Advertisement

அத்தியாயம் – 7
குண்டலினி விழிப்பு நிலையில் இருவரும் தொடுதிரையாக மாறிய மாயாஜாலத்தை அவர்கள் விழித்திரை வெளிப்படுத்திய அந்த நொடியில் அவர்களின் இணைப்பைத் துண்டித்து ஓர் அடி விலகி நின்று கொண்டனர். அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்,”ஸர், நீங்க வர்றீங்களா?” என்று மின் தூக்கியின் உள்ளேயிருந்து குரல் வந்தது.  
அதற்குச் சிவா மௌனம் காக்க,”அவங்க வரலை….நீங்க போங்க.” என்று சிவாவிற்குப் பதிலாக பதில் கொடுத்தாள் மாய நிகழ்விலிருந்து மீண்டிருந்த கௌரி. 
மின் தூக்கி அதன் பயணத்தை தொடர, அந்த ஓசையில், அசைவில் சுய நினைவுக்கு வந்த சிவா,”எனக்கு லேட்டாகுது…நான் வீட்டுக்குப் போகணும்…குழந்தைங்க காத்துக்கிட்டிருப்பாங்க.” என்றான்.
இதை அவள் வீட்டிலேயே அவனுக்குச் சொன்ன போது அதை ஏற்றுக் கொள்ளாமல், தேவையில்லாமல் அவளுடன்  ஆஸ்பத்திரிக்கு வந்து, தேவையில்லாத விஷயங்களை அவினாஷுக்குத் தெரிவித்து, அவளைப் பிரச்சனையில் மாட்டி விட்டு இப்போது அவளால் தமாதமாவது போல் அவன் பேசியதைக் கேட்டுக் கடுப்பானவள்,”எதுக்காக அண்ணன்கிட்டே என் வீட்லே நடந்ததை சொன்னீங்க? என்று அவன் மீது பாய்ந்தாள். அவனைப் பற்றி அவள் அண்ணனிடம் சொன்னதை அவனிடம் சொல்லவில்லை என்ற கடுப்பில் இருந்தவனை அது மேலும் தூண்டி விட,
“அதைப் பற்றி உன் அண்ணன்கிட்டே சொல்ல வேணாம்னு நீ என்கிட்டே சொன்னேயா? அப்படியே அவர் கேட்டவுடனே அதுக்கு நீ பதில் சொல்லுணும்னு உன்னை நான் கட்டாயப்படுத்தினேனா?”என்று சீறிப் பாயந்தான் சிவா.
“அண்ணன் கேட்ட பிறகு எப்படிப் பதில் சொல்லாம இருக்க முடியும்?”
“ஓ..அப்போ உன் அண்ணன்கிட்டே தான் எதையும் மறைக்காம உண்மை பேசுவே.. மற்றவங்களை முட்டாள் ஆக்குவே.” என்றான் மிகுந்த கோபத்துடன்.
சிவா சொன்னது சத்தியமாகக் கௌரிக்குப் புரியவில்லை.  “எதுக்கு இப்போ நீங்க இவ்வளவு கோபப்படறீங்க? உங்களை நானா என்னோட ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னேன்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டு அவனை ஆத்திரப்படுத்தினாள்.
“நீ சொல்லலை..நானா தான் வந்தேன்..நானா தான் உனக்கு உதவி செய்யறேண்ணு சொன்னேன்..அதான் உனக்கு நான் வேலைக்காரனாட்டம் தெரியறேன்” என்று சொல்லி விட்டு அவள் பதிலிற்குக் காத்திராமல் மாடிப்படிகளில் இறங்கிச் சென்றான் சிவா. அவன் கோபத்தை விட அவன் சொன்ன அந்த வேலைக்காரன் என்ற வார்த்தை கௌரியை மிகவும் பாதித்தது.  அந்த வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட சில நொடிகளானது கௌரிக்கு.  
அவனை மறுபடியும் பின்தொடர நினைத்து மாடிப்படியை நோக்கித் திரும்பியவளை  அனன்யாவின் அழுகைச் சத்தம் கடிவாளம் போட்டு நிறுத்தியது.  காரிடாரின் கோடியில் அனன்யாவைச் சமாதானம் செய்தபடி கௌரி கொண்டு வந்திருந்த தர்மாஸ்ஸைப் திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவினாஷ். உடனே அவள் முடிவை மாற்றிக் கொண்டு அவினாஷை நோக்கிச் சென்றாள் கௌரி.
