விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க ,
“சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச ,
“ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,
“ரஞ்சனி கிளம்பி விட்டாளா?” என்று ராகவ்வே பேச்சைத் தொடங்க,
விஸ்வா கரகர குரலில், “ரஞ்சனிக்கு ஒரு விபத்து ராகவ் . மருத்துவமனையில் இருக்கிறாள்..” என்று எப்படியோ சொல்லி முடித்தான்.
“ரஞ்சனி நன்றாக இருக்கிறாள் தானே ? அவளுக்கு ஒன்றுமில்லையே?” என்று ராகவ் பதைபதைக்க ,
“உயிருக்கு அபாயம் இல்லை என்கிறார்கள். ஆனால்…” என்று தயங்க ,
“சொல்லுங்க விஸ்வா…?” என்று ராகவ் படபடக்க ,
விஸ்வா அனைத்து விவரங்களையும் சொல்லி , “வலது காலை எடுக்க வேண்டும்..” என்று முடிக்க ,
“ஓ..…!” உயிருக்கு ஆபத்து இல்லை என்பது தெம்பைத் தர… , ராகவ் தன்னைச் சமாளித்து கொண்டு, “டாக்டர்களிடம் பேசினீர்களா ? வேறு எதுவும் வழியிருக்கா?”
“வேறு வழியில்லை. எங்கள் குடும்ப டாக்டரையும் பேசச் சொன்னேன்..” என்று அழகப்பன் சொன்ன விவரத்தையும் சொல்ல,
“சரி , இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் விஸ்வா ? “
“உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள்…” என்று இழுக்க ,
“சரி விஸ்வா . நீங்கள் அங்கே செய்ய வேண்டியவற்றைப் பாருங்கள் . நாங்கள் கிளம்பி வருகிறோம்.”
“மாமாவிடம் கேட்க வேண்டாமா?”
“நான் பார்த்துக் கொள்கிறேன் விஸ்வா . நீங்கள் நடக்க வேண்டியதைப் பாருங்கள் . நாங்கள் வரும் வரை கொஞ்சம் அங்கே ரஞ்சனி கூட இருங்கள். எப்படியும் இரவுக்குள்ளே சென்னை வந்து விடுவோம் . நீங்கள் அங்கு நடப்பவற்றை அப்டேட் செய்யுங்கள்…” என்று அடுத்து நடக்க வேண்டிய விசயங்களைப் பேசிவிட்டு ,
“அனைத்துக்கும் ரொம்ப நன்றி விஸ்வா…” என்று போனை வைத்தான் .
ராகவ் உடனே சமாளித்தது , அடுத்தடுத்த காரியங்களை யோசித்தது . விஸ்வாவிற்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. ‘தன்னால் இப்படிச் சமாளிக்க முடியுமா?’ என யோசித்தான்.
இங்கே ராகவ் ,கடையில் பல வருடங்களாக வேலை பார்க்கும் நம்பிக்கைக்குரிய முத்துவிடம் விசயத்தைச் சொல்லி , கடையைப் பார்த்துக் கொள்ளப் பணித்தான்.
பின், “அங்கே போய்விட்டு நிலவரம் பார்த்து கூப்பிடுகிறேன்…” என்று கிளம்ப,
“பயப்படாதீங்க தம்பி .பாப்பாவிற்கு ஒன்றும் ஆகாது , மீனாட்சி பார்த்துக் கொள்வாள்…” என்றார் சமாதானமாக
“ம்ம்….” என்றவாறே அப்பாவைப் போனில் அழைத்து, “காரில் காத்திருக்கிறேன் , உடனே வாருங்கள்…”
அவரும் மகன் கூப்பிடுவதை வைத்து ஏதோ இக்கட்டான சூழ்நிலை என்று புரிந்து கொண்டு , உடனே கிளம்பினார் .
காரில் ஏறியவுடன் , “என்ன விசயம் ராகவா?”
சற்று தயங்கிய ராகவ் , “ ரஞ்சனி சென்னையில் விபத்தில் சிக்கி விட்டாள் , பயப்படாதீர்கள் , அவள் நன்றாக இருக்கிறாள். காலில் தான் பலத்த அடி…”
“மீனாட்சி தாயே… யார் சொன்னார்கள்? ரஞ்சனி பேசினாளா? எப்படி நடந்தது?” என்று ராமநாதன் பதற ,
“ரஞ்சனி பேசவில்லை அப்பா. விஸ்வா தான் கூட இருக்கிறார் .”
