புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-9

அத்தியாயம் 26

மாலை சங்கரன்  எழுந்து வரும் பொழுது வீடு அமைதியைத் தத்தெடுத்திருக்க , 

காபியுடன் வந்த சுதாவிடம் , “அம்மா எங்கே?” என்று விசாரித்தார் 

 “கோவிலுக்கு போயிருக்கிறார்கள் ஐயா .”

“விஸ்வா?”

“அண்ணன் கடைக்குக் கிளம்பிவிட்டார்.”

“ஓ…. !”:என்று மட்டும் சொன்னவர், பின் அவர் மருத்துவமனைக்குச்  சென்றார்  . 

இவர் உள்ளே நுழைந்தவுடனே , அனைவரின் பார்வையும் அவர் பின்னால் செல்ல , 

அங்கே விஸ்வா இல்லாததைக் கண்டு, ஏதோ புரிந்தது போல் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர் .

“வாங்க…” என்று ராமநாதன் அழைக்க ,

காலையில் வாய் நிறைய அழைத்த ‘சம்பந்தி’ என்ற வார்த்தை காணாமல் போனதைக் குறித்து கொண்டார் . “ரஞ்சனியைப் பார்க்கலாமா?” என்று சங்கடத்துடன் சங்கரன் கேட்க 

“வாங்க ஸார்..” என்று ராகவ் கூட்டிச் சென்றான்  . 

சங்கரன் கசங்கிய முகத்துடன் , அவனைப் பின் தொடர்ந்தார்  . 

ஐ.சி.யு. விற்குள் நுழைந்தவுடனே , அவளுடைய முகமே , அவளுக்கு நிலைமை தெரிந்து விட்டதை  எடுத்துக் காட்டியது . பொதுவாக  அவளைப் பார்த்து  புன்னகைத்தார் .  

ரஞ்சனியின் கண்கள் கலங்க , அத்தனை வேதனையிலும் இவரைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள் . 

இதைக் கண்டவுடன் சங்கரனுக்கு மனம் வலிக்க , “கையை லேசாகத் தட்டிக் கொடுத்து விட்டு , “தைரியமாக இரும்மா..” என்று மட்டும் சொன்னார் .

ஐ,சி,யு,விற்கு வெளியே இருந்த இருக்கையில் சங்கரன் அமர , ராகவ் அருகே வந்து, “அழகப்பன் டாக்டர் நம்பர் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி ஸார். அவரிடம் விரிவாகப் பேசினேன். அவர் எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வதாகக் கூறியுள்ளார்.”

ராகவ்வின் “ஸாரே…” , அவர்கள் புரிந்து கொண்டார்கள்  என்பதைப் புரிய வைக்க , 

“ரொம்ப நல்லதுப்பா . நானும் அவரிடம் பேசினேன். பார்த்துக் கொள்வதாகச் சொன்னார் . எந்த உதவியென்றாலும் என்னைக் கூப்பிடுப்பா , என்னால் முடிந்ததைச் செய்கிறேன் .”

“ சரி…” என்று தலையாட்டினான் ராகவ் . அவன் தலையாட்டுதலே அவர்கள் இனி அழைக்கமாட்டார்கள்  என்பதை உணர்த்தியது .

பின், இருக்கையில் இருந்து எழுந்தவர் , ராமநாதன் அருகே சென்று , அவர் கைகளைப் பிடித்து , “மன்னித்துவிடுங்கள் , எங்கள் குடும்பத்திற்கு  உங்கள் அருமையான பெண் வர கொடுப்பினை இல்லை…” என்று  தலை குனிந்தார் .

“நீங்களும் , உங்கள் மகனும் இதுவரை செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி…” என்று மட்டும் ராமநாதன் சொல்ல , 

ஒருவித சங்கடத்துடன் , அனைவரிடமும் தலையசைத்து விடை பெற்றார் .

சங்கரன்  கடைக்கு லேட்டாக வர , “என்னப்பா வேலை ? எங்கே போனீர்கள்?”

