“ஆனாலும் உனக்கும், அந்த அன்பழகனுக்கும் எவ்வளவு ஏத்தம் பாரு, நான்.. நான் வந்து அவன் வீடேறி பொண்ணு கேட்கணும்ன்னு என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..?” காந்தினார் மனிதர். 

“அவரோட சொந்த பந்தங்களுக்காக அவர் பார்க்கிறார், அங்க யாரும் ஒத்துக்கல..” என்றான் மகன். 

“எப்படி ஒத்துக்குவாங்க, எல்லாம் முறை தெரிஞ்சவங்க, அவங்கவங்க இனத்துக்கு கட்டுப்பட்டவங்க, உங்களை மாதிரியா..?” அவர் பொரிந்தார். தனா  கல்லாக நின்றான். அவன் அமைதி பார்த்து புருவம் தூக்கிய குருமூர்த்தி, 

“பரவாயில்லடா மகனே.. உனக்கு காரியம் ஆகணுமுன்னு ஆகாத அப்பாகிட்ட வந்து  நிக்கிற பார்த்தியா..? இப்போ நான் என்ன பேசினாலும் கேட்டுகிட்டு அமைதியா தான் நிப்ப இல்லை..”

“நான் இதை வச்சு உங்க தனி குடித்தனத்தை காலி பண்ணிக்கிட்டு என்கிட்ட வந்து பழையபடி இருங்கன்னு சொன்னாலும் செய்வ தானே..?”  என, தனா இதை எதிர்பார்த்தே இருந்ததால், உடனடியாக மறுப்பாக தலையாட்டினான். 

வைதேகியோ, “வரோம்ங்க..” என்றார் உடனடியாக. 

“அடேங்கப்பா..”  குருமூர்த்தி மனைவியை பார்த்த பார்வையில், அவருக்கு உள்ளங்கைகள் வேர்த்தது. 

“இந்த வயசுல புருஷன் வேணாம்ன்னு என்னை தூக்கி போட்டு மானத்தை வாங்கினவ தானே நீ..? திரும்ப மகனுக்காக வரேன்னு சொன்னா நான் உன்னை சேர்த்துப்பேன்னு நினைக்கிறயா..? என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..? சொல்லுடி..” மனைவியிடம் கொதிக்க, வைதேகிக்கு இன்னும் அவர் அவரையே குறை சொல்வது ஆயாசத்தை கொடுத்தது. 

“நீங்க தான் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்னீங்க..?” என்றுவிட்டார். 

“ஆமா சொன்னேன் தான், என்னை தள்ளி வச்சு நீயும் உன் மகனும் எனக்கு இஷ்டம் இல்லாத இடத்துல பொண்ணு கொடுப்பிங்க,  நான் பார்த்திட்டு இருக்கணுமா..?”

“இப்போ சாருவுக்கு என்ன குறைச்சல்..? குழந்தை, குட்டின்னு நல்லா தான் இருக்கா..”  வைதேகி சொல்ல, தனாவிற்கு அவ்வளவு ஆச்சரியம். இப்படி வைதேகி கணவனிடம் பேசி அவன் பார்த்ததே இல்லை. 

இன்று என்ன என்று பார்க்க, வைதேகிக்கோ, அன்று பரிமளம் சொன்னது, மகனின் வாழ்க்கை, அவன் பரிதவிப்பு எல்லாம் சேர்ந்து, இப்போவும் நான் பேசலைன்னா எப்போ தான் பேச.. என்று மறுகியதன் விளைவு  தான் இந்த தைரியமான பேச்சு. 

அவருக்கு அதனுடன் இன்னொரு காரணமும்  இருந்தது. அது முழுக்க முழுக்க மனைவி சார்ந்தது. ஏன் கொஞ்சம் அவருக்கு திருப்தி, நிம்மதி கொடுத்த காரணம் தான். ஆம்.. இத்தனை வருடங்கள் விடாத கணவனின் அந்த பழக்கம் இப்போது அடியோடு இல்லை. 