விஸ்வாவை அழைக்கப் போக , “நான் சொல்வதை முழுதாகக் கேட்டு விட்டுப் பேசுங்கள். வலது காலை காப்பாற்றப் போராடுகிறார்கள் அப்பா…”
“மீனாட்சி….. என்ன சோதனை இது….?”
“விஸ்வா தான் என்னிடம் பேசிவிட்டு , அறுவை சிகிச்சைக்குக் கையெழுத்துப் போட்டுள்ளார்..” என்று உடைந்த குரலில் சொன்னான்.
“ஈஸ்வரா….. , என் குழந்தைக்கு ஏன் இந்தக் கஷ்டம் ? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே….” என்று ஏதேதோ அரற்றினார் .
பின், “அவளை நல்லபடியாகக் காப்பாற்றிக் கொடு மீனாட்சி…” என்று வேண்டத் தொடங்கினார் .
“நல்லதே நடக்கும் அப்பா , இப்போது அடுத்து என்ன செய்வது…? என்று யோசிப்போம்.”
“சரி ராகவா , எனக்கு ஒன்றும் ஓடவில்லை. நீயே சொல்லப்பா…”
அப்படியே ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு , ஒருமணி நேரத்தில் கிளம்பும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா…”
“சரி ராகவா…”
“நான் கடையில் இருந்து பணம் எடுத்து வந்துவிட்டேன் . நாம் கிளம்புவதற்குள் டிரைவரும் வந்துவிடுவார்.”
“சரி ராகவா…”
பின் விஸ்வாவை அழைத்து, “ரஞ்சனி எப்படி இருக்கிறாள் ? பேச முடியுமா மாப்பிள்ளை?”
“நன்றாக இருக்கிறாள் மாமா, அறுவை சிகிச்சை ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகிறது.”
“காலைக் காப்பாற்றி விடலாம் தானே மாப்பிள்ளை…….”
அதைக் கேட்டவுடன் விஸ்வா விசும்பினான்.
இதுவரை ஸ்பிக்கரில் விசயத்தைக் கேட்டு கொண்டிருந்த சங்கரன் ,
போனை வாங்கி , “சம்பந்தி நல்லதே நடக்கும் , எதையும் மனசில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். உடனே புறப்பட்டு வாருங்கள்.”
“ நீங்களும் அங்கே தான் இருக்கிறீர்களா சம்பந்தி? இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் இரவுக்குள் வந்து விடுகிறோம்.”
“நாங்கள் இங்கே தான் இருப்போம். தைரியமாக இருங்கள்…” என்று போனை வைத்தார் சங்கரன் .
அதற்குள் வீடு வர , கோகிலாவிடம் தட்டுத்தடுமாறி எப்படியோ சொல்லி , விரைவில் கிளம்பினர் .
“வேண்டாம் அப்பா , முதலில் அறுவை சிகிச்சை முடியட்டும். நீங்கள் குடித்துவிட்டு வாருங்கள் .”
“எனக்கு அவசரமில்லை விஸ்வா….” என்று அவனின் தோளைத் தட்டிக் கொடுத்தார் .
ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின், வெளியே வந்த மருத்துவ குழு, “அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது” என்று அறிவித்தனர்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் ஐ.சி.யு.விற்குக் கூட்டிப் போய் விடுவார்கள் . மயக்கம் தெளிய காலை ஆகி விடும் . நாளை காலை நீங்கள் பார்க்கலாம். இன்று இரவு ஒருவர் இருந்தால் கூட போதும்…” என்று கிளம்பினார்கள் .
“சரிங்க டாக்டர்…” என்றார் சங்கரன் .
விஸ்வாவைப் பார்க்க , அவன் சோர்ந்து அமர்ந்திருந்தான்.
சங்கரனே ராகவ்வை அழைத்து,விபரத்தைச் சொல்லி விட்டு , “எங்கு இருக்கிறார்கள்….?” என்பதையும் கேட்டுக் கொண்டார்.
பின் சிறிது நேரம் கழித்து , “வா விஸ்வா , காபி குடித்து வரலாம் , அதுவரை டிரைவர் இங்கே இருக்கட்டும்…” என்று அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் .
