Advertisement

அத்தியாயம் – 6
கௌரி லக்ஷ்மி, சிவசங்கர் இருவரும் கௌரி சங்கர், கௌரியின் சங்கரானதை உணரவில்லை.
இவங்க எதுக்கு இப்போ ஆஸ்பத்திரி வராங்க? அவினாஷ் அண்ணன் கேட்டா என்ன பதில் சொல்றது? கமெரா போட்டுக் கொடுக்கறத்துக்கு இவங்க வருவாங்களா இல்லை ஆள் அனுப்புவாங்களா? அது விஷயமா வீட்டுக்கு வந்தா என்ன செய்யறது? அண்ணனுக்கு இது தெரிய வந்தா என்ன சொல்லுவாங்க? கமெரா விஷயத்தில் அவசரப்பட்டு விட்டோமோ?என்று சிந்தித்தபடி ஆஸ்பத்திரியை வந்தடைந்தாள் கௌரி.
ரிசெப்ஷனில் விசாரித்து மூன்றாவது தளத்திலிருந்த குழந்தைகள் வார்டிற்கு அவர்கள் சென்ற போது அதன் கோடியிலிருந்த அறையின் வாசலில் அவினாஷும், நித்யாவும் நின்று கொண்டிருந்தனர். அவினாஷின் தோளில் அனன்யா உறங்கிக் கொண்டிருந்தாள்.  சிவாவின் வரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று வெளிப்படையாகக் காட்டினர்.
“சிவா, நீங்க எங்கே இங்கே?” என்று நேரடியாக அவினாஷ் கேட்க, நித்யாவோ அவள் திகைப்பைக் கண்களில் காட்டினாள். 
“கௌரியைப் பார்க்க அவ வீட்டுக்குப் போனேன்..அவ ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தா..சிதார்த்துக்கு உடம்பு சரியில்லைன்னு  சொன்னவுடனே நானும் அவக்கூடவே வந்திட்டேன்..இப்போ எப்படி இருக்கான்?” 
“நேத்துலேர்ந்து வாந்தி, இன்னைக்கு மத்தியானத்திலேர்ந்து லேசா ஜுரம்..என்னென்னு கண்டு பிடிக்கத் தான் டாக்டர் அட்மிட் செய்யச் சொன்னாரு.” என்றான் அவினாஷ்.
“நல்லதுங்க.. குழந்தைங்களுக்குச் சரியாச் சொல்லத் தெரியாது..நாமதான் அவங்களைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கணும்..தீபாவோட இப்போ பிரச்சனையில்லை..எட்டு வயசாகுது அதனாலே உடம்பு சரியில்லைன்னா சொல்லிடுவா….சின்னவளுக்கு ஏதாவது சரியில்லைன்னா அழுவா அதை வைச்சுத் தான் கண்டுபிடிப்பேன்.” என்று அவன் மகள்களைப் பற்றி அவினாஷிடம் பகரிந்து கொண்டான் சிவா.
“நேத்து நைட்லேர்ந்து இதையேதான் இவர்கிட்டே சொல்லிக்கிட்டிருக்கேன்..எங்கே கேட்டாரு..டிராவல் செய்த களைப்பு, நேரத்திற்குச் சாப்பிடலை, தண்ணீர் குடிக்கலை அதான் வாந்தின்னு  இவரா காரணம் சொல்லிகிட்டிருந்தாரு..நல்லவேளை ஜுரம் வந்திச்சு டாக்டர்கிட்டே அழைச்சுக்கிட்டு வந்தோம்..இவங்களுக்கு ஆஸ்பத்திரி வர வேணாம்..எல்லாத்துக்கும் மாத்திரை கொடுத்து வீட்லேயே பார்த்துக்கிட்டா இரண்டு நாள்லே தானா சரியாகிடும்னு நினைக்கறாங்க ..இரண்டு நாள் பெரியவங்க நாம பொறுத்துப்போம் குழந்தையாலே முடியுமா?” என்று சிவாவிடம் கேட்ட நித்யாவின் கண்கள் கலங்கின.
அதைக் கேட்டு அவினாஷைக் குற்றப் பார்வை பார்த்தாள் கௌரி.  அவன் ஆஸ்பத்திரியை வெறுக்க காரணம் இருந்தது.  ஆனால்  அதற்காக அவன் பெற்ற பிள்ளைகளைக் கஷ்டப்பட வைப்பானென்று அவள் நினைக்கவேயில்லை.
