Advertisement

அத்தியாயம் – 9
மாலினியின் கேள்விக்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள் கௌரி. உடனே,
“உள்ளே வா” என்று மாலினி அழைக்க, வாசலை விட்டு அகலாமல்,
“அக்கா, அம்மாவைக் கூப்பிடுங்க கா.” என்றாள்.
“நீ உள்ளே வா.” என்று கௌரியின் கையைப் பிடித்து அவளை வீட்டினுள் இழுத்து வாசல் கதவைச் சாத்தினாள் மாலினி.
இதுவரை அவள் கையைப்பிடித்து  அவளை வீட்டிற்கு வெளியே தள்ளியவர்களை மட்டும் சந்தித்திருந்த கௌரிக்கு கை பிடித்து உள்ளே அழைத்த மாலினி வித்தியாசமாகத் தெரிந்தாள். அப்போது வீட்டின் தொலைப்பேசி அழைக்க, “அவி, அதை எடு..அப்பாவா தான் இருப்பாங்க.” என்றாள் மாலினி.
“என்னாலே முடியாது.” என்று மறுத்தான் அவி.
உடனே ஓடிப் போய் அறையின் கோடியிலிருந்த தொலைப்பேசியை எடுத்தவுடன்,”சொல்லுங்க பா.” என்றாள். அந்தப் புறம் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் கடைசியில்,
“இங்கே தான் இருக்கா..இப்போதான் வந்தா..தனியா..சரி.” என்று பதில் அளித்து விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
“அக்கா, அம்மா எங்கே க்கா?” என்று மறுபடியும் கேட்டாள் கண்களால் அவள் அம்மாவைத் தேடிக் கொண்டிருந்த கௌரி.
“எங்கம்மாவோட கல்யாணி ஆன் ட்டி ஆஸ்பத்திரி போயிருக்காங்க..இப்போ வந்திடுவாங்க..நீ உட்கார்ந்துக்கோ.” என்று கௌரி அமர்வதற்காக ஒரு ஸ்ட்டுலைக் கொண்டு வந்து போட்டாள் மாலினி. அதன்பின் அவினாஷின் அருகில் அமர்ந்து அவளும் படிக்க ஆரம்பித்தாள்.   அவள் அம்மா எப்போது வருவார் என்ற கவலையோடு அமைதியாக அமர்ந்திருந்தாள் கௌரி. 
சில நிமிடங்கள் கழித்து அவன் நாற்காலியிருலிருந்து எழுந்து ஃபிரிஜ்ஜை நோக்கிச் சென்றான் அவினாஷ். ஃபிரிஜ்ஜின் நேரெதிரே அமர்ந்திருந்தாள் கௌரி.  அப்போது தான் அவள் ஃபிரிஜ் என்ற பொருளையே பார்க்கிறாள்.  அதைத் திறந்தவுடன் அதன் உள்ளிருந்தவற்றை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  
அப்போது,”மூணு ஜுஸ் பேக்கெட் எடு..கௌரிக்கு இரண்டு..எனக்கு ஒண்ணு.” என்று அவள் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து தலையை நிமிர்த்தாமல் கட்டளையிட்டாள் மாலினி.  ஃபிரிஜ்ஜின் கதவில் நிறைய ஜுஸ் பேக்கெட்டுகள் இருந்தன.  அதிலிருந்து மூன்று விதமான ஜுஸ்களை வெளியே எடுத்தவன்,  ஒன்றைக் கௌரியிடம் கொடுக்க, அதை வேண்டாமென்று தலையசைவில் அவள் மறுக்க, அதை அவள் தலையை உயர்த்தாமல் கண்டு பிடித்த மாலினி,
“பூதம்னு சொன்ன வாய்க்கு ஜுஸ் கிடையாது.” என்றாள். உடனே,
“அக்கா..” என்று கத்தினான் அவினாஷ்.
“இந்த வீட்டு விதிமுறை உனக்குத் தெரியும்.” 
