சாந்தியிடம் கோகிலா பேச , ராஜேஸ்வரி பற்றியும் , மற்ற குடும்ப உறவுகள் பற்றியும் விளக்கமாகக் கூறினாள் .
“மாப்பிள்ளை…..” என்று கோகிலா கேட்க ,
“நல்ல பிள்ளை தான். ஆனால் வீட்டுக்கு ஒரே பிள்ளை . கொஞ்சம் அம்மா பிள்ளை……”என்று இழுத்தார் .
“அது இயல்பு தானே அக்கா…” என்றார் கோகிலா
“ஆம் , ரஞ்சனி பக்குவமான பெண் , சமாளித்து விடுவாள் என்று தான் நினைக்கிறேன் . மற்றபடி வேறு குறை, குற்றம் சொல்ல முடியாத குடும்பம் . மேலும் திருமணம் என்றால் அனைத்தும் ஃபெர்பக்ட்டாக இருக்க வேண்டும் நினைக்க முடியாது இல்லையா? . நீ நன்றாக யோசி , வேறு வழிகளிலும் அவர்களைப் பற்றி விசாரித்து , அத்தானிடம் , பிள்ளைகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடு…” என்று போனை வைத்தார் .
ராமநாதனும் வியாபார வட்டாரத்தில் விசாரிக்க , திருப்தியான பதிலே வந்தது . கோகிலாவும் சாந்தி சொன்ன தகவல்களைப் பகிர்ந்தார்
“அம்மா பிள்ளை….” என்பது இடிக்க ,
“கோகி…” என்று ராமநாதன் யோசிக்க ,
“ரொம்பவும் நோண்டிப் பார்க்கக் கூடாதுங்க , நீங்களும் ஒரே பிள்ளை தான் . அம்மா பிள்ளை தான் . திருமணமானப் புதுதில் நீங்கள் பண்ணாத அலும்பா? காலப்போக்கில் நாம் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டோம் தானே . அப்புறம் கடைசி காலத்தில் உங்களை விட என்னைத் தான் உங்கள் அம்மா அதிகம் தேடினார்கள்…” என்று சிரிக்க ,
“சந்தடிசாக்கில் என்னை இடிக்கிறாயா?”
“உண்மையைச் சொன்னேன்” என்று ரஜினி ஸ்டைலில் சொல்லி, குறும்பாகச் சிரிக்க , ராமநாதனும் இணைந்து கொண்டார் .
பின்னர் இருவரும் ‘பிள்ளைகளிடம் பேசலாம்’ என்று முடிவு செய்தனர் .
அப்போது கோகிலா , “அந்த பையனின் அம்மா பற்றிய எந்த விவரத்தையும் நாம் ரஞ்சனியிடம் தெரிவிக்க வேண்டாம்.”
“முதலில் இது மற்றவர்களின் அபிப்பிராயம் . அபிப்பிராயம் என்பது அவர்கள் பார்வைக்கேற்ப மாறுபடும் . திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போதே ரஞ்சனி எந்த அனுமானத்துடனும் செல்ல வேண்டாம் . அவள் அனுபவங்களே , அதை முடிவு செய்யட்டும்…” என்றார் தெளிவாக .
ராமநாதனுக்கும் கோகிலாவின் பேச்சு , சரியென்று பட , அதை ஆமோதித்தார் .
அன்று ஞாயிற்றுக்கிழமை , காலை உணவின் போது விசயத்தைக் கூற , பிள்ளைகள் அதிர்ந்தனர் .
“என்ன அப்பா திடீரென்று? நான் சி.ஏ. முடிக்க வேண்டும் வேலைக்குப் போக வேண்டும் என்றேனே…” என்று ரஞ்சனி வருத்தப்பட ,
“இல்லை டா , நாங்கள் பார்க்கவில்லை . உன்னை வித்யா கல்யாணத்தில் பார்த்து விட்டு விரும்பிக் கேட்கிறார்கள் . நாங்களும் விசாரித்தோம் . எங்களுக்குத் திருப்திகரமாக இருக்கிறது . படிக்கத் தடையில்லை என்று விட்டார்கள் .”
“திருமணத்திற்குப் பின் படிப்பது , பிராக்டிக்கலாகக் கஷ்டம் அப்பா.”
