Advertisement

புதுமணம் : மறுமணம் 
அத்தியாயம் – 1
“வயிறு வலிக்குது.” என்றது வலியுடன் ஒரு குரல்.
“இப்படி உட்காரு..கொஞ்சம் முன்னாடி வா..” என்று இரண்டாவது குரல் கட்டளையிட,
“விழுந்திடுவேன்.” என்றது முதல் குரல்.
“என்னைப் பிடிச்சுக்கோ.” என்றது இரண்டாவது குரல்.
சிறிது மௌனத்துக்குப் பிறகு,
“போயிட்டேன்.” என்றது சிறிது நிம்மதியுடன் முதல் குரல்.
“தண்ணீர் ஊத்தறேன்.” என்றது இரண்டாவது குரல். சில நொடிகள் கழித்து,
“ஜட்டி ஈரமாயிடுச்சு.” என்றது பதற்றத்துடன் முதல் குரல்.
“பின்னாடி கழுவும் போது  ஜட்டியைக் கீழே இறக்க மாட்டியா? என்று இரண்டாவது குரல் கோபமாகக் கேட்க,
“நீதான் புஸ்ஸுன்னு தண்ணி அடிச்சிட்டே.” என்று அழுகையுடன் சொன்னது முதல் குரல்.
“ரொம்ப டைட்டா இருந்திச்சு அதான் ஜோரா அழுத்திட்டேன்..ஸாரி..அழாத.” என்று மன்னிப்பு கேட்டது இரண்டாவது குரல்.
அடுத்த வாஷ் ரூமிலிருந்த கௌரியின் காதுகளில் அந்த உரையாடல் அப்படியே விழுந்தது.  சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் கதவைத் திறந்து கொண்டு வெளியேறின.
அவர்களுக்காக வெளியே காத்திருந்த, பாத் ரூமைகளைச் சுத்தம் செய்யும் பெண்மணி, வெளியே வந்த குழந்தைகளிடம்,
“தரையை ஈரமாக்கினீங்களா?” என்று கடுமையுடன் கேட்க, குழந்தைகள் இருவரும் பதில் சொல்லத் தெரியாமல் அவளைப் பயத்துடன் பார்த்தனர்.
அப்போது அவளுடைய கதவைத் திறந்து வெளியே வந்த கௌரியிடம்,
“குழந்தைகளைத் தனியா பாத் ரூம் அனுப்பிட்டு அம்மாகாரிங்க கடை கடையா சுத்த வேண்டியது..இதுங்க தரையை ஈரமாக்கி எல்லா இடத்தையும் அசிங்கம் செய்ய வேண்டியது.” என்று ஆத்திரமாகப் புகார் படித்தார் அந்தப் பெண்மணி.
அவர் புகாரைப் புறக்கணித்து விட்டு வாஷ் பேஸினிற்குச் சென்ற கௌரி, அந்தக் குழந்தைகளிடம்,
“இங்கே வந்து கையைக் கழுவிக்கோங்க.” என்று அவள் கழுவிக் கொண்டிருந்த குழாயின் அருகே அழைத்தாள்.
