Advertisement

அத்தியாயம் – 4
“அப்பா, அப்பா” என்று  விடாமல் சிவாவை அழைத்துக் கொண்டிருந்தாள் தீபா.  அவள் அழைத்தது சிவாவிற்குக் கேட்காததினால், குழந்தைகள் விளையாடுமிடத்தில் அவளோட விளையாடிக் கொண்டிருந்த சூர்யாவை தனியே விட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்த சிவாவின் அருகே வந்தவளை, “எதுக்கு இப்போ வெளியே வந்த..பாத் ரூம் போகணுமா?” என்று கேட்டான் சிவா.
அதற்குள் தீபாவைப் பின் தொடர்ந்து வந்த சூர்யாவிடம், “நீயும் எதுக்கு வர? இன்னும்  டயமிருக்கு..விளையாடுங்க..அப்புறம் சாப்டிட்டு வீட்டுக்குக் கிளம்பணும்.” 
கிட்டதட்ட இரண்டு மாதத்திற்கு முன்பு கௌரியை சந்தித்த அதே மாலிற்குக் குழந்தைகளுடன் வந்திருந்தான் சிவா.  இந்த முறை அவனுக்கு அங்கே வர பிடிக்கவில்லை ஆனால் குழந்தைகள் இருவரும் விரும்பியதால் அவர்களை அழைத்து வந்திருந்தான். அங்கே விளையாடியப் பின் வீடு போய்ச் சேரும் முன் இருவரும் சோர்ந்து போய்த் தூங்கி விடுவார்களென்று தெரிந்தும் அவர்கள் விரும்பியபடி ஒரு மணி நேரத்திற்குப் பணம் கட்டியிருந்தான்.
“இல்லை பா..அங்கே பாருங்க..ஆன்ட்டி.” என்றாள் தீபா.  தீபா சுட்டிக் காட்டிய இடத்தில் கௌரி அமர்ந்திருந்தாள்.  எப்போதும் போல் ஒரு குர்த்தி, ஜீன்ஸில் இருந்தவளைச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டிருந்தாள் தீபா.  கௌரிக்கு அருகில் அவளைப் போல் உடையணிந்திருந்த இளம் பெண்ணும், அந்த இளம் பெண்ணருகே டீ ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்திருந்த இளைஞன் ஒருவன், அவன் கைகளில் சில மாதங்களேயான கைக்குழந்தை. அந்த இளம் பெண்ணின் மடியில் ஒரு சிறுவன்.  பெரியவர்கள் மூவரும் ஏதோ பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். யார் முகத்திலும் சிரிப்பு இல்லை.
கௌரி ஏதோ யோசனையில் இருப்பது போல் தோன்றியது சிவாவிற்கு.  அவளைப் பற்றி அந்த அளவிற்குத் தெரியுமா என்று கேள்வி கேட்ட அவன் மனதை அடக்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. 
“ஆன்ட்டியைப் போய்ப் பார்க்கலாமா பா?” என்று தீபா கேட்க, அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த சிவாவைத் தாண்டி, “ஆன்ட்டி” என்று கத்தியபடி கௌரி இருக்குமிடம் சென்றாள் சூர்யா.
“ஆன்ட்டி” என்ற குரலில் சலனமடைந்த கௌரி, அவளெதிரே அவளை நோக்கி ஓடி வந்த சூர்யாவை அப்படியே தூக்கி மடியில் உட்கார வைத்துக் கொண்டாள். அவள் மடியில் உட்கார்ந்தவளிடம்,
“நீ எப்படி இங்கே?” என்று கேட்டவள் பார்வையை சூழலவிட, சற்று தூரத்தில் சிவாவும் தீபாவும் வந்து கொண்டிருந்தார்கள்.
“அப்பா.” என்று சிவாவைக் கை காட்டினாள் சூர்யா.  சூர்யா கை காட்டியவுடன் கௌரியைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான் சிவா. கௌரியிடம் பதிலிற்குப் புன்னகை இல்லை. அவளருகே அவன் வந்தவுடன்.
“அண்ணா, இவங்க சிவசங்கர்..சுப்ரமணி ஸருக்குத் தெரிஞ்சவங்க..இவங்க அவினாஷ் அண்ணா.” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள் கௌரி.
