புதுப்புது அர்த்தங்கள்…. நாள்– 32(1)  (இறுதி அத்தியாயம்)

அத்தியாயம் 87

மறுநாள் காலை உணவு வேளையில் விஸ்வா,  ராஜியிடம் பேச முயல , அவர் அமைதியே கடைபிடித்தார் .

 விஸ்வா சங்கரனையே பார்க்க , அவர் கண்களால் தைரியப்படுத்த ,

“ஸாரி அம்மா ,  அப்பா சொன்னார் தானே , ஒரு பதட்டத்தில்… ஸாரி அம்மா…” என்று கையைப் பிடித்தான் . 

இக்காட்சியைக் கண்டவுடன், சந்தியாவிற்குப் பதற ஆரம்பித்தது. அது அவள் முகத்தில் பிரதிபலிக்க,

ராஜி அதைக் கவனத்தில் கொண்டார் . 

“இதைப் பற்றி நாளை வளைகாப்பிற்குப் போய் விட்டு வந்து பேசலாம் விஸ்வா…” என்று எழுந்தார்.

“அம்மா….” என்று மீண்டும் விஸ்வா ஆரம்பிக்க,

“நாளை பேசலாம் விஸ்வா… எனக்கு யோசிக்க வேண்டும்..” என்று நகர்ந்தார்.

வளைகாப்பிற்கு வர ஒத்துக் கொண்டதே நம்பிக்கையைத் தர, விஸ்வா அமைதியானான்.

சந்தியா அருகே வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்

மண்டபமே சுற்றம் சூழ  நிரம்பியிருக்க , எங்கும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட,

 சுவாமிநாதனும் , சுந்தரியும் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர் . 

 ராஜி குடும்பத்துடன் வர , அன்புடன் அழைத்து , ராகவ்விடம் கவனிக்கும்படி சொல்ல ,

ராகவ் அனைவரையும் பார்த்துத் திகைத்தவன் , பின் சகஜமாகி அவர்களை வரவேற்று அமர வைத்தான் . சற்று தள்ளியிருந்த ராமநாதனும் கோகிலாவும் கூட வந்து வரவேற்று செல்ல ,

அவர்களின் மேன்மையைக் கண்டு , ராஜி சங்கடமாக உணர்ந்தாள்.

 ரகுவோ ரஞ்சனியை விட்டு நகராமல், கூடவே இருந்து கவனித்துக் கொண்டிருந்தான் . மேடையில் இருந்து  ஒரு தலையசைப்புடன் வரவேற்றான்.

 மேடையில் ரகுவைப் பார்த்து விட்டு , ரஞ்சனியின் பெற்றோரை ராஜி பார்க்க , அவர்கள் முகத்தில் அப்படியொரு பூரிப்பும் சந்தோஷமும் நிறைந்திருந்தது .

அதேவேளை சந்தியாவும், விஸ்வாவிடம் அதே காட்சியைக் கண்களால் காண்பிக்க, புரிந்து கொண்டவன், நானும் அடுத்த குழந்தைக்கு, இதே போல் இருப்பேன் என்று அதேபோல் கண்களால் ஜாடை பேச,

சந்தியா வெட்கப்பட்டாள்.

ரஞ்சனிக்கு ஒவ்வொருவராக வந்து வளையல் பூட்ட , அன்பான குடும்பம், கொண்டாடும் கணவன் , அனுசரனையான புகுந்த வீடு   என அனைவரும் சூழ்ந்திருக்க , ரஞ்சனி மிளர்ந்தாள் . 

அவள் தன்னம்பிக்கை, மேலும் அழகைக் கூட்டியிருந்தது . 

விழா இனிதே முடிந்தது . 

கூட்டம் குறையத் தொடங்க , எல்லாரும்  சாப்பிட்டு விட்டு ,  விசிராந்தையாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் . ஊருக்குக் கிளம்ப நிறைய நேரம் இருக்க , ரஞ்சனியைப் படுக்கச் சொல்லி அறைக்கு அனுப்பியிருந்தனர்.  

