Advertisement

.

முகிழ் – 17

 

அவன் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, அந்த கவிதையின் கீழ் சிறிதாக க்ரிஷ்ணவ் என்று வழக்கம் போல் மதி கிறுக்க அந்த நேரம் சரியாக நிலா மதியை அழைக்க, மதி அப்படியே அந்த குறிப்பு திண்டை விட்டுவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.

 

“என்ன நிலா? ஏன் கூப்ட” என்று கேட்க, நிலாவோ சந்தோசத்தின் உச்சத்தில் “இன்னைக்கு ராமு அண்ணா (அங்கு வேலை பார்ப்பவர்) மிளகா பஜ்ஜி போட்ருக்காங்க… அது தான் கூப்டேன்” என்று கூற மதியோ, “அடிப்பாவி இதுக்கா? ஒரு பஜ்ஜிக்கா? நான் கூட உன்னோட பாவா வந்துருக்காரு நினச்சேன்? … என்ன மா நீங்க இப்படி பண்றீங்களே மா” என்று கூறி போலியாக அலுத்துக்கொண்டு, மதி தலையில் கை வைத்தாள்.

 

அதற்கு நிலாவோ, “பாவானா யாரு டி?” என்று கேட்க மதியோ, “பாவானா கணவர்னு அர்த்தம், சும்மா ரைமிங்கா இருக்கட்டும்னு சொன்னேன்” என்று கூற நிலாவும் அதே பாணியில், “ஒ அப்படியா …சரி சரி பாவாவ அப்புறம் பாக்கலாம் இப்ப பஜ்ஜிய பாக்கலாம்” என்று சிரித்தப்படியே சாப்பாடு அறை நோக்கி மதியை அழைத்துக்கொண்டு சென்றாள்.

 

இங்கு மதியோ நிலாவோடு அரட்டையில் இறங்க அங்கு ஆதி அழைப்பை ஏற்றிருந்தான். அவனிற்கு மழை காரணமாய் தொலைபேசியில் சமிக்ஞை (Signal) சரிவர கிடைக்காமல் போக ஆதி சாளரம் நோக்கி வந்தான்.

 

மதி அமர்ந்து கவிதை எழுதிய அதே இடத்தில் அவனும் அமர்ந்து பேச தொடங்கினான்.

 

ஆதியிடம் மறுமுனையில் பேசியவர், மதியின் அலுவலகத்திலிருந்து ஒருவரின் உதவிக்கொண்டு அவர்களின் அலுவலக தகவல் களஞ்சியத்தில்இருந்து எடுத்துக் குடுத்ததாகவும் அதை அவர் ஆதியின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறியவர் கூடுதல் விவரமாக மதுரையில் உள்ள அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியின் தொலைபேசி எண்ணும் வாய்மொழியாக அவர் சொல்ல எத்தனிக்க அதை தனது கைபேசியில் பதியலாம் என்று எடுத்தவன் மதி அங்கு விட்டு சென்ற குறிப்பு திண்டு, கடல் காற்றால் படபடத்ததை பார்த்தவன், அதில் எழுத எண்ணி கையில் எடுத்து தொலைபேசி எண்னை குறித்தான்.

 

மேற்கொண்டு அவரிடம் சில தகவல்களை கேட்டறிந்தவன் அழைப்பை துண்டித்துவிட்டு கையிலிருந்த அந்த குறிப்பு திண்டை பார்த்தவன் கண்கள் கூர்மையாகி அந்த எழுத்துக்கள் மீது நிலைகுத்தி நின்றன.

 

“க்ரிஷ்ணவ்…….”

 

அந்த எழுத்துகளை பார்த்தவன் புயலை விட வேகமாக அவனின் அலுவல் அறைக்குள் நுழைந்தான். அவனிடம் இருந்த டைரியை வேகமாக எடுத்தவன் இரண்டில் உள்ள எழுத்துக்களையும் பார்த்தவன் சந்தோசத்தின் உச்சிக்கு சென்றான். இரண்டில் உள்ள கை எழுத்துக்கும் உள்ள ஒற்றுமை, அப்படியே நகல் போல காட்சி அளித்தது.

 

மேலும் உறுதி படுத்தும் விதமாக அவன் அவனுடைய மின்னஞ்சலை உயிர்பிக்க மழையின் காரணமாக பிணைய தடங்கல் (net work down) ஏற்பட்டு இருந்தது. அவன் கை பேசியில் பார்க்க, அங்கும் அவனால் அதை தெரிந்துக்கொள்ள முடியாமல் சிக்னல் சுத்தமாக போய் இருந்தது.

 

மதியிடம் ஓட சென்ற கால்களை கட்டி போட்டான் ஆதித்யன். ஏனெனில் அவள் தான் என இப்பொழுது தெரிந்தாலும் இன்னும் அந்த ப்ராஜெக்ட் ரிபோர்ட்யும் பார்த்துவிட்டு அதன் பிறகு பேசு என்று இலவச ஆலோசனை அவன் மனசாட்சி கொடுக்க அந்த அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்துக்கொண்டிருந்தான்.

 

ஒருகட்டத்தில் அமர்ந்தவன் அந்த டைரியை ஆசையுடன் வருடியவன் அந்த நாளுக்கு சென்றான்.

