தனாவிற்கோ அவர் எதற்கு அங்கு சென்றிருக்கார் என்று தெரியுமே..? இப்போது அண்ணனாக அவன் என்ன செய்ய வேண்டும்..? போக தான் வேண்டும், இவர்கள் எல்லாம் ஊர் பெரியவர்கள். இவர்கள் சொல் மீறி செய்ய முடியாது, செய்தால் இவர்கள் இவனுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊருடன் ஒத்து தான் வாழ வேண்டும். “போறேன்..” என்றுவிட்டான். 

“தனா தங்கமான பிள்ளைப்பா, எடுத்து சொன்னவுடன் கேட்டுக்கிச்சு..”  அவர்கள் வார்த்தைக்கு இவன் மதிப்பு கொடுத்ததில், பெரியவர்களுக்கு இவன் மேல் இன்னும் அபிமானம் கூடி போனது. 

ஆனால் சொந்த குடும்பம், குகன், சாரு, தாய் மாமன்கள், பெரியப்பா, சித்தப்பா, ஏன் வைதேகி வரை அவனை மறுப்பாக தான் பார்த்தனர்.  “என் தங்கச்சிக்கு நான் போனா என்ன..? அவரை போல நானும் இருக்க கூடாது..”  உடன் முக்கிய ஆட்களுடன் தோட்ட வீடு சென்றான். 

“வந்துட்டான் பாருக்கா.. என் கணக்கு எப்போவும் தப்பாது..”  அவர் ஆணவம்   கொள்ள, 

தனா அவர் முகம் கூட பார்க்காமல், “நிச்சய பத்திரிக்கை வாசிக்கணும் வாங்க..” என்றான். 

“உன் அப்பன் இங்க இருக்கேன்டா, என்னை பார்த்து கூப்பிடுடா..”  அவர் எக்களிப்புடன்  சொல்ல, தனா கை தசைகள் இறுகியது. 

கட்டுப்படுத்தி கொண்டு “நேரம் ஆகுது.. கிளம்புங்க..” தனா திரும்பவும் சொல்ல, 

“வர முடியாது..” என்றார் குருமூர்த்தி. அவர் காத்திருந்தது இதற்கு தானே. அன்று என்ன பேச்சு பேசினான். அதற்கு பதில் சொல்லவில்லை என்றால் எப்படி..? 

“குருமூர்த்தி இப்படி சொல்லிட்டா எப்படி..? உன் பொண்ணு கல்யாணம்ப்பா இது..”  உடன் வந்த ஊர்க்காரர்கள் பேச, 

குருமூர்த்தியோ, “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு தெரிஞ்சும் இந்த ஆம்பிளை எடுத்து நடத்துறான் இல்லை, அப்போ அப்பாவா எனக்கு என்ன மரியாதை..? நான் ஏன் வரணும்..? வர முடியாது..” என்று உட்சாணி கொம்பில் அமர்ந்திருந்தார். 

எல்லோரும் எவ்வளவு கேட்டும் அவர் முடிவை மாற்றி கொள்ளவில்லை. “சரி.. என் தங்கச்சிக்கு அப்பாவா வரலைன்னா போகுது, ஊர் கவுண்டரா வரச்சொல்லுங்க..” என்றான் தனா. 

“அதுவும் முடியாது.. என்னடா பண்ணுவ, என்கிட்டேயே உன் புத்தியை காட்டுற..”  குருமூர்த்தி எகிறினார். 

ஊர்காரர்களுக்கே அவரின் இந்த குணம் பொறுத்து கொள்ள முடியவில்லை. “தனா தம்பி என்ன பதவிசா நாம சொன்னதை கேட்டுகிட்டு இவரை கூப்பிட வந்துச்சு, இந்த மனுஷன் என்ன இப்படி பண்றார்..?” தங்களுக்குள் அங்கலாய்த்து கொண்டிருக்க, 

தனாவோ,   “இவரால  அப்படி சொல்ல முடியாதுங்க,   ஊர்ல எந்த கல்யாணம் நடந்தாலும் முன்ன நிக்க வேண்டியது ஊர் கவுண்டர் கடமை, அப்படி இவர் வர முடியாதுன்னா அந்த பதவி இவருக்கு எதுக்கு..?” என்றான்.

“ஆமாம்ப்பா.. தனா தம்பி சொல்றது சரி, அப்பாவா இல்லனாலும் ஊர் கவுண்டரா நீ வந்து தான் ஆகணும்..” ஊரார் இப்போது அவரை கட்டம் கட்டினர். 

“ஏய் என்னங்கய்யா, அப்படி வந்து தான் ஆகணும்ன்னா, எனக்கு இந்த ஊர் கவுண்டர் பதவியே வேண்டாம்..”  என்றார். 

