விடிந்தால் தனஞ்செயன்.. அனுபமா திருமணம். ஊரில் பாடல்கள் , சீரியல் லைட், வாழை மர தோரணங்கள் என்று கல்யாண களை கட்டியிருந்தது. பெரிய ஊர் என்பதால் ஆங்காங்கு பாடல்கள் ஒலித்தது.
குருமூர்த்தி இருக்கும் இடத்தில் சாமி பாடல் என்றால், அன்பழகன் இருக்கும் இடத்தில் பழைய பாடல்கள். அதை தவிர்த்து மற்ற இடங்களில் குத்து பாடல், காதல் பாடல் என்று இளைஞர் கூட்டம் தெறிக்க விட்டு கொண்டிருந்தனர்.
ஆங்காங்கு ஊர் மக்கள் எப்படி இந்த திருமணம் சாத்தியபட்டது..? குருமூர்த்தி மகன் சாதிச்சுட்டானே..? அவர் எப்படி விட்டார்..? அன்பழகனுக்கும், அவருக்கும் ஆகாதே, இந்த அன்பழகனும் பாரேன் தனாவுக்கு பொண்ணு கொடுக்க சம்மதம் சொல்லியிருக்கார்..!!
சொல்லியிருக்காரே..? எப்படி சொல்லலாம், அப்போ அந்த குருமூர்த்தி செஞ்சது எல்லாம் காத்தோட போயிடுச்சா..? பல வகையில் ஊரே பேசி கொண்டிருக்க, கொடி பிடிக்க, ஆச்சரியப்பட என்று இருந்தது.
தனாவே இந்த ஆட்டம், பாடல்களை எதிர்பார்க்காமல், “இதெல்லாம் எதுக்குடா..?” என்று இளவட்டங்களிடம் கேட்க,
“எதுக்கா..? எவ்வளவு பெரிய சம்பவம் பண்ணியிருக்க..? கொண்டாட வேண்டாமா..? இதை எல்லாம் நீ கண்டுக்காத மாமா..”
“ஆமாண்ணா.. ஊர்ல இருக்க பெருசுங்க காதுல எல்லாம் இன்னைக்கு ஓட்டை விழுகணும், ஆகாத பேச்சை பேசி கொலையா கொன்னாங்க இல்லை, இன்னைக்கு இருக்கு வேட்டு..”
“என்ன மாமா நீ..? அண்ணா கல்யாணம் எப்படி நடக்குதுன்னு எங்களுக்கு தெரியாதா..? நாங்க பார்த்துகிறோம், நீ போய் வேலையை பாருண்ணா.. போண்ணா..” என, கேட்க மாட்டார்கள் என்று புரிந்து எச்சரிக்கை செய்து தனா கிளம்பிவிட்டான்.
அவனுக்கும் திருமணத்திற்கு முன் தின இரவு என்பதால் விருந்து, நலங்கு, சடங்கு என்று நேரம் சரியாக இருந்தது. இருபது நாள் தான் அன்பழகன் சம்மதம் சொல்லி. முதல் முகூர்த்தத்துலே திருமணம் வைத்துவிட்டான்.
தேதி குறித்து கொண்டு, குருமூர்த்தியிடம் செல்ல, அவர் இவனை கோவமாக பார்த்தவர், “என்கிட்ட இதை பத்தி எல்லாம் கொண்டு வர கூடாது..” என்றார்.
“உங்களுக்கு சொல்லிட்டு தான் செய்வேன், சாரு கல்யாணத்துல நீங்க முறுக்கிக்கிட்டு பிரச்சனை செஞ்சப்போவே உங்ககிட்ட சொல்லிட்டு, முன்ன வச்சு தான் செஞ்சேன்..” என்றான் அவர் கையில் இருக்கும் சாரு மகனை குறிப்பாக பார்த்து.
குருமூர்த்தி மகனின் குறிப்பில் முகம் திருப்பி கொள்ள, தனா மறைத்து வைத்த சிரிப்புடன், “நம்ம சொந்த பந்தங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க நானும் குகனும் போறோம்..” என்றான்.
“பத்திரிக்கை அடிக்கிறியா..? அது எதுக்கு..? கோவில்ல தானே கல்யாணம், சும்மா அப்படியே செய்..” என்றார். அவருக்கு கல்யாண பத்திரிகையில் அன்பழகன் பேர் சேர்ந்தே வரும் என்ற கடுப்பு.