அந்த அறிமுகத்தைக் கேட்டவுடன் சிவாவின்  மனத்திற்குள் சில நேரங்களில் மிதந்து கொண்டிருந்த புதுக் கனவு என்னும் பலூன் பட்டென்று உடைந்து போனது. 
‘அண்ணனா? உறவுகள் இல்லாத இவளுக்கு இவன் எங்கேயிருந்து வந்தான்? என்று அவினாஷை சிவா எடை போட, அதே போல் யார் இவன்? என்று சிவாவை எடை போட்டுக் கொண்டிருந்தான் அவினாஷ்.
“ஹலோ.” என்று சிவாவின் கையை குலுக்கிய அவினாஷ் அவனருகில் அமர்ந்திருந்த அவன் குடும்பத்தை சிவாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.  “இவங்க என் வைஃப் நித்யா, என் பையன் சிதார்த், இது என்னோட சின்ன குட்டி அனன்யா.” என்று அவன் கைக்குழந்தையைப் பெருமையுடன் காட்டினான்.  அவினாஷ் செய்ததைப் போல் அவனுடைய இரண்டு பெண்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சிவா.
”இவ என் பெரிய பொண்ணு தீபா, கௌரி மடிலே இருக்கறது சின்னவ, சூர்யா.” என்ற சிவா, குழந்தைகள் இருவரிடமும், “ஆன்ட்டி, அங்கிள், தம்பிக்கு ஹலோ சொல்லுங்க” என்றான்.
அவனருகே இருந்த தீபா உடனே நித்யாவிற்கும், அவினாஷிற்கும் “ஹலோ” சொல்லி, நித்யா மடியில் உடகார்ந்திருந்த சிதார்த்திடம் சென்று அவன் கையைக் குலுக்கினாள்.  ஆனால் சிதார்த் யோசனையுடன் அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். அதைப் பொருட்படுத்தாமல் அவினாஷ் தூக்கி வைத்திருந்த அனன்யாவின் கன்னத்தைத் தடவி அவளுடன் விளையாட ஆரம்பித்தாள் தீபா. சிவா சொன்னதைச் சட்டை செய்யாமல் சட்டமாக கௌரியின் மடியில் உட்கார்ந்திருந்தாள் சூர்யா.
“அவன் தூக்கத்திலே இருக்கான்..நேத்துதான் ஊருக்கு வந்தோம்..ஜெட் லேக்..நார்மலாக இரண்டு நாள் ஆகும்..அப்புறம் அவன் விளையாட ஆரம்பிச்சான் நிறுத்த மாட்டான்.” என்று சிதார்த் ஏன் புத்தனாக இருக்கிறான் என்ற காரணத்தை தெரிவித்தாள் நித்யா.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அனன்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாவிடமும், கௌரியின் மடியில் அமர்ந்திருந்த சூர்யாவிடமும்,” ஆன்ட்டி சாப்பிடட்டும்…கிளம்புங்க..விளையாட்டு பாக்கி இருக்கு” என்றான் சிவா.
“கொஞ்ச நேரம் குழந்தையோட விளையாடட்டும்.” என்ற சொன்ன அவினாஷ் அந்தக் கொஞ்ச நேரத்தில்  சிவாவை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.  அன்று போல் இன்றும் சிவா அவன் உடை விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.  அன்று கசங்கிய ஷர்ட் இன்று காட்டன் டீ ஷர்ட், பாண்ட். அவனை அளவிட்ட அவினாஷிற்கு அவன் தப்பானவனாகத் தெரியவில்லை அதே சமயம் அவனோடு சகஜமாகப் பேசவும் முடியவில்லை.  ஆனாலும் சுப்ரமணி ஸருக்குத் தெரிந்தவன் என்பதால் அவன் ஆராய்ச்சியின் முடிவில் ஒரு மரியாதைக்காக சிவாவையும், குழந்தைகளையும் அவர்களுடன் சாப்பிட அழைத்தான்.  
“நீங்களும் எங்களோட ஜாயின் செய்துகலாம்..எங்கே உங்க மனைவி?” என்று சாதாரணமாக எல்லாரும் கேட்கும் கேள்வியைக் கேட்டான் அவினாஷ்.
