Advertisement

அத்தியாயம் – 3_1
“ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்..முகூர்த்தம் சரியான டயத்துக்கு நடந்திச்சு ஆனா முகூர்த்தச் சாப்பாடுதான் லேட்டாயிடுச்சு..இன்னைக்கு நான் உங்களைக் காக்க வைச்சிட்டேன்..ஸாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த கௌரி பச்சை நிறப் பட்டுப் புடவையில் இருந்தாள்.  காதில் ஜிமிக்கி, கழுத்தில் கனமானத் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள், தலையைப் பின்னி மல்லிகைப் பூ சூடியிருந்தாள். மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி அவள் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே நின்று கொண்டிருந்த மூன்று பேரிடமும்,
“வாங்க..உள்ளே வாங்க.” என்றாள்.
“இன்னைக்கு நான் என் பைக்லே வந்திருக்கேன்..நிறைய நேரம் காத்திருக்கலே..பத்து நிமிஷம் தான்.” என்று பதில் சொல்லியபடி தீபா, சூர்யா இருவருடன் கௌரியின் ஃபிளாட்டிற்குள் நுழைந்தான் சிவா.
வெளீர் மஞ்சள் நிறத்தில் திரைச்சீலைகள், காபி கொட்டை நிறத்தில் சோபாக்கள், இரண்டு மூங்கில் நாற்காலிகள், கண்ணாடி பதித்த செண்டர் டேபிள் என்று அளவாக அலங்கரிக்கப்பட்டிருந்தது வரவேற்பறை.  அதைத் தாண்டி வட்ட வடிவத்தில் நான்கு பேர் அமரக்கூடிய சாப்பாடு மேஜை. அதன் அருகில் ஆளுயர ஃபிரிஜ். அந்த மேஜையின் மீது இருந்த மூங்கில் கூடையில் ஆப்பிள், ஆரன்ஞ், வாழைப்பழம் என்று பழ வகைகள். ஆறு கண்ணாடி தம்ப்ளர்கள், கட்லெரி செட் என்று விருந்தினர் உபசாரத்திற்குத் தேவையானவை ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தன. 
சாப்பாடு மேஜையின் வலதுப்புறம் கிட்சன், இடதுப்புறம் படுக்கையறை. மேஜைக்குப் பின்னால் பெரிய பால்கனி என்று கச்சிதமான அமைப்பில் இருந்தது அந்த ஃபிளாட்.
அவன் இரு மகள்களுடன் வரவேற்பறையிலிருந்த பெரிய சோபாவில் அமர்ந்துக் கொண்டான் சிவா. அவர்கள் மூவரும் உட்கார்ந்தவுடன்,
“மெங்கோ ஜுஸ் குடிக்கறீங்களா?” என்று குழந்தைகளிடம் கேட்டாள் கௌரி.
தீபாவும், சூர்யாவும் சரியென்று தலையசைக்க, உடனே ஃபிரிஜ்ஜைத் திறந்து டெட் ரா பாக்கிலிருந்த ஜுஸை மேஜை மேலிருந்த இரண்டு கண்ணாடிக் கிளாஸில் ஊற்றினாள். கிட்சனிற்கு சென்று ஒரு ட்ரேயுடன் வெளியே வந்தவள் அதில் இரண்டு கிளாஸ்களையும் வைத்து, பரபரத்துக் கொண்டிருந்த மனதையும், வெடவெடுத்துக் கொண்டிருந்த கைகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சிந்தாமல், சிதறாமல் ஜுஸைக் குழந்தைகளுக்குச் கொண்டு சென்றாள்.
குழந்தைகள் சார்பாக இரண்டு ஜுஸையும் எடுத்து டேபிளின் மீது வைத்தான் சிவா. உடனே தீபா அவளாகவே ஜுஸை எடுத்துக் குடிக்க, சூர்யா குடிப்பதற்காக அவள் வாயருகே கிளாஸை பிடித்துக் கொண்டான் சிவா.
குழந்தைகள் ஜுஸைக் குடித்து முடிக்கும் வரை பெரியவர்கள் இருவரும் பொறுமையாகக் காத்திருந்தனர். ஒரே மூச்சில் ஜூஸைக் குடித்து முடித்த தீபா,
“நான் ஊஞ்சல்லே உட்கார்ந்துக்கலாமா?” என்று பால்கனியைக் காட்டி கௌரியிடம் கேட்டாள்.