“புரியுது ரஞ்சிம்மா , அவர்கள் படிப்பைத் தொடர உத்தரவாதம் தந்தால் மட்டுமே , இந்தச் சம்பந்தத்தை உறுதி செய்யலாம் என்று நினைக்கிறேன்.”
ரஞ்சனி தெளிவில்லாமல், “எதற்கு அப்பா ? இரட்டைப் படகு சவாரி ……”
“எப்படியும் மூன்று மாதத்தில் உனக்குத் தேர்வு வந்து விடுகிறது . நீ இதில் தேர்ச்சி பெற்று விட்டால் குழப்பமே இல்லை . நீ தேர்ச்சி பெற்று விடுவாய் என்ற நம்பிக்கையும் இருக்கிறது . ஒரு வேளை தேர்ச்சி பெறவில்லையென்றால் , அடுத்த நடவடிக்கைகளையும் நாம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்தப் படிப்புக்குக் கால நேரம் நிர்ணயிக்க முடியாது , அடுத்த முயற்சி , அடுத்த முயற்சி என்று போய்க் கொண்டே தான் இருக்கும் . அதற்காக உன் திருமணத்தைத் தள்ளிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா?”
“அதனால்தான் உன் படிப்பைத் தொடர்வதற்கான சூழ்நிலை உள்ள குடும்பமாகவும் , உன்னுடைய கனவைப் புரிந்து அதற்கு துணை புரியும் குடும்பமாகவும் இருந்தால் ஓ.கே. என்று யோசிக்கிறேன் …”
“மேலும் விரும்பி வருகிறார்கள் , நல்ல குடும்பமாக இருக்கிறது .நாம் நம் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விடலாம் , அவர்கள் சம்மதித்தால், தேர்வு முடிந்தவுடன் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கிறோம்” என்று தங்கள் எண்ணத்தைப் பிள்ளைகளிடம் விளக்கினர்.
“இப்போது உனக்கு முடித்தால் , அடுத்து அண்ணனுக்குப் பார்க்கச் சரியாக இருக்கும்” என்று கோகிலா சொல்ல ,
“ஏன் அம்மா ? அண்ணனுக்கே முதலில் பார்க்கலாமே…” என்று இழுக்க ,
“அப்படித்தான் நினைத்தோம் . விரும்பி வருகிறார்கள் , நல்ல குடும்பம் , நல்ல பையன் , அதான்….. . நீ என்னப்பா சொல்கிறாய் ராகவ்?”
“உங்கள் யோசனை சரியென்று தான் படுகிறது , நீங்கள் பையனைப் பற்றிய விவரங்களைத் தாருங்கள் . எதற்கும் நானும் என் நண்பர்கள் மூலம் அவனுடைய பழக்கவழக்கம் , கல்லூரியில் அவன் நடவடிக்கைகளைப் பற்றி விசாரிக்கிறேன் . அப்புறம் முடிவு செய்யலாம்…” என்றான் பொறுப்பான அண்ணனாக.
இருவருக்கும் பொதுவாக விபரத்தைச் சொன்னவர் , “நாம் அன்று கல்யாண மண்டபத்தில் பார்க்கிங்கில் பார்த்தோமே?.. , அவர் தான் ரஞ்சிம்மா…”
ரஞ்சனி தன் நினைவுப் பெட்டகத்தில் விஸ்வாவின் முகத்தைத் தேடிப் பார்க்க , பெரிதாக அவளுக்கு எந்த ஞாபகமும் இல்லை .
‘நன்றாக இருந்தான்’ என்று மட்டுமே தோன்றியது .
ரஞ்சனி குழப்பமாகவே பார்க்க , வித்யாவின் திருமணத்தின் போது மேடையில் இவர்கள் நின்ற போது எடுத்த போட்டோவை காண்பித்தார் .
“உனக்கு மறுபடியும் தெளிவுபடுத்தி விடுகிறேன் ரஞ்சிம்மா , எங்களுக்கு உன் கனவு முக்கியம் , அதற்குத் துணை நிற்போம் என்றால் மட்டுமே இந்தத் திருமணம்..” என்றார் ராமநாதன் உறுதியாக .
