Raaja Bavani 15 2 13662 “ஏன் இங்கன்னா உருப்படியா போய் சேர மாட்டோம்ன்னு பயமா..?” அவன் சீண்டினான். அதை புரிந்து கொண்ட தனா, “ஏன் கேட்டுக்கு வெளியேன்னா உனக்கு பயமா..? இல்லை தானே, அப்போ வெளியே போய் இரு, நான் இவர்கிட்ட பேசிட்டு வரேன்..” என்றான். “என்னடா விட்டா பேசிட்டே போற..? உன் அப்பன் என்ன பெரிய இவனா..? அந்த ஆள் மகன் உனக்கு கொம்பு முளைச்சிருக்கா..?” “நீ திரும்ப திரும்ப அவர்கிட்டே போற, இன்னொரு முறை அவரை மரியாதை இல்லாம பேசின திருப்பி பேச வாய் இருக்காது..” கடுமையாக எச்சரித்தான். “என்னமோ அப்பாவும் மகனும் ஒட்டி இருக்கிறது போல இவ்வளவு சவுண்ட் விடுற..?” அவன் நக்கலாக பேச, அவனை தீவிரமாக பார்த்த தனா, “இது தான் உனக்கு கடைசி வார்னிங்..” எச்சரித்தான். “என்னடா செய்வ..?” அவன் எகிற, தனா திரும்பி அன்பழகனையும், மற்றவர்களையும் பார்த்தவன், “நான் என் விஷயம் பேச தான் வந்தேன், ஆனா இங்க வேற மாதிரி போய்ட்டு இருக்கு, நாம எல்லாம் ஒரே ஊர், என்னோட பிரச்சனை ஊர் பிரச்சனையா மாறது எனக்கு பிடிக்கல, உங்களுக்கும் அப்படி தான்னு நினைக்கிறேன்..” என்றான் கூர்மையாக. “தனா இது சரி வராது, நான் நம்ம ஆளுங்களை கூப்பிடுறேன்..” குகன் வேண்டுமென்றே சொன்னான். “அட பொறுப்பா.. டேய் அரசு தள்ளி போ நீ, அந்த தம்பி பேச வந்த விஷயத்தை மட்டும் பாரு, தேவையில்லாம ஊர் வம்பை இழுக்காத..” இவ்வளவு நேரம் அவனை பேச விட்டு இப்போது அடக்கினர். அதில் தனாவிடம் அலட்சிய சிரிப்பே. “பரவாயில்லை.. இப்போவாவது நியாயம் பேச தெரியுதே..” என்றுவிட்டான். “இப்போ என்னப்பா உனக்கு, அதான் நாங்களும் முதல்லே சொல்லிட்டோம் இல்லை பொண்ணு இல்லைன்னு, நீ திரும்ப பேச போய் தான்..” “போதும்.. உங்க கட்ட பஞ்சாயத்துக்கு நான் ஆள் இல்லை, நானும் ஊர்க்காரன் தான், எல்லாம் தெரிஞ்சவன் தான், என்கிட்ட உங்க வேலையை காட்டாதீங்க.. இங்க யார் யார் எப்படின்னு எனக்கு நல்லா தெரியும், நான் பேச ஆரம்பிச்சா நல்லா இருக்காது, உங்க வெறிக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன், அதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க..” தனா இழுத்து பிடித்த பொறுமையுடன் அன்பழகனிடம் திரும்பியவன், “நான் உங்ககிட்ட தனியா பேசணும், நீங்க தான் அனுவோட அப்பா, உங்க முடிவு தான் எனக்கு வேணும், இவங்க எல்லாம் எனக்கு யாரும் இல்லை, இவங்க வியாக்கின பேச்சு எனக்கு வேண்டாம்.. நாம பேசணும்..” என்றான். அன்பழகனுக்கும் நடந்த விஷயங்கள் அந்தளவு ஒப்பவில்லை. அவருக்கு இது மகள் வாழ்க்கை ஆயிற்றே. “உள்ள வா..” என்று அவரின் ரூமுக்கு சென்றார். தனா திரும்பி குகனை பார்க்க, “போடா.. இவங்களை நான் பார்த்துகிறேன்..” என்றான் நக்கலாக. அதில் மற்றவர்கள் முறைக்க, “இன்னா லுக்..? அவனுக்கு தான் பொண்ணு தேவை, எனக்கு இல்லை, என் மாமனார் யார் தெரியும் இல்லை..” என்று முன்பு பேசியவனை வம்பிழுக்க, தனா அவனை பார்த்து தலை ஆட்டிவிட்டு, அன்பழகன் ரூம் சென்றான். “உட்காரு..” சேரை காட்ட, “இல்லை பரவாயில்லை..” என்று கை கட்டி