புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 6

அத்தியாயம் 16

 விஸ்வாவின் போன் ஒலிக்க , “ஷிட்…” என்றவன் , “ஸாரி.. ஸாரி… ரஞ்சனி , இங்கே  அம்மாவிற்கு ஒரு எமர்ஜென்சி அதான் வர முடியவில்லை…” என்று படபடத்தான் .

“ஓ…..! இப்போது அம்மா எப்படி இருக்காங்க? எந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள்? எல்லாம் ஓ.கே. தானே?”

“இப்போது பயப்படும்படி ஒன்றுமில்லை ரஞ்சனி  , மருத்துவமனையெல்லாம் இல்லை… இங்கே வீட்டில் தான் சர்க்கரை குறைந்து  மயங்கி விட்டார்கள் .”

 “ஓ…! “ என்று ரஞ்சனி குரல் இறங்கியது ,

 அப்போது பின்னணியில், “நேரமாச்சு ரஞ்சனி , கிளம்பு…” என்று ரஞ்சனியின் பெரியம்மா குரல் கேட்க ,

“இன்னும் ஸ்டேஷன் போகவில்லையா ரஞ்சனி?”

“நீங்கள் வந்து விடுவீர்கள் என நினைத்தேன் . மேலும் எனக்கு இங்கு இருக்கும் டிராபிக் பற்றிய விவரமெல்லாம் தெரியாது. இப்போதுதான் பெரியம்மா , “நேரமாச்சு…” என்று அவசரப்படுத்தினார்கள், அதான் அழைத்தேன்…” என்று சொல்லும் போதே, ‘ஒரு மெஸேஜாவது போட்டிருக்கலாம்” என்று ரஞ்சனியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை

“ஸாரி ரஞ்சனி , அம்மா பற்றிய யோசனையில் சுத்தமாக மறந்து விட்டேன் . வெரி ஸாரி , உடனே கிளம்பு  , ரயிலை பிடிக்கச் சரியாக இருக்கும்…”  என்று அவனும் அவசரப்படுத்தினான்.

“ஓ.கே.  பாய்…” என்று போனை வைக்கப் போக , 

“ரயில் ஏறிவிட்டு , மறக்காமல் கூப்பிடு  பிளீஸ்…..” என்றான் இறங்கிய குரலில் .

“ம்ம்….” என்று போனை வைத்தாள் .

விஸ்வா தர்மசங்கடமாக உணர்ந்தான் . ‘ஃபர்ஸட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்கள் , ஆனால் நான் இப்படி சொதப்பி விட்டேனே….’ என்று வருந்தினான் .

சங்கரன் விவரம் கேட்க , 

“என்னப்பா நீ ? நிலைமை இப்படி என்று போனில் ரஞ்சனிக்குச் சொல்லியிருக்கலாமில்லையா?  அவள் கிளம்பிப் போயிருப்பாள் . இந்தக் கடைசி நேர பதட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்….” என்று குறைபட,

“இல்லை அப்பா… , அம்மாவிற்கு என்றவுடன் கொஞ்சம் பதட்டப்பட்டு விட்டேன் , சுதா வேறு வீட்டில் இல்லையா?” என்று சங்கடமாகச் சொல்ல ,

“தொழில் நடத்துபவன் இப்படிச் சொதப்பலாமா? எல்லா பக்கமும் யோசிக்க வேண்டாமா?” என்று கண்டிக்க ,

 உள்ளே புகுந்த ராஜி , “இந்தப் பதட்டத்திலும் வாட்ச்மேனிடம் பேசி , ஜூஸ் வாங்கி  என்று எல்லாம் யோசனையாகத்தான் செய்துள்ளான்…” என்று மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தார் .

விஸ்வா சங்கடத்துடன் பார்க்க ,

“இல்லை ராஜி , இப்போது ரஞ்சனிக்குச் சங்கடமாகிவிட்டது பார்…”

“எது முக்கியமோ? அதற்குத் தான் முன்னுரிமை கொடுத்துள்ளான். மேலும் அந்தப் பெண் முன்யோசனையாக நடந்திருக்க வேண்டாமா ?” என்றார் ராஜி வேகமாக.

