தனா மிகவும் பொறுமையாக, நிதானமாக தயாரானான். முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உள்ளே அவ்வளவு ஆர்ப்பரிப்பு, வெளியே காட்டி கொள்ளவில்லை.

அங்கு அனுவிற்கோ  உள்ளங்கைகள் வேர்த்து கொண்டே இருந்தது. அத்தனை திடமாக இருந்தா பெண்ணா இவள்..? கிளம்பும் முன்  அன்பழகன், சுஜாதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அன்பழகன் மகள் தலை தடவ, மகள் அவர் கையை பிடித்து கொண்டு அழுதுவிட்டாள்.

ஆனந்தமா, மன்னிப்பா என்று தெரியாத அழுகை. அம்மாவை அணைத்து கொண்டவள், “சாரிம்மா..” என்றாள் அழுகையுடன். பெற்றவர்களுக்கு புரிந்தது. இதுவரை அவள் மேலிருந்த சிறு கோவமும் மெல்ல கரைந்து தான் போனது.

சித்ரா  தங்கையை சமாளித்தாள். “போதும் அனு, நேரம் ஆச்சு.. கோவிலுக்கு கிளம்பணும்..” சஞ்சய் அவர்களை கிளப்பி கொண்டு வந்தான். ஆதர்ஷ் எதிலும் தலையிடாமல் இருக்க, சஞ்சய் தான் அனு பக்கம் சரிக்கட்டினான்.

கோவிலில்  அனு காரில் இருந்து இறங்க வர, தனா  அவளையே பார்த்திருந்தான். கண்கள் அசையவில்லை. அவளின் மணக்கோலம்.. அவனின் பெருந்தவம் அல்லவா இது..!!  ஏதோ தரிசனம் போல கண்டான்.  இதயம் மிக வேகமாக துடித்தது.

அனுவும் வேஷ்டி சட்டையில் மணமகனாக, அவளின் மணாளனாக நின்ற தனாவை நெஞ்சம் அதிர பார்த்தாள். திரும்ப அவளுக்கு கண்கள் கலங்கியது. “அனு.. எல்லாத்துக்கும் இதென்ன அழுகை..?” சித்ரா தான் தங்கையை அதட்டி கண்ணீர் ஓற்றினாள்.

“நேரம் ஆச்சு..” அன்பழகன் சொல்ல, கருவறை முன் தம்பதி சகிதமாக நின்றனர். தனா அனுவின் நடுங்கிய கையை இறுக்கமாக பற்றி கொண்டான். வைதேகி மகன் பக்கம் நின்றாலும், குருமூர்த்தி வருவாரா என்று வாசலையே பார்த்திருந்தார். தனாவிற்கு எங்கோ ஒரு நம்பிக்கை தந்தை வருவார் என்று.

அன்பழகனுக்கு அந்த நம்பிக்கை இல்லை, அவரின் நெருங்கிய சொந்தங்கள் அவரை கொஞ்சம் கேலியாக பார்ப்பது தெரிந்தாலும் மகளின் மணக்கோலம் முன்பு எதுவும் அவரை காயப்படுத்தவில்லை. மனிதர் நிமிர்ந்தே நின்றார்.

பூஜை முடியும் நேரம், குருமூர்த்தி வண்டி சத்தம். வைதேகி கண்கள் கலங்க, வேகமாக கணவரை நோக்கி ஓடினார். கணவரை முற்றும் முழுதும் அறிந்து பட்டவருக்கு இதை விட  வேறென்ன வேண்டும்..? அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏதோ பலன் கிட்டியது போல குளிர்ந்து போனார்.

குருமூர்த்தி மிகவும்  இறுக்கமாக வந்தவர், மனைவியின் ஆனந்த ஆர்பரிப்பில் கொஞ்சம் இளகினார். வழியில் நின்ற அன்பழகனை பார்த்து ஒரு நொடி தயங்கி, தானும் ஒரு பக்கம் நின்றார். இருபக்க உறவுகளும் ஆச்சரியத்தில் சலசலக்க, தனாவோ அப்பாவை பார்த்து மிகவும் நிறைவாக உணர்ந்தான்.

