புதுப் புது அர்த்தங்கள்…. நாள் -5

அத்தியாயம் 13

அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இரு குடும்பமும் இறங்க , ஜோசியர் மூன்று தேதிகள் கொடுக்க ,  ஐந்து மாதத்திற்குப் பிறகான தேதிக்கே , நல்ல மண்டபம் மற்றும் பிரபல சமையல்காரர் போன்ற விசயங்களும் ஒத்து  வர , அதையே முடிவு செய்தனர் . 

மூன்று மாதத்திற்குப் பிறகு , அதாவது தேர்வு முடிந்த பிறகே , மற்ற விஷேசங்களை , அதாவது குல தெய்வம் கோவிலுக்குப் பத்திரிகை வைப்பது , சேலை எடுப்பது போன்ற நிகழ்வுகளை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர் . 

அடுத்த வந்த முகூர்த்தத்தில் , இரு பக்க நெருங்கிய சொந்தத்தை மட்டும் கூப்பிட்டு , மதுரையில் சின்னதாக உறுதி செய்யும் நிகழ்வை மட்டும் முடித்தனர் .

 மதுரையில் பிரமாண்டமாகத்  திருமணம் , சென்னையில் வரவேற்பு என்று  முடிவு செய்திருந்தனர் . 

மணமக்கள் இருவரும் தொலைபேசி எண்களைப் பகிர்ந்து கொண்டனர் .

“பார்த்து அளவாகப் பேசு விஸ்வா , இன்று பல திருமணங்களில் போன் பேச்சினால் தான் பிரச்சனையே வருகிறது. கவனம்…” என்று ராஜி எச்சரிக்கை செய்ய ,

விஸ்வாவும் கவனமாகவே இருந்தான். அதேபோல் அடுத்த கிளை வேலைகளில் தீவிரம் காட்டினான்.  ‘திருமணத்திற்குப் பிறகு விருந்து , தேன்நிலவு  என்று  நிறைய நேரம் வெளியே செல்ல நேரிடும் . அதனால் ஐந்து மாதத்திற்குள் கடையின் பூர்வாங்க வேலைகளை முடித்து விட்டால் , அப்பா சமாளித்துக் கொள்வார்’ என்று யோசித்திருந்தான் .

இங்கே ரஞ்சனியும் இதுவரை படிப்பில் மட்டுமே கவனம் வைத்துத்திருந்ததால் , கல்யாணம் பற்றி யோசிக்கக் கூட ஆரம்பித்திருக்கவில்லை , அதனால் கல்யாணம் என்றவுடன்  பெரிய எதிர்பார்ப்புகளும் , பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லை . 

 ரஞ்சனி இயல்பிலே வயதிற்கு மீறிய பக்குவமான பெண். அதனால் கல்யாணம் உறுதியானவுடன் , கண்டிப்பாக முதல் முயற்சியிலே வெற்றி பெற வேண்டும் என்பதிலே அதிக முனைப்புடன் இருந்தாள் . படிப்பை முடித்துவிட்டால் கல்யாண வாழ்க்கைக்கு வசதி என்று யோசித்தாள் . கவனச்சிதறல் இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தாள் . அதை அவனிடமும் தெரிவித்தாள்.

விஸ்வாவும்  அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நினைத்தான் . இருபக்கத்திலும் தயக்கங்களூம் யோசனைகளும் இருந்ததால் தொலைபேசி பேச்சுகள் ‘ஹாய்.. , ஹலோ…’ என்றே ஓடியது . அதேபோல் இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால் இருவரும் பார்த்துக் கொள்ளவும் வாய்ப்பில்லாமல் போனது . 

அனைத்து ஏற்பாடுகளும் மூன்று மாதத்திற்குப் பிறகு என்பதால்,  திருமண வேலைகள் மந்தகதியில் தான் நடந்து கொண்டிருந்தது .

