Advertisement
முகிழ் – 13
அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு இனியனின் முகம் கண்முன் தோன்ற…… இனியனை ஒருநொடி கூட கணவனாக என்ன இயலாது என்று உணர்ந்தவள் பேசும் சக்தி கூட அற்று, “க்ரிஷ்ணவ் ….” என்று மட்டும் ஒருமுறை மனதினுள் சொல்லி ஊமையாய் அழுதாள்.
அம்மாவின் உடல் நலம் ஒருபுறமும், மறுபுறம் அவள் யாரை இன்னமும் காதலிக்கிறாளோ, அவனை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாது போதும் அவனையும் அவன் காதலையும் அவள் மறக்காத நிலையில் இன்னொருவனின் தாலி அவள் கழுத்தில் இருப்பதை அவளால் தாளாமுடியவில்லை.
இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அதே நேரம் தன் அன்னையின் உடல் நிலையை விட தன் காதல் பெரிது என்று எண்ணவோ தந்தையிடம் கூறவோ முடியவில்லை அவளால்.
“மதி உன் நிலைமை புரியிது டா….ஆனா எங்க நிலைமையும் யோசிச்சு பாரு. உனக்கு இப்படி ஆனது கேள்விப்பட்டு அவளுக்கு அட்டாக், டாக்டர் கண்டிப்பா ஆப்ரேஷன் பண்ண சொல்லிட்டாங்க….இந்த நிலமையில நமக்கு உதவி பண்ண தான் மாப்பிள்ளையை அனுப்பி இருக்காரு அந்த கடவுள் …வேற வழி இல்லாது போக தான் இப்படி செஞ்சோம் மதிமா, புருஞ்சிக்கோ பாப்பா ” என்று அவளின் தந்தை கூற, இத்தனை நேரம் ஊமையாய் அழுதவள், இப்பொழுது, “எல்லாமே புரியிதுப்பா, ஆனா எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலப்பா, பிடிக்கவே இல்லையே” என்று வாய்விட்டு கதறவும் அந்த அறைக்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
அறைக்கதவு திறந்துக்கொண்டு வந்தவனை பார்த்து திகைத்த மதி, மேலும் தன் நிலையை எண்ண, அவள் கண்களில் கண்ணீரோ வெள்ளமாக பிரவாகமெடுத்தது.
அங்கு நின்று இருந்தவன், “ஆதித்ய க்ரிஷ்ணவ்”….
மதியின் மனமோ, “நீ மணமாகாதவன் என்று நேற்று தான் அறிந்துக் கொண்டேன் ஆனால் இன்று என்கழுத்தில் வேறு ஒருவரால் கட்டப்பட்ட மாங்கல்யம்” என்று நினைத்தவள் அதற்கு மேலும் ஆதியை பார்க்க சக்தியற்றவளாக தனது பார்வையை மறுப்பக்கம் திருப்பிக் கொண்டாள். ஆனால் அவளது மனமோ ஊமையாக அவனிடம்,
மாயவனே
மறைந்து மறைந்து
நீ அறியாமல்
உன் மீது என் பார்வை படிய
என் மனமோ
எனக்கே மறைத்து மறைத்து
நேசம் வளர்க்க
மனதில் பிறந்தது
காதல் குழந்தை;
உன்னால் பிறந்த காதல்
உனக்காக மட்டுமே
உயிருள்ளவரை;
உன்னோடு பிரிந்தாலும்,
ஒருமுறை உனக்கான காதலை
ஈன்றெடுத்த என் மனமோ
இப்பொழுது மலடியாகியது;
வேறு யாருக்காகவும்
என் மனதில் காதல் பிறவாது
அது அறியாது,
மனதால் உன் மனைவியான
எனக்கு ஏன் இந்த மறுமணமோ?