அப்பா இவ்வளவு உறுதியாகச் சொல்லும் போது , மறுக்க காரணங்கள் இல்லாததால் , “உங்களுக்குத் திருப்தியென்றால், எனக்கு ஓ.கே.ப்பா , அப்படியே இன்னொரு விசயத்திலும் எனக்கு உறுதி வேண்டும் , நான் வேலைக்குப் போக வேண்டும். “
“கட்டாயமாகப் போக வேண்டுமா..?”என்று கோகிலா கேட்க,
“ நிச்சயமாக அம்மா, என்னுடைய காலில் நிற்க வேண்டும் . பணத்திற்காக இல்லை , என்னுடைய ஆசைக்காக , படிப்புக்கான மரியாதைக்காக , சுய கௌரவதிற்காக..” என்றாள் தெளிவாக .
“சரிம்மா அதையும் பேசி விடலாம்…” என்றார் ராமநாதன்.
இடைபுகுந்த ராகவ் , “அவள் விருப்பப்படியே முடிவு செய்வோம் அப்பா . விசாரித்து சொல்கிறேன்…” என்று எழுந்தான் .
சபை கலைந்தது .
நான்கு நாட்களில் ராகவ் பாஸிட்டிவ்வான பதிலைத் தர , ராமலிங்கத்திடம் விருப்பத்தையும் விவரத்தையும் தெரிவித்தார்கள் .
அத்தியாயம் 11
ராமலிங்கம், ராஜேஸ்வரியை அழைத்து விபரத்தைச் சொல்ல ,
படிப்பு வரை ராஜேஸ்வரிக்கு ஓ.கே. தான் . வேலைக்குப் போக வேண்டும் என்பது இடித்தது .
“வீட்டில் கலந்து பேசி விட்டுச் சொல்கிறேன்…” என்றார் .
சங்கரன் மதியம் சாப்பாட்டிற்கு வர , ராஜியின் முகத்தில் இருந்த சிந்தனை முடிச்சுகளைக் கண்டு ,” என்னவென்று?” விசாரிக்க ,
“பெண் நன்றாக , கண்ணுக்கு பாந்தமாக இருந்தாள் , துறுதுறுவென அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள் . குடும்பமும் நம்ம ஸடேட்டஸிற்கு ஏற்றார் போல் இருந்தது . முடித்துவிடலாம் என்று நினைத்தால், இப்படி ஒரு சிக்கல்… , படிக்க வேண்டும் என்பது கூட ஓ.கே. தான் . வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான்…..” என்று சங்கரிடம் விவரத்தைச் சொன்னார்.
சங்கரனும் சற்று நேரம் யோசிக்க, “பின் இந்தக் காலத்துப் பிள்ளைகள் தன் காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் . நம் சொந்தங்களில் நிறைய பெண் பிள்ளைகள் வேலைக்குப் போகிறார்கள் , தொழில் பார்க்கிறார்கள் தானே. இது காலத்தின் கட்டாயம் ராஜி . நீயே யோசி…” என்று முடித்துக் கொண்டார் .
ஆனாலும் மனம் கேட்காமல் , சற்று பெருமூச்சு விட்டவர் , “எந்த மாதிரி துணை வேண்டுமென்று விஸ்வாவிடம் முதலில் கேள் . அதன்படி முடிவு செய்வோம்…” என்று தந்தையாக அவர் கடமையைச் செய்தார் .
“அவன் சின்னப் பையன் , அவனுக்கு என்ன தெரியும்? நாம் (நான்) முடிவு செய்தால் சரி தான்…” என்று ராஜி முடிக்க ,
“அப்புறம் ஏன் ராஜி? சின்ன பிள்ளைக்குத் திருமணம் செய்கிறாய்…?” என்றார் கேலியாக .
ராஜி முறைக்க , அப்போது விஸ்வா வர , “என்னம்மா டிஸ்கஷன்?”
“எல்லாம் உன் திருமணம் பற்றித்தான் , சில வரன்கள் வந்திருக்கு , அதைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருக்கிறோம் .”
“ஓ….! சரி…” என்று சாப்பிட அமர்ந்தான்.
“உனக்கு என்ன மாதிரியான பெண் வேண்டும்?” என்று சங்கரன் கேட்க ,
“அதைப்பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை அப்பா. அம்மா பார்த்துக் கொள்வார் .”