கௌரி வந்தவுடன் ஒரு நாற்காலியில் அவன் மகளுடன் அவினாஷ் அமர்ந்து கொள்ள, அவனருகில் அமர்ந்து, தர்மாஸிலிருந்து வெந்நீரை சின்ன கப்பில் ஊற்றி அனன்யாவுக்குப் புகட்டினாள் கௌரி.  குட்டி குடித்து முடிக்கும்வரை இருவரும் மௌனமாக இருந்தனர். அதன்பின்,
“கௌரி, உன் ஸ்கூட்டியை இங்கே விட்டிட்டு  நீ, நித்யா, அனன்யா மூணு பேரும் டாக்ஸிலே நம்ம வீட்டுக்குப் போயிடுங்க..நான் இங்கே நைட் தங்கிக்கறேன்.” என்றான் அவினாஷ்.
அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல்,“அண்ணா, அங்கிள், ஆன்ட்டிகிட்டே இப்போ என் பிரச்சனையைப் பற்றி சொல்ல வேண்டாம்.” என்றாள் கௌரி.  அதற்கு அவன் மௌனத்தின் மூலம் மறுப்பு தெரிவித்த அவினாஷிடம்,
“ப்ளீஸ்..இந்த நேரத்திலே வேணாமே…சிதார்த் கவலையோட என்னோடதும் சேர்க்க வேணாம்.” என்று கோரிக்கை வைத்தாள்.
“சரி..ஆனா நான் ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி இதுக்கெல்லாம் ஒரு முடிவு எடுத்திட்டு தான் போவேன்….இனி நீ தனியா இருக்கப் போகறதில்லை.” என்று திட்டவட்டமாகத் தெரியப்படுத்தினான்.
அதன்பின் அவன் அப்பா ராமகிருஷ்ணனை அழைத்து அன்று சாயங்காலம் நடந்தவற்றைப் பகிர்ந்து கொண்டான். அவருடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டு இறுதியில் அவன் கைப்பேசியை கௌரியிடம் கொடுத்தான். ஐந்து நிமிடம் போல் அவினாஷ் சொன்னதை வழி மொழிந்தாள் கௌரி. அப்போது அனன்யா மறுபடியும் அழ ஆரம்பிக்க,
“நான் நித்யாவை அழைச்சுக்கிட்டு வரேன்..கிளம்புங்க…இவளுக்குப் பசிக்குது போல.” என்றான் அவினாஷ்.
“உங்களுக்கு இராத்திரிக்குச் சாப்பாடு?”
“நீ போய் கேண்டின்லேர்ந்து  எதாவது வாங்கிட்டு வந்திடு..முன்னாடியே யோசனை செய்திருந்தா சிவாவோட மருந்து வாங்க வெளியே போன போது டிஃபனும் வாங்கிட்டு வந்திருப்பேன்….சிவா நல்ல குணமாத் தெரியறாரு..பழகறாரு..நான் தான் யோசிக்காம பேசிட்டேன்..தப்பா எடுத்துக்கிட்டாரு..அப்புறம் நீயும் ஏதோ பேசப் போய் அவருக்குக் கோபம் வந்திருச்சு….தேவையில்லாம அவங்களைப் புண்படுத்திட்டேன்.”
“என்ன சொன்னீங்க அவங்ககிட்டே? என்று கௌரி கேட்டவுடன் அதைச் சொல்வதா வேண்டாமாயென்று யோசித்த அவினாஷ், மறுபடியும் சிவாவுடன் எந்தவிதமான சிக்கலும் ஏற்படக் கூடாதென்று எண்ணி,”நீ உன்னைப் பற்றி குறைவா நினைக்கற அதனால் தான் அவங்களைக் கல்யாணம் செய்துக்க விருப்பப்பட்டேண்ணு சொன்னேன்..அது அவங்களுக்குத் தகுதியில்லைன்னு சொன்ன மாதிரி அர்த்தமாயிடுச்சு..நான் அந்த அர்த்தத்திலே சொல்லலை.”
அதைக் கேட்டு ‘கடவுளே.. அதான் நான் சாதாரணமா சொன்னது அவங்களுக்கு வேலைக்காரங்க போலத் தோணியிருக்கு.’ என்று வேதனையடைந்தவள் அதை வெளிக்காட்டாமல்,”விடுங்க அண்ணா..அவங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டா அதுக்கு நீங்க பொறுப்பாக முடியாது…நான் போய் டிஃபன் வாங்கிட்டு வரேன். ” என்று அந்த உரையாடலை முடிவிற்குக் கொண்டு வந்தாள் கௌரி.