இது எல்லாம் ஓரிரு நொடிகளில் நடந்துவிட, மதியின் தந்தை அவசரமாக ஆதியை கண்டவுடன் மதி பேசியது அவர் காதில் விழுந்திருக்குமோ என்று அஞ்சியவராக ஆதியிடம், “மாப்பிள்ளை நீங்க எப்ப வந்தீங்க, வாங்க மாப்பிள்ளை வந்து உக்காருங்க” என்று கூற மதி சட்டென ஆதியையும், அவளின் தந்தையையும் பார்த்து விழித்தாள். ஒரே நாளில் மதிக்கு 2ஆவது முறையாக உலகம் தலை கீழாய் சுழன்றது.
அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள் ஆதியின் செவிகளில் நன்றாக விழுந்தது என்பதை மதியின் தந்தை அறியவில்லை.
“ஹ்ம்ம் பரவில்ல சார், அம்மா உங்கள கூப்பிட்டாங்க” என்று ஆதி மதியின் தந்தையிடம் கூற, அவரோ, “என்ன மாப்பிள்ளை, சார்னு கூப்பிடறீங்க, மாமா னு கூப்பிடுங்க ” என்று கூற ஆதியோ, “சரிங்க மாமா” என்று சிறு சிரிப்போடும் இரண்டே வார்த்தையோடும் முடித்துக்கொண்டான்.
“நீங்க இங்க மதிகூட இருங்க மாப்பிள்ளை நான் அக்காவை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறி மதியிடமும், “மதிமா மாப்பிள்ளைகிட்ட பேசிக்கிட்டு இரு” என்று கூறி சென்றார்.
ஆதியிடம் பேச ஏங்கிய தருணங்கள் எத்தனையோ, ஆனால் இன்று, கதிர் முற்றிய நெர்த்தாளாய் மதி தலை கவிழ்ந்திருக்க அங்கே மௌனமே பூத்திருந்தது. ஏனெனில் என்ன நடந்தது என்பதை அவள் அறிய வேண்டுமே முதலில். அடர்ந்த ஒளி புகாத வனத்திலிருப்பது போல ஏதுமறியாமல் நின்றிருக்க ஆதியிடம் எப்படி பேசுவது.வார்த்தைகளுக்கு வழி இல்லாது போகவே, ஆதி அவ்வறைவிட்டு அகல நினைக்க, அதே சமயம் சிநேகனும் அவர்களுக்கு, “தான் இடைஞ்சலாக இருக்க கூடாது” என எண்ணி வெளிச்செல்ல எத்தனிக்க “ஒரு நிமிடம்” என்ற மதியின் அழைப்பு இருவரையும் கட்டிப்போட்டது.
தன்னைத்தான் கூப்பிட்டாளோ என்று எண்ணி திரும்பிய இருவரையும் பார்த்த மதி ஆதியிடம், “நான் கொஞ்சம் சிநேகனிடம் பேசவேண்டும்” என கூற, திரும்பிய இருவரையும் அவமதிக்காமால், ஆதியிடம் வேண்டுகோளையும், சிநேகனிடம் இங்கேயே இரு என்ற செய்தியையும் ஒரே வாக்கியத்தில் கூறிய மதியை நினைத்து சினேகனுக்கு பெருமையாய் இருந்தது.
ஏனெனில், மதி அவனிடம் மட்டும் பேசவேண்டும் என்று கூறி இருந்தால் நிச்சயமாக ஆதிக்கு ஒரு மாதி ஆகியிருக்கும் என்று சினேகன் உணர்ந்ததாலே அவன் அவளை பெருமையாக நினைத்தான்.
ஆதி சரி என்பதற்கு அறிகுறியாய் அங்கிருந்து சென்றுவிட மதியின் மனதினுள் அரித்துக் கொண்டிருந்த அத்தன்னை கேள்விகளும், தேன் கூட்டிலிருந்து கலைக்கப்பட்ட தேனிகளை போல மதியின் மனக்கூட்டில் இருந்து வெளிப்பட்டது.