“முதல்லே வாயைத் துடை..மஞ்சள் கலர்லே மீசை வளர்ந்திருக்கு.” என்று கௌரி சொன்னவுடன், கலகலவென்று சிரித்தாள் ஜுஸ் குடித்துக் கொண்டிருந்த சூர்யா. 
“அப்பாக்குப் பிளாக்” என்று அவள் அப்பாவின் மீசையையும், தாடியையும் பிடித்து இழுக்க,”ஆ..” என்று சிவா கத்த அதைப் பொருட்படுத்தாமல் அவள் அக்காவின் மேல் உதட்டின் மீது படிந்திருந்த மஞ்சள் கோட்டைச் சூட்டி காட்டி,”அக்காக்கு யெல்லோ.” என்று நிறத்தை வித்தியாசப்படுத்திய உற்சாகத்தில் கைதட்டிச் சிரித்தாள் சூர்யா.
அதற்கு,“உனக்கும் தான் யெல்லோ மீசை வளர்ந்திருக்கு.” என்றாள் தீபா.
உடனே,”எனக்குப் பிங்க் தான் பிடிக்கும்..பிங்க் ஜுஸ் தான் வேணும்..இது வேணாம்.” என்று அவள் குடித்துக் கொண்டிருந்த மங்கோ ஜுஸை வேண்டாமென்று மறுத்தாள் சூர்யா.
“சூர்யா, குடிச்சு முடி.” என்று அவள் வாய் அருகே கிளாஸை எடுத்துப் போன சிவாவின் கையை அவள் தட்டிவிட, ஜுஸ் கொஞ்சம் போல் கிளாஸிலிருந்து வெளியே சிந்தியது.
“சூர்யா.” என்று சிவா அவன் குரலை உயர்த்தியவுடன் ஆழ ஆரம்பித்தாள் சூர்யா. சூர்யாவை சிவா அதட்டியவுடனே அவளுக்கும் அதற்கும் சம்மந்தில்லை என்பது போல் பால்கனி கதவருகே சென்று நின்று கொண்டாள் தீபா. அந்தச் சூழ் நிலையை எப்படிச் சமாளிப்பதென்று கௌரிக்குத் தெரியவில்லை. 
அதுவரை நன்றாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்த சூர்யா திடீரென்று அழ ஆரம்பித்தவுடன் சிவாவும் சில நொடிகள் குழம்பிப் போனான். இனி அவள் ஜுஸ் குடிக்கப் போவதில்லையென்று உணர்ந்தவன் கிளாஸை செண்டர்டேபிள் மீது வைத்துவிட்டு சூர்யாவை மடி மீது தூக்கி வைத்துச் சமாதானம் செய்ய முயல அவளோ இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.  அதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்த கௌரி நேரே பால்கனி கதவை திறக்கச் சென்றாள்.  சூர்யாவின் பார்வை கௌரியைப் பின் தொடர்ந்தாலும் அவள் பின்னே செல்லவில்லை.  கதவை திறந்து விட்டவுடன்,
“வேகமா ஆடக் கூடாது..மெதுவா தான்..ஓகே.” என்று சொல்லி விட்டு சற்று உயரமாக இருந்த மூங்கில் ஊஞ்சலில் தீபாவைத் தூக்கி உட்கார்த்தி வைத்தாள். சந்தோஷமாகத் தலையாட்டி விட்டு பக்கச் சுவரில் கால் ஊனியபடி ஊஞ்சல் ஆட ஆரம்பித்தாள் தீபா. 
அவள் அழுகையை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாள் சூர்யா. விக்கி விக்கி அழுது கொண்டிருந்த அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று குழப்பமாக இருந்ததால் சூர்யாவுடன் பேச கௌரி முயற்சி செய்யவில்லை.  சில நிமிடங்கள் கழித்து அவளாகவே அமைதியான பின் சூர்யாவின் பார்வை அவளின் பாதி ஜுஸை, அவள் அப்பாவை, அக்காவை என்று மாறி மாறி ஜெட் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.  அதைக் கண்டு கொண்ட கௌரி அவள் என்ன முடிவுச் செய்யப் போகிறாள் என்று அவளைச் சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து அவள் அப்பாவின் மடியிலிருந்து இறங்கி நேரே பால்கனி நோக்கி அவள் செல்ல ஆரம்பித்தவுடன், சிவாவைக் கௌரி நோக்க அவனோ சூர்யாவின் அழுகை நின்றதில் நிம்மதி அடைந்தவனாக அவள் ஊஞ்சல் ஆடப் போவதைத் தடுத்து நிறுத்தவில்லை அதே சமயம் பாதி ஜூஸைக் குடித்து முடிக்கும்படி சொல்லவில்லை.  அதனால்,
”ஜுஸ் குடிச்சிட்டு ஊஞ்சலாடப் போ.” என்றாள் கௌரி.