 

‘அன்று அந்த காவ்யா செய்த வேலையால், கோவத்துடன் ரிசார்ட் நோக்கி நடந்தான். ஒன்று காவ்யா மீது, மற்றோடு இவ்வளவு நடந்தும் ஆதியிடம் மறைத்த அகிலனிடம்.

 

அவன் எதிர்பாராதபடி அங்கு இருந்த அகிலனின் நிலை ஆதியின் கோவத்தை குறைத்திருந்தது.

 

அவன் நேற்று போலவே இன்றும் இருந்திருந்தால் நிச்சயம் ஆதி அவனை அடிக்க கூட செய்திருப்பான்… ஆனால் அகிலன் வழக்கமாக உடை அணிந்து பார்வையில் ஒரு தெளிவோடு அங்கே நடக்கும் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அருகில் வந்த ஆதியிடம், “டே மச்சா, நேத்து நீ கேட்டதுக்கு ஒரு கோழை போல ஓடி வந்துட்டேன் டா, இப்ப சொல்றேன் மச்சி, அந்த காவ்யா என்ன விரும்பல, உன்ன விரும்புறதா சொன்னா.. அதாவது உன்னையும் இல்ல பணத்த… அது தான் உண்மை. இப்படி ஒருத்திய நான் காதலிச்சது என் தப்பு” என்று கூறிவிட்டு நேத்து நடந்ததை சுருக்கமாக கூறினான் அகிலன்.

 

மேலும் அவனே தொடர்ந்து, “நேத்து போல ஒரு அவமானத்த நான் என் வாழ்கையில சந்திச்சது இல்லைடா, ஆனா அந்த அவமானம் எனக்கு ஒரு பாடம் சொல்லி குடுத்துருக்கு… வாழ்கையில 2 பேருக்கு தான் மதிப்பு. ஒன்னு பணம் இருக்கணும், இன்னும் ஒன்னு அதிகாரம்.

 

பணத்த நான் நம்பள மச்சா, அப்புறம் அவளுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும், எங்க அப்பா சொல்றது தான் சரி னு தோனுது டா…

 

அவரு ஆசைப்பட்டபடி நான் இனி என்ன முழுமையா தயார் படுத்திக்க போறேன் ஐ.பி.எஸ் க்கு” என்று ஒரு உறுதியுடன் கூறினான்.

 

அவன் அப்படி கூறினாலும் அவன் கண்ணில் இருந்த குறும்பு தனம் காணாமல் போய் இருந்தது. வெறுமை படர்ந்திருந்தது. அவன் பட்ட அவமானம் தான் இவன் மாற்றத்திற்கு காரணம் என்று அறிந்த ஆதிக்கு காவ்யா மீது கொலைவெறி உண்டானது.

 

அவன் நண்பன், அவன் தந்தை ஆசைப்பட்ட படி நடக்க முயல்வதில் ஆதிக்கு மகிழ்ச்சியே என்றாலும் அகிலன் அவனின் தன்மையை இழந்ததில் ஆதிக்கு வருத்தமே. ஆனால் அதை அவன் வெளிக்காட்டவில்லை.

 

அகிலனுடன் ஆதி அன்று முழுவதும் நேரம் சிலவளித்தான். அகிலன் ஏதோ பேச்சுக்கு சொல்லவில்லை, அவன் ஆழ்மனதில் பதிந்துவிட்டது அந்த ப்ரிலிம்ஸ் தேர்வுக்கு முறையாக அவன் தயார் ஆகவேண்டுமென என்று ஆதி அறிந்துக் கொண்டான்.

 

இந்த நிலையில் அவனை காப்பாற்றிய பெண்ணை அறிய மனதில் வேகம் எழுந்தாலும் இப்போது தான் தன் நண்பன் ஒரு பெண்ணால் அவமானப்பட்டு ஏமாற்றப்பட்டு இருக்கின்றான். இந்த நிலையில் இதை பற்றி அவனுடன் பேச வேண்டாம் என முடிவெடுத்தான் ஆதி. அகிலனை தனியே விடுத்து அப்பெண்ணை தேடி போக மனம் இல்லாமலும் அவளை பற்றி அவன் அறிந்த விஷயங்களை இப்பொழுது அகிலனிடம் சொல்வது சரிவராது என்பதாலும் அன்று அவளை அறிய ஆதி முற்படவில்லை.

 

மறுநாள் அகிலன் சென்னைக்கு புறப்படுவதாக கூறினான். மேற்கொண்டு இதில் முழுமையாக கவனம் செலுத்தி அடுத்த வருடம் நடக்க விருக்கும் தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டுமென ஆதியிடம் உறுதி உடன் கூறியவன் அடுத்தநாளே கிளம்பினான்.

 

அவனை வழி அனுப்பிவிட்டு அந்த முகம் அறியா தேவதையின் முகவரியை எப்படி கண்டுப்பிடிப்பது என அவன் போராடி கொண்டிருந்த நேரம் அவன் கண்ணில் மருத்துவர் சொன்ன அந்த பூதபடையன் தென்பட்டார்.

 

அவரை கண்டதும் அவன் விழிகளில் புதுவித ஒளி. அவரிடம் வேகமாக சென்று அப்பெண்ணை பற்றி அவன் குறிப்பு கேட்க அவரோ ஆதியிடம் அவருக்கு தெரிந்த செய்திகளை பகிர தொடங்கினார்.