“சினேகன், இங்க எப்படி நான் வந்தேன்?, அங்கு என்ன நடந்தது?, நீ எப்படி தப்பித்தாய்?, அம்மா அப்பா க்கு யாரு சொன்னது?, அப்பா, அக்கானு சொல்லி யாரையோ பாக்க போறாரே… அது என்ன?, க்ரிஷ்ணவ்… ஐ மீன் ஆதி கூட எப்படி கல்யாணாம்?, ஆதி எப்படி இதுல சம்மந்தப்பட்டாரு? அந்த ரௌடிங்க என்ன ஆனாங்க?… ப்ளீஸ் இதெல்லாம் எனக்கு சொல்லு சினேகன் ” என்று படபடவென அந்த பலவீனமான நிலையிலும் கூறிவிட்டு மூச்சு வாங்கிகொண்டிருந்தவளின் நிலைமையை சிநேகனால் நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிந்தது.
“ரிலாக்ஸ் மதி, கொஞ்சம் பொறுமையாய் கேளு…நான் உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்… நீ முதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு” என்று கூறி அவளிடம் பருக தண்ணீரை குடுத்தான். அதை வாங்கி சிறிது அருந்திவிட்டு, அவனது பதிலுக்காக அவனை ஒரு எதிர்பார்போடு பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவன் அவளிடம் மெல்ல நேற்று நடந்ததை விவரிக்க தொடங்கி இருந்தான் அவளின் நண்பன்.
“நேத்து நீ என்கிட்டே போன் ல சொன்னத வச்சு உனக்கு ஏதோ ஆபத்துன்னு வந்தேன், அப்ப தான் உன்ன காப்பாற்ற முயற்சி செஞ்சப்ப, அதுல 2 தடியனுங்க என்ன பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. உன்ன எப்படியும் காப்பாற்றனும் போராடினே… ஆனா அவனுங்கள சாமளிச்சு நான் வரதுக்குள்ள உனக்கு நினைவு தப்ப ஆரம்பித்தது. நீ கார்ல இருந்து வெளில விழுந்ததும் உன்ன தாங்குனதே ஆதி சார் தான்.
அவரு, அவரோட அம்மா, அப்புறம் கூட ஒரு பொண்ணு வந்திருந்தாங்க போல, அவுங்க கிட்ட உன்ன சேத்துட்டு எனக்கு உதவி செஞ்சாரு. அப்படியே கூட்டம் கூட ஆரம்பிக்க அவனுங்க என்ன தள்ளி விட்டுட்டு ஓடிட்டாங்க. ஆனா ஆதி சார் உன்ன கார்க்கு இழுத்துட்டு போனவன அடிச்சாரு பாரு செம, எனக்கு ஏதோ சினிமா பாக்குற மாதி இருந்துச்சு.
அதுக்கப்பறம் உன்ன ஆதி சாரோட கார்ல தான் கொண்டு வந்து இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். உங்க வீட்டிற்கு தகவல் சொல்ல சொன்ன போது எனக்கு அத கூட சொல்ல முடியல, உன் தலையில ரத்தத்த பார்த்ததும் நான் ரொம்பவே பதறிட்டே, என்னோட பதட்டத்த பார்த்துட்டு ஆதி சாரோட அம்மா தான் என்ன போன் ல சொல்ல வேணாம் னு சொல்லிட்டாங்க. நிலைமைய பக்குவமா எடுத்து சொல்ல சொல்லி ஆதி சாரயே உங்க வீட்டுக்கு போக சொன்னாங்க, என்னையும் வழிகாட்ட அனுப்பினாங்க.
அங்க நாங்க போனப்ப உங்க வீட்ல முழுசா எதுவும் சொல்லாம அவுங்கள பக்குவமா பேசி ஆதி சார் கூப்பிட்டு வந்தாரு. நானும் கூட இருந்ததுனால அம்மாவும், அப்பாவும் வந்தாங்க, அவுங்ககிட்ட உனக்கு லேசான மயக்கம் னு தான் சொல்லி கூப்பிட்டு வந்தோம்.