ரஞ்சனியும் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்தாள். சென்னையில் அவள் நெருங்கிய தோழியின் திருமணம் வர ,  

பெரியம்மா வீட்டுக்கு ரஞ்சனி வரப் போவதை , விஸ்வாவிடம் சொல்ல , முதல் சந்திப்புக்குத் தயாரானார்கள் .

பெரியம்மா வீட்டில் இருந்து திருமண மண்டபம் தூரமாக இருக்க , பிக்கப் டிராப்பைத் தான் பார்த்துக் கொள்வதாக விஸ்வா சொன்னான் .

 ரஞ்சனியும் ஆர்வமுடன் சென்னைப் பயணத்தை மேற்கொண்டாள் . 

திருமணத்திற்கு ரஞ்சனி அழகான பச்சைப் பட்டு மேக்ஸ்யில் ரெடியாகி வர , விஸ்வா அசந்து தான் போனான் . 

இருவரும் தங்கள் கல்லூரிக் கதைகளைப் பேசியபடியே பயணித்தனர் . திருமண மண்டபத்தில் டிராப் செய்து விட்டு , கிளம்புவதற்கு அரைமணிநேரம் முன் , “கால் செய் ரஞ்சனி. அப்போது நான் வர சரியாக இருக்கும். அதற்குள் கடையில் இருக்கும் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன்…”  என்று கிளம்பினான் .

“சரி…” என்று அவளும் செல்ல , தோழிகளோடு நன்றாக அளாவினாள் . நீண்ட நாட்களுக்குப் பின்னான தோழிகளின் சந்திப்பு ஜாலியாகச் சென்றது . 

விஸ்வா கூட்டிப் போக வர , மிஞ்சி இருந்த தோழிகளிடம் அறிமுகப்படுத்தினாள். அவனும் இயல்பாக உரையாடினான் . 

அவளை பெரியம்மா வீட்டில் டிராப் செய்து விட்டு , “ நீ மதியம் ஓய்வு எடுத்துக் கொள் . நான் இரவு ஏழு மணிவாக்கில் இங்கே வருகிறேன் , டின்னர் போகலாம் , வீட்டில் சொல்லி விடு…” என்று காரைக் கிளம்பினான் . 

விஸ்வாவும் துள்ளல் மனநிலையில் இருந்தான் .

இதற்கிடையில் தோழிகள் வாடஸ்அப்பில் , ‘ஹான்சம் கய் ‘, ‘சூப்பர் ஜோடி’ என்று வாழ்த்துக்களைத் தெரிவித்தது… விஸ்வாவும் டின்னர் போகலாம் என்று சொல்லியது… வித்யாவும் பிக்கப் டிராப் விவரம் அறிந்து போனில் கலாய்த்தது என்று எல்லாம் சேர்ந்து , 

முதன்முறையாக திருமணத்திற்கு முன் நாட்களில் ஏற்படும் பரவசத்தை அனுபவித்தாள் ரஞ்சனி . 

அத்தியாயம் 14

விஸ்வாவும் வீட்டுக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டான். மாலையில் கிளம்பும் வேலையில் அம்மாவைத் தேட , 

ராஜி லேடீஸ் கிளப்பில் நடக்கும் விழாவிற்குச் சென்றது தெரிய , போனில் அம்மாவை அழைத்தான் . 

விழாவில் இருந்த சத்தத்தில் ராஜிக்கு அழைப்பு கேட்கவில்லை . பல முறை அழைத்தான். பின் வேறு வழியின்றி விவரத்தைப் பதிவாகத் தட்டி விட்டு , அப்பாவை அழைத்துச்  சொல்லி விட்டுக் கிளம்பினான் .

ரஞ்சனி அழகான எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட பேபி பிங்க் நிற சுடிதாரில் இருக்க , விஸ்வாவின் கண்கள் விரிந்தது . 

அதை ரசித்தபடி ரஞ்சனி காரில் ஏற ,  அழகிய ரோஜாப் பூங்கொத்தும் , சாக்லேட்டும் கொடுக்க , சின்ன வெட்கத்தோடு ரஞ்சனி பெற்றுக்  கொண்டாள் .