உடனே அவள் அருகே வந்தன குழந்தைகள் இருவரும்.  பெரிய பெண்ணிற்கு  எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்.  சின்ன பெண்ணிற்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். இரண்டு பேரும் காட்டன் ஃபிராக், கால்களில் ரப்பர் ஸ்லிப்பர், ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி என்று சாதாரணமாகத் தோற்றமளித்தனர். அவர்கள் இருவரில்  பெரியவள் அவளாக எம்பி கையைச் சோப்பு போட்டுக் கழுவிக் கொள்ள, சின்னவள் அவள் உயரத்திற்கு வாஷ் பேஸின் இல்லாததால் அவள் அக்காவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மேலும் சிலர் கை கழுவ வந்தனர்.  உடனே பெரியவள் அவள் கைகளில் சோப்பைத் தேய்த்து அதே கைகளைத் தங்கையின் கையோடு சேர்த்துத் தேய்த்துவிட்டு, நுரை வந்தவுடன், முதலில் அவள் கைகளைக் கழுவிக் கொண்ட பின் அவள் தங்கையைத் தூக்கிக் கொள்ள, அவள் தங்கை அவள் கைகளைக் கழுவிக் கொண்டாள்.  அந்தக் குழந்தைகள் இருவரும் யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் கைகளைக் கழுவி, துடைத்துக் கொண்டு வெளியே சென்றனர்.  அவர்கள் வெளியே சென்றவுடன் அவளிடம் புகார் படித்த அந்தப் பெண்ணிடம்,
“அந்தச் சின்ன குழந்தைங்க தரையிலேயே பாத் ரூம் போயிருந்தாக்கூட அதைக் கழுவி விட வேண்டியதுதான் உங்க வேலை..அதுக்குதான் நீங்க சம்பளம் வாங்கறீங்க..அவங்க அம்மா ஷாப்பிங் செய்யறாங்களோ இல்லை சாப்பாடு செய்யறாங்களோ அது உங்களுக்குத் தேவையில்லாதது.” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு ரெஸ்ட்ரூமை விட்டு வெளியேறினாள் கௌரி. 
அந்தப் பெரிய பெண்ணின் பொறுப்பைப் பார்த்து ஆச்சர்யமடைந்து இருந்தாள் கௌரி.  அவளுடைய சிறு வயது அவளுக்கு நினைவுக்கு வந்தது.  அவள் அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தபின் அவளுக்கு வேண்டியதை அவளே தயார் செய்து கொண்டு நேரம் தவறாமல் தினமும் பள்ளிக்குப் போனது. அதே போல்  மாலை வேளையில் பள்ளியிலிருந்து திரும்பியவுடன் வீட்டுப் பாடத்தை முடித்து விட்டு இரவு உணவிற்கு வேண்டியதைத் தயார் செய்து, இருவரின் அழுக்குத் துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு என்று எல்லா நேரத்திலும் அம்மாவிற்கு உதவியாக இருந்து வீட்டு வேலைகளைச் சிரமமாக நினைக்காமல் சிரத்தையோடு செய்யக் கற்றுக் கொண்டது என்று அந்த நினைவுகளின் தொடர்ச்சியாக கடைசியாக அம்மா அவளிடம்  விடைபெற்றுக் கொண்டதும் அவள் கண்முன் வந்தது.  அதற்குமேல் அந்த நினைவுகளோடு போராட விருப்பமில்லாமல் அவைகளைக் கட்டயாமாக வெளியேற்றி அந்த மாலின் சூழலில் அவளைத் தொலைக்க ஆயுத்தமானாள் கௌரி.
அடுத்த வந்த நிமிடங்களில் அங்கே இருந்த கடைகளை ஒவ்வொன்றாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் துணிக் கடையொன்றின் உள்ளே போக எத்தனித்த போது அவளுடைய கைப்பேசி ஒலித்தது.  அதை ஏற்றவளுக்கு அழைப்பது யார் என்று தெரிந்தவுடன்,
“சொல்லுங்க.” என்றாள். அந்தப் புறம் சொன்னதைக் கேட்டு அவள் ஃபோனுடன் ஃபுட் கோர்ட்டை நோக்கிச் சென்றாள். அதன் வாயிலில் நின்றபடி ஃபோனில் பேசிக் கொண்டே கண்களால் தேடியவளின் பார்வையில் அவள் சந்திக்க வந்த நபர் ஒரு மூலையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.  கலைந்த தலைமுடி, சோர்ந்த கண்கள், ட் ரிம்  செய்யப்படாத தாடி, மீசை, கசங்கிய சட்டை, இடது கையில் ஃபோன், வலது கையில் சிறு பர்கர் துண்டு என்று முழுவதுமாக அவன் தோற்றத்தை உள்வாங்கி கொண்டிருந்தவளின் எண்ணங்களைப் பின்னுக்குத் தள்ளினர் அவனது இரு புறத்திலும் அமர்ந்திருந்த, ரெஸ்ட் ரூமில் பார்த்த இரண்டு பெண் குழந்தைகள். 