 

“க்ரிஷ்ணவ் அய்யா, அந்த பொண்ண நான் இதுக்கு முன்னாடியே பாதுருக்கேங்க, எம்முட்ட பேச கூட செஞ்சது… ஆ அது என்னமோ சொல்லிச்சுங்க அய்யா… படிப்பு சமாசராம்…அதுக்கு ஏதோ தகவல் திரட்ட வந்துச்சாம்…. சின்ன பொண்ணு தானுங்க..ஆனா புத்திசாலி…எங்க தொழில் பத்தி விசாரிச்சு…அப்புறம் உங்கள பத்திக் கூட கேட்டுச்சு… நான் உங்கள காமிக்க கூட செஞ்சே….நீ கட்டுறீங்கள அத பத்தி கூட கேட்டுச்சு……

 

அப்புறம் அந்த பொண்ண அப்ப அப்ப பாத்துருக்கேனுங்க… பேரு தெரிலங்க… ஆனா அந்த உசந்த விடுதி இருக்குலங்க…. அந்த பெரிய டீ கடை முனைக்கிட்ட, அங்க தான் தங்கி இருக்குதுன்னு சொல்லுச்சுங்க….

 

அதுக்கு அப்புறம் நான் அந்த புள்ளைய உங்க கூடராத்துகிட்ட பாத்தே, நீங்க உசுருக்கு போரடுணப்ப அந்த புள்ள அழுதுட்டு உங்கள மடில படுக்க வச்சு இருந்ததுங்க…அம்புட்டு தான் தெரியும்ங்க” என்ற அவருக்கு தெரிந்த விவரங்களை கூறி முடித்தார்.

 

ஆதியோ மனதில், “அந்த காபி ஷாப் பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தங்கி இருக்குற பொண்ணு… காலேஜ் படிக்கிற பொண்ணு…இவர கூப்பிட்டு போன நிச்சயமா அந்த பொண்ண கண்டுபிடிச்சிரலாம்னு தோனுது” என அவசர அவசரமாக யோசித்தவன் சிறிதும் தாமதபடுத்தாமல் அவரையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு விரைந்தான்.

 

அவன் அங்கு விரைந்து அங்கு இருக்கும் வரவேற்பரையில் கல்லூரியில் இருந்து வந்திருப்பவர்கள் தங்கி இருக்கும் விவரம் கேட்க அவர்களோ முதலில் இதுபோல தகவல்கள் தர இயலாது என மறுக்க அதன் பின் அவர்களை ஒருவழியாக பேசி சம்மதிக்க வைத்து தகவல் கொடுக்க வைத்தான்.

 

மொத்தம் 3 கல்லூரி, அதில் 2 குழுவினர் ஐ.வி காக வந்திருந்தவர்கள், ஒரு குழுவினர் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தவர்கள். நேற்று மதியம் ஒரு குழுவினரும் மற்றொரு குழு நேற்று இரவும் இன்று காலை ஒரு பிரிவினரும் கிளம்பிவிட்டதாக தகவல் குடுத்தனர்.

 

அந்த 3 கல்லூரி பெயர்களையும் அவன் பெற்றுக்கொண்டான், அவன் மறுபடியும் அவர்களிடம் வேறு ஏதானும் பெண்கள் தங்கி இருந்தார்காளா என்று கேட்க அவர்களோ 4, 5 பெண்கள் தங்கி இருந்தார்கள் அவர்கள் அவர்களின் கல்லோரியோடு சேர்ந்து வரவில்லை, ஆனால் பார்க்கும் பொழுது கல்லூரி படிக்கும் பெண்கள் போல தான் இருந்தார்கள் என கூறினார். மேலும் அவர்கள் கல்லூரி விவரம் ஏதும் கொடுக்க வில்லை என கூறினார்கள்.

 

இதை கேட்டதும் ஆதித்யன் மூளை வேகமாக எண்ணமிட்டது, ” மற்ற இரு குழு டூர் வந்தவர்கள், அவர்களாக இருக்க வாய்ப்பில்லை, ஒன்று ப்ராஜெக்ட் செய்வதற்காக, அங்கே சென்று விசாரித்தால் அவள் யார் என்பதை அறிய முடியும்… அவள் ஏன் எனக்காக கண்ணீர் சிந்த வேண்டும்… ஆபத்து சமயத்தில் காப்பாற்றுவது இயல்பு என்றாலும், அவள் சுவாசத்தை எனக்கு அளிக்க அவள் தயங்கியதாக தெரியவில்லையே…

 

மேலும் எனது அரை மயக்கத்திலும் அவள் சொன்ன வார்த்தைகள்… இது எல்லாம் நிச்சயம் வெறும் உதவிக்காக மட்டும் பண்ணி இருக்க முடியாது… நான் கண்ணு முழிக்காட்டி அவளோட வாழ்க்கை ஏன் முழுமை இல்லாம போகணும்… க்ரிஷ்ணவ் அப்படிங்கிற அழைப்பில இருந்த பரி தவிப்பு இது எல்லாம் என்ன சொல்லுது.. பெண்ணே நீ யார்?