“அவளும் யோசித்திருக்கலாம் தான்..” என்று விஸ்வா இழுக்க ,

கடுப்பான சங்கரன் , “ரஞ்சனியின் நிலையில் இருந்து யோசி . அவளுக்குச் சென்னை புதிது . மேலும் நீ வருவாய் என நம்பியிருந்திருப்பாள்…” என்று குத்திக் காட்ட ,

விஸ்வாவின் முகம் வாட , அதைப் பொறுக்க முடியாத ராஜி , “இதென்ன பெரிய விசயமா? இந்த ரயிலை விட்டால் , அடுத்ததில் போய்க் கொள்ளலாம்…” என்றார் சமாதானமாக .

“நீங்கள் சொல்வது சரிதான் அம்மா, அநேகமாக ரயிலைப் பிடித்து விடுவாள் என்று தான் நினைக்கிறேன்…” என்று அவன் அறையை நோக்கி நடக்க ,

“ ரயில் புறப்படும் நேரம் பார்த்துக் கூப்பிடு விஸ்வா , அப்போது தான் ஏதாவது உதவி தேவைப்படுமா என்று தெரியும்?” என்றார் சங்கரன் .

“சரி அப்பா…” என்று அறைக்குள் நுழைந்தான்.

ராஜி சங்கரனை முறைக்க , அவர் நகர்ந்தார் .

அத்தியாயம் 17

ரஞ்சனி கடைசி நேரம் இரயில் நிலையத்திற்கு வர , ஆட்டோவில் இருந்து இறங்கியவள், அவசரமாகச் சாலையைக் கடக்க முயன்றாள் .

ரஞ்சனி கைகளில் பையோடு ரோட்டுப் பக்கம் திரும்ப , அப்போது அவளைக் கடந்த பைக் , அவள் பையைத் தட்டி விட , அதில் தடுமாறி ரோட்டில்  விழுந்தாள் . 

ரஞ்சனி சுதாரித்து  எழுவதற்குள்… , பின்னாடி வந்த பேருந்து ஓட்டுனருக்கு இவள் கீழே விழுந்து கிடந்தது , கண்பார்வையில் படாமல் போக , 

அவர் வண்டியை நிறுத்தாமல் செலுத்த , ரஞ்சனியின் வலது கால் முட்டிக்குக் கீழ் பேருந்தின் இரு சக்கரங்களும் ஏறி இறங்கின. 

கண் இமைக்கும் நேரத்தில் , சுற்றியிருப்பவர்கள்  சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்தது .  ரஞ்சனி  ரத்த வெள்ளத்தில் மயங்கினாள். 

பின் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைக்க , ரஞ்சனி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குத் தூக்கிச்  செல்லப்பட்டாள்.

ரயில் புறப்பட்டு அரைமணி நேரமாகியும் ரஞ்சனி அழைக்காததால் , விஸ்வா சங்கடமாக உணர்ந்தான் . 

‘அழைப்போமா? வேண்டாமா?’ என்ற தடுமாற்றத்தில் இருந்தான் . 

பின் ஒருவழியாக , ‘தவறு செய்தது நாம் தான் , அவளுடைய கோபம் நியாயமானது தான்’ என்று முடிவு செய்து அழைக்க , நாலைந்து முறை அழைத்தும் போன் எடுக்கப்படாமலே இருக்க ,  குழம்பிப் போனான் .

மீண்டும்  அரைமணி நேரம் கழித்து அழைக்க , ஒரு ஆண் குரல், “ஹலோ..” என ,  

இவனும் புரியாமல் இரண்டு மூன்று முறை  இடைவிடாது “ஹலோ… ஹலோ ரஞ்சனி….” என்று பதற , 

எதிர்புறம் இருந்து , “ஒரு நிமிடம்….  நான் கீழ்ப்பாக்கம் உதவி ஆய்வாளர்  பேசுகிறேன்…”

மேலும் விஸ்வா பதறி , “என்ன ஸார்? என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? ரஞ்சனி போன் உங்கக்கிட்ட எப்படி ?”என்று வரிசையாகக் கேள்விகளைத்  தொடுக்க ,

“கூல் ஸார் ,  இந்தப் பெண் பெயர் ரஞ்சனியா ? நீங்கள் யார்?  இந்தப் பெண்ணிற்கு நீங்கள்  என்ன வேண்டும்?”