“அதை இப்படி திடுதிப்புன்னு  சொல்ல முடியாதே, ஊர்ல எல்லாம் கூடி, கணக்கு வழக்கு ஒப்படைச்சு, அடுத்த ஊர் கவுண்டர் தேர்ந்தெடுத்து தான் இவர் விலக முடியும், அதுவரைக்கும் என் தங்கச்சி நிச்சய பத்திரிக்கை வாசிக்காம இருக்க முடியமா..? ஊரே அங்க கூடியிருக்கு, எங்களுக்கு இல்லன்னலும் ஊர்க்கு பார்க்கிறது தானே முறை..” தனா மிகவும் நிதானமாக வார்த்தைகளை கோர்த்து அடித்தான். 

“ஆமாப்பா.. தனா சொல்றது சரி, நீ தர்க்கம் பண்ணாம கிளம்பு குருமூர்த்தி.. இனியும் உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது, உன் குடும்ப பிரச்சனை உங்களோட, ஊர் கவுண்டரா நீ வந்து தான் ஆகணும்..”  வம்படியாக அவரை இழுத்து வந்து நிச்சய பத்திரிக்கை வாசிக்க வைத்தான் தனா. 

குருமூர்த்தி தோற்று போன வெறியுடன், உடனே கிளம்பிவிட, வைதேகி சாப்பிடாமல் செல்லும் கணவனை கண்டு கொள்ளவே இல்லை. அவரின் ஒரே ஆசை, வேண்டுதல் எல்லாம் மகளின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதே. அவரின்  கைகள் அடிக்கடி ஒன்றாக இணைந்து அவரின் வேண்டுதலை சொன்னது. 

அவரை கவனித்த தனா, சிரிப்புடன், “யாரோ இங்க குகனுக்கு அவங்க பொண்ணை தர மாட்டேன் சொன்னாங்களே..?” என்றான் சீண்டலாக. 

பக்கத்தில் இருந்த பரிமளம் வைதேகியை பார்க்க,” அண்ணி.. உங்களுக்கு நான் முன்னமே சொல்லிட்டேன் ஏன் அப்படின்னு..” அவரிடம் வேகமாக சொன்ன வைதேகி, “ஏண்டா..” என்று மகனின்  தோளில் அடித்தார். 

“அவன் விளையாடுறான் வைதேகி, நீ ஏன் பதட்டப்படுற..” பரிமளம் அவர் கை பிடித்து கொண்டார். 

“இல்லைண்ணி..  எனக்கு இப்போவும் பயம் தான், இவன் அப்பாவை பத்தி என்னைவிட யாருக்கு தெரியும், இப்போ அவரை விட்டு பண்ணாலும், காலத்துக்கும் அவரோட நாம போராடி தான் ஆகணும்..” என்றார் கசப்புடன். 

“காலத்துக்கும்.. ம்ம்.. அது உங்ககிட்ட தான்ம்மா இருக்கு..” மகன் அழுத்தமாக  சொன்னவன், விலகி சென்றுவிட, வைதேகிக்கு அவன் வார்த்தைகள் திக்கென்றது. 

“அண்ணி.. என்ன சொல்றான் இவன்..?” சில நொடிகள் அப்படியே அமர்ந்துவிட்டார். பரிமளம் புரிந்தாலும், அமைதியாக இருக்க,  “ம்மா.. ம்மா..”  என்று சாரு அவரை பிடித்து உலுக்கினாள்.  

“ஹான்.. என்ன சாரு, தூங்க போலாமா..” மகளை பார்த்து எழுந்தார். 

“என்னம்மா அப்படி தீவிர யோசனை..?” சாரு கேட்க, 

“அது தனா.. ச்சு.. அப்புறம் பேசிக்கலாம் சாரு, அண்ணி எங்க கிளம்பிட்டாங்களா..?” பரிமளத்தை தேடினார். 

“அத்தை  என்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்கம்மா..” என, வைதேகி மகளுடன் ரூம் சென்றார். மறுநாள் முகூர்த்தம் ஆயிற்றே. நேரம் எழ வேண்டும். 

ஊர் கோவிலில் பந்தல் போட்டு அதற்கான  ஏற்பாடுகள் நடக்க, குகனை வலுக்கட்டாயமாக துரத்தி தனா நின்று பார்த்தான். பொழுதும் விடிந்தது. குகன், சாருவை கிளப்பி கொண்டு கோவில் வந்தனர். தனா அவசரமாக குளித்து ஓடி வந்தவன், குகனை தேடி  சென்றான். 

அவன் இவனுக்காக காத்திருக்க, “மணவறைக்கு போக வேண்டியது தானேடா..”  தனா அவனை கடிந்து கொண்டான். 

