Advertisement

அத்தியாயம் – 2_2
அதற்குமேல் அவர்கள் இருவரையும் மௌனம் சூழ்ந்து கொள்ள அமைதியாக கௌரி காரை செலுத்த மூன்று பேரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். அதைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்த கௌரி அவள் வீட்டிற்கும் செல்லும் பாதையிலிருந்து விலகி சிவாவின் வீடு நோக்கிப் பயணமானாள். அரைமணி நேரம் கழித்து காரை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்த சிவாவை,
“சிவா..சிவா.” என்று அவள் அழைக்க, பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டவன்,
“ஸாரி..கொஞ்சம் அசந்துட்டேன்.” என்று சொல்லி அவர்கள் கார் நின்றிருந்த இடத்தைப் பார்த்து,
“என்னங்க..நீங்க போற வழிலே ஆட்டோ ஸ்டாண்ட்லே விடச் சொன்னேன்..என் வீட்டுப் பக்கத்திலேயே கொண்டு வந்து விட்டுட்டீங்க.” என்றான்.
“இரண்டு பேரும் தூங்கறாங்க..வழிலே எப்படி விட முடியும்? அதான் வீட்டுக்கு கொண்டு வந்திட்டேன்.” என்ற சொன்ன கௌரி அவனும் தூங்கிக் கொண்டிருந்தான் என்று சுட்டிக் காட்டவில்லை.
“ரொம்ப தாங்கஸ்.” என்று சொல்லி விட்டு சூர்யாவை தோளில் போட்டுக் கொண்டு அவன் கீழே இறங்க, அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பின் ஸீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தீபாவைத் தட்டி எழுப்பினாள் கௌரி.
“தீபா..தீபா” என்று கௌரியின் குரலில் எழுந்து கொண்டவள், காருக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிவாவிடம்,”அப்பா..எனக்கு தூக்கம் வருது..வீட்டுக்குப் போகணும்.” என்றாள்.
“வீடு வந்திடுச்சு..நீ அந்த பர்கரை எடுத்துக்கோ..அஞ்சு நிமிஷத்திலே போயிடலாம்.”
பர்கர் பாக்கெட்டுடன் காரிலிருந்து இறங்கிய தீபாவிடம்,”ஆன் ட்டிக்கு தாங்க்ஸ் சொல்லு.” என்றான் சிவா.
காரின் மறுபுறும் நின்று கொண்டிருந்த கௌரியைப் பார்த்து,”தாங்கஸ்.” என்று சொல்லி சிவாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் தீபா. காரை சுற்றி தீபாவின் அருகில் வந்த கௌரி,
“வீட்லே போய் சூர்யாவுக்கு வேற ஜட்டி போட்டு விடு..பை தீபா.” என்று சொல்லி சிவாவின் அருகிலிருந்த தீபாவின் கன்னத்தில் லேசாக தட்டி விட்டு சட்டென்று காரில் ஏறி புறப்பட்டுச் சென்றாள் கௌரி.
சிவாவிற்கு அவளுடை பேச்சு புதிராகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.  கௌரி சொன்னதைக் கேட்டவுடன் அவன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த சூர்யாவின் பின்புறத்தைத் தொட்டு பார்த்தவன் அது இன்னும் ஈரமாக இருப்பதை உணர்ந்தான்.  கௌரிக்கு எப்படி அது தெரிய வந்தது என்று ஒருபுறம் அவன் மனம் ஆராய்ச்சியில் ஈடுபட மறுபுறம் அவனிடம் அவள் விடைபெற்று செல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவன் இரு குழந்தைகளுக்காக நிஜத்தோடு நடக்க போகும் யுத்ததிற்கு தயாராக இருந்தவனின் மனத்தில் அந்த நொடி எதிர்பார்ப்பும், கண்களில் கனவும் குடிப் புகுந்தது.
அவர்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன்,”அப்பா, இந்த ஆன் ட்டியை அங்கே பாத் ரூம்லே பார்த்தேன் பா..சூர்யாக்குச் சரியா கழுவிக்க தெரியலை பா..ஜட்டியை ஈரமாக்கிட்டா…” என்று சிவாவின் ஆராய்ச்சியை முடிவிற்குக் கொண்டு வந்தாள் தீபா.
