“டேய் என் தகுதியை பத்தி பேசுற ஆம்பிளையாடா நீ..? உன் ஒழுக்கம் கொடி கட்டி பறக்குது.. ஊருக்கு நடுவுல என்..”

“ஆமா.. ஆமா..  இவர் பார்வையில  நான் ஒழுக்கம் இல்லாதவன் தான், எனக்கான பொண்ணை நான் தேடிகிட்டவன் தான், இவர் மரியாதையை ஊர் நடுவுல கெடுத்தவன் தான்,  ஆனா என் தங்கச்சி அப்படி இல்லை தானே, அப்பாவுக்கு  அடங்கின மகளா தானே இருக்கா..? அவளுக்கு இவர் என்ன செஞ்சுட்டு இருக்கார் சொல்ல சொல்லுங்க தாத்தா..”  வார்த்தைகள் மிகவும் ஆக்ரோஷமாக வந்து விழுந்தது.

“நான்.. நான்..”  பேச முடியாமல் குருமூர்த்தி திணற ஆரம்பித்தார். தனா அவரை கண்டு கொள்ளவே இல்லை. அவனின் இத்தனை வருட கோவம், ஆதங்கம், வருத்தம், ஆத்திரம் எல்லாம் வெளியே வார்த்தைகளாக வந்து விழுந்தது.

“இவருக்கு ஆகாத இந்த ஒழுக்கம் கெட்ட பிள்ளையை தூக்கி போட்டு, அவருக்கு கட்டுப்பட்ட நிக்கற மகளை பார்த்திருக்கணும், அப்படி செய்யல இவர், என்னை வச்சு அவ வாழ்க்கையை அடகு வைக்கிறார்..”

“போதும், இனி சாருக்கு நல்லது கெட்டது நான் பார்த்துகிறேன்,  இவரை தலையிட வேண்டாம் சொல்லுங்க.. குகன் தான்  மாப்பிள்ளை, என் விஷயம்  எங்கேயும் போயிடாது..”

“நான் ஓடி போயும் கல்யாணம் செய்ய மாட்டேன், அப்படி ஒரு தப்பையும் நான் பண்ணலை, கண்ணியத்தோட, கட்டுப்பாடோட தான் நாங்க இருக்கோம்..”

“பெத்தவங்களை மீறி திமிரெடுத்து தனக்கு தானே பொண்ணு தேடிக்கிறது கண்ணியம், கட்டுப்பாடா..? அதை சொல்ல இவனுக்கு முதல்ல என்ன தகுதி இருக்கு..?”  குருமூர்த்தி மகனுக்கு திருப்பி கொடுக்க நினைத்தார்.

ஆனால் மகன் அவரை நேருக்கு நேர் கண்ணிமைக்காமல் பார்த்தான். அந்த நேர் பார்வையில், குற்றம் சாட்டும் பார்வையில், அருவெறுக்கும் பார்வையில் குருமூர்த்தி வேர்த்து தான் போனார்.

“கட்டுப்பாடு, கண்ணியம், ஒழுக்கம் பத்தி நீங்க பேசவே கூடாது..” என்றான் அப்பாவை தீயாய் எரித்து. அங்கிருந்த மொத்த பேருக்கும் அவன் சொல்வது புரிய, சாரு மட்டும் முழித்து நின்றாள்.

வைதேகியிடம் மெல்லிய விசும்பல். தனா உடல்  இறுகி போனது. அம்மாவை பார்க்க கூட முடியாமல் இவருக்கு மகனாக பிறந்ததுக்கு கூசி போனான். எத்தனை நாள் அவரிடம் சென்று கேட்டிருப்பான் “ஏன் இப்படி இருக்கம்மா, நல்லா பேசு, சிரி, சந்தோஷமா இருன்னு, எப்போவும் அவர் கண்களில் அப்படி ஒரு வலி, வேதனை தானே..?”

ஏனென்று  அப்போது புரியவில்லை. ஒரு நாள் புரிந்தது. அந்த நாள்.. இவன் காதல் பற்றி தெரிந்து வீட்டில் பிரச்சனை நடந்த வாரத்தில் ஒரு நாள். நடுஇரவு, மண்டிக்கு சரக்கு வருவதில் பிரச்சனை என்று இவருக்கு அழைத்து, இவர் எடுக்காமல் இவன் பார்க்க கிளம்பிய நடுஇரவு.

