Advertisement

சங்கமும் சந்தோஷமும் – 34
கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, “சொல்றேன்ல…உன்னோட துனிமையெல்லாம் எடுத்து வச்சுக்கோ” என மீண்டும் சொல்ல, விழியோ தந்தைக்கும் கணவனுக்கும் இடையே தடுமாறித்தான் போனாள்.
இதற்கிடையில் விஷயம் காட்டுத்தீயாகப் பரவியிருக்க, பாண்டியும் சக்கரையும் அடித்துப் பிடித்து வந்தனர். அவர்களுக்கும் விழியின் நிலைமை வருத்தத்தைத் தந்தது.
“என்னங்க…” என ஏதோ கூறவர, கை அமர்த்திப் போதும் என்பதாய் தடுத்தவன், “சொன்னா புரியாதா..போ உன்னோட ட்ரெஸ்ஸ எடுத்து வை. அப்படியே எனக்கும்…” எனக் கூற, அவன் கூறியதில் மற்றவர்கள் குழப்பத்துடன் பார்க்க, பாண்டியோ, “வீட்டைவிட்டு தொரத்தப்படுறவங்க தானே பொட்டிய கட்டணும். இங்க என்ன துரத்தி விடறவனும் பொட்டிய கட்ட சொல்றான்? புதுத் தினுசா இருக்கே” எனக் குழம்ப, விழியின் கண்கள் புரியாமல் கதிரவனைப் பார்க்க, இப்போது கந்தசாமி பேசினார்.
“பாப்பா, மாப்பிளையை எதுக்குப் பாக்குற ? போ அவரு சொன்னது போல நாலு நாளைக்கு இரெண்டு பேருக்கும் துணி எடுத்து வை. கண்ணாலம் முடுஞ்சு நாலு மாசமாகுது…மறுவீட்டுக்கு அழைக்கலைனா உங்க அப்பாவை ஊரு என்ன பேசும் ?” எனச் சின்னச் சிரிப்புடன் கூற, பாண்டியோ, “இவனுங்க புதுத் தினுசு இல்ல. குடும்பத்தோட லூசு…” என மனதிற்குள் புலம்பியவன், மெல்ல சக்கரைக்கு அருகே வந்து காதில், “டேய் சக்கர, காலையில ஒன்னு சாப்பிடாம வெறுவைத்தோட வந்துட்டேன். அத இவுங்க பேசுறதெல்லாம் தப்புத் தப்பா புரியுது…பாரேன் பசி மயக்கத்துல இவுங்க சண்டை போடுறது கூடச் சிரிச்சுகிட்டே பேசுறாப்போலத் தெரியுது” எனக் கூறி கண்களை நன்றாகக் கசக்க, ஓங்கி பாண்டியின் தலையில் கொட்டுவைத்த சக்கரை, “அது புரியாம தானடா நாங்களும் நின்னுக்கிட்டு இருக்கோம்…உனக்கு எங்க சுத்தியும் சாப்பிட காரணம் தேவ… கம்முன்னு கவனிடா” எனக் கடிய, “ரொம்பக் கோவமா இருக்கான் போலவே…இவனுக்கும் பசி வந்துருக்கும்” எனச் சொல்லிக்கொண்டு நடக்கின்ற கூத்தை வேடிக்கை பார்க்க, மச்சக்காளையும் பாரிஜாதமும் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தனர்.
அனைவருமே அதே நிலையில் இருக்க, முருகேசன் மாமானாரிடமும் மருமகனிடமும் கேட்க, காட்சிகள் கந்தசாமி கதிரவனின் பார்வைகளில் விரியத்தொடங்கின.
மச்சக்காளை விழியின் வீட்டிற்குச் செல்ல சிறுது நேரத்திற்கு முன்னால் கதிரவன் அங்குச் சென்றுவிட்டிருந்தான். அவனுடைய வேலை அன்றே முடிந்திருக்க, மனைவிக்குப் பிடித்த இருசக்கர வாகனத்துடன் அவள் முன் நாளை செல்லலாம் என்ற எண்ணத்திலும் மேலும் தன் மீது கொண்ட காதலால் தந்தையைப் பிரிந்து நிற்கும் அவனின் கனலியின் துயர் துடைக்கவும் அங்குச் சென்றான்.
கதிரவனைக் கந்தசாமி நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. அதே சமயம் கதிரவன் மீது அவருக்கு எந்தவித கோபமும் இல்லை.