 

ஆனால்……….. எனக்குள் ஏதோ ஒரு உணர்வு அவளுக்கும் எனக்கும் இடையில் இருக்கின்ற உறவை பற்றி… வெறும் உதவியாய் மற்றும் எண்ணவிடாமல் தடுக்கின்றது, அவள் ஸ்பரிசம்… அவள் குரல்… அவள் உதிர்த்த வார்த்தைகள்… இப்படி அத்தனையும் அவள் எனக்கு… “அதற்கு மேல் அவனை யோசிக்க விடாமல் அங்கு வேலை செய்யும் சிப்பந்தியின் குரல் கலைத்தது அவன் எண்ண ஓட்டத்தை.

 

அந்த சிப்பந்தி கையில் ஒரு டையிரியை வைத்திருந்தார். அவர் அந்த வரவேற்பறையில் நின்ற மேலாளரிடம் அதை குடுத்து, நேற்று கிளம்பியவர்கள் யாரோ விட்டு சென்றது, இந்த டையிரி சாளரத்தில் கிடந்ததால் எந்த அறையில் இருந்தவர்கள் விட்டு சென்றார்கள் என தெரியவில்லை என கூறி அவரிடம் ஒப்படைத்தார் அந்த ஹோட்டலின் சட்ட திட்ட படி. சுத்தம் செய்பவர்கள், அறையில் எது இருந்தாலும் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென அங்கே விதிகள் நிர்ணயக்கப்பட்டு இருந்தது.

 

அதை வாங்கி அதில் முதல் தாளில் இருந்த க்ரிஷ்ணவ் என்ற பெயரை வாய்விட்டு படிக்க, அது கிரிஷ்ணவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

 

அவரிடம், அதை தன்னிடம் குடுக்குமாறு வேண்டுதல் விடுக்க அவரோ அது அங்கு தங்கி இருப்பவர்கள் விட்டு சென்றது, மறுபடியும் வந்து கேட்டால் கொடுக்க வேண்டுமென கூற ஆதியோ பேசி பார்த்து முடியாது போக அவன் செல்வ நிலை காட்டி அந்த ரிசார்ட்டின் ஓனர் என்று அறிமுகம் செய்து கொண்டு சில நூறு ருபாய் தாள்களை தந்து அவரிடம் அதை கைப்பற்றினான்.

 

மேலும் அதை யார் வந்து கேட்டாலும் தன்னிடம் கூறுமாறும், அதே போல அவர்களிடம் தனது விலாசத்தையும் கொடுக்குமாறு கூறி சென்றான்.

 

தனது அறைக்கு வந்து அந்த டைரியை படிக்க தொடங்கியவன், அதிலிருந்து அவள் தன்னை நிழலாக பின் தொடர்ந்திருக்கின்றாள் என்றும் அவள் அவனை உயிரினும் மேலாக நேசிப்பதை தன்னை முத்தமிட்ட போது உணர்ந்துக் கொண்டிருக்கின்றாள் என்றும், தன்னிடம் அவள் அன்பை சொல்ல வந்திருக்கின்றாள் என்றும் அறிந்து கொண்டவனால் ஏன் அவள் தன்னை சந்திக்காமல் சென்றாள் என்று மட்டும் அறிந்துக் கொள்ள முடியவில்லை.

 

அவன் மனதினுள், “அந்த குழந்தைக்கிட்ட பேசும் போது, இங்கு இருக்கும் ஒரு சில நபர்கள் கூட பேசும்போது, அகிலனோட அன்னைக்கு பூக்கள் தேடி போகும் போது, அப்புறம் குறிஞ்சி ஆண்டவர் கோவில் னு எல்லா இடத்துலயும் இருந்திருக்கின்றாள். ஆனா எனக்கு அவள தெரியலையே “என்று மருகிகொண்டே அவன் நினைவை அலசி ஆராய்ந்து பார்த்தான் ஏதேனும் பெண்ணை தொடர்ந்து இந்த இடங்களில் பார்த்து இருகின்றோமா என்று.

 

ஆனால் என்ன முயன்றும் அவனுக்கு அப்படி ஒரு பெண் தொடர்ந்ததாக தெரியவில்லை.

 

தன்னை இப்படி நேசித்தவளை, தனது உயிரை மீட்டு தந்தவளை நிச்சயம் அறிய வேண்டுமென உறுதி வேரூண்ட, அவள் வார்த்தைகளும், கவிதைகளும் நீர் ஊற்ற, அவன் மனதில் காதல் மலர்ந்தது. அந்த மலரின் வாசமோ அவள் அவனிற்கு அளித்த அவளது சுவசாமாக திகழ்ந்தது.

 

இறுதியாக இருந்த கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்து பார்த்தவனுக்கு புரிந்த ஒன்று அவள் தன்னை வேணுமென்றே விலகி சென்று உள்ளாள், ஆனால் காரணம் தான் தெரியவில்லை என்பது.

 

அவள் விலகியது விரும்பி அல்ல வாழ்கையை வெறுத்து என்பது அவளது கடைசி வரிகளில் அவன் புரிந்துக்கொண்டான் மேலும் அந்த கவிதைகளின் அருகினில் படிந்திருந்த காய்ந்த நீரின் தடம் மூலமாகவும்.

 

“இதை எழுதும் போது அழுதிருப்பளோ? அவள் கண்ணீர் சிதறி இருக்கின்றதோ? ஆனால் ஏன்?”  என்று பலவாறாக யோசித்தவன் அவளின் காதலின் ஆழம் அவள் எழுதி இருந்த வரிகளில் உணர்த்துக் கொண்டான்.