அதைக் கேட்ட பின்னும் அவினாஷ் அமைதியாக இருக்க,
“அவி..அப்பா வரட்டும்.” என்று மாலினி சொன்னவுடன், இரண்டு ஜுஸ்  பேக்கெட்டுகளையும் கௌரியின் கைகளில் திணித்து விட்டு மூன்றாவதை மாலினிக்குக் கொடுத்து விட்டு அவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவினாஷ்.  அவள் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, கைகளில் இருந்த ஜுஸ் பேக்கெட்டுகளைப் பிரிக்காமல் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கௌரியின் அருகில் வந்த மாலினி, அவளுடையதைப் பிரித்தவுடன்,”உன்னோடது கொடு.” என்று கௌரி கையிலிருந்த இரண்டு ஜுஸ்களில் ஒன்றைப் பிரித்துக் கொடுக்க,”தாங்க்ஸ் க்கா.” என்று சொல்லி விட்டு அதை மாலினியை போல்  குடிக்க ஆரம்பித்தாள் கௌரி. 
“கௌரி, உனக்குத் தான் இரண்டும்….உன்னைப் பூதம்னு சொன்னானில்லே அதுக்கு தான் பனிஷ்மெண்ட்.” என்றாள் மாலினி.
அவள் ஜுஸைக் குடித்து முடித்தவுடன்,“அண்ணாவை மன்னிச்சிடுங்க க்கா.’ என்று மாலினியிடம் சொல்லி விட்டு டைனிங் டேபிளிலருகே சென்று அங்கே அமர்ந்திருந்த அவினாஷின் கையில் அந்த ஜுஸைத் திணித்தாள் கௌரி.  அதை மறுக்காமல் பெற்றுக் கொண்டு ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு,”தாங்க்ஸ்” என்று கௌரியிடம் சொன்ன அவினாஷ், சில நொடிகள் கழித்து,”ஸாரி கௌரி.” என்றான்.    
அன்று அவள் குடித்த அந்த ஜுஸின் சுவை சுவடாக அவள் மனத்தில் இன்றுவரை இருக்கிறது. அவள் கனவுகளின் அரிச்சுவடி அந்த முதல் துளி, ஆரம்பம் அந்த நொடி, .  அதே போல் ஒரு ஃபிரிஜ் அதில் நிறைய ஜுஸ் பேக்கெட்டுகள்.. அவளின் முதல் கனவு.  அந்த ஒரு சொட்டு சுவையில் ஆரம்பித்த கனவின் பயணம் அவள் உழைப்பில் வாங்கிய சொந்த வீட்டை அடைந்த பின் தான் அதன் பயணத்தை முடித்துக் கொண்டது.  
அந்த ஒரு துளி கனவை நிறைவேற்ற படிப்படியாக எத்தனை தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது.  சில தடைகளைக் கடக்க முடியாமல் தடுமாறிய போது அதைத் தகர்க்க சொல்லிக் கொடுத்தது மாலினி. தவிர்க்க சொல்லிக் கொடுத்தது ராம கிருஷ்ணன் அங்கிள். தாங்கிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தது மேகலா ஆன்ட்டி. தாண்டச் சொல்லிக் கொடுத்தது அவினாஷ். 
பழையதை உடுத்தி பழையதைச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டிருந்தவளுக்கு புதியவைகளை அறிமுகப்படுத்தி அதை அடைவதற்கு ஊக்குவித்து, அவள் கனவுகளுக்கு ஆதரவளித்து, ஆசைகளை அரவணைத்து, அவை நிஜமான போது அவளுக்காக அவளைவிட அதிகமாக ஆனந்தமடைந்தவர்கள் மேகலா ஆன் ட்டியும் ராம கிருஷ்ணன் அங்கிளும். 
