Advertisement

அத்தியாயம் – 3_2
காயத்ரி என்னைப் போல குடும்பப் பின்னணிலேர்ந்து வந்ததுனாலே என்னோட அப்படியே செட்டாகிட்டா..என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நாங்க சில சமயம் வாழ்க்கையை நடத்தினோம் சில சமயம் மாற்றிக்கிட்டோம்.. காசை எப்படிக் காப்பாத்தனும், எப்படிச் செலவழிக்கணும்னு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலே..
இப்போ அவ இல்லைன்னாலும் அது எதுவும் மாறலை.. என்னோட இரண்டு குழந்தைகளை நல்லபடியா வளர்த்து, நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.  கொஞ்ச நாளா அந்தப் பொறுப்பை சரியாச் செய்யணும்னா முதலேர்ந்து எல்லாத்தையும் சரியா செய்யணும்னு தோணுது.  இரண்டு பெண் பிள்ளைங்களைச் சரியா வளர்க்க முடியலைன்னா எங்கேயிருந்து அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்?   
நான் கல்யாணம் செய்துகிட்ட போது பத்து வருஷம் கழிச்சு என் வாழ்க்கை இப்படி மாறிப் போகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை..யாரும் அந்த நேரத்திலே அந்த மாதிரி யோசனை செய்ய மாட்டாங்க..ஏன்னா அது முதல் கல்யாணம்..ஆசை, கனவு தான் அதுக்கு அஸ்திவாரம்..இந்த முறை என்னோட தேவைகளும் எந்த விபரீதமும் நடக்கக்கூடாதுங்கற வேண்டுதலும் தான் அடிப்படை…  இரண்டு பேருக்கும் இரண்டாவது கல்யாணமா இருந்தா ஒரே போலே எண்ணங்களும், தேவைகளும், ஏக்கமும் இருக்கும் அதனாலே தப்பாப் போக வாய்ப்பில்லை…அதனாலே தான் மறுமணம் செய்துக்கலாம்னு முடிவு செய்தேன்..
நீங்க ஏன் சுப்ரமணி ஸர்கிட்டே என்னைக் கல்யாணம் செய்துக்க ஒகேன்னு சொன்னீங்க..எனக்கு உங்களைப் பார்த்தவுடனேயே இது சரி வராதுன்னு தெரிஞ்சிடுச்சு..இப்போ உங்க வீட்டைப் பார்த்தவுடனேயே நம்ம இரண்டு பேர் வாழ்க்கை முறையும் வேறன்னு வேறென்னு தெரிஞ்சுடிச்சு..
இன்னைக்கு நீங்க புடவை கட்டிகிட்டு இருக்கீங்க அன்னைக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தீங்க..இரண்டு குழந்தைகளோட அம்மாவா உங்களாலே உடைலே கூட மாற முடியாது..உள்ளத்திலே எப்படி மாற முடியும்?
உங்களோட எதுவும் சரியாப் இருக்கும்னு எனக்குத் தோணலை…வேலைக்குப் போகற உங்களாலே எப்படி என் இரண்டு குழந்தைகளைப் பார்த்துக்க முடியும்? உங்களோட ஓய்வு நாள்களை  எப்படி என் குழந்தைகளுக்கும் என் குடும்பத்துக்கும் ஒதுக்க முடியும்? உறவுகளே இல்லாத உங்களாலே எப்படி என் உறவுகளோட  ஒத்துப் போக முடியும்?… நம்ம இரண்டு பேருக்கும் இது முதல் கல்யாணமா இருந்திருந்தாலும் நம்மகுள்ளே ஒத்து வந்திருக்காதுங்க.” என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தவன் அவள் கடந்து வந்த நிஜங்களை அறிந்து கொள்ள முயன்றிருந்தால் அவனுடனான புதுமணத்திற்கானக் காரணம் கொஞ்சமாவது புரிந்திருக்கும். இதுவரை அவனோடு ஒத்துப் போன அவன் உறவுகள் அவனுடைய மறுமணத்திற்கு ஒத்துக் கொள்ள போவதில்லை அதனால் அவர்கள் உறவில் விரிசல் ஏற்படப் போவதையும் அவன் அறிந்திருக்கவில்லை. 