“இருந்தாலும்……. உன் அபிப்பிராயம்…?”என்று சங்கரன் இழுக்க ,
“இதில் யோசனைக்கே இடமில்லை அப்பா . அம்மா எனக்குப் பெஸ்ட்டாகத் தான் செய்வார்….” என்றான் வேகமாக .
ராஜி பெருமிதமாகச் சங்கரனைப் பார்க்க ,
சங்கரன் நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு, அமைதியாக உணவருந்த ஆரம்பித்தார் .
ராஜி முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார் .
அன்று லேடீஸ் கிளப்பிற்குப் போக , அவள் தோழிகளிடம் பொதுவாகப் பேசுவது போல், ‘விஸ்வாவிற்கு வரன் பார்க்கலாம்’ என்று யோசிக்கிறேன். “உங்களுக்குத் தெரிந்த நல்ல இடமிருந்தால் சொல்லுங்கள்….” என்று ஆரம்பிக்க ,
“நிச்சயமாக ராஜி . விஸ்வாவிற்கு நல்ல பெண்ணாகப் பார்த்து விடுவோம்…” என்றனர் தோழிகள் .
அப்படியே பேச்சு , இந்தக்காலப் பெண்கள் மாப்பிள்ளைகள் என்று போக , வழக்கம் போல அங்கே இல்லாதவர்களின் தலையை உருட்டும் படலம் ஆரம்பித்தது .
அப்போது மோகனா , “நம்ம கௌசல்யாவுக்கு டாக்டர் மருமகள் வந்துவிட்டால் என்று எப்படி அலட்டுகிறாள் பார்த்தாயா?”
“நம்ம நிர்மலா மட்டும் குறைவாகவா நடக்கிறாள் , அவளும் தன் மருமகள் கல்லூரி விரிவுரையாளர் என்று ஓரே பெருமை . போன வாரம் பசங்க படிப்புப் பற்றிப் பேச்சு வர , “உன் மகன் இந்த வருடம் பன்னிரெண்டு முடிக்கிறானே , கேரியர் கைடன்ஸ்சிற்கு வேண்டுமானால் என் மருமகளிடம் பேசு என்று எனக்கு ஒரே அறிவுரை…” என்று நொடித்துக் கொண்டார் ருக்மணி .
“வேலைக்குப் போனால் மாமியாரை மதிப்பார்களா?” என்று ராஜி கேட்க ,
“பொதுவாக இந்தப் பிரச்சனையெல்லாம் மிடில் கிளாஸ் குடும்பங்களில் தான் , பணம் முடிவுகளைத் தீர்மானிக்கும் பொழுது தான் நடக்கும் . நம் குடும்பங்களில் அந்தப் பிரச்சனை இல்லை , வேலைக்குப் போகாத/போகும் மருமகள் என்று யார் வந்தாலும் நமக்கு சமமில்லாத இடத்தில் எடுப்போமா ?” என்று ஆரம்பித்து , இந்த டாப்பிக்கைப் பல்வேறு தளத்தில் அக்குவேறு ஆணிவேராக அலசினர் .
வேலைக்குப் போகும் பெண் என்றால் சில நன்மைகளும் , வேலைக்குப் போகாத பெண்ணென்றால் வேறு விதத்தில் நன்மைகள் இருப்பதையும் புரிந்து கொண்டார் . வேலையில் இருக்கும் பெண் அமைந்தால் , கூடுதல் அனுகூலம் என்பதில் தெளிவானார் . மேலும் ராஜிக்கு வேலைக்குப் போகும் பெண் என்பதில் இருந்த மனத்தடையும் அகன்றது .
அத்தியாயம் 12
மறுநாள் விஸ்வாவிடம் , “நம் வித்யா கல்யாணத்தில் ஒரு பெண்…”8 என்று ராஜி ஆரம்பிக்க , விஸ்வாவின் மனக்கண்ணில் ரஞ்சனி உருவம் வர , திகைத்தான் .
பின் தலையைக் கோதித் தன்னைச் சமன் செய்து விட்டு , அம்மா கூறும் விபரங்களைக் கவனிக்க ஆரம்பித்தான் .
கடைசியாக ரஞ்சனியும் வித்யாவும் சேர்ந்து வித்யாவின் செல்போனில் எடுத்த போட்டோகளைக் காண்பிக்க , விஸ்வா இறக்கையில்லாமல் பறந்தான் .
