Advertisement

அத்தியாயம் – 5
“என்னையா என்ன டா வேணும்னு கேட்கறா? என்று நம்பமுடியாமல்,”என்ன சொன்ன?” என்று குழப்பமும் கோபமுமாகக் கேட்டான் சிவா.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”எதுக்கு பெல் அடிச்சீங்க?” என்று அர்த்தமில்லாமல் கேட்டாள் கௌரி. 
“என்ன இப்படி முட்டாள்தனா கேட்கறா? என்ன ஆச்சு இவளுக்கு?” என்று கௌரியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்,”வாசல்லே கமெரா இல்லை அப்போ பெல் அடிக்கலைன்னா நீயா வந்து எப்படிக் கதவைத் திறப்ப?” என்று பதில் கேள்வி கேட்டான்.
சிவாவின் கேள்வியில் அவள் பிரச்சனைக்கான தீர்வு இருப்பதை உணர்ந்த கௌரி அதுவரை இருந்த இறுக்கமான மன நிலையிலிருந்து விடுபட்டு இலகுவான நிலைக்கு வந்தாள். உடனே கதவைத் திறந்து,”உள்ளே வாங்க.” என்ற உபசரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.
வீட்டின் உள்ளே வந்து வாசல் கதவைச் சாத்தியவனின் பார்வையில் வரவேற்பறை சோபாவில் கிடந்த கைப்பையும், வாசல் கதவிற்கு பின்னால் விட்டெறியப்பட்டிருந்த செருப்பும் அப்போதுதான் அவள் ஆபிஸிலிருந்து வந்திருக்கிறாள் என்பதை உணர்த்தின. 
அவனை அங்கேயே நிற்க வைத்து,“என்ன விஷயம்? என்று விசாரித்தாள்.
இதுயென்ன கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நேற்று போலவே இன்றும்.  இப்போது வாசலில் ஒரு மாதிரி, வீட்டினுள் வந்த பின்னும் அதே மாதிரி என்று எண்ணியவன்,”உனக்கு தெரிஞ்சவன்னு தானே இப்போ கதவைத் திறந்து என்னை வீட்டுக்குள்ளே விட்டே?” என்று கேட்டு கௌரியைக் குழப்பினான் சிவா. ஆனால் அவள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள கௌரியிடம் நேரமுமில்லை, ஆர்வமுமில்லை.
“என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு வந்திருக்கீங்க?” என்று நேரே விஷயத்திற்கு வந்தாள். உடனே சிவாவும்,
“உனக்கு என்னைத் தெரியுமா இல்லை சுப்ரமணி ஸர் வந்துதான் அறிமுகப்படுத்தி வைக்கணுமான்னு உன்னை நேர்லே பார்த்துக் கேட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்று அவனும் நேரே விஷயத்திற்கு வந்தான்.
உடனே நேற்று மாலில் அவினாஷிற்கு அவனை அறிமுகப்படுத்தியதைப் பற்றித் தான் சொல்லுகிறான் என்று புரிந்து கொண்ட கௌரி அவன் சென்ற பின் அவர்களைப் பற்றிய அனைத்தும் அவினாஷிடம் பகிர்ந்து கொண்டதை வெளியிட விரும்பவில்லை.  அதனால் இரண்டு முறை அவளை வேணாடமென்று சொன்னவனை வேறு எப்படி அறிமுகப்படுத்தியிருக்க முடியுமென்று யோசித்தாள்.
இதுவரை அவள் வாழ்க்கையின் நிஜங்களுக்கு ஏற்றார் போல் அவள் கனவுகளைச் சிதலமடைய விடாமல்  சீரமைத்து, வேரோடு அறுத்து, புதியன விதைத்து, பயிர்ச் செய்து என்று அவள் கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் நடுவே விரோதத்தை வளர்க்காமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, ஸ்திரமான மனதோடு திருப்தியாக வாழந்து வருகிறாள்.  அதைச் சீர்குலைத்துக் கொள்ள அவள் தயாராக இல்லை.  அதனால் தெளிவற்ற திரிபு மனம் படைத்த திரிபுரமெரித்த ஐயனின் பெயரைக் கொண்டவனிடம்,  
”உங்களைச் சுப்ரமணி ஸர் மூலமா தான் எனக்குத் தெரியும்..அப்படித் தான் அறிமுகப்படுத்தி வைக்க முடியும்..வேற விஷயம் எதுவுமில்லைன்னு நீங்க கிளம்புங்க..நான் வெளியே…” என்று பேசிக் கொண்டிருக்கும் போது அவள் ஃபோன் அழைக்க, “ஒரு நிமிஷம்..வரேன்.” என்று சொல்லி அவள் கைப்பையிலிருந்து ஃபோனை எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குள் சென்றாள் கௌரி.  
சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் இடைவிடாமல் வாசல் அழைப்பு மணி ஒலிக்க, வாசல் கதவைத் திறப்பதா? வேண்டாமா? என்று யோசித்து கொண்டிருந்த சிவாவிற்கு படுக்கையறையில் இருந்தே,”கதவைத் திறக்காதீங்க.” என்று குரல் கொடுத்தாள் கௌரி.
“ஏன்?” என்று பதில் குரல் கொடுத்தான் சிவா.
“நான் வரேன்.” என்று சொல்லிவிட்டு ஃபோனில் பேச்சைத் தொடர்ந்தாள் கௌரி.
அந்தப் புறம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த அவினாஷ்,”வீட்டுக்கு யார் வந்திருக்காங்க? யாரோட பேசிக்கிட்டு இருக்கே?” என்று கேட்டான். சற்றும் யோசிக்காமல்,
“சிவா வந்திருக்காங்க.” என்றாள்.
“நேத்து பார்த்தோமே அவரா?”
“ஆமாம்.”
“குழந்தைகளோட வந்திருக்காரா?”
“இல்லை..தனியாத் தான்”
“எதுக்கு?” என்று கேட்ட அவினாஷின் மனத்தில் வேண்டாமென்று சொன்ன பின் கௌரியைச் சந்திக்க தனியாக அவள் வீட்டிற்கு வந்திருந்த சிவாவின் மேல் சந்தேகம் எழுந்தது.  அதை அவன் குரலிலிருந்து கண்டு கொண்ட கௌரி,
“இப்போதான் அவங்களுக்குக் கதவைத் திறந்தேன்..உடனே உங்களோட ஃபோன் வந்திடுச்சு.” என்றாள் உண்மை காரணத்தை வெளியிட விரும்பாத கௌரி.  
“சரி..நீ வரும்போது ஒரு தர்மாஸ்லே குட்டிக்கு வெந்நீர் எடுத்துக்கிட்டு வா..அவளும் கொஞ்சம் டல்லா தான் இருக்கா.”
“எடுத்திட்டு வரேன்..வேற ஏதாவது வேணுமா? ஆன்ட்டி கிட்டே சொல்லிட்டீங்களா?” என்று அவினாஷுடன் பேசிக் கொண்டே அவளுடைய வேலைகளைச் செய்தாள்.
“வேற எதுவும் வேணாம்…சித்தார்த்தை இன்னைக்கு இராத்திரி மட்டும் அப்ஸர்வ் செய்யவாங்கண்ணு நினைக்கறேன்..அதனாலே அம்மாகிட்டே இன்னும் சொல்லலை..டாக்டரோட கிளினிக்லேதான் லேட்டாகுதுண்ணு நினைச்சுக்கிட்டு இருக்காங்க.”
“கொஞ்ச நேரம் கழிச்சு அங்கிளுக்குத் தகவல் சொல்லிடுங்க.”
“நீ இங்கே வந்த பிறகு சொல்றேன்.”
“சரி.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் கௌரி. கிடுகிடுவென்று முகத்தைக் கழுவி, அவசரமாகத் தலை வாரி, வேறு உடைக்கு மாறி வெளியே வர, வாசலருகில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான் சிவா.
இதுயென்ன பனிஷ்மெண்ட் கிடைச்ச ஸ்கூல் பையனாட்டாம் அதே இடத்திலே நிற்கறாங்க? என்று தோன்ற, இன்று அவன் செய்கையும் அப்படித் தான் இருந்தது என்று மனது ஆமோதித்தது.  நேற்று அவினஷிற்குப் பதிலாக வேறு யாராவதாக இருந்திருந்தால் இவனை வேறு எப்படி அறிமுகப்படுத்தி வைத்திருக்க முடியும்?  திடமான முடிவு எடுக்க முடியாத இவனுடன் புதுமணம் பிரச்சனையைத் தான் ஏற்படுத்தும் என்று முடிவிற்கு வந்தவள், 
“எனக்கு இப்போ அவசரமா வெளியே போகணும்..நீங்க கிளம்புங்க.” என்று குப்பை போல் அவனை உடனே அப்புறப்படுத்தினாள் கௌரி.
அப்போது மீண்டு வீட்டின் அழைப்பு மணி விடாமல் ஒலிக்க ஆரம்பிக்க, வாசல் கதவைத் திறக்காமல் அதை மிகுந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கௌரியிடம்,
“என்ன நடக்குது?” என்று கேட்டான் சிவா.