இதற்குத் தான் இன்றைக்கு அவளை அவள் வீட்டில் சந்திக்க வேண்டுமென்று விரும்பினானா? இதைக் கேட்கத்தான் இரண்டு இரவுகள் அவள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டாளா? முதல் சந்திப்பின் போது அவளுக்கும் அவனுக்கும் ஒத்து வராது என்று சொன்னவன் இப்போது இரண்டாம் முறையும் அதே போல் பேசியதை, அதுவும் அவளுடைய காரணங்களை அவன் பட்டியலிட்டதைப் போறுமையாகக் கேட்டு கொண்டிருந்த கௌரி ஒரு முடிவிற்கு வந்து,”தீபா” என்று குரல் கொடுத்தாள்.
“என்ன ஆன்ட்டி?” ஊஞ்சலில் ஆடியபடி பதில் குரல் கொடுத்தாள் தீபா.
“உங்க அப்பா வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க..மெதுவா இறங்கு..அப்படியே சூர்யாவையும் இறக்கி விடு.” என்று கட்டளையிட்டு விட்டு குழந்தைகளுடைய ஜுஸ் கிளாஸ்களைக் கிட்சனிற்குக் கொண்டு சென்றாள்.
அவன் பேசியதைக் கவனமாகக் கேட்டு கொண்டவள் பதில் எதுவும் சொல்லாமல் கிளாஸுடன் எழுந்து போனவுடன் சிவாவினுள் லேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.  அதே நேரம் கிளாஸ்களைக் கிட்சன் சிங்கில் கழுவிக் கொண்டிருந்தவளில் மனத்தில் கோவம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அவள் ஏன் இது போல் முடிவு எடுத்தாள்? அவன் வேண்டாமென்று மறுத்த பின்னும் ஏன் அவனை மணந்து கொள்ள சம்மதித்தாள்?அவளுக்கு ஏன் உறவுகள் இல்லை? என்று அவள் வாழ்க்கையை அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் எழவில்லை. அவளுக்கு அவன் வேண்டாமென்று முடிவு செய்ய இவன் யார்? கல்யாணத்திற்குப் பின் அவர்கள் சந்திக்கப் போகும்  பிரச்சனைகளை அவளால் எதிர்க்கொள்ள முடியாது என்று இப்போதே அவள் சார்பாக முடிவு செய்வது சரியா? அப்படி முடிவு எடுக்க யார் இவனுக்கு உரிமை கொடுத்தது? என்று மனது கேள்வி கேட்ட அடுத்த நொடி,”அதான் அவனை வீட்டுக்கு பேக் செய்திட்டேயே..இப்போ சண்டை வேணாம்..போகட்டும் விடு.” என்று அவளைச் சமாதானம் செய்து கொண்டு அமைதியான முகத்தோடு வரவேற்பறைக்கு வந்தாள்.
வரவேற்பறையின் சோபாவில் அவள் அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த தீபாவிடம்,
“அந்த பெட்ரூம் உள்ளே பாத்ரூம் இருக்கு..சூர்யாவையும் அழைச்சுக்கிட்டு போ.” என்றாள்.
தீபாவும், சூர்யாவும் பெட் ரூமிற்குள் சென்றவுடன்,”என் வீட்டுக்கு வந்து நான் உங்க வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டேன்னு விளக்கம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி..குழந்தைங்க வந்தவுடனே கிளம்புங்க.” என்று சொல்லி அவளும் பெட்ரூமிற்குள் செல்ல, வரவேற்பறையில் தனித்து விடப்பட்டான் சிவா.
கௌரியின் நன்றியை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை.  அவன் இரண்டு மகள்களைப் போல் பேதையில் ஆரம்பித்து கௌரியைப் போல் பேரிளம் பெண் வரை எந்த வயதாக இருந்தாலும் பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள பல ஜென்மங்கள் எடுத்தாலும் பத்தாது என்ற ஞானம் சிவாவிற்கு இல்லை.
