ருஹானா முகம் பார்க்காமல் ஆர்யனுக்கு நீட்ட, அவனும் அவள் முகம் நோக்காமல் ஒரு கோப்பையை எடுத்து கொள்ள, ருஹானா மேசையின் மறு ஓரம் அமர்ந்து கொண்டாள். இருவரையும் மாறி மாறி பார்த்த ஜோஹ்ரா இருவரும் முறைப்புடன் இருப்பதை புரிந்து கொண்டார்.
“இன்னும் இவன் பழையபடி தான் வாய் திறக்காம இருக்கானா? கூட்டை விட்டு வெளிய வர மாட்டானே” என அவர் கேட்க, ஆர்யன் பதில் சொல்ல வாய் திறந்தான். “நீ பேசாதே, சேஹான்! நான் என் மருமகளை கேட்கறேன்” என்று சொல்லிவிட்டு “நக்கத்! என் மகன் மேலே கோபப்படாதே. அவன் நல்லவன். ஆனா மனசுல இருக்கறதை வெளிய சொல்ல மாட்டான். உன்மேல கோபமா இருக்கான்னு நீ தப்பா நினைக்காதே” என பேசிக்கொண்டே போக “அம்மா! போதும்” என ஆர்யன் அவர் பேச்சை நிறுத்தினான்.
ஜோஹ்ரா எழுந்து அருகில் வந்தவர் இரு பாதியாக உடைத்த ஒரு அக்ரூட் கொட்டையை இருவர் கையிலும் வைத்தார்.
“உன்மேல அதிகமா அன்பு வச்சிருக்கான். இந்த ஓடு அக்ரூட்டை உள்ள பொத்தி வச்சிருக்கறது போல இவனும் மறைச்சி வச்சிருக்கான். என் மகன் கிட்ட கெட்டது எதுவும் இல்ல. நல்லதும் மறைஞ்சி தான் இருக்கு. என் மகனை பத்தி எனக்கு தான் நல்லா தெரியும். அவன் அமைதியா தான் இருப்பான். நீ தான் அவன் நல்ல குணத்தை புரிஞ்சி நடந்துக்கணும்” என்று ருஹானாவின் கன்னம் தடவி சொன்னவர் “நான் போய் துவா செஞ்சிட்டு வரேன். நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து இந்த கொட்டையெல்லாம் உடைச்சி வைங்க” என்று சொல்லி சென்றுவிட்டார்.
சிந்தனைவசப்பட்டிருக்கும் ருஹானாவை பார்த்த ஆர்யன் எழுந்து கீழே அமர்ந்து அக்ரூட் கொட்டைகளை உடைக்க ஆரம்பித்தான். அப்போது இவான் அங்கே வர ருஹானா அவனுக்கு அக்ரூட் பருப்பை உண்ண கொடுத்தாள்.
“சித்தி இது நல்லா இருக்கு. ஆனா மென்னு சாப்பிட லேசா கடினமா இருக்கு”
“உனக்கு நம்ம மடாபா அக்ரூட் கட்லெட் பிடிக்கும்னு எனக்கு தோணுது, செல்லம்”
ஆர்யன் வேகமாக அவளை திரும்பிப் பார்க்க அவள் அதை கவனிக்கவில்லை.
“அது இனிப்பா, மென்மையா, சுவையா இருக்கும், இவான்”
“அப்படியா, சித்தி! முட்டை, கறிலாம் போட்டு இருக்குமா?”
“இல்ல அன்பே! அது இனிப்பு வகை. பார்க்க கட்லெட் மாதிரி இருக்கும். நாம மடாபா போகும்போது அதை சாப்பிடலாம்”
இப்போது ஆர்யன் அவளை கடுமையாக முறைத்தான். இவானின் மேல் ருஹானாவின் கவனம் இருந்ததால் அவள் ஆர்யனை பாரக்கவில்லை. அப்போது கோழியின் சத்தம் கேட்க இவான் அதை பார்க்க ஓடிவிட்டான்.
