Raaja Bhavani 8 2 13343 “இது தான் சிறுபிள்ளை பேச்சு குகன், பொண்ணு எடுக்கிறவங்க இதை எல்லாம் பார்க்க தான் செய்வாங்க, எந்த காலத்திலும் எவ்வளவு படிச்சாலும் உலகம் வானத்துல மிதந்தாலும் நம்ம ஆளுங்க மாப்பிள்ளை, பொண்ணு பார்க்கிறது அவங்கவங்க சாதியில தான் பார்ப்பாங்க..” “அவங்க பார்த்தா சரிம்மா, அதுக்காக அந்த வீட்டு பையனும் அப்படி இருக்கனும்ன்னா எப்படி..?” “குகன் இந்த விஷயம் தெரிய முன்னே சாரு கல்யாணம் முடிஞ்சிருந்தா பிரச்சனை இல்லை, பேசி சமாளிச்சிருக்கலாம், அவங்களும் வேறு வழி இல்லாமல் ஏத்திட்டு போயிருப்பாங்க, இப்போ அப்படி இல்லை, விஷயம் ஊர் முழுசும் பரவிடுச்சு, கேட்க தான் செய்வாங்க.. நீ என்னப்பா சொல்ற தனா..?” அவனிடம் கேட்டார். “எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்கத்தை.. நான் சொல்றேன், அதுவரைக்கும் இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம்..” குருமூர்த்திய குறிப்பிட்டு சொன்னான். தெரிந்தால் என்ன பேசுவார் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. சாருவிற்கோ நடப்பது எதுவும் பிடிக்கவில்லை. “ண்ணா.. டைம் எதுக்கு..? இந்த சம்மந்தம் எனக்கு வேண்டாம்..” என்றாள். “சாரு உன்னை யாரும் கேட்கல, நீ பேசாத..” வைதேகி மகளை அதட்டினார். அவருக்கு மகன் நேரம் கேட்டது கோவம். இன்னும் சொல்ல போனால் அவன் எதுக்கு நேரம் கேட்டான் என்று அவருக்கு தெரியுமே..? இதையே காரணமாக வைத்து இந்த சம்மந்தத்தை முறித்து, குகனுடன் தொடங்கி வைப்பான். புரிந்த தனா நீண்ட நாட்கள் கழித்து அம்மாவை பார்த்து குறும்பாக சிரித்தான். இத்தனை நாள் ஜீவனில்லா மகனின் மலர்ந்த சிரிப்பில், வைதேகிக்கு வயிறு குளிர்ந்தது தான். ஆனாலும் குகன் விஷயத்தில் இறங்க மாட்டேன்னு என்று முகம் திருப்பி கொண்டு சென்றார். மறுநாள் கடையில், “குகன் சாப்பிட போலாம்..” என்றான் தனா. “பசிக்குதா.. நீ வீட்டுக்கு கிளம்பு, நான் கடை மூடிட்டு வரேன்..” என்றான் அவன். “எனக்கு உன்கிட்ட பேசணும்..” தனா சொல்ல, “இங்கேயே பேசலாமேடா, நேத்தும் சீக்கிரம் போயிட்டோம், பில் எல்லாம் பார்க்கணும்..” என்றான் குகன். “இங்க பேச முடியாதுடா, நாளைக்கு கணக்கு பார்த்துக்கோ, நாம ஹோட்டல் அலங்கார் போலாம்..” என, ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்து அவனுடன் ஹோட்டல் சென்றான் குகன். அந்நேரத்திற்கும் ஆட்கள் நிறைந்திருந்தனர். “ஹைவேஸ் இல்லை அப்படி தான் இருக்கும்.. நீ வா நாம மேல போலாம்..” என்று மேல் தளத்திற்கு சென்றனர். இருவர் அமரும் டேபிளில் அமர்ந்து முதலில் சூப் ஆர்டர் கொடுத்தவன், “சாரு விஷயம் பேசணும்..” என்றான். “என்ன பண்ணலாம் சொல்லுடா, அந்த மாப்பிள்ளை பையன் கிட்ட நேரா பேசிடலாமா..?” குகன் கேட்டான். “உனக்கு உண்மையிலே இந்த சம்மந்தம் நல்லா வரும்ன்னு தோணுதடா..?” தனா கேட்க, “ஏண்டா..? அவங்க உன்னை கேட்டது வச்சு யோசிக்கிறியா..? எனக்கு தெரிஞ்சு அந்த தாத்தா தான் இதை எல்லாம் பார்ப்பாரு.. மத்தப்படி எல்லாம் நல்ல மாதிரி