அவனோ,  “பாருங்கம்மா மாப்பிள்ளைன்ற மரியாதை கூட இல்லாம எப்படி விரட்டுறான்னு.. இப்படி எல்லாம் பண்ணா நான் மாப்பிள்ளை முறுக்கை காட்ட வேண்டி வரும்..” குகன் கெத்து காட்டினான். 

“அட.. இது வேறயா..? கிளம்புடா நேரம் ஆச்சு..” தனா அவன் முதுகை தட்டினான். குகனின் மாமா முறை உள்ளவர் அவனுக்கு மணமாலை அணிவிக்க, பரிமளம் காலில் விழுந்தான் மகன். 

“என்னப்பா இது என் கால்ல போய்..” அவர் பதறி பின்னால் போக, தனா அவர் கை பிடித்து நிற்க வைத்தவன், ஆசீர்வாதம் செய்ய வைத்தான். குகன் எழுந்தவன், தனாவை அணைத்து கொண்டான்.   நண்பனாக இருந்து உறவினாக மாறினாலும், அவர்கள் எப்போதும் அந்த நண்பர்கள் தானே. 

“போதும் வாடா.. இப்படி எல்லாம் செஞ்சு பொண்ணோட அண்ணாவை  கவுக்க முடியாது..” தனா அவனை சிரிப்புடன் வார, 

“உன்னை கவுத்து எனக்கு என்ன பிரயோஜனம், அதுக்கு நீ பொண்ணா பிறந்திருக்கணும்..” குகனும் பேச, சுற்றியிருந்த எல்லோரும் சிரிப்புடன் மணவறைக்கு வந்தனர். 

பார்த்த குருமூர்த்திக்கு உடல் மொத்தமும் எரிந்தது. தனா அவர் பக்கம் கூட திரும்பாமல், தங்கையை பார்க்க சென்றான். அவள் மிகவும் இறுகி போய் அமர்ந்திருக்க, வைதேகி மகள் பக்கத்தில் இன்னொரு கோலமாய் இருந்தார். 

“என்னம்மா..?” தனா கேட்டு தங்கை தலையில் கொட்டினான். 

“டேய் என் ஹேர் ஸ்டைல்..” சாரு அப்போதும் மூக்கை உறிஞ்சி அண்ணனிடம் குதித்தாள். 

“இப்போ தான் நீ என் தங்கச்சி சாரு..” தனா கிண்டலாக சொல்ல, அவள் மூக்கு விடைக்க முகம் திருப்பினாள். 

“சாரு என்ன இது..?” தனா தங்கையை தோளோடு அணைக்க, 

அவளோ,  “ஒன்னும் வேணாம் போ, ரொம்ப தான் பாசம் இருக்கிற மாதிரி நடிக்காத, இவ்வளவு  சீக்கிரம் கல்யாணம் வச்சு என்னை துரத்திட்ட இல்லை, நீ மட்டும் தனிக்காட்டு ராஜா மாதிரி சந்தோஷமா இரு..”   திமிறி அழுதாள். 

“சாரு ரொம்ப குதிச்ச உன் மேக்கப் தான் கலையும்..” தனா அவளை அணைத்து சிரித்தான். 

“உன் பிரண்டுக்கு இதுவே அதிகம்..”  சாரு தேம்ப,  தனா கலங்கும் கண்களை கட்டுப்படுத்தி நிற்க, இரு பிள்ளைகளையும் அப்படி பார்த்த வைதேகி விசும்பினார். 

“ம்மா.. நீயுமா..?” தனா அவரை  பார்த்தான். 

“அதானே.. வைதேகி என்னம்மா இது, சாரு போதும் அழுகை, அவ்வளவு தான் உன்னை கூப்பிடுவாங்க, முகம் பாரு எப்படி இருக்குன்னு, டச்சப் பண்ணிக்கோ வா, தனா நீ போப்பா, சாரு அவனை விடு..”  உறவுக்கார பெண்கள் அதட்டி உருட்ட, அந்த கனம் கொஞ்சம் குறைந்தது. 

தனாவும் கண்களை ஒற்றி குகனிடம் சென்றான். மணமகனுக்கான சடங்குகள் முடிய, சாருவை அழைத்து வந்தார் தாய்மாமா. அவள் எல்லோருக்கும் கை குவித்து வணக்கம் வைத்து குகன் பக்கத்தில் அமர, மகளை மணக்கோலத்தில் பார்த்த குருமூர்த்திக்கு உடல் ஒரு நொடி அதிர தான் செய்தது. 