“நான் வீட்டுக்கு வந்ததிலேர்ந்து இதேதான் நடக்குது..கதவைத் திறந்தா வெளியே யாருமில்லை.” என்றாள் கௌரி.
அவள் பதிலைக் கேட்டு துணுக்குற்றான் சிவா. அதுவரை அடித்துக் கொண்டிருந்த அழைப்பு மணி அமைதியானவுடன் கிட்சனுக்குச் சென்ற கௌரி ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு தர்மாஸைப் பையில் போட்டபடி வெளியே வந்தாள்.
“இந்த மாதிரி எத்தனை நாளா நடக்குது?” என்று விசாரித்தான் சிவா.
“கொஞ்ச நாள் முன்னாடி நடந்திச்சு..அப்புறம் நின்னுடிச்சு..இப்போ திடீர்னு திரும்ப ஆரம்பிச்சிருக்கு.” 
“பக்கத்து ஃபிளாட்லே யார் இருக்காங்க?” 
“லிஃப்ட் பக்கத்திலே இருக்கறவங்க தான் அம்மாக்குப் பழக்கம்…எனக்கு யாரையும் தெரியாது.” 
“சின்ன பசங்கதான் இந்த மாதிரி வேலை செய்வாங்க..பெல் அடிச்சிட்டு வீட்டுக்கு ஓடிப் போயிடுவாங்க..பக்கத்து ஃபிளாட்லே சின்ன பசங்க இருக்காங்களா?’ 
“சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க..லிஃப்ட்ல வருவாங்க..எந்த ஃபிளாட்னு தெரியாது.” 
“இந்தத் தளத்திலே நாலு ஃபிளாட்தான் இருக்கு..யார், எந்த வீடுன்னு தெரிஞ்சுக்க மாட்டியா?’ என்று அவள் மீது பாய்ந்தான் சிவா.
“எதுக்குத் தெரிஞ்சுக்கணும்?” என்று பதிலுக்குப் பாயந்தாள் கௌரி.  
“தெரியாவதங்க இருந்தா அவங்களாலே ஆபத்து வரலாம் தெரிஞ்சவங்க இருந்தா ஆபத்தான சமயத்திலே உதவி கேட்கலாம்.”  என்று அவன் கோபத்தை அடக்கி அமைதியாக விளக்கம் கொடுத்தான்.
அதில் அமைதியான கௌரியும் நேற்று அவினாஷ் சொன்னதை அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.
“யார், எந்த ஃபிளாட்டுன்னு முகத்தைப் பார்த்து அடையாளம் தெரியணும்னு அவினாஷ் அண்ணன் சொல்றாரு..எனக்கு ஆபிஸ், வீடுன்னு சரியா இருக்கு..யார்கிட்டேயும் இரண்டு வார்த்தைப் பேச டயமில்லை..அப்படி மற்றவங்களோட பேச சங்கதியும் இல்லை.”
“ஒருத்தங்கிட்டே பேச விருப்பம் மட்டும் இருந்தா போதும்.” என்று சிவா சொன்னவுடன்,”சங்கதியே இல்லாமல் அவள் வீட்டிற்கு வந்து இப்போது அவளுடன் பேசிக் கொண்டிருப்பது விருப்பத்தின் பேரிலா?” என்று கேட்க நினைத்த கௌரி உடனே இல்லை இது விசாரணை என்று அவளே  முடிவு செய்து,”நான் இப்போ ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிட்டிருக்கேன்…நீங்களும் வீட்டுக்குக் கிளம்புங்க.” என்று அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவள் வாசல் கதவைத் திறந்தவுடன் எப்போதும் போல் அந்த இடம் ஆள் ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தது.  அவளுடன் வெளியே வந்த சிவா, வாசல் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தவளிடம்,
“யாருக்கு உடம்பு சரியில்லை?” என்று விசாரிக்க,
“சிதார்த்துக்குதான்..நேத்து நைட்லேர்ந்து சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கான்..சாயந்திரம் டாக்டர்கிட்டே அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க.. அவர் உடனே அட்மிட் செய்ய சொல்லிட்டாரு..கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் செய்தது அண்ணன் தான்.”
“அத்தனை சின்ன குழந்தைங்களைக் கூட்டிக்கிட்டு எதுக்கு நேத்திக்கு மாலுக்கு வந்தாங்க? அங்கே ஏதாவது சாப்பிட்டானா?”
