து அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்காக அவர் போராடிய காலங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது இளமாறன் மட்டுமே. அதன் பின் ஒரு சில ஆண்டுகள் இளமாறனுடன் மட்டும் பேச்சு தொடர்பில் இருந்தவர், சிறிது காலம் கழித்து அவர் எங்கே சென்றார் என்பதை அறியமுடியாமல் தவித்து போனார். அவர்கள் முதலில் கோயம்பத்தூரில் இருந்து பின்பு சென்னையில் பிரபாகரனோடு தந்தை பார்த்துகொண்ட தொழிலை கவனிக்கும் பொருட்டு சென்னை வந்துவிட்டார்கள்.

 

அதே சமயத்தில் அவர்கள் ஊரில் இளமாறனுக்கு திருமணம் முடிந்த சில மாதங்களிலே அவரின் சகோதரர்கள் அவரின் தொழில் சொத்து என்று ஏமாற்ற, உடைந்து போன இளமாறன் அவர்களை விட்டு அந்த சொந்தகளை உதறி மதுரையில் வந்து குடி பெயர்ந்தார். அக்காவின் கோயம்புத்தூர் விலாசம் மட்டுமே தெரிந்த தம்பி, தம்பியின் சொந்த ஊரின் விலாசம் மட்டுமே அறிந்த அக்கா என அவர்களின் தொடர்பை தொலைத்து விட்டார்கள் இருவரும்.’

 

இதை கேட்டுக்கொண்டே தவேராவில் வந்து கொண்டிருந்தனர் அனைவரும் ஆதியின் வீட்டை நோக்கி. தனது அன்னைக்கு உறுதுணையாய் இருந்தவர் என்பதால் இளமாறன் மீது ஆதிக்கு மதிப்பு கூடிற்று.

 

அவர்கள் சொல்லி முடிக்கவும் வீட்டின் கதவு அருகே வண்டி நிற்கவும் சரியாக இருந்தது. ஆதியின் கார் நின்றவுடன் ஒருவன் காருக்கு முன்னால் வந்து ஆதியிடம், “அய்யா என்னை மன்னிச்சுடுங்க, இனிமேல் இப்படி செய்யமாட்டே, கட்டுன பொண்டாடிக்கு துரோகம் செய்யமாட்டேன், நான் உணர்ந்துட்டேன், எனக்கு இந்த தண்டனையே போதும்ங்க, மறுபடியும் மன்னுச்சு எனக்கு உங்க வீட்லயே வேலை போட்டு கொடுங்க” என்று கதற ஆரம்பித்தான்.

 

அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஹாரன் அடித்தவன், அந்த ஹாரன் ஒலி கேட்டு அந்த பெரிய கேட் திறக்கவும் அவனது வண்டியை எடுத்துக் கொண்டு அவன் உள்ளே நுழைந்தான். கேட் திறக்கப்பட்ட பிறகு கூட அரை கிலோ மீட்டர் காரில் செல்ல வேண்டி இருந்தது. அத்தனை பெரிய பங்களா அது.

 

அந்த அரை கிலோ மீட்டர் பயணத்தில், ஆதியின் செய்கையால் முழித்துக் கொண்டிருந்த அனைவரிடமும் ஆதியின் அன்னை விளக்கமளிக்க தொடங்கினார். காரின் முன்னால் வந்து கெஞ்சியவன் சோமு என்றும் அவன் அவர்கள் வீட்டில் தோட்ட வேலை பார்த்தவன் என்றும், அவனுடைய மனைவிக்கு அவன் துரோகம் செய்யவே அப்பெண் ஆதியிடம் வந்து முறையிட ஆதி அவனது பாணியில் அவனுக்கு தண்டனை அளித்து வேலையை விட்டும் நிறுத்தி விட இதனால் அவன் மனம்திருந்தியதாக கூறி மறுபடியும் ஆதியிடம் மன்னிப்பு கேட்கிறான் என்றும் அதோடு அவன் வேறு எங்கும் இந்த பகுதியில் வீட்டு வேலை செய்ய முடியாதபடி ஆதி செய்து விட்டதால் அவன் ஆதியிடமே மறுபடியும் மறுபடியும் வந்து கெஞ்சுவதாக கூறினார். 

 

இது சாதாரணம் என்பது போல அமர்ந்திருந்த நிலா, அடுத்த பெண்ணுக்கு கூட இப்படி உதவிய தன் மாப்பிள்ளை நினைத்து பெருமை அடைந்த மதியின் பெற்றோர் என்று அவரவர் இருக்க, மதிக்கோ இப்பொழுது தன் மீது தான் அனைத்து தவறும் என்று முழுதாக தோன்றியது.