ஆனால் பக்கத்தில் நின்ற மனைவி, மகன், உறவுக்காரர்கள் பார்க்க, திரும்ப விறைத்து கொண்டார்.   மணவறை அருகில் கூட வரவில்லை. சாரு கண்கள் அப்பாவை  தேட தான் செய்தது. அவர் அப்படியே இருக்க, மகள் வெறுத்து தான் போனாள். 

எல்லா சடங்குகள் முடிய, தாலி குகன் கைக்கு வந்தது. அவன் சபைக்கு காட்டி வணங்கி, சாரு கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். தனா, வைதேகி உள்ளம் அப்படியே அமைதியாகி, கண்கள் அதன் மகிழ்ச்சியை காட்டியது. மணமக்கள் மணவறையை சுற்றி வந்து பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர். 

தனா ஆசீர்வாதம் செய்ய வருவாரா என்று குருமூர்த்திய பார்க்க, அவரோ தள்ளி தான் நின்றார். என்ன மனிதர் இவர்  என்று உள்ளுக்குள் மிகவும் வெறுத்து போனாலும், குகன், சாருவிற்கு கண் காட்டி போக சொன்னான். இருவருக்கும் அந்தளவு விருப்பம் இல்லையென்றாலும், கடமைக்காக அவர் காலில் விழுந்தனர். 

அவரோ, “ம்ம்.. நல்லா இருங்க..” என்றார் குரலில் அசிரத்தையாய். வைதேகி, தனாவிற்கு, அதுவே போதும் என்று தான் இருந்தது. அடுத்து மணமக்கள் பரிமளம் காலில் விழுக, அவருக்கு மிகப்பெரிய கேவல் ஒன்று வெடித்தது. 

இத்தனை வருடம் ஒற்றை ஆளாய்  மிகவும் கடினப்பட்டு  தன் சொந்த உழைப்பில் மகனை வளர்த்து ஆளாக்கியவர் ஆயிற்றே, மகனின் திருமண கோலம் பார்க்கவும் ஆனந்தத்தில் மிதந்து தான் போனார். மனம் நிறைய ஆசீர்வாதம் செய்து தூக்கியவர், அப்படியே இருவரையும் அணைத்து கொண்டார். அம்மாவின் தோள் சாய்ந்த குகனுக்கும் கண்கள் கலங்க, அவர்களின் வாழ்க்கை தான் மனதில் ஓடி கொண்டிருந்தது. 

அடுத்து வைதேகி காலில் விழுக, அவரும் மகள், மருமகனை வாரி அணைத்து கொண்டார். சாரு அம்மாவை கட்டி கொண்டு அழுகை. இறுதியாக தனாவிடம் வர, “எங்க வீட்டு மாப்பிள்ளை வருக வருக..”  குகனை அணைத்து கொண்டான். குகனும் நண்பனை ஆரத்தழுவி கொண்டான். 

இங்கு சாரு அவன் காலில் விழுக, தனா பதறி போய் அவளை தூக்கினான். அவளோ அண்ணனை கட்டி கொண்டு அப்படி ஒரு அழுகை. “என் தொல்லை தாங்காம என்னை துரத்திட்ட இல்லை..” சொல்லி சொல்லி அழுதாள். 

“சாரு.. திரும்ப திரும்ப என்ன பேச்சு இது..?” வைதேகி மகளை அதட்ட, 

“போ.. போ.. நான் என் அண்ணாகிட்ட தானே பேசுறேன் உனக்கென்ன..?” என்று அவரிடம் பாய்ந்து இன்னும் அழுதாள். தனாவிற்கு தங்கையின் அழுகை கட்டுப்படுத்த முடியாத  கண்ணீரை கொடுத்தது. 

“க்கும்.. சாரு.. போதும்.. பாரு என் மாப்பிள்ளை பயந்துட்டான்..” குகனை காட்டி சொல்ல, 

“பின்ன நீங்க விடுற கண்ணீர்ல நாங்க எல்லாம் அடிச்சுட்டு போயிட்டா என்ன பண்றது..” அவனும் சீண்ட, சாரு கணவனை முறைத்தாள். 

“ஏண்டா மச்சானுங்களா பார்த்தீங்களா உங்க தங்கச்சி இப்போவே என்னை எப்படி முறைக்கிறான்னு..” தனா பங்காளிகளிடம் குகன் கிண்டலாக கேட்க, 

“எது இது முறைக்கிறதா..? எங்க  தங்கச்சி உன்னை பாசமா பார்க்குது மாப்பிள்ளை.. இதுகூட தெரியல,  உனக்கு வேற எங்க பொண்ணை கொடுத்து, என்னவோ போ..”  என்று அவர்கள் ஒப்பேற்ற, அழுகை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்று திருமணம் இனிதாக முடிந்தது.