இங்க வந்து உன் தலையில கட்டு, உனக்கு ப்ளட் லாஸ்நாலா உன்ன ஐ.சி.யுல வச்சுருந்தது எல்லாத்தையும் பார்த்த உங்க அம்மாக்கு அட்டாக் வந்திருச்சு. உங்க அப்பா அந்த நிமிஷம் அழுதது என் கண்ணுலயே இருக்கு மதி, ஒருபுறம் நீ மறுபுறம் அம்மானு அப்பா தவிச்சு போயிட்டாரு.
அவர பார்த்த ஆதி அம்மா, ஒரு சில நிமிடம் யோசனைக்கு பிறகு அவரு தன்னோட ஒண்ணுவிட்ட தம்பின்னு தெருஞ்சுகிட்டாங்க. ஆனா அப்பா இருந்த மனநிலமையில அதெல்லாம் அவரால உணரக்கூட முடியல.
அவுங்க சொன்னத அப்பா உணருவதற்கே சில நிமிடம் ஆச்சு மதி. அதுக்கு அப்புறம் அவருக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதலான அவரோட அக்காகிட்ட அதான் ஆதியோட அம்மா கிட்ட கதறி அழவே ஆரம்பிச்சிடாரு. அத பார்த்த என்னாலயே தாங்க முடில மதி.
ஏதோ ப்ரெச்சனையால ஆதி சாரோட அம்மா சொந்த பந்தம் கிட்ட இருந்து விலகி இருக்காங்கலாம். ஆனா உங்க அப்பா முன்னாடி, ஆதி சார் அம்மாகிட்ட ரொம்பவும் பாசமா இருப்பாங்களாம். ஆதி சாரோட அம்மாக்கு உங்க அப்பானா ரொம்ப பிடிக்குமாம். இப்ப அப்பாவ இந்த நிலமையில பார்த்தவங்க அப்படியே உடைஞ்சு போய்டாங்க.
அதுக்கப்பறம் உங்க அம்மாக்கு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ண சொன்னாங்க, ஆனா சின்னதோ பெருசோ இதயத்துல ஆப்ரேஷன் அப்படிங்கிற போது நாங்க எல்லாருமே ரொம்பவே பயந்துட்டோம்.
அம்மா உன் பெயரே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு ஆப்ரேஷன் க்கு ஒத்துழைக்கல, அவுங்களுக்கு உன்ன, உன் வாழ்க்கைய நினச்சு பயம்.
எங்க இந்த ஆப்ரேஷன்க்கு சம்மதிச்சா உன் கல்யாணத்த பாக்குறதுக்கு முன்னாடி எதாச்சும் ஆகிடுமோனு…. நாங்க எவ்ளோ எடுத்து சொல்லியும் அவுங்களுக்கு புரிய வைக்க முடியல்ல. பிடிவாதமா இருக்கும்போது, நோயாளி ஒத்துழைக்காம எதுவும் செய்ய முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்ல, உங்க அப்பா இடிஞ்சு போய்ட்டாரு.
அதுக்கப்பறம் ஆதியோட அம்மா தான் நிலைமைய கையில் எடுத்துக் கொண்டு ஆதி யை பேசி சம்மதிக்க வச்சு உங்க அப்பா கிட்ட சொல்ல, உங்க அப்பா ஆதி சாரோட அம்மா கைய பிடிச்சுகிட்டு ஒரு வார்த்த கூட பேசல, ஆனா அவரு சிந்துன கண்ணீர் அத்தனையும் உன்மேலையும், உன் அம்மா மேலயும் வச்சிருந்த அளவு கடந்த பாசம் தெருஞ்சிது, சரியான நேரத்துல உதவி செஞ்ச ஆதியோட அம்மா மேல அவருக்கு இருந்த பாசமும் நன்றியும் புருஞ்சுக்க முடிந்தது.