அப்போது ராஜி ரகுவை அழைத்து , தான் ரஞ்சனியைப் தனித்துப் பார்க்க விரும்புவதாகக் கூற , ரகு சற்றுத் தயங்க ,

“நீயும் கூட இருக்கலாம் ரகு  .”

“ஒரு நிமிடம்….” என்றவன் , பெற்றோரிடமும் , ரஞ்சனி குடும்பத்திடமும் விசயத்தைச் சொல்ல ,

அவர்களிடைய  சின்ன குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது. 

“நான் கூட இருக்கிறேன் மாமா . பார்த்துக் கொள்ளலாம் …” என்று தைரியமூட்ட,

அவர்களும் ரகு மீதிருந்த நம்பிக்கையில், சரியென்றனர் .

 ராஜியை அழைத்துச் செல்ல , அறைக்குள் வந்தவர் , ரஞ்சனியைப் பார்த்துப் புன்னகைக்க ,  “வாங்க…” என்று வரவேற்று , அருகில் இருந்த இருக்கையைக் காண்பிக்க ,  

ராஜி அமர்ந்தார். 

ரஞ்சனி அருகே ரகு ஆதரவாக அமர , ராஜி  மெலிதாகச் சிரித்தார்.

“உனக்கு அருமையான கணவர் கிடைத்திருக்கிறார் ரஞ்சனி” என்று பாராட்ட ,

ரஞ்சனி பெருமிதத்தோடு , “ஆம்” என்று தலையாட்டினாள்.

இடைபுகுந்த ரகு , “எனக்கும் அற்புதமான மனைவி கிடைத்திருக்கிறாள்” என்று தோளணைத்தான் . 

“உங்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு” என்றவர், ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு ,  “இந்தச் சிறிய வயதில் உங்களுடைய பக்குவம் , பரந்த மனப்பான்மை , பெருந்தன்மை…   என்னை ஆச்சரியப்படுத்துகிறது  . நானெல்லாம் வயதில் மூத்தவராக இருந்தும்….” என்று கசந்த முறுவலைச் சிந்தினார் . 

“பழசை விடுங்க ஆன்ட்டி….”  என்றான் ரகு

 “மன்னித்து விடு ரஞ்சனி . நான் மிகவும் சுயநலவாதியாக இருந்து விட்டேன் . உனக்கு நியாயம் செய்யவில்லை . நான் ஊனத்துடன் இருந்து விட்டு, உன்னை ஊனம் என்று விலக்கியிருக்கிறேன்..சுயநலமாக என் மகன் வாழ்வை மட்டும் யோசித்து, குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் நடந்து விட்டேன்.” என்று வெற்றுச் சிரிப்பைச் சிந்தினார்.

“ விடுங்க ஆன்ட்டி…”

“இல்லை ரஞ்சனி , இது விட்டு விடக் கூடிய விசயமில்லை , அதிலும் விஸ்வாவிற்கு, நீங்கள் செய்த உதவி  , நினைத்தே பார்க்க முடியவில்லை . என் மகனின் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்துள்ளீர்கள்  . உங்களுக்குக் கோடி நன்றிகள்…” என்று கை கூப்ப ,

“ நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம்…” என்று ரகு வேகமாக அவர் கையை இறக்கினான்.

“நன்றாக இருங்கள்…  வாழ்க வளமுடன்…” என்று வாழ்த்தி விட்டு, விறுவிறுவென நகர , 

“ஆன்ட்டி…” என்று ரஞ்சனி பேச முனைய ,

அவள் கைகளை அழுத்தித் தடுத்தான் ரகு.

 ரஞ்சனி அவனைப் பார்க்க , ரகு அவளை கண்களால் அமைதிப்படுத்தினான்.

ராஜி கிளம்ப,

“ஏன் சந்தியாவைப் பற்றிப் பேச விடவில்லை ரகு ?”

“தேவையில்லை ரஞ்சனி . அவர் மகனுக்காக எதுவும் செய்வார் என்பதற்கு இதுவே சாட்சி….” 