இருக்கையில் அமர , “இரண்டு பிளேட் இட்லி முதலில் கொண்டு வாப்பா…” என்றார் சங்கரன் .
“வேண்டாம் அப்பா , காபி போதும்….” என்று விஸ்வா மறுக்க
“உஷ்…. , ஒழுங்காகச் சாப்பிடு , அவர்கள் எந்நேரம் வருகிறார்களோ? அவர்களிடம் பேச , அவர்களைத் தைரியப்படுத்த தெம்பு வேண்டாமா?” என்று வற்புறுத்தி உண்ண வைத்தார் .
விஸ்வா ஏதோ சொல்ல வர , “முதலில் சாப்பிடு , பிறகு பேசலாம்..” என்று முடித்தார் .
மருத்துவமனைக்கு அருகில் இருந்த பூங்காவிற்கு சங்கரன் கூட்டிச் செல்ல, “அப்பா மருத்துவமனைக்குப் போகலாம் , ரஞ்சனி….. , ரஞ்சனி குடும்பம்…” என்று ஆரம்பிக்க,
“ரஞ்சனி ஐ.சி.யு.வில் தான் இருக்கிறாள் . மருத்துவமனையிலிருந்து கூப்பிட்டால் , ஐந்து நிமிடத்தில் போய் விடலாம் . மேலும் அவர்கள் வர இன்னும் நிறைய நேரம் இருக்கிறது . ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டுப் போகலாம் .”
“ம்ம்….” என்று விஸ்வா அவருடன் நடந்தான் .
“விஸ்வா…..” என்று சங்கரன் ஆரம்பிக்க , அதற்குள் ராஜி அழைக்க ,
“விஸ்வா என்னாச்சு? ஏன் போனை எடுக்கவில்லை?”என்று பரபரக்க ,
“இங்கே கொஞ்சம் வேலை அம்மா , டிரைவரை உட்கார வைத்து விட்டு இப்போது தான் சாப்பிட வந்தோம்..” என்றான் ஸ்பிக்கர் போனில் .
“நீ போனை எடுக்க வில்லையா? பயந்து விட்டேன் . அப்புறம் அப்பா பேசிய பிறகு தான் நிம்மதியாச்சு .ஒன்றும் பிரச்சனையில்லையே , சாப்பிட்டாயா ? நன்றாக இருக்கிறாய் தானே ? எப்போது வீட்டுக்கு வருகிறாய்?” என்று கேள்விகளை அடுக்க ,
“நன்றாக இருக்கிறேன் . இப்போது தான் நானும் அப்பாவும் சாப்பிட்டோம் . அத்தை , மாமா , ராகவ் எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள் அம்மா.”
“சரிப்பா , ரஞ்சனி எப்படி இருக்கிறாள் ?” என்று கடைசியாக கேட்க ,
‘சொல்லாதே..’ என்பது போல் சங்கரன் தலையை ஆட்ட ,
“நன்றாக இருக்கிறாள் அம்மா . இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது . அப்பா கிட்ட கொடுக்கிறேன்.”
“நீங்கள் பிள்ளை கூடவே இருங்கள். என்ன நேரமோ ? என்ன கிரகமோ? ஒரே பிரச்சனையாக வருகிறது…” என்று புலம்பியபடி போனை வைத்தார் .
“ஏன் அப்பா ? அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்றீர்கள்..?”
“அம்மா தனியாக இருக்கிறாள் . தேவையில்லாததை யோசித்துக் கொண்டிருப்பாள் . நாம் போய் பேசிக் கொள்வோம் .”
“ சரிப்பா..” என்று தலையாட்டினான் .
“அப்புறம். என்னடா ? உன் மண்டைக்குள்ளே ஓடுது ?”
“எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருக்குப்பா , நான் சொன்ன மாதிரி அவளைக் கூப்பிட போயிருந்தால்… , இந்த விபத்து நடந்திருக்காதில்லையா? “
“அப்படியெல்லாம் யோசிக்காதே தம்பி. நடக்கவேண்டும் என்று இருந்திருக்கு , அதான் நடந்துவிட்டது .”
“குறைந்தபட்சம் அவளுக்குத் தகவல் சொல்லி , முன்னாடியே கிளம்பச் சொல்லியிருந்தால் கூட , இதைத் தவிர்த்து இருக்கலாம் . எல்லாம் என் தப்பு தான்…” என்று வெடித்து அழுதான் .
