Raaja Bavani 9 2 13970 “என்ன சாரு மூக்குல புகை வருது..? பீடி, தம்மு ஏதும் அடிச்சியா..? மாமாக்கு சொல்லட்டா..?” குகனின் வாய் கிண்டலாக கேட்க, மனமோ தனா திருமணத்திற்கு மறுத்ததை சொல்லிவிட்டானோ என்று யோசித்தது. சாருவோ, “நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மாமா..” என்றாள். “சொல்லிட்டானா ராஸ்கல்..” குகன் தனாவை அர்ச்சித்தான். “இப்போ எதுக்கு என் அண்ணாவை திட்டுறீங்க..? நீங்க தானே வேண்டாம்ன்னு சொன்னீங்க..? ஏன் சொன்னீங்க..?” சாரு கேட்டு நிற்க, “அது சரி வராது சாரு, நான், நீ, ச்சு.. உங்க அப்பா பத்தி தான் உனக்கு தெரியுமே, எப்படி முடியும், சொல்லு, அதான் வேணாம்ன்னுட்டேன்..” என்றான் குகன் சமாதனாமாக. “என் அப்பாவா..?” சாரு கண்கள் சுருங்க, “ஆமா..” என்ற குகன், “இதை போய் உன்கிட்ட சொல்வானோ..? எங்க அவன்..” பல்லை கடித்தவன், வீட்டினுள் செல்ல, தனா அப்போது தான் சாப்பிட வந்து கொண்டிருந்தான். “தனா.. என்னடா பண்ணி வச்சிருக்க, நான் வேணாம் சொன்னதை எல்லாம் சாருகிட்ட சொல்லியிருக்க.. இப்படி தான் சொல்வாங்களா..?” கோவமாக கேட்டான். தனா கண்கள் சுருங்கி விரிய, முகத்தில் ஒரு குறும்பு உதயமாகியது. “ஏன் சொன்னா என்ன..? சாரு பாரு எப்படி கேட்கிறான்னு..?” தங்கையை இழுத்துவிட்டான். “இப்போ எதுக்கு என் அண்ணாகிட்ட சண்டைக்கு போறீங்க..? உங்களுக்கு வாங்கி கொடுக்க மனசில்லைன்னு சொல்ல வேண்டியது தானே..? சரியான கஞ்ச மாமா..” என்றாள் சாரு நொடித்து. “என்ன வாங்கி கொடுக்கணுமா..? என்ன வாங்கி கொடுக்கணும்..?” குகன் முழித்தான். “என்ன தெரியாத மாதிரி கேட்கிறீங்க, எனக்கு அலங்கார் கோபி பிரைட் ரைஸ் பிடிக்கும்ன்னு தெரியும் இல்லை, ஏன் வாங்கிட்டு வரல, அண்ணாகிட்ட கேட்டா நீங்க தான் வேணாம்ன்னு சொல்லிட்டீங்க சொன்னான், ஏன் சொன்னீங்க..?” கேட்க, குகன் கண்கள் விரித்து பே வென்று முழித்து நிற்க, தனாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “என்னை விட்டு ஹோட்டல் போனதும் இல்லாம எனக்கு வாங்கிட்டும் வரல, ஏன் மாமா ஒரு பிரைட் ரைஸ்ல உங்க சொத்து கரைஞ்சிடுமா என்ன..?” சாரு சண்டைக்கு நிற்க, குகன் எக்கச்சக்க கடுப்பாகி போனவன், “அட ச்சீ.. ஓடி போயிடு.. சோறுக்கு கொஞ்ச நேரத்துல என்னை டென்சன் பண்ணிட்டா..” கத்தவே செய்தான். தனாவிற்கோ இன்னும் சிரிப்பு பொங்க, “டேய் உன்னை கொன்னுடுவேன்.. நிறுத்துடா..” அவன் மேல் பாய்ந்தான் குகன். சாரு நடப்பது புரியாமல் முழித்து நின்றவள், “இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி கோவப்படுறீங்க..?” குகனிடம் கேட்டாள். என்ன கேட்டியா.. இவளை.. குகன் மார்பு மேலேறி கீழிறங்க அத்தை மகளை முறைத்தான். “நான் சொல்லட்டா