“உன்னால நிறைவேத்த முடியாததுக்குலாம் வாக்குறுதி கொடுக்காதே” ஆர்யன் அழுத்தமாக ஆனால் மெதுவான குரலில் ருஹானாவை கடிய “ஏன் என்னால முடியாது? நீங்க இவானை வச்சி வேற ஏதோ திட்டம் போட்டுறிக்கீங்க, அதானே?” என அவள் கேட்டதும், ஆர்யன் குனிந்து கொட்டைகளை உடைக்கலானான்.
“ஏன் பேச மாட்றீங்க? உங்க திட்டம் என்ன?”
“அதை பத்திலாம் நீ தெரிஞ்சிக்கணும்ன்னு அவசியம் இல்ல. இவானுக்கு நான் நல்லது தான் செய்வேன்ங்கறது மட்டும் உனக்கு தெரிஞ்சா போதும்” எழுந்து அவள் பக்கம் வந்து சொன்னான்.
“உங்க திட்டம் சரியில்லாம போனா… அது இவானுக்கு மகிழ்ச்சியை தராம போனா?” அவளும் எழுந்து நின்று தலையை தூக்கி அவன் முகம் பார்த்து பேச, தொழுகை முடித்து வந்த ஜோஹ்ரா இவர்கள் சண்டையை தூரத்தில் நின்று பார்த்து கவலைப்பட்டார்.
“அது என் பொறுப்பு. உன் அக்கறை தேவை இல்ல”
“இவான் வாழ்க்கையில உங்களுக்கு எத்தனை பொறுப்பும் கடமையும் இருக்கோ, அத்தனையும் எனக்கும் இருக்கு”
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை? இது இப்படியே போனா சரிப்படாது. சொல்லுங்க என்கிட்டே. கணவன், மனைவி இப்படி சண்டை போடக்கூடாது. உட்காருங்க ரெண்டுபேரும்” என அதட்டிக்கொண்டே ஜோஹ்ரா அருகில் வர, இருவரும் மேசையின் எதிரெதிரே அமர்ந்தனர்.
ஆர்யனின் கையை இழுத்து மேசையின் நடுவே வைத்த ஜோஹ்ரா, ருஹானாவின் கையையும் இழுத்து ஆர்யனின் கையின் மேல் வைத்தார். ருஹானா சட்டென கையை பின்னே இழுத்துக்கொண்டாள்.
“என்ன நீ? நெருப்பை தொட்டது போல கையை எடுத்துக்கிட்டே? இவன் ஏதோ உன்னை கஷ்டப்படுத்தி இருக்கான். நல்லா புரியுது” என்று சொன்னவர் மீண்டும் ருஹானாவின் கையை பிடித்து ஆர்யனின் கையின் மேல் வைத்து தன் கையையும் மேலே வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார்.
“உன் கவலைக்கு என் மகன் தான் காரணம். இல்லன்னு சொல்லாதே” என அவர் சொல்ல ஆர்யன் ஏதோ சமாதானம் சொல்ல வந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் பேச வேணாம். நான் சொல்றதை கேளுங்க. அன்பு ஓடுற பெரிய ஆறு போல. அது சிலசமயம் சேர்ந்து பாயும். சிலசமயம் பிரிஞ்சி ஓடும். ஆனா கடைசியா சேரப்போறது ஒரே இடம் தான். சில நேரங்கள்ல பாறைகள் அதோட பாதையை தடுக்கலாம். ஆனா அது முட்டிமோதி பாய்ந்து ஓடிடும். அது போல ரெண்டு இதயங்கள் ஒன்னு சேர்ந்துட்டா எதுவும் அவங்களை பிரிக்க முடியாது. நடுவுல மறிக்கற பாறையை மலையா நினைச்சா அவங்க வாழ்க்கையே பாழாகிடும். கல்லுன்னு நினைச்சி அதை தாண்டி போய்டனும்“ அவர் சொல்வதை கேட்டுக்கொண்டே ஆர்யன் ருஹானாவை பார்த்தான்.