“அந்த மால்லே ஒரு வெளி நாட்டுப் பிராண்ட் கடை இருக்கு..அவங்களோட சாமான் தான் அனன்யாக்கு யூஸ் செய்யறாங்க..அவளுக்கு தேவையானதை இங்கேயே வாங்கிக்கலாம்னு அங்கேயிருந்து எதுவும் எடுத்திட்டு வரலை..அந்தச் சாமான் வாங்க தான் மாலுக்கு வந்தாங்க..சிதார்த் எதுவும் சாப்பிடலை..நாங்க மட்டும் தான் சாப்பிட்டோம்.” என்றாள் மின் தூக்கிக்காகக் காத்திருந்த கௌரி.
”இந்த ரைட் ஸைடிலே ஒரு கமெரா வை..மாடிப்படி, லிஃப்ட், வீட்டோட வாசல் எல்லாம் கவர் ஆயிடும்..என் கடைலே நான் போட்டு வைச்சிருக்கேன்..என் கடை உன் வீட்டு பாத்ரூம் போல இரண்டு பங்கு …பிராஜக்ட் சமயத்திலே இரண்டு மூணு பேர் வந்திடுவாங்க..எல்லாம் சாமானும் வெளியே தான் இருக்கு..ஒரு காட்ரிஜ் வெளியே போயிடுச்சுன்னாக் கூட எனக்கு நஷ்டம்..அதான் ஒரு ஸேஃப்டிக்கு கமெரா போட்டேன்.” என்றான் அவளுடன் காத்திருந்த சிவா.
“நீங்க கமெரா இல்லையான்னு கேட்டவுடனே எனக்கும் அதுதான் தோணிச்சு..அடுத்த மாசம் ஏற்பாடு செய்யறேன்.” என்றாள் அவள் ஃபோனில் மெஸெஜ் செய்தபடி லிஃப்டினுள் நுழைந்த கௌரி.
“அதுவரைக்கும் ஒரு டம்மி கமெராவை நான் மாட்டி வைக்கறேன்..கமெரா இருந்தாலே யாரும் வர மாட்டாங்க…டம்மியா, நிஜமான்னு தெரிய போகறதில்லை.” என்ற தீர்வு மூலம் கௌரிக்கு உதவிக் கரம் நீட்டினான் சிவா.
அவனுடைய உதவியை அவள் ஏற்றுக் கொள்ளுவாளா இல்லை மறுப்பாளா என்று சிவா காத்திருக்க,  அவள் ஃபோனில் பிஸியாக இருந்த கௌரியை அது சென்றடையவில்லை.
“அப்படியென்ன ஃபோன்லே பார்த்துக்கிட்டிருக்கா?” என்று யோசித்த சிவாவினால் அதை வாய்விட்டுக் கேட்க முடியவில்லை. 
இருவரும் லிஃப்டிலிருந்து வெளியே வந்தவுடன் சுற்று சுவரோரமாக மற்ற டூ வீலர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அவன் பைக்கை நோக்கிச் சென்றவன்,
“நான் கிளம்பறேன்..எப்போ நீ வீட்லே இருப்பேன்னு சொல்லு ஒரு கமெராவை வெளிலே மாட்டி வைக்கறேன்.” என்று அவள் சார்பாக அவனே முடிவெடுத்தான்.
அதைக் கேட்டு விழிகளில் ஆச்சர்யத்துடன் அவனை நோக்கியவள், எப்படியிருந்தாலும் அந்த வேலையைச் செய்து தான் ஆக வேண்டும், இவங்களே செய்து கொடுக்க விரும்பும் போது எதுக்கு மறுக்கணுமென்று,
“தாங்க்ஸ்.. உங்களுக்கு ஃபோன் செய்யறேன்.” என்று அவன் முடிவை ஏற்றுக் கொண்டு அவன் பைக் அருகிலிருந்த அவள் ஸ்கூட்டியைக் கிளப்பும் முயற்சியில் இறங்கினாள் கௌரி.
“இராத்திரிலே எதுக்கு ஸ்கூட்டிலே ஆஸ்பத்திரிக்குப் போற? அங்கே எவ்வளவு நேரம் இருப்ப? லேட்டாயிடுச்சுன்னா எப்படித் திரும்பி வருவ? உன் கார் என்ன ஆச்சு?” என்று கேள்விகளை அடுக்கினான் சிவா.