“நான் விஸ்வா…  . விஸ்வா ஸ்டோர்ஸ் ஓனர் . ரஞ்சனி என் வருங்கால மனைவி. இப்பொழுதாவது சொல்லுங்கள் , ரஞ்சனிக்கு என்னாச்சு ஸார் ?”

“பதறாதீர்கள் , ரஞ்சனிக்குச்  சின்ன விபத்து நடந்துள்ளது….”

“விபத்தா? எங்கே? எப்படி ஸார் ?  நல்லா இருக்கிறாள் தானே?” என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு கேட்டான் .

“பயப்படாதீர்கள் ஸார் , உயிருக்கு ஒன்றும் அபாயமில்லை . காலில் தான் பலத்த அடி . நிறைய ரத்தம் போய் இருக்கிறது , ஐ.சி.யு வில் இருக்கிறார்கள் . உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் . அவசரம்…” 

“இதோ… ஒரு அரைமணி நேரத்தில் வந்து விடுகிறேன்..” என்றவன் உடை மாற்றி விட்டுத் தடதடவென படிகளில்  இறங்க, 

கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சங்கரன் , “என்ன விஸ்வா?”

“ரஞ்சனிக்கு விபத்து அப்பா…” என்று அனைத்துத் தகவல்களையும் குரல் நடுங்கத் தெரிவித்தான்.

விஸ்வாவின் படபடப்பைப் பார்த்தவர் , “பயப்படாதே ஒன்றும் இருக்காது விஸ்வா . ஒரு நிமிடம் உட்கார்…” என்றவர். சுதாவைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி,  கையில் கொடுத்து , “குடி…” என்றார் .

“அப்பா…” என்று தயங்க , 

“முதலில் குடி…” என்று அவன் குடிக்கும் வரை பொறுமையாக  இருந்தார். 

பின், “என்ன செய்யப் போகிறாய் விஸ்வா? “

“ஒன்றும் புரியவில்லை அப்பா… ஒன்றுமே ஒடவில்லை …” என்று பதைபதைக்க , 

  “உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லி விட்டார்கள் அல்லவா? அதனால் பதறாதே…” என்று ஆசுவாசப்படுத்தினார் . 

அப்புறம், “ நீ இப்பொழுது காரை ஓட்ட வேண்டாம் , டிரைவரைக் கூட்டிக் கொண்டு போ , அங்கே எதுவும் தேவையென்றால் உதவியாக இருக்கும் . அதே போல் , அங்கே இருக்கும் சூழ்நிலை பொறுத்து , நம் அழகப்பன் டாக்டரை அழைத்துப் பேசு…” என்று அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அறிவுறுத்தினார் .

“சரி அப்பா , அம்மா…” என்று இழுக்க ,

“இப்போது வேண்டாம் , ஏற்கனவே உடம்பு முடியவில்லை . நீ அங்கே போய் விட்டு , நிலவரத்தைப் பார்த்து விட்டுச் சொல். அப்புறம் பக்குவமாய் நான் அம்மாவிடம் சொல்கிறேன்.”

“சரிப்பா…” என்று கிளம்ப , 

“அப்புறம் விஸ்வா…”  என்று அருகில் வந்தவர் , சற்றுத் தயங்கி , “அங்கே நிலைமையைப் பார்த்து விட்டு , ராமநாதனுக்கு இல்லை வேண்டாம்….  ராகவ்வை அழைத்துத் தகவல் சொல் , தேவையென்றால் உடனே கிளம்பி வரச் சொல்…” என்று விஸ்வாவின் தோளை ஆதரவாகத் தட்டினார் .

விஸ்வா கிட்டதட்ட காரில் பறந்தான் . ‘ரஞ்சனிக்கு எதுவும் ஆகக் கூடாது’ என்று இருக்கும் அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டே போனான். 

அத்தியாயம் 18

மருத்துவமனையை அடைய , அவனுக்காகக் காவலர் ஒருவர் காத்திருந்தார் .  

சில விவரங்களைப் பேசி விட்டு , “அவர்கள் வீட்டில் சொல்லி  விடுங்கள் . நாளை காவல் நிலையம் வர வேண்டியதிருக்கும்…” என்று விஸ்வாவின் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினார் .