“நீங்க இப்படி இருக்கறதை ஃபாசில் பார்த்தா எவ்வளவு கவலைப்படுவான்? அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த கொடை அவன். நீங்க ரெண்டு பேரும் பிரியக்கூடாது. ஃபாசில் சந்தோசத்துக்காக உங்க கைகள் சேர்ந்தே இருக்கணும். சண்டை போட்டாலும் சமாதானம் ஆகணும். ஃபாசிலோட மகிழ்ச்சிக்கும், கண்ணீர்க்கும் நீங்க தான் பொறுப்பு. நீங்க ரெண்டு பேரும் போடுற சண்டை உங்களை மட்டும் பாதிக்காது. ஃபாசிலையும் பாதிக்கும். அதனால எந்த செயலும் செய்றதுக்கு முன்ன ரெண்டு முறை ஆலோசனை செய்ங்க”
ஜோஹ்ரா பேச பேச ஆர்யனும், ருஹானாவும் தயக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
——–
“ரஷீத்ட்ட இருந்து எதாவது தெரிஞ்சதா, சல்மா?”
“ஒன்னும் முடியல அக்கா. ஒருவேளை அவனுக்கே தெரியாது போல”
“ஆர்யன் சொன்னா ரஷீத் உயிரையும் விடுவான். அவனுக்கு தெரியாம இருக்காது”
“அந்த நடிப்புக்காரி போனை எடுத்தாளா, அக்கா?”
“இல்ல. அவளும் காணல. என்ன செய்றான்னு தெரியல”
“ஐயோ! என்னக்கா சொல்றே? அவளும் ஆர்யன்கூட போய் சேர்ந்துட்டாளா?”
“எனக்கு தெரியல. நீ ரஷீத்தை நிழல் மாதிரி தொடர்ந்துட்டே இரு. சின்ன தகவலாவது கிடைக்கும்”
——-
“ஏன் மருமகளே, இருட்டுல என்ன பார்த்துட்டு இருக்கே? வா வந்து உட்கார்”
“இல்ல. ரெண்டுபேரும் வெளிய போய் அதிக நேரம் ஆகுதே, ஜோஹ்ரா அம்மா”
“பக்கத்துல இருக்கற ஏரியை பார்க்க போயிருக்காங்க. கார்ல தானே போனாங்க? இப்போ வந்துடுவாங்க. நீ கவலைப்படாதே, நக்கத்”
“இல்ல.. நான் போய் பார்த்துட்டு வரேன்” என ருஹானா திரும்ப, கையில் ஆப்பிள் பழங்களுடன் இவானும், அவன் கையை பிடித்துக்கொண்டு ஆர்யனும் உள்ளே வந்தனர். இவானை கூட்டிட்டு கொண்டு ஆர்யன் வேறு எங்கோ சென்றுவிட்டானோ என கதிகலங்கி இருந்த ருஹானா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“சேஹான்! ஏன் இவ்வளவு நேரம்? உன் மனைவியை பயமுறுத்திட்டியே!” ஜோஹ்ரா கேட்க ருஹானாவை ஒரு நொடி பார்த்த ஆர்யன் “ஃபாசில் ஆப்பிள் கேட்டான். உங்களுக்கு…. உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்தோம்” என அவரிடம் ஆர்யன் சொன்னான்.
“பாருங்க, சிவப்பு ஆப்பிள்” என சொல்லி நிறுத்திய இவான், ஜோஹ்ராவை பார்த்துவிட்டு, ருஹானாவை நோக்கி “அம்மா” என முடித்தான். ருஹானாவின் இதயத்தில் பூமாரி பொழிந்தது.
