இராஜ பவனி 17

குகன் வாய் மேல் கை வைத்து அமர்ந்திருக்க, வீட்டில் அமைதிக்கெல்லாம் அமைதி. பெண்கள் மூவரும் மற்றவர் முகம் பார்க்க, தனா முகம் பார்க்க என்று இருந்தனர். தனா கண்களோ  குகனை கொலை வெறியுடன் முறைத்து கொண்டிருந்தது

குகன் முகத்திலோ  அடக்கப்பட்ட சிரிப்பு. எப்போது வேண்டுமானலும் வெடித்து சிரித்து  விடுவேன் என்று தன்னை தானே கட்டுப்படுத்தி அமர்ந்திருக்க, புரிந்த தனா, “கொன்னுடுவேன்டா உன்னை..”  என்று கழுத்தை நெறிப்பது போல கை காட்டி மிரட்டினான். அவனும் இப்படி  என்று சொன்னதில் இருந்து சிரித்து கொண்டிருக்கிறான்

உனக்கு மட்டும் வில்லங்கம் சந்து பொந்து எல்லாம் புகுந்து வருதேடா.. ஹாஹாஹா.. எப்படி எப்படி உன் அப்பா போய் பொண்ணு கேட்கணுமா..? அதுவும் அவர் வீட்டுக்கே போய், ஹாஹா..  நடக்கிற காரியமா இது, இரண்டு பெருசுங்களும் உன் வாழ்க்கையில நல்லா கபடி விளையாண்டிட்டு இருக்காங்க..” என்று சொல்லி சொல்லி சிரித்தவன், தனாவின் கோவத்தில் தான் சிரிப்பை கட்டுப்படுத்தி அமர்ந்திருக்கிறான்.

தனா.. அப்படியா சொன்னார் அனு அப்பா..”  பரிமளம் வாய் திறந்தார். ம்ம்.. தனா கடுப்புடன் தலை ஆட்ட

ஏன் இப்படி கேட்டார்..? அவருக்கு தெரியாதா அப்பாவை..? அவர் போய் வீடேறி பொண்ணு கேட்கிறதாவது, நடக்கிற காரியமா இது..?” சாரு கொஞ்சம் கோபத்துடன் சொன்னாள்

வைதேகி முகம் கசங்க அமர்ந்திருந்தார். அவருக்கும் இதென்ன என்று தான் இருந்தது. தனா, அனு காதலில் முதல் எதிரியே குருமூர்த்தி தான், அவரையே பெண் கேட்க சொன்னால்..? ஒருவேளை என் மகனுக்கு பெண் கொடுக்க அவர்களுக்கு இஷ்டம் இல்லையோ, அதான் இப்படி கேட்கிறாரோ..? மனதின் சந்தேகத்தை வாய் விட்டும் சொன்னார்

அது அப்படி இல்லை வைதேகி..” என்றார் பரிமளம்

ஒரு அப்பாவா அவரையும் நாம யோசிக்கணும், தனா சின்ன பிள்ளை, அவன் போய் பொண்ணு கேட்டான்னு பொண்ணை தூக்கி கொடுத்துடுவாங்களா..? நாளைக்கு கல்யாணம் காட்சின்னா வீட்ல பெரியவங்க தானே  பார்க்கணும்..”

காதலிக்க வேணா பெத்தவங்க தேவையில்லாம இருக்கலாம், ஆனா கல்யாணம், அவங்க வாழ போற வாழ்க்கைக்கு பெரியவங்க, குடும்பம்ன்னு ஒன்னு  கண்டிப்பா வேணும், அது புரிஞ்சு தான் அவர் கேட்டுக்கிருக்கிறார், என்ன இருந்தாலும் பொண்ணை பெத்தவர் இல்லை, நாலையும் யோசிக்கணும் தானே செய்வார்..” நிதானமாக சொன்னவர்தனாவை குட்டவும் செய்தார்

தனா புரிந்து எதுவும் சொல்ல முடியாமல் முகம் திருப்ப, குகன் இன்னும் கண்களாலே சிரித்து கொண்டிருந்தான். “இவன் வேற சாவடிக்கிறான்..” எரிச்சலாக முணுமுணுத்தான்

இருந்தாலும் அனு அப்பா என்னை இப்படி லாக் பண்ணியிருக்க வேண்டாம், பொண்ணை காதலிச்சதுக்கு நல்லா வச்சு செய்றார் மனுஷன்..” தனா  நொந்து கொண்டான். அதற்காக அவரையும் ஒரேடியாக குறை சொல்ல முடியவில்லை. அவரின் நிலை அங்கு என்னவோ..?