 

“உன்னை நினைத்த மனது

வேறு ஒருவனை மணக்காது இனி

அப்படி மணந்து விட்டால்

உனக்கும் எனக்கும் வித்தியாசம் ஏது?

உயிர் உள்ளவரை

என் காதல் மட்டும் போதும்

இந்த வாழ்க்கைக்கு”

 

“உயிர் உள்ளவரை என் காதல் மட்டும் போதும் இந்த வாழ்க்கைக்கு” என்பதை மீண்டும் மீண்டும் படித்தவனால் அந்த வார்த்தையை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. அவளை அறிந்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து ஒரு சில முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு அவன் முதலில் அந்த ப்ராஜெக்ட் செய்ய வந்த கல்லூரிக்கு சென்றான்.

 

அங்கு அவனுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் போனதால் மற்ற இரண்டு கல்லூரிக்கும் சென்றான். ஆனால் அங்கேயும் ஏதும் பயன் தராததால் அன்றிலிருந்து இன்றுவரை முடிந்த அளவு தேடினான், தேடுகின்றான் இந்நாள் வரை.

 

சில உதவிகள் நாடி வரும் மழை வாழ் மக்களிடமும் அவ்வபோது அந்த பெண் மீண்டும் வந்தாளா என்று அந்த பூதபடையனிடம் கேட்டு வருகின்றான்.

 

ஆனால் பதில் தான் இல்லை’.

 

அவன் நினைவு அலைகளில் இருந்து மீண்டவன் அவனது தொலைபேசியை பார்க்க இப்பொழுது டவர் இருப்பதாக காட்ட வேகமாக அவனது மின்னஞ்சலில் சென்று அவர் அனுப்பி இருந்த மதியின் ப்ரொஜெக்டை பார்க்க தொடங்கினான்.

 

அதை படித்தவன், அந்த ப்ராஜெக்ட் செய்யப்பட்டிருந்த இடம், வருடம், மாதம், அங்கிருந்த மழை வாழ் மக்களை பற்றிய விவரம் இதன் கூடே அவள் குறிப்பிட்டு இருந்த ஒரு சில மழை வாழ் மக்களின் பெயர்கள் ஆகிய விவரங்கள் இருந்தன. அதில் அவன் ஊன்றி கவனித்தது பூதபடையன் என்ற பெயரை.

 

அதன் பிறகு அவர்கள் வைத்தியத்திலும் கலை தேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டு இருந்தவள் அதற்கு எடுத்துக் காட்டாக மின்சாரம் தாக்கிய ஒருவருக்கு அளித்த சிகிச்சை, அவன் கட்டி கொண்டிருந்த ரிசார்ட் பற்றி, அவன் அவர்களுக்கு வேலை கொடுப்பது என்று அவனது பெயரை குறிப்பிடாது அவள் அழகாக அந்த மக்களின் வாழ்கையை சித்தரித்தும் அவனை மறைமுகமாக பாராட்டியும் பல குறிப்பிகள் எழுதி இருந்தாள்..

 

இவை அனைத்தும் அவன் கண்களுக்கு தப்பவில்லை. இதை படித்து முடித்தவன் அசையாது அமர்ந்தான்.

 

நான்கு வருடங்களாக அவளை தேடித் திரிந்தவன், அவள் இப்போது அவனின் அருகிலே இருப்பதை அறிந்து அந்த நிமிடங்கள் அசையாது இத்தனை வருட ஓட்டத்திற்கும் ஓய்வு தேவை என்பது போல சந்தோசத்தில் உறைந்திருந்தான்.

 

காதலியாக தேடியவள் அவனின் மனைவியாக அவனுக்கு கிடைத்திருப்பதை எண்ணி அவன் வளர்ந்த ஒரு ஆண் மகன் என்பதை மறந்து பருவ நிலையில் இருக்கும் சிறு பையன் போல எழுந்து குதித்தான்… அருகில் இருந்த மேஜை மீது ஏறி அமர்ந்து அந்த டைரியை ஒருமுறை புரட்டினான்.

 

அவனது கை வெகு ஆசையாக அந்த கடைசி கவிதையை வருடியது. அவன் சந்தோசத்தின் உச்சியில் அவனையும் அறியாமல் ஒரு துளி அவன் கண்களில் கசிந்து அந்த கவிதை தாளில் விழுந்தது.

 

அன்று மதி துன்பத்தில் கரைந்து உதிர்த்த அந்த கண்ணீர் துளி மீது இன்று ஆதி இன்பத்தில் திளைத்து உதிர்த்த அந்த கண்ணீர் துளி விழுந்தது. இந்நாள் வரை தொடர்ந்த துன்பம் இனி இன்பமாக மாறபோகிறது என்பதுக்கு சான்றாக.

 

“உயிர் உள்ளவரை என் காதல் மட்டும் போதும் இந்த வாழ்க்கைக்கு” என்ற வாக்கியத்தில், “உயிர் உள்ளவரை நம் காதல் மட்டும் போதும் இந்த வாழ்க்கைக்கு” என்று திருத்தி எழுதினான் ஆதித்யன்.

 

“மதி” என்று ஒருமுறை ஆழ்ந்த குரலில் மெல்ல முணுமுணுத்துக்கொண்டான்… இத்தனை வருடம் நான் தேடி அலைந்தது மதியை தான் என்று உணர்ந்துக் கொண்டான்.