விஸ்வா ஐ.சி.யு.விற்கு ஓட , அங்கே காத்திருந்த மருத்துவர்கள் , “நீங்கள்…..?” என்று விசாரிக்க 

“நான் அவளுடைய வருங்காலக் கணவர்…”

“ஓ..! அப்போது சரி ,  உயிருக்கு ஆபத்து இல்லை . ஆனால் அவர் வலது கால் முட்டிக்குக் கீழ் பேருந்தின் இருசக்கரங்களும் ஏறி இறங்கி இருக்கின்றன . அதனால் கால் எலும்புகள் நொறுங்கி விட்டன.  தசைகள் மற்றும் நரம்புகள் பலத்த சேதமடைந்துள்ளன . இப்போதைக்குக் கட்டு போட்டு இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளோம் . ஆனால் நிரந்தர தீர்வு காலை எடுப்பது தான் . மேலும் நமக்கு அதிக நேரம் இல்லை. உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.”

 “காலைக் காப்பாற்ற முடியாதா டாக்டர் ?” என்று கண்ணீருடன் கேட்க,

“புரிகிறது ஸார் , நாங்களும் சின்னப் பெண்ணின் காலை எடுக்காமல் இருக்க,  அனைத்து வகையான சிகிச்சைகளையும் யோசித்துப் பார்த்து விட்டோம் . வேறுவழியில்லை . சேதம் அதிகம் .உடனடியாக இரத்தப் போக்கை நிறுத்தியாக வேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்தாகிவிடும்…”

“ஒரு ஐந்து நிமிடம்  ஸார்  . நான் அவளுடைய வீட்டில் பேசி விட்டு வருகிறேன்…” என்று போனை எடுத்தான்.

“ஓ,கே. சிக்கிரம் பேசிவிட்டு வாருங்கள் , நமக்கு நேரம் கிடையாது…” என்று மருத்துவர் நகர ,

“ஒரு நிமிடம் டாக்டர்… எங்கள் குடும்ப டாக்டர் அழகப்பன் அவரிடம் விவரத்தைச் சொல்லுங்கள் பிளீஸ்…” என்று போனைக் கொடுத்தான் .

மருத்துவர் விவரத்தைச் சொல்லி விட்டு போனைக் கொடுத்து விட்டுப் போக ,  

“டாக்டர்…” என்று  விஸ்வா பரபரக்க ,

“வேறு வழியில்லை விஸ்வா . காலில் எல்லா தசைகளும் அடிபட்டு விட்டன…” 

“வேறு  மருத்துவமனை , வேறு ஏதாவது சிகிச்சை…” என்று நிராசையுடன் கேட்க , 

 “வேண்டாம்  விஸ்வா , உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது நல்லது . தாமதிப்பது சரியில்லை. இங்கு இருக்கும் மருத்துவக் குழுவினர் அனுபவமிக்கவர்கள் . அதனால் தேவையில்லாத பயமும் குழப்பமும் வேண்டாம் . ரஞ்சனி வீட்டில் முதலில் பேசு , அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என் நம்பரைக் கொடுத்துப் பேசச் சொல்…” என்று போனை வைத்தார் .

விஸ்வா அப்படியே அருகில் இருந்த சுவரில் சாய்ந்தான்  , கண்ணீர் பெருகி ஓடியது .

மீண்டும் போன் ஒலிக்க, சங்கரன் தான் அழைத்திருந்தார் .

போனை எடுத்து , “அப்பா ….” என்று அழுக ,

“என்ன விஸ்வா?”

“ரஞ்சனிக்கு வலது காலை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அப்பா .”

சங்கரன் பேச்சற்றுப்  போனார் , மூன்று தங்கைகள் , பெரிய குடும்பம்  எனப் பல நல்லது கெட்டதைப் பார்த்தவர் என்பதால் உடனே சுதாரித்துக் கொண்டார் . “அழகப்பன் ஸாரிடம் பேசினாயா விஸ்வா ?”

“அவரும் இதையே தான் அப்பா சொல்கிறார்…” 

“சரி , ராகவ்விடம் பேசிவிட்டாயா?” 

“இல்லை அப்பா . எப்படியப்பா பேசுவது? என்ன பேசுவது?  தயக்கமாக உள்ளது.”