அவினாஷிற்கு நேரடியாக பதில் அளிக்காமல்,”வேணாங்க.. விளையாடி முடிச்சிட்டுதான் குழந்தைங்க சாப்பிடுவாங்க..சில சமயம் நான் பேக் செய்து எடுத்துக்கிட்டு போயிடுவேன்.” என்றான் சிவா.
“ஒகே..நைஸ் மீட்டிங் யு..சுப்ரமணி ஸர் ஊர்லேர்ந்து வந்தவுடனே நான் வந்து பார்க்கறேண்ணு சொல்லுங்க.” என்று சிவாவை வற்புறுத்தாமல் அவர்களுக்கு விடை கொடுத்தான் அவினாஷ்.
அவர்கள் பேச்சில் தலையிடாமல் அமைதியாக இருந்த கௌரியின் மடியில் அமர்ந்திருந்த சூர்யாவிற்கு மறுக்க வாய்ப்பளிக்காமல் அவளைத் தூக்கிக் கொண்டு,”தீபா வா” என்றவன், வரேங்க.” என்று அவினாஷிடம் மட்டும் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான். ஆனால் தீபாவோ உடனே சிவாவின் பேச்சைக் கேட்காமல் கௌரியின் அருகே வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் காதில் ரகசியம் பேசினாள். தீபா பேசியதைக் கேட்ட கௌரி, தீபாவின் கன்னத்தைத் தட்டி,”குட் கேர்ல்.” என்று பாராட்டினாள்.
அது எதையும் கண்டு கொள்ளாமல்,”தீபா.” என்று தீபாவை கௌரியுடம் மேலே பேச விடாமல் அவன் குழந்தைகளை அழைத்து சென்ற சிவாவின் பின்புறத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த கௌரியிடம்,
“யார் டா அவங்க? குழந்தைங்க உன்கிட்டே பிரியமா இருக்காங்க..நம்ம காம்ப்லெக்ஸ்ஸா.” என்று விசாரித்தான் அவினாஷ்.
“இல்லை அண்ணா.” என்றாள்.
“சுப்ரமணி ஸருக்குத் தெரிஞ்சவர்..அவர் ஊர்லே இல்லை அதனாலே இவர்கிட்டே நம்ம பிரச்சனைக்கு உதவி கேட்கலாம்னு நான் நினைச்சேன்.”
“புதுப் பிரச்சனை இல்லை அண்ணா..சின்ன வயசுலே சந்திச்சது தான்..அப்போ அம்மாக்கு..இப்போ எனக்கு….படிப்பு, பணம் எதுவும் இதையெல்லாம் மாற்றாது..இந்த மாதிரி தொந்தரவு கொடுக்கறவங்க எல்லா இடத்திலேயும் இருக்காங்க……நான் பார்துக்கறேன்..நீங்க கவலைப்படாதீங்க..” என்றாள் கௌரி.
“அத்தை, மாமா, இரண்டு பேரும் உன்னைப் பற்றி ரொம்ப கவலைப்படறாங்க கௌரி..பேசாம உன் ஃபிளாட்டை வாடகைக்கு விட்டிட்டு பழையபடி அத்தை வீட்டோட வந்திடு.” என்றாள் நித்யா.
“அது முடியாது அண்ணி..ஆபிஸ் அங்கேயிருந்து ரொம்ப தூரம்..அப்புறம் இதைக் காரணமா வைச்சு அவங்க வீட்டை விட்டு எங்கேயும் நகர மாட்டாங்க…எனக்குத் துணையா இருந்திடுவாங்க.”
“நாளைக்கு நான் நம்ம காரைக் கொண்டு வந்து விடறேன்..அதை யூஸ் செய்துக்க..அப்படியே நாம இரண்டு பேரும் போய் போலீஸ் ஸ்டேஷன்லே ஒரு கம்ப்ளேண்ட் எழுதிக் கொடுத்திடலாம்.” என்றான் அவினாஷ்.
“நம்ம வீட்டு கார் வேணாம்..உங்களுக்குத் தேவைப்படும்..நான் ஸ்கூட்டி யூஸ் செய்துக்கறேன்..போனமுறை இந்த மாதிரி ஸ்கூட்டி ஸீட்டைக் கிழிச்சப் போது நானும் அதைத் தான் சொன்னேன்.. ஆனா அஸோசேஷன் ஆளுங்கெல்லாம் “வேணாம்..அப்பார்ட்மெண்ட் பெயர் கெட்டுப் போயிடும்..நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னங்க..அதுக்கு அப்புறம் பிராப்ளம் இல்லை..இன்னைக்குத் தான்.” என்றாள் கௌரி.