 

முகம் தெரியாமல் தான் நேசித்த ஒருத்தியே இன்று அவனது மனைவியாக. அவளின் முகவரிகூட தெரியாதவன் இனி அவன் வாழ்வில் அவள் சரி பாதியாக.

 

அவன் மனது சிறுபிள்ளை போல கூத்தாடியது. மீசை அரும்பிய பருவ காலத்தில் வரும் காதல் சந்தோசத்தை போல, அவனும் அவன் நிலை மறந்து, அவன் ஒரு தொழிலின் தலைவன் என்பதை மறந்து கல்லூரி செல்லும் மாணவன் போல சந்தோசத்தில் திக்கு முக்காடி கொண்டிருந்தான்.

 

சந்தோஷ நினைவுகளில் திளைத்தவனுக்கு சென்னையில் அவனது அலுவலகத்தில் முதல் முதலாக மதியை பார்த்த நினைவு வந்தது. அவனின் நினைவுகளில் அவள் முகம் கண் முன் தோன்ற அவன் இதழ்களில் மெலிதாக அளவான புன்முறுவல் படர்ந்தது.

 

மென்புறுவல் மலர்ந்த நொடியே அது மாயமாகவும் போனது…

 

அவன் மனமோ மானசீகமாக மதியிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டிருன்தது, “மதி முதல் முறை உன்ன பார்க்கும் போதே உன் கண்ணு என்ன புதுசா பார்க்கிறது போல பாக்காம, ஒரு வித ஏக்கத்தோடும் , ஒரு உறவோடும் பாத்துச்சு….நீ ஏன் முதல் முறையா பாக்குற என்ன, இப்படி பாக்குறனு நான் யோசிக்க தொடங்கும் போது என் அகிலன் பட்ட வேதனைதான் எனக்கு நினைவு வந்தது… அவன ஏமாத்தின அந்த காவ்யாவும் முதல் முறை பார்க்கிறது போல இல்லாம ஒரு பார்வை பார்த்திருந்தா… ஆனா அது எல்லாம் நடிப்பு…. நீயும் அப்படி பாக்கும் போது… உன் உதடு என்னோட ஒட்டாத உறவை காட்டினாலும், உன் கண்கள் எப்பவும் என்னோட உறவு கொண்டாடுச்சு… புதுசா அறிமுகம் ஆகின என்கிட்ட நீ ஏன் அப்படி நடந்துக்கிற, ஏன் இப்படி பாக்குறனு எனக்கு புரியல மதி… அதுனாலா தான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்.. என்னோட ஏளன பார்வைக்கும் பேச்சுக்கும் அது தான் காரணம்… என்ன மன்னிப்பாயா மதி?” என்று மனதினுள் அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.

 

அவன் மறுமணமோ அவனிடம், “4வருடமா மனசுக்குள்ள தான் பேசிட்டு இருக்க, இப்ப அவ உன்கூடவே அதுவும் உன் பொண்டாட்டியா இங்க இருக்கா…போய் இப்ப ஆச்சும் அவகிட்ட நேர்ல பேசு” என்று எடுத்து கொடுக்க மதியை தேடி கிழே செல்ல எத்தனித்தான்.

 

இந்த சந்தோஷ நிகழ்வுகளில் மதி முன்பு ஏன் தன்னை வெளிப்படுத்தாமல் சென்றாள், ஏன் இப்பொழுதும் அவனிடம் தன்னை வெளிப்படுத்தவில்லை, மதி படித்த கல்லூரியில் அவர்களின் மாணவர்கள் அடுக்கம் செல்லவில்லை என்று ஏன் கூறினார்கள் என்று யோசிக்க தவறினான் அந்த தருணத்தில்.

 

இது எதையும் அறியாத மதி கிழே நிலாவோடு மிளாக பஜ்ஜியை மழைக்கு இதமாக உள்ளே தள்ளிவிட்டு தொலைக்காட்சியில் லயித்தாள். அப்போது,

 

சரியா இது தவறா

சரியா இது தவறா

சரியா இது தவறா  

இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல

சரியா……………. காதல் தவறா…………….

வராம இது வளையா

இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல

வரமா…………….. காதல் வளையா……………

 

என்ற பாடல் ஒலிக்க அதில் உள்ள வரிகளை மதி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள். நிலாவிடம் மதி, “நிலா இந்த கதாநாயகன் பேரு என்ன?” என்று எதார்த்தமாக கேட்க நிலாவோ “அகில்” என்று ரசித்து கூறினாள்.

 

அவளின் குரலில் இருந்த மாற்றத்தில் மதி, “என்ன நிலா, எதுக்கு இப்ப நீ இவ்ளோ பீல் பண்ணி சொல்ற? அட உன் முகம் கூட பிரகாசமா இருக்கு, இந்த கதாநாயகனை உனக்கு இவ்ளோ பிடிக்குமா?” என்று கேட்க நிலவோ, “இல்ல மதி இந்த கதாநாயகனை பிடிச்சதுனால இல்ல, இந்த பெயர் சொல்றப்ப என்னோட நாயகன நினச்சுதுனால” என்று அழகாக சிரித்து கண் சிமிட்டி கூறினாள்.