சில நொடிகள் நிலை தடுமாறி மறுபடியும் அவள் கவனத்தை அவன் மீது திருப்பியவளுக்கு அவனுடைய முப்பத்தியெட்டு வயதைவிட ஒரிரு வயது கூடுதலாக தோற்றமளித்தவனின் தோற்றம் சிறிது ஏமாற்றத்தை அளித்தது.  இரண்டு குழந்தைகளின் அப்பா வேறு எப்படி இருப்பான் என்று அவள் மனது கரெக்ட்டாக கேள்வி கேட்க, அதை அந்த நொடியில் அடக்கிவிட்டு அவனிருந்த மூலைக்குச் சென்று அவனெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். சுப்ரமணி ஸரிடம் இவன் ஃபோட்டோவைக் கேட்டிருந்தால் இந்த ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அவன் எதிரே அமர்ந்தவுடன் சற்றுமுன் அவள் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடை கொடுத்துக் கொண்டாள் கௌரி. 
அவன் ஃபோட்டோவைக்  கேட்க தயங்கியதற்குக் காரணம் அவளுக்கு அது முதல் புதுமணம்.   அனுபவயின்மை ஏற்படுத்திய தயக்கம்.
அவனெதிரே அமர்ந்த பெண்ணை அதிர்ச்சியில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவசங்கர். மா நிறம், சாதாரண உயரம், கண்களில் கண்ணாடி, கூந்தலை ஒன்றாகச் சேர்த்து பின்னலிடாமல் பொனிடெயில், காதுகளில் சின்னதான வளையம், அடர் நீல நிறத்தில் வெள்ளைப் பூக்களை வாரியிறைத்தக் குர்த்தி, வெளீர் நீல நிறத்தில் ஜீன்ஸ், ஒரு கையில் ஃபோன் மற்றொரு கையில் கைப்பை.  
இருபத்தியைந்து வயது தோற்றத்துடன் இருந்தவளுக்கு உண்மையில் முப்பத்தி இரண்டு வயது என்று சொல்ல முடியாதபடி இளமையாகத் தெரிந்தாள். சுப்ரமணி ஸரிடம் அவளின் ஃபோட்டோவை முதலிலேயே பெற்றுக் கொண்டிருந்தால் இந்த அதிர்ச்சியைத் தவிர்த்திருக்காலாம் என்று தோன்றியது சிவாவிற்கு. அவளின் ஃபோட்டோவை அவன் கேட்க தயங்கியதற்குக் காரணம் அவனுக்கு அது மறுமணம். அனுபவம் ஏற்படுத்திய தயக்கம்.
அவனின் அமைதியை அளவிட்டு கொண்டிருந்த கௌரி,“ஹலோ..நான் கௌரி..கௌரி லக்ஷ்மி.” என்று அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“நான் சிவா..சிவசங்கர்..இவங்க இரண்டு பேரும் என் பொண்ணுங்க..பெரியவ தீபா, சின்னவ சூர்யா.” என்றான் சிவா.
குழந்தைகள் இருவரையும் பார்த்து,”ஹலோ” என்றாள் கௌரி.  அவர்கள் இருவரும் ஒருவித மிரட்சியுடன் அவளை மௌனமாகப் பார்த்தனர்.  “ஹலோ” சொல்லுங்க என்று சிவா அவர்களை அதட்டியவுடன், பெரியவள் தீபா மட்டும் கௌரியைப் பார்த்து,”ஹலோ.” என்றாள்.
“ஸாரி..முதல்ல உங்களைதான் மீட் செய்யணும்னு நினைச்சேன் ஆனா கிளம்பி வரக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு..அப்புறம் இரண்டு பேரும் பசின்னு சொன்னாங்க அதான் கியூவுலே நின்னு சாப்பிட வாங்கி கொடுத்திட்டு உங்களுக்கு ஃபோன் செய்தேன்.” என்று தாமததிற்கு வருந்தி, விளக்கம் கொடுத்தான் சிவா.