“இராஸ்கல்ஸ்…அப்பார்ட்மெண்ட் பெயர் முக்கியமா இல்லை உன் பாதுக்காப்பு முக்கியமா?..சும்மாவிடக் கூடாது அவங்களை..இந்த மாசம் மெயிண்டனென்ஸ் கட்டாத..அஸோசேஷன் என்ன செய்யுதுன்னு பார்க்கலாம்..பாதுகாப்பு தான் முக்கியம்..அதுவும் தனியா இருக்கற உனக்கு ரொம்ப முக்கியம்.” என்றான் அவினாஷ்.
“சுப்ரமணி ஸர் பார்த்துப்பாங்க..டூர்லேர்ந்து வந்தவுடனே நான் நேர்லே போய் மீட் செய்யறேன்..இப்போ ஃபோன்லே சொன்னா அவரும் வீணா கவலைப்படுவாரு.” என்றாள் கௌரி.
“அவர் பாதி நாள் டூர்லேதான் இருக்காரு.. அவர் என்னத்தைப் பார்த்துபாரு? 
“இப்போதான் கொஞ்ச நாளா ஸர் டூர் போக ஆரம்பிச்சிருக்காங்க..அம்மா போன பிறகு எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க அண்ணா.”
“உன் பிளாக்லே யாராவது இந்த மாதிரி காரியம் செய்ய முடியுமா?” 
“என் ஃப்ளோர்லே யார் இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது..பிளாக்லே யாரு இருக்காங்க அவங்க இதைச் செய்ய முடியுமாண்ணு எனக்கு எப்படித் தெரியும்?” 
“உனக்குத் தெரிஞ்சிருக்கணும்..நீ தெரிஞ்சு வைச்சுக்கணும்..தினமும் யாரோடேயும் பேச வேணாம் ஆனா முகத்தைப் பார்த்து எந்த ஃபிளாட்டுன்னு தெரியணும்..கல்யாணி மா வம்பு பேச மாட்டாங்க அதே சமயம் எல்லார்கிட்டேயும் மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு போக மாட்டாங்க ..நீயும்தான்..இப்போ என்ன ஆயிடுச்சு உனக்கு? ஓர் ஆளோட கூட உன் பிளாக்லே உனக்குச் சினேகிதம் கிடையாதா?” என்று கோபப்பட்டான் அவினாஷ். 
அவினாஷின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள் கௌரி.
அவர்கள் பேச்சை மாற்ற விரும்பிய நித்யா,”அந்த தீபா உன் காதிலே இரகசியம் சொல்ற அளவுக்கு நீங்க இரண்டு பேரும் பிரண்ட்ஸா? எப்போலேர்ந்து? எப்படி மீட் செய்தீங்க?” என்று கேட்டாள்.
சில நிமிடங்கள் என்ன பதில் சொல்வதென்று யோசித்த கௌரி, முடிந்து போன விஷயத்தை மூடி மறைக்க விரும்பாமல் உண்மையைச் சொன்னாள்.
“சிவா மனைவியை இழந்தவங்க அண்ணி..நான் அம்மாவை மிஸ் செய்யறது போல அந்த குழந்தைங்களும் அவங்க அம்மா இல்லாமக் கஷ்டப்பறாங்க..என் கல்யாணப் பேச்சை எடுத்த சுப்ரமணி ஸர்கிட்ட தாயை இழந்த குழந்தைகளுக்குத் தாயா இருக்க விரும்பறேன்னு சொன்னேன்..அப்போ தான் அவர் சிவசங்கரைப் பற்றி சொன்னாரு..
முதல்முறை இந்த மால்லேதான் சந்திச்சுக்கிட்டோம்..நான் அவங்களை மீட் செய்யறத்துக்கு முன்னாடி அந்தக் குழந்தைகளை வாஷ் ரூம்ல மீட் செய்தேன்..சின்னவளுக்கு வயித்து வலி..அவ பாத் ரூம் போக பெரியவ உதவி செய்தா..அப்போவே இரண்டு குழந்தைகளையும் எனக்குப் பிடிச்சிருச்சு..ஆனா சிவா என்னை வேணாம்னு சொல்லிட்டாரு..நான் இன்னும் கொஞ்சம் காத்திருந்த நல்ல துணை கிடைக்கும்னு சொன்னாரு..