“பிங்க் ஜுஸ் தான் வேணும்.” என்றாள் சூர்யா.
“நெக்ஸ்ட் டைம்..இப்போ நீ மிச்சம் வைச்சதை நீதான் குடிச்சு முடிக்கணும்..நாங்க குடிக்க முடியாது.” என்றாள் கறாராக.
உடனே கௌரியின் அருகில் வந்து அவள் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் சூர்யா. அவள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கௌரி அவள் கையில் ஜுஸ் கிளாஸை எடுத்தவுடன் அதைத் தன்னுடைய கையால் பற்றியபடி கடகடவென்று மீதியைக் காலி செய்து விட்டு கௌரியின் மடியிலிருந்து குதித்து ஒரே ஓட்டமாக தீபாவிடம் சென்றாள் சூர்யா.  அவள் பின்னோடு சென்ற கௌரி, தீபாவின் அருகில் அவளை உட்கார்த்தி வைத்திவிட்டு, அக்கா, தங்கை இருவரையும் இரண்டு முறை ஆட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
சிவா எதுவும் குடிக்கவில்லை என்பதால்,“நீங்க என்ன குடிக்கறீங்க?” என்று அவனிடம் கேட்க, 
“எனக்கு எதுவும் வேணாம்.” என்று பட்டென்று மறுத்தான் சிவா.
அவன் குரலில் இருந்த வேற்றுமையை உடனே கண்டு கொண்ட கௌரி அவளுடைய படபடபிற்குக் காரணமில்லை என்று உணர்ந்தாள்.  அவன் எதிரே இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டவள் அவளைச் சந்திக்க விரும்பிய காரணத்தை உடனே தெரிந்து கொள்ள விரும்பி,
“என்ன விஷயம்? சொல்லுங்க.” என்றாள் சிவாவை நேரடியாகப் பார்த்தபடி.
அவன் முடிவை அவளுக்கு மறுபடியும் தெரியப்படுத்தத்தான் அவளைச் சந்திக்க வந்திருந்தான் ஆனால் அவர்களின் இந்தச் சந்திப்பில் அவனுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவளின் நேரடி பார்வையைச் சந்திக்காமல்,
“சுப்ரமணி ஸர் கடைக்கு வந்திருந்தாரு..நம்ம விஷயத்தைப் பற்றி பேசினாரு அதான் உங்களை நேராப் பார்த்துச் சில விஷயங்களை விளக்கணும்னு நினைச்சேன்.” என்றான்.
“நேரா பார்த்து பேசறதுன்னா என்ன? என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்க்காம என் வீட்லே இருக்கற மற்ற பொருள்களைப் பார்த்துப் பேசறதா?” என்று அவளின் பார்வையை அவாய்ட் செய்தவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவளின் நேரடி கேள்வியில் விலுக்கென்று பார்வையை அவள் புறம் திருப்பியவன்,”இல்லைங்க..உங்களைப் பார்த்து பேசத்தான் வந்தேன்..உங்க வீடு ரொம்ப சுத்தமா, அழகா இருக்கு அதைத்தான் பார்த்துகிட்டிருந்தேன்.” என்றான்.
“சரி..என் வேலைக்காரிகிட்டே உங்க பாராட்டை சொல்லிடறேன்.” என்று வெடுகென்று பதில் கொடுத்தாள் கௌரி.
இவ்வளவு கோபக்காரிய இவள்? என்று ஆச்சர்யப்பட்ட சிவா,”உணமையா தான் சொல்றேன்.” என்றான்.
“சரி..அவங்ககிட்டே உங்களோட உண்மை பாராட்டைத் தெரிவிச்சிடறேன்.”
அந்தப் பதிலில் இனியும் தாமதிக்க முடியாது என்று உணர்ந்தவன்,“ஏன் நீங்க சுப்ரமணி ஸர்கிட்டே நான் சொன்னதைச் சொல்லலே?” என்று கௌரியிடம் கேட்டான் சிவா.
இந்த விசாரணைக்குத் தான் இந்த விஸிட்டா என்று எண்ணியவள்,
“உங்களோட அபிப்பிராயத்தை நீங்க தான் அவர்கிட்டே சொல்லியிருக்கணும்..நான் எப்படிச் சொல்ல முடியும்?” என்றாள்.