நின்றான். சில நொடி அமைதியாக இருந்த அன்பழகன், “எனக்கு என் பொண்ணை வச்சு இவ்வளவு பேச்சு, பிரச்சனை பிடிக்கல, உன்னால அவ பேரும் கெட்டு போச்சு, ஒரு அப்பாவா என் நிலைமை எப்படின்னு உனக்கு புரியாது, உள்ள அவ்வளவு கொதிக்குது, இப்போ எல்லாம் சாதாரணமா ஒரு இடத்துல பேசணும், எதாவது மத்தியஸ்தம் பண்ணனும்ன்னா கூட பயமா இருக்கு, எங்க என் பொண்ணை வச்சு எதாவது பேசிடுவாங்களோன்னு..” அன்பழகன் தளர்ந்து போய் சொல்ல, தனாவிற்கு வருத்தமாகி போனது. சில நொடி அவரே சமாளித்து, “என் பங்காளிங்களும் என்னை ரொம்ப நெருக்கிறாங்க, அதுக்கு உன் அப்பாவும் ஒரு காரணம், அவர் இந்த சாதி வச்சு நிறைய பண்ணிட்டார், அந்த கோவத்தை இதுல காட்டுறாங்க, என்னால இவங்களோட மல்லு கட்ட முடியல, எனக்கு என் பொண்ணு முக்கியம், அவ வாழ்க்கை நல்ல இடத்துல அமையறது முக்கியம்..” “இதை எல்லாம் நான் பார்க்க முடியாது, எனக்கு அந்தளவு தெம்பும் இல்லை, உன்கிட்ட நான் ரொம்ப பொறுமையா கேட்டுகிறேன், விட்டுடு, இது சரி வராது, நீ உன் வழியை பாரு, என் பொண்ணுக்கான வழியை நான் பார்க்கணும்.. என் பொண்ணை வச்சு இதுவரைக்கும் நடந்ததே போதும்..” “எப்படியோ என் மச்சான் முறைல ஒரு பையனை தேடி பிடிச்சிருக்கேன், அந்தளவு இல்லை தான், அதுக்கே நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும், அவ தலையெழுத்து எப்படியோ அவ வாழ்க்கை போகட்டும், நீ பிடிவாதம் பிடிக்காம கிளம்பிடு தம்பி..” “இது வரைக்கும் நடந்தததை மறந்திடு, என் பொண்ணை நிம்மதியா வாழ விடு, உன் ஆசை எப்போவும் நடக்காது, என்னோட முடிவும் எப்போவும் மாறாது..” முடித்துவிட்டார். மிகவும் பொறுமையாக தெளிவாக முடித்துவிட்டார். கத்தி பேசாமல், அவரின் இந்த அணுகுமுறை தனாவை திணற வைத்தது தான். ஆனால் அவன் காதல், அவனின் அனு.. விட முடியாதே..? தனா சில நொடிகள் எடுத்து கொண்டான். பின் அவரை நேராக பார்த்து பேச ஆரம்பித்தான். “முதல்ல என்னால நடந்த எல்லா பிரச்சனைக்கும் மன்னிப்பு கேட்டுக்கிறேன், இப்படி நடக்க கூடாதுன்னு தான் நாங்களும் இத்தனை வருஷம் ரொம்ப கட்டுப்பாட்டோட இருந்தோம்..” என, அன்பழகன் முகத்தில் கோவம். “எதே அன்னைக்கு தெருவுல கை பிடிச்சுட்டு நின்னதா உங்க கட்டுப்பாடு..” சீறலாக பாய்ந்தார். “அன்னைக்கு ஒரு நாள் தவிர எங்களை எங்கேயாவது சேர்த்து வச்சு பார்த்திருக்கீங்களா..? இல்லை யாராவது பார்த்தேன்னு சொல்லியிருக்காங்களா..?” தாங்கலுடன் கேட்டான். “ம்ப்ச்.. இப்போ எதுக்கு அந்த பேச்சு, நான் தான் என் முடிவை சொல்லிட்டேன் இல்லை, கிளம்பு..” என்றார். “இல்லை சார்.. என்னால அனுவை விட்டு கொடுக்க முடியாது, அதை மட்டும் என்கிட்ட கேட்காதீங்க..” தனா நிமிர்ந்து நின்று கொண்டான். “நீ என்னை கோவப்படுத்துற, அந்த குருமூர்த்தி மகனுக்கு நான் என் பொண்ணை கொடுக்கிறதா..? ஏன் அவ வாழ்க்கையும் உன் அம்மாவை போல சீறழியணுமா..?” கேட்டுவிட, தனா உடல் இறுகி போனது. “இது தான் உண்மையான காரணம் இல்லை..” அழுத்தமாக கேட்டான். “ஆமா.. உன் அப்பாவை போல எனக்கு இந்த சாதி, மதம் லொட்டு