பழங்களை கழுவி கொண்டுவருவதாக சொல்லி ருஹானா உள்ளே செல்ல, ஜோஹ்ரா “ஃபாசில் குட்டி! பாட்டி கிட்டே வா. என்ன என்ன பார்த்தே சொல்லு” என அவனை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டார்.
—–
இவானை மடியில் படுக்க வைத்து தட்டி தூங்க வைத்த ஜோஹ்ரா “சேஹான்! ஃபாசில் தூங்கிட்டான் பாரு, அவனை உள்ளே கொண்டு போய் படுக்க வச்சிட்டு நீங்களும் தூங்குங்க. நானும் துவா முடிச்சிட்டு போய் வெளிய படுக்கறேன்” என சொல்ல ஆர்யன் இவானை தூக்க வந்தான்.
ஜோஹ்ரா அருகில் அமர்ந்திருந்த ருஹானா “நானும் இங்கயே படுக்க….” என சொல்லிகொண்டே வந்தவள், ஆர்யன் திரும்பி அவளை பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.
படுக்கையறையில் இவானை படுக்க வைத்த ஆர்யன் “கவலைப்படாதே! ஜோஹ்ரா அம்மா சீக்கிரம் தூங்கிடுவாங்க. நான் ஹால்ல படுத்துக்கறேன்” என்றான்.
தலையாட்டிய ருஹானா “அவங்க தனியா தான் இருக்காங்களா?” என கேட்டாள்.
“ஆமா! அவங்க கணவர் ரொம்ப வருஷம் முன்னமே இறந்துட்டார். அவங்க பையன், மருமகள், பேரன் ஒரு கார் விபத்துல இறந்துட்டாங்க” ஒரு வருத்தமூச்சுடன் ஆர்யன் சொல்ல ருஹானாவுக்கு மனம் கலங்கிவிட்டது.
“அந்த வருஷம் முதன்முறையா சையத் பாபா கிட்டே இந்த வீட்டு சாவி வாங்கிட்டு நான் மட்டும் இங்க வந்தேன். என்னை அவங்க மகன் சேஹான்னு சொல்லி அணைச்சிக்கிட்டாங்க. துக்க நிகழ்வுகள் எல்லாத்தையும் அவங்க மூளை மறந்திடுச்சி”
“நீங்களும் அவங்க வருத்தப்படக்கூடாதுன்னு அவங்க மகன் மாதிரியே நடக்க ஆரம்பிச்சிட்டிங்க, அப்படித்தானே?”
ஆர்யன் பதில் சொல்லவில்லை.
“என்னால அவங்க வலி, வேதனையை உணர முடியுது. அல்லாஹ் காப்பாற்றட்டும்! என்னால இவான் இல்லாம உயிர் வாழவே முடியாது”
இருவரும் தூங்கும் இவானை திரும்பி பார்த்தனர்.
“இனிமேல் இவானை பற்றி உங்க திட்டம் என்னன்னு நான் கேட்க மாட்டேன். ஏன்னா எனக்கு தெரியும், இவான் வருத்தம் அடையற எந்த விசயத்தையும் நீங்க செய்ய மாட்டீங்க”
ருஹானா ஆர்யன் மேல் நம்பிக்கை வைத்து பேச, அவன் அவளையே பார்த்திருந்தான்.
——-
கண் மூடி படுத்திருந்த சித்தியின் மேல் கை போட்டு தூங்கும் இவானையே பார்த்திருந்த ஆர்யன், ஜோஹ்ரா தூங்கும் வரை உள் அறையிலேயே இருந்தான். ருஹானாவும், இவானும் சேர்ந்து விளையாடிய காட்சிகள் அவன் மனக்கண்ணில் ஆடியது.
மனப்புழுக்கம் தாங்காமல் வெளியே வந்தவன் தோட்டத்தில் மெல்ல நடந்தான். ஜோஹ்ராவின் அறிவுரைகள் காதில் ஒலித்தன.