ஆனா மதி, ஆதி சார் முதல்ல சம்மதிக்கல அதுக்கு அப்புறம் அவுங்க அம்மா என்ன சொன்னாங்கனு தெரியல அதுக்கு அப்புறம் தான் சம்மதித்தார்.
அதுக்கு அப்புறம் உன் கல்யாணம், அம்மாவோட ஆப்ரேஷன் இப்படி எல்லாமே முடிஞ்சு இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு மதி.
ஆனா ஆதி சார் ரொம்ப நல்லவரு, உனக்கு இந்த கல்யாணம் பிடிக்காமல் இருக்கலாம், ஆனா ஆதி சார், அவுங்க அம்மா எல்லாரும் நமக்கு பண்ணின உதவிய நினச்சு அப்புறம் அம்மாவோட உடல் நிலை எல்லாம் யோசித்து பேசு மதி” என்று சினேகன் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அறையின் உள்ளே மதியின் தந்தை வந்தார்.
உள்ளே வந்தவர் முகத்திலிருந்த நிம்மதி மதிக்கும் ஒருவிதமான அமைதியை கொடுத்தது. “ஆதியை தவிர வேறு ஒருவனை அவளால் மணக்க இயலாது அது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை ஆதியை விட்டு விலகி வந்ததிற்கான காரணமும். ஆனால் அதை எதுவும் யோசிக்கும் தருணம் இது இல்லை. முதலில் அன்னையின் உடல் நிலை தான் முக்கியம்.” என்று அவள் மனம் கூற அமைதியாக அமர்ந்திருந்தாள்
அவனை திருமணம் செய்துகொண்டது, அவள் மனதை ஆட்சி செய்பவன்தான் அவளது கணவனும் கூட இப்பொழுது. ஆனால் அதை ரசிப்பதா? வெறுப்பதா? என்று அவளுக்கு சரியாக புரியவில்லை. ஆனால் அவள் மனதில் ஒருவித அமைதி.
அந்த அமைதி நிச்சயமாக புயல் வரும் முன்னால் இருக்கும் அமைதி அல்ல. புயல் ஓய்ந்த பின்னால் வரும் அமைதி.
அவள் தன் சிந்தனையோடு உலன்ற நேரத்தில் தன் முன் நிற்பவர்களை அவள் கவனிக்கவில்லை. “மதிமா, மதி இங்க பாரு இவுங்க என்னோட அக்கா… என்னோட சிவகாமி அக்கா” என்று மதியின் தந்தை கூற அப்பொழுது தான் அவள் எண்ண ஓட்டத்தில் இருந்து வெளிப்பட்டவள் அவர்களிடம் பேச எண்ணி மெதுவாக எழுந்து அமர முயற்சி செய்தாள்.
அது முடியாமல் அவள் முகம் சுனங்க, ஆதியின் அன்னை அவசரமாக அவள் அருகில் வந்து, “நீ ரெஸ்ட் எடு மா, எழுந்திரிக்காத, நேற்று உன் நிலைமை பார்த்து நாங்க ரொம்பவும் பதறி போய்ட்டோம்டா, அதுவும் இன்னைக்கு சாயுங்காலம் வர நீ கண் திறக்காம இருக்கவும் உன் அப்பா தான் ரொம்ப துடிச்சுடான்டா” என்று கூறி பரிவுடன் அவள் தலை முடியை கோதிவிட்டார்.
அந்த சிறு செய்கையிலே மதியின் மனதில் அவர் உயர்ந்து நின்றார். அவள் உயிராய் நேசிக்கும் ஆதியின் அன்னை, அவள் அன்னையை காப்பாற்றியவர் என்று அவர் மீது அவரை பார்க்காமலே மதி கொண்டிருந்த அபிமானம் பலநூறு மடங்காக ஏறியது இந்த சிறு சந்திப்பில்.