“எதையும் யோசிக்காதே , உடனே பேசிக் கிளம்பி வரச் சொல்…”

பின், “நானே பேசி விடுவேன் விஸ்வா . மெடிக்கல் விசயம் சரியாகச் சொல்ல முடியாததால் யோசிக்கிறேன் . நீ பேசு . நான் கிளம்பி வருகிறேன்…” என்று போனை வைத்தார் .

 மகன் தொழில் ஜெயித்திருந்தாலும் , ‘இதுவரை எந்தக் கடினமானச்  சூழ்நிலையையும் சந்திக்காததால் , சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறான்’ என்ற எதார்த்தம் சங்கரனுக்குப் புரிந்தது .

விஸ்வாவிற்கு, ‘அப்பாவை வர வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டுமோ…?’ என்று தோன்றியது , ஆனாலும் ‘தன்னால் இந்தச் சூழ்நிலையைத் தனியாகச் சந்திக்க  முடியாது..’ என்பதைத் தெளிவாக உணர்ந்து , அமைதியானான்.

அத்தியாயம் 19

 விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க ,

“சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச , 

“ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,

 “ரஞ்சனி கிளம்பி விட்டாளா?” என்று ராகவ்வே  பேச்சைத் தொடங்க,

விஸ்வா கரகரக் குரலில், “ரஞ்சனிக்கு ஒரு விபத்து ராகவ் . மருத்துவமனையில் இருக்கிறாள்..” என்று எப்படியோ சொல்லி முடித்தான்.

“ரஞ்சனி நன்றாக இருக்கிறாள் தானே ? அவளுக்கு ஒன்றுமில்லையே?” என்று ராகவ் பதைபதைக்க ,

“உயிருக்கு அபாயம் இல்லை என்கிறார்கள் . ஆனால்…” என்று தயங்க ,

“சொல்லுங்க விஸ்வா…?”  என்று ராகவ் படபடக்க ,

விஸ்வா அனைத்து விவரங்களையும் சொல்லி , “வலது காலை எடுக்க வேண்டும்..” என்று முடிக்க , 

“ஓ..…! உயிருக்கு ஆபத்து இல்லை என்பது தெம்பைத் தர… ,  ராகவ் தன்னைச் சமாளித்து கொண்டு, “ டாக்டர்களிடம் பேசினீர்களா ?  வேறு எதுவும் வழியிருக்கா?”

“வேறு வழியில்லை . எங்கள் குடும்ப டாக்டரையும் பேசச் சொன்னேன்..” என்று அழகப்பன் சொன்ன விவரத்தையும் சொல்ல, 

“சரி , இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் விஸ்வா ? “

“உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள்…” என்று இழுக்க ,

“சரி விஸ்வா . நீங்கள் அங்கே செய்ய வேண்டியவற்றைப்  பாருங்கள் . நாங்கள் கிளம்பி வருகிறோம்.”

“மாமாவிடம் கேட்க வேண்டாமா?” 

“நான் பார்த்துக் கொள்கிறேன் விஸ்வா . நீங்கள் நடக்க வேண்டியதைப் பாருங்கள் . நாங்கள் வரும் வரை கொஞ்சம் அங்கே ரஞ்சனி கூட இருங்கள் . எப்படியும் இரவுக்குள்ளே சென்னை வந்து விடுவோம் . நீங்கள் அங்கு நடப்பவற்றை அப்டேட் செய்யுங்கள்…” என்று அடுத்து நடக்க வேண்டிய விசயங்களைப் பேசிவிட்டு , 

“அனைத்துக்கும் ரொம்ப நன்றி விஸ்வா…” என்று போனை வைத்தான் .

 ராகவ் உடனே சமாளித்தது , அடுத்தடுத்த காரியங்களை  யோசித்தது . விஸ்வாவிற்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. ‘தன்னால் இப்படிச் சமாளிக்க முடியுமா?’ என யோசித்தான்.

இங்கே ராகவ் ,கடையில் பல வருடங்களாக வேலை பார்க்கும் நம்பிக்கைக்குரிய முத்துவிடம் விசயத்தைச் சொல்லி , கடையைப் பார்த்துக் கொள்ளப் பணித்தான்.