குகனை வீட்டில் இருந்து கூப்பிட்டு கொண்டு சென்ற நேரத்தில், பார்த்தான். கண்ணுக்கு நேரே பார்த்தான். நம்பாமல் பிரம்மை பிடித்து பார்த்தான். ஒரு அப்பாவை பார்க்க கூடாத நேரத்தில்,  பார்க்க கூட கோலத்தில், பார்க்க கூடாத விஷயத்தில், ஒரு வீட்டில் இருந்து பெண்ணுடன் வெளியே வந்து பார்த்தான்.

முகம் சிவக்க, அவமானத்துடன் துடித்தான்.  அந்த ஆறடி, எழுபது கிலோ உடல் மொத்தமும் அதிர, கூனி குறுகி போய் நின்றான். அதுவரை அவர் மேல் இருந்த சிறிதளவு மரியாதையும், பாசமும் வெறுத்து போக வீட்டிற்கு செல்லும் அவரை பார்த்தான்.

அன்றய நாளில் இப்போதும் தீயாய் கொதித்தவனை,  “தனா.. சாரு இருக்கா..”    குகன் அவனிடம் மெல்லிய குரலில் சொல்ல, இங்கு வைதேகி மகளுடன் உள்ளே சென்றுவிட்டிருந்தார். எப்படி இருப்பார் அந்த இடத்தில்..?

கணவன் செயல் இத்தனை வருடம்  அவரை கொன்றது என்றால்,  அது மகனுக்கு தெரிந்துவிட்டதில் அம்மாவாக துடித்து போனார். இதில் அவர் தவறு ஏதும் இல்லை. ஆனால் வளர்ந்துவிட்ட மகன் முன் இந்த அசிங்கம் அவரை இன்னும் வதைத்தது.

அம்மா, தங்கை உள்ளே சென்றுவிட, தன் குரலை குறைத்தவன், “போதும் தாத்தா.. இனியும் உங்க மகனோட  எங்களால போராட முடியாது, இத்தனை வருஷம்  என் அம்மா வாழ்க்கையை கையில் எடுத்து அவர் இஷ்டத்துக்கு  அவர் ஆடினது போதும், அவங்க உணர்ச்சியை கொன்னு தின்னது போதும், இனியும் அதுக்கு நான் விட மாட்டேன்..”

“எனக்கு முதல்ல என் தங்கச்சி கல்யாணம் நல்ல படியா நடக்கணும், அவ இந்த வீட்டு பொண்ணா சர்வ மரியாதையோட, அடையாளத்தோட,  அங்கீகாரத்தோட  போகணும், அதுக்கான முழு உரிமையும் என் தங்கச்சிக்கு இருக்கு, அதை மறுக்க இங்க யாருக்கும் அதிகாரம் இல்லை, அது யாரா இருந்தாலும்..”

“இந்த முடிவை சொல்ல தான் நான் உங்களை எல்லாம் கூப்பிட்டேன், இங்க யார்கிட்டேயும் பெர்மிஷன் கேட்க இல்லை.. சொல்லியாச்சு, இல்லை முடியாது நான் பிரச்சனை பண்ணுவேன்னா, பண்ணட்டும், நான் பார்த்துகிறேன்..”

“நாளைக்கு நீங்க எல்லாம் இவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர கூடாது, வரவும் முடியாது, உங்க மகன் எங்களை படுத்தினப்போ  கண்டும் காணாம ஒதுங்கின சொந்தம் இனியும் அப்படியே இருக்கும்ன்னு நான் நம்புறேன்..”   ஒரேடியாக முடித்துவிட்டான்.

ஆனாலும் அப்போதும் குருமூர்த்தி அடங்காமல் மகளின் திருமணத்தில் ஆட தான் செய்தார். இப்போதும் வீட்டுக்கு சென்றால் எகிற தான் செய்வார்..? வைதேகிக்கும் அந்த பயம் இருக்க தான் செய்தது. மகனுடன் அமைதியாக வர, மகன் அவருக்கு  தைரியம் ஏதும் சொல்லவில்லை.