ஏனெனில் அன்று நடந்தது கதிரவனுக்கே அதிர்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவர் அறிந்த ஒன்றே. இன்னும் சொல்லவேண்டுமென்றால் விழியின் மானத்தை பஞ்சாயத்தில் போலவே அன்று திருமணத்திலும் காத்தவன் அவனே. ஏனென்றால், இவள் பொய் பேசுகிறாள் என்று ஸ்திரமாக அவனால் மறுத்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால், அந்த இடத்தில் தன் பெண்ணின் நிலை இன்னமும் கீழாக போயிருக்க கூடும். அவன் அப்படி செய்யாதவரை அவருக்கு நிம்மதியே.
அவருடைய மனதில் இருந்த வேதனைக்குக் காரணம் முழுக்க முழுக்க விழியின் செய்யலே. செய்தவளே விட்டுவிட்டு சார்ந்தவனைத் தண்டித்து என்ன புண்ணியம் ? ஆதலால் சிறிதே தடுமாறினாலும், “உள்ள வாங்க…” என்று அழைக்க, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
முதன் முறையாக வருவதனால், கதிரவன் வீட்டை பார்வையால் அலச, “கோவில் போயிருக்காங்க…நான் மட்டும்தான் இருக்கேன்” எனக் கந்தசாமி பதில் கூற, நேராக விஷயத்திற்கு வந்தான்.
“கனலியை பத்தி…” எனத் தொடங்கியவன், சட்டென்று திருத்திக்கொண்டு, “கனல் விழியைப் பத்தி பேசணும்.
பெருசு பண்ணாதீங்க….நீங்க வயசுலயும் அனுபவித்துளையும் பெரியவங்க. அவளை மன்னிச்சிடுங்களேன்… உங்க பொண்ணு ஒன்னு கொலை பண்ணிடலையே…காதல் தானே பண்ணினா” எனப் பேச, கந்தசாமியோ நிதானமாக, “உயிரை கொல்றது மட்டும் கொலை இல்ல. வச்சிருந்த நம்பிக்கையைக் கொல்றதும் கொலை தானே…” எனக் கேட்க, கதிரவனிடம் பதில் இல்ல.
ஆனால் அவரைச் சமாளித்தே ஆகவேண்டும் என்ற வேகமட்டும் இருந்தது. இருவருமே கவனமாக மாமா என்றோ மாப்பிளை என்றோ அழைப்பதை கவனமாகத் தடுத்திருந்தனர். அதற்குக் காரணம் இன்னதென்று கூற முடியாது. ஆனால் ஏதோவொரு நூழிலை தயக்கம்.
“பொண்ணு இப்படிச் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாருக்கும் கோபம் வரது சகஜம் தான். அது தான் நியாயமும் கூட. ஆனா அதுக்காக…” எனக் கதிரவன் தொடங்க, கந்தசாமியோ, “பொண்ணு சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டானு எனக்குக் கோபமில்லை. தாலி கட்டுனவருக்கே சொல்லாம தாலி கட்டிக்கிட்டாளேன்னு தான் வருத்தம்” என நிதானமாகச் சொல்ல, கதிரவனுள் அப்படியொரு அதிர்ச்சி….
“அப்படினா…உங்களுக்கு ?” எனக் கேட்க, அவரோ, “ஆமா…எனக்கு தெரியும்….ஆனா எனக்குப் புரியாதது, கட்டினவனுக்கும் பிடிக்காம பெத்தவங்களுக்கும் தெரியாம ஏன் இப்படிச் செய்யணும் ? ஏன் செஞ்சான்னு காரணம் தெரிஞ்சாலும் அத வச்சு என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க ? உங்ககிட்ட மறைக்க என்ன இருக்கு ? கோபத்தையும் மீறின பயம் எனக்கு இருக்கு…
பொய்ல வாழக்கை ஆரம்பிக்குமா ?” என முகம் வேதனையில் கசங்க கூறியவரை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“இப்படி ஏற்படுத்திக்கிட்ட வாழ்க்கைல அவ எதிர்பார்க்கிற அன்பும் மரியாதையும் எப்படிக் கிடைக்கும் ? ” எனத் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த விஷயத்தைச் சம்மந்த பட்டவனிடமே சொல்லியே விட்டிருந்தார்.