அவரிடம் மதி பலவீனமான குரலில், “சினேகன் சொன்னான், நீங்க மட்டும் இல்லையென்றால் நிச்சயம் அப்பா உடைஞ்சு போயிருப்பார், எனக்கு எல்லாமே என் அப்பாவும் அம்மாவும் தான், நீங்க அவுங்க 2 பேரையும் எனக்கு திரும்ப தந்து இருக்கீங்க” என்று கண்ணீர் ததும்ப கூறியவள் மனதினுள், “இரண்டு இல்லை என் வாழ்கையின் 3 முக்கிய நபர்களை திரும்ப தந்து இருக்கீங்க” என்று மௌன வார்த்தைகளை அவளுள் உதிர்த்துக் கொண்டாள் யாரும் அறியாமல்.
இவை அனைத்தையும் ஆதி அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனை நேரம் மதியின் அன்னை அறையில் இருந்த நிலா, இப்பொழுது மதியின் அறைக்குள் வந்தவுடன், “ஹெலோ மதி…நான் நிலா… இதோ நான் ஆதியோட கசின், அப்புறம் இவுங்க என் செல்ல சிவகாமி டார்லிங், எனக்கு உங்கள நேற்றிலிருந்து தெரியும், என்ன உங்களுக்கு அறிமுக படுத்தவே இப்ப வந்தேன், நீங்க இப்ப எப்படி இருக்கீங்க மதி, ஆதி அத்தான் லக்கி தான்…ஏன்னா நீங்க இப்படி அடிப்பட்டு இருக்கும் போது கூட ரொம்ப அழகா இருக்கீங்க” என்று வாய் மூடாமல் கடகடவென பேசி முடித்தாள்.
நிலாவிற்கு புன்னகையை பதிலாக அளித்தவளின் கண்களோ ஆதியை தழுவி நின்றது. ஆனால் ஆதி அதை அறியவில்லை. மெல்ல நிலா விடம் பேச முயன்ற மதியை தடுக்கும் விதமாய் அங்கே ஒரு செவிலியர் வந்து அனைவரையும் சிறிது நேரம் வெளியில் இருக்குமாறு கூற நிலா மதியிடம், “பரவா இல்ல மதி, நீங்க ரெஸ்ட் எடுங்க இனி நம்ம எப்பவேணும்னாலும் பேசலாமே….நான் அம்மா ரூம்ல இருக்கேன்” என்று கூறி விட்டு நகர்ந்தாள்.
அவர்கள் அனைவரும் வெளியில் சென்றவுடன் மதியின் மனமோ இன்னமும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் இல்லாமல் போக, “ஆதி எப்படி என்னை 2 முறை காப்பாற்றினார், அப்பா என்ன சொன்னாரு?, இனியன்….இனியன் தானே என்ன காப்பாற்றியது, அப்பா க்கு இப்படி 2 முறை நடந்ததுன்னு யாரு சொல்லி இருப்பா? ” என்று பலவாறு கேள்விகள் அவள் மூளைய குடைய சிநேகனிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தாள்.
இந்த யோசனையில் உலன்றவள், ஆதி ஏன் திருமணத்தை முதலில் மறுத்தான் என்பதை மட்டும் அந்த நொடியில் யோசிக்க தவறினாள்.
வெளியே சென்ற ஆதி, நடந்து முடிந்த திருமணத்தை தடுக்க முடியாமல் போனதை நினைத்து துடிக்க, ஆதியே அவள் கணவன் என்பதை மதி இன்னும் நம்பமுடியாமல் தவிக்க, மதிக்கு திருமணம் ஆனதை அறியாமல் இனியன் மதியின் நினைவில் திளைக்க, மதிக்கு நாளை அழைத்து பேசவேண்டும் என்று இனியன் முடிவெடுக்க அந்த இரவு அவர்களுக்கு அவரவர் சிந்தனையில் கரைய ஆரம்பித்தது.