 ரஞ்சனியை அழைத்துக் கொண்டு பிரபல ஹோட்டலுக்குச்  சென்றான் . ஹோட்டலில் இருந்த அமைதியும் , தனிமையும் , அதன் கட்டமைப்பும்  , அந்த  இரவை ரொம்மான்டிக்காக மாற்றியது .

இருவரும் ஏதேதோ அர்த்தமற்ற கதைகள் பேசினர் . வேறு உலகத்தில் சஞ்சரித்தனர் . ஒருவிதமான பரவசத்திற்கு ஆட்பட்டனர் .

விழா முடிந்து வீட்டுக்கு வந்த ராஜிக்கு , “அண்ணா சாப்பாடு வேண்டாம் என்று சொன்னார்…” என்ற விவரத்தைச் சுதா சொல்ல,

“என்ன விசயம்?” என்று புரியாமல் குழம்பினார் ராஜி .

 விஸ்வாவை அழைக்க , அவன் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது . மீண்டும் பல முறை முயன்றவர் , கோபத்தில் போனை சோபாவில் தூக்கி எறிந்தார்.

கடையில் இருந்து அழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதால், “எந்தச் சந்தேகம் என்றாலும் அப்பாவைக் கூப்பிடுங்கள்…” என்று சொல்லி வந்தவன் ,  தொந்தரவு இல்லாத இரவிற்காகப் போனைத் துண்டித்திருந்தான் .

கடையைப் பூட்டி வந்த சங்கரன் , ஹாலில் டென்ஷனாக ராஜி உட்கார்ந்திருப்பதைக் கவனிக்காமல் , “என்னம்மா ? சாப்பிட்டாயா?” என்று கேட்க , 

ராஜி சங்கரனை முறைக்க , “என்னாச்சு ராஜி? என்ன டென்ஷன்?”

“விஸ்வா வீட்டில் சாப்பாடு வேண்டாம் என்றிருக்கிறான். ஆனால் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை…” என்று படபடக்க ,

சங்கரன் விவரத்தைச் சொல்ல , 

“என் விஸ்வா,  என்னிடம் சொல்லாமலே அந்தப் பெண்ணோடு டின்னர் போயிருக்கிறானா ?” என்று அதிர்ந்து கேட்டார் .

‘என் விஸ்வாவை’ நினைத்து சங்கரன் சின்ன சிரிப்பை உதிர்த்தார். அதே நேரம்  விஸ்வாவின் திருமண வாழ்க்கை குறித்து மனதில் லேசான கலக்கமும் வந்தது . ‘ராஜி இன்னும் மகனைப் பங்கு போடத் தயாராகவில்லையோ?’என்ற பயமும் வந்தது .

“அந்தப் பெண் இந்தப் பெண் என்று…. என்ன பேச்சு ராஜி?  அவன் தன் வருங்கால மனைவியோடு தானே போய் இருக்கிறான்…” என்று கண்டிக்க ,

“ஒரு திருத்தம் , இன்னும் மனைவியாகவில்லை…” என்று கோபமாக மொழிந்தார் ராஜி .

“இன்னும் இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு ,  என்ன பேச்சு  இது ராஜி ?”

மேலும் ராஜி அமைதியாகவே இருக்க , மனசு தாங்காமல், “வருகிற வெள்ளிக்கிழமை குல தெய்வம் கோவிலுக்குப்  பத்திரிகை வைக்கப்  போகிறோம். அடுத்த வாரத்தில் காஞ்சிபுரத்தில் சேலை எடுக்கப் போகிறோம். இந்நேரத்தில் வீட்டுக்குப்  பெரியவளாக இருந்து கொண்டு , இப்படியொரு அமங்கலமான பேச்சு பேசலாமா ராஜி… , ரொம்ப தப்பு..” என்று சங்கரன் கோபப்பட ,

ராஜி அமைதியையே கடைபிடிக்க ,   இந்த அமைதி ஒருவித சங்கடத்தைத் தர , 

‘மேலும் இது குறித்து பேசினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்’ என்பதை உணர்ந்தவர் ,  “சுத்தப்படுத்திக் கொண்டு வருகிறேன், சாப்பாடு எடுத்து வை…” என்று அலுப்புடன் எழுந்து உள்ளே சென்றார் .