 

“பெண்களை மதிப்பவன், எப்படி காவ்யாவிடம் இப்படி பேசி இருக்க முடியும்? அதோடு இன்று அந்த சோமு முன்னால் இவன் காட்டிய அசட்டை அன்று அவன் காவ்யவிடமும் காட்டினான். ஆக அவள் ஏதோ செய்திருக்கிறாள், ஆனால் என்ன ஏது என்பது அவளுக்கு புரியவில்லை, ஏன் அவன், அவள் கல்லூரிக்கு வந்தான்? இல்லை அதற்கும் காரணம் இருக்கும், இதை எல்லாம் யாரிட கேட்பது, காவ்யாவிடம்? இல்லை இனிமேலும் என்னால் அவளின் வார்த்தைகளை நம்பமுடியாது என் க்ரிஷ்ணவிடமே கேட்கலாமே” என்று அவள் மனம் கூற, என் க்ரிஷ்ணவ் என்று அவள் மனம் அவளிடம் கூறியதில், அடுக்கத்தில் இருந்த உற்சாகம் அவளுக்குள் மீண்டும் மலர்ந்திருந்தது.

 

அந்த மலர்ச்சியோடு சிந்தனையிலிருந்து அவள் மீளவும், கார் அவர்கள் வீட்டின் முன் நிற்கவும் சரியாக இருந்தது. அத்தனை நேரம் அவள் கவனிக்காத அழகு அவள் கண்களுக்கு தென்பட ஆரம்பித்தது.

 

அந்த பங்களா, நுழைவாயில் சுற்றுசுவரிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. வண்டிகள் வருவதற்கு ஏதுவாக போடா பட்டிருந்த சிமெண்ட் சாலையின் 2 புறங்களிலும் தென்னை வளர்ந்திருந்தது. சுற்று சுவர் உயரமோ 14, 15 அடிக்கு மிகாமலிருந்தது.

 

அவனது வீடு பழமையை தாங்கியும், மெருகேற்றப்பட்ட புதுமையுடனும் இருந்தது. கேரளத்து ஓடுகள் ஆங்காகே முகப்புகளைபோல நீண்டும் உள்வாங்கியும் ஒரு அழகு சேர்த்திருக்க வீட்டின் வலதுபக்கமாக இருந்த பெரிய சாளரம் கடலை பார்த்தவாறு அமைந்திருந்தது. ஆம் அந்த வீடு ஈ.சி.ஆர் யில் அமைந்திருந்தது. அந்த சாளரம் முதல் தளத்தில் இருக்க அங்கே ஒரு பெரிய மர ஊஞ்சலும் இருந்தது. இவை அனைத்தும் கீழிருந்தே, அதுவும் வீட்டின் வெளியிலிருந்தே மதியின் கண்கள் அளவெடுத்தது.

 

வீட்டை சுற்றி ஒரு பூங்காவே அமைந்திருந்தது. சாளரம் இருந்த பக்கமாக ஒரு பெரிய மகிழம்பூ மரம். அந்த மரத்தை சுற்றி, 15 அடி ஆரம் (Radius) அளவில் ஒரு மேடை அமைக்க பட்டிருந்தது. அந்த மேடை அழகாக அந்த மரத்தை சுற்றி அமைந்திருக்க அம்மரத்தடியில் கிட்டத்தட்ட 150 சென்டிமீட்டர் அளவில் அமைதியே வடிவமான சித்தார்த்த கௌதம புத்தனின் சிலை அமைந்திருந்தது.

 

அவ்விடம் மதியை ரொம்பவும் ஈர்க்க அதன் அருகில் சென்றவளுக்கு மனதினுள் ஒரு நிம்மதி பரவியது. சாந்த முகமான புத்தரின் சிலையோ அல்லது மகிழம் பூ  மகிழ்ச்சி என்பதின் பொருளுக்கேற்ப மகிழ்ச்சி வந்ததோ அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவ்விடத்தில் ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சி, நிம்மதி பரவுவதை அவளால் உணரமுடிந்தது.

 

அந்த மரத்தின் அருகிலேயே ஜாதி பிச்சி கொடி படர்ந்திருக்க அது படர்வதற்கு ஏற்ப மரத்தினால், அதுவும் நல்ல வேலைப்பாடுடன் கூடிய மரத்தினால் செய்யப்பட்ட அக்கொடி படர்வதர்க்காகவே செய்யப்பட ப்ரத்யீக பந்தல் கண்ணில் பட சிலிர்த்து போனாள் மதி. ஒரு கொடி படர்வதற்கு கூட இத்தனை தூரம் ரசித்து ரசித்து செய்தவர் நிச்சயம் ஒரு அருமையான ரசிகர் என தோன்றியது அவளுக்கு.