லொஸ்க்கு மேல வெறியில்லை, நான் என் பசங்க வாழ்க்கையை தான் பார்ப்பேன்..” “இது எனக்கும் தெரியும் சார், அந்த நம்பிக்கையில தான் நான் அனுவை கேட்டு வந்திருக்கேன், நீங்க நினைக்கிறது போல அனு வாழ்க்கை இருக்காது, என் மேல நம்பிக்கை வச்சு உங்க பொண்ணை கொடுங்க..” “நான் சொல்ல சொல்ல..” “சார்.. இருங்க நான் பேசி முடிச்சிடுறேன், என் அப்பா அவர் எப்படி இருந்தாலும் என் அப்பா தான், அவரை நான் எங்கேயும் எப்போவும் விட்டு கொடுக்க மாட்டேன், மகனா எனக்குன்னு கடமை இருக்கு, அவர் இதுவரை எனக்கான கடமையை சரியா செஞ்சிருக்கார், அதுக்காக அவர் சரின்னும் நான் சொல்லலை..” “அவரை வச்சு என்னை மதிப்பிடாதீங்கன்னு தான் கேட்கிறேன், உங்க குடும்பங்கள்லயும் சில விஷயங்கள் நடந்தது தான், நடக்கிறது தான், ஆனா நீங்க அப்படி இல்லை, உங்களை போல தான் நானும், என்னை நம்புங்க, அனுவை எனக்கு கொடுங்க..” “கொடுக்கலைன்னா..” அன்பழகன் கோவம் நன்றாக தெரிந்தது. “நீங்க கொடுக்கிற வரை காத்திருப்பேன்..” என்றான் தனா உறுதியாக. “நான் இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்ணுக்கு பேசி முடிக்க போறேன், தெரியும் இல்லை..” “ம்ஹூம்.. அது நடக்காது சார்..” “என்னடா மிரட்டுறியா..?” “இல்லை, அவளை வருத்தி, கட்டாயப்படுத்தி எதுவும் செய்யாதீங்கன்னு தான் சொல்றேன், ஒரு நேரத்துல நான் ரொம்ப பயந்ததும் இதுக்கு தான், எங்க அனு உங்களுக்காக பார்த்து என்னை விட்டு கொடுத்துடுவாளோன்னு, அப்படி மட்டும் நடந்திருந்தா நான் என்ன செஞ்சிருக்க முடியும்..? ஒதுங்கி தான் போயிருக்கணும், போயும் இருப்பேன்..” “ஆனா அனு அப்படி ஏதும் செய்யல, என் வாழ்க்கையை மீட்டு கொடுத்திருக்கா, உங்ககிட்ட அவ்வளவு உறுதியா நின்னா, எனக்காக நீங்க கொடுத்த பிரஷரை எல்லாம் சமாளிச்சா, இப்போ வரை சமாளிச்சுட்டு இருக்கா, அவளை எப்படி நான் விட்டு கொடுக்க முடியும் சொல்லுங்க, அப்புறம் நான் வாழ்ந்தும் என்ன செய்ய போறேன்..?” “ப்ளீஸ் எனக்கு அனுவை கொடுத்துடுங்க, தனஞ்செயனா உங்களுக்கு என்கிட்ட எதாவது குறை தெரிஞ்சா சொல்லுங்க, உடனே சரி செஞ்சுக்கிறேன், என் ரத்தத்தை, நான் பிறக்கும் போதே பிறந்த அடையாளத்தை என்னால மாத்த முடியாது, ஆனா சரி செய்ய முடியும், செஞ்சுட்டும் இருக்கேன், வேறென்ன என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..? சொல்லுங்க செய்றேன்..” என்றவன், அவரை பார்க்க, அவரிடம் முழு மறுப்பே. தனா தளரவில்லை. “என் அப்பா, என் சாதி எல்லாம் விடுங்க, உங்க பெண்ணுக்கான தகுதி எனக்கு இருக்கான்னு மட்டும் பாருங்க, உடனே கேட்கல, காத்திருக்கோம், வேறெந்த முடிவும் எடுக்க மாட்டோம், நம்புங்க, இப்படி மாப்பிள்ளை, நிச்சயம் போல செய்யாதீங்க, நடக்காது..” “எனக்கு அனு சகல உரிமையோட, கௌரவத்தோட தான் என் வீட்டுக்கு வரணும், அது தான் நான் அவளுக்கு கொடுக்கிற மரியாதை, அதுக்கு உங்க சம்மதம் எனக்கு வேணும், அது எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லை, யோசிங்க.. நான் வரேன்..” முடித்தவன், கிளம்பிவிட்டான்.