“அப்படி செய்ய நாங்க எதுக்கு இத்தனை வருஷம் காத்திருக்கணும்..? பத்திரிக்கை அடிச்சு, ஊரே கொடுத்து தான் கல்யாணம் செய்வேன்..” என்றுவிட்டவன், அடுத்து அன்பழகனிடம் சென்றான்.
அவர் கொஞ்சம் தயங்கி, “கல்யாணம் எங்க குலதெய்வ கோவில்ல வைக்க முடியுமா..?” என்று தான் கேட்டார். தனா ஏன் என்று பார்க்க, என்னவென்று சொல்வார்..? பங்காளிங்களின் தொல்லை என்றா..?
சொல்லாமலே தனா புரிந்து கொண்டவன், “என் அப்பா அங்க வரமாட்டார் மாமா..” என்றான்.
“இப்போவும் அவர் வருவாருன்னு சந்தேகம் தான்..” என்றார் அன்பழகன்.
“எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா, அவர் வருவார், அதோட நானும் ஒன்னும் எங்க குலதெய்வ கோவில்ல கல்யாணம் வைக்கலையே, ஊர் பொதுவான அம்மன் கோவில்ல தானே வைக்கிறோம்..” என்றான்.
அன்பழகன் அப்போதும் யோசிக்க, “மாமா.. வர பிடிக்காதவங்க வர வேண்டாம், வந்தும் அவங்க ஒன்னும் எங்களை பெருசா வாழ்த்திட போறதில்லை. வரணும்ன்னா ஊர் விருந்துக்கு வரட்டும், தாலி கட்ட நம்ம குடும்பங்கள் வரை இருந்தா போதும்..” என்றுவிட்டான். அவனுக்கு அன்பழகன் பங்காளிகள் செய்வது அவ்வளவு கோவத்தை கொடுத்தது.
அன்பழகனும் எப்போதும் கொஞ்சம் புரிதல் உள்ள மனிதர் என்பதால் மாப்பிள்ளையாக போகிறவனிடம் பிடிவாதம் பிடிக்கவில்லை. விட்டுவிட்டார். தனா குறித்து வந்த முகூர்த்தத்தை பார்த்தவர், “இன்னும் இருபது நாள் தானே இருக்கு.. செய்ய முடியுமா..?” கேட்டார்.
“நான் பார்த்துகிறேன் மாமா, இன்னும் இரண்டு நாள்ல பத்திரிக்கை கைக்கு வந்திடும், உங்க சொந்த பந்தங்களுக்கு வைக்க நானும் கூட வரேன், யாரும் ஒன்னும் பேசிட முடியாது, பார்த்துக்கலாம்..” என்றவன், அன்பு மறுத்த போதும், எல்லார் வீட்டிற்கும் அன்பழகனுடம் சென்று வந்தான்.
தனா முன் யாரும் பெரிதாக பேச முடியாமல் பத்திரிக்கை மட்டும் வாங்கி கொண்டனர். அதிலும் குறை கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தால், தனா மிகவும் பொதுவாக இரு அப்பாக்கள் பேர், மாப்பிள்ளை, பெண் பேர், சித்ரா, சாரு குடும்பம், ஆதர்ஷ் அழைப்பாக பத்திரிக்கை அடித்திருந்தான்.
இந்த பக்கம் அவனின் சொந்த பந்தங்களுக்கும் குகனுடன் சென்று பத்திரிக்கை வைத்து வந்தான். பேச்சி ஏகத்திற்கும் முகம் தூக்க, தனா கண்டு கொள்ளவே இல்லை. என் மரியாதை இது, செய்துவிட்டேன் என்று வந்துவிட்டான்.
இதற்கிடையில் வைதேகி ஒரு நாள் மகனிடம் வந்து நின்றவர், “மருமகளுக்கு பூ வைக்க போகணும், அது தான் முறை..” என்றார். தனா யோசிக்கவே செய்தான். குருமூர்த்திக்கு பிடிக்காது என்பதோடு, அங்கு அனு வீட்டிலும் இவர்களின் வரவு எப்படி என்று தெரியாதே.