அப்போது,”என மனைவிக்கும் எங்க வீட்லே எல்லாருக்கும் ஒரே போல ஜுரம் வந்திச்சு.. நாங்க எல்லாரும் மாத்திரையும், ஊசியும் போட்டுக்கிட்டோம்..கொஞ்ச நாள்ளே சரியாயிடுச்சு..அதே போல அவளுக்கும் சரியாகிடும்னு வீட்லேயே வைச்சிருந்தேன்..அவளுக்குச் சரியாகலை..என் மனைவியைச் சரியான நேரத்திலே ஆஸ்பத்திரிலே சேர்த்திருந்தா இன்னைக்கு எங்களோட இருந்திருப்பா.” என்று அவன் செய்த பிழையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான் சிவா.
ஆஸ்பத்திரி, வீடு, கார்,  பஸ், இரயில், உள்ளூர், வெளியூரென்று அவரவர் விதிப்படி ஏன்யென்ற கேள்வியோடு சிலரின் வாழ்க்கை முடிந்து போகிறது அவள் அம்மாவைப் போல என்று கௌரியின் மனது அவள் அம்மாவை நோக்கிச் சென்றது.  
அப்போது அங்கே மருந்துச் சீட்டுடன் வந்த நர்ஸ்,”இதை ஃபார்மெஸிலேர்ந்து வாங்கிட்டு வாங்க.” என்று நித்யாவிடம் கொடுத்துவிட்டு,”குழந்தை உங்களைத் தேடறான்..நீங்க மட்டும் உள்ளே போங்க.” என்றாள்.
உடனே,“நீ சிதார்த் பக்கத்திலே இரு நித்யா..நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்.” என்றான் அவினாஷ்.
“சரி…குட்டியை என்கிட்டே கொடுத்திட்டுப் போங்க.” என்றாள் நித்யா. 
“அண்ணி, அந்தச் சீட்டை என்கிட்டே கொடுங்க..நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்று நித்யாவிடமிருந்து சீட்டை எடுத்துக் கொண்டாள் கௌரி.
“நீ போக வேணாம்..நான் போய் வெளிலே இருக்கற மருந்துக் கடைலே வாங்கிட்டு வரேன்..உள்ளே இருக்கற ஃபார்மஸிலே டாக்டர் சொன்னா தான் மார்ஜின் இல்லாமக் கொடுப்பாங்க….வெளிலே இங்கேயே விட கம்மி விலையாதான் இருக்கும்..இராத்திரி அவசரம்னா இங்கே வாங்கிக்கலாம்..இப்போ பணத்தை விரயமாக்க வேணாம்.” என்று சொல்லி கௌரியின் கையிலிருந்த சீட்டை எடுத்துக் கொண்டான் சிவா.
சிவாவின் விளக்கத்தைக் கேட்டு அவனைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது அவினாஷிற்கு. அதனால்,
“அனன்யாவை நீ வைச்சுக்கோ..நானும் சிவாவோட மருந்துக் கடை வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று அனன்யாவை கௌரியிடம் கொடுத்து விட்டு, நித்யாவிடம்,”நீ உள்ளே சிதார்த்தோட இரு..மருந்து வாங்கிட்டு வந்திடறேன்.” என்றான்.
அவினாஷும் சிவாவும் சென்றவுடன் அறையின் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த அனன்யாவை அவள் மடியில் போட்டவுடன் கண் விழித்து கௌரியைப் பார்த்துச் சிரித்தாள். பத்து நிமிடம் கழித்து அவர்கள் இருவரும் மருந்துடன் திரும்பியபோது அவள் மடியிலிருந்த அனன்யாவுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள் கௌரி.
“அவ தூங்கட்டும்னுதான் உன்கிட்டே விட்டிட்டு போனேன்..அதுக்குள்ளே எழுந்திரிசிட்டாளா?” என்றான் அவினாஷ்.
“என் மடிலே நான் போட்டுகிட்ட உடனேயே எழுந்திரிச்சிட்டா அண்ணா.” என்று கௌரி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவினாஷிடம் போக அடம் பிடித்தாள் அனன்யா.
“மருந்தை உள்ளே கொடுத்திட்டு வரேன்.” என்ற அவினாஷ் அறைக்குள் செல்ல, அங்குச் சிவாவுடன் தனித்து விடப்பட்ட கௌரி,
“நீங்க கிளம்புங்க..உங்களுக்கு ரொம்ப லேட்டாயிடுச்சு.” என்றாள்.