ஆனால் அவினாஷினால் விட முடியவில்லை.  இன்று கௌரியின் வீட்டிற்கு சிவா வந்தது, அவளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தது, கமெரா, கார் இரண்டு வேலைகளையும் முடித்துத் தர முன் வந்தது என்று அனைத்தையும் மனத்தில் ஓட்டிப் பார்த்தவனுக்கு கௌரி விஷயத்தில் சிவா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று சந்தேகம் எழுந்தது.  அதே போல் கோபித்துக் கொண்டு போன சிவாவின் பின்னால் ஓடிப் போன கௌரிக்கும் அவன் மீது இன்னும் ஆர்வமிருக்கிறதோ என்று சந்தேகம் கொண்டான்.  
அடுத்து வந்த நாள்களில் அவினாஷின் சந்தேகத்தை மெய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள் கௌரியும் சிவாவும்.
சிவாவின் சிந்தனை முழுவதும் கௌரி நிறைந்திருந்தாள்.  அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து அனைத்தையும் யோசித்துப் பார்த்தப் போது அன்று அவள் வீட்டிற்கு ஏன் போனான் என்ற கேள்வி அவனுள் எழுந்தது? அதன் பின் அவன் செய்த சுய அலசலின் முடிவில் கௌரி சொன்னது போல் அவன் மேல் தான் பிழை என்று உணர்ந்தவன் அதைச் சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். எப்படிச் சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன் அவன் மூலாதாரத்தில் விழித்திருந்த அவனுடைய குணடலினி திறன் மெதுவாக மேலெழுந்து மூலதாரச் சக்கரத்தை முடுக்கிவிட்டது.  அதன் விளைவாக முன்னர் முடிவு செய்தது போல் கௌரியின் பாதுகாப்பிற்கு அவனாலான உதவிகளைச் செய்ய வேண்டுமென்ற என்ற எண்ணம் அவனுள் வேரூன்றியது.
கடந்த சில நாள்களாக கௌரியின் சிந்தனை சிவாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தது.  அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து கடைசியாக மருத்துவமனையில் அவளைக் கோபித்துக் கொண்டு அவன் மாடிப்படியில் இறங்கிச் சென்றது அவள் மனதை விட்டு இறங்க மறுத்தது.  அவள் விருப்பம் தெரிந்த பின்னும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று மறுத்தவனோடு எப்படிச் சாதாரணமாகப் பேசிப் பழக முடியும் என்று எண்ணித் தான் அவன் உதவியை மறுத்தாள். 
அதைப் புரிந்து கொள்ளாதவனின் கோபம் அவளது மன அமைதியைப் பறித்துச் சென்றிருந்தது.  கோபமாக சென்றவன், யாரும் சமாதானம் செய்யாமல் குணமாகத் திரும்ப வாய்ப்பில்லை என்று அவள் மனம் வலியுறுத்தியது. அவள் மன அமைதியைத் திரும்பப் பெற அவனைச் சமாதனம் செய்து அவனுடன் சுமூகமான உறவு வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவள் சுய அலசல் முடிந்த போது அவள் மூலாதாரத்தில் விழிப்பு நிலையில் இருந்த அவளின் குண்டலினி திறன் மெதுவாக மேலெழுந்து அவளின் மூலாதாரச் சக்கரத்தை முடுக்கி விட்டது. அதன் விளைவாக மறுபடியும் அவளுடன் அவன் பேச நேர்ந்தால் அவன் மனம் புண்படாதபடி பேச வேண்டுமென்ற என்ற எண்ணம் அவளுள் நிலை பெற்றது.
அடுத்த சில தினங்கள் அவினாஷின் ஃபோன்காலிற்காகக் காத்திருந்து காத்திருந்து அவனிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் சிவாவைத் தொடர்பு கொண்டனர் சிசிடிவி டெக்னிஷியனும் கார் மெக்கானிக்கும்.  ஏன் இந்த தாமதம், வேறு ஏதாவது ஏற்பாடு நடக்கிறதா என்று தெரிந்து கொள்ள கௌரிக்கு அழைப்பு விடுத்தான் சிவா. 
எப்போதும் மதிய வேளை தான் சிவாவிற்கு ஓய்வு நேரமென்பதால் அந்த நேரத்தில் அவன் கௌரியை அழைக்க, கௌரியோ ஒரு கூட்டத்தில் இருந்தாள்.  அவள் கைப்பேசியின் அதிர்வலைகள் அவளுக்கு அழைப்பு வந்ததை உணர்த்த, அது சிவா என்று தெரிந்தவுடன், அவள் சமாதானம் செய்யாமல் அவளைத் தொடர்பு கொண்டவனை எண்ணி சந்தோஷமடைந்தாள்.  