பின், ‘தனக்குள்ளே அடங்குடா’ என்றவன் , “அம்மா உங்களுக்குத் திருப்திதானே?”
“ஆமாம் விஸ்வா”
“அப்ப எனக்கும் ஓ.கே….” என்று முடிக்க , ராஜி மிகவும் மகிழ்ந்து போனார் . மகனை வந்து கட்டிக்கொண்டார் .
“கவலையை விடு விஸ்வா , உனக்கு அம்மா பெஸ்டாகத் தேர்ந்தெடுத்துத் தருவேன்..” என்று சங்கரனைப் பார்த்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தார் .
அதுவரை மகனின் முக மாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவருக்கு ஏதோ புரிவது போல் இருக்க , ராஜியின் சிரிப்பிற்கு ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு நகர்ந்தார் சங்கரன் .
பின் காரியங்கள் மடமடவென நடக்கத் தொடங்கின , பத்து நாட்கள் கழித்து , ஒரு முகூர்த்த நாளில் , இரு குடும்பமும் மதுரையில் உள்ள பிரபல ஹோட்டலில் சந்தித்தனர் .
முதலில் பொதுவாகத் தொழில் , அரசியல் என்று பேசினர் . பின் ராமநாதன் , “பிள்ளைகள் இருவரும் தனியாகப் பேசி விட்டு வரட்டும் . அப்பொழுது தான் நாம் அடுத்த விசயங்களைப் பேச வசதியாக இருக்கும்” என்று சொல்ல ,
உடனே ராஜி, “அதெல்லாம் தேவையில்லை , தெளிவாக முடிவு செய்து தானே வந்துள்ளோம்” என்று மறுக்க ,
“வாழப் போகிறவர்கள் அவர்கள் தான் , ஒருமுறை தெளிவாகப் பேசிக்கொண்டால் நல்லது தானே , நாளைக்கு எந்தக் குழப்பமும் வராது பாருங்க…” என்று ராமநாதன் பிடிவாதமாக நிற்க ,
ராஜி ஏதோ பேச வர , இடைமறித்த சங்கரன் , “போய் பேசிவிட்டு வா விஸ்வா…”
விஸ்வா ராஜியைப் பார்க்க , வேறு வழியில்லாமல் ராஜி, ‘சரி…’ என்று தலையாட்டினார்.
விஸ்வாவும் ரஞ்சனியும் ஹோட்டலில் இருந்த தோட்டத்திற்குச் சென்றனர் .
மெல்லிய மெரூன் பட்டுச் சேலை உடுத்தி , அதற்கேற்ப மெல்லிய நகைகள் அணிந்திருந்தாள் ரஞ்சனி .
பெண் பார்க்கும் வைபவத்திற்கு வருவது போல் இல்லாமல் அலுவலகத்தில் நடக்கும் சின்ன விழாவிற்குக் கிளம்பி வருவது போல் வந்திருந்தாள். அதுவே அவளுக்குத் தனி அழகை கொடுத்திருந்தது .
‘என்ன உடையணிந்தாலும் இவருக்குச் சூப்பராக இருக்கிறதே!’ என்று சிலரைப் பார்த்தால் நமக்கு தோன்றும் . அது அந்த உடையின் மதிப்பைப் பொறுத்த விசயமில்லை , அதை உடுத்துபவர்கள் தங்களை எடுத்துச் செல்லும் விதத்தையும் , தன்னம்பிக்கையையும் பொறுத்துதான் . ரஞ்சனி அந்த வகை தான். அத்தனைப் பாந்தமாக இருந்தாள் .
அங்கு இருந்த மர இருக்கையில் இருவரும் அமர , “ரொம்ப அழகாக இருக்கிறாய் ரஞ்சனி…” என்றான் ரசனையோடு .
பதிலுக்கு மென்னகை புரிந்தாள் ரஞ்சனி .
பின் தர்மசங்கடத்தைத் தவிர்க்க , பேச்சை மாற்றும் விதமாக , “சொல்லுங்க ரஞ்சனி…..” என்று ஆரம்பித்தான் .