அதையே வைதேகியும் ஒத்து கொண்டார். “நீங்க சொல்றது சரி தான் அண்ணி, அப்பாவா அவர் கேட்கிறது நியாயம் தான், அவரோட சொந்த பந்தங்களுக்கும் அவர் பதில் சொல்லணுமே..” என்றார்

ஆமா வைதேகி.. தனாவுக்கு பொண்ணு கொடுக்க கூடாதுன்னு மகன், பங்காளிங்க, மாமன் மச்சான்னு எல்லாம் ஒன்னு சேர்ந்து அவரை நெருக்குறாங்க போல, அப்படியும் அவர் கொடுக்க நினைக்கிறார் தானே, ஆனா என்ன அண்ணாவை வர சொல்றார், அதான் பார்க்கணும்..” பெரு மூச்சு விட்ட பரிமளம்

மத்தவங்கன்னா பேசி புரிய வைக்கலாம்இல்லை கெஞ்சி கூட கேட்கலாம், மகன்னு அப்பாவும் இறங்கி வரலாம், இங்க அப்படி எதுவும் நடக்கும்ன்னு  நாம எதிர்பார்க்க முடியாது, நீங்க கொஞ்சம் காட்டியா இருந்தாலாவது மகனுக்காக புருஷன்கிட்ட சண்டை போட்டோ, பேசியோ, பேசாமலோ, மிரட்டியோ எப்படியோ  சம்மதிக்க வைக்க முயற்சி செய்யலாம்.. ஆனா நீங்க.. விடுங்க..” கொஞ்சம் ஆதங்கத்துடனே பரிமளம் நிறுத்திவிட, வைதேகிக்கு முகம் சுருங்கி போனது

பார்த்த மகன் சமாதானமாக, “அவர் முன்னாடி அம்மா என்ன பண்ணாலும் எடுபடாதுத்தை, யாருக்கும் மசியர ஆள் அவர் இல்லை..”  என்றான்பரிமளம் மறுத்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் வைதேகி ஒரு மனைவியாக என்னென்ன செய்திருக்கலாம் என்று பட்டியலே ஓடியது.

“இப்போ என்ன தான் செய்றது..?” சாரு கேட்டாள்

ஒன்னும் செய்ய முடியாது..” தனா வெடித்து வந்த வார்த்தைகளை முழுங்கி கொண்டான். ஏமாற்றம், ஆதங்கம் தான். இதில் அனு அப்பாவை பழி சொல்லவும் ஏதுமில்லை.  

பரிமளம் சொன்னது போல, அவரும் அத்தனை கட்டுப்பாடுகளை தளர்த்தி, உறவினர்களை எதிர்த்து  தான் ஓர் அடி முன் எடுத்து வைத்திருக்கிறார். அதை தொடர்வது இப்போது தனா கைகளில், ம்ஹூம்.. குருமூர்த்தி கைகளில். அவர் நிச்சயம் அடுத்த அடி எடுத்து வைக்க மாட்டார்.

அந்த தெளிவு, உறுதி மகனுக்கு இருக்க தான் செய்தது. அதனாலே, “பார்க்கலாம் சாரு என்ன செய்ய முடியும்ன்னு..”  என்று அமைதியாக முடித்துவிட்டான். ஆனால் உள்ளுக்குள் சுருண்டு கொண்டான்

அன்பழகன் கேட்டும்  எதுவும் செய்ய முடியாமல் நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. பல முறை குருமூர்த்தியிடம் கேட்க சென்று திரும்பி வந்தான். அவர் குணம் அவனை நெருங்கவிடவில்லை. அவரை எதிர்த்து  சில செயல்களை செய்துவிட்ட பின், இப்படி என்று சென்று கேட்கவும் அவனுக்கு முடியவில்லை

அப்படி கேட்பதாக இருந்தாலும் இவனே முன்னமே கேட்டிருக்க வேண்டும், இப்படி அனு அப்பா சொன்னார் என்று கேட்க கூடாதுஎதோ ஒரு இடத்தில் இது சுயநலமாகவும் அவனுக்கு பட்டது. அவர் செய்வார், செய்ய மாட்டார் என்பதை தாண்டி, அவரிடம் கேட்பதே இவனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது

இரு அப்பாக்கள், அனு என்று மிகப்பெரிய சூழலில் சிக்கி கொண்டது போல தான் உணர்ந்தான். இந்த மனநிலையில் அவனுக்கு அனுவை சென்று பார்க்கவும் முடியவில்லை.  அவள் தேடுவாளே என்று சென்று நின்று வந்தான்

அனுவிற்கும் அவனிடம் வித்தியாசம் தெரிந்தது. “என்ன ஆச்சு..? ஏன் எப்படியோ இருக்கார்..?” தனக்குள் குழம்பினாள் பெண். சுஜாதா வேறு தனா ஏதாவது சொன்னானா..? என்று மகளிடம் கேட்டார்