“அவினாஷ் அண்ணனும் ஸ்கூட்டி வேணாம்..டாக்ஸில வான்னு மெஸெஜ் அனுப்பறாரு.. இராத்திரிலே டாக்ஸியையும் நம்பமுடியாது..அதான் என் ஸ்கூட்டிலேயே வரேன்னு பதில் அனுப்பிக்கிட்டிருந்தேன்.” என்று அவள் லிஃப்டில் ஃபோனோடு பிஸியாக இருந்த காரணத்தை தெரிவித்து அவள் காருக்கு என்ன ஆனது என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்தாள். ஆனால் சிவா விடுவதாக இல்லை.
“காருக்கு என்ன ஆச்சு?” என்று மறுபடியும் கேட்டவன் அவளிடமிருந்து பதில் வராததால் அந்த இருட்டில் அவள் காரைக் கண்களால் தேட ஆரம்பித்தான்.
அவன் தேடுவதைக் கண்டு கொண்ட கௌரி, இந்த முறை பதில் சொல்லாமல் தவிர்க்க முடியாதுயென்று உணர்ந்து, சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த காரைக் காட்டி,”டயரைக் கிழிச்சு விட்டிட்டாங்க.” என்றாள்.
உடனே அவன் பைக்கிலிருந்து இறங்கியவன், யாரோட வேலை? என்று கேட்டான்.
“தெரியலை..இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு கம்ப்ளெண்ட் கொடுக்கலாம்னு அவினாஷ் அண்ணன் சொன்னாரு..அதுக்கு அஸோசேஷன் ஆளுங்க ஒதுக்க மாட்டாங்க..அதனாலே சுப்ரமணி ஸர் டூர்லேர்ந்து வர வரைக்கும் காத்திருக்கப் போறோம்.”   
கௌரியின் விளக்கதின் முடிவில் அவள் காரருகே சென்று, குனிந்து, அவன் ஃபோன் வெளிச்சத்தில் நான்கு டயர்களையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் சிவா. கௌரியும் ஸ்கூட்டியைக் கிளப்பும் முயற்சியைக் கைவிட்டு விட்டு அவனிருக்குமிடம் வந்தாள்.
“வலது ஃபிரெண்ட் டயரை நல்லா கிழிச்சு இருக்காங்க..பின்பக்கம் கிழிக்க முடியலை..சின்னதா சில இடத்திலே வெட்டிட்டு விட்டுட்டாங்க..இடதுப்புறம் இரண்டு டயரும் நல்லாதான் இருக்கு…. நீ இரண்டு டயரையும் மாத்தியாகணும்.” என்றான் சிவா.
“தெரியும்..மெக்கானிக் வந்து இங்கேயே மாத்திட்டு வீல் அலைன்மெண்ட்டுக்கு எடுத்திட்டு போவாரு.”
“இந்த மாதிரி எத்தனை கார் டயரை கிழிச்சிருக்காங்க?” என்று கேட்டான் சிவா.
“என்னோடது மட்டும்தான்..கொஞ்ச நாள் முன்னாடி ஸ்கூட்டியோட ஸீட் கவரைக் கிழிச்சாங்க..இப்போ கார் டயர்.” என்றாள் கௌரி. உடனே சிவாவின் மனத்தில் இடைவிடாமல் ஒலித்த அழைப்பு மணி அபாய மணியாக மாறி ஒலித்தது.
அப்போது அவன் ஃபோன் ஒலிக்க, அதை ஏற்று, ”சொல்லுங்க சாவித்திரி மா.” என்றான். அந்தப் புறம் பேசியதைக் கேட்டு கொண்டிருந்தவன்,”கொஞ்சம் லேட்டாகும்..ஓர் இடத்துக்குப் போயிட்டு வீட்டுக்கு வரணும்..நீங்களும் குழந்தைகளோட சாப்டிடுங்க.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவன் பேசியதைக் கேட்டு,“இதுக்கு மேலே என்ன வெளி வேலை உங்களுக்கு? குழந்தைங்க வீட்லே தனியா எத்தனை நேரம் இருப்பாங்க? அந்த இன்னொரு இடத்துக்கு நாளைக்குப் போய்க்கோங்க.” என்று கௌரி சங்கராக கட்டளயிட்டாள் கௌரி லக்ஷ்மி .
“அந்த இன்னொரு இடம் ஆஸ்பத்திரி..நீ முன்னாடி போ நான் உன் பின்னாடியே வரேன்.” என்று கௌரி சங்கராக கட்டளையிட்டான் சிவசங்கர். 
அந்த நொடி கௌரி லக்ஷ்மி, சிவசங்கர் இருவரும் கௌரி சங்கராக சிந்தித்துச் செயல்பட்டனர்.

Advertisement