“இருங்கம்மா பார்த்து சொல்றேன்..” என்றவன், சஞ்சய்க்கு தான் போன் அடித்தான். இவர்கள் திருமண விஷயம் தெரிந்தவுடன் சஞ்சய் தனாவிற்கு போன் செய்து வாழ்த்த, தனாவும் அண்ணா என்று உரிமையாக பேச, இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் வந்திருந்தது.
இப்போது இப்படி என்று தனா விஷயம் சொல்லவும், “நான் சித்ராவை பார்த்துக்க சொல்றேன், அவங்க லேடிஸ் மட்டும் போகட்டும், நீ இப்போ வேண்டாம்..” என்றான் சஞ்சய்.
தனாவிற்கு அனுவை பார்க்க ஆசை தான், ஆனால் சஞ்சய் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது. இன்னும் அங்கு ஆதர்ஷ் வைத்து புகைந்து கொண்டிருக்க, இவன் வரவு சரி வராது நினைக்கிறான்.
“சரிண்ணா..” என்றுவிட, மறுநாளே வைதேகி, சாரு, பரிமளம், அண்ணா, தம்பி மனைவிகள் என்று பத்து பேர் போல சென்று அனுவிற்கு பூ வைத்தனர். வைதேகி மருமகளுக்கு ஒரு ஆரம் அணிவித்தார். முறை செய்ததில் அனு குடும்பத்திற்கு மகிழ்ச்சி, திருப்தி.
அனு ஆரத்தோடு, பூவோடு போட்டோ எடுத்து தனாவிற்கு அனுப்ப, அவன் காதலில் திணறி தான் போனான். “அழகிடி நீ..” என்று வாய்ஸ் நோட் அனுப்ப, அங்கு அனு முகம் சிவந்து போனது.
இருவருக்கும் இன்னமும் நடப்பது எல்லாம் கனவு போல தான் இருக்கிறது. அன்று தனா அனுவை பார்க்க சென்ற போதும் அவள் கனவு என்று தான் முதலில் முழித்தாள். தனா பொறுக்க முடியாமல் அவளின் பள்ளிக்கே சென்றுவிட்டான். அனுவிற்கு நான் தான் முதலில் சொல்ல வேண்டும் என்ற ஆர்ப்பரிப்பு.
அனுவும் வந்தவள், தனாவை பார்த்து கண்கள் விரித்தாள். இத்தனை வருட காதலில் முதல் முறையாக அவளை தேடி வந்திருக்கிறான். அதிலே அனுவால் கொஞ்சம் உணர்ந்து கொள்ள முடிந்தது.
என்ன என்று கேட்க கூட அனுவிற்கு குரல் வரவில்லை. தனா அவளின் தவிப்பை ரசித்து பார்த்தவன், “பவனி போக எல்லாம் ரெடி, போலாமா..?” என்று தான் கேட்டான்.
அனு கண்கள் சட்டென்று கலங்கி போக, அங்கும் இங்கும் பார்த்தாள். தனாவிற்கும் தொண்டை அடைத்தது. என்னமோ அவளிடம் சொன்ன பிறகு தான் அவனும் அந்த நொடியை முழுதும் அனுபவித்தான் எனலாம்.
அவளை கட்டிக்கொள்ள, ஆறுதல் சொல்ல, வெற்றியை கொண்டாட எல்லையில்லா துடிப்பு தான். ஆனால் இருக்கும் இடம் ஒன்று உள்ளதே. “க்கும்.. வாழ்த்துக்கள் மேடம்..” என்றான் கொஞ்சம் குறும்பாக, சிரிப்பாக, மகிழ்ச்சியாக, சீண்டலாக.
அனு தலை மட்டும் ஆட்ட, “எனக்கு விஷ் பண்ண மாட்டியா..?” கேட்டான்.
அனுவிற்கு இந்த நொடி மனதார அழ தான் தோன்றியது. துக்கத்திற்கு மட்டுமில்லை எல்லையில்லா மகிழ்ச்சிக்கும் கண்ணீர் ஆர்ப்பரித்து வரும் என்று அன்று தான் உணர்ந்து கொண்டாள் பெண்.
அவளின் அந்த அழுகை முகம், கண்களில் மின்னும் மகிழ்ச்சி, உடலில் தெரிந்த தொய்வு என்று அவளும் ஓடிய ஓட்டத்தை காட்ட, அதை இப்போது மட்டுமில்லை எப்போதும் தனா மறப்பதற்கு இல்லை.