Raaja Bavani 5 2 13477 “ஓஹோ.. அப்படி.. க்கா.. நீ சரியான ஆளு, மனசுல உனக்கும் அவர் மேல ஆசை இருக்கு, அப்படித்தானே..?” அனு அக்காவிடம் சந்தோஷ சிரிப்புடன் கேட்டாள். சித்ரா முகத்தில் சட்டென ஒரு வெட்கம், இளக்கம். அன்று சஞ்சய் அவளை பார்த்து பளிச்சென்று சிரித்தது நினைவிற்கு வந்தது. “இதுவரைக்கும் நான் பார்த்ததுல அவர் வித்தியாசமான ஆளுடி..” என்றாள். “உனக்கு அவரை பிடிச்சிருக்கு தானே..? அதை மட்டும் சொல்லு..” அனு கேட்டாள். “எனக்கு பயமா இருக்கு அனு, எனக்கும் அவருக்கும் பதினோறு மாச வித்தியாசம் தான், அவங்க அம்மாக்கு வேற என்னை பிடிக்கல போல..” சித்ரா கவலையுடன் சொன்னாள். “க்கா.. வயசு எல்லாம் விஷயமே இல்லை, அதை விடு நீ, அவங்க அம்மா.. அவங்களுக்கு அப்போ தான் இப்படின்னு தெரியவும் அப்படி நடந்துக்கிட்டாங்க போல, மத்தபடி அவங்களை பார்த்தாலும் நல்லபடியா தான் தெரியுது, சஞ்சய்.. சாரி.. சாரி சஞ்சய் மாமாவை பார்த்தாலே தெரியலையா..? சஞ்சய் மாமா.. சொல்லலாம் தானே..?” அனு குறும்பாக கேட்டாள். அக்காவின் முகத்திலே விருப்பம் தெரிய, அனுவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. இத்தனை வருடம் அக்காவின் கஷ்டத்தை பார்த்திருக்கிறாளே..? எத்தனை முறை பெண் பார்ப்பது, முடிந்து விடும் எனும் போது தட்டி போவது..? வயதும் ஏற, குடும்பத்தினருக்கு அவள் வாழ்க்கையை நினைத்து பயம் வராமல் இல்லை. சித்ராவிற்காக வெளியே காண்பித்து கொள்ளவில்லை தவிர, எல்லோருக்கும் அவளின் எதிர்காலம் குறித்து அச்சம் தான். அதிலே அன்பழகனும் தொழிலை சரிவர கவனிக்காமல் விட, அதற்கான பலனையும் பார்த்துவிட்டார். “இரண்டு நாள் கழிச்சு வராங்களாம், என்னை யோசிச்சு சொல்ல சொன்னார்..” சித்ரா சொல்ல, அனு பேச என்று ஆதர்ஷ் அவர்களை தேடி வரும் வரை அங்கே தான் இருந்தனர். “அம்மா.. உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க, எப்போ பார்த்தாலும் அப்படி என்னதான் பேசுவீங்களே, எனக்கும் இப்படி ஒரு அண்ணா இருந்திருக்கலாம்..” சலித்து கொண்டான் அவன். மூவரும் கீழிறங்கி செல்ல, சுஜாதா வேலை செய்யவில்லை என்று பெண்களை திட்டி கொண்டே உணவு வைத்தார். அன்பழகனும் வர, குடும்பமாக பேசி கொண்டே உணவு முடித்தனர். “ப்பா.. புது சூப்பர்வைசர் ஓகேவா..?” ஆதர்ஷ் கேட்க, “இப்போ எதுவும் சொல்ல முடியாது ஆதர்ஷ், முதல்ல எல்லாம் நல்லாத்தான் இருப்பாங்க, போக போக தான் புத்தி காட்டுவாங்க..” என்றார் அன்பழகன். “இவர் என் பிரண்டோட அப்பா தான், நம்பிக்கையா இருப்பார்ன்னு