அதிகாலை அவள் பெற்றோர்கள், அவளைப் பார்க்க சென்ற போது,, அவளிடம் காலைப் பற்றி பேசாமல் , “சீக்கிரம் சரியாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி விட்டு வந்தார்கள்.
அவளும் அரை மயக்கத்தில் இருக்க , அவளுக்குக் காலைப் பற்றித் தெரிந்திருக்க வில்லை, ‘சரி’ என்று மட்டும் தலையாட்டினாள்
“பத்துமணிக்கு டாக்டரைப் பார்க்கலாம்…” என்று அங்கிருந்த செவிலியர் சொல்ல ,
விஸ்வா ஏற்பாடு செய்த ஹோட்டலுக்குப் பெற்றோரை கிளப்ப முயற்சி செய்தான் ராகவ் .
அவர்கள் தயங்க, “நீங்கள் போய் குளித்து ரெடியாகி வாருங்கள் . மருத்துவரைப் பார்த்து விட்டு , நான் போய்க் கொள்கிறேன். மூன்று பேரும் ஐ.சி.யு.விற்கு வெளியே இருந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை…” என்று எடுத்துரைத்து, கிளப்பினான் .
அவர்களும் உடன்பட்டு கிளம்பினர் .
காலை ஏழு மணிக்கு, சரியான தூக்கம் இல்லாமல் சிவந்த விழிகளோடு விஸ்வா ஹாலுக்கு வர, அப்போது பூஜையை முடித்துக்கொண்டு ராஜியும் வந்தார் .
“உடம்பு எப்படி அம்மா இருக்கு? ஓ.கே.யா?” என்று விஸ்வா நலம் விசாரிக்க ,
“அம்மாவைப் பற்றி உனக்கு இப்போது தான் ஞாபகம் வந்தா?” என்று ராஜி நொடித்தார்.
“ஸாரி அம்மா…. அங்கு சூழ்நிலை அப்படி….?” என்று வருந்த,
“என்ன சூழ்நிலையோ? அப்பா கூட இருமுறை அழைத்துப் பேசினார்..” என்று சலித்தார் .
“ஸாரி அம்மா, இனிமேல் இந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.”
“சரி விடுப்பா , ரஞ்சனி எப்படி இருக்கிறாள் ?”
“அம்மா……” என்று கண்கலங்க ,
“என்னடா பிரச்சனை?” என்று பதற ,
“ரஞ்சனிக்கு வலது கால் முட்டிக்குக் கீழ் எடுத்து விட்டார்கள் அம்மா…”
“என்னடா சொல்கிறாய்…?”என்று அதிர்ச்சியில் கத்த ,
சத்தம் கேட்டு சங்கரனும் வெளியே வர, “இவன் என்னென்னமோ சொல்கிறானே , உண்மையா?”
“ஆமாம் ராஜி..” என்று அவர் அனைத்தும் கூற ,
“நான் ஏதோ இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதிருக்கும் என்று நினைத்தேன். இப்படித் தலையில் பெரிய இடியாக இறக்கிவிட்டீர்களே ,இப்போது நான் என்ன செய்வேன்…?” என்று புலம்பத் துவங்கினார் .
“பதறாதே ராஜி , நிதானமாக இரு. ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை . பார்த்துக்கலாம்.” என்று சங்கரன் சமாதானப்படுத்த முயன்றார் .
“நல்ல வேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது….” என்றான் விஸ்வா.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ராஜி , “நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம்?”
“புரியவில்லை ராஜி…”
“திருமணம் பற்றி பேசுகிறேன்…” என்று ராஜி அழுத்தம் திருத்தமாகச் சொல்ல,
சங்கரனுக்கு மனதில் எச்சரிக்கை மணி அடிக்க , ராஜியின் எண்ணத்தைப் புரிந்து கொண்டார் .
உடனே, “இதைப்பற்றி இப்போது நாம் எதுவும் பேச வேண்டாம் . எல்லோரும் உணர்ச்சி வசப்பட நிலையில் இருக்கிறோம். பேச்சு சரியான திசையில் போகாது. ரஞ்சனியைப் போய் பார்த்து விட்டு வருவோம் . மாலை பேசலாம்…” என்று ஒத்திப் போட ,
ராஜி மகனைப் பார்க்க , அவன் கலக்கமாக இருப்பது புரிய, “சரிங்க, கிளம்புவோம். இதைப்பற்றி மாலை பேசிக்கொள்ளலாம்…” என்று நகர்ந்தார் .
அத்தியாயம் 23
இவர்கள் மருத்துவமனைக்கு வர , அப்போது தான் மருத்துவரைப் பார்த்து விட்டு வந்து அமர்ந்திருந்தார்கள் ரஞ்சனி குடும்பத்தினர்.