அவன் அறிமுகம் ஆவதற்கு முன் அவன் குழந்தைகளுக்கு அவள் அறிமுகமானது அவன் நிஜத்தில் அவள் காலடி பதிக்கத்தான் என்று அவன் அப்போது உணரவில்லை அதற்கு அடுத்து வந்த நாள்களிலும் அதை ஆராயவில்லை.
அந்த மந்தமான மதிய வேளையில் கடையில் அமர்ந்து கணக்குப் பார்த்து கொண்டிருந்தவனின் கவனத்தைக் கலைத்தார் சுப்ரமணியன்.
“ஹலோ.” என்று அவர் சொன்னவுடன் அவன் சேரிலிருந்து எழுந்து கொண்ட சிவா,
“வாங்க ஸர்..வாங்க..உட்காருங்க.” என்று அவனருகில் இன்னொரு சேரை இழுத்துப் போட்டான்.
“எப்படி இருக்க சிவா?” என்று விசாரித்தார் சுப்ரமணி.
“நல்லா இருக்கேன் மணி ஸர்.” என்றான் சிவா.
“தீபாவும், சூர்யாவும் எப்படி இருக்காங்க?”
“இரண்டு பேரும் நல்லா இருக்காங்க.” என்று சிவாவும் அவர் கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுக்க,
“அப்புறம்..” என்று இழுத்தார் மணி.
“சொல்லுங்க..” என்று அவரை ஊக்குவித்தான் சிவா.
“கௌரியை மீட் செய்த இல்லே?” என்று கேட்டார் மணி.
“மீட் செய்தேனே ஸர்..உங்க பேச்சை எப்படி மீறுவேன்..அவங்களைச் சந்திச்சு ஒரு மாசமாகப் போகுது..உங்ககிட்டே அவங்க எதுவும் சொல்லலையா?” என்று கேட்டான் சிவா.
“அவ சொன்னா சிவா..நீதான் எதுவும் சொல்லலே.. அதான் இங்கே வரும்போது உன்கிட்டே நேர்லே பேசலாம்னு நினைச்சேன்..இப்போதான் அதுக்கு வேளை வந்திச்சு.” என்றார்.
“என்ன ஸர் இருக்கு பேச?..அவங்க கம்பெனிலே மேனேஜரா இருக்காங்க..எம்பிஏ படிச்சிருக்காங்க, சொந்தமா கார் வைச்சிருக்காங்க, ஃபிளாட்டும் வைச்சிருக்காங்க..அவங்களோட தகுதிகளைச் சொல்லிகிட்டே போகலாம்..நான் ஆம்பளைங்கற தகுதியைத் தவிர என்கிட்டே வேற எதுவும் இல்லை..அதுவும் இரண்டு குழந்தைங்களுக்கு அப்பான்னு சொன்னவுடனே அடிப்பட்டு போயிடும்..
எனக்கு ஏற்ற மாதிரி ஒரு வாழ்க்கை துணையைத் தேடித் தருவீங்கன்னு நினைச்சேன்.. ஆனா  நீங்க..அவங்க எப்படி ஸர் எனக்கு ஒத்து வருவாங்க? அவங்க தகுதிக்கு செட்டாகற மாதிரி அவங்களுக்கு நல்லபடியா ஒரு ஆளைப் பார்த்து கல்யாணம் செய்து வைங்க..நான் வேணாம்.” என்றான் சீற்றத்துடன் சிவா.
“அப்போ உனக்குக் கௌரியைக் கல்யாணம் செய்துக்கறதுலே இஷ்டமில்லையா சிவா?” என்று நேரடியாக கேட்டார் மணி.
“இதை நான் உங்களுக்குச் சொல்லணுமா ஸர்..இதுக்காகவா நேர்லே வந்தீங்க? நான் ஃபோன் செய்யாத போது நீங்க புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைச்சேன்.” 
“எனக்குப் புரிஞ்சிடுச்சு..ஆனா என்ன காரணம்னு தெரிஞ்சுக்க விரும்பினேன் அதான் இன்னைக்கு நேர்லே வந்தேன்..நீ சொல்ற மாதிரி வேற முயற்சி செய்து பார்க்கறேன்.” என்றார் மணி.