கல்வி கண்களைத் திறக்கும் ஆசிரியர்களால் தான் பலரின் கனவுகளை ஒரே போல் பார்க்க முடியும், ஒரே கனவை பலரின் கனவாக மாற்ற முடியும்,  காலம் காலமாய் மூடியிருக்கும் பல மனக்கதவுகளைத் திறக்கும் திறவுகோலாக மாற முடியும். 
அன்றைய தினத்தை நினைத்தபடி அமர்ந்திருந்த கௌரியிடம்,”அவங்க வர லேட்டாகும்..எனக்கு டயமாகுது..நான் சாப்பிடப் போறேன்…நீயும் சாப்பிடறேயா?” என்று கேட்டார் மேகலா.
“வேணாம்..நான் அவங்களோடவே சாப்பிடறேன்.” என்று சொல்லி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜைத் திறந்தவள்,”எத்தனை யுனிட்?” என்று மேகலாவைக் கேட்க,
“எட்டு.”
சரியாக அந்த அளவில் இன்ஸுலினை எடுத்து வந்தவள்,”எங்கே?” என்றவுடன், 
“இரண்டு கையும் வலிக்குது.” கால்லே போட்டு விடு.” என்று அவர் நைட்டியைத் தூக்க, “மத்தியானம் சுகர் செக் செய்தீங்களா?” என்று அவருடன் பேசியபடி மருந்தைச் செலுத்தினாள்.  
“செய்தேன்..200 இருந்திச்சு.”
அடுத்த சில நிமிடங்கள் அவர் தொடர்ந்து டிவி பார்க்க, அவளுடைய அறைக்குச் சென்று வேறு உடைக்கு மாறி வெளியே வந்தாள். டி வி பார்த்துக் கொண்டிருந்த மேகலாவிடம்,
“ஆன் ட்டி, டைனிங் டேபிளா இல்லை சின்ன டேபிளா?” என்று கேட்டாள்
“சின்ன டேபிள்..டிவி பார்த்துக்கிட்டு சாப்பிடறேன்.”
அவர் சாப்பிட ஏதுவாகச் சின்ன மடக்கு டேபிளை அவர் கால்களில் விரித்து வைத்தாள்.  சமையலறைக்குச் சென்று அங்குத் தயாராக இருந்த உணவிலிருந்து மூன்று சப்பாத்தி, ஒரு கிண்ணத்தில் முட்டை கோஸ் கூட்டு இரண்டையும் ஒரு தட்டில் வைத்து எடுத்து சென்று டேபிள் மீது வைத்தாள்.  உடனே அதைச் சாப்பிட ஆரம்பித்த மேகலா, 
“கொஞ்சம் ஊர்காய் போடு.” என்றார்.
“வேணாம்..கூட்டைத் தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க.”
“ரொம்ப கொஞ்சம் போடு கௌரி.”
“முடியாது.” என்று திட்டவட்டமாக மறுத்த கௌரி,”அங்கிள் உங்களுக்குத் தினமும் ஊர்காய் கொடுக்கறாரா…அண்ணனுக்குத் தெரியுமா? அவர் இங்கே இருக்கும் போதே இதெல்லாம் நடக்குதா?” என்று கேள்விகள் கேட்க,
“யாரும் எந்தச் சலுகையும் கொடுக்கறதில்லை..இனிப்பு, உப்பு சாப்பிடாம இன்னும் எத்தனை நாள் இப்படிக் கஷ்டப்படணுமோன்னு தான் இதையெல்லாம் சாப்பிட்டா சீக்கிரமா போயிட மாட்டேனான்னு நினைச்சுகிட்டுக் கேட்கறேன்..ஆரோக்கியமா இருந்த கல்யாணி போயிட்டா.. வியாதிங்களோட நான் அப்படியே இருக்கேன்.” என்று சொன்னவரின் கண்கள் கலங்கின.  