ராஜி அப்படியே ஷோபாவில் அமர்ந்திருந்தார் .

ரஞ்சனியும் விஸ்வாவும்  வெகு நேரமாகியதை  உணர்ந்து புறப்பட்டார்கள் . இருவருக்கும் மறக்க முடியாத இரவாகியது . 

ரஞ்சனியை இறக்கிவிட்டு ,  கிளம்பும் வேளையில் , “நாளை நான் ரயில் நிலையத்தில் கொண்டு போய் விடுகிறேன்..” என்று உறுதியளித்து விட்டு , கண்ணில் கனவோடு ,  ஒரு கண் சிமிட்டலோடு விடைபெற்றான் .

 ரஞ்சனியும் முகம் கொள்ளாப் புன்னகையோடு  வீட்டிற்குள் சென்றாள் .

விஸ்வா விசில் அடித்தபடி வீட்டிற்குள் வர , அம்மா ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டவன் ,

சந்தோஷமாக,  “அம்மா….”  என்றபடி அருகில் அமர்ந்து கையைப் பிடித்தான் .

அம்மாவிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்க , 

“அம்மா உடம்பு சரியில்லையா?” என்று பதற , 

“ஒன்றுமில்லை விஸ்வா , ஏதோ யோசனை…” என்று சமாளித்தவர் , “நீ என்னமோ சொல்ல வந்தாயே… ?”

அவனும் சந்தோஷமாக , ரஞ்சனியை  ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதைத் தெரிவிக்க , ராஜி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் . 

பின், “உனக்குச் சந்தோஷமா விஸ்வா ?”

அவன் உள்ளார்ந்து கண்ணில் சின்ன வெட்கத்தோடு புன்னகைத்தான் . 

ராஜி மகனின் மனதை நன்றாகப் புரிந்து கொண்டார் . 

மேலும் ராஜி இதுவரை விஸ்வாவிடம் கடுமை காட்டியதே கிடையாது . அதற்கான சூழ்நிலையும் அமைந்ததே கிடையாது . “எப்போது பிளான் செய்தாய் விஸ்வா?” என்று பொறுமையாகக் கேட்க ,

“திடீர் பிளான் அம்மா,  நாளை மதியம் வைகையில் புறப்படுவதாகச்  சொன்னாள் . இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் , கல்யாணத்திற்கு முன்னால் தனியாக வெளியே செல்லும் வாய்ப்பு அமைவது கடினம் , அதான்…” என்று கள்ளச் சிரிப்புச் சிரிக்க,

ராஜியும் சன்னமாகச் சிரித்தபடி , “அதெல்லாம் சரி விஸ்வா , ஏன் என்னிடம் சொல்லவில்லை?”

“இதென்ன வம்பாகப் போச்சு…” என்றவன் , 

“ உங்கள் போன்  எங்கே அம்மா?” என்று கையை நீட்ட , அவர் ஸோபாவில் கிடந்த போனை எடுத்துக் கொடுக்க ,

“மிஸ்டு காலையும் , மெஸேஜையும் காண்பித்து விவரத்தைச் சொல்ல ,

 ராஜி அசடு வழிந்தார் .நிம்மதியாக உணர்ந்தார் .

“அம்மா அடிக்கடி போனை செக் செய்யுங்கள்…” என்று அறிவுறுத்தி விட்டு , 

 “நாளை ரஞ்சனியை இரயில் நிலையத்தில் விட வேண்டும் , உங்களுக்கு ஓ.கே. தானே அம்மா?” என்று ஆர்வமாய் கேட்க ,

ராஜி வேறு வழியின்றி, ‘சரி…’ என்று தலையாட்டினார் .