“அவங்க வீட்லே எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டாங்க..யார் அவங்களை இந்த மாதிரி வாழ்க்கை அமைச்சுக்க வற்புறுத்தறாங்க?” என்று கேட்டான் சிவா.
“அவளுக்கு யாருமில்லை பா..எனக்குத் தெரிஞ்சவங்க மூலம் அவங்க அம்மாவோட எங்க காம்ப்லெக்ஸுக்கு குடிவந்தா..ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவ அம்மாக்கு சார் தாம் டூர் (char dham) போக நாந்தான் ஏற்பாடு செய்து கொடுத்தேன்..டூர் போனவங்க அப்படியே நிரந்தரமாப் போயிட்டாங்க..கங்கை கரைலேயே எல்லாம் முடிஞ்சிடுச்சு..புண்யாத்மா கஷ்டப்படாம போயிட்டாங்கன்னு அவங்க கூட போனவங்க எல்லாரும் சொன்னாங்க ஆனா கௌரியைத் தனியா விட்டிட்டுப் போயிட்டாங்களேன்னு எனக்குதான் மனசு கஷ்டமாயிடுச்சு..
வீட்டோட இருந்தவங்களை நாந்தான் வற்புறுத்தி தீர்த்தயாத்திரைக்கு அனுப்பி வைச்சேன்..இப்படி நடக்கும்னு நான் கனவுலக்கூட நினைக்கலே..அவ அம்மா உயிரோட இருக்கும்போதே கௌரிக்கு இரண்டு, மூணு இடம் பார்த்துச் சொன்னேன்..மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாருக்கும் பெண்ணுக்கு அப்பா இல்லைங்கறது ஒரு குறை அப்புறம் கல்யாணத்துக்குப் பிறகு பொண்ணோட அம்மாவும் கூட இருப்பாங்கன்னு தெரிஞ்சவுடனே எல்லாரும் வேணாம்னு சொல்லிட்டாங்க..
கௌரிக்கு அவங்க அம்மாவைத் தனியா விட்டிட்டு கல்யாணம் செய்திக்க விருப்பமில்லை..இதெல்லாத்தையும் மனசுல வைச்சுக்கிட்டுதான் அவளோட அம்மா அவங்களாவே ஒரு முடிவைத் தேடிக்கிட்டாங்களோன்னு எனக்குச் சந்தேகமா இருந்திச்சு ஆனா மாரடைப்புலே இறந்திட்டாங்கன்னு டாக்டர் ஸர்டிஃபிகேட் சொல்லுது..
அவ அம்மா போய் ஒரு வருஷம் மேலே ஆயிடுச்சுன்னு நாந்தான் திரும்ப கல்யாண பேச்சை ஆரம்பிச்சேன்..அப்போதான்..’எங்கம்மாவை ரொம்ப மிஸ் செய்யறேன் அங்கிள்..என்னைப் போல அம்மாவை மிஸ் செய்யற குழந்தைகளுக்கு அம்மாவா இருக்க விரும்பறேன்..குழந்தைங்களோட இருக்கற விடோவர் யாராவது இருந்தா சொல்லுங்க கல்யாணம் செய்துக்கறேன்னு” சொன்னா..அதைக் கேட்டு எனக்கு உன்னோட ஞாபகம்தான் வந்திச்சு அதான் நீங்க இரண்டு பேரும் பேசிக்க ஏற்பாடு செய்தேன்.” என்றார் சுப்ரமணியன்.
“அவங்க முட்டாள்தனமா பேசறாங்க…விடோவர்னா வெறும் குழந்தைகளை மட்டும் பார்த்துகிட்டா போதும்னு நினைப்பாங்களா..ஒரு மனைவியை எதிர்பார்க்க மாட்டாங்களா?” என்று சிவா கேட்க,
“நீ அந்த மாதிரி இல்லையே பா..உன் குழந்தைகளைப் பார்த்துகிட்டா போதும்னுதானே சொன்னே.” என்றார் மணி.