அன்னைக்கு அவங்களுக்கு வீட்டுக்குப் போக ஆட்டோ கிடைக்கலை அதனாலே நான் தான் அவங்களை அவங்க வீட்டுப் பக்கத்திலே டிராப் செய்தேன்..அப்போ சிவாவோட பேச வாய்ப்பு கிடைச்சுது.. சில விஷயங்கள்லே சிவாவோட கண்ணோட்டம் என்னோட ஒத்துப் போச்சு.. அதனாலே சுப்ரமணி ஸர்கிட்டே எனக்கு சிவாவைக் கல்யாணம் செய்துக்க விருப்பம்னு சொன்னேன்..அதை சிவாகிட்டே அவர் சொல்லியிருக்காரு..அவங்க விருப்பமில்லைன்னு சொன்ன பிறகும் நான் விருப்பம்னு சொன்னது ஏன்னு அவங்களுக்குப் தெரியலை..
நான் தப்பான முடிவு எடுத்திருக்கேண்ணு எனக்குத் தெரியப்படுத்த என் வீட்டுக்கு தீபா, சூர்யாவோட வந்தாரு..எனக்கும் அவங்களுக்கும் படிப்புலே, அந்தஸ்திலே வித்தியாசம் இருக்கு அதனாலே எங்களுக்கு முதல் கல்யாணமா இருந்தாலும் ஒத்துவராதுன்னு சொல்லிட்டாங்க..என்னோட படிப்பும் அந்தஸ்தும் எப்படி வந்ததுன்னு என்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கலை..அதனாலே இப்போவரை அவங்களுக்கு என் பின்னணி தெரியாது..இவ்வளவு நாள் அம்மா இருந்திருக்காங்க..இப்போ இல்லை..மற்ற உறவுகளும் இல்லைன்னு இந்த விவரம் மட்டும் தான் தெரியும்..
அன்னைக்கு வீட்லே குழந்தைங்க இரண்டு பேரும் என்கூட நிறைய பேசினாங்க..அப்போ தான் தீபாகிட்டே ‘வீட்டை விட்டு கிளம்பறத்துக்கு முன்னாடி சூர்யாவை ஞாபகமா பாத்ரூம் அழைச்சுக்கிட்டு போகணும்..அப்படிப் பழக்கப்படுத்தினா வெளி இடத்திலே பாத் ரூம் யூஸ் செய்ய அவசியம் வராதுன்னு சொன்னேன்..அதுக்குதான் இன்னைக்கு எனக்குத் தாங்க்ஸ் சொன்னா.” என்றாள் கௌரி.
சிவாவைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் பொய்ச் சொல்லிச் சமாளிக்காமல் உண்மையைச் சொன்ன கௌரி மேல் கர்வம், கோவம் அடைந்த அவினாஷ் அதே சமயத்தில்,’இந்தக் காலத்திலே இப்படியொரு நல்லவனா? என்று சிவாவைப் பற்றி எண்ணியவன்,
உனக்கு என்ன ஆச்சு கௌரி? மை காட்… இரண்டு பெண் குழந்தை இருக்கற விடோவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டிருக்க.. அதைப் பற்றி ஒரு வார்த்தை எங்க யார்கிட்டேயும் மூச்சு விடலை..
அம்மாக்குத் தெரிஞ்சா அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும்..பைத்தியமா நீ? யு ஆர் ஜஸ்ட் தர்ட்டி டூ (you are just thirty two)…நல்லவேளை சிவா நல்லவர் நீ தப்பிச்ச..இதே இன்னொருத்தனா இருந்தா உன்னைக் கல்யாணம் செய்துகிட்டு, உன் தலைலே இரண்டு குழந்தைகளையும் கட்டிட்டு, உன் வீட்லே, உன் சம்பளத்திலே சந்தோஷமா இருந்திருப்பான்..