எதை பத்தி..?” இவள் முழிக்க, அவர் ஒன்னுமில்லை என்று சென்றுவிட்டார். அனுவிற்கு சட்டென்று ஒரு சந்தேகம், மெல்ல விசாரித்ததில், தனா மில்லுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. அப்பா ஏதும் அவரை மிரட்டியிருப்பாரோ..?” தோன்ற

அவரை என்ன சொன்னீங்கப்பா..?” என்று தாமதிக்காமல் அப்பாவிடம் சென்று நின்றுவிட்டாள். அன்பழகன் புரியாமல் பார்க்க, “அவரை ஏதாவது மிரட்டுனீங்களாப்பா..?” மீண்டும் கேட்டாள்

யாரை.. தனாவையா..? நான் ஏன் அவனை மிரட்ட போறேன்..? அப்படியே மிரட்டுனாலும் அந்த பையன் ஒன்னும்  அசையற ஆள் இல்லை..” என்றார் தந்தை

அனு நம்பாமல் பார்த்தவள்,  “அவரை நீங்க மில்லுக்கு வர வச்சது எனக்கு தெரிஞ்சிடுச்சு..” என்றாள்

அப்பாவிற்கு கோவம் வந்துவிட, “என்னை என்ன அந்த குருமூர்த்தி மாதிரி நினைச்சியா..?  நான் உங்க கல்யாணத்துக்கு சரி சொல்ல தான் கூப்பிட்டேன், அரட்டி, மிரட்ட ஒன்னும் இல்லை..” என்றார்

அனு நம்பாமல் கண்கள் விரித்து பார்க்க, “தனா உன்கிட்ட எதுவும் சொல்லலையா..?” அப்பா ஆச்சரியமாக கேட்டார்

இல்லை..”  என்று அனு  தலையாட்டியவள், தனாவின் சமீபமான வாடிய முகம் நினைவிற்கு வர, சந்தேகம் கொண்டு, “வேறெதுவும் சொன்னீங்களாப்பா..?” கேட்டாள்

அவங்க அப்பாவை பொண்ணு கேட்டு வர சொன்னேன்..” என்றுவிட்டார் தந்தை. அனுவிற்கு இப்போது எல்லாம் புரிந்தது

உங்களுக்கு எங்க கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னா நேராவே சொல்லியிருக்கலாமே..? இதென்னப்பா நடக்காததை கேட்குறீங்க..? நீங்க வேணும்ன்னு தான் பண்றீங்க..? எங்களை பழி வாங்குறீங்க..?” பொங்கிவிட்டாள்

அனு.. பார்த்து பேசு..” சுஜாதா மகளை கண்டித்தார். அன்பழகன் மகளுக்கு சமாதானம்  எதுவும் சொல்லவில்லை. அவருக்கு இன்னும் மகள் காதலில் கோவம் இருக்க, எப்படி  சொல்வார்..? 

இங்க பாரு அனு நீ என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை, பெத்தவங்களா நாங்க உன்னை நம்பினதுக்கு நீ எங்களை ஏமாத்தி தான் இருக்க, அப்படி இருந்தும் இவ்வளவு எதிர்ப்புக்கு இடையில நான்  உன்னை அந்த பையனுக்கு கொடுக்க  சம்மதம் தான் சொல்லியிருக்கேன்..”

பொறு அனு, நான் பேசி முடிச்சுடுறேன், நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க, முறையா உன்னை கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்ன்னு தானே..? அதையே தான் நானும் கேட்கிறேன், அவங்க வீட்ல இருந்து முறையா உன்னை பொண்ணு கேட்டு வரட்டும், இந்த ஊரே எதிர்த்தாலும் நான் உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன், இது தான் என் முடிவு, இறங்கி வர மாட்டேன், இதுல நீ என்னை குறை சொல்லவும் எதுவுமில்லை..” திட்ட வட்டமாக முடித்தார்

இது நியாயம் இல்லைப்பா.. அவர் அப்பா பத்தி உங்களுக்கு தெரியும் தானே..?” மகள் தேங்கிவிட்ட கண்ணீருடன் கேட்டாள்

அது முதல்ல அந்த பையனுக்கும், உனக்கும் தான் தெரிஞ்சிருக்கணும்..” என்றார் தந்தை கோபமாக

ப்ளீஸ்ப்பா..” அனு கெஞ்சலாக கேட்க, அன்பழகன் முகம் திருப்பி கொண்டு சென்றுவிட்டார்

இவ்வளவு வருடங்கள் காத்திருந்தும் பலன் இல்லையா..?  காதல் எனும் மாய உலகத்தை தாண்டிய நிதர்சனம் இருவரையும் சுட்டது