“நீ தேவையில்லாமல் யோசிக்கிறாய் விஸ்வா , ஒரு வேளை நீ கார் ஓட்டி , உன் கவனக் குறைவால் , இப்படி ஒரு விபத்து நடந்து இருந்தால் கூட நீ வருத்தப்படலாம். ஆனால் நீ அந்த இடத்திலே இல்லை . அதனால் உனக்கும் இந்த விபத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை . இதை முதலில் நீ உன் மனதில் நிறுத்திக் கொள் .”
விஸ்வா குழப்பத்துடனே பார்க்க ,
“சில விசயங்களைத் தவிர்க்க முடியாது விஸ்வா , ஏன் நடக்கிறது என்றும் புரியாது , ஆனால் நாம் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் . சில நேரம் இதைக் கர்மா என்று நம்பத் தான் வேண்டும் .”
விஸ்வா அமைதியாக அவரையே பார்க்க,
“இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும் தவிர இப்படி நடந்திருந்தால்… , அப்படி நடந்திருந்தால்… என்று முடிந்து போன விசயத்தை ஆராய்ச்சி செய்ய கூடாது விஸ்வா.”
“சரி அப்பா…” என்று கண்ணை துடைத்தவன் , “அடுத்து என்ன செய்ய வேண்டும் அப்பா…..?”
“இது தான் சரி…” என்று மெலிதாகத் சிரித்தவர் , “இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் , நாம் ரஞ்சனி வீட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் . ரஞ்சனிக்கு இந்த இக்கட்டில் இருந்து வெளியே வருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ன. அவளுக்கு நீ பெரிய நம்பிக்கையாக இருக்க வேண்டும் விஸ்வா….”
“நிச்சயம் அப்பா..” என்றான் உறுதியாக .
“இந்த விபத்துக்கு நீ காரணம் இல்லையென்றாலும் நீ இன்றைய பிரச்சனையைக் கையாண்ட விதம் மிகவும் மோசம் விஸ்வா. அம்மாவிற்கு முடியவில்லையென்றால் பதட்டம் தான், ஆனால் ரஞ்சனிக்கு விசயத்தைப் சொல்ல, ஒரு நிமிடம் ஆகியிருக்குமா? பிரச்சனை வரும் பொழுது நாலாபக்கமும் யோசித்து, செயல்பட்டிருந்தால்….. இந்தக் குற்ற உணர்வு வந்திருக்காதில்லையா?”
‘ஆமாம்’ என்பது போல் தலையாட்ட,
“நிதானமாக எல்லாவற்றையும் ஆராய்ந்து யோசித்துச் செயல் படு விஸ்வா…”
“சரிப்பா”
“வா , இப்போது நாம் மருத்துவமனைக்குப் போகலாம்..” என்று எழுந்தார் .
அத்தியாயம் 21
அதிகாலை மூன்று மணிக்கு ரஞ்சனி குடும்பம் வர , சங்கரனும் விஸ்வாவும் அவர்களைத் தாங்கிப் பிடித்தனர் .
“ ரஞ்சனி எப்படி இருக்கிறாள் ? பார்க்கலாமா?” என்று கோகிலா அழுகையுடன் கேட்க ,
“நன்றாக இருக்கிறாள் அத்தை . ஐ.சி.யு. வில் இருக்கிறாள் காலையில் தான் மயக்கம் தெளியும் .”
“ ரஞ்சனி , ரஞ்சனி…” என்று ராகவ்வைக் கட்டிக் கொண்டு , கோகிலா கதற , மொத்தக் குடும்பமும் நொறுங்கி நின்றது .
சங்கரன் ராமநாதனைத் தட்டிக் கொடுக்க , “அவள் சின்ன குழந்தை…” என்று உடைந்து அழ ,
சங்கரன் மௌனமாக அவர் கையை அழுத்தினார் .
“அவளிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் ? எப்படித் தேற்றிக் கொண்டு வரப் போகிறோம்?” என்று ராகவ் உருக ,
விஸ்வா பேச்சற்று, அனைத்தையும் பார்த்துத் திகைத்து நின்றான்.
ஒரு அரைமணி சென்ற பிறகு, ஒருவாறு அனைவரும் சமாதானமாகினார் .
