Advertisement

அத்தியாயம் – 2_1
சிவாவின் குடும்பம் அவள் கண்களிலிருந்து மறைந்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் கௌரி. அவன் குழந்தைகளோடு அவளைச் சந்திக்க வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை.  அவனுடைய தேவையைப் பூர்த்தி செய்ய அவளால் இயலாது என்று தெரிந்த பின்னும் எதற்காக இந்தச் சந்திப்பு? கடந்த சில வாரங்களாக அவனை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று அவளைச் சுப்ரமணி ஸர் வற்புறுத்தியது போல் அவனையும் அவர் தொந்தரவு செய்திருப்பாரோ? அதனால் தான் அவனும் இந்த நேரடி சந்திப்பிற்கு ஒப்புக் கொண்டு அவன் விருப்பமின்மையை நேரடியாக அவளுக்குத் தெரியப்படுத்தி விட்டானோ? 
அவனே சுப்ரமணி ஸருக்கு அதைத் தெரியப்படுத்துவானா இல்லை அவள் தெரியப்படுத்தவாள் என்று எண்ணிதான் அவளிடம் மறுப்பைத் தெரிவித்தானோ? சிவாவின் பேச்சை அசைப் போட்டு கொண்டிருந்தவள் அதன் முடிவில் அவனுடைய எண்ணம், முடிவை அவன் தான் சுப்ரமணி ஸருக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றும் என்று முடிவு செய்து அவளின் எண்ணத்தை, முடிவை மட்டும் அவருக்குத் தெரியப்படுத்த முடிவு செய்தாள் கௌரி.
பத்து நிமிடத்திற்கு மேலாக அந்த மாலின் வாசலில் நின்றபடி அவனெதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோக்களில் காலி எதுவென்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. மாலை நேரங்களில் மால் வாசலில் குவிந்து கிடக்கும் ஆட்டோக்கள் இப்போது மதிய வேளையில் ஒன்று கூட சிக்காமல் சதி வேலையில் ஈடுபட்டிருந்தன. அவன் தோளில் தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவை சரியாக சாயத்துக் கொண்டபோது அவளின் பின்புறம் ஈரமாக இருப்பதை அவன் கை உணர்ந்தது. ஒருவேளை பாத் ரூம் போய் விட்டாளோ என்று அவன் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்த போது  அவன் இன்னொரு கையைப் பிடித்து இழுத்தாள் தீபா.
“என்ன?” என்று சிவா கேட்க, சற்று தூரத்தில் மெதுவாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த காரை சுட்டிக் காட்டினாள்.  அவள் சுட்டிக் காட்டிய கார் மெதுவாக வந்து அவர்கள் அருகில் நின்றது.
காரின் முன் கதவைத் திறந்து விட்ட கௌரி,
“தீபா பின்னாடி உட்காரட்டும்..நீங்க முன்னாடி உட்காருங்க.” என்றாள்.
அந்தக் கொளுத்தும் வெயிலில் அதற்குமேல் தோளில் தூங்கும் குழந்தையுடன் காத்திருக்க விரும்பாமல் கௌரியின் அழைப்பை ஏற்று கொண்டான் சிவா.  பின் இருக்கையில் தீபா அமர்ந்து கொள்ள, கௌரியின் பக்கத்து ஸீட்டில் மடியில் சூர்யாவுடன் அமர்ந்து கொண்டான்.
“உங்களை எங்கே டிராப் செய்ய?” என்று கேட்டாள் கௌரி.
அவன் வீட்டு விலாசத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டு,”நீங்க போகற வழிலே ஆட்டோ ஸ்டாண்ட்லே இறக்கி விட்டிடுங்க..உங்களுக்கு சிரமம் வேணாம்.” என்றான்.
அவள் வீட்டிற்கும் போகும் பாதையில் காரை செலுத்தினாள் கௌரி.  காரின் மீதமான ஏஸியில் பின் ஸீட்டில் அமர்ந்திருந்த தீபா சரிந்து வாகாகப் படுத்துக் கொண்டாள்.