அதிலும் தனாவை தான் அதிகம் கொன்றது. “இப்படியொரு அப்பாக்கு மகனா பிறந்து இந்த காதல் எல்லாம் உனக்கு தேவையா..? எந்த தைரியத்தில  நீ அவளை பார்த்த..?”  நிற்க வைத்து  கேள்வி கேட்டது

உன் வாழ்க்கை எப்படியோ நாசமா போகட்டும், அவ வாழ்க்கையை  ஏண்டா கெடுத்த..? ஏன் சும்மா இருந்த பொண்ணு மனசை கெடுத்த..?”  அவன் மனசாட்சியே அவனை குற்றம் சொன்னது

என் காதல் அவ வாழ்க்கையை சிதைச்சிடுச்சா..?” ஓர் நாள் நினைத்த நொடி நெஞ்சம் குலுங்கி போனது

 குருமூர்த்தியும் மகனை பார்த்து புருவம் சுருக்கினார். “என்ன ஆச்சு இவனுக்கு..?”  பெத்த மனம் அவரின் அகங்காரத்தை, திமிரை கொஞ்சம் மிதித்து தள்ள, தொழிலில்  எதாவது பிரச்சனையா என்று விசாரித்தார். எதுவும் இல்லை எனவும், “வேற என்ன..? அந்த பொண்ணுக்கு  கல்யாணம் ஏதாவது.. நல்லது, படட்டும்..”  கருவி கொண்டவர் முன் ஒரு நாள் தனா சென்று நின்று விட்டான். 

அவனுக்கு வேறு வழி இல்லை. அனுவிற்காக.. தேற்றி கொண்டு செல்ல,  அவனுக்கு முன் அங்கு வைதேகி நின்றிருந்தார். “மகனுக்காக புருஷன்கிட்ட வந்திருக்க அப்படி தானே..?” குருமூர்த்தி மனைவியை தீவிரமாக கேட்டு கொண்டிருந்தார். 

தனா வாசலை கடந்து வேகமாக உள்ளே செல்ல, “பார்றா.. என்னடா அதிசயமா இந்த கொடுமைக்கார  போர்ஷனுக்கு  அம்மாவும், மகனும், வந்திருக்கீங்க..?” பெரிதாக ஆச்சரியம் காட்டினார். 

வைதேகி பேச வர, “நானே சொல்றேன்ம்மா..” என்றவன், குருமூர்த்தியிடம் அவன் விஷயத்தை சொன்னான்.

குருமூர்த்தியின் கண்கள் ஒளிர, “என்கிட்ட தான் நீ பேசுனியா..? இத்தனை வருஷம்  வீரப்பா திரிஞ்ச ஆம்பிளை திடீர்னு வந்து முன்ன நிக்கிற..? சரி சொல்லு  என்ன சொன்ன..? எனக்கு கேட்கல..” என்றார். 

தனா கண் மூடி திறந்தவன், “அனுவை பொண்ணு கேட்க நீங்க வரணும்..” என்றான் மீண்டும். 

“நானா..? என்ன தைரியம் உனக்கு..? இதை  தான் நீயும் மகனுக்காக செய்ங்கன்னு சொன்னியா..?”  மனைவியிடம் கோவத்தில் கொதித்தவர், மகனை பார்த்து நிதானித்து, “சரி அது இருக்கட்டும்..  நான் ஏண்டா வரணும்..? நீ தான் இப்போ இந்த வீட்டுக்கு பெரியவன் ஆச்சே..? உன்னோட முடிவு தானே எல்லாம்..?” என்றார் நக்கலாக. 

“அனு அப்பா உங்களை கேட்கிறார்..” மறைக்க நினைக்கவில்லை சொல்லிவிட்டான். 

“அதானே பார்த்தேன், அந்த ஆள் கேட்கலைன்னா என்னைவிட்டு ஜே ஜேன்னு கல்யாணம் செஞ்சிருப்ப இல்லை..” குருமூர்த்தி மகனை தீர்க்கமாக பார்த்தார். அவனும் இதை நினைத்தவன் தானே..?  

“கேட்டாலும் நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்..” தனா உண்மையை தான் சொன்னான். 

“ஆமா.. நான் ஒத்துக்க மாட்டேன் தான், அதுக்காக நீ என்கிட்ட கேட்காம இருப்பியா..? இப்போ பாரு உன் தலையெழுத்து என்கிட்ட வந்து நிக்கிற மாதிரி ஆகிடுச்சு இல்லை..” என்றார் எகத்தாளமாக.