“நண்பர் குடும்பத்தைப் பார்க்கப் போயிருந்தேன்..” என்று முடித்துக் கொண்டார் .

“காரில், ‘மகன் தன்னிடம் பேசுவானா…?’ என்று பார்க்க ,

விஸ்வா வழக்கம் போல் பிரச்சனையைச் சரியாக எதிர்கொள்ளாமல்  அப்பாவிடம் பேசுவதைப் தள்ளி போட்டான். ‘அப்பா தன்னிடம் பேசினால் பேசுவோம் இல்லையென்றால் வீட்டில் அம்மாவுடன் இருக்கும் போது பேசிக் கொள்வோம்’ என்று மௌனமாகவே வந்தான் . 

இதுவரை மகன் தன்னிடம் கலக்காமல்  பல முடிவுகளை எடுத்ததைத் தாங்கிக் கொள்ள முடிந்தவரால் இன்றைய பெரும் முடிவும் அவர் ஆலோசனையின்றி எடுக்கப்பட்டது , அவரை பெரும் மன வேதனைக்கு உள்ளாக்கியது .

ராஜியைப் பற்றி தெரியும். அதனால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு இல்லை , ஆனால் மகன்….? ஏமாற்றத்தையே தந்திருந்தான் . 

‘மகன் குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கக் கூடாது என்று பேசியது தப்போ? குற்ற உணர்ச்சியில் வைத்திருந்தால் நன்மை நடந்திருக்குமோ?’ என்று யோசனை ஓட,

‘மறுகனமே இப்படி நிலையில்லாத ஒருவனுடன் அந்தப் பெண் சேராததே , நல்லது..’ என்றும் தோன்ற, பெருமூச்சு விட்டார்.

மேலும், ‘இனிப் பேசி ஒரு பயனும் இல்லை’ என்பதை உணர்ந்து அவர் அதிருப்தியுடன் அமைதியையே கடைபிடித்தார் . 

இரவு உணவு மேஜையில் பேச்சின்றி சாப்பாடு மட்டும் நடக்க , விஸ்வா அம்மாவைப் பார்க்க , அவர் கண்களால் அமைதிப்படுத்தினார். 

அத்தியாயம் 27

மறுநாள் காலையில் காப்பி குடித்தபடி ஹாலில் சங்கரன் அமர்ந்திருக்க , விஸ்வாவும் உடற்பயிற்சி முடித்து வர , “விஸ்வா திருமணம் பற்றி என்ன யோசித்திருக்கிறீர்கள்?” என்று ராஜி பேச்சை ஆரம்பித்தார் .

“நீங்கள் என்ன யோசித்திருக்கிறீர்கள்?” என்று சங்கரன் அதையே திருப்பிக் கேட்க , 

“நான் உங்களை கேட்கிறேன்…” என்று ராஜி வேகமாகப் பேச ,

“என்னுடைய கருத்து உங்கள் முடிவில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா?” என்று நிதானமாகக் கேட்க ,

விஸ்வா திகைத்துப் பார்க்க ,  “இல்லை….” என்றார் ராஜி ஆணித்தரமாக .

“அப்புறம் எதற்கு இந்தப் பேச்சு? விடு ராஜி…” என்று எழும்ப ,

விஸ்வா தயக்கத்துடன் , “அப்பா…” என்று அழைக்க ,

அவனைக் கோபமாக முறைக்க , ராஜி உள்ளே புகுந்தார் .

“உங்கள் பேச்சு சரியில்லையே…. , நீங்கள் விட்டால் ஊனமான பெண்ணை இவனுக்குத் திருமணம் செய்து விடுவீர்கள் போலவே…?” என்று சத்தமாகப் பேச ,

“என் மகனை எந்த முடிவுக்கும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ வற்புறுத்த மாட்டேன் . இது அவன் வாழ்க்கை , அவன் முடிவு தான் இறுதியானது…” என்று ராஜியை பார்த்தபடி சொல்ல ,

“நான் உங்களைப் போல் தள்ளி நிற்கமாட்டேன் . என் மகன் நல்வாழ்விற்காக இறங்கி வேலை பார்ப்பேன்…” என்றார் ஆவேசமாக.