அப்போது கார் ஓசை கேட்க, வாசல் கதவைத் திறக்க போனாள் கௌரி.  அவள் கதவைத் திறந்தவுடன் சிதார்த்தும் அவனுக்குப் பின்னே நித்யாவுடன் அனன்யாவும் உள்ளே நுழைந்தனர். “கௌரி அத்தை” என்று அவள் கால்களைக் கட்டிக் கொண்ட சிதார்த்தைத் தூக்கிக் கொண்ட கௌரியிடம்,
“அவனை இறக்கி விடு..அவன் மேலே ஒரே மணல்..பயங்கர ஆட்டம் போட்டான்.” என்றாள் நித்யா.
“பரவாயில்லை..இவனோட திரும்ப குளிச்சா மணலெல்லாம் போயிடப் போகுது..இவனைக் கொண்டு போய் உங்க ரூம்லே விட்டுடறேன்.” என்று சிதார்த்தை அவினாஷின் அறைக்குத் தூக்கிக் கொண்டு போனாள் கௌரி. அவள் பின்னே நித்யா சென்றவுடன் வீட்டினுள் நுழைந்தனர் ராமகிருஷ்ணனும் அவினாஷும்.
“கௌரி எங்கே மா?” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மேகலாவிடம் விசாரித்தான் அவினாஷ்.
“சிதார்த்தைக் குளிக்க அழைச்சுக்கிட்டுப் போயிருக்கா.”
அவன் உடையிலிருந்த மணலை முடிந்த அளவு வாசலில் உதறி விட்டு பாதி ஈராமாகயிருந்த உடையுடன் அவனறைக்குச் செல்ல, அவனைத் தொடர்ந்து உள்ளே சென்ற ராமகிருஷ்ணனிடம்,
“நீங்களும் ஈரமா?” என்று மேகலா விசாரிக்க,
“கடலுக்குப் போயிட்டு கால் கூட நனைக்காம வர முடியுமா?” என்று கேட்டவரின் இடுப்பு வரை ஈரமாகியிருப்பதைப் பார்த்தவர்,”காலா இல்லை கழுத்து வரையா?” என்று புன்சிரிப்புடன் கேட்டார் மேகலா.
“என்ன செய்ய? வாங்க தாத்தான்னு உள்ளே இழுத்துக்கிட்டுப் போயிட்டான் சிதார்த்.”
“இன்னும் கொஞ்சம் பெரியவனா இருந்தா யார் யாரை இழுத்துக்கிட்டு போனாங்கண்னு அவனே என்கிட்டே சொல்லிடுவான்….போங்க..உள்ளே போய் குளிச்சிட்டு வாங்க.”
அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து,“இன்ஜெக்‌ஷன் கௌரி போட்டுவிட்டாளா?” என்று கேட்டார்.
“ம்ம்..நான் தான் போட்டுக்கணும்னு நினைச்சேன்..அவ வந்திட்டா..
அப்போது உள்ளறையிலிருந்து வெளியே வந்த கௌரி,”அங்கிள்..அலைலே மோதிக்கிட்டீங்களா? இப்படி அடிப்பட்டு வந்து நிற்கறீங்க? என்று சிரிப்புடன் கேட்க ,
“அவர் கால் வரை தான் கடல் வந்திச்சு கௌரி..ஆனா கழுத்து வரை ஈரமாயிட்டாரு.” என்று கிண்டலாகச் செய்தார் மேகலா. உடனே,
“ நாம பீச் போனா என்ன செய்வோம்னு உனக்குத் தெரியாதா கௌரி.”
“அலைகளோட ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு..கரெக்ட்தானே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் கௌரி.
“கரெக்ட் டா..அப்படித் தான் டா..உன் ஆன் ட்டிக்கிட்டே சொல்லு..நான் குளிச்சிட்டு வரேன்.” என்று அவரறைக்குச் சென்றார் ராம கிருஷ்ணன்.
அவர் அங்கிருந்து சென்றவுடன்,”பசங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சு..பேரன், பேத்தியும் வந்தாச்சு..இன்னும் நீ சின்ன பொண்ணா இருந்த போது சொன்ன அதே காரணத்தைச் சொல்லிக்கிட்டு திரியறாரு.” என்று சலித்துக் கொண்டார் மேகலா.