பின், “அங்கே போய்விட்டு நிலவரம் பார்த்து கூப்பிடுகிறேன்…” என்று கிளம்ப,

“பயப்படாதீங்க தம்பி .பாப்பாவிற்கு ஒன்றும் ஆகாது , மீனாட்சி பார்த்துக் கொள்வாள்…” என்றார் சமாதானமாக

“ம்ம்….”  என்றவாறே அப்பாவைப் போனில் அழைத்து, “காரில் காத்திருக்கிறேன் , உடனே வாருங்கள்” என்றான் .

அவரும் மகன் கூப்பிடுவதை வைத்து ஏதோ இக்கட்டான சூழ்நிலை என்று புரிந்து கொண்டு , உடனே கிளம்பினார் .

காரில் ஏறியவுடன் , “என்ன விசயம் ராகவா?”

 சற்றுத் தயங்கிய ராகவ் , “ ரஞ்சனி சென்னையில் விபத்தில் சிக்கி விட்டாள் , பயப்படாதீர்கள் , அவள் நன்றாக இருக்கிறாள். காலில் தான் பலத்த அடி…”

“மீனாட்சி தாயே… யார் சொன்னார்கள்?  ரஞ்சனி பேசினாளா? எப்படி நடந்தது?”  என்று ராமநாதன் பதற , 

“ரஞ்சனி பேசவில்லை அப்பா . விஸ்வா தான் கூட இருக்கிறார் .”

விஸ்வாவை அழைக்கப் போக , “நான் சொல்வதை முழுதாகக் கேட்டு விட்டுப் பேசுங்கள் . வலது காலை காப்பாற்றப் போராடுகிறார்கள் அப்பா…”

“மீனாட்சி….. என்ன சோதனை இது….?”

“விஸ்வா தான் என்னிடம் பேசிவிட்டு , அறுவை சிகிச்சைக்குக் கையெழுத்துப் போட்டுள்ளார்..” என்று உடைந்த குரலில் சொன்னான்.

“ஈஸ்வரா….. , என் குழந்தைக்கு ஏன் இந்தக் கஷ்டம் ? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே….” என்று ஏதேதோ அரற்றினார் . 

பின், “அவளை நல்லபடியாகக் காப்பாற்றிக் கொடு மீனாட்சி…என்று வேண்டத் தொடங்கினார் .

“நல்லதே நடக்கும் அப்பா ,  இப்போது அடுத்து என்ன செய்வது…? என்று யோசிப்போம் .”

“சரி ராகவா , எனக்கு ஒன்றும் ஓடவில்லை. நீயே சொல்லப்பா…”

வீட்டுக்கு போனவுடன் ,அம்மாவிடம்  பக்குவமாகச் சொல்லிக் கிளப்புங்கள்.”

அப்படியே ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு , ஒருமணி நேரத்தில் கிளம்பும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா.”

“சரி ராகவா…”

“நான் கடையில் இருந்து பணம் எடுத்து வந்துவிட்டேன் . நாம் கிளம்புவதற்குள்  டிரைவரும்  வந்துவிடுவார்.”

“சரி ராகவா…”

பின் விஸ்வாவை அழைத்து, “ரஞ்சனி எப்படி இருக்கிறாள் ? பேச முடியுமா மாப்பிள்ளை?” 

“நன்றாக இருக்கிறாள் மாமா , அறுவை சிகிச்சை ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகிறது.”

“காலைக் காப்பாற்றி விடலாம் தானே மாப்பிள்ளை …….”

அதைக் கேட்டவுடன் விஸ்வா விசும்பினான்.

இதுவரை ஸ்பிக்கரில் விசயத்தைக் கேட்டு கொண்டிருந்த சங்கரன் , 

போனை  வாங்கி , “சம்பந்தி நல்லதே நடக்கும் , எதையும் மனசில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் . உடனே புறப்பட்டு வாருங்கள்.”

“ நீங்களும் அங்கே தான் இருக்கிறீர்களா சம்பந்தி? இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது . பார்த்துக் கொள்ளுங்கள் . நாங்கள் இரவுக்குள் வந்து விடுகிறோம்.”

“நாங்கள் இங்கே தான் இருப்போம். தைரியமாக  இருங்கள்…” என்று போனை வைத்தார் சங்கரன் . 

அதற்குள் வீடு வர ,  கோகிலாவிடம் தட்டுத்தடுமாறி எப்படியோ சொல்லி ,  விரைவில் கிளம்பினர் .

தொடரும்….