“உனக்கு லேட்டாகலையா? நீயும் வீட்டுக்குப் போகணுமே.” என்றான்.
“நான் போயிடுவேன்.” என்றாள்.  அப்போது அறையிலிருந்து வெளியே வந்த அவினாஷிடம் அனன்யாவைக் கொடுத்து விட்டு,
“அண்ணா, அவங்க கிளம்பறாங்க.” என்றாள். அவள் சொன்னதைப் புறக்கணித்து விட்டு ஆண்கள் இருவரும் அவளிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளிப் போய்ப் பேச ஆரம்பித்தனர். 
நேற்றுவரை அறிமுகமில்லாத இருவரும் கௌரிக்குக் கேட்காத வண்ணம் குசுகுசுவெனப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்,”அண்ணா, சிதார்த்தோட கொஞ்ச நேரம் இருந்திட்டு நான் வீட்டுக்குப் புறப்படறேன்.” என்றாள்.
அவள் வீட்டிற்குப் புறப்பட வேண்டும் என்று சொன்னவுடன், ஆண்கள் இருவரும் அவர்கள் பேச்சை முடித்துக் கொண்டனர்.
“நீ உள்ளே போய் சிதார்த்தைப் பாரு…நான் சிவாவை அனுப்பிட்டு வரேன்.”என்றான் அவினாஷ்.
சிதார்த்தைப் பார்க்க கௌரி சென்றவுடன், 
“நீங்களும் உள்ளே போங்க….உங்களைக் காணும்னு உங்க பையன் தேடப் போறான்.” என்றான் சிவா.
“நீங்க சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியா இருக்கு..இதுவரைக்கும் எங்க யார்கிட்டேயும் கௌரி எதுவும் சொல்லலை..சுப்ரமணி ஸருக்குக்கூட தெரியாதுண்ணு நினைக்கறேன்..முன்னாடி ஒருமுறை ஸ்கூட்டியோட ஸீட்டை கிழிச்சது, இந்த முறை கார் டயரைக் கிழிச்சது இந்த இரண்டு விஷயம் தான் எங்களுக்குத் தெரியும்..வீட்டு பெல்லை அடிச்சு தொந்தரவு கொடுக்கறாங்கண்னு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்.” என்றான் கௌரியின் நிலையை எண்ணிக் கவலையடைந்திருந்த அவினாஷ்.
“கார் டயரைக் கிழிச்சதுக்குப் போலிஸ்க்குப் போகணும்னு நீங்க சொல்லியிருக்கீங்க..எனக்கும் இந்த மாதிரி விஷயத்தை அப்படியே விடக்கூடாதுண்னு தோணிச்சு..அதான் இங்கே ரிசெப்ஷன்லே கமெரா பார்த்தவுடனே கௌரி வீட்லேயும் ஒண்ணு  போடணும்னு உங்ககிட்டே சொன்னேன்.. எதுக்குன்னு நீங்க கேட்டவுடனே தான் உங்களுக்கு விஷயம் தெரியாதுண்ணு புரிஞ்சுது..இதெல்லாம் பெரிய விஷயமில்லைன்னு நினைச்சு அவ உங்களுக்குச் சொல்லாம இருந்திருக்கலாம்.” என்றான் சிவா.
“எது பெரிய விஷயமில்லே..வீட்டு வாசல் வரைக்கும் வந்து டார்சர் செய்யறது பெரிய விஷயமில்லையா?..அவதான் ஈஸியா எடுத்துக்கிட்டிருக்கா..எனக்கு கேட்டவுடனையே டென்ஷனாயிடுச்சு..சில நாள் இராத்திரி லேட்டா ஆபிஸ்லேர்ந்து வருவா..சில நாள் காலைலே சீக்கிரம் கிளம்பி போவா..டூர் போனா எப்போ வருவா போவாண்ணு சொல்ல முடியாது..அவ வீட்டு வாசல் அவளுக்குப் பாதுகாப்பு இல்லாம போயிடுச்சு…
நீங்க சொல்ற மாதிரி ஒரு கமெரா வைச்சு யாருன்னு கண்டுபிடிக்கணும்..டம்மியெல்லாம் வேணாம்..நிஜ கமெரா போடுங்க..இந்த மாதிரி வேலை யார் செய்யறாங்கண்ணு அங்கே இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்..அதான் போலீஸ்கிட்டே போக வேணாம்னு சொல்றாங்க.” 