அவருக்கு மட்டுமில்லை, தனாவிற்கும் அது தெரியும். மூன்று வருடங்களுக்கு முன்பு  தனா அதை பற்றி பேசியதில் இருந்து, மனைவி அவரை விட்டு பிரிந்ததில் இருந்தே  எதுவும் இல்லை. முழுதும் விலகிவிட்டதாக தகவல். அதற்காக வைதேகி குளிரவில்லை. கணவனை சேரவும் நினைக்கவில்லை. 

பேரன், பேத்தி எடுத்தபின் இந்த அசிங்கம் இல்லை என்ற நிம்மதி தான் அது. இந்தளவு குருமூர்த்தி மாறியிருப்பதே அவருக்கு இன்னும் கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது எனலாம். அதை குருமூர்த்தியும் கண்டு கொண்டார் போல. 

“என்ன பேச்சு தொண்டைக்கு மேல வருது..”  என்றார். 

நான் என்ன செய்தாலும், எப்படி நடத்தினாலும் மனைவி தன்னை விட்டு செல்ல மாட்டாள் என்ற அவரின் அகம்பாவத்தை, ஆணவத்தை ஒரே நாளில் அடியோடு சாய்த்துவிட்ட மனைவியை கோவமாக பார்த்தார். 

மூன்று வருடம் கணவனும், மனைவியும் பிரிந்து தானே இருக்கின்றனர். அப்போது எல்லாம் இல்லாமல், இப்போது மட்டும் என்ன மகனுக்காக தானே..? உள்ளே குமுறினார் கணவர்.

“இத்தனை வருஷம் பூனை குட்டி மாதிரி இருந்துட்டு, இப்போ என்ன மகன் இருக்கிற தைரியமா..?” நக்கலாக கேட்டார்.

“மகன் இருக்கிற தைரியம் இல்லை, மகனுக்காக தான் உங்ககிட்ட வந்திருக்கேன்..”  வைதேகி சொல்ல, 

“உன் மகனுக்கு நான் எதுக்கு..? இல்லை  உனக்கு தான் நான் எதுக்கு..?” என்றார் குருமூர்த்தி. 

அதில் தனா கொஞ்சம் தடுமாறி தான் போனான். அவனால் இப்போதும் சில விஷயங்களை நியாயப்படுத்த முடியவில்லை. ஆனால் அதில் இருந்து மீண்டுவிட்டார், திருந்தி விட்டார் என்று தெரிந்த பின்னும் அதை பிடித்து தொங்கவும் விருப்பமில்லை. 

முன்னமே கணவன், மனைவி இடையில் நுழைந்தாயிற்று. அதுவும் குருமூர்த்தி செய்ததின் பலனே. இனி இருவரும் பார்த்து கொள்ளட்டும் அமைதியாக நின்றான்.

வைதேகிக்கும் கணவன் பேச்சு எங்கோ வலித்தது போல. ஆனாலும் அவர் செய்தது எல்லாம் மறந்துவிடாது, தழும்பை பார்த்தே காலமும் தள்ள முடியாதே..!!! 

“சாரு விஷயம் விட்டுடுங்க,  தனாவுக்கு முன்ன நின்னு கல்யாணம் செஞ்சு வைங்க..” என்றார். 

“அது மட்டும் என்னால முடியாது, இந்த விஷயங்கள் எல்லாம் என் ரத்தத்துலே ஊறி போனது. மாறாது, எப்போவும் போல என்னை தள்ளி வச்சு உங்க கல்யாணத்தை முடிச்சுக்கோங்க..” என்றுவிட்டார். 

“இல்லங்க.. அது..”

“இங்க பாரு அந்த அன்பழகன் என்ன காரணத்துக்காக என்னை பொண்ணு கேட்டு வர சொன்னான்னு எனக்கு தெரியாது, நான் வரவும் மாட்டேன், அவ்வளவு தான், உங்களுக்கு எப்படி உங்க கல்யாணம் முக்கியமோ, அப்படி எனக்கும் சில விஷயங்கள் ரொம்ப முக்கியம், உங்களால எனக்காக இறங்கி வர முடியதப்போ, என்னாலவும் உங்களுக்காக இறங்கி வர முடியாது..”