குகன், சாரு அது ஒன்னும் இல்லை, உன்னை இவனுக்கு..” “டேய்.. டேய்.. வாயை மூடு..” குகன் ஓடி சென்று அவன் வாய் மேல் கை வைத்து தடுத்தான். “என்னண்ணா சொல்லுண்ணா, மாமா கை எடுங்க, நீ சொல்லுடாண்ணா..” சாரு அருகில் சென்று தனா வாயை மூடியிருந்த குகன் கையை இழுத்தாள். “சாரு.. ஏய் விடுடி..” குகன் அவளை தடுக்க, “அது சாரு..” என்று தனா வாய் திறக்க, குகன் திரும்ப வாய் மேல் கை வைக்க, சாரு இழுக்க என்று சில நிமிடங்கள் அங்கு ஒரே சத்தம். “மாமா இப்போ நீ என் அண்ணாவை சொல்ல விட போறியா இல்லையா..?” சாரு அவன் கை பிடித்து மிரட்டி கோவமாக கேட்க, “என்னன்னு உனக்கு தெரிஞ்சே ஆகணுமா..? சொல்ல முடியாது போடி..” குகன் கடுப்படித்தவன், தனாவை இழுத்து கொண்டு கிளம்பியும்விட்டான். “டேய் நான் இன்னும் சாப்பிடலடா..” தனா கத்தி கொண்டே செல்ல, சாரு என்னவாக இருக்கும் என்று பார்த்து நின்றாள். “குகன் அம்மா கூட வீட்ல இல்லடா, உன் மாமாவோட பக்கத்துல கல்யாணத்துக்கு போயிருக்காங்க, சாரு தனியா இருப்பாடா..” தனா சொல்ல, “உன் தங்கச்சி தனியா இருந்தா கரைஞ்சிட மாட்டா.. நீ வாடா..” கடை முன் தான் வண்டி நிறுத்தினான். “என்னைக்கு இருந்தாலும் சாருவுக்கு இது தெரிய தானே போகுது, இப்போ சொன்னா என்ன..? பயமா..?” தனா அவனிடம் புருவம் தூக்கி கேட்டான். “பார்றா.. எனக்கென்ன பயம்..?” குகன் கெத்தாக கேட்டான். “இல்லை அவளுக்கு நீ நோ சொன்னது தெரிஞ்சு, உன்னை பழிவாங்க அவளே உனக்கு தாலி கட்டிட்டா என்ன செய்யன்னு தான்..” தனா சிரிக்க, “கடைன்னு பார்க்கிறேன்.. போயிருடா..” குகன் வேகமாக அவன் சீட்டுக்கு செல்ல, உள்ளுக்குள் சாரு அப்படி அவனுக்கு தாலி கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்க அவனுக்கும் அப்படி ஒரு சிரிப்பு. “ச்சு.. டேய் இவங்களோட சேர்ந்தா அப்படி தான்..” தன்னை தானே குட்டி கொண்டு வேலையை பார்த்தான். அதுவரை அவனையே பார்த்து கொண்டிருந்த தனாவிற்கு இன்னும் நம்பிக்கை மிச்சமாய். “மாப்பிள்ளை.. சீக்கிரம் வழிக்கு வந்திடுவான் போலயே..” கொஞ்சம் நிம்மதியாய் அவனுடைய வேலைகளை பார்க்க சென்றான். குருமூர்த்தி இல்லாததால் மண்டிக்கு சென்றவன், அவர் வந்ததும் மார்க்கெட் வந்து, குகனுடன் மதிய உணவு முடித்து, மண்டிக்கான வசூல் வேலையை பார்க்க சென்றான். இரவு நேரம் ஆகிவிட, குகனுக்கு போன் செய்து சொல்லிவிட்டு, நேரே வீட்டிற்கு வந்துவிட்டான். வைதேகி இவன் வரவும் தண்ணீர் கொடுக்க, வாங்கி குடித்தவன், “வெளியே சுத்தினது பசிக்குதும்மா.. முகம் கழுவிட்டு வரேன்..” என்று ரூம் சென்றான். “சாரு சாப்பிட வா..” வைதேகி ரூமில் இருந்த மகளுக்கு குரல் கொடுத்துவிட்டு உணவு எடுத்து வைத்தார். தனா வந்தவன், “அவர் வர