வெளியே வந்த ராஜி , பின், “இரு குடும்பத்தாரிடமும் , அருமையாக பிள்ளைகளை வளர்த்துள்ளீர்கள்” என்று பாராட்டி விட்டுக் கிளம்பினார் .

புதுப்புது அர்த்தங்கள்.. நாள்- 32(2)

அத்தியாயம் 88

வீட்டுக்கு வந்த பின் , அறையில் சங்கரனிடம் , “நான் என் பிள்ளையைச் சரியாக வளர்த்திருக்கிறேன் , எல்லாம் பெஸ்டாகக் கொடுத்திருக்கிறேன் , கொடுப்பேன் என்று இறுமாந்திருந்தேன். 

ஆனால் இன்று ரஞ்சனியையும் , ரகுவையும் பார்த்தப் பின் தான், நான் எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கிறேன் என்று புரிகிறது..” என்று வருத்தப்பட,

“என்ன புரிகிறது ராஜி?”

“அவள் வாழ்க்கையில் அடித்த புயலை எதிர் கொண்டு, ஜெயித்திருக்கிறாள். அதற்கு அவள் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து, அவளை வழிநடத்தி இருக்கிறார்கள்.

இதே இடத்தில் நான் இருந்திருந்தால் , அழுது புலம்பி, தவித்து ,  நானும் வருந்தி, அவனையும் நம்பிக்கை இழக்கச் செய்திருப்பேன். அனைத்தையும் அவன் கையில் கொடுத்து , வீட்டிலேயே அவனை முடக்கி இருப்பேன்.”

சங்கரன் தீர்க்கமாகப் பார்க்க,

“நீங்கள் சொன்னீர்கள் தான், எனக்கு அப்போது புரியவில்லை. என் மகனுக்கு அனைத்தையும் பெஸ்டாகத் தரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதை அவனே முடிவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை.

என் குழந்தை கஷ்டப்படாமல் வளர வேண்டும் என்று நினைத்தேனே தவிர அவனை உலகத்தை எதிர் கொள்ள தயார்படுத்த வேண்டும் என்று தோன்றவில்லை. நான் பிறந்ததில் இருந்து இப்போதைய நிகழ்வைத் தவிர, எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்த மாதிரி, என் மகனும் வாழ்ந்து விடுவான் என நினைத்தேன்…” என்று பெருமூச்சு விட,

சங்கரனின் பார்வை மேலும் கூர்மையாக ,

“ஆனால் அதற்குக் காரணம், நீங்கள் எனக்குக் கணவனாக அமைந்தது தான் என்று இப்போது புரிகிறது. அனைத்தையும் ஆழ்ந்து யோசித்து , தேவையான இடத்தில் பிடிவாதமாக இருந்து, விட்டு கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து என்று இருந்ததால்தான் நான் அப்படியே ராஜகுமாரியாகவே இருந்திருக்கிறேன் என்பது வாழ்க்கை அடித்து புரிய வைத்திருக்கிறது” என்று அவரின் தோளில் சாய்ந்தார் ராஜி.

பின், “ரொம்ப கஷ்டமாக இருக்குதுங்க. என்னுடைய  குணம் , ஒரு பெண்ணை விரக்தியின் எல்லைக்கே தள்ளியிருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்குதுங்க..

நான் எதையும் வேண்டுமென்று செய்யவில்லை, எல்லாம் என் மகனுக்கும், பேரனுக்கும் பெஸ்டாகக் கிடைக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அதற்கு இப்படியொரு ஒரு அர்த்தம் வரும் என்றும் அதனால் இப்படியொரு பாதிப்பு  வரும் என்று கனவிலும் கூட யோசிக்கவில்லை.. நீங்களாவது சொல்லியிருக்கலாமே…?” என்று வருத்தத்துடன் கேட்க,

“நீ சொல்லித் திருந்தும் ரகம் இல்லை பட்டுத் திருந்தும் ரகம் ராஜி.. இன்று சந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். உன் மகன் கஷ்டப்படுகிறான் என்ற பின் தான் யோசிக்க ஆரம்பிக்கிறாய்.”