“ஏற்கனவே எங்கள் வீட்டில், என் படிப்பு , வேலை பார்க்கும் என் எண்ணம் பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். அதை மீண்டும் உங்களிடம் பேசி , தெளிவும் உறுதியும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்…” என்று நிறுத்த,
“ஆமாம் சொன்னார்கள் , எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் ஒரு கண்டஷன் மட்டும் இருக்கிறது…”
“என்ன விசயம்? சொல்லுங்கள்…”
“வேலை மட்டும் சென்னையில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் . கல்யாணம் செய்து விட்டு , தனியாக இருப்பதில் எனக்குப் பிரியமில்லை…” என்று சிரித்தான் .
ரஞ்சனியும் மெலிதாகச் சிரித்து விட்டு , “அனுபவமும் , அங்கிகாரமும் வேண்டும் என்பதற்காகத் தான் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறேன் .அதற்காக என் குடும்பத்தைக் கஷ்டப்படுத்தி, அதை பாதிப்புக்கு உள்ளாக்கிச் செய்ய விரும்பவில்லை.”
“உப்…” என்று மூச்சு விட்டான் .
அதற்குள் , “நேரமாகிறது விஸ்வா…” என்று ராஜியிடமிருந்து பதிவு வர,
உடனே எழுந்தவன் , “உங்களுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டதல்லவா? வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா?”
“இல்லை..” என்று தலையாட்டிய ரஞ்சனி . “உங்களுக்கு எதாவது கேட்க வேண்டுமா…?”
“இல்லை…” என்று சிரித்தவன் , பின் வேகமாக, “ஒன்று சொல்ல வேண்டும் ….”
ரஞ்சனி ஆர்வமுடன் பார்க்க , “உங்களை ரொம்பப் பிடித்திருக்கிறது…” என்று புன்னகைத்தான்.
ரஞ்சனி சின்ன வெட்க முறுவலைச் சிந்த , அதற்குள் ராஜியிடமிருந்து அடுத்த பதிவு வர ,
‘அன்னை தான்’ என்று யூகித்தவன் , “போகலமா ரஞ்சனி…?” என்று நடக்க ,
“ம்ம்….” என்று ரஞ்சனியும் இணைந்து கொண்டாள் .
அதற்குள் இங்கே ராஜி , “எங்களுக்கு எல்லாம் ஓகே தான் , ஆனால் உங்கள் பெண் சென்னையில் தான் வேலை பார்க்க வேண்டும்…”
அதேநேரம் இருவரும் சரியாக உள்ளே வர… , ராமநாதன் ரஞ்சனியிடம் , “என்னம்மா சொல்கிறாய்?”
“இவரும் கேட்டார் அப்பா , எனக்கு ஓ.கே. தான்….”
மகன் தனக்கு முன்னால் இவ்விசயத்தைப் பேசியது , ராஜிக்கு சுருக்கின்றது . ராஜி இந்தச் சிந்தனையில் அமைதியாக இருக்க ,
ராஜியை நன்றாகப் புரிந்த சங்கரன் , “அடுத்து எப்படிப் பிளான் பண்ணலாம்?” என்று பேச்சைத் துவங்கினார் .
“மூன்று மாதத்திற்குப் பிறகான முகூர்த்ததை ஜோசியரைக் கலந்து முடிவு செய்யலாம்..” என்றார் ராமநாதன் .
அவர்களும் ஆமோதிக்க , பின் அங்கேயே உணவருந்திவிட்டு , “கை நனைத்தல், உறுதிப்படுத்துதல், நிச்சயம் போன்றவைகளைப் போனில் பேசி முடிவு செய்து கொள்ளலாம்…” என்று கலைந்தனர் .
காரில் திரும்பும் போது, “என்ன பேசினீர்கள்?” என்று ராஜி விவரம் கேட்க ,
“அது அவங்க தனிப்பட்ட விசயம் ராஜி…” என்று சங்கரன் தடுக்க முயல ,
“அதெல்லாம் அம்மாவிற்குத் தெரியாமல் ஒன்றுமில்லை அப்பா . படிப்பு , வேலை விசயத்தைப் பற்றித் தான் பேசினாள்.”
“அதான் பெரியவர்கள் உறுதி கொடுத்து விட்டோமே .இது என்ன அதிகப்பிரசங்கித்தனம் ?” என்று ராஜி தன் அதிருப்தியைக் காட்ட.
அப்போது ராஜிக்கு அவள் தோழியிடம் இருந்து போன் வர , பேச்சு நின்றது .