தான்..” என்றான். “எனக்கு பிடிக்கல..” தனா சொல்ல, “சரி விடு, நாம வேற இடம் பார்ப்போம்.. அந்த குமாரசாமி வீட்ல கூட சாருவை விசாரிச்சாங்கன்னு கேள்விப்பட்டேன், ஆளை விட்டு பேசுவோமா..?” “அவரும் இவங்களை மாதிரி என்னை பத்தி கேட்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்..?” “கேட்க வாய்ப்பில்லைடா, அவரோட அண்ணா பெண்ணுக்கே காதல் கல்யாணம் தான்..” “இவனோட..” தனா உள்ளுக்குள் பல்லை கடித்து கொண்டவன், “சாருவை பத்தி நீ என்ன நினைக்கிற..?” நேரடையாக கேட்டுவிட்டான். குகனின் புருவம் சுருங்க, “சாருவை பத்தி என்னடா..?” என்றான். “நான் நேராவே சொல்றேன்டா, எனக்கு முதல்ல இருந்தே சாருவை உனக்கு கொடுக்க தான் ஆசை, உனக்கு எப்படி என்னன்னு சொல்லு..” தனா சொல்ல, குகன் அமைதியாக சீட்டில் சாய்ந்து அமர்ந்தான். “என்னடா..” தனா டென்க்ஷனில் கொஞ்சம் அதட்டியே கேட்டான். “இது சரி வராது தனா..” என்றான் குகன். “ஏன்..? உனக்கும் உன் அத்தை போல அவர் தான் பிரச்சனையா..?” “அத்தைக்கு இது தெரியுமா..?” குகன் கேட்டான். “எல்லாம் தெரியும்.. நீ எனக்கு முதல்ல ஏன் சரி வராது சொல்லு..” “தனா.. முதல் விஷயம் எனக்கு சாரு மேல அது போல எண்ணம் இல்லை, இரண்டாவது உங்க வீட்டு மருமகனா வர அளவு எங்ககிட்ட வசதி இல்லை..” “குகன்.. நீ முதல்ல சொன்னதுக்கு நான் சொல்றது, இது அரேஞ் மேரேஜ் போல தான், சாருவை உன்னோட வருங்காலமா நீ மனசுல நினைச்சா போதும், எண்ணம் எல்லாம் தானா வந்திட போகுது..” என்றவன், “இரண்டாவது பத்தி பேசாத..” கண்டிப்புடன் சொன்னான். “அதெப்படி பேசாம இருக்க முடியும் தனா, இன்னைக்கு நான் பேசலைன்னாலும் நாளைக்கு உன் அப்பா முதல்கொண்டு எல்லாம் பேச தானே போறாங்க..” “அப்போ நான் தான் தப்பு இல்லை..” என்றான் தனா. “நீ என்னடா தப்பு..?” குகன் கேட்டான். “இல்லை ஊர் உலகம் பேசும்ன்னு தெரிஞ்சும் அனு மேல ஆசைப்பட்டேன் இல்லை, அதை சொன்னேன்..” “ம்ப்ச்.. தனா உன் விஷயம் வேற, இது வேற..” “இல்லை குகன்.. எல்லாம் ஒன்னு தான், நம்ம மனசு சம்மந்தம் பட்டது தான். எனக்கு உன் உறவு வேணும்ன்னும் மனசு சொல்லுச்சு, வேறெதுவும் நான் பார்க்கல, பார்க்கவும் ஒன்னும் இல்லை அது வேற விஷயம், என்னோட ஆசை எல்லாம் நீ எங்க வீட்டு மருமகனா, எனக்கு மாப்பிள்ளையா வரது தான்.. உனக்கு அப்படி இல்லைன்னும் போது நான் என்ன செய்ய முடியும்..?” என்றுவிட, குகனுக்கு அவன் வார்த்தைகள் வருத்தம் கொடுத்தது. “நீ என்னை பீல் பண்ண வைக்கிற..” என்றான் குற்றச்சாட்டாக. “நிச்சயமா இல்லைடா.. என்னோட ஆசை தான் இது, பாக்கி உன் விருப்பம் தான்.. சாரு.. அவளுக்கு.. ச்சு.. என் தங்கச்சிக்கு பெஸ்ட் கொடுக்கணும்ன்னு தான், விடுடா.. எங்க அதிஷ்டம் எப்படியோ..? நீ சாப்பிடு..” என, “நீ இப்படி பேசி என்னை படுத்துற..” குகன் எரிச்சல் கொண்டான். “நான் என்னடா பண்ணேன், என் மனசுல இருக்கிறதை தானே சொன்னேன்.. உனக்கு நாங்க வேண்டாம்ன்னு போது விட்டுட்டேன் இல்லை..” “டேய் வார்த்தையை மாத்தி பேசாத, நான் எப்படா நீங்க