“உங்களுக்குதான் கஷ்டம்..இரண்டு பேரும் தூங்கிட்டாங்க..நீங்க குழந்தைகளோட வர போறீங்கன்னு எனக்குச் சொல்லியிருந்தா வேற எங்கையாவது சந்திச்சிருக்கலாம்.” என்று விளக்கம் கொடுத்த கௌரி அறிந்திருக்கவில்லை மீண்டுமொருமுறை அவனையும் அவன் மகள்களையும் இதே மாலில் சந்திக்கப் போகிறாளென்று.
“உங்களை நேர்லே சந்திக்க சொல்லி சுப்ரமணி ஸர்  கட்டாயப்படுத்தினாரு..தீபா, சூர்யா இரண்டு பேருக்கும் இந்த மால் பிடிக்கும்..அவங்க லீவு நாள்லே எனக்கு டயமிருந்தா இங்கே அழைச்சுக்கிட்டு வருவேன்..அதான் உங்களையும் இங்கே வரச் சொன்னேன்….இன்னைக்கு என்னமோ தெரியலே சின்னவளுக்கு மூட் இல்லை.” என்றான் சிவா.
அவன் குழந்தைகள் இருவரையும் பாத் ரூமில் சந்தித்தைப் பற்றி சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்த கௌரி, வேணாடம் என்று முடிவு செய்து,
“வெய்யில்லே அவங்களுக்குதான் அலைச்சல்..அதான் சொன்னேன்.”
“உங்க வீட்டுக்கு வந்து உங்களைச் சந்திக்கறதிலே எனக்கு விருப்பமில்லைங்க..என் வீட்டுக்கு உங்களைக் எப்படி கூப்பிட முடியும்? குழந்தைங்களை வேற எங்கே அழைச்சுக்கிட்டு வர முடியும் அதான் பொதுவான இடத்திலே சந்திக்கலாம்னு சொன்னேன்.”  என்று விளக்கம் கொடுத்தவன் அவர்களின் அடுத்த சந்திப்புக்கள் அனைத்தும் அவள் வீட்டில்  அவள் அழைப்பின் பேரிலும் அழையா விருந்தாளியாகவும் நடக்கப் போவதை அவன் அறிந்திருக்கவில்லை.
“குழந்தைங்களுக்கு ஞாயிற்று கிழமைதான் லீவா?”
“போன வருஷம் வரைக்கும் சூர்யாவுக்கு சனிக்கிழமையும் லீவு இருந்திச்சு..இப்போ இல்லை.”
“எந்தக் கிளாஸ் படிக்கறாங்க?”
“தீபா நாலாவது, சூர்யா ஃபர்ஸ்ட்.”
“தீபா ரொம்ப பொறுப்பா இருக்கா..அழகா பர்கரைப் பேக் செய்து எடுத்துக்கிட்டா.” என்று பாத் ரூம் சம்பவத்தைப் பற்றி சொல்லாமல் பர்கர் பேக்கிங்கை மட்டும் பாராட்டினாள் கௌரி.
“நாங்க இரண்டு பேரும் இரண்டு வருஷமா தான் இப்படி இருக்கோம்..அதுக்கு முன்னாடி தீபாவை வீட்டிலே பார்க்க முடியாது..வீதிலேதான் விளையாடிட்டு இருப்பா..என்னையும் வீட்லே பார்க்க முடியாது..எப்போதும் கடைலேதான் இருப்பேன்..என் மனைவிதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க.” என்றான் சிவா.
அதற்குபின் எழுந்த அழுத்தமான அமைதி அவர்களை ஆக்ரோஷத்துடன் ஆக்கிரமிக்க அதை அவளுடைய அழுத்தமான கேள்வியால் உடைத்தாள் கௌரி.
“அவங்க எப்படி இறந்து போனாங்க?”
அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன் சில நிமிடங்கள் கழித்து,
“ஜுரம்..என்ன ஜுரம்னு கண்டுபிடிக்க முடியலே..எங்க தெருவிலே எல்லாருக்கும் இருந்திச்சு..வீட்லேயே எங்க எல்லாருக்கும் வந்திச்சு ஆனா அவளுக்கு மட்டும் சரியாகலை.” 
“டாக்டர் என்ன சொன்னாங்க?”
“அவர் என்ன சொல்லவாரு..ஒரே மாதிரி மாத்திரை, ஒரே மாதிரி ஊசி, ஒரே மாதிரி சிகிச்சை..எல்லாம் ஒரே போலே செய்தும் அவளுக்குக் குணமாகலை..என்னோட தலைவிதி..என் குழந்தைங்களோட துரதிஷ்டம்.” என்றான் வேதனையுடன்.
“குழந்தைங்க அதை எப்படி எடுத்துக்கிட்டாங்க?” என்று அவளை மறுத்தவனின் வாழ்க்கையில் நடந்ததை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினாள் கௌரி.  அவளை வேண்டாம் என்று மறுத்தவனும் அவன் மறுப்பை மறந்துவிட்டு அவன் மனதினை அவளிடம் திறந்தான்.
“தீபாவுக்கு விவரம் இருந்திச்சு..அம்மா இனி வரமாட்டாங்க சாமிகிட்டே போயிட்டாங்கன்னு புரிஞ்சுகிட்டா..சூர்யாவுக்கு ஒண்ணும் புரியலே..இராத்திரிலே அவங்க அம்மாவைத் தேடுவா..எல்லாத்துக்கும் அழுவா, அடம்பிடிப்பா..இன்னும் அப்படித்தான் இருக்கா.” 
“இப்போ குழந்தைங்களை யார் பார்த்துக்கறாங்க?” என்று விவரம் தெரியாமல் வாயைவிட,
“பெத்த அப்பா நான் இருக்கேனே..வேற யார் பார்த்துக்கணும்?..அவங்க அவங்களுக்குக் குடும்பம் இருக்கு..யாரும் யாருக்காகவும் அவங்க வாழ்க்கையை மாத்திக்க மாட்டாங்க.. முடியாது…
வீட்டோட ஓர் ஆள் போட்டிருக்கேன்..ஸ்கூலுக்குத் தயார் செய்ய காலைலேயே வந்திடுவாங்க அப்புறம் இராத்திரி நான் கடைலேர்ந்து திரும்பி வந்த பிறகு போயிடுவாங்க..இன்னைக்கு அவங்களுக்கு லீவு….அவங்க கடைலே, வீட்லே எங்கே வேலை செய்தாலும் ஞாயிற்றுக் கிழமை லீவு கொடுத்திடுவேன்..அந்த நாள்லே இவங்க இரண்டு பேரையும் என் தம்பி வீட்லே  விட்டிட்டு நான் கடைக்குப் போயிடுவேன்..இராத்திரி கடையை மூடிட்டு திரும்பி வரும்போது அழைச்சுகிட்டு வந்திடுவேன்.” 
“எதுக்கு உங்க தம்பி வீட்லே விடறீங்க?” 
“வேற என்ன செய்ய? என்கூட கடைக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியாது..என் வேலை கெட்டுப்போயிடும்..கடையை ஒரு நாள்கூட மூடி வைக்க முடியாது..வியாபாரம் போயிடும்..லீவு நாள்லே தான் நிறைய வேலை வரும்..அந்த மாதிரி நேரத்திலே கடைலே வேலை செய்யற பசங்களை வேறொரு நாள் அவங்க சௌகரியம் போல லீவ் எடுத்துக்கச் சொல்லிடுவேன்..அம்மாவும் அப்பாவும் என்கூட இருக்கும் போது இந்தப் பிரச்சனை வராது..இரண்டு பேரையும் அவங்களே பார்த்துப்பாங்க..சில சமயம் ஆத்திர அவசரத்துக்கு அக்காவும் குழந்தைகளைப் பாத்துக்கறாங்க.” 