நினைக்கிறேன் பார்ப்போம்ப்பா.. அப்புறம் சென்னைக்கு லோட் இறக்க பேசிட்டேன், அண்ணாச்சி போன் பண்ணுவார் உங்களுக்கு..” என்றான். ஆதர்ஷ் எஞ்சியனிரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் வேலை பார்க்கிறான். வார வாரம் விடுமுறைக்கு வருபவன், மில்லில் நடந்த குளறுபடியில் அப்பாவிற்கு துணையாக உதவிகள் செய்து கொண்டு இருக்கிறான். மில் பற்றி வந்தவுடன் அனு முகம் வாடி போனது. அடுத்து எங்கு பேச்சு போகும் என்று அவளுக்கு தெரியுமே. அதே போல, ஆதர்ஷ், “லோக்கல்ல பிஸ்னஸ் வேண்டாம்ன்னு நீங்க முடிவெடுத்தது நல்லது தான்ப்பா, நாம யாரை நம்பியும் இல்லை, ஏதோ ஒரு முறை தப்பு நடந்ததுக்கு இப்படி தான் கூப்பிட்டு வச்சு பேசுவாங்களா..? மரியாதை தெரியாதவங்க, அதுவும் அந்த குருமூர்த்தி, அவரை பத்தி பேசவே வேண்டாம்..” எரிச்சலாக சொல்ல, “எனக்கு வைதேகியை நினைச்சா தான் பாவமா இருக்கும் ஆதர்ஷ், எனக்கும் அவங்களுக்கும் ஒரே வருஷம் தான் கல்யாணம் ஆச்சு, அப்படியொரு சிரிச்ச முகம் அவங்களுக்கு, இப்போ எல்லாம் அவங்க சிரிச்சு பார்க்க முடியறதே இல்லை, ரொம்ப வெளிய வரதும் இல்லை..” என்றார் சுஜாதா. “இப்படி ஒரு மனுஷனோட இருந்தா எப்படிம்மா இருப்பாங்க, இதுல அந்த மனுஷன் ஊர் கவுண்டர் வேற, எல்லாத்துக்கும் அவர் இஷ்டம் தான், ஏதோ இப்போ தனா அண்ணா தலையெடுத்து கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு.. நீங்க ஏன்ப்பா தனா அண்ணா கேட்டதுக்கு வேண்டாம் சொன்னீங்க, அவர் கடைக்கு மட்டும் சரக்கு இறக்கியிருக்கலாம்..” ஆதர்ஷ் கேட்டான். “தேவையில்லை ஆதர்ஷ், நமக்கு ஒருத்தங்க பிடிக்கல, செட் ஆகலன்னா தள்ளி வந்திடணும், அந்த பையனுக்கு கொடுத்தா அவன் அப்பாக்கு கொடுத்தா என்ன..? அந்த பழக்கமே வேண்டாம், முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும், நாம தள்ளியும் வந்துட்டோம், ஏதோ ஊர் விஷயத்துக்கு மட்டும் போனோமா, வந்தோமான்னு இருந்துக்கலாம்..” அன்பழகன் முடித்து வைக்க, அனுவிற்கு முகமே வாடி போனது. குருமூர்த்தி பற்றி அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள், ஏன் திருவிழா நேரங்களில் நேரில் பார்த்தும் இருக்கிறாள். அவர் சொன்னதே சட்டமாக இருக்கும். அவரின் குணத்தில் இவளுக்கு லேசான பயமும் உண்டு. தனா அவளை முதலில் பார்த்த போது, அவரின் மகன் தானே இவர் என்று யோசித்தும் இருக்கிறாள். ஆனால் காதல் காற்று இவளை இழுத்து கொண்டதே. இப்போது எதிர்காலத்தை நினைத்து திணறி கொண்டிருக்கிறாள். தனா மீதுள்ள நம்பிக்கை தான் அவளை