வீட்டில் சென்று வண்டி நிறுத்த, “எங்க வந்தீங்க..?”  வாசலிலே நின்றிருந்த மனிதர் ஆரம்பித்தார். வைதேகி மகனை பார்க்க, அவனோ எங்கோ பார்த்து நின்றான்.

அவரின் பெரியப்பாவை வரவைத்திருந்த மனிதர், “பொண்ணு கல்யாணம் இந்த வீட்ல நடக்கணும்ன்னு நீங்க எல்லாம் சொன்னதால தான்  நான் இவங்களை  இத்தனை நாள் விட்டு வச்சிருந்தேன், இனி இவங்களுக்கு என் வீட்ல இடம் இல்லை, வெளியே போக சொல்லுங்க..” என்றார் ஆங்காரத்துடன்.

“தனா..” மகன் கை பிடித்தார். அக்கம் பக்கத்தில் ஓரிருவர் எட்டி பார்க்க ஆரம்பித்தனர். தனா எதையும் கண்டு கொள்ளவில்லை. வண்டி மேல் சாய்ந்து நின்றான்.

“என்னடா தெனாவட்டா நிக்கிற, போடா வெளியே..” மகனிடம் குதிக்க, அவனோ கை கட்டி மேலிருந்த நிலவை வேடிக்கை பார்த்தான்.

“தனா என்னடா..” வைதேகி மகனிடம் கேட்க,

“என்னம்மா..?” என்றான் மகன் மிகவும் சாதாரணமாக.

“நம்மளை வெளியே போக சொல்றார்டா..” கண்களில் தேங்கிவிட்ட நீருடன் சொன்னார்.

“ஏன்னு கேளுங்கம்மா..?” என்றான் மகன். என்ன..? வைதேகி அதிர்ந்து போனார்.

“ஏன்ம்மா இவ்வளவு பயம்..? என்ன செஞ்சிடுவார் அவர் உங்களை சொல்லுங்க, அடிப்பாரா..? கொன்னு போட்டுடுவாரா..? செய்யட்டும், நீங்க கேளுங்க..”  என்றான்.

“என்னடா நாங்க இங்க கத்திட்டு இருக்க நீங்க அங்க ரகசியம் பேசிட்டு இருக்கீங்க..?” குருமூர்த்தி மேலும் கத்த,

“தனா எல்லாம் பார்க்கிறாங்கடா..”  வைதேகி அவமானமாக உணர்ந்தார்.

“சரி என்ன பண்ணலாம் சொல்லுங்க..? எந்த தப்பும் பண்ணாத நாம இந்த ராத்திரில வெளியே போலாமா..? சொல்லுங்கம்மா..” மகன் தீர்க்கமாக கேட்க, வைதேகி பதில் சொல்ல முடியாமல்  நின்றார்.

“யார் வீடும்மா இது..? உன் மாமியார் உனக்கு கொடுத்துட்டு போன வீடும்மா இது, நீயே யோசிச்சு பாரு ஏன் பாட்டி உனக்கு கொடுக்கணும்..? அவங்களுக்கு மகனை தெரிஞ்சிருக்கு இவர் என்னைக்காவது இப்படி செய்வார்ன்னு..” வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.

“இப்போ நான் என்னடா பண்ணனும்..?”

“ரொம்ப சிம்பிள், வீட்டை விட்டு போக முடியாது, என் வீடு இது சொல்லுங்க, மீதி நான் பார்த்துகிறேன்..” என்றான் மகன்.

“எனக்கு பயமா இருக்கு தனா, அவர் என்னை ரொம்ப அடிப்பார்..” வைதேகி குரல் கமற சொன்னார். மகன் உடல் மொத்தமும் துடித்து போனது. இதற்கு மேலும் எப்படி விட அவரை..? அப்புறம் இந்த ஆறடி ஜென்மத்திற்கு ஜீவன் என்ற  ஒன்று எதற்கு..?