குழந்தைகள் இருவரும் ரெஸ்ட் ரூம் சென்றதை அவனும் பகிர்ந்து கொள்ளவில்லை அவளும் அவர்களை அங்கே பார்த்ததை அவனிடம் சொல்லவில்லை. அவனுக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் உட்கார்ந்திருந்த மெக்டனல்டை சுற்றிக் கண்களை ஓட்டினாள் கௌரி.  பாதிக்கு மேல் பெற்றோர்களும், குழந்தைகளும், மீதி கல்லூரி செல்லும் இளவட்டங்கள்.  அவளைப் போல் முப்பது வயதைத் தாண்டிய, துணையில்லாத, தனியான ஆண், பெண் யாரும் அவள் கண்ணில் படவில்லை.
“பரவாயில்லை..பசிக்கும் போதும், சாப்பாடு சூடா இருக்கற போதும் சாப்பிட்டாதான் சாப்பாட்டோட அருமையும் சுவையும் தெரியும்….சூடு ஆறிடப் போகுது..சாப்பிடுங்க.” என்று சிவாவிடமும், அவன் குழந்தைகளிடமும் சொன்னாள் கௌரி.
அவளிடமிருந்து அந்த மாதிரி விரிவான விளக்கத்தை எதிர்பார்க்காதவன், ஒருவேளை இவளுக்கும் இப்போது பசியோ என்று நினைத்து,”நீங்களும் ஏதாவது சாப்படறீங்களா?” என்று அவளைக் கேட்க,
“வேணாம்.” என்று ஒரே வார்த்தையில் மறுத்தாள் கௌரி.
அதற்குள் அவனுடைய சின்ன பெண் சூர்யா சேரிலிருந்து இறங்கி அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.  பெரிய பெண் தீபா அவளெதிரே இருந்த பர்கரை கவனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன..சாப்பிடலையா நீ?” என்று சூர்யாவிடம் சிவா கேட்க,
“வேணாம் பா..எனக்குத் தூக்கமா வருது.” என்று சொல்லி அவன் மேல் சாயந்து கொள்ள பார்த்தாள்.
“பசிக்குதுன்னு சொன்ன..இப்போ தூக்கம் வருதுன்னு சொல்ற..சாப்பிடாம தூங்கக்கூடாது.” என்று கண்டிப்புடன் சொன்னான் சிவா. உடனே சூர்யாவின் கண்கள் குளமாகின.  அவள் அழப் போகிறாள் என்று உணர்ந்த அவளின் அக்கா,
“அப்பா..அவளுக்கு உடம்பு சரியில்லை..வயிற் வலிக்குதுன்னு சொன்னா..தூங்கட்டும் பா.” என்று சிபாரிசு செய்தாள்.
உடனே சூர்யாவை அவனோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சிவா.  அதைப் பார்த்து கொண்டிருந்த கௌரியிடம், மீண்டும்,”ஸாரி..இவங்க இரண்டு பேருக்கும் இங்கே வர பிடிக்கும் அதான் நம்மளோட சந்திப்பை இங்கே வைச்சுக்கலாம்னு நினைச்சேன்..ஆனா இன்னைக்கு இவங்களுக்கு இங்கே வர பிடிக்கலை..கட்டாயப்படுத்தி அழைச்சுக்கிட்டு வந்தேன்..என் குடும்பத்தை நீங்க பார்க்கணும்..அவங்களும் உங்களைப் பார்க்கணும்னு விரும்பினேன்.” என்றான்.
“நான் இந்த மாதிரி இடத்துகெல்லாம் வர்றதில்லை..யாராவது வற்புறுத்தி கூப்பிட்டாதான் இங்கயெல்லாம் வருவேன்.” என்றாள் கௌரி.