“அதைத் தெரியப்படுத்தாதுனாலே என் மேலே தப்பு அபிப்பிராயமாயிடுச்சு..அவருக்கு நான் தகவல் கொடுக்காம போனது இப்போ குற்றம் மாதிரி தோணுது..நீங்க ஏன் அவர்கிட்டே எனக்கு விருப்பமில்லைங்கறதைச் சொல்லலை?” என்று மறுபடியும் கேட்க,
“இதைக் கேட்கத்தான் இன்னைக்கு நேர்லே சந்திக்கணும்னு சொன்னீங்களா?” என்று அவள் சந்தேகத்தை வெளியிட்டாள் கௌரி.
“ஆமாம்..இல்லை..” என்று தடுமாறியவன்,”அன்னைக்கு நான் சொன்னது உங்களுக்குச் சரியாப் புரியலை..அதான் நான் வேணாம்னு சொன்ன பிறகும் என்னைக் கல்யாணம் செய்துக்க விருப்பம்னு அவர்கிட்டே சொல்லியிருக்கீங்க..
இப்போ பார்த்தீங்க இல்லே..இப்படித்தான் என்னோட தினசரி வாழ்க்கைப் போகுது..ஒருத்தி எப்போ எதுக்கு அழுவான்னே தெரிய மாட்டேங்குது..இன்னொருத்தி சில சமயம் தங்கையைச் சமாதானப்படுத்தறா சில சமயம் சம்மந்தமில்லாத மாதிரி ஒதுங்கி இருக்கா..தீபாவைக் குழந்தையாவும் நடத்த முடியலை பெரிய பொண்ணாட்டம் பொறுப்பாவும் இருக்கச் சொல்ல முடியலை..
இரண்டு பேரும் சரின்னு சொன்ன பிறகு தான் ஜுஸ் கொண்டு வந்தீங்க..அப்புறமா பிங்க் ஜுஸ் கேட்கறா சூர்யா..இதே போலதான் வீட்லே வேலை செய்யற சாவித்திரி அம்மாவை, என் அம்மாவை, தம்பி வைஃபை, என் அக்காவைப் படுத்தி எடுக்கறா..சாப்பாட்டை வீணாக்கறா, வேணும்னே தம்பி பொண்ணை அடிக்கறா..அக்கா பசங்களோடு வீணா சண்டை போடறா..ஸ்கூல் வேலையை முடிக்க மாட்டேங்கறா..படிக்கறதில்லை, எழுதறதில்லை..சில சமயத்திலே இராத்திரிலே படுக்கையை ஈரமாக்கிடறா….
இப்போயெல்லாம் ஞாயிற்றுக் கிழமைலே இவங்களை யாரும் பார்த்துக்கறதில்லை.. இந்த ஒரு மாசமா இரண்டு பேரையும் என்கூட கடைக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்..அக்கா பசங்களுக்குப் பரீட்சை நடக்குது..இவங்க இரண்டு பேரும் அவங்களைப் படிக்க விடாம தொந்தரவு செய்யறாங்க….தம்பி வைஃப் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டதுனாலே மூட்டு வலியோட எங்கம்மா என் தம்பி வீட்டைப் பார்த்துக்கறாங்க..முன்னே அந்த மாதிரி நேரத்திலே என்கூட என் வீட்லே வந்து இருப்பாங்க..இப்போ என் வீட்டுக்கு வர முடியாத நிலை ஆயிடுச்சு..அப்படியே வந்தாலும் அவங்களைப் பார்த்துக்க ஆளில்லாததுனாலே அவங்க உடல் நிலை மோசமாயிடுது..அம்மாவோட வயசான காலத்திலே அவங்களைச் சரியாக் கவனிசுக்க முடியலை..அவங்களுக்குத் தனியா ஆள் போடற அளவிற்கு எனக்கு வசதி இல்லை..
நான் ஆர்டினரி, மிடில் கிளாஸ்..எனக்குக் கடன் இருக்கு..கடைலேர்ந்து வர வருமானம் கட்டுப்படியாகலே..என்னோட குழந்தைகளை என்னோட சூழ் நிலைக்கு என் சக்திக்கு ஏற்ற மாதிரி வளர்க்கணும்னு நினைக்கறேன்..அதே போல என் மனைவியும் என் சக்திக்குள்ளேதான் வாழ்க்கையை நடத்தணும்னு விரும்பினேன், விரும்பறேன்..

Advertisement