“நான் இறங்கி வேலை பார்த்தால் நீ ஒத்துக்கொள்வாயா ராஜி?” என்று அவரும் பதிலுக்குக் கேட்க ,

“எப்போதும் போல் ஒரு பார்வையுடன் கடந்து விடுவார் …” என்று ராஜி நினைத்திருக்க , 

பதில் தாக்குதலால் பேச்சற்று , தன் பக்கத்தைத் திடப்படுத்திக் கொள்ள , “அழுகை…” என்ற ஆயுதத்தை எடுக்க , 

அம்மா அழுவதைத் தாங்க முடியாதவன் , “அப்பா…..” என்று விஸ்வா ஆரம்பிக்க ,

அவனை கோபமாகப் பார்த்து  , “எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் இருக்கிறது விஸ்வா.”

“ரஞ்சனிக்கு நடந்ததற்குப் பதிலாக அது உனக்கு நடந்து , அவர்கள் நம்மை மாதிரி நடந்து கொண்டால்…. ,  உங்களுடைய மனநிலை என்னவாக  இருக்கும்?”

ஒரு நிமிடம் அமைதியே நிலவ , விஸ்வா சங்கடத்துடன் பார்க்க, “நடக்காததைப் பற்றிப் பேச வேண்டாம்” என்றார் ராஜி . 

மேலும், “உங்களால் அவர்கள் நம்மை மாதிரி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியுமா?” என்று ராஜி திருப்பிக் கேட்க,

“நிச்சயமாகச் சொல்ல முடியும். அவர்கள் திருமணத்திற்கு ஒத்து கொள்கிறார்களா ? இல்லையா? என்பது வேறு விசயம். குறைந்தபட்ச மரியாதை மற்றும் கருணையோடு நடந்து கொள்வார்கள்.”

“எனக்கு நிறைய ஆசைகள் இருக்கிறது அப்பா , எதற்கு நாமே வலிய போய் கஷ்டப்பட வேண்டும் . என்னால் குறைபாடு உள்ள பெண்ணோடு வாழ முடியாது அப்பா…”

“நான் வாழச் சொல்லவில்லையே…. , அதற்குப் பெரிய மனசு வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் விலகுவது அந்தப் பெண்ணிற்கு நீ செய்யும் பெரிய நன்மை…” என்றார் ஆவேசமாக.

பின், “அவர்கள் தங்கள் அடியில் இருந்து வெளியே வருவதற்கான நேரம் கூடக் கொடுக்காமல் , உதவாமல் ,  அடுத்த அடியை நீங்கள் கொடுத்து விட்டீர்கள் என்று தான் மனம் வலிக்கிறது. அந்தப் பெண்ணை உன் மனைவியாக மூன்று மாதங்கள் நினைத்திருக்கிறாய் , அவளுடன் பேசியிருக்கிறாய் , பழகியிருக்கிறாய் , ஆனால் அவளைத் தூக்கிப் போட மூன்று நிமிடம் கூட யோசிக்கவில்லையே விஸ்வா  இந்தச் சுயநலம்  தான் வருத்தமளிக்கிறது .

இதைக்  கூட பரவாயில்லை என்று வைத்துக் கொண்டாலும் அதை நேர்மையாகவும் , தைரியமாகவும் தெரிவிக்கவில்லையே…. ,  வசதியாக அம்மா முந்தானைப் பின்னால் ஒளிந்து கொண்டாயே….என்பது தான் என் கோபம் . 