“நான் ஒன்னும் செய்யவே கூடாதுன்னு சொல்லலை, நீங்களே செஞ்சுக்கோங்க தான் சொல்றேன், இனியும் இதை பத்தி என்கிட்ட கேட்காதீங்க, என் முடிவு மாறாது..” மிகவும் உறுதியாக முடித்தார். அவர் சொன்னாலும் மகன், அனுவை விடமாட்டான் என்று நன்றாக தெரிந்து மறுத்து பயன் என்ன என்று ஒதுங்கி கொள்ள நினைத்தார். 

“சரி நீங்க வராதீங்க, எனக்காக சபையில மட்டும் நில்லுங்க..” என்றான் தனா. 

“அதுவும் முடியாது, இந்த மாதிரி கல்யாணத்தை எதிர்க்கிறதே நான் தான், என்னை போய் சபையில நிக்க சொல்ற..” குருமூர்த்தி குதித்தார். 

“ஏன் நின்னா என்ன..? உங்க மகன் கல்யாணம் தானே அது, இன்னமும் இந்த சாதி, இன்ன ஆளுங்கங்கிறதையே பிடிச்சு தொங்குவீங்களா..?” தனா கோபத்துடன் படபடத்தான். 

“என்னடா தலைக்கு மேல வளர்ந்த ஆம்பிளைன்னு காமிக்கிறியா..?” குருமூர்த்தி குத்தினார். 

“இல்லை.. எனக்காக நில்லுங்கன்னு தான் கேட்கிறேன், நாங்க இதுவரை உங்ககிட்ட உரிமையா எதுவும் கேட்டதில்லை, இப்போ கேட்கிறோம், வாங்க, இத்தனை வருஷம் தான் இந்த சாதிக்காக வாழ்ந்துட்டீங்க, இப்போ கொஞ்ச நாள் எங்களுக்காக இருங்கன்னு தான் கேட்கிறேன்..”

“நான் எங்கேயும் நீங்க கேளுங்க, வைங்கன்னு சொல்லலை, இதுவரை எப்படியோ இனியாவது எல்லாம் கொஞ்சம் சரியா, நல்லதா நடக்கணும்ன்னு ஆசைபடுறேன்,  இது என்னோட வேண்டுகோள் தான், பாக்கி உங்க விருப்பம்..”  முடித்தவன், வைதேகியை பார்த்து என்ன நினைத்தானோ, அவரை அங்கேயே விட்டு அன்பழகனை பார்க்க சென்றான். 

அவர் இவனிடம் என்ன ஆச்சு..? என்று கேட்க, 

“சாரி சார்.. அப்பா வர மாட்டார்..” என்றான். 

“அப்போ இந்த கல்யாணம் நடக்காது, என் சொந்த பந்தம் எல்லாம் பையனோட அப்பன் பொண்ணை கேட்காம பொண்ணு கொடுப்பியான்னு கேட்கிறாங்க..” என்றார். 

“சார்..  ப்ளீஸ், உங்களுக்கு தெரியாதது இல்லை, இங்க பொண்ணு கேட்கிறது மட்டுமில்லை விஷயம், அவர் இதுவரை நடந்துக்கிட்டது தான், உங்க வீடேறி வந்து அவர் பொண்ணு கேட்கிறது உங்களக்கு கௌரவமா இருக்கும், ஆனா அவருக்கு அது ரொம்ப பெரிய அடி, ம்ம்.. கொஞ்சம் இறக்கம் தான்,..”