ராஜி கோபமாகப் பார்க்க,

“விஸ்வா வளர்ப்பில் எவ்வளவு பேசியிருப்பேன் , கேட்டாயா? அதே போல் தான் இதுவும் , நீ செய்வது தவறு என்ற சிந்தனையே இல்லாத போது , நான் என்ன சொன்னாலும் , புரிந்திருக்காது, உன் காதில் ஏறியும் இருக்காது. 

வீட்டில் எல்லா நேரமும் பிரச்சனைகள் மட்டுமே இருந்திருக்கும். எல்லோருக்கும் மனக்கஷ்டமும், வருத்தமும் மட்டுமே மிஞ்சியிருக்கும்…” என்றார் ஓர் சலிப்புடன்..

“வீட்டுப் பெரியவர்களாய்,, நாம் வழி நடத்தலாம் ராஜி. ஆனால் அவர்கள் வாழ்க்கையை நாம் வாழக்கூடாது. ஆலமரத்தின் கீழ் செடிகள் வளர்வதில்லை ராஜி…

உன்னை மட்டும் குற்றம் சொல்ல முடியாது , மாமாவும் , உன்னை ஒற்றைப் பிள்ளை , அம்மா இல்லாத பிள்ளை என்று உன் இஷ்டத்திற்கு, உன் முடிவுக்கே விட்டதன் விளைவு … நீ ஆதிக்க மனோபாவத்துடன் வளர்ந்து விட்டாய். 

அது போல் சந்தியாவின் பெற்றோர்கள் , சுதந்திரமான சூழ்நிலையில் வளர்க்காமல் , அவளை அடக்கி ஒடுக்கி வளர்த்ததன் விளைவு . சந்தியாவும், தைரியமான பெண்ணாக எதிர்த்து போராடாமல் , குறைந்தபட்சம் அதைப்பற்றி பேசக் கூடத் தயங்கி , பயந்து  உடல்நிலையை கெடுத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் இதே ரஞ்சனியை எடுத்துக் கொள் , காலை இழந்தது, கல்யாணம் நின்றது என்று அடுத்தடுத்து பல சோதனைகள் வந்த போதும் , நின்று ஆடி , இன்று நல்ல நிலைமையில் உள்ளாள்.

“ ‘குழந்தை வளர்ப்பு’ என்பது குழந்தையை சுகவாசியாகவோ, அவர்கள் இஷ்டத்திற்கோ,  மிகுந்த கண்டிப்புடனோ வளர்ப்பது இல்லை….. , 

சுதந்திரமான சிந்தனையுடன்,  எல்லா காலச் சூழலுக்கும் தயார்படுத்தி வளர்ப்பது தான், சரியான வளர்ப்பு.”

ராஜியும் அமைதியாக அனைத்தையும் ஆமோதிக்க ,

‘சங்கரன் மனதில் குடும்பத்தில் மாற்றத்திற்கான விதை விழுந்து விட்டது ‘ என்ற நம்பிக்கை வந்தது.

“ இந்தப் பிரச்சனைகளுக்கு என்ன செய்யப் போகிறாய் ராஜி?”

“மனசெல்லாம் கனக்கிறது. எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் தவிக்கிறேன்…. என் மகன்… என் மகன்….” என்று மீண்டும் கண்கலங்க,

ராஜி தெளிவில்லாமல் இருப்பதைப் புரிந்து கொண்டவர், “சொல்லியிருக்கலாமே? பேசியிருக்கலாமே? என்றாயே இப்போது சொல்கிறேன். கேள்…”

“சொல்லுங்க….”

“உன் குணத்திற்குத் தனிந்து போவது மிகவும் கடினம். இப்போது இருக்கும் சூழ்நிலையில், நீ இளகியிருக்கிறாய். ஆனால் நாளாக நாளாக,  இதை உன்னால் நீடிக்க முடியாது. மிகவும் கஷ்டம்.

இப்போது சந்தியா நன்றாக இருக்கிறாள் தான். ஆனால் இதுவே நிரந்தரம் என்று நினைக்க முடியாது.”

“ஏன்?”