“நான் ஒன்னு சொல்லவா உங்ககிட்ட ?” எனக் கேட்ட கதிரவனைக் கேள்வியாய் அவர் பார்க்க, “நான் இப்போ உங்க பொண்ணு விழிக்காக இங்க பேசவரல. என்னோட கனலிக்காக வந்துருக்கேன்…அவகிட்ட நான் சந்தோசமா இருக்கியான்னு கேட்டேன். அவளும் சந்தோசமா இருக்கேனு சொன்னா…கூடவே ஆனா..அப்படினு ஏதாவொன்னு சொல்லவந்தது சொல்லாம விட்டுட்டா. அந்தத் தயக்கத்துக்குப் பின்னாடி உங்களோட பிரிவு இருக்கும்னு என்னால உணர முடிஞ்சது.
என்னோட மனைவிக்கு வாழ்க்கைல சந்தோசத்தை மட்டும் இல்ல நிறைவையும் கொடுக்கணும். அது நீங்க வந்தாதான் முடியும்…. என்னோட இந்தப் பதில் உங்க கோபத்தைச் சமன் செய்யாது. ஆனா வருத்தத்தைப் போக்கிடும்னு நம்புறேன்.
நீங்க நாளைக்கு வீட்டுக்கு வரணும்….என்னோட கனலி முகத்துல நான் சந்தோசத்தைப் பார்க்கணும்” எனக் கூற, அப்போது தான் சரியாக மச்சக்காளை வெளியே இருந்து குரல் கொடுத்தார்.
மச்சக்காளை கண்ட கதிரவனுக்கு ஏதோ தவறாகப் பட, “நீங்க போய்ப் பேசுங்க. நான் இங்க இருக்குறத காட்டிக்க வேணாம். அவரு என்ன சொன்னாலும் நீங்க பதில் சொல்லவும் வேண்டாம்….ஏதோ கனலி சம்மந்தமா தான் வந்திருக்காரு” எனக் கூறி அனுப்ப, அவன் கூறியது சரி என்பதைப் போலவே மச்சக்காளையின் செயல்களும் இருக்க, கந்தசாமிக்கு மச்சக்காளையின் பேச்சு அப்படியொரு ஆத்திரத்தை கொடுத்தது. கூடவே யோசனையையும்…..
இப்படி இருவர் இருக்கும் கூட்டத்தில் மகள் எப்படிச் சமாளித்து வாழ்கிறாள்…பிடிக்காது என்று சொல்லிய கதிரவனே தன் மனைவிக்கு என்று வந்து பேசும் உரிமையும் அவரை யோசிக்க வைத்தது. மகள் அன்று கோவிலில் செய்தது ஒரு தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும், அவளை விடமுடியாமல் அதே தந்தை மனம் பரிதவித்தது.
குழப்பத்தில் இருந்தவரை இன்னும் சிலபல வார்த்தைகளைக் கூறி, ஸ்திரமாக மாற்றியவன் கதிரவனே…. மகளின் பாசத்தைக் காட்டி அவர் மூளைக்குள் புகுந்து சலவை செய்ய, அவருடைய மனதை மறைத்திருந்த கோபமென்னும் கரை மெல்ல மெல்ல வெளுத்து தூய்மையானது.
“நாளைக்கு வரேன் மாப்பிளை…” எனக் கந்தசாமி கூற, “கண்டிப்பா வாங்க…ஆனா ஒரு சின்ன விளையாட்டோட உங்க மகளைச் சந்திப்போமா ?” எனக் கேட்டுச் சின்னச் சிரிப்பை தவழ விட, மாமனாரும் மருமகனும் அங்கே ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தனர்….
விழியோடு சேர்த்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவும், மச்சக்காளைக்கும் பாரிஜாதத்திற்கும் பேரதிர்ச்சியைக் கொடுக்கவும் இருவரும் விளையாட்டை ஆரபித்தனர்.
இருவரும் கூறிமுடிக்க , அனைவர்க்கும் அப்படியொரு நிம்மதி….
மெல்ல சிரித்தபடி மச்சக்காளையின் அருகே வந்த கதிரவன், “என்ன மச்சங்களை மாமா ? நீங்க எதிர்பார்த்த காட்சிகள் நாடகத்துல இருந்துச்சா ? இல்லேன்னா சொல்லுங்க, உடனே மறுபடியும் பண்ணிடறோம். என்ன மாமா…நான் சொல்றது சரி தான ?” எனக் கந்தசாமியிடம் கேட்க, அவரோ சின்னச் சிரிப்புடன், “சரி தான் மாப்பிள்ளை” எனக் கூற, பாண்டியோ ஆனந்த கண்ணீரை துடைப்பது போலப் பாவனைக் காட்டி, ” எப்படியோ செட் தோசையும் வடகறியும் போல ஒண்ணுமண்ணா இருந்தா சரிதான்…” என அவர்களின் உறவை குறித்துச் செல்ல, சக்கரையோ பற்களைக் கடித்தபடி, “திங்கிறதா தவிர்த்து வேற பேச்சே இல்லையா டா ?” எனக் கழுத்தை நெறிப்பது போலப் பாவனைக் காட்ட, அனைவரும் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினர்.