 

அதை கேட்டதும் மனதினுள் மதி, “அகிலா? நம்ம அடுக்கத்துல க்ரிஷ்ணவ் கூட பார்த்தவரா? …” என்று நினைக்க அவள் மனதோ, “அவரா இருந்தா உனக்கு என்ன?” என்ற கேள்வி எழுப்ப அவளோ அவள் மனதிடம், “அந்த அகிலனா இருந்த எந்த பிரச்சனையும் இல்ல… ஆனா க்ரிஷ்ணவ் என்ன அடுக்கத்துல பாக்கல, ஒரு வேலை இவரு என்ன அங்க பார்த்திருந்தா? என்று பதில் கேள்வி கேட்க, அவள் மனமோ மறுபடியும், “அவர் உன்ன பார்த்திருந்தா? அதுனால என்ன? “என்று கேட்க, மதி மனசாட்சியிடம், “இல்ல அவரு என்ன பார்த்ததபோல க்ரிஷ்ணவ் முன்னாடி சொல்லிட்டா, அடுத்து அவர்களை நான் பார்த்துருக்கேனா? அப்படிங்கிற கேள்விக்கு க்ரிஷ்ணவ் கிட்ட பொய் சொல்லணும்… அவருக்கிட்ட பொய் சொல்ல பிடிக்கல… உண்மைய சொன்ன… நான் அவர காதலிச்சதுல இருந்து ஏன் விலகி போனதும் சொல்லணும்…. நம்பிக்கைய பெருசா நினைகிறவர்கிட்ட போய், நம்பிக்கை இல்லாம விலகி போய்டேன்னு எப்படி சொல்றது” என்று அவள் மனதுடன் வாதாடினாள்.

 

“அப்போ என்ன தான் பண்ண போற? ” என்று மனசாட்சி கேட்க, மதியோ மனதினுள், “முதல்ல அவரு ஏன் விலகுராருனு தெருஞ்சுக்கணும், அப்புறம் அவர்கூட சகஜமா பேசணும், என்னோட காதல உணர்த்தணும், அப்புறம் தான் நான் அங்க நடந்தத பத்தி அவர்கிட்ட பேசணும், இப்பவே பேசி ஆதி இந்த உறவுக்கு அர்த்தம் இல்லன்னு சொல்லிட்டா? அத என்னால ஏத்துக்கவும் முடியாது, தாங்கிக்கவும் முடியாது” என்று கூறி முடித்தாள்.

 

இறுதியாக அவள் மனம், “அகில் என்றால் அந்த ஒருவன் மட்டும்தானா? அவன் தான் கொடைகானால்ல வேறு ஏதோ பொண்ண லவ் பண்றதா சொன்னானே… இது வேற யாரோ” என்று அவளது சிந்தனைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு நிலாவிடம் திரும்பினாள். 

ஒரு சில நிமிடங்கள் யோசனைக்கு சென்று மீண்டவளை பார்த்த நிலாவோ அவளிடம், “நல்லா தான் இருக்க, ஆனா அப்ப அப்ப ஆப் ஆகிடற, அநேகமா மைண்ட் வாய்ஸ்ல பேசுறன்னு நினைக்றேன்…அப்படி என்னதான் யோசனை மதி” என்று கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வது என ஒரு நொடி தடுமாறியவள் ஏதோ சமாளிக்க எத்தனிக்க, நிலா திடீர் என்று எழுந்து நின்றாள். 

திடீர் என்று எழுந்து நின்ற நிலாவின் முகம், நிஜ நிலாவின் முகத்தை ஒத்திருக்க, நிலாவின் முகமாற்றத்திற்கு காரணம் அறியாது மனதினுள், “பஜ்ஜிய விட வேற ஏதோ சூப்பர் ஸ்நாக்ஸ்அ யாரும் கொண்டு வந்துடாங்களோ?” என்ற எண்ணமிட்டபடியே வாசலை பார்க்க அங்கு க்ரிஷ்ணவின் நண்பன் அகில் நின்று கொண்டிருந்தான்.

 

“அகில்? கடவுளே…. இப்ப தான் நினச்சே, அதுக்குள்ளையா? , ப்ளீஸ் அகில் க்கு என்ன நிச்சயம் ஞாபகம் இருக்க கூடாது, “என்று மானசீகமாக வேண்டி கொண்டிருந்தாள். 

அதற்குள் நிலா வேகமாக அவன் முன் சென்றவள், “அகில்…. நீங்க. நீங்க ஏன் இப்ப வரேன்னு சொல்லவே இல்ல…. “என்று முகம் முழுக்க சந்தோசம் படர கேட்க அகிலோ பழைய கலகலப்பு எதுவும் இன்றி அளவான சிரிப்போடு, “இல்ல நிலா, போன வொர்க் முடிஞ்சிடுச்சு, சரி நேர்ல வந்தே சொல்லிக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன்” என்று கூறினான். 

நிலா வேகமாக அகிலனின் கை பற்றி இழுத்துக்கொண்டு மதியின் அருகில் வந்தவள், “மதி, இவரு இவரு தான் என்னோட அகில், அதாவது உன்பாசைல சொல்லனும்னா என்னோடா பாவா, சார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட், போலிஸ்ல, அதான்…. வீட்டுக்கு வந்தும் அதே நினைப்போட இப்படி விரச்சுக்கிட்டு நிக்கிறாரு” என்று கண் சிமிட்டி காதலோடு கூறினாள். 