போதும் நீ தனியா இருந்தது…. யு ஆர் நாட் ஸ்டேயிங் அலோன் (you are not staying alone).. அம்மா, அப்பாகிட்டே நான் பேசறேன்..யு ஆர் மூவிங் இன் வித் தெம் (you are moving in with them)..இல்லை நான் மாலினி அக்காகிட்டே பேசறேன்..நீ பூனாக்கு ஷிஃப்ட் ஆயிடு..ஹவ் டேர் யு சே யாருமில்லைன்னு? எப்படி அப்படிச் சொல்லுவ?.. என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல்,
ஐ க்நோ வொய் (i know why).. யு ஆர் டிப்ரெஸ்ட் (you are depressed)..அப்போ நாங்கெல்லாம் உனக்கு யாரு?..இந்த மாதிரி ஸ்டுப்பிடா நீ ஏதாவது செய்ய நினைச்ச மூணு வருஷம் கழிச்சு வர வேண்டிய நான் ஒப்பந்தத்தை எல்லாம் தூக்கிப் போட்டிட்டு இப்போவே மொத்தமா இங்கேயே வந்திடுவேன்..உன்னை என்னோட வைச்சுப்பேன்..சுப்ரமணி ஸர் என் கைலே கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவருக்கு.” என்று கௌரியிடம் கத்தி தீர்த்தான் அவினாஷ்.
யாரை நல்லவன் என்று அவினாஷ் ஸர்டிஃபிகெட் கொடுத்தானோ அந்த நல்லவன் அவன் மனதிற்குள் கௌரியைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.  அவன் சுப்ரமணியன் ஸருக்குக் பரிச்சயம் என்று கௌரி சொன்னதைச் சிவாவினால் ஒதுக்கி வைக்க முடியவில்லை.  அவளுக்குத் தெரிந்தவன் என்று சொல்லுவதில் அவளுக்கென்ன அவமானம் என்று அபாண்டமாக நினைத்தான் சிவா. 
கலைந்த போன கனவுகளின் விளைவுகள் இரண்டு வகை, நேர்மறை, எதிர்மறை. சில நேரங்களில் வேகம் விவேகமாகும், ஆக்ரோஷம் அமைதியாகும், அவசரம் நிதானமாக மாறும். சில நேரங்களில் பொறுமை பொறாமையாக புது அவதாரம் எடுக்கும், நாணயம் நாணயமற்றதாகும், உழைப்பின் இடத்தை ஊழல் பறித்துக் கொள்ளும். மனித வாழ்க்கையில் கணிக்க முடியாத மாற்றங்களைக் ஏற்படுத்த கடவுளும் ஒரே ஒரு உடைந்த கனவும் போதும். 
சிவாவின் உடைந்து போன கனவு அவனைத் தலைவனிலிருந்து காளையாக மாற்றியிருந்தது.  விவேகத்தை கைவிட்டு வேகத்தைப் பற்றியிருந்த விடலைப் பருவச் சிவா கௌரியின் வாசலில் தொடர்ந்து அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தான்.
ஆபிஸிலிருந்து திரும்பியதிலிருந்து சில நிமிட இடைவெளியில் வாசல் அழைப்பு மணி விடாமல் ஒலிக்க, இருமுறை கதவைத் திறந்த கௌரி, வாசலில் யாருமில்லை என்றவுடன் அடுத்த முறை அழைப்பு மணி ஒலித்தப் போது கதவைத் திறக்காமல் எரிச்சலுடன் வாசல் கதவைப் பார்த்தபடி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். 
வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி அவளுக்குத் தொல்லைக் கொடுக்கும் அந்த ஆள் மீது கட்டுக்கடாங்காத கோபத்திலிருந்தாள். அடுத்தமுறை பெல் அடிக்கட்டும் என்று அவள் சூளுரைக்கும் போதே மறுபடியும் அழைப்பு மணி ஒலிக்க ஆரம்பிக்க, சோபாவிலிருந்து பாய்ந்து சென்று வேகத்துடன் கதவைத் திறந்து,
“என்ன டா வேணும் உனக்கு?” என்று கத்தினாள்.  
கிரில் கதவிற்கு வெளியே சிவா நின்று கொண்டிருந்தான்.
வீட்டினுள் கோபத்துடன் நின்றிருந்த கௌரியைப் பார்த்துக் கோபத்தோடு அவளைப் பார்க்க வந்திருந்த சிவா குழம்பிப் போனான்.

Advertisement