 

இதை பார்த்தவளுக்கு இப்படி ஒரு வீட்டையும் தோட்டத்தையும் அமைக்க பணம் மட்டும் போதாது. அதற்கு ரசனையும் கூடவே இயற்கையின் அருமையும் தெரிந்திருக்க வேண்டும் என அவளுக்கு தோன்றியது. அந்த தோட்டத்தை சுற்றி பார்க்கவே நிச்சயமாக அவளுக்கு அரை நாள் தேவைப்படுமென தோன்றியது… இவை அனைத்தும் வலது புறம் என்றால், இடது புறமோ சிறு செயற்கை குளம், அதில் உல்லாசமாக 4, 5 வாத்துக்கள் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தது.  அவை அனைத்தையும் அவள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

நிலா, ஆதி மற்றும் மதிக்காக ஆரத்தி கரைக்க சென்ற நேரத்தில் சுற்றி பார்த்து கொண்டிருந்த மதியை, அவள் தந்தை அழைக்கவும் அவர் அருகில் வந்து அவரின் முகம் பார்த்தாள். அவளின் தந்தை, “மதிமா ஆரத்தி எடுத்துட்டு உள்ள போகணும் இல்லையா? நல்ல நேரத்துல நீயும் மாப்பிளையும் வீட்டுக்குள்ள போங்க மா….  என்னடா அப்படியே பார்த்துட்டு இருக்க, வா வந்து மாப்பிளை பக்கத்துல நில்லு” என கூற அவள் ஆதியின் முகத்தை பார்த்துக் கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள்.

 

ஆதியின் பக்கத்தில் அவன் மனைவியாய் நிற்பதே அவளுக்கு இந்த ஜென்மம் ஈடேறியதர்க்கு சமமாக தோன்ற ஒரு எதிர்ப்பார்ப்போடு அவன் முகம் காண, அவன் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அமைதியாய் நின்றிருந்தான்.

 

அவனின் அமைதிக்கு காரணம் தெரியாமலும், அவன் திருமணத்தை மறுத்ததிற்கு காரணம் அறியாமலும் குழம்பியவள் அதை வெளிக்காட்டி கொள்ளாது, ஆரத்தி எடுப்பதை அனுபவிக்க தொடங்கினாள். ஆரத்தி எடுத்து முடிக்க, மதியின் மனதில் நிச்சயம் ஆதியை விட்டு பிரியக் கூடாது எனவும் ஆதியின் காதலை பெறவேண்டும் எனும் எண்ணமும் அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

 

அவர்கள் நல்வாழ்விற்காக பெரியவர்களும் வேண்டிக்கொள்ள, இருவரும் ஒரு சேர தங்களது வலது பாதத்தை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். இனி வாழபோகும் வாழ்க்கை மொத்தத்திலும் வாழ்வென்னும் பாதையில் ஒவ்வொரு அடியும் இருவரும் சேர்ந்தே வைப்போம் என்பதை பறை சாற்றுவதை போல இருவரின் காலடிகளும் ஒரே மாதிரியாக முன்னேறியது. ஆனால் அதை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.

 

அங்கு சென்றுதும் முதல் வேலையாக பூஜை அறையில் விளக்கேற்றுமாறு சிவகாமி அம்மாள் கூற, அவரின் சொற்படியே மதியும் கண்கள் மூடி மனதார, மனமுருகி தன் மனம்கவர்ந்தவனின் அன்பை பெற்று தருமாறு கூறி வேண்டிக்கொண்டாள்.

 

அவள் குனித்து விளக்கேற்ற அந்த இடம் அழகிய சிறு ஜோதியில் உயிர் பெற அதை அழகாக படம் பிடித்தாள் நிலா. விளக்கேற்றி தீபாராதனை செய்தவள் முதலில் அதை சிவகாமி அம்மாளிடம் குடுத்து அவர் பாதம் பணியவும் சிவகாமி அம்மாள் மட்டுமல்லாது ஆதியுமே ஒரு நிமிடம் அவள் செய்கையில் அசந்துவிட்டான்.

 

அவள் பெற்றோர்கள் இருக்கும் பொழுது முதலில் தன் அன்னையிடம் அவள் ஆசி வாங்கியது அவனுக்குமே ஒரு வித நிம்மதி அளித்தது. இதுவரை திருமணமான நாள் முதல் அவளை பார்வையால் கூட சட்டை செய்யாதவனின் விழிகள் இப்பொழுது அவள் மேல் படர்ந்து மீண்டது.

 

அடுத்து அவளின் பெற்றோரிடம் ஆசி வாங்கிவிட்டு எழ, நிலா அவளை தழுவி வாழ்த்துகள் கூறினாள்.  பிறகு வரவேற்பறைக்கு வந்தவர்களுக்கு அங்கிருக்கும் பணி ஆட்கள் பால் கொண்டு வந்து தர அதை பருகியவரே அந்த வீட்டை பார்வையால் அலசினாள்.