கட்டுப்படுத்தி கொண்டவன், மிகவும் நிதானமாக, “என்னை நம்பலையாமா நீங்க..? இது வெறும் செங்கல் இல்லை, நம்ம மூணு பேருக்கும் அடையாளம், இன்னைக்கு நாம விட்டு போனா நாம தான்  தப்பு, உங்களுக்காக இல்லேன்னாலும் எங்களுக்கு கேளுங்க, நானும் சாருவும் எங்க போவோம்..? தெருவுல தான் நிக்கணும், அதை தான் நீங்களும் எதிர்பார்க்கிறீங்களா..? சொல்லுங்கம்மா..”

“தனா இப்படி எல்லாம் பேசாதடா, உங்களுக்காக தான் நான் இவரை பொறுத்துகிட்டு இருக்கேன்..”

“அப்போ சொல்லுங்கம்மா.. வரார், சொல்லுங்கம்மா..சொல்லும்மா..” மகன் ஊக்கம் கொடுத்து கொண்டே இருக்க,

“என்னடி நான் சொல்ல சொல்ல இங்க மகன் கூட பேச்சு,  புருஷனை  கொஞ்சமும் மதிக்காம ஆடினவ தானே நீ, உனக்கு எல்லாம் இந்த வீட்ல இடம் இல்லை, வெளியே போடி..” மனைவி கை பிடிக்க,

“போக மாட்டேன், நாங்க  ஏன் போகணும்..?” கைகால்கள் உதறிய போதும் வலுவாக விலகி சொல்லிவிட்டார்.

“என்னடி சொன்ன..? அவ்வளவு தைரியம் வந்துடுச்சா உனக்கு..?” குருமூர்த்தி கைகள் வீச, தனா அம்மாவை தன் பக்கத்தில் நிறுத்தி கொண்டான்.

“உன்னால தாண்டா எனக்கு இவ்வளவு பிரச்சனையும், நீ தாண்டா, உன்னை கொன்னா எல்லாம் சரியா இருக்கும்..” அவர் எகிற, தனா அவரை சிறிதும் கணக்கில் கொள்ளாமல்,

“தாத்தா.. பெரியவங்க நீங்க எல்லாம் பார்த்து முறையா கட்டிவச்சு வந்தவங்க தான் எங்க அம்மா, இத்தனை வருஷம் இந்த குடும்பத்துக்கு உழைச்சு, பாடுபட்டு, இப்போ வந்து இவங்களை  வெளியே போக சொல்ல இங்க  யாருக்கும் அதிகாரம் இல்லை. அதோட இந்த வீடு எங்க பாட்டி என் அம்மாக்குன்னு கொடுத்திட்டு போனது, சட்டப்படி என் அம்மா வீடு இது.. இப்போ  யார் வீட்டை விட்டு வெளியே போகணும்ன்னு நீங்களே இவருக்கு சொல்லிட்டு போங்க..”

“பாருங்க பாருங்க என்னை வீட்டை விட்டு போக சொல்றான்..” குருமூர்த்தி பொங்கினார்.

“நான் ஏன் அப்படி சொல்ல போறேன்..? இவர் வீடும் தான்  இது, ஆனா இனி இவருக்கு என் அம்மா எதுவும் செய்ய மாட்டாங்க, இவர் தனி போர்ஷன், நாங்க தனி போர்ஷன், இவர் பேச்சை கேட்காத என் அம்மா கையால சாப்பிட இவருக்கு என்ன தலையெழுத்து..? பாவம்..”

“தனா.. என்னப்பா இப்படி சொல்லிட்ட..? ஊர், உலகம்..”

“தாத்தா.. தாத்தா.. இனி இந்த ஊர் என்ன பேசும், உலகம் எங்களை என்ன  சொல்லும்ன்னு நான் பார்க்க போறதில்லை, எங்க வாழ்க்கை இது, எங்க அம்மா கஷ்டப்பட்டப்போ பார்த்துட்டு அமைதியா போனவங்க தானே, இதையும் கடந்து போக சொல்லுங்க.. அவ்வளவு தான்..” முடித்துவிட்டவன், அம்மாவை  சர்வ அதிகாரத்துடன் வீட்டிற்குள் அழைத்து சென்றான்.