“இருக்கலாம்..ஆனா போலிஸ்கிட்டே போயிட்டா அவங்க பேச்சைக் கேட்கணும்..அவங்க கூப்பிடறப் போது போகணும்..எத்தனை முறை கூப்பிட்டாலும் போகணும்..எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கணும்..அத்தனை முறை கௌரி அபிஸ்க்கு லீவு போடணும், கௌரியோட துணைக்கு யாராவது போகணும்..இதெல்லாம் கஷ்டம்னுதான் சுப்ரமணி ஸரும் கம்ப்ளெண்ட் கொடுக்க வற்புறுத்தியிருக்க மாட்டாரு.” என்று வேறோரு கோணத்தில் பேசினான் சிவா.
“அப்போ இதுக்கு என்னதான் செய்யறது?”
“முதல்லே டம்மி கமெராவை மாட்டிவிடறேன்..அதுக்கு அப்புறமும் பிரச்சனையாச்சுன்னா நிஜத்திலே  கமெரா வைச்சு யாருன்னு கண்டு பிடிக்கலாம்..இந்த முறை போலிஸ்கிட்டே போகப் போறேன்னு ஸ்ட் ராங்கா அஸொசெஷன்கிட்டே கௌரி சொல்லட்டும்..அவங்க என்ன செய்யறாங்கண்ணு பார்க்கலாம்..கமெரா இருந்தாலே வாசல் பக்கம் யாரும் வர மாட்டாங்க.” 
“கார் பார்க்கிங்லே கமெரா போட முடியாதா?”
“அது பொது இடம்..அஸொசெஷன் தான் போடணும்..சுப்ரமணி ஸர்கிட்டே பேசுங்க.”
“அடுத்த முறையும் இந்த மாதிரி செய்தா என்ன பண்றது?எத்தனை முறை டயரை மாற்ற முடியும்? எத்தனை முறை பணம் செலவு செய்ய முடியும்?” 
“என்னோட கடைக்குப் பக்கத்திலே எனக்குத் தெரிஞ்ச மெக்கானிக் ஷாப் இருக்கு..டயர் மாத்தறது, வீல் அலைன்மெண்ட் எல்லாம் பக்காவா இருக்கும்…அவங்ககிட்டே காரைக் கொடுக்கலாம்..எவ்வளவு சீப்பா முடியுமோ அவ்வளவு சீப்பா முடிச்சுக் கொடுக்கறேன்..அவங்க கொடுக்கற பில்லை அஸொசேஷன்கிட்டே கொடுத்து காம்பன்ஸெட் செய்யச் சொல்லுங்க..அப்படி அவங்க மறுத்தா மெயிண்டனென்ஸ்லே கழிச்சுக்கோங்க..இந்த மாதிரி செய்தா தான் அவங்க ஒரு முடிவு எடுப்பாங்க.” என்று கௌரியின் பிரச்சனைகளுக்குத் தீர்வானான் சிவா.
“நேற்று எங்க வீட்லே இருக்கற காரைக் கொண்டு வந்து விடறேன்னு சொன்னேன்..வேணாம்னு சொல்லிட்டா..இப்போ ஸ்கூட்டிலே வந்திருக்கா..எல்லா விஷயத்தையும் அவளே சமாளிக்கணும்.. எல்லா முடிவையும் அவளே எடுக்கணும்னு நினைக்கறா..இப்பெல்லாம் உதவி, ஆலோசனை எதுவும் கேட்கறதில்லை….
உங்களைக் கல்யாணம் செய்துக்க விருப்பம்னு சுப்ரமணி ஸர்கிட்டே சொல்லியிருக்கா….நேத்து அதைக் கேட்டவுடனே எனக்கு அதிர்ச்சி..ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்தான்னு தெரியலை.” என்று அவினாஷ் சொன்னவுடன் அதுவரை அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த புரிதல் காணாமல் போனது, சிவாவின் முகம் கடினமானது.  அந்த முக மாற்றத்தைக் கண்டவுடன் தான் கௌரியின் மனதைப் படிக்கும் முயற்சியில் சிவாவின் மனதைப் புண்படுத்தியது புரிந்தது.  உடனே,
“உங்களைக் குறைவா நினைக்கலை ஆனா இப்போவும் கௌரி எதுக்கு அவளைப் பற்றி குறைவா நினைக்கணும்னு எனக்குப் புரியலை.” என்றான் அவினாஷ்.