வேண்டாம் சொன்னேன்..?” “என் தங்கச்சியை வேண்டாம் தானே சொன்ன..?” “தனா இந்த போர்க்லே உன் குடலை உருவிடுவேன், நான் எதுக்கு வேண்டாம் சொன்னேன்னு உனக்கு நல்லா தெரியும்..” “பிடிக்காம தானே, சாருக்கு தெரிஞ்சா என்ன ஆகும் நினைச்சா தான் கவலையா இருக்கு..” “தனா.. இதுக்கு மேல எதாவது பேசின, ஹோட்டல்ன்னு கூட பார்க்க மாட்டேன்..” “என்னடா.. என் வருத்தத்தை கூட நான் சொல்ல கூடாதா..?” பாவமாக கேட்டான். “ஐயோ கடவுளே என்னை கொல்றானே..” குகன் தலை பிடித்து கொண்டான். தனா முகத்தில் மெல்லிய சிரிப்பு என்றாலும் குகன் மறுப்பதில் ஏமாற்றம், வருத்தம் தான். சொன்ன உடன் குகன் ஏற்று கொள்வான் என்று தனா நினைக்கவில்லை தான். ஆனாலும் அவன் மறுப்பு வருத்தத்தை கொடுத்தது. “சரி.. சாப்பிடு.. நான் எதுவும் பேசல..” என்றான். “எனக்கு உன் சோறே வேண்டாம், நான் கிளம்புறேன்..” குகன் எழ, “என்னடா எங்க உறவு தான் வேண்டாம்ன்னா சோறு கூடவா வேண்டாம்..” என்றான் தனா. “சென்டிமென்ட்டா பேசி என்னை சாவடிக்கிறானே, ஹோட்டல்லுன்னு பார்க்கிறேன்..” குகன் அமர்ந்தான். “மாப்பிள்ளைக்கு ரொம்பதான் முறுக்கு..” தனா வேண்டுமென்றே சீண்ட, புரிந்த குகன் சிரித்துவிட்டான் தான். ஆனாலும் அவர்களுக்கு இடையில் அந்த இயல்பான நிலை நொடியில் காணாமல் போனது. ஏதோ போல் இருந்தது அந்த இடம். “சாரிடா.. சாரு என் வாழ்க்கைக்குள் வர எனக்கு அதிர்ஷ்டம் இல்லை..” நொடிகள் சென்று குகன் சொல்ல, “விடுடா..” என்றுவிட்டான் தனா. சில நொடிகள் அமைதி. சாப்பிடு.. என, உணவு மட்டுமே கவனம் என்றானது. நண்பர்களுக்கு இடையில் ஒரு சிறு அசவுகரியம். பேச்சை குறைத்து உணவு முடித்து வெளியே வந்தனர். குளிர்ந்த காற்று வீச, சில நொடிகள் நின்றனர். தனாவிற்கு அடுத்து என்ன என்ற கவலை. தங்கை வாழ்க்கை பற்றிய பயம். குகன் மேல் நம்பிக்கை இருந்தது. அதனாலே தயங்காமல் கேட்டான். ஆனால் முடியாது என்பவனை கட்டாயப்படுத்த முடியாதே, அவனுக்கு அவன் காரணங்கள். அது நியாயமும் கூட. குருமூர்த்தி பற்றி நன்கு தெரிந்தவன்.. தந்தையை நினைக்கவும் தனா முகம் சுருங்கி கொண்டது. “என் முட்டாள் தனத்தால என்னை சேர்ந்த மூணு பேரும் கஷ்டபடுறாங்க..” தன்னை தானே நிந்தித்து கொண்டு பைக் நிறுத்தும் இடம் வந்தனர். தனா எடுக்க, குகன் பின்னால் ஏறிக்கொள்ள, புல்லட் கிளம்பியது. அவனை கடந்து ஒரு கார் ஹோட்டல் பக்கம் சென்றது. ஜன்னலோரம் அமர்ந்திருந்த அனு, அந்த புல்லட் சத்தத்தில் பரபரப்பாகி வெளியே பார்த்தாள். அது வேகமாக அவர்களை கடந்து சென்றது. “அது அவர் தான். ஐயோ பார்க்க முடியலையே..?” தவித்து போனவள், சிறிதும் யோசிக்காமல் கண்ணாடியை இறக்கி தலையை வெளியே விட்டுவிட்டாள். அது ஒரு வழி சாலை. “ஏய் அனு என்ன செய்ற..? எதிர்ல வண்டி வருதுடி..” சித்ரா பதறி தங்கை கை பிடித்து உள்ளே இழுத்தாள். “போயிட்டார்.. இப்போவும் பார்க்கல..” அனு நெஞ்சம் விம்ம கண்கள் நிறைந்தது. காதல் சிறகானது இன்று சருகானது என் உள் நெஞ்சம் உடைகின்றது உன் பாதை எது என் பயணம் அது பனித்திரை ஒன்று மறைக்கின்றது..