 

ஆதி சிறிது நேரத்தில் வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட, பெரியவர்கள் அவர்கள் பேச்சில் லயிக்க, நிலா மதியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.கீழ் தளத்தில் ஒரு பெரிய ஹாலும், பூஜை அறையும், அடுப்படியும் 2 பெரிய மாஸ்டர் பெட்ரூமும் கொண்டிருக்க மேல்தளத்தில் 4 பெரிய மாஸ்டர் பெட்ரூமும் இருப்பதாக நிலா, மதியிடம் கூறினாள்.

 

அதை கேட்டுகொண்டே இருந்த மதி, இன்றே கிருஷ்ணாவிடம் அனைத்தையும் கூறி, அந்த காவ்யா பற்றியும் கேட்க வேண்டும் எப்படி ஆரம்பிப்பது என மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே நிலா பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

மேல் தளத்தில் ஒரு அறையை காண்பித்து அது தான் ஆதி அத்தானின் அறை என்றவள் மதியை பார்த்து கண்ணடிக்கவும் மதியின் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்க அதை மறைக்கும் பொருட்டு அவளது பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

 

அவளது பார்வை பதிந்த இடம் ஒரு அழகிய ஓவியம். கையில் சிலம்புடன் கண்ணகி பாண்டிய மன்னரின் அரசவையில் கண்ணீருடனும் கோவத்துடனும் நின்றிந்த கோலம். அந்த ஓவியம் மிகவும் தத்ரூபமாய் இருந்தது. அதை விட்டு மதியால் பார்வையை விலக்கமுடியாமல் போக, அவளின் பார்வை சென்ற திக்கை பார்த்த நிலா மதியிடம்,”மதி, இந்த பெயிண்டிங் யாரு வரைந்ததுன்னு தெரியுமா? உன்னோட மணளான் தான். என்ன முழிக்கிற, ஆதி அத்தான் சூப்பரா வரைவாங்க… அவுங்களுக்கு இந்த தருணம் சிலப்பதிகாரத்துல ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லுவாங்க… ஏன்னா நாடே கண்ணகியோட கணவனை கள்வன்னு சொல்லும்போது கண்ணகி க்கு கோவலன் மீதிருந்த நம்பிக்கை… அந்த நம்பிக்கை ஆதி அத்தான் க்கு ரொம்பவும் பிடிக்கும் அதோடு உறவுல நம்பிக்கை ரொம்ப முக்கியம் அது இல்லாம போய்ட்டா கண்டிப்பா அந்த உறவு உயிரோட இருக்காது… அப்படின்னு அடிக்கடி சொல்லுவாங்க” என்று கூறி விட்டு நிலா மேலும் ஏதோ ஏதோ சொல்ல தொடங்கினாள்.

 

ஆனால் அதற்கு மேல் மதிக்கு தான் ஒருநிலையில் இருக்கமுடியவில்லை. நிலா பேசுவதற்கு உம் கொட்டிக்கொண்டே மனதினுள், “இத்தனை தூரம் நம்பிக்கைக்கு இடம் குடுப்பவனிடம் நான் என்ன சொல்லுவேன்? அடுக்கதில் உங்களை பார்த்து மனதை பறிக்கொடுத்தேன், இன்றுவரை உங்களை மட்டுமே மனதால் நேசிக்கிறேன் … ஆனால் இடையில் யாரோ ஒரு பெண் பேச்சை கேட்டு உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் உங்களை விட்டு சென்றேன் என்றா?” என்று எண்ணியவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

 

அவனிடம் அனைத்தையும் சொல்லவேண்டுமென எண்ணியவளுக்கு இப்போது சொன்னால், எங்கே அவள் அவனை இழந்து விடுவாளோ என்று அஞ்ச தொடங்கினாள். சிறிது யோசித்து விட்டு இப்போதைக்கு எதுவும் அவனிடம் சொல்ல வேண்டாமென்றும் நிச்சயம் அவள் க்ரிஷ்ணவ் நல்லவன் பெண்களை மதிப்பவன் என்றும் அடுக்கம் பத்தியும், காவ்யா பத்தியும், தன் காதலை பற்றியும் இப்போது பேச வேண்டாமென்றும், முதலில் அவன் ஏன் திருமணத்திற்கு சம்மதிக்க வில்லை?, ஏன் தன்னை விலக்கி வைக்கிறான்?, ஏன் இந்த பார முகம்? இதை எல்லாம் அறிவதற்கு அவனிடம் ஒரு நல்ல தோழியாக பழக வேண்டும். அதன் பின்னே மற்றவை பற்றி யோசிக்க வேண்டுமென தீர யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்தாள்.

 

ஆனால் ஆதியின் மௌனத்திற்கு காரணம் அவன் மனதில் காதல் மலரை, மலரவைத்தவளை என்று எண்ணி தான் என்பது மதிக்கு தெரியாமல் போனது காலத்தின் கட்டாயமோ.