எப்போதும் போல் அவனைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருந்த சிவா, கௌரி பற்றி அவினாஷ் சொன்னதை உள் வாங்கிக் கொள்ளத் தவறினான்.  
அதற்குப் பின் ஆண்கள் இருவருக்கும் நடுவே ஒரு விதமான சங்கடம் புகுந்து கொண்டது.  சில நொடிகள் கழித்து,”என் கடைலே கமெரா போட்டுக் கொடுத்தவங்களோட நம்பர் உங்களோட ஷேர் செய்யறேன்..நீங்களே அவங்களோட நேரடியா பேசிக்கோங்க..அதே போல அந்த மெக்கானிக்கோட நம்பரும் உங்களுக்கு அனுப்பறேன்.” என்று கௌரியின் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக விலகிக் கொண்டான் சிவா.
சிவாவின் முடிவைக் கேட்டு தேவையில்லாமல் இவனைப் புண்படுத்தி விட்டோமே அதை எப்படிச் சரி செய்வது சஞ்சலமடைந்தான் அவினாஷ்.  
அப்போது சிதார்த்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த கௌரி, அவினாஷுடன் பேசிக் கொண்டிருந்த சிவாவிடம் கோபமாக,”இன்னும் இங்கே என்ன செய்துகிட்டு இருக்கீங்க? வீட்டுக்குப் போகற ஐடியா இல்லையா?” என்று கேட்டாள்.
அதற்குச் சிவா பதில் கொடுக்கும் முன்,
“உன்னைப் பற்றிதான் பேசிக்கிட்டிருந்தோம்..உன் வீட்டு வாசல் வரைக்கும் பிரச்சனை வந்திருக்கு என்கிட்டே நீ ஒரு வார்த்தை சொல்லலை.” என்று கௌரியைக் கோபித்துக் கொண்டான் அவினாஷ். உடனே சிவாவின் புறம் திரும்பிய கௌரி அவனைப் பார்வையாலேயே எரித்து விட்டு,
“அண்ணா, ஸாரி…வேணும்னு அப்படி செய்யலை..ஒருவேளை சின்ன பசங்களா இருந்தா எதுக்கு வீணா பிரச்சனையைப் பெரிசுப் படுத்தணும்னுதான் நான் யார்கிட்டேயும் சொல்லலை..இன்னைக்கு இவங்க வீட்லே இருந்தபோது அதே மாதிரி பெல் அடிச்சு தொல்லை செய்தாங்க அதான் இவங்கிட்டே சொல்ல வேண்டியதாயிடுச்சு…இவங்களே கமெரா போட்டு தரேன் சொல்லியிருக்காங்க..அவங்க கடைலே போட்டு வைச்சிருக்காங்களாம்.” என்று மன்னிப்போடு விளக்கம் கொடுத்த கௌரி, இந்த விஷயம் ஆன் ட்டியிடம் போனால் அதன் பின் ஏற்படப் போகும் விளைவுகளை எப்படிச் சந்திப்பதென்று யோசிக்கலானாள்.
அப்போது, இனி இங்கே இருக்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்து,”உங்க ஃபோன் நம்பர் கொடுங்க..நான் கிளம்பறேன்..அவங்களோட பேசும் போது சிவசங்கர்னு சொல்லுங்க..புரிஞ்சுப்பாங்க” என்றான் சிவா.
“யாரோட பேசணும்?” என்று அவினாஷைக் கேட்டாள் கௌரி.
“உன் வீட்லே கமெரா போட, உன் கார் டயரை சரி செய்ய சிவா இரண்டு ரெஃபரன்ஸ் கொடுத்திருக்காரு..சிதார்த்த வீட்டுக்கு வந்தவுடனே நான் அவங்களோட பேசறேன்.” என்றான் அவினாஷ்.