லேட்டாகும், சங்கத்துல மீட்டிங் இருக்கு, அங்கயே சாப்பிட்டு வந்துடுவார்..” அப்பா பற்றி சொல்லி அமர்ந்தான். வைதேகி அவனுக்கு உணவு வைக்க, தனா பசிக்கு சாப்பிட்டவன், அம்மாவின் அமைதி உணர்ந்து, “என்னம்மா..?” என்றான். “குகன்கிட்ட பேசிட்ட போல..” வைதேகி சப்பாத்தி வைத்து கேட்டார். நேற்று ஹோட்டல் சென்று வந்ததை வைத்து கேட்கிறார் புரிந்து கொண்டவன், “ம்ம்.. கேட்டேன்..” என்றான். “என்ன சொன்னான்..?” வைதேகி கேட்க, “ம்மா.. உனக்கு தெரியும் அவன் என்ன சொல்லியிருப்பான்னு..” தனா சொல்ல, “தெரியும், ஆனா உனக்கு தான் தெரியல..” என்றார் வைதேகி. “ம்மா.. எனக்கு என்ன தெரியல..? அப்பாவை பத்தின்னா விடுங்க, அவன் என்ன அவர்கூடவா இருக்க போறான், அவனை பார்த்துக்க நான் இருக்கேன்..” தனா சாப்பிடுவதை நிறுத்தி சொன்னான். “இதான் தனா எனக்கு கோவம் வருது, அவனை நீ ஏன் பார்த்துக்கணும், அவன் வேலை பார்க்கிறான், உழைக்கிறான், உன்கிட்ட வேலை செய்றதுக்காக உன் இஷ்டத்துக்கு அவனை நீ வளைக்க நினைக்கிற..?” வைதேகி சொல்லிவிட, “ம்மா.. என்னம்மா பேசுற நீ..? நான் அப்படி எல்லாம் நினைக்கல..” தனா வருத்தத்துடன் சொன்னான். “வேறெப்படி நினைக்கிற..? உங்க அப்பா குணத்துக்கு குகன் மருமகனா வந்தா அவனை அவர் எப்படி நடத்துவார்ன்னு உனக்கு தெரியாது, அவன் பொண்ணு எடுக்கிற வீட்லயாவது அவன் மரியாதையா இருக்கனும்ன்னு உனக்கு ஆசை இல்லை..” “ம்மா.. இதுவரை உன் புருஷன் அவனை மரியாதை இல்லாம நடத்தினது இல்லை, நம்ம வீட்ல அவனுக்கு மரியாதைங்கிறதை தாண்டி அவனுக்கான முழு உரிமை இருக்கு, அப்படி தான் நான் பார்க்கிறேன்..” “அப்படி ஒன்னும் வேணாம்ன்னு தான் நான் சொல்றேன் தனா, நான் தான் உன் அப்பா போல ஆளுகிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படுறேன், நீயும், உன் தங்கச்சியுமாவது நல்ல இடத்துல கல்யாணம் முடிச்சு நல்ல படியா வாழணும்ன்னு ஆசைப்பட்டேன், இதுல நீ உனக்கு பொண்ணு தேடிகிட்ட..” “என் பொண்ணுக்காகவாது நல்ல இடத்துல, உன் அப்பா வாலாட்ட முடியாத இடத்துல கொடுக்கலாம்ன்னா புரிஞ்சுக்காம ஏதேதோ பண்ணிட்டு இருக்க, ஒருவேளை நீ அந்த பொண்ணை கல்யாணம் பண்றதுக்கு குகன் தான் ஒன்னும் சொல்ல மாட்டான்னு சுயநலமா யோசிக்கிறியா தனா..” கேட்டுவிட, “ம்மா.. அத்தை..” இரு குரல்கள் வேகமாக வந்தது. “த்தை.. என்ன பேசுறீங்க..? குகன் கண்டிக்க, இங்கு தனா முகம் மிகவும் கசங்கி போனது. அவனின் தொண்டை குழி வேக வேகமாக ஏறி இறங்கியது. தண்ணீர் குடித்து முழுங்க, முடியவில்லை. குருமூர்த்தி பேசியது விட இது மிகவும் வலித்தது. என்னோட காதல் இவ்வளவு பேச்சு வாங்குமா..? என் பாசம் கூட கேள்வி குறியாகிடுமா..? அதிகமாகவே தளர்ந்து போனான்.