அடுத்த இருபது நிமிடங்கள் வரவேற்பறையில் அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து போயினர் படுக்கையறையில் இருந்தவர்கள்.  குழந்தைகளின் சிரிப்பொலி தொடர்ச்சியாக வர அதனோடு அவ்வப்போது கௌரி அவர்களோடு பேசிக் கொண்டிருப்பதும் படுக்கையறைக்கு வெளியே அமர்ந்திருந்த சிவாவிற்கு நன்றாக கேட்டது
மேலும் சிறிது நேரம் சென்ற பின் குழந்தைகள் இருவரும்  சிரித்தபடி கௌரியுடன் வெளியே வந்தனர்.  டி ஷர்ட், பேண்ட்டிற்கு மாறியிருந்தாள் கௌரி. அவள் உடையே சிவாவிற்குச் செய்தி அனுப்ப அதைச் சரியாகப் பெற்றுக் கொண்ட சிவாவின் மனது சுணக்கமடைந்தது.  
அவள் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டியபடி வரவேற்பறைக்கு வந்தவள்,
“நீங்களும் பாத்ரூம் யூஸ் செய்துகோங்க.” என்றாள் சிவாவிடம்.
அவள் படுக்கையறைக்குள் செல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தாலும், இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு பைக்கில் வீடு திரும்ப எப்படியும் ஒரு மணி நேரமாகும் என்பதால் மறுக்காமல் பெட் ரூமிற்குள் சென்றான்.
அவள் சற்றுமுன் அணிந்திருந்த பட்டுப்புடவை கட்டிலில் கிடந்தது. அறை சிறியதாக இருந்தாலும் அதற்கும் ஒரு தனி பால்கனி இருந்ததைக் கவனித்தான்.  பாத்ரூமை உபயோகித்து வெளியே வந்த போது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் அவனிற்காகவும் அவள் யோசனை செய்தது அவனுக்குப் பிடித்து இருந்தது. ஆனால் இனி அவளின் செய்கையைப் பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து என்னவாகப் போகிறது என்ற எண்ணமும் கூடவே எழுந்தது.
அவன் வரவேற்பறைக்கு வந்தபோது அவளுடைய பின்னலை அவிழ்த்து கொண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள் கௌரி.  செண்டர் டேபிள் மீது அவள் அணிந்திருந்த நகைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.  அவன் வந்தவுடன்,
“ஆன்ட்டி..அப்பா வந்துட்டாங்க.” என்றாள் தீபா.
“யெஸ்..இப்போ நீங்க வீட்டுக்குக் கிளம்பணுமில்லே..நான் சொன்னது நினைவுலே இருக்கட்டும் தீபா.” என்று சொல்லி ஃபிரிஜைத் திறந்து இரண்டு பெரிய சாக்லெட் பாரை இருவரிடம் கொடுத்து,”பை கேர்ல்ஸ்.” என்று அவர்களிடம் மட்டும் விடைபெற்றுக் கொண்டாள்.
அன்று இரவு இருவரின் பழைய நிஜங்களும் புதுக் கனவுகளும் சிவா, கௌரி இருவரையும் தூங்க விடாமல் தொந்தரவு செய்தன.
மனிதர்களின் கனவுகளுக்கு, ஆசைகளுக்குத் தட்டுப்பாடோ, கட்டுப்பாடோக் கிடையாது.  ஒவ்வொரு நொடியும் கலைந்த போகும் ஒரு கனவிற்குப் பதிலாக பல புதிய கனவுகளும்,  நிராசையான ஓர் ஆசையின் இடத்தில் பல புதிய ஆசைகளும்  ஊற்றுப் போல்  பெருக்கெடுப்பதால் தான் தோல்விகளாலும், ஏமாற்றங்களாலும் துவண்டு போகாமல் ஒவ்வொரு விடியலையும் புது உற்சாகத்துடன் எதிர்க்கொண்டு, பல வெற்றிகளை அடையக்கூடிய சாதனை தினமாக அதை மாற்றி அமைக்க உறுதிப் பிறக்கிறது. ஒரே புள்ளியில், ஒரே நிஜத்தின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுச் சிக்கித் தவிப்பவர்களுக்குக் கனவுகள் தான் ஆசானாக மாறி புது நிஜங்களை உருவாக்கும் செயல்முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துக்கின்றன. 
*****************************************************************
“Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.” 
―Dr.  A P J Abdul Kalam

Advertisement