சிவா முடித்துக் கொடுப்பதாக சொன்னது இப்போது அவினாஷ் பொறுப்பில் எப்படி வந்தது என்று கௌரிக்குப் புரியவில்லை. ஏற்கனவே கமெரா விஷயம் அவளுக்குத் தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  அவனுடன் மறைமுகத் தொடர்பில் இருப்பதுகூட அவளது வாழ்க்கையைத் தடம் புரள வைக்கும் என்று சரியாக யுகித்தவள்,  
“வீட்டு வாசல்லே கமெரா போட்டு தரேன்னு சொன்னாங்க..அதுக்கு என்கிட்டே ஆள் இல்லை அதனாலே சரின்னு ஒத்துக்கிட்டேன்..காரைச் சரி செய்ய நம்ம வீட்டு பக்கத்திலே இருக்கற மெக்கானிக்கு ஃபோன் செய்தா அவனே வந்திடுவான்.. அவனாலே வர முடியலைன்னா என் ஆபிஸ் பக்கத்திலே மெக்கானிக் இருக்கான்…நிறைய பேர் இருக்காங்க அண்ணா.” என்று கௌரி சொல்ல, 
அதைக் கேட்டவுடன் இனி இவ கால்லே விழுந்து கெஞ்சினாலும் உதவக்கூடாதென்ற முடிவிற்கு வந்து,
“வேணாங்க..என் ஆளுங்க வேணாம்..நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச ஆளுங்களை வைச்சு இரண்டு வேலையையும் முடிச்சுக்கோங்க.” என்று கோபத்துடன் மறுத்தான் சிவா.
அவனின் வன்மையான மறுப்பைக் கேட்டு, என்ன சொல்லிட்டேன்? எதுக்கு இவ்வளவு கோவம்? என்று கௌரி யோசிக்க, சிவாவிடம் அப்படிப் பேசியதற்குச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த அவினாஷ், அதைச் சரி செய்ய சரியான சந்தர்ப்பம் அதுயென்று உணர்ந்து,
“கௌரி, சிவா கடை வைச்சிருக்காரு..அவருக்கு நிறைய ஆளுங்களைத் தெரியும்..ஒரு நல்ல மெக்கானிக்கை அழைச்சிட்டு வந்து உன் டயரை மாற்றிக் கொடுக்கறேன்னு சொன்னாரு..நானும் சரின்னு சொல்லிட்டேன்..லெட்ஸ் நாட் வேஸ்ட் டயம் ஒவர் திஸ்.” என்று கௌரியை அதட்டியவன்,”சிவா..அவ சொன்னதை மறந்திடுங்க..நீங்க இரண்டு பேரோட காண்டாக்ட் நம்பரை எனக்கு அனுப்புங்க.” என்று சிவாவை சமாதானப்படுத்தினான்.
அதற்குப் பதில் சொல்லாமல்,“நான் கிளம்பறேன்.” என்ற சிவாவை நிறுத்தி அவனுடைய ஃபோன் நம்பரை ஷேர் செய்து கொண்டான் அவினாஷ்.
கௌரியிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் வேகமாக மின் தூக்கியை நோக்கிச் சென்றான் சிவா.  உடனே அவனைப் பின் தொடர நினைத்து, இரண்டடி வைத்த கௌரியிடம்,”அப்பா, அம்மாக்கு இன்னும் சிதார்த் பற்றி தகவல் சொல்லலை..நீ வந்த பிறகு தான் சொல்லணும்னு நினைச்சேன்..இப்போ நீயும் வீட்டுக்குக் கிளம்பிட்டேயா?” என்று கேட்டான்.
“இல்லை..ஒரு நிமிஷம் இருங்க..வரேன்..” என்று சொல்லி விட்டு ஓட்டமும் நடையுமாக மின் தூக்கியை நோக்கிச் சென்றாள் கௌரி.  ஆஸ்பத்திரி என்பதால் அவன் பெயர் சொல்லி உரக்க அழைக்க முடியவில்லை.  அவள் மின் தூக்கியின் அருகே செல்ல அதன் கதவு திறந்தது.  சிவாவின் அருகில் இரண்டு பேர் காத்திருக்க, மின் தூக்கியின் உள்ளே இரண்டு பேர் இருந்தனர்.  வேக வேகமாக அவனை அடைந்தவள், அவன் உள்ளே செல்லுமுன் அவனது இடது முழங்கையைப் பற்றினாள்.
உடனே சிவாவின் உணர்வுகள் கிளர்ந்து எழ, கௌரி உணர்ந்தேயிராத உணர்வுகள் உயிர்த்தெழ, அந்த முழங்கை தீண்டலில் இருவரின் மூலாதாரத்தில் முடங்கிக் கிடந்த குண்டலினி விழிப்பு நிலைக்கு வந்தது.
***********************************
சின்ன தீண்டல் ஏற்படுத்திய விளைவை குண்டலினி விழிப்புடன்  (kundalini awakening) ஒப்பிட்டிருப்பது ..usage of  creative license.

Advertisement