“கௌரியைப் போல நானும் உங்ககிட்டே ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையோட இருக்கறவங்களைப் பார்க்கச் சொன்னேன்….மறுமணம் செய்துக்கறவங்களோட எதிர்பார்ப்பு வேற மாதிரி இருக்கும்..கௌரியோட எதிர்பார்ப்பு வேற மாதிரி இருக்கும்….மறுமணத்திலே பழைசும் புதுசும் கலந்து  சில சமயம் குழப்பமாவும் சில சமயம் தெளிவாவும் ஒரே போல அனுபவமா இருக்கும் ..நான் கௌரியைக் கல்யாணம் செய்துகிட்டா அவங்களுக்கு எல்லாமே புதுசா இருக்கும் எனக்கு அப்படி இருக்கவே இருக்காது.” என்றான் சிவா.
“சரி..அவ விருப்பம் போலவும், உன் விருப்பம் போலவும் தேடறேன்..வரேன் பா.” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார் மணி.
“கொஞ்சம் உட்காருங்க..வெயில்லா இருக்கு..ஜுஸ் எடுத்திட்டு..குடிச்சிட்டு போங்க.” என்று பக்கத்திலிருந்த ஜுஸ் கடைக்குச் சென்று இருவருக்கும் மாதுளம் பழம் ஜுஸ் ஆர்டர் செய்தான் சிவா.
சிவா ஜுஸுடன் திரும்பி வந்தபோது மணி ஸர் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
அவன் ஜுஸுடன் வந்தது கூட தெரியாமல் யோசனையில் இருந்தவரிடம்,”என்ன ஸர் யோசனை?” என்று கேட்க,
“ஒண்ணுமில்லை பா..உனக்கு விருப்பமில்லைன்னு கௌரிகிட்டே  எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.” என்றார் மணி.
ஏற்கனவே அவளிடம் நேரடியாக விருப்பமின்மையைத் தெரிவித்து விட்டோமே அப்புறம் ஏன் இவ்வளவு யோசனை இவருக்கு என்று யோசனையான சிவா,
“என்ன தயக்கம் ஸர்?” என்று விசாரிக்க,
“இந்தக் கல்யாணத்திலே அவளுக்கு இஷ்டமிருந்திச்சு சிவா.” என்று அவனுக்கு அதிர்ச்சி அளித்தார் மணி.
அவன் குடித்துக் கொண்டிருந்த ஜுஸ் தொண்டையை அடைக்க, பலமாக இருமினான் சிவா.
“பார்த்து..பார்த்து.” என்று அவன் தலையைத் தட்டினார் மணி.
கண்கள் சிவந்து போய் நீர் கோத்துக் கொள்ள, நம்ப முடியாமல், கரகரப்பானக் குரலில்,”என்ன ஸர் சொல்றீங்க?” என்று மணி ஸரைக் கேட்டான் சிவா.
“அவ அப்படித்தான் சொன்னா..ஆனா உன்கிட்டேயிருந்து ஒரு தகவலும் இல்லை…அதான் நானே இன்னைக்கு நேர்லே வந்தேன்.” என்றார் மணி.
“நிஜமாவா சொல்றீங்க?” என்று நம்ப முடியாமல் கேட்டான் சிவா.
“இதுலே பொய்ச் சொல்ல முடியுமா சிவா? உங்க இரண்டு பேரோட வாழ்க்கை.” என்றார் சுப்ரமணி.
அவன் விருப்பமின்மையைத் தெரிவித்த பின்னும் அவள் விருப்பப்படுகிறாள் என்று கேட்டவுடன் குழம்பிப் போனான் சிவா.
சில நிமிடங்கள் கழித்து,”நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கறேன்…கௌரி நம்பர் என்கிட்டே இருக்கு..அவங்களை நேர்லே சந்திச்சு அவங்களுக்கு விளங்கற மாதிரி என் நிலையை நானே விளக்கறேன்.” என்று முடிவு எடுத்தவன் அறியவில்லை அவர்கள் சந்தித்த அன்றே அவள் கனவுகள் அவன் நிஜங்களோடு பயணிக்க முடிவு செய்துவிட்டன என்று.

Advertisement