“ஏங்க..இங்கே நிறைய கடைங்க இருக்கு..சினிமா தியெட்டர் இருக்கு..எல்லா விதமான சாப்பாடும் கிடைக்கும்..ஒரு மூன்று மணி நேரம் இலவசமா ஏசியை அனுபவிக்கலாம்.” என்று காரணங்களை அடுக்கினான் சிவா.
ஆசை இருக்கும்போது காசைத் தேடிப் போனாள். இப்போது காசு இருக்கும்போது ஆசை எங்கே போனதென்று தெரியவில்லை.  அதை இவனுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் கௌரி.
அவனுக்குப் பதில் சொல்ல அவள் விரும்பவில்லை என்று உணர்ந்த போதுதான் அவன் அதிகப்படியாக பேசியது புரிந்தது சிவாவிற்கு. மேலும் நேரத்தை விரயமாக்க விரும்பாமல்,
“உங்களுக்கு சுப்ரமணியன் ஸர் நல்ல பரிச்சயமா?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“நான் குடியிருக்கற காம்ப்லெக்ஸ்லே அவரும் குடியிருக்காரு.” என்றாள்.
“ஸார் என்னோட கஸ்டமர்….அவங்க க்ரூப்போட எல்லா விஷயமும் என் கடைலேதான் ப்ரிண்ட் செய்வாங்க.” 
“நீங்க ப்ரிண்டிங் பிரேஸ் வைச்சிருக்கீங்களா?” என்ற அவள் கேள்வியில் அவனைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது என்று தெரிந்து கொண்டான். அதை எப்படி எடுத்துக் கொள்ளுவது என்று அவன் மனம் ஆராய்ச்சி செய்ய, வாய் மட்டும் விவரங்களைப் பகிர்ந்து கொண்டது.  
“இல்லைங்க..டிஜிட்டல் டிஸைனிங், ப்ரிண்டிங் கடை வைச்சிருக்கேன்..இன்விடெஷன், புக்லெட்ஸ்,ஸ்கூல் ரிப்போர்ட் கார்ட், பிராஜெக்ட் எல்லாம் செய்து கொடுப்போம்..என்னைத் தவிர என் கடைலே மூணு பேர் வேலை செய்யறாங்க.” என்று 
“எங்கே இருக்கு உங்களோட கடை?” என்று கௌரி விசாரிக்க, அவன் சொன்ன இடமும் அவள் வீடும் வெகு தூரத்திலிருந்தன.
“சுப்ரமணி ஸார் அவ்வளவு தூரம் வந்து உங்க கடைலே ப்ரிண்ட் செய்யறாரா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்க,
“அவங்க க்ரூப் என் கடை பக்கத்திலே இருக்கற கோவில்லே வாரம் ஒருமுறை சந்திச்சுப்பாங்க..அவங்க எல்லாரும் கலந்து பேசின பிறகு என் கடைக்கு வந்து ஆர்டர் கொடுப்பாங்க..ஏதாவது மாத்தணும்னா அவங்க எல்லாரும் திரும்ப சந்திக்கும்போது சுலபமா இருக்கம்னு என்கிடடே வர ஆரம்பிச்சாங்க.. அது அப்படியே ஒரு நல்ல உறவா மாறிடுச்சு.” என்றான் சிவா. 
அவன் சொல்லாமல் விட்டது அவன் மனைவி காயத்ரி இறந்தபின் அவனுடைய குடும்பம் அவனருகில் இருந்தும் அவனின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யாமல் அவரவர் வாழ்க்கையில் அத்தகைய அசம்பாவிதம் ஏற்படவில்லை என்று அவனிடமிருந்து அவர்கள் விலகி நிற்க, அந்தச் சமயத்தில் அவரின் நட்பால் அவனை அரவணைத்து அந்த அசம்பாவிதத்தைக் கையாள அவனின் ஆசனாக மாறி அவன் வாழ்க்கையை வழி நடத்தியது சுப்ரமணி ஸர்தானென்று.
“எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு சுப்ரமணி ஸர் நல்ல பரிச்சயம்…அவர் மூலமாதான் இப்போ நான் குடியிருக்கற ஃபிளாட்டை விலைக்கு வாங்கினேன்..முன்னே அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போவேன் அதனாலே அவங்களைச் சந்திக்கற வாய்ப்பு குறைவா இருந்திச்சு..இப்போ கொஞ்சம் நாளா வெளியூர் பயணத்தைக் குறைச்சிட்டேன்..அவரும் டூரைக் குறைச்சிருக்காரு அதான் நாங்க இப்போ நேர்லே சந்திச்சுக்க முடியுது..அப்படி ஒரு சந்தர்பத்திலே தான் என்னைப் பற்றி யோசிக்க வைச்சாரு.” என்று சொன்ன கௌரி சொல்லாமல் விட்டது அவளுடைய அம்மா கல்யாணி இறந்த பின் அவள் தனியாக உணர்ந்ததை புரிந்து கொண்டு அவளுடைய குடும்பமாக மாறி அவளை அரவணைத்து சென்றது சுப்ரமணி  ஸர்தானென்று.
இருவரும் அவர்கள் வாழ்க்கை மாறிய அந்த நிகழ்விலிருக்க, சிறிது நேர மௌனத்திற்குப் பின்,“எங்கே வேலை பார்க்கறீங்க?” என்று நிகழ்விற்கு வந்தான் சிவா.
“ஒரு தனியார் கம்பெனிலே..அகௌண்ட் ஸெக்‌ஷலே.. மேலாளர்.” என்றாள் கௌரி.
“மார்கெட்டிங் ஆளுங்கதான் வெளியூர் போவாங்க..நீங்க எப்படி?”
“வெளியூர்லே இருக்கற கிளைகளை ஆடிட் செய்ய போவேன்..இப்போ எனக்கு கீழே வேலை செய்யறவங்களை அனுப்பறேன்.” 
“எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க?” 
“பதினாலு வருஷமா..பதினெட்டு வயசுலே பார்ட்டைமா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்..அப்புறம் முழு நேரம்..மூணு கம்பெனி..இப்போ இருக்கற கம்பெனிலே ஆறு வருஷமா இருக்கேன்..எம்பிஏ முடிச்ச பிறகு இந்தக் கம்பெனிலே வேலைக்குச் சேர்ந்தேன்.” என்று அவள் வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து அந்த நிமிடம் வரை அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.
“நான் தபால் மூலம் பி.காம் படிச்சேன்..அப்படியே டிஜிட்டல் டிஸைனிங், ப்ரிண்டிங் கத்துக்கிட்டேன்..நானும் பதினெட்டு வயசுலேர்ந்து தொழில்லே இருக்கேன்….கம்பெனிலே வேலைக்குப் போனதில்லை..எங்கப்பா சின்னதா நியூஸ்பேப்பர், வாரப் பத்திரிக்கை கடை வைச்சிருந்தாரு..அதையே நான் எனக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டேன்..எனக்கு ஒரு தம்பி, ஓர் அக்கா இருக்காங்க..
என் தம்பியும் பட்டதாரி.. தனியார் கம்பெனிலே வேலை பார்க்கறான்..அவன் மனைவி ஹவுஸ் வைஃப்..ஒரு பெண் குழந்தை..நாலு வயசு..என் அக்கா எங்க வீட்டு பக்கத்திலேதான் இருக்காங்க..இரண்டு குழந்தைங்க அவங்களுக்கு..பையன் பன்னிரெண்டாவது படிக்கறான்..பொண்ணு எட்டாவது..மாமா ரியல் எஸ்டெட் பிஸ்னஸ்..என்னோட அப்பா, அம்மா இரண்டு பேரும் இப்போ என் தம்பி குடும்பத்தோட இருக்காங்க.” என்று அவன் குடும்ப வரலாற்றை சொன்னான் சிவா.
அப்போது,
“அப்பா, சூர்யாவோடது நானே சாப்பிடட்டுமா?” என்று கேட்டாள் தீபா.