“மதி, இவரு என்னோட ஹஷ்பண்ட் மட்டும் இல்ல, ஆதி அத்தானோட க்ளோஸ் பிரண்டும், இவருக்கு என்ன பிடிக்குமான்னு கேட்டா எனக்கு தெரியல, ஆனா ஆதி அத்தான்னா ரொம்பவும் பிடிக்கும்…. இவர நான் தொரத்தி தொரத்தி லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுட்டேன்” என்று உற்சாகத்தோடு ஆரம்பித்து, ஏக்கத்தோடு தொடர்ந்து, காதலோடு முடித்தாள். 

நிலா, அகில் மீது எத்தனை அதீத அன்பு வைத்திருக்கின்றாள் என்பது நிலா பேசும் போது அவள் கண்களில் கசிந்து உருகிய காதலில் இருந்தே புரிந்துக்கொண்டாள் மதி. 

கீழே இப்படி நடந்துக்கொண்டிருக்க, மதியை அவனுடை மதியை பார்க்கும் ஆர்வம் கொண்டு ஆதி படிகளில் இறங்கி வந்தான். அதே சமயம் நிலவோ அகிலிடம், “அகில், இது மதி, ஆதி அத்தான் ஓட மனைவி, நான் போன்ல சொன்னேன்ல, நேர்ல வந்து நீங்க பார்க்கட்டுமேன்னு தான் நான் போட்டோ கூட அனுப்பல… என்ன அகில்? உங்க நண்பனுக்கு ஏத்தமாதி என் மதி இருக்காளா? “என்று கேட்க, அகிலன் மரியாதையுடன் மதியிடம் வணக்கம் சொல்லியவன் சற்று நிதானித்து, “நான் உங்கள…..” என்று தொடங்க, சட்டென்று மதி, “நீங்க என்ன வா போ னே சொல்லலாம் அண்ணா” என்று மரியாதையாக பேச நிலவோ “அடி பாவி, அண்ணா னு சொல்லி சட்டுன்னு இந்த திடீர் சிடு மூஞ்சிய ஆப் பண்ணிட்டாளே” என்று மனதுனுள் நினைக்க அவர்களது சம்பாசனை தொடங்கியது. 

அகிலன் புன்னைகையுடன் மதியிடம், “சரி மா, எனக்கு உன்ன எங்கயோ பார்த்தது போல இருக்கு…. அத தான் கேட்க வந்தே…. நீ ” என்று யோசித்து தலையை அழுந்த தேய்த்தவனை, வேகமாக யோசித்த மதி ஆதி இங்கு இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு பாதி மெய்யும் பாதி பொய்யும் கொண்டு “அண்ணா, என் சொந்த ஊரு மதுரை, இப்ப இருக்குறது சென்னை, இந்த 2 இடத்துல நீங்க என்ன பாத்துருக்க நிறைய வாய்ப்பு இருக்கு, இதுலாம் ஒரு விஷயமா, இத தவிர நான் வேற எங்கயுமே போனது இல்லையே, வேற எங்கயும் நீங்க என்ன பார்த்திருக்க வாயிப்பு இல்ல அண்ணா” என்று ஒருவாறாக சமாளிக்க, அதை தொடர்ந்து உள்ளிருந்து வந்த சிவகாமி அம்மாள், இளமாறன், மதியழகி என்று வேறு பேச்சில் இறங்க அகிலன் அதை அப்படியே விட்டுவிட்டான். ஆனால் மதியை பார்க்க ஆவளோடு வந்த ஆதி மாடி படிகளில் இறங்கி வர, அவன் மதியின் முதுகு பின்னால் வந்ததால் ஆதி இல்லை என்று எண்ணி மதி கூறிய வார்த்தைகள் ஆதியின் செவிகளில் தெளிவாக விழுந்தது. அதை கேட்க நேர்ந்தது மதியின் கெட்ட நேரமோ? இல்லை அவர்களை தள்ளி வைக்க விதி தான் தொடர்ந்து விளையாடும் சதுரங்க ஆட்டமோ?

 

மழை கொட்டி தீர்த்தபின் 
விட்டு சென்ற குட்டி ஓவியமாய் 
ஏழு நிறம் கலந்து 
அடுக் அடுக்காக அடுக்கப்பட்ட 
அழகிய வண்ண விரிசலோ வானவில் 

சிவப்பு வெளிப்புறம் அடர்ந்திருக்க 
ஊதா உள்புறம் படர்ந்திருக்க 
பஞ்சவர்ணம் இடையில் படர்ந்திருக்க 
வளைந்த வில்லாக ஒரு வானவில்  

அதன் பிரதிபலிப்பாய்
மறு வானவில்  
ஊதா வெளிபுறமும் 
அழகிய சிவப்பு உள்புறமும் அமைந்திருக்க
கண்கள் பார்கின்றது ரெட்டை வானவில்  

விழிகள் கண்டதோ விண்ணில் 
ரெட்டை வானவில் 
நிஜத்தில் உள்ளதோ ஒன்று மட்டுமே 
பார்வை கூறிய பொய்யை 
அறிவு ஆராய்ந்து அறியுமோ மெய்யை ? 

                                     

மதி அகிலனின் பேச்சை கேட்டது மட்டும் அல்லாமல், கண்களால் பார்த்த ஆதித்யன், அறிவானோ ஆராய்ந்து உண்மையை?

 

 

Advertisement