தன்னுடைய வியாதிகளுடன் போராடிக் கொண்டே கல்லூரி, மருத்துவமனை இரண்டு இடங்களிலும் தவறாமல் அட்டெண்ட்ஸ் கொடுத்த மேகலா ஆன் ட்டி, அவருக்குத் துணை நின்ற ராம கிருஷ்ணன் அங்கிள்,  வீடு,பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி மூன்றையும் சமாளிக்கத் திண்டாடிய மாலினி, அவினாஷ்.  இந்தச் சூழ் நிலையில் அந்தக் குடும்பத்துடன் அவள் அம்மாவும் அவளும் நிரந்தரமாக இங்கே குடியேறிய பின் சில விஷயங்களைக் குழந்தைகளுக்காக கட்டாயமாகச் செய்ய ஆரம்பித்தனர் பெரியவர்கள்.  அதில் மாதத்தில் ஒருமுறை கடற்கரை செல்வது கட்டாயமாக்கப் பட்டது.
அவளை முதன் முதலில் கடற்கரைக்கு அழைத்து சென்றது ராம கிருஷ்ணன் அங்கிள் தான்.  இதே போல் ஒரு மாலை பொழுதில் அவள் அம்மா கல்யாணியை மேகலா ஆன் ட்டிக்குத் துணையாக வைத்துவிட்டு அவர்கள் நால்வரும் பீச் சென்றனர்.  
குழந்தைகள் அனைவரும் பெரியவர்களான பின்னும் அந்த வீட்டில் இருந்தவரையிலும் அந்தப் பழக்கம் தொடர்ந்தது. மாலினி, அவினாஷ், கௌரி மூவரும் அவர்கள் கார் ஓட்டும் திறமையைக் கடற்கரை சாலையில் தான் மெருகேற்றிக் கொண்டனர். மற்றவர்கள் மாலையிலோ இரவிலோ கடற்கரைக்குச் சென்றால் விடிவதற்கு முன் செல்வது மாலினி அக்காவின் வழக்கம்.  வெள்ளி விலகி வெளிச்சத்திற்கு இடம் கொடுக்கும் வரை அலைகளோடு விளையாடி, உறவாடி, நகையாடி, அமைதியாகி என்று அவரால் மட்டும் தான் நொடிக்கு நொடி மாறும் அலைகளோடு சேர்ந்து ஆர்பாட்டமாகவும் அமைதியாகவும் எல்லைக்கோடு இல்லாமல் எப்போதும் எதனோடும் எல்லாரோடும் ஓன்றிப் போக முடியும். அதன் விளைவாக எப்படி என்றே தெரியாமல் கல்யாணி ஆன் ட்டி கல்யாணி அம்மாவானார், மராட்டிக்காரனின் மனைவியானாள் மாலினி.
பூனாவில் வேலைக்குச் சேர்ந்து சில வருடங்கள் கடந்த நிலையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை அவர்கள் அனைவரும் காலை நேர உணவிற்காக மேஜையில் ஒன்று கூடியிருந்த வேளையில் விட்டலுடன் வீட்டிற்கு வந்திறங்கி, “என்னோட கணவனாகணும்னு விருப்பப்படறான்.” என்று அலட்டாமல் விட்டலை அறிமுகப்படுத்தி வைத்தாள் மாலினி.  