“சந்தியா மிக மென்மையானவளாக இருக்கிறாள். நாளை ஏதேனும் ஒரு சொல் அவளைக் காயப்படுத்திவிட்டாள் , மீண்டும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் திரும்ப வர அதிக வாய்ப்புகள் உள்ளது. அதன்பின் விஸ்வாவும், ஆகாஷும் தான் கஷ்டப்படுவார்கள்

இந்த முறை கடவுளின் கிருபையால் , உன் மகன்  பிரச்சினையில் இருந்து மீள ரஞ்சனி–ரகு வந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி நடக்காதே…. “

சூழ்நிலையை நன்றாகச் சீர் தூக்கிப் பார் , உங்கள் மூவருடைய குணத்தையும் அலசி ஆராய்ந்து பார். உன்னால் நிச்சயமாக, தீர்க்கமான முடிவை எடுக்க முடியும் . இப்போது கொஞ்ச நேரம் தூங்கு. மாலை பேசலாம்…” என்று வழக்கம் போல் கோடிட்டு விட்டு, ஆறுதலாக கையைப் பிடித்துக் கொண்டார்.

ராஜியும் சிறிது நேரம் அனைத்தையும் அசை போட்டு விட்டு , ஒரு முடிவுக்கு வந்தவராய் , ஒரு பெருமூச்சுடன் கண் மூடினார்.

அத்தியாயம் 89

மாலை ஹாலில் அனைவரும் கூடியிருக்க , “நம்ம போரூர் பிளாட்டிற்குத் தனி குடித்தனம் போய் விடு விஸ்வா…”

விஸ்வா அதிர்ந்தான்.

சங்கரன் ஒரு மெச்சுதலுடன் மெதுவாக , “சரியான முடிவு ராஜி” என்று பாராட்டி , கையைப் பிடித்தார் .

ராஜி கண்ணில் வலியோடு சிரிக்க ,

 “இது உனக்கு எவ்வளவு கஷ்டமான முடிவு என்றும் எனக்குப் புரிகிறது . ஆனால் நிச்சயமாக, இந்த முறையும் உன் மகனுக்குப் பெஸ்டைத்தான் தந்துள்ளாய்…” என்று தட்டிக் கொடுத்தார் .

இங்கு நடக்கும் நிகழ்வுகளை எதையும் உணராமல், விஸ்வா அதிர்ச்சியில் திகைத்து நின்றான்.

“விஸ்வா…” என்று ராஜி அழைக்க, சுதாரித்தவன், “அம்மா…. ஒரு பதற்றத்தில் பேசிவிட்டேன்  , அதற்கு இப்படியொரு தண்டனையா?”

“தண்டனையா?  உனக்குத் தண்டனை தர  அம்மாவால் முடியுமா விஸ்வா ? எல்லாம் உன் நன்மைக்குத் தான் விஸ்வா….” என்று எப்போதும் போல் சொல்லி, ராஜி மென்னகை புரிய ,

“ஏன் அம்மா?” 

“நான் இதுவரை உன்னை கைக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தேன் . அதனால் உனக்கான பல அனுபவங்களை , பாடங்களைத் தடுத்துள்ளேன் என்பது எனக்குப்  புரியவில்லை விஸ்வா . ஆனால் காலம் இப்போது  தெளிவாக விளக்கிவிட்டது .  உன் பாதிப்பும் புரிந்து விட்டது .”

“அம்மா…..”

“இப்போது இதைச் சரி செய்வதற்கான ஒரே வழி , உன் பாதையை நீயே தேர்ந்தெடுத்து வாழ்வது தான் . இங்கு இருந்தால் உன்னாலும் முடியாது . என்னாலும் தலையிடாமல் இருக்க முடியாது .”

விஸ்வாவிற்கும் நிதர்சனம் புரிந்தது . பின் , “அம்மா….” என்று மடியில் தலை வைக்க , அவன் தலையைக் கோதியபடி , 

“ நீ நிம்மதியாக உன் வாழ்க்கையைப் பார் .  நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் விஸ்வா. அது தான் எனக்கு வேண்டும்” 

விஸ்வாவிற்கும் நிலவரம் தெளிவாகப் புரிந்தது, ‘வேறு வழியில்லை’ என்றும் தெரிந்தது. ஆனாலும் மனம் தாளாமல்,  “என்னைப் பிரிந்து உங்களால் இருக்க முடியுமா அம்மா?”