அதை வெளிக் காட்டாமல் அழைப்பை ஏற்றவள்,”நான் இப்போ ஒரு மீட்டிங்லே இருக்கேன்..பத்து நிமிஷம் கழிச்சு உங்களோட பேசறேன்.” என்று தகவல் கொடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். அந்தப் புறம் இருந்த சிவாவிற்கு சாப்பாட்டு நேரத்திலே மீட்டிங்கா? இவ எப்போ சாப்பிடுவா? நமக்குத் தான் எதுக்கும் அட்டவணை கிடையாது..இவளுக்குமா?” என்று அவர்கள் இருவரின் பழக்கங்களை  ஒப்பிட்டுப் பார்த்தான்.
எப்போது இந்தக் கூட்டம் முடியுமென்று ஒருவிதமான வேதனையில் அடுத்த பத்து நிமிடங்களைக் கடத்தினாள் கௌரி.  மேலும் இருபது நிமிடங்களானது அவள் வேதனை முடிவிற்கு வர.  அதன் முடிவில், முதலில் சிவாவிற்கு அழைப்பு விடுத்தாள்.  அவள் அழைப்பை ஏற்றவுடன்,
“மீட்டிங் முடிய லேட்டாயிடுச்சு..உங்க மதிய சாப்பாடு ஆயிடுச்சா?” என்று சாதாரணமான விசாரிப்புடன் பேச்சை ஆரம்பித்தாள் கௌரி.
“இன்னும் இல்லை…..ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி..உனக்கு?” என்று அவனும் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தான்.
‘இல்லை..இனிமேதான்..உங்களோட பேசிட்டு சாப்பிடலாம்னு நினைச்சேன்..என்ன விஷயம்?..சொல்லுங்க.”
“அவினாஷ்கிட்டே இருந்து எந்தத் தகவலும் இல்லை..இரண்டு பேரும் எனக்கு ஃபோன் மேலே ஃபோன் செய்யறாங்க..சிதார்த்துக்கு இன்னும் உடம்பு சரியாகலையா இல்லை நீங்க வேற ஏற்பாடு செய்திட்டீங்களா..அப்படிச் செய்திருந்தா அவங்களும் காத்திருக்காம வேற வேலைக்குப் போயிடுவாங்க..அதான் உன்கிட்டேயே கேட்டிடலாம்னு ஃபோன் செய்தேன்.”
“சிதார்த் நல்லா இருக்கான்….நான் தான் அன்னைக்குப் பிறகு வீட்லே தங்கவே இல்லை..டூர்லே தான் இருக்கேன்….நான் வீட்லே இருக்கணும்னு அண்ணன் காத்துக்கிட்டு இருக்காரு..அதான் அவங்களோட பேசலை.. உங்களுக்கும் ஃபோன் செய்யலை.”
“டூர் போயிருந்தேயா? எல்லாம் நிறுத்திட்டேண்ணு சொன்ன.”
“ஒருத்தங்க லீவுலே இருக்காங்க..அதனாலே அவங்க வேலையை நான் செய்யறேன்.”
“சரி..உனக்குச் சௌகர்யமான நாளைச் சொல்லு கமெரா போட ஆள் அனுப்பறேன்..மெக்கானிக் ஒரு ஞாயிற்றுக் கிழமை வந்து கார் டயரை மாற்றி கராஜுக்கு எடுத்திட்டுப் போயிட்டு எல்லாம் செக் செய்திட்டு அன்னைக்கே கொண்டு வந்து விட்டிடுவான்.”
“இரண்டு வேலையையும் ஒரே ஞாயிற்றுக் கிழமைலே முடிச்சுக் கொடுக்க முடியாதா?”
“கராஜ் ஆளுக்கு சண்டேயெல்லாம் கிடையாது.. எல்லாம் நாளும் வேலைக்கு வருவான்..கமெரா ஆள் அப்படிக் கிடையாது..ஞாயிற்றுக் கிழமை அவன் வர மாட்டான்.”
“அப்போ என்ன செய்யறது? நான் அன்னைக்குத் தான் ஃப்ரீயா இருப்பேன்…வீக் டேஸ்லே சிசிடிவி ஆள் எப்போ வரமுடியும்?”