தைரியமாக வைத்திருக்கிறது. “அவங்க அப்பாவை மீறி என்ன செய்வார் இவர்..?” அனு எப்போதும் போல யோசிக்க, அவள் தலையில் கொட்டினார் சுஜாதா. “ஸ்ஸ்.. ம்மா..” அனு வலியில் தலையை தேய்க்க, “எவ்வளவு நேரம் கூப்பிடுறது..? வந்து அம்மாக்கு உதவி பண்ணு, லீவ்ல கூட கிட்சன் பக்கம் வரதில்லை, ஒழுங்கா வந்து வேலையை பாரு, எப்போ பாரு எதாவது யோசிச்சுகிட்டே இருக்கிறது, டிவி பார்க்கிறது, போனா மொபைல் தூக்கிக்கிறது, இது தான்..” அவர் திட்டி கொண்டே சாதம் வடிக்க, அனு முகம் சுருக்கிய படி காய் வெட்டி கொடுத்தாள். “என்கிட்ட கொடுத்தா, நீயே பொரியல் செய்..” சுஜாதா மகளை அதட்டியவர், “என்ன உன் அக்கா இன்னைக்கு சீக்கிரம் வந்திட்டா போல..” என்றார் வெளியே கேட்ட ஸ்கூட்டி சத்தத்தில். “ஆமாம்மா.. நான் போய் பார்க்கிறேன்..” அவள் நைசாக வெளியே வர, எட்டி அவள் முடி பிடித்து இழுத்தவர், “நீ ஒன்னும் பார்த்து கிழிக்க வேணாம், அவ இங்க தான் வருவா..” என்றார் முறைப்புடன். “ம்மா..” அனு சிணுங்கி கொண்டே செய்ய, அங்கு வந்தாள் சித்ரா. “இன்னைக்கு சீக்கிரம் விட்டுட்டாங்களா..?” சுஜாதா பெரிய மகளிடம் கேட்டார். “இல்லம்மா.. நான் தான் வந்துட்டேன்..” என்றாள் சித்ரா. அனு ஏன் என்று புரிந்து அக்காவை பார்த்து குறும்பாக சிரித்தாள். சஞ்சய் கொடுத்திருந்த இரண்டு நாள் முடிந்திருக்க, அவனே சிறிது நேரம் முன்பு அவளுக்கு போன் செய்திருந்தான். “நேர்லே வந்திருப்பேன், ஆனா அடிக்கடி வரது நல்லா இருக்காது, அதான் போன்..” என்றான். சித்ரா லேசான படபடப்புடன் அமைதியாக இருக்க, “உங்க வீட்டுக்கு தகவல் சொல்லணும்ன்னு அம்மா கேட்டாங்க, அதான் அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசிடாலம்ன்னு, டீச்சர் நான் பாஸா, பெயிலான்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்..” கேட்டான். சித்ராவிற்கு எது சொல்லவும் வாய் வரவில்லை. ஒருவித தடுமாற்றம், பயம். அவளின் முடிவு. பலரால், பல விஷயங்களால் தள்ளி போன ஒன்று இன்று அவளின் கரத்தில் இருக்கிறது. திருமணம் என்ன அவ்வளவு அவசியமா..? செஞ்சே ஆகணுமா..? அப்படி ஒன்னும் எனக்கு வேண்டாம். அடிக்கடி அவளுக்கே அவள் சொல்லி கொள்ளும் வார்த்தைகள் இது. அந்தளவு உள்ளுக்குள் நொந்து போயிருந்தாள். இன்று செஞ்சுக்கிட்டா என்ன என்று நினைக்க, ஏன் ஆசை கொள்ளவே வைத்திருந்தான் சஞ்சய். ஆனாலும் சஞ்சலம். “இது சரியா வரும் தானே..?” அவனிடமே கேட்டுவிட்டாள். “ஏன் சரியா வராது, என்னை போல சேட்டை பையனை அடக்க சித்ரா டீச்சர் தான் சரியா