“வாங்க சம்பந்தி…” என்று கோகிலாவும் , ராமநாதானும் வரவேற்க,
“ரஞ்சனி எப்படி இருக்கிறாள்? பார்த்தீர்களா? பேசினீர்களா?” என்று சங்கரன் விசாரிக்க,
“மேலும் இன்னும் மூன்று நாட்களுக்காவது ஐ.சி.யு. வில் தான் இருக்கவேண்டும் என்கிறார்கள். அறைக்கு மாற்றும் போது வேண்டுமானால் இங்கே இருந்தாலும் சரி இல்லை வேறு மருத்துவமனைக்கு என்றாலும் மாற்றி கொள்ளுங்கள் என்றார்கள்…”
“ஓ….! காயம் பற்றி என்ன சொன்னார்?” என்று சங்கரன் கேட்க ,
“அறுவை சிகிச்சை செய்த இடம் ஆறுவதற்கு்க் குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்கிறார்கள்….” என்றான் ராகவ்.
“எத்தனை நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்?” என்று ராஜி கேட்க
“குறைந்தது மூன்று வாரமாவது இருக்க வேண்டும்…” என்றான் ராகவ் .
அப்படியே விஸ்வாவிடம், “ஒரு சின்ன உதவி , உங்கள் டாக்டரிடம் பேசி , சென்னையில் கால் சிகிச்சைக்கு எது நல்ல மருத்துவமனை என்று கேட்டுச் சொல்லுங்கள். முடிந்தால் அட்மிஷன் விசயங்களைக் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள்…” என்று வேண்ட,
“இதை நீங்கள் கேட்க வேண்டுமா? நான் கண்டிப்பாகச் செய்கிறேன்” என்றான் விஸ்வா .
“எல்லாம் நார்மல் ஆவதற்கு எவ்வளவு நாள் பிடிக்கும்…” என்று ராஜி குறியாய் அதையே கேட்க ,
“ரஞ்சனி இயல்பு நிலைக்கு வருவதற்குக் குறைந்தது நாலு மாதமாவது ஆகும்…..” என்று ஒரு பெருமூச்சை விட்டார் கோகிலா .
“ஓ…! அவ்வளவு நாட்கள் ஆகுமா?” என்று ராஜி முனங்க ,
உடனே ராகவ் , “ரஞ்சனி மிகவும் மன உறுதியான பெண். சீக்கிரம் மீண்டு வருவாள்…” என்றான் நம்பிக்கையாக .
“சரி , இந்தச் செயற்கைக் கால்கள் பற்றியெல்லாம் விசாரித்தீர்களா?” என்று ராஜி மீண்டும் ஆரம்பிக்க ,
“இல்லை , அதைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்க ஆரம்பிக்கவில்லை. ரஞ்சனி முதலில் நல்லபடியாக வீட்டுக்கு வர வேண்டும்…” என்று கோகிலா சொல்ல ,
ராஜி மீண்டும் பேசத் துவங்க ,
இடைபுகுந்த சங்கரன் , “இப்போது ரஞ்சனியைப் பார்க்க முடியுமா?”
“இல்லை சம்பந்தி , மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை பார்வையாளர் நேரம். அப்போது தான் பார்க்க முடியும் .”
“நீங்கள் முடித்து விட்டு வந்து விடுங்கள் அப்பா . முக்கியமான விசயம் இல்லை என்றால் அம்மா நிறுத்த மாட்டார்கள்…”
ராஜி பேசுவதற்கு முன் , சங்கரன் பேச வேண்டும் என்று நினைத்திருக்க , அதற்கான வாய்ப்பை விஸ்வா தராமல் போக…
சங்கரன் வேறு வழியின்றி கிளம்பினார் .
ராஜி உள்ளே வந்தவுடன் , “இரண்டு மாதுளை ஜீஸ் சுதா..”
பின் விஸ்வாவிடம் , “நீ கொஞ்சம் ரெஃப்ரஷ் செய்து கொண்டு அம்மா அறைக்கு வா…” என்று அறிவுறுத்தி விட்டு உள்ளே சென்றார் .
விஸ்வாவும் அவ்வாறே செய்ய ,
“இந்த ஜூஸைக் குடிப்பா….” என்று கொடுத்து விட்டு, விஸ்வாவின் அருகில் அமர்ந்தார் .
விஸ்வா குடித்து விட்டு , “என்னம்மா விசயம் ?”
“உன் திருமணத்தைப் பற்றி என்னப்பா யோசித்திருக்கிறாய்?”
விஸ்வா புரியாமல், “என்னம்மா ? அதைப் பற்றி யோசிக்க என்ன இருக்கிறது ? ரஞ்சனி நன்றாகத் தேறி வரட்டும். அப்புறம் பேசலாம்…”
“இல்லை விஸ்வா , இதுவே சின்ன விபத்து என்றால் நான் யோசிக்கப் போவதில்லை. இனி அவள் பழைய ரஞ்சனி இல்லை. ஒரு கால் இல்லாதவள் . அதைப் பற்றி யோசித்தாயா?”