“காலைலே பத்து மணிக்கு மேலே தான் அவன் வேலையை ஆரம்பிப்பான்.” 
“எனக்குச் சரி வராது..அவங்களைச் சாயங்காலம் வரச் சொல்லுங்க..ஆறு மணிக்கு மேலே… எனக்கு மெஸெஜ் அனுப்புங்க அன்னைக்கு ஆபிஸ்லேர்ந்து சீக்கிரமாப் புறப்பட்டுப் போயிடறேன்.” 
“சரி..அவங்க இரண்டு பேரோடேயும் பேசிட்டு உனக்கு மெஸெஜ் அனுப்பறேன்.” என்று பதில் கொடுத்தவனுக்கு மேலே என்ன பேசுவதென்று தெரியவில்லை. 
“சுப்ரமணி ஸர் எப்போ வராங்க? ஏதாவது தகவல் தெரியுமா? அவங்க வீட்டுக்குப் போய் அவங்க வைஃபைப் பார்த்துப் பேசணும்னு நினைச்சேன் அதுக்கு நான் வீட்லே இருக்கணுமே.” என்றாள் கௌரி.
“அவருக்கு கனெக்டிவிட்டி ப்ராப்ளம் இருக்கு..மெஸெஜ் பார்க்கறாரு ஆனா பதில் போடறதில்லை..வந்திடுவாரு….அவருக்காகக் காத்திருக்கணுமா? என்று அவன் குரலில் சிறிது சந்தேகம் எட்டிப் பார்க்க,
“இல்லை..இல்லை..நீங்களே முடிச்சுக் கொடுங்க.” என்று அவசரமாக அறிவுறுத்தினாள் கௌரி. அதன் பின் அவனுடன் என்ன பேசுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.  அப்போது “கௌரி மேம், கால் ஃபார் யு” என்று யாரோ சொல்ல,
“எனக்கு வேற ஃபோன் கால் வருது..பை.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் கௌரி. அவள் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் வலித்தது.  தீபாவையும் சூர்யாவையும் பற்றி விசாரிக்க பரபரத்த மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவள் பாடுபடு வேண்டியிருந்தது.  அவள் நினைத்தது போல் அவனுடன் சுமூகமாக உறவு வைத்துக் கொள்வது சுலபமான விஷயமாகப் படவில்லை அவளுக்கு. அதே நேரம் அவனுடன் தொலைத்தொடர்பிலாவது இருக்க அவள் மனம் விழைந்தது.
அப்போது அவன் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் மனதிலும் அதே கேள்வி தான் இருந்தது.  அவனுடன் அவள் சாதாரணமாகப் பேசினாலும் தீபாவையும் சூர்யாவையும் பற்றி அவள் ஒரு வார்த்தைக்கூட விசாரிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தில் வலி ஏற்படுத்தியிருந்தது.    இனி கௌரிக்கும் அவனுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிந்திருந்தும் அவளுடன் தொடர்பில் இருக்க அவன் மனம் விழைந்தது. அதன் விளைவாக,
முதலில் கௌரியின் கார் வேலையை முடித்துக் கொடுத்தான் சிவா.  ஒரு ஞாயிற்றுக் கிழமை  மெக்கானிக்கை அழைத்து வந்து, இரண்டு டயர்களையும் மாற்றும் வரை மேற்பார்வை செய்து, அதன் பின் வண்டியைக் கடைக்கு எடுத்துச் சென்று, அதற்கு முழு ஸர்விஸும் செய்து, இரவு ஏழு மணி போல் கொண்டு வந்து விட்டான். 
அதன்பின் அவள் வீட்டில் அமர்ந்து எல்லாக் கணக்கையும் சரி பார்த்து, பணம் பட்டுவாடா செய்து, மெக்கானிக் கொடுத்த பில்லை சுப்ரமணி ஸரிடம் சேர்க்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.  அன்று முழுவதும்  காரியமே கண்ணாகச் செயல்பட்டு, யாரோ போல் நடந்து கொண்டான் சிவா.  அவன் நடத்தையில் காயப்பட்டாலும் அதுதான் அவர்கள் இருவருக்கும் சரியென்று அவனைப் பின்பற்றி கௌரியும் அவனிடம் ஒதுக்கத்தைக் காட்டினாள். 
இருவரும் அவர்கள் மனத்தினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் எண்ணம் என்னும் எரிசக்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவர்களின் குண்டலினி சக்தி மூலாதாரச் சக்கரத்திலேயே  அடைப்பட்டுக் கிடந்தது. 

Advertisement