“தேங்கு யூ அம்மா…. , குட்நைட்…” என்று படுக்கச் சென்றான் . 

ஆனாலும் ராஜி மனதில் ஒருவிதமான பரிதவிப்பையும் , நெருடலையும் உணர ,  யோசனையாக அந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருந்தார் .

அத்தியாயம் 15

மறுநாள் வழக்கம் போல் விடிந்தது . விஸ்வாவும் சங்கரனும் கடைக்குக் கிளம்பினர் . ரஞ்சனிக்கு ஒரு மணிக்கு இரயில் என்பதால், விஸ்வா பதினோறு மணிக்கு வந்து பிக்கப் செய்வதாகச் சொல்ல , ரஞ்சனியும் கிளம்பிக் கொண்டிருந்தாள் .

விஸ்வா  ரஞ்சனியைப் பிக்கப் செய்ய ,  பாதி தூரம் சென்றிருக்க , ராஜி தனக்குக் கிறக்கமாக இருப்பதாகவும் , மயக்கம் வருவது போல் இருப்பதாகவும் விஸ்வாவை அழைத்துச் சொன்னார்   

விஸ்வா  பதட்டமானான் ,  “அநேகமாக சர்க்கரை குறைந்திருக்கும் , உடனே சுதாவிடம்  ஜூஸ் வாங்கி குடியுங்கள் அம்மா”

“இப்போதுதான் சுதா கடைவீதிக்குப் போயிருக்கிறாள் விஸ்வா , மயக்கமாக வருது…” என்று போனைக் கட் செய்தார் .

“அம்மா… அம்மா….” என்று  விஸ்வா பதற , 

அந்தப் பக்கம் பதில் இல்லாமல் போக , வேகமாகக்  காரை வீட்டுக்குத் திருப்பினான் . 

காரில் பயணிக்கும் போதே , அப்பாவை அழைத்து , “அம்மா மயங்கி விட்டார்கள்…” என்று பதறினான் .

“பதறாதே விஸ்வா , அம்மாவிற்குச்  சர்க்கரை குறைந்திருக்கும் . வேறொன்றும் இருக்காது .”

“இல்லை அப்பா… ,  கீழே விழுந்து அடி எதுவும் பட்டிருக்குமோ…?”  என்று பயப்பட , 

“அப்படியெல்லாம் ஒன்றும்  இருக்காது . அம்மாவிற்கு இதே போல் இரண்டு மூன்று முறை வந்திருக்கிறது . அதனால் அம்மா சுதாரிப்பாகத்தான் இருப்பார் .  பயப்படாதே விஸ்வா…” 

“இல்லை அப்பா….” என்று சமாதானமாகாமல் தொடர  , 

“சரிப்பா , நீ வாட்ச்மேனை அழைத்து,  உள்ளே போய் , அம்மாவைப் பார்க்கச் சொல்.“

விஸ்வாவும் அதே போல் செய்ய , காவலாளியும் போனில் பேசியபடியே,  உள்ளே ஓடினான்.

அப்படியே போனில் , “அம்மா ஸோபாவில் தான் மயங்கி இருக்கிறார்கள்…” என்று நிலைமையை ஒளிபரப்பினான் . 

 அசுவாசமான விஸ்வா, “சரி , நீ அம்மா பக்கத்திலே இரு , நான் பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் .”

“சரிங்க ஸார்..” என்று அருகிலே இருந்தான் .

பின் விஸ்வா , அப்பாவிற்குத் தகவல் தெரிவிக்க , 

“அம்மா கவனமாகத்தான் இருப்பார் என்று சொன்னேன் இல்லையா…? வழியில் ஏதாவது குடிக்க வாங்கிக் கொண்டு வா..” 

விஸ்வாவும் ஃபாண்டா பாட்டிலை வாங்கிக் கொண்டு விரைந்தான் .

வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்ட , 

சர்க்கரை அளவு ஏற , மெல்ல கண்விழித்தார் ராஜி . 