அதன் பின் மேகலா ஆன்ட்டியை அவன் முன் நிற்க வைத்து அவரின் வாழ்க்கையின், வியாதிகளின் சரித்திரத்தைச்  சொல்லி, அனைத்துக் காகிதங்களையும் அவனிடம் ஒப்படைத்து,”அப்பா, அம்மாகிட்டே உனக்கு என்ன கேட்கணுமோ கேட்டுக்கோ..இந்த மாதிரி அம்மாவைப் பார்த்திட்டு என்னை வேணாம்னு சொல்லிட்டு போனவங்க ஏராளம்..எனக்கும் இந்த மாதிரி ஆகிடும்னு யோசிச்சு அதுக்காக என்னோட வருங்காலத்துக்கும் சேர்த்து பணம் கொடுத்தா என்னைக் கட்டிக்கத் தயாரா இருந்தாவங்க அதைவிட ஏராளம்.  எதுவும் வேணாம்..நான் மட்டும் போதும்னு சொல்றே..என்னைக் கல்யாணம் செய்துகிட்ட பிறகு இந்தக் காரணத்தை வைச்சு நமக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்தா உன்னைக் கொன்னு போட்டிடுவேன்.” என்று கல்யாண செய்ய விருப்பம் தெரிவித்தனை டைனிங் டேபிளிலிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு அவள் அங்கிருந்து அகலுமுன், “மாலினி..இன்னைக்கு இங்கே வந்தது உனக்காக..எனக்கு இந்த விவரமெல்லாம் தேவையில்லைன்னு சொல்லிட்டேன்.” என்றான் விட்டல்.
“வாலிபத்திலே வியாதியெல்லாம் பெரிசா தெரியாது..அதுக்கு அப்புறம் எனக்கும் திடீர்ன்னு எங்கம்மாவைப் போல காரணம் தெரியாம கண்ட கண்ட வியாதி வந்து நான் படுத்துக்கிட்டா எங்கப்பாவைப் போல நீயும் என்னைப் பார்த்துப்பேயா?” என்று அனைவரின் முன்னிலையில் விட்டலின் காதலைச் சோதித்தவளிடம்,
“எங்கம்மா, அப்பாக்கு எனக்குத் தெரிஞ்சு எந்த ஹெல்த் பிராப்ளமும் கிடையாது..எனக்கும் இதுவரை எதுவும் கிடையாது..கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு ஏதாவது இந்த மாதிரி ஆச்சுன்னா உங்கம்மாவை உங்கப்பா பார்த்துக்கறது போல நீ என்னைப் பார்த்துபேயா?” என்று பதிலுக்கு அவன் கேட்க,
அவனை நோக்கி டைனிங் டேபிள் மேல் இருந்த ஆப்பிள் பறந்து வந்தது.  அதைக் கரெக்ட்டாக் கேட்ச் பிடித்து சாப்பிட ஆரம்பித்த விட்டல், மெதுவாக நடந்து வந்து மாலினியை அவனோடு அணைத்து,”தாங்க்ஸ்..லெட்ஸ் ஸ்டார்ட் அவர் ஹெல்தி லைஃப் மை வைஃப்.” என்று அவன் எண்ணத்தை வெளியிட்டான். 
அந்த அறையிலிருந்த அனைவரும் மாலினி, விட்டல் உரையாடலில் வெளிப்பட்ட அன்பை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  மாலினி, விட்டல் இருவரும் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, உணவு, உடை என்று எந்தப் புள்ளியிலும் பொருந்தவில்லை. ஆனால் அவர்களின் மனப் பொருத்தம் எல்லாவற்றையும் மழுங்கயடித்தது.  
இன்று, இரண்டு குழந்தைகளுக்குப் பின் அவர்கள் இருவரின் அன்பு இன்னும் ஆழமாகியிருந்தது. அந்த ஆழத்தில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமிழ்ந்து போய் இருந்தனர்.  கல்யாணியின் கடைசி காரியங்களைக் கங்கை கரையில் முன் நின்று நடத்தியது விட்டல் தான்.  கௌரிக்குத் துணையாக இருந்து அனைத்தையும் முடித்துக் கொடுத்து அவளைச் சென்னையில் மேகலா ஆன் ட்டியிடம் ஒப்படைத்த பின் தான் பூனா திரும்பிச் சென்றனர் மாலினியும் விட்டலும். 
********************************************************************
“Children are not vessels to be filled but lamps to be lit”
“Not sickness but health is a Mystery.”
—Swami Chinmayananda Saraswati

Advertisement