“வீட்டை பார்த்துக்க, குழந்தைகளைப் பார்த்துக்க ஆள் போட்டிருக்கீங்க..பக்கத்திலேயே உறவுக்காரங்க இருக்காங்க..இப்படி உதவிக்கு ஆள் இருக்கும்போது எதுக்கு கல்யாணம்?” என்று அவன் கல்யாண நோக்கத்தை சந்தேகத்தோடு நோக்கினாள் கௌரி.
அவர்கள் சந்திப்பின் போது அவன் கொடுத்த விளக்கத்திற்கும் இப்போது அவன் வடிக்கும் சித்திரத்திற்கும் சம்மந்தமில்லை என்று உணர்ந்தவன்,“முக்கியமா என் குழந்தைங்களுக்காகதான்..எப்படியோ இரண்டு வருஷம் சமாளிச்சிட்டேன்.. இப்போ கொஞ்ச நாளா என் பொண்ணுங்களுக்குத் துணை தேவைன்னு தோணுது..அவங்களுக்குன்னு யாராவது வேணுமில்லே..எங்கம்மாவுக்கு வயசாயிடுச்சு..என் தம்பியோட வைஃப்க்கு அவங்க வேலையே சரியா இருக்கு..என் அக்காக்கு அவங்க குடும்பத்தோட பிரச்சனைகளைச் சமாளிக்கவே நேரமில்லை..என் வாழ்க்கைலே எல்லாமே ஆத்திரமும், அவசரமுமா ஆயிடுச்சு அதனாலே அவங்களையெல்லாம் அடிக்கடி தொந்தரவு கொடுக்கற மாதிரி ஆயிடுது.
இரண்டு நாள் முன்னாடி ஒரு பிராஜெக்ட் வேலை இராத்திரி ஒரு மணி வரை இழுத்திடுச்சு..அன்னைக்கு நைட் இவங்க இரண்டு பேரையும் அக்கா வீட்லே விட்டேன்..மறு நாள் காலைலே நாலு மணி போல தான் நான் வீட்டுக்குப் போனேன்..ஆறு மணிகெல்லாம் இவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன் ஆனாலும் ஸ்கூலுக்கு அனுப்ப முடியலை..வீட்லே வேலை செய்யறவங்க லீவு எடுத்துக்கிட்டாங்க..முதல் நாள் இவங்க இரண்டு பேரும் அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்காங்க..அவங்களும் வயசானவங்க..அதான் மறு நாள் லீவு எடுத்திட்டாங்க..இந்த மாதிரி இவங்க பள்ளிக்கூடம் நிறைய நாள் மிஸ்ஸாகுது..ஸ்கூல்லே என்னைக் கூப்பிட்டு வார்னிங் கொடுத்திட்டாங்க..இது எல்லாத்துக்கும் ஒரு நிரந்தரமான தீர்வா மறுபடியும் கல்யாணம் செய்துக்கலாம்னு தீர்மானிச்சேன்.”
“வீட்லே வேலை செய்யற ஆளை மாத்துங்க..உங்க பிராப்ளம் ஸால்வாயிடும்..சின்ன வயசு ஆளை வேலைக்கு வைச்சுக்கோங்க.” 
“அது முடியாதுங்க..இவங்க பணத்துக்காக என்கிட்டே வேலை பார்க்கலை..நான் தனியா கஷ்டப்படறதைப் பார்த்து எனக்கு உதவி செய்யறாங்க..என் கடையைக் கூட்டிப் பெருக்கிக்கிட்டு இருந்தாங்க..இப்போ என் வீட்லே மட்டும் தான் வேலை செய்யறாங்க..அவங்க கஷ்டத்திலே இருந்த போது அவங்க பையனுக்கு என் கடைலே வேலை போட்டுக் கொடுத்தேன்..அந்த நன்றிக்காக தான் இரண்டு வருஷமா என்கூட இருக்காங்க..அவங்க இல்லைன்னா என்ன செய்திருப்பேன்னு தெரியலை.”