 ராஜிக்குச் சில வருடங்களாகச் சர்க்கரையும் , பி.பி. யும் இருக்கிறது . அதற்கான வைத்தியம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது . மருந்து மாத்திரையில் தான் இருக்கிறார் . 

அதனால் அவர்கள் வீட்டில் எப்பொழுதும் சர்க்கரை , பி.பி பார்க்கும் மெஷின்கள் இருக்க , அதில் விஸ்வா பார்க்க , சர்க்கரை மிகவும் குறைந்திருக்க , அதனாலே இந்த மயக்கம் என்பதைப் புரிந்து கொண்டான் . உடனே குடும்ப மருத்துவரை அழைத்து அறிவுரை கேட்டான் .

“ஒன்றும் பிரச்சனையில்லை , சாப்பிட ஏதாவது கொடுங்கள் , சரியாகிவிடுவார் . உங்கள் திருப்திக்கு  மாலை மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் , ஒரு முறை பார்த்து விடலாம்” 

“சரி…” என்று போனை வைத்தான் , 

ராஜி சோர்வாகச் ஸோபாவில் படுத்தபடியே நடக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் . 

அதற்குள் சுதா வந்து விட , அவள் ஆரஞ்சு ஜூஸ் பிழிந்து வந்து கொடுத்தாள் . விஸ்வா வற்புறுத்தி அம்மாவைக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தான் .

ராஜி சற்று தெளிந்தவுடன் , “என்னாச்சும்மா ? காலையில் சாப்பிட்டீர்களா?” 

இடைபுகுந்த சுதா , “சரியாகவே சாப்பிடவில்லை அண்ணா, ஒரு இட்லி தான் சாப்பிட்டார்கள் . ராத்திரியும் சாப்பிடவில்லை அண்ணா .”

“ஏன் அம்மா?”

 “விழாவில் சாப்பிட்டதே டொம் என்று இருந்தது , அதனால் தான் இரவு விட்டு விட்டேன் . காலையிலும் என்னமோ சாப்பாடு எடுக்கவில்லை… .”

“சரிம்மா , சரியாகச் சாப்பிடவில்லை என்றால் எதற்கு சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டீர்கள் ?”

“யோசிக்கவில்லை விஸ்வா . எப்போதும் போல் சாப்பிட்டு விட்டேன்….” என்று பேசிக் கொண்டிருக்கும் போது சங்கரன் வந்தார்.

முதலில் ராஜியை நலம் விசாரித்தார் . பின் விஸ்வாவிடம் மற்ற தகவல்களைக் கேட்க ,

“அம்மா நேற்றும் இன்றும் சரியாகச் சாப்பிடவில்லை , ஆனால் மாத்திரையையும் போட்டு விட்டார்கள் . அதனால் தான் சர்க்கரை குறைந்து இந்த மயக்கம் அப்பா .”

சங்கரன்  நெற்றிச் சுருங்க , யோசனையாக ராஜியை பார்க்க , 

ராஜி அவரின் பார்வையைத் தவிர்த்தார் . 

ராஜியின் மனப் போராட்டம்  புரிந்தது . “தேவையில்லாமல் கவலைப்பட்டு , உடம்புக்குத் தானே நோய்யை வரவழைத்து விட்டாளே? இதை எப்படிக் கையாள்வது?” என்ற கவலையும் பயமும் வந்தது .

பின் சுதாவிடம் திரும்பிய சங்கரன் , “எதுவும் வாங்க வேண்டுமென்றால் நாங்கள் இருக்கும் போதே முடித்து விடு . இனி அம்மாவைத் தனியாக விட்டுச் செல்லக் கூடாது….”  என்று கட்டளையிட்டார் .

“சரிங்க அய்யா , அப்படியே செய்கிறேன் .”

“நல்ல யோசனை அப்பா….” என்றான் விஸ்வா  . பின், “அம்மா , நீங்கள் உள்ளே போய்ப் படுங்கள்…” என்று கைத்தாங்கலாக எழுப்பினான் .

தொடரும்….