இருப்பாங்க, அவங்க மட்டும் அவங்க வாழ்க்கைக்குள்ள எனக்கு அட்மிஷன் கொடுத்துட்டா போதும், சஞ்சய்க்கு அதிர்ஷ்டம் தான்..” என்றான். அவன் குரலில் எந்தளவு சேட்டை இருந்ததோ அதைவிட எதிர்பார்ப்பும் இருந்தது. “ஓகே தானே.. நாங்க வரவா..?” மீண்டும் கேட்டான். “வாங்க..” சித்ரா குரல் மெலிதாக வர, இங்கு சஞ்சய் முகம் மலர்ந்து போனது. “எப்போவும் நீ கூப்பிட்ட இந்த வாங்க.. போய் தொலை ஆகாது, என்னை நம்புங்க டீச்சர்.. ஈவினிங் பார்ப்போம்..” வைக்க போனவன், “அப்பறம் ஒரே ஒரு ரிகுவஸ்ட், நாங்க வரும் போது ஜாதி மல்லி வைக்கிறீங்களா..? அன்னைக்கு நீங்க வரதுக்கு முன்னாடி அந்த வாசனை வர, பின்னாடி தென்றல் போல டீச்சரம்மா வந்தாங்க..” என்றான் ஹஸ்கி குரலில். இங்கு சித்ராவிற்கு அந்த குரல் மனதில் இறங்க, தன்னாலே சரி என்றாள். மாலை நான்கு, ஐந்து மணி போல வருகிறார்கள் என்று தெரிந்து மதியமே பெர்மிஷனும் போட்டு வந்துவிட்டாள். வீட்டிற்கு இன்னும் தகவல் வரவில்லை போல. இன்னும் ஏன் சொல்லலை.. சித்ரா யோசிக்க, சரியாக அன்பழகன் போன். சுஜாதா எடுத்து பேசியவர், “சரிங்க, சரிங்க..” வார்த்தைகள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஒலித்தது. “நியூஸ் வந்துடுச்சு போல..” அனு அக்காவை அணைத்து கொண்டாள். “சித்ரா.. நீ வந்ததும் நல்லதா போச்சு, அன்னைக்கு உன்னை பார்த்துட்டு போனாங்க இல்லை, அவங்க உன்னை உறுதி பண்ண இன்னைக்கு வராங்களாம்.. நீ போய் சீக்கிரம் குளிச்சு கிளம்பு, அனு.. வா வா.. ஸ்வீட், காரம் செய்யணும், உங்க பெரியப்பா, சித்தப்பா, தாய்மாமாக்கு எல்லாம் சொல்லணும், ஆதர்ஷ்.. டேய்.. சீக்கிரம் வா..” மகனை தேடி ஓடினார். அடுத்த சில மணி நேரங்கள் பரபரப்பு தொற்றி கொண்டது. “அனு அக்காவை போய் பாரு ஓடு..” அனுப்ப, அங்கு சித்ரா பக்காவாக தயாராக இருந்தாள். “க்கா..” அனு சென்று கட்டி கொண்டவள், “அன்னைக்கு பூ வைக்க, ஜிமிக்கி போட அவ்வளவு கெஞ்ச விட்டுட்டு இன்னைக்கு பாரேன்..” நிற்க வைத்து கிண்டல் செய்தாள். சொன்ன நேரத்திற்கு சஞ்சய் வீட்டினர் வந்துவிட, அன்பழகன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் கூடியிருந்தனர். சஞ்சய் வீட்டிலும் பத்திற்கு மேல் வந்திருக்க, ஒரு பங்க்ஷன் போல் களைகட்டியது. பேச்சு வார்த்தை முடிந்து, சித்ரா வரவழைக்கபட்டாள். சஞ்சய் அம்மா அவளின் தலையில் பூ வைத்து, பந்தத்தை உறுதிபடுத்தினார். அந்த பூவை பார்த்தும் சித்ரா முகம் சிவந்து போனது. சஞ்சய் அவளை பார்த்து ரசிக்க, ஜாதி மல்லியின் வாசனை அங்கு நிறைந்தது.