சிறிது நேர அமைதிக்குப் பின், விஸ்வா,“நீ வெளிப்படையாக பேசாததால், உன் அமைதியைத் தப்பாகப் புரிந்து கொண்டேன் . நீ ஒத்துக் கொண்டுவிட்டாய் , சமாதானமாகிவிட்டாய்… என்று நினைத்து விட்டேன் .அதனால் உன்னுடைய வருத்தங்களைப் புரிந்து கொள்ளாமல், எளிதாகக் கடந்துவிட்டேன். மேலும் நீ உள்ளேயே வைத்துப் புழுங்கியதால், உன் உடல்நிலைமும் பாதிக்கப்பட்டது. அதனால் , இனி வருங்காலத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி விடு சந்தியா…”
“புரியுதுங்க , ஆனால் என் வளர்ப்பு வேற மாதிரி…”
“என் அப்பாவைப் பொறுத்தவரை, அனைவரும் அவர் சொற்படி தான் நடக்க வேண்டும் .எங்கள் அம்மா, அவரும் அடங்கி, எங்களையும் அதையே கடைபிடிக்க வைத்தார்கள் . நான் அப்பாவோடு பேசியதோ , அடம்பிடித்துச் சண்டை போட்டதோ , விளையாடியதோ… கிடையவே கிடையாது .
அப்படி அதிசயமாக நாங்கள் ஏதேனும் மறுப்புத் தெரிவித்தாலோ , அடம் பிடித்தாலோ , அந்த விசயம் , எங்கள் வீட்டில் பொதுவில் வைக்கப்பட்டு, மாமா , அத்தை , சித்தப்பா , சித்தி என்று அனைவரின் கருத்துக்கும் பரிகாசத்துக்கும் ஆளாக்கப்படும் .
இதனாலே நான் கருத்துக்கள் சொல்வதை நிறுத்திக் கொண்டேன் . ஒடுங்கிப் போனேன் .ஆனால் மனதிற்குள் புழுங்குவேன் .”
விஸ்வா கைகளை அழுத்த,
“போன தலைமுறை மாதிரி , ஏன் உங்களை மாதிரி , பெரியவர்கள் சொன்னால் சரியென்று ஒத்துக்கொள்ளவும் முடியாமல், இந்தத் தலைமுறை மாதிரி சண்டையும் போடமுடியாமல் எனக்குள்ளே மறுகுவேன்.”
விஸ்வா கைகளை மேலும் அழுத்திப் பிடிக்க,
“என் திருமணம், இதில் இருந்து விடுதலை தரும் என்று நினைத்தேன்.சுதந்திரமாக என் கருத்துக்களைப் பேசலாம் என்று ஆசைப்பட்டேன்.சினிமாவில், கதைகளில் வருவது போல் ஆதர்ஷகணவர் கிடைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன்.
அதே போல நீங்கள் திருமணத்திற்கு முன் தன்மையாகப் பேசிய விதம் , நடந்து கொண்ட விதம் மிகவும் கவர்ந்தது . என் பெற்றோர் தாம்பத்தியம் போல் இல்லாமல் , ஒரு ஃபேரி டேல் திருமணத்தைக் கற்பனை செய்திருந்தேன் . ஆனால்…” என்று நிறுத்தியவள்,
“திருமணமான புதுதில் , உங்கள் மென்மையான அணுகுமுறையால் பேசத் துவங்கினேன் , என்னுடைய நியாயமான ஆசைகளை , எண்ணங்களை உங்களிடம் பகிரத் தொடங்கினேன் . ஆனால்….” என்று தொண்டையைச் செறுமியவள் .
அத்தையின் குணத்தால்(தலையீடுகளால், ஆதிக்கத்தால்) மிகவும் தளர்ந்து போனேன். என்னுடைய செயல்கள் பரிகாசப்படுவதும் , மட்டம் தட்டப்பட்டதாலும் நொந்து போனேன்…. முதலில், நீங்கள் சரி செய்து விடுவீர்கள் என்று நம்பினேன், பேசினேன். ஆனால்…..”
“ஸாரி சந்தியா…” என்று விஸ்வா மறுக,
“நீங்கள் கேட்க மட்டுமே செய்தீர்கள் , அதைச் சரிசெய்ய , நடைமுறைப்படுத்த என்று எதுவுமே செய்யவில்லை . கொஞ்ச நாளில் அலுத்து சலித்து போனது . சொல்லிப் பயனில்லை என்று தோன்ற, அமைதியானேன் .
என் வீட்டின் நிலையே இங்கும் தொடர்ந்தது .என் அப்பாவிற்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தோன்றியது . என் எதிர்பார்ப்புகள் சுக்கு நூறாக நொறுங்கியது .இந்த ஏமாற்றம் என்னை பலமாகத் தாக்கியிருக்கிறது.என்று நினைக்கிறேன்.
அதன் தொடர்ச்சிதான் , ஒரு விரக்தி உணர்வும் , எதிலும் விருப்பமின்மையும் , சோர்வும் …..” என்று நிறுத்தினாள்.
“ரியலி ஸாரி சந்தியா ,இப்போது என் தவறு புரிந்து விட்டது . இனி நிச்சயமாக உனக்கு நல்ல கணவனாக இருக்க, எல்லா வகையிலும் முயற்சி செய்வேன்..” என்றான் விஸ்வா வேகமாக .
சந்தியாவும் ஆமோதிப்பது போல் தலையாட்ட , விஸ்வா இறுக்கிக் கட்டி கொண்டான்.