“அந்த இறக்கம் அவர் சாதியை வச்சு செஞ்சதுக்கு தான், அது தப்புனு நான் சொல்லலை, ஆனா எப்படி இருந்தாலும் அவர் என் அப்பா, அவரோட மரியாதையை நானே பணயம் வச்சதா இருக்க கூடாது. என்னால இதுல அவரை வற்புறுத்த முடியாது, எனக்கு அவரும் வேணும், நீங்களும் வேணும், உங்க இரண்டு பேருக்கும் பாதகம் இல்லாத வழிய தான் நான் பார்த்திருக்கேன்,.”

“இந்த பொண்ணு கேட்கிறது, நிச்சயம், சடங்குன்னு அடிச்சுக்க வேண்டாம், பொதுவா பத்திரிக்கை அடிச்சு, கோவில்ல வச்சு கல்யாணத்தை முடிச்சுக்கலாம். என்னோட ஆசைக்கு ரிசப்ஷன் மட்டும் பெருசா நம்ம ஊர் மைதானத்துல வச்சுக்கலாம்,  என்ன சொல்றீங்க..?” கேட்டான். 

“அப்போ எல்லாம் முடிவு பண்ணி தான் கேட்கிற..? என் சொந்த பந்த்ததுக்கு நான் என்ன பதில் சொல்ல..?” அன்பழகன் விடாமல் கேட்டார். 

“சார்.. ம்ஹூம்.. மாமா.. முதல்ல அவங்களுக்கு நீங்க ஏன் பதில் சொல்லணும்..? யோசிங்க, இது உங்க பொண்ணு கல்யாணம், உங்களை கேள்வி கேட்க  யாருக்கும் உரிமை இல்லை, அப்படியே கேட்கிற யாரும் நமக்கு ஒன்னும்  தூக்கி கொடுத்துட மாட்டாங்க, அவங்களுக்கு கேள்வி கேட்கிறது மட்டும் தான் வேலை,  நமக்கு நம்ம கஷ்டம், சந்தோஷம் மட்டும் தான் முக்கியம், அதை பாருங்க, ப்ளீஸ்..” என்றான். 

அன்பழகன் முகம் தெளியாமல் அமர்ந்திருக்க, “மாமா.. எத்தனை வருஷம் நீங்க யோசிச்சாலும் இது தான் வழி, நான் தான் உங்க மாப்பிள்ளை, இதுல மாற்றம் இல்லாதப்போ, வேறெதுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கணும்..?”  என்றான். அன்பழகனுக்கு அவன் வார்த்தைகள் கொஞ்சம் கோவத்தை கொடுத்தாலும், உண்மை என்பதையும் மறுப்பதற்கு இல்லை. 

அவர் உர்ரென்று இருக்க, “மாமா.. ரொம்ப யோசிக்காதீங்க ப்ளீஸ், எங்களுக்கும் வயசாகுது..”  என்றுவிட்டான் சற்று குறும்பாக. 

“என்னமோ பண்ணுங்க..” என்றுவிட்டார். அரைகுறை மனதாக தான்.  இரு அப்பாக்களுக்கும் இந்த திருமணத்தில் அந்தளவு இஷ்டம் இல்லை என்பது தனாவிற்கு வருத்தம் தான். 

ஆனால் இதை பார்த்தால் அவனுக்கு அறுபதாம் திருமணம் கூட நடக்காது. “போதும்டா.. பத்து வருஷம் காலி, இனியும் பார்த்தா ஆகாது..” உடனே முகூர்த்தம் பார்த்தான்.

அனுவை பார்த்து சொல்லணும், அன்னைக்கு பின்னாடி போனவ, இன்னைக்கு ஓடி வந்து கட்டி பிடிச்சுப்பா.. நினைக்கையிலே உடல், மனம் இரண்டு ஜில்லென்றானது.  அவன்  கைகளில் வண்டி பறந்தது.  

“சைவ முத்தமாவது வாங்கிடணும்..”  

அவனின் இத்தனை வருட காதல் கனவுகள் நிஜத்தில் இராஜ பவனி வர தொடங்க, தனாவிற்கு கொண்டாட்டம் தான்.