வாழ்க்கை எளிதானது அல்ல விஸ்வா . சூழ்நிலைகளைத் தைரியமாகக் கையாளப் பழகு இல்லையென்றால் நீ எதிர்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவாய் . வியாபாரத்தில் தவறான முடிவுகள் பண இழப்போடு முடிந்து விடும் . ஆனால் வாழ்க்கையில் தவறான முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும் . ஜாக்கிரதை விஸ்வா… இதை எத்தனையோ முறை உன் அம்மாவிற்கு உணர்த்த முயன்று , தோல்வியையே தழுவினேன் . இப்போது, உனக்குச் சொல்லியிருக்கிறேன் , பார்ப்போம்…” என்று எழுந்து கொள்ள ,

ராஜி ஏதோ பேச வர , “இந்தப் பேச்சை இத்தோடு விடுங்கள் , நான் அவர்களிடம் பேசி விட்டேன் , இனி அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள்…”  என்ற சங்கரன்  விறுவிறுவென உள்ளே சென்றார் .

“அம்மா…” என்று விஸ்வா வருத்தத்தோடு அழைக்க ,

“விடுப்பா… , கொஞ்ச நாளானால் அப்பா கோபமெல்லாம் சரியாகி விடும்.”

விஸ்வாவின் முகம் தெளியாமல் இருக்க ,  “நம்மிடம் கோபப்பட்டாலும் , அதான் அப்பா அங்கே பேசிவிட்டார் இல்லையா….?. கவலையை விடு…” என்று மகனைச் சமாதானப்படுத்தினார்.

“அவர்களும் எதார்த்தத்தைப் புரிந்து கொள்வார்கள் விஸ்வா. எல்லாம் அவள் வாங்கி வந்த வரம்…” என்று பெருமூச்சு விட்டார் . 

பின், “விதி வலியது , நாம் என்ன செய்ய முடியும். நீ எதைப் பற்றியும்  யோசிக்காதே , கொஞ்ச நாள் போகட்டும்…. ,நீ அமைதியாகக் கடையைப் பார்…” 

விஸ்வா குழப்பத்தோடு, ‘சரி’ என்று  தலையாட்ட , “அம்மா உன் நன்மைக்காக தான்…”  என்ற தாரக மந்திரத்தைச் சொல்ல , 

விஸ்வா  நிம்மதியானான்

அத்தியாயம் 28

மூன்று நாட்களுக்குப் பிறகு டாக்டர் அழகப்பன் உதவியோடு ரஞ்சனி  வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள் . 

அறைக்கு மாற்றப்பட்டாலும் , நோய் தொற்றுகளைத்  தவிர்க்க  பார்வையாளர்களை அனுமதிக்க வில்லை . 

மேலும் முதல் வாரத்தில் ரஞ்சனி பாதி நேரம்  மருந்துகளின் உதவியோடு உறக்கத்திலே இருந்தாள் .  

அடுத்த நாட்களில்  வலி நிவாரணிகளைக்  குறைக்க , வலியில் வேதனையில் துவண்டாள் .

 எதையும் யோசிக்கும் நிலையில் அவள்  இல்லை . மகளின் வேதனையைக் கண்டு பெற்றோர்கள் கண்ணீர் விட்டனர் . 

இடையில் சங்கரன், ராமநாதனை அழைத்து நலம் விசாரித்தார் .

 ராகவ் மட்டும் இடையில்  மதுரைக்கு  இரண்டு மூன்று நாட்கள் சென்று ,  கடை நிலவரங்களைப் பார்த்து விட்டு , செய்ய வேண்டிய விசயங்களைச் செய்து விட்டு வந்தான்  . 

கோகிலாவும் , ராமநாதனும் மகள் கூடவே இருந்து கொண்டார்கள் .

 அறையில் ஒரு ஆள் தான் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவமனைக்கு அருகே இருந்த ஸர்வீஸ் அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள் . மாறி மாறி இருந்து கொண்டனர் . 

மகளைக் கண்ணின் இமை போல் பார்த்துக் கொண்டார்கள் .

அடுத்த  வாரத்தில் ரஞ்சனி தெளிவாக ,  நடப்புகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் .

சொந்த பந்தங்கள்  நலம் விசாரித்துச் சென்றார்கள்.  ஓரிரு முறை ரஞ்சனி ஆவலுடன் வாசலைப் பார்ப்பதை, பெற்றவர்கள் கவனித்தே இருந்தனர் . 