அனைவர்க்கும் ஆச்சர்யம் கலந்த நிம்மதி…. அளவுகடந்த சந்தோசம்….நிறைவான தருணம்…..
நின்ற இடத்திலிருந்தே கந்தசாமி மச்சக்காளையிடம், “என்னதான் எனக்கு என்னோட மகளுக்கும் கசப்பு இருந்தாலும், அவளோட வாழ்க்கையை எப்படி வாழுறானு மூணா மனுஷன் சொல்லி நான் நம்பமாட்டேன்.
அதுமட்டுமில்ல, பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பொம்பள பிள்ளையோட மறவாத குலைய கூடாதுனு நினைக்கிறவரு என்னோட மாப்பிள்ளை.
எம் பொன்னும் மரியாதை இல்லாத இடத்துல அவ இருக்க வாய்ப்பே இல்ல. அடுத்தமுறை பொருந்துறது போல ஜோடிக்கக் கத்துக்கோங்க….” எனச் சொல்ல, லிங்கம் பாரிஜாதத்தைப் பார்த்த பார்வையில் தலையைக் கவிழ்ந்தபடி செல்ல, மச்சக்காளையும் பின்னோடு சென்றார். போவதற்கு முன்னால் சாந்தினியை ஒரு முறை ஏக்கமாகப் பார்க்க, அவளோ சட்டென்று முகத்தை வேறு புறம் திருப்பிக்கொள்ள, அந்த நிமிடம் மச்சக்காளைக்கும் பாரிஜாதத்திற்கும் ரண வேதனையைத் தந்தது… இனியாவது பணத்தை விட உறவுகளை முக்கியமென்று அவர்கள் உணர்ந்துகொள்வார்களா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும்.
“சம்மந்தி… நீங்க உள்ள கூப்பிட்டவுடனே வராம நின்னு பேசிட்டு இருந்தத தப்ப எடுக்கக் கூடாது. மாப்பிளை தான் காட்டாயம் நாடக முடியிற வரைக்கும் வீராப்பா முறுக்கிட்டு இருக்கணும்னு சொல்லிப்புட்டாரு…தங்கச்சி, தப்ப எடுத்துக்காத மா” என லிங்கத்திடமும் பார்வதியிடமும் கந்தசாமி கூற, லிங்கமோ, “என்னோட மகன் சொன்னா சரியாத்தான் இருக்கும்…. நீங்க எல்லாரும் இப்பவாச்சும் உள்ள வாங்க” என அழைக்க, அனைவரும் குடும்பம் சகிதமாக உள்ளே நுழைய, அனைவரும் நடந்த களோபரத்தில் விழியை மறந்துவிட்டிருந்தனர்.
அனைவரும் உள் நுழைய, விழி மட்டும் அதே இடத்தில் ஸ்திரமாக நிற்க, ஒரே நேரத்தில் அவளைக் கவனித்த கந்தசாமியும் கதிரவனும், “பாப்பா…” , “கனலி…” என்று அழைக்க, விழியினுள் அப்படியொரு அழுகை. இதுவரை அவள் அழுதே பார்த்திராத அனைவரும் அவளது அழுகையைக் கண்டு பதறி போயினர். ஏன் பெற்றவர்கள் ஆகினும் ஒரு வயதிற்கு மேல் அவர்கள் முன்னிலையில் கூட விழி அழுததே இல்லை.
தேவியே அவள் இப்படிக் கத்தி அழுது பார்த்ததே இல்லை…என்னவோ ஏதோவென்று அவளருகில் வர, அவளோ, “பாப்பா…என்ன ஆச்சு சொல்லு…” எனப் படபடப்பாகக் கேட்க, “நிஜமாவே என்ன மன்னிச்சுடீங்களா பா ? ” எனத் தேம்பலுடனே கேட்க, “மன்னிக்க என்ன பாப்பா இருக்கு…உன்னோட சந்தோசம் தான் எனக்குச் சந்தோசம்…. அதுக்கு எதுக்கு இப்படி அழற?”
“இல்ல பா…இத்தனை நாளா என்னால அழ முடியல. உங்கள பார்க்காம உங்ககிட்ட பேசமா இருக்க முடியல. கோவில்ல அத்தனை பேரு முன்னாடி உங்க மரியாதைய உடைச்சுட்டேன். நீங்க என் மேல வச்சிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுட்டேன்.