“வேணாம்..அவ எழுந்திரிச்சவுடனே கேட்பா..அவளோடதை தொடாத..பேப்பர்லே சுத்தி வை..வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிடலாம்.” என்ற சிவா, அவன் மீது தூங்கிக் கொண்டிருந்த சின்ன மகளின் முகத்தை அன்புடன் தடவிக் கொடுத்து, தீபாவிடம்,”என்னோடதையும் சேர்த்துப் பாக் செய்திடு..வீட்டுக்குப் போய் இரண்டு பேரும் ஷேர் செய்து சாப்பிடுங்க.” என்றான்.  
அவள் அப்பா சொன்னபடி டிஷ்யு பேப்பரில் இரண்டு பர்கர்களையும் பாக் செய்த தீபா, “கிளம்பலமா பா.” என்று சிவாவிடம் கேட்டாள்.
அவனின் இரு குழந்தைகளில் ஒருத்தி தூங்கிவிட, மற்றொரு குழந்தை வீட்டிற்குப் போக நினைக்க, அங்கே வந்ததற்கான காரணம் அவனெதிரே இன்னும் அமர்ந்திருக்க, ஒரு முடிவிற்கு வந்த சிவா,
“இரண்டு குழந்தைங்களோட அப்பாவை எதுக்கு இரண்டாவதா கல்யாணம் செய்துக்க நினைக்கறீங்கண்ணு எனக்குப் புரியலை..
நீங்க பார்க்கறத்துக்கு இருபத்தி அஞ்சு வயசு பொண்ணு மாதிரி இருக்கீங்க, நிறைய படிச்சிருக்கீங்க, நல்ல வேலைலே இருக்கீங்க..இவ்வளவு நாள் பொறுமையா ஒரு துணைக்காக காத்திருந்தீங்க..இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமையும்..
என்னோட அனுபவத்திலே சொல்றேன் முதல் கல்யாணம் ஏற்படுத்தற உணர்வு வேற..எதிர்பார்பு, ஏமாற்றம் அதனாலே ஏற்படற காயங்கள் எல்லாத்தையும் அந்தக் கல்யாணக் கனவு கரைச்சிடும்..இப்போ எனக்கு அப்படியில்லை.. என் எதிர்பார்ப்போட ஏமாற்றத்தை தாங்கிக்கற சக்தி எனக்குக் கிடையாது..காயங்களைக் கடந்து வரக் கனவோட நடக்கற கல்யாணமில்லை இது…
வாழ்க்கையின் நிஜங்களோட நடத்தப் போற போராட்டம்..கடமையை நிறைவேத்த செய்துக்க போற கல்யாணம்….. என்னைப் போல ஏமாற்றத்தை கடந்து வந்தவங்க, காயப்பட்டவங்க, மீண்டுமொருமுறை ஆழம் தெரியாத ஆற்றிலே தைரியமா நீச்சல் செய்யத் தயாரா இருக்கறவங்க, என்னைப் போல குழந்தைங்களோட நிராதரவா இருக்கறவங்க தான் இதுக்கு, எனக்கு செட்டாவாங்க….கனவும், நிஜமும் ஜோடி சேர முடியாது.”என்று கௌரிக்கு அவன் மறுப்பை, விருப்பமின்மையைத் தெளிவாக விளக்கி விட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து புறப்படத் தயாரானான் சிவா. அதற்கு மேல் என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.
கௌரியிடம் தலை அசைவில் விடை பெற்றுக் கொண்டவனின் நிஜமும் சிவாவிற்குத் தலை அசைவில் விடை கொடுத்தவளின் கனவும் ஒன்று சேரப் போவதை அவர்கள் இருவரும் அந்த க்ஷணம் உணரவில்லை.
மனித வாழ்க்கை என்பதே அவரவர் கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் நடுவே ஏற்படும் போராட்டம், உடன்படிக்கை, வெற்றிகள், தோல்விகள் தானே. 

Advertisement