ஆனாலும் இந்தச் சூழ்நிலையில் அவர்கள் எதையும் பேசி , ரஞ்சனியைக் கலவரப்படுத்தவோ , தைரியத்தை இழக்க செய்யவோ விரும்பவில்லை . அதனால் மௌனத்தையே கடைபிடித்தனர் .

இரண்டு மூன்று நாட்கள் போக , ரஞ்சனி  அப்பாவிடம் , “விஸ்வா  வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா அப்பா?” 

ராமநாதன் ஒரு கசந்த புன்னகையைச் சிந்த , கோகிலா சேலை முந்தானையால் வாயைப் பொத்தியபடி அழுகையை அடக்க முயல , ராகவ் வந்து கைகளை அழுத்திக் கொடுத்தான்.

ரஞ்சனி எதுவும் பேசாமல் கண்களை மூட , கண்ணீர் வழிந்தது . அறையில் நிசப்தமே  நிலவியது .

 இரண்டு நிமிடத்தில் கண்ணைத் திறந்த ரஞ்சனி , மென்னகை புரிய , 

கோகிலா  அருகில் வந்து,  ‘நாங்கள் இருக்கிறோம்’ என்பது போல் நெற்றியில் முத்தமிட , ராமநாதனும் மற்றொரு கையை ஆதரவாகப் பிடித்து அழுத்தினார் .  

இந்தச் செய்கைகளால் , ரஞ்சனியின் புன்னகை மேலும் விரிந்தது . 

‘இந்த அன்புச் சங்கமத்தில் , நாம் அனைவரும் இணைந்து இந்தக் கடினமான காலத்தைக் கடப்போம்’ என்ற உறுதி இருந்தது .

ரஞ்சனிக்கு இந்த இடரில் இருந்து வெளிவர , உலகத்தைத் தைரியமாகச் சந்திக்க , மனதைத் தயார்படுத்த கவுன்சிலிங் ஆரம்பிக்கப்பட்டது . 

கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சனியும் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டாள் . 

மேலும் ஒரு வாரம் போக , கடவுள் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் போக , ரஞ்சனிக்கு அறுவை சிகிச்சை செய்த இடம் முற்றிலுமாக ஆறியது .  

இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் என்று தெரிவித்து , அடுத்து நடந்து கொள்ள  வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்தினார் .

இவர்கள் செயற்கைக் கால் பற்றி கேட்க , “முதலில் வீட்டுக்குக் கூட்டிப் போங்கள் . நன்றாகச் சாப்பிட்டு உடம்பு தேறட்டும் . கொஞ்ச நாள் வெளிகாற்றைச் சுவாசிக்கட்டும் . அப்புறம் அதை முடிவு செய்யலாம். இப்போதைக்கு ஸ்டிக் உதவியோடு வீட்டில் நடந்து பழகட்டும்…”

“அதேமாதிரி சில உடற்பயிற்சிகளைக் காலின் தசைகள் பலம் பெறச் சொல்லித் தருவார்கள். அதையும் தவறாது  கடைபிடிக்கட்டும் . மூன்று மாதங்கள் கழித்து , செயற்கைக் காலுக்கான வேலைகளை ஆரம்பிப்போம்…” என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள்  .

அனைவரும் கிளம்பும் வேளையில் , “பிரேவ் கேல்(girl) , யு வில் பி ஆல்ரைட் சூன்…” என்று மருத்துவர் வாழ்த்த , 

“நன்றி…” என்று ரஞ்சனி சிரித்தாள் .

ஒருவழியாக ஒரு மாதத்திற்குப் பிறகு , மதுரையை நோக்கி புறப்பட்டார்கள் .

 அவர்கள் கிளம்பும் முன் ராகவ் , அழகப்பன் டாக்டரை நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்தான். ராமநாதனும்,  சங்கரனைப் போனில் அழைத்து , ஊருக்குக் கிளம்புவதாக விடைபெற்றார்.

தொடரும்……