பூஜை முடிந்து தாலி தனா  கைக்கு வந்தது. அந்த நொடி அனு, அவனும் மட்டும் தான். யாரும் எதுவும் அவன் கவனத்தில் இல்லை. அவளுக்கு நேரே திரும்ப, அனு கைகள் குவித்து கண்கள் மூடி வேண்டி கொண்டிருந்தாள்.

தனா அவளின் வேண்டிய முகத்தை பார்த்தே மூன்று முடிச்சிட்டான். சாரு அண்ணனின் மனநிலை உணர்ந்து தங்கையாக மூன்றாம் முடிச்சிற்கு மட்டும் அண்ணன் கை மேல் கை வைத்து எடுத்தாள்.

தன் நெஞ்சில் விழுந்த தாலி கனத்தில், கழுத்தில் உரசிய மஞ்சள் ஈரத்தில், அனு விம்மி போனாள். தனா அவளின் நெற்றியில், தாலியில் குங்குமம் வைத்து முழுவதுமாக அவளை தன் துணையாக்கினான்.

இருவரிடமும் மிகவும் நிதானம். அமைதி. ஆனந்த கூச்சலில்லை, ஆர்ப்பாட்டம் இல்லை. ஆனால் உள்ளக்குள் அவ்வளவும் உட்சபட்சத்தில் அதிர்ந்து கொண்டு தான் இருந்தது.

கோவிலில் சுற்றி வலம் வந்தவர்கள், பெரியவர்கள்,பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். குருமூர்த்தி காலில் விழுகும் போது அனுவிற்கு தடதடப்பு தான். ஆனால் மாமனார், “நல்லா இருங்க..”  என்றதில் அவள் மட்டுமில்லை, அன்பழகனும் நிறைவாக உணர்ந்தார்.

அடுத்து தனஞ்செயன்.. அனுபமா பவனி ஆரம்பித்தது. இதற்காகவே காத்திருந்தது போல,  குகன் ஏற்பாடு செய்திருந்த நாதஸ்வரம், செண்டு  மேளம், டிரம்ஸ் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. இளவட்டங்களின் ஆட்டம் புழுதி கிளப்பியது.

தம்பதி சகிதமாக, மணமாலை கழுத்தில் நிறைய,  குடும்பங்கள் புடை சூழ,  உறவினர் படையுடன், மனைவியை இராஜ  பவனி கூட்டி சென்றான் தனா.

காதல் தவறில்லை, யார் மீது காதல் கொள்கிறோம்,  அந்த உறவின் புனிதத்தை எப்படி காப்பாற்றுகிறோம், எவ்வளவு உறுதி வேண்டும், எந்தளவு பொறுமை காக்க வேண்டும், எவ்வளவு உண்மையாக இருக்கிறோம்  என்பதே காதலின் வெற்றியை தீர்மானிக்கிறது.

இது காதலுக்கு மட்டுமே இல்லை. எல்லாவித உறவுக்கும், லட்சியத்திற்கும் பொருந்தும். நம்முடைய நிலைப்பாடும், கட்டுப்பாடும், போராட்டமும் தானே முதல் படி. இவை இருக்கும் இடத்தில் தோல்விக்கு வாய்ப்பில்லை.

இதில் நிச்சயம்  சில விதிவிலக்குகளும் உண்டு. எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் முயற்சி என்பது வேண்டும் தானே..? அப்படி ஒன்று  தனா, அனு காதலையும்  காத்தது.

இங்கு காதலும் இவர்களை அரவைணைத்தது.  அவர்களும் காதலை விடவில்லை. காதலும் அவர்களை விடவில்லை.

பவனி முடிந்து தம்பதிகள் தனா வீடு செல்ல, அனு கால்கள் பின்னியது. தனா அவள் கைகளை பிடித்து கூட்டி சென்றான். விளக்கேற்றி  பாலும் பழமும் முடிந்தது. இரு அப்பாக்களும் அங்கு இல்லை. இருவருக்கும் உணவு மட்டும் சென்றது.

அடுத்து ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்றனர். அன்பு வர, குருமூர்த்தி வரவில்லை. முன்னரே முன் பதிவு செய்திருந்ததால், சட்ட பூர்வ தம்பதி ஆகினர். சித்ரா, சாரு தம்பதி தான் கையெழுத்திட்டனர்.