“உங்க மனைவியோட ஸ்டைலெர்ந்து யாரும் உதவி செய்யலையா?”
“காயத்ரி இருந்த வரை அவங்க வீட்லே வேற மாதிரி இருந்தாங்க…இப்போ வேற மாதிரி இருக்காங்க.. இவங்க இரண்டு பேரையும் என் குழந்தைங்களா மட்டும் பார்க்கறாங்க…ஒருவேளை இவங்க பொறுப்பை அவங்க தலைலே கட்டிட்டு நான் புது வாழ்க்கை அமைச்சுக்குவேன்னு ஒதுங்கியிருக்காங்க போலே.” 
“அவங்க அப்படி நினைக்கறதைத் தப்பு சொல்ல முடியாது..விவாகரத்து ஆன ஆண்கள், விடோவர்  மறுபடியும் கல்யாணம் செய்துக்கறாங்க..வேற வாழ்க்கைக்குச் சுலபமா மாறிக்கறாங்க..பெண்களாலே அப்படி ஈஸியா மாற முடியறதில்லை..கணவனை இழந்து இல்லை பிரிந்து குழந்தையோட இருக்கற பெண்கள் பெரும்பாலும் தனியாதான் வாழ்க்கையை ஓட்டறாங்க..அவங்களுக்கும் எந்த சைட்லேர்ந்தும் ஆதரவோ, ஒத்துழைப்போ கிடைக்கறதில்லை..அந்த மாதிரி பெண்கள் இன்னொரு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே முடியாது..அப்படிச் செய்தா சமூகம் அவங்களைத் தப்பா தான் பார்க்குது…பெண்களோட நியாயமான, உண்மையான உணர்வுகளை அசிங்கப்படுத்தற சமூகம் அதே சமயம் ஆண்களோட எல்லா ஆசைகளையும், தேவைகளையும் நியாயப்படுத்தது.” என்று சற்று கோபத்துடன் அவள் கருத்தைத் தெரிவித்தாள் கௌரி. அதை வெளியிட்ட பின் தான் மனைவியை இழந்து மறுமணம் செய்து கொள்ள நினைக்கும் சிவா அதை எப்படி எடுத்துக் கொள்ளக்கூடும் என்று யோசனை வந்தது.
அவள் கோபத்தைப் பார்த்துக் கோபமோ, ஆத்திரமோ அடையாமல்,“நீங்க சொல்றது ரொம்ப சரி..நான் இறந்து போய் காயத்ரி உயிரோட இருந்திருந்தா தீபா, சூர்யாவோட அவ தனியாதான் காலத்தை ஓட்டியிருப்பா….பணத்துக்காக கை ஏந்தியிருப்பா..அவ கஷ்டத்தை இரண்டு குடும்பமும் உணர்ந்திருக்க மாட்டாங்க..நான் தேடறது போல இன்னொரு துணையைத் தேட அவளை விட்டிருக்க மாட்டாங்க..துணையில்லாம வாழறது, துணையை இழந்து  வாழறது இரண்டும் கஷ்டம்ங்க..ஆண், பெண் இரண்டு பேருக்கும் அந்த மாதிரி சூழ் நிலைலே ஒரே உணர்வு தான் ஆனா பெண்கள் மட்டும் தனியா எல்லாத்தையும் சமாளிக்கணும்னு ஏன் நம்ம சமூகம் எதிர்பார்க்குதுன்னு எனக்குத் தெரியலைங்க.” என்று அமைதியாக அவள் கருத்தை ஆமோதித்தான் சிவா.
அதுவரை சிவசங்கராக அவளுக்கு அறிமுகமாகி இருந்தவன் அந்த க்ஷணத்தில் அவள் கண்களுக்கு கௌரி சங்கராக தெரிந்ததால் சுப்ரமணியன் ஸருக்கு என்ன பதில் சொல்ல வேண்டுமென்று தெளிவானாள் கௌரி.

Advertisement