எனக்கு இத்தனை நாளா கத்தி கத்தி அழனும் போல இருந்துச்சு… ஆனா ஒரு சொட்டுக் கணீர் கூடச் சிந்த கூடாதுனு வைராக்கியம் இருந்துட்டேன்… ஆனா இப்ப முடில. சந்தோசமா இருக்கு… அழுகவும் தோணுது… ” எனத் தந்தையிடம் கூறியவள், கணவனிடமும், “ரொம்ப நாளா உள்ளுக்குள்ளே எல்லாத்தையும் வச்சிட்டேன்ங்க…மனசு ரொம்பக் கனமா இருக்கு….” எனக் கூறிய அந்த நொடி தான் கதிரவன் உணர்ந்தான் மற்ற உணர்வுகளைப் போல அழுகையும் ஓர் உணர்வு என்று…
எப்படிச் சிரிப்புக் கோபம் என்று எதையும் கட்டுப்படுத்த முடியாதோ அதே போலச் சில பல தருணங்களில் அழுகையும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.
கதிரவனுக்கோ அழுதால் தனக்குப் பிடிக்காமல் போய் விடக் கூடுமென்றே இத்தனை நாட்களாகத் தனக்குள்ளே வைத்து மருகியிருக்கிறாள் என்று உணர, கந்தசாமியோ, நீ அழுதாள் நான் தோற்றுவிடுவேன் எனத் தான் கூறிய வார்த்தைக்காகவே இப்படி இருந்திருக்கிறாள் என்று தோன்றியது.
அழுவதால் பயனில்லை தான்…அழுகையின் மூலம் சாதிக்கும் பாரிஜாதம் போன்ற பெண்ணும் இருக்கின்றனர் தான். அழுதழுது கோழையாகும் பார்வதியை போன்ற பெண்களும் உள்ளனர் தான். ஆனால் அனைத்தையும் மீறி அழுகை மனிதர்களில் உணர்வு என்னும் போது, அதை வெகுநாள் அடக்கி வைக்க முடியாது என்பதைக் கதிரவன் கந்தசாமி இருவரும் அறிந்துக்கொண்டனர்….
தேவி அருகில் வந்து…. “அழாதா…பாப்பா..” எனக் கூற, கதிரவனோ “கனலி….” என்று அழைத்த நொடி அருகில் இருந்தவனிடம், “ரொம்பத் தேங்க்ஸ்ங்க….” என அழுகையினூடே தோல் சாய்ந்தபடி கூற மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்குத் தனிமை கொடுத்து களைய, பார்வதி அனைவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, தேவி மட்டும் மகளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றுக்கொண்டிருந்தார்.
கந்தசாமி என்னவென்று கேட்க, “நிஜமாவே சந்தோஷத்துல தானேங்க அழறா ?” எனத் தாய் மனம் பரிதவிப்புடன் கேட்க, அதே சமயம் கதிரவன், “சந்தோசமா இருக்கியா…?” என அவளின் தலையை வருடியபடி வினவ, சட்டென்று அவனிடமிருந்து பிரிந்து எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் …”ரொம்ப…..” எனக் கைகளை அகலமாக விரித்தபடி சுற்ற தொடங்கினாள்.
அந்தக் கணம், தேவியினுள் இருந்த அத்தனை கேள்வியும் தவிடுபொடி ஆகின …. அவள் சந்தோசமாக இருக்கும் நொடியில் தன் கன்னத்தில் முத்தமிட்டுச் செல்லும் மகளே அவரின் கண் முன்னால் தோன்ற, கந்தசாமியும் தேவியும் எந்தக் கவலையும் இல்லாதவராய் சிரித்த முகத்துடன் உள் நுழைந்தனர்.
அதே நேரம் கதிரவனுக்கோ கனலியின் செய்கை, அவள் சந்தோசமாக இருக்கும் பொழுது பார்வதியை கட்டிக்கொண்டு முத்தம் வைத்து குதிப்பதை உணர்த்த, அவளின் சந்தோசத்தின் நிலை உணர்ந்தான்…இருந்தும் குறும்புடன், “இப்பவாவது, மாமியாருக்கு முத்தம் கொடுக்காம அவுங்களோட பிள்ளைக்குக் கொடுத்தாளே…” எனச் சொல்லி கொள்ள, தானாக ஒரு முறுவல் வந்து அவனின் கடை இதழில் ஒட்டிக்கொண்டது.

Advertisement