மாலை தனா ஏற்பாடு செய்திருந்த மைதானத்தில் விருந்து ஆரம்பமானது. ஊரே அங்கு தான். வானவேடிக்கையின் வண்ணங்கள் அனு, தனா முகத்தில். இருவரும் மற்றவர் அருகிலே இருந்தனர்.

மிகவும் தேவைக்கே பேச்சு. பேசவும் தோன்றவில்லை. அமைதியாக அந்த நாளை  அனுபவித்தனர். சில நேரம் பேச்சும் அந்த நேர இனிமையை கெடுத்துவிடும். அதற்கு இவர்களிடம் இடமில்லை.

“மச்சான்.. நேரம் ஆகிடும், நீங்க கிளம்புங்க.. வீட்டை பூட்டிக்கோங்க,  நாங்க எல்லாம் தோட்ட வீட்டுக்கு போயிடுவோம்..” குகன் தான் அவர்களை கிளப்பினான்.

தனாவும் மறுக்கவில்லை. பெரியவர்களிடம் சொல்லி கொண்டு மனைவியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான். சஞ்சய் காரில் சென்று விட்டு வந்தான். தனா வீட்டை பூட்டிவிட்டு வர, அனு அவனுக்காக காத்திருந்தாள்.

தனா அவளுடன் கை கோர்த்து கொண்டு மேலேறினான். இவனின் ரூம் தயாராக இருந்தது. பூ அலங்காரம், பிளாஸ்கில் பால், பழம், ஸ்வீட் என்று. குகன், சஞ்சயின் ஏற்பாடு போல. பெட்டில் இதய வடிவில் பூ அலங்காரம் வேறு.

தனா உதட்டில் தாராள புன்னகை. அனுவை பார்க்க, அவளும் மலர்ந்திருந்தாள். தூர பார்வைகள்,  வெகு சில நேரம் கிட்ட பார்வை, ம்ம்.. எல்லாம் கடந்து இன்று அவனக்கு அருகில் உரிமையாக, உற்றவளாக. மனைவியை நிறுத்தி  நிதானமாக ரசித்தான்.

மெரிண்டா ஆரஞ்சு வண்ணத்தில் புடவை முந்தானை அவனை கையை உரச, தலையில் வைத்திருந்த ஜாதி மல்லி வாசம் அவனை இழுத்தது. அவளின் பெரிய ஜிமிக்கியை  அவன் விரல்  சுண்டி விட்டது.

அனு கழுத்தோரம் சிலிர்க்க, அவனை பார்த்தாள். இருவருக்கும் இடையில் இருந்த சில அடியை குறைத்து, அவளை உரசி நின்றான். அனு அவனை பார்க்க முடியாமல் தடுமாற, தனா அவளின் தாலி மேல் விரல்கள் கொண்டு கோடிழுத்தான்.

இந்த அங்கீகாரம்.. இது  கிடைக்க தானே இவ்வளவு போராட்டம். தனா உரிமையாக அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டான். அனு கைகள் கணவன் இடைய வளைக்க, நெஞ்சில் முகம் புதைத்து விம்மினாள்.

இருவரின் அணைப்பு. அருகாமை. வாசம்.. இது கனவு தானோ..? முன்னரே பல முறை கண்டு ஏமாந்தது தானே..? இருவரும் ஒன்று போல நினைத்தனர். இருவர் கைகளும் அழுத்தம் கொடுத்தது.

தனா  மனைவி முகம் நிமிர்த்தினான். அவள் சிவந்த கண்கள், துடித்த உதடுகள், பூரித்த கன்னங்கள் என்று அவனை கொள்ளை கொள்ள, காதல் பல மடங்கு எகிறியது.

அவளின் நெற்றில் மிகவும் அழுத்தமாக தன் முதல் முத்தத்தை பதித்தான். அனு அவனின் மார்பில் முதல் தடத்தை பதித்தாள். தனா உடல் சிலிர்க்க, அவன் கண்களும் கலங்கியதோ..?

பேசாத கதை நூறு

பேசும் நிலை வரும் போது

வார்த்தை என எதுவும் வராது

வராது வராது மௌனம் ஆனேனே

காலம் உறைந்தே  போகும்

காற்று அழுதே   தீரும்

இந்த நொடி இறந்தாலும் சம்மதம்

கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்..!!!!