“உனக்கு நல்லது என்றால், என்னால் முடியும் விஸ்வா..” என்று முடிக்கும்முன்,

 அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டான் . 

விஸ்வாவின் அருகே வந்த சங்கரன் , அவன் தோளில் தட்டி,  “உங்கள் மூவர் இயல்பிற்கும் சேர்ந்து பயணிப்பது மிகவும்  கஷ்டம் விஸ்வா . தள்ளி இருந்தால் தான் உறவு வலுப்படும்  . பக்கத்தில் தானே இருக்கிறோம் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம்…” 

விஸ்வா அரை மனதாகத் தலையாட்ட , 

“இனிமேல் தான், உனக்குப் பொறுப்புகள் கூடுகின்றன . அதையும் மனதில் கொண்டு செயல் படு” என்று வழக்கம் போல் கோடிட்டார்  .

இவை அனைத்தையும், படபடப்புடன் பரிதவிப்புடன் சந்தியா பார்த்துக் கொண்டிருக்க,

இதைக் கவனித்த விஸ்வா, அவள் அருகில் செல்ல,

இதைக் கவனித்த சங்கரன், விஸ்வாவை  மெச்சுதலுடன் பார்த்தவர், அடுத்த நிமிடமே, ராஜியின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

பின், “இரண்டு பக்கமும் தவறுகள் நடந்துள்ளன . அதை மறந்து , மன்னித்து, அடுத்து கட்டத்திற்கு நகருங்கள் . குடும்ப நிம்மதிக்காக, சந்தோஷத்திற்காக, இருவரும் இணக்கமாக இருக்க முயலுங்கள்” என்று ராஜியின் தர்ம சங்கடத்தைத் தடுக்க , அவரே களத்தில் குதித்து சமரச பேச , 

இருவரும்  “சரி” என்பது போல் தலை அசைத்தனர் .

மேலும் சங்கரன் சந்தியாவிடம் , “உனக்கு ஏதும் பிரச்சனை என்றால் வெளியே சொல்லம்மா, எல்லா நேரமும் அவன் உன் மனதைப் படித்துக் கொண்டே இருக்கமுடியாது. ஒருவருக்கொருவர் பேசி, தவறுகளைச் சரி செய்து கொண்டு, இணைந்து வாழுங்கள் வளருங்கள்.”

முக்கியமாக, உங்கள் வளர்ப்பில் படித்த வாழ்க்கைப்பாடத்தை வைத்து, ஆகாஷைத் தெளிவானவனாகவும் , தைரியமானவனாகவும் வளருங்கள்.”

“சரி மாமா” என்றாள் சந்தியா.

மனைவியை விட்டுக் கொடுக்காது , அதே வேளையில் குடும்பத் தலைவன் பொறுப்பில் இருந்து நழுவாது , பிரச்சனையை எதிர் கொண்டு சரியாகக் கையாளும் அப்பாவைக்  கண்டு வியந்தான் .

 இதை நாமும் தொடர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான் விஸ்வா .

“ எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள்…” என்று குனிய,  அனுபவங்களைக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை சிறப்பாக  அமைத்துக் கொள்ளுங்கள்” என்று  வாழ்த்த ,

“கட்டாயமாக… ” என்று இருவரும் எழ,  இதைப் பார்த்து ஆகாஷும் காலில் விழ , 

“படவா …..” என்று ராஜி தூக்கிக் கொஞ்ச , அங்கே இருந்த மனநிலை மாற , அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது .

காலம் எல்லா காயங்களையும் ஆற்றட்டும்…. நாமும் இவர்கள் சிறப்புடன் வாழ , வாழ்த்தி விடை பெறுவோம் .

அன்புடன்,

சு.சண்முகபிரியா…