விஸ்வா திகைக்க , “தெரியும் விஸ்வா , நீ இதையெல்லாம் யோசித்திருக்கமாட்டாய் என்று புரிந்து தான் உன்னிடம் பேச வேண்டும் என்றேன்…”
“நீங்கள் என்னம்மா சொல்கிறீர்கள்….?”
“ரஞ்சனி நல்ல பெண் தான் , அவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் தான். இந்தக் கஷ்டமும் வந்திருக்க வேண்டாம் தான். அதற்காக நாம் ஒரு ஊனமுற்றப் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட முடியுமா?”
மகன் குழம்பியதைப் புரிந்து கொண்டவர் , “முதலில் மருத்துவரிடம், திருமண வாழ்க்கை , குழந்தைபேறுக்கெல்லாம் பிரச்சனை இல்லையா? என்று கேட்க வேண்டும் .அப்படியே மருத்துவர்கள் உறுதியளித்தாலும் , அதை எவ்வளவு தூரத்திற்கு நம்புவது என்ற குழப்பமும் இருக்கிறது .
“சரி, அப்படியே நம்பித் திருமணம் செய்தாலும் , நீ உன் திருமணத்தைப் பற்றி கண்ட கனவெல்லாம் தூள் தூளாகிவிடாதா? ஒரு நிமிடம், கால் இல்லாத பெண்ணோடு நடப்பதைக் கற்பனை செய்து பார் . புதுமணத் தம்பதிகளுக்கான சின்னச் சின்ன ஆசைகளான கைகோர்த்து நடப்பது கூட நிறைவேறாது…”
விஸ்வா யோசிக்க , ராஜி தொடர்ந்தார் .
“ நீ உன் நண்பர்கள் மத்தியில் எப்படி அறிமுகப்படுத்துவாய்? உனக்கு இள வயசு , நாலு ஊர், தேசம் போக ஆசைப்படுகிறாய் தானே ? போன வருடம் கூட நீ ஏதோ மலைக்கு ட்ரகிங் போனாயே? அது போன்ற விசயங்களுக்கு இவளை அழைத்துக் கொண்டு போகமுடியுமா?
இதையெல்லாம் கூட விடு , பிள்ளைகளை முழுமுனைப்போடு வளர்க்க முடியுமா? நான் உன்னை எப்படிப் பார்த்துக் கொண்டேன் . அதில் பாதியாவது செய்ய வேண்டாமா? குழந்தையுடன் ஓடி ஆடி விளையாட வேண்டாமா?”
அம்மா சொன்னவற்றைக் கற்பனை செய்து பார்த்து , முற்றுமாகக் குழம்பிப் போனான் .
“ரஞ்சனிக்குக்காகப் பரிதாபப்படலாம் , வருத்தப்படலாம். ஏன் உதவி கூட செய்யலாம். ஆனால் அதற்காக “வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடியுமா…? யோசி விஸ்வா..”
“இதுவே திருமணத்திற்குப் பின்னால் நடந்திருந்தால் , நம் தலையெழுத்து என்று ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் நான் கும்பிட்ட கடவுள் என்னைக் கைவிடவில்லை , உன்னைக் காப்பாற்றி விட்டார் . இது கடவுள் காட்டிய வழி என்று புரிந்து கொண்டு , விலகப் பார் விஸ்வா .”
ராஜி பேசப் பேச , விஸ்வாவின் மனம் தடுமாறியது . ராஜி பக்கம் சாய்ந்தது .
விஸ்வா சற்று தயங்கி , “உறுதி செய்து விட்டு நிறுத்துவது தப்பில்லையாம்மா ?”
“இன்றைக்கு எத்தனையோ உப்புச் சப்பில்லாத காரணத்திற்காக திருமண மேடையில் கூடத் திருமணங்கள் நிற்கின்றன . நாம் உறுதி தானே செய்துள்ளோம் . இன்னும் பத்திரிகை கூடக் கொடுக்கவில்லை . இது பெரிய விசயம் இல்லை விஸ்வா…”
“சொந்த பந்தங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பல பேச்சுகள் வருமே அம்மா?”
“நாம் ஒன்றும் தப்பு செய்யவில்லையே விஸ்வா. அவர்கள் பேசினாலும் கேட்டாலும் நம்மிடம் தான் சரியான காரணம் இருக்கிறதே . மற்றதையெல்லாம் விடு , அம்மா உனக்கு நல்லது தானே சொல்வேன் , செய்வேன் என்பதை மட்டும் நினைத்து, முடிவு எடு…”
“அப்பா…..?” என்று விஸ்வா தயங்க ,
“அப்பாவிடம் பேசிக் கொள்ளலாம் விஸ்வா. அதைப் பற்றிக் கவலைப்படாதே…”
“மதிய உணவை அறைக்கே அனுப்பி வைக்கிறேன். நேற்று முழுவதும் அலைந்திருக்கிறாய், கொஞ்சம் ஒய்வு எடு , பிறகு பேசலாம்….”
விஸ்வா முற்றாக ராஜி சொல்வதை ஏற்று கொள்ளும் மனநிலைக்கு மாறியிருந்தான் .