முதலில் சுதாரித்த ராமநாதன் , “நீங்கள் கிளம்புங்கள் , காலையில் இருந்து இங்கே இருக்கிறீர்கள் . வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துவிட்டு , நாளை வாருங்கள்..” என்று கிளப்ப முனைய ,
“இல்லை மாமா… நாங்கள் இருக்கிறோம்…” என்று விஸ்வா மறுத்தான் .
“இல்லை மாப்பிள்ளை. சம்பந்தியும் காலையில் இருந்து இங்கே தான் இருக்கிறார் , அவருக்கும் ஓய்வு தேவை , நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்…” என்று ராமநாதன் மீண்டும் வலியுறுத்த ,
“நீங்கள் தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள்..” என்று விஸ்வா தயங்க ,
“ஒன்றும் பிரச்சனையில்லை மாப்பிள்ளை. நாங்கள் ஏசி காரில் அலுங்காமல் குலுங்காமல் தான் வந்தோம் . நீங்கள் ஒய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள் .’
“ராகவ் மட்டும் வேண்டுமானால் இருக்கட்டும் , நீங்களும் எங்களுடன் வாருங்கள் , காலையில் சீக்கிரம் வந்து விடலாம் சம்பந்தி…” என்று சங்கரன் சொல்ல ,
“இல்லைங்க சம்பந்தி , எங்களுக்கு ரஞ்சனியைப் பார்க்காமல் ஒன்றும் ஓடாது . நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.”
“நீங்கள் சொல்வதும் சரிதான் , இத்தனைப் பேர் இருந்து என்ன செய்யப் போகிறோம் , நாங்கள் கிளம்புகிறோம் . காலையில் சீக்கிரம் வருகிறோம்…” என்று சங்கரனும் விஸ்வாவும் புறப்பட,
அப்போது ராகவ் , “சின்ன உதவி விஸ்வா , மருத்துவமனைக்குப் பக்கத்தில் இருக்கும் நல்ல ஹோட்டலில் ஒரு அறை மட்டும் புக் செய்து கொடுங்கள் .”
“இல்லை… வீட்டில் தங்கலாமே…” என்று விஸ்வா இழுக்க ,
“இல்லை விஸ்வா , சென்னை டிராபிக்கிற்கு இதுதான் வசதி..”
“ஓ.கே. ராகவ் , நான் ஏற்பாடு செய்துவிட்டு , உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன்..” என்று கிளம்பினார்கள் .
காரில் சங்கரன் , “ராகவ் எவ்வளவு பொறுப்பாக நிதானமாக கையாளுகிறான்.பார்த்தாயா விஸ்வா?”
“ஆமாம் அப்பா…” என்று விஸ்வாவும் ஒத்து கொள்ள ,
“தொழிலைப் பொறுத்தவரை நீ ஒரளவு நன்றாகவே செயல்படுகிறாய் . ஆனால், எமோஷனலான விசயங்களைக் கையாள்வதில்… இன்னும் நீ கற்று கொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது..” என்று பெருமூச்சு விட,
விஸ்வா புரியாமல் பார்க்க , “அம்மா விசயத்தில் பதட்டப்பட்டு , ரஞ்சனி விசயத்தை மறந்து விட்டாய் . அப்புறம் இப்போது ரஞ்சனிக்குப் பதட்டப்பட்டு , அம்மாவிடம் பேசவில்லை…”
“எனக்குப் புரிகிறது , நிச்சயமாக முயற்சிக்கிறேன் அப்பா.”
“நிறைய சரிபடுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது விஸ்வா. நீ குடும்ப தலைவனாகப் போகிறாய் , உன்னை நம்பி தான் உன் குடும்பமே இருக்கும். நீ எடுக்கும் முடிவுகளே , உன் குடும்பத்தின் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கும் .. அதனால் நிதானமாக , உணர்ச்சிவசப்படாமல் , விசயத்தைப் பல கோணங்களில் யோசித்துச் செயல்பட வேண்டும்…” என்று சங்கரன் மெதுவாக பேசிக்கொண்டே வந்தார் .
விஸ்வாவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டே வந்தான்.
அதற்குள் வீடு வர , “அடுத்து செய்ய வேண்டிய விசயங்களை யோசி விஸ்வா…” என்று கோடிட்டார்.