சிறிது நேரம் கழித்து, “நான் பேச வேண்டும் என்பது வரை சரிதான். ஆனால் அத்தை….? எப்படிச் சமாளிப்பீர்கள்? பேசுவீர்கள்….? அவர்களை நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது….” என்று தயக்கத்துடன் பயத்துடன் கேட்க,
“கொஞ்சம் கஷ்டம் தான் சந்தியா. ஆனால் இப்போது ஒரு தெளிவு இருக்கிறது. இந்த ஆறு மாதங்களாக சமாளித்தேன் இல்லையா? பார்க்கலாம்….”
சந்தியா சந்தேகமாகப் பார்க்க ,
“சரி செய்ய வேண்டிய விசயங்கள் இருக்கிறது தான். அப்பா அதற்கான முழு முயற்சிகளையும் எடுக்கிறேன் என்றிருக்கிறார். நிச்சயம் நல்லதே நடக்கும் சந்தியா…” என்றான் நம்பிக்கையாக.
“ம்ம்…” என்றவள், ஒரு பெருமூச்சுடன், “நானும் ஆகாஷை வைத்து நிறைய விசயங்களைத் தப்பாக யோசித்து, படபடப்பாக கையாண்டுள்ளேன். எனக்கே இதெல்லாம் சமீபமாகத் தான், ரஞ்சனி, சுந்தரி ஆன்ட்டி மூலம் தான் புரிந்தது .
அத்தை ஆரம்பிக்க, நான் தொடர்ந்து இருக்கிறேன்… தவறுகள் இருபக்கமும் இருக்கிறது…” என்று சந்தியாவும் தன் பக்கத்தவறை உணர்ந்து சொல்ல,
“பேச, பகிர ஆரம்பித்து விட்டாயல்லவா? நிச்சயமாக மாற்றம் நிகழும்….” என்று மெலிதாக புன்னகைத்தான் .
“நம் வீட்டுப் பிரச்சினையை விடுங்கள்..” என்ற சந்தியா, “ஓரிரு முறை பார்த்த பெண்ணிற்காக செய்ய வேண்டும் என்றால், ரஞ்சனிக்கு எவ்வளவு பெரிய மனசு..? ” என்று வியக்க ,
அதைவிட, “என்னைப் போல சுயநலவாதிக்கு, ஏமாற்றுகாரனுக்குச் செய்ய வேண்டும் என்றால்என்ன பெருந்தன்மை? என்ன பக்குவம்?” என்று விஸ்வாவும்தொடர்ந்தான்.
அவன் வருத்தப்படுவதுப் பிடிக்காமல், “விடுங்கள், முடிந்ததைப் பற்றிப் பேசவேண்டாம். நாளை நேரில் சென்று ரஞ்சனியிடம், நன்றி சொல்ல வேண்டும்.”
“கட்டாயமாக செய்யலாம்…” என்ற விஸ்வா. “ உனக்கு என் மீது, என் அன்பு மீது நம்பிக்கை வந்துவிட்டது தானே.. எனக்கு நீயும், ஆகாஷும் ரொம்ப முக்கியம்டா…” என்றவன் மென்மையாக அணைத்துக் கொண்டான்.
அவளும் ஆமோதிப்பது போல், வாகாக அந்த அணைப்பில் அடங்கினாள்.
பின் விஸ்வா மெதுவாக, “அம்மா தூங்கிவிட்டார்களா? என்று பார்த்து வருகிறேன்…”
“விஸ்வா…” என்று தயங்கி, அவன் முகம் பார்க்க,
“இனி உன் நல்லது கேட்டதில், உன் கூட நிற்பேன், கட்டாயமாக விட்டுக் கொடுக்க மாட்டேன். இது சத்தியம் சந்தியா…” என்று அவள் கையில் அடித்துச் சத்தியம் செய்ய,
அவன் பேச்சில் நம்பிக்கை பெற்றவள், மென்னகை புரிய,
“நீ தூங்கு சந்தியா.. சீக்கிரம் வந்து விடுகிறேன்..” என்று நெற்றியில் முத்தமிட்டுக் கிளம்பினான்.
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் 31(2)
அத்தியாயம் 86
ஹாலிற்கு வந்த விஸ்வா , சமாதானப்படுத்தும் நோக்கோடு, “அம்மா…” என்று அழைக்க ,
ராஜி விறுவிறுவென , தன் அறைக்குள் செல்ல , சங்கரனும் விஸ்வாவும் பின் தொடர்ந்தனர் .
“அம்மா …” என்று அருகில் வர , கனத்த மௌனத்தையே ராஜி பரிசாக தந்தார் .
“ஸாரி அம்மா…” என்று கையைப் பிடிக்க ,
ராஜி தட்டி விட ,
“அம்மா பிளீஸ்……” என்று குரல் கம்ம அழைக்க ,
மகன் கலங்கியதைப் பொறுக்காமல் திரும்பியவர் , “தப்பெல்லாம் நீ செய்து விட்டு , என்னிடம் எப்படி? இப்படி உன்னால் நடந்து கொள்ள முடிந்தது விஸ்வா?”என்று வேகமாக ஆரம்பித்து, ஆதங்கமாய் முடிக்க ,
“அம்மா , ஸாரி அம்மா , சந்தியா உடல்நிலை.. அதான்…” என்று ஆரம்பிக்க,
ராஜி கோபமாகப் பார்க்க,.
“எனக்குத்தான் இருவரையும் சரியாகக் கையாளத் தெரியவில்லை அம்மா , நிறைய குளறுபடிகள் செய்து விட்டேன் . எல்லாம் என் தப்பு தான் , எல்லாம் என் தப்பு தான்” என்று தலையில் அடிக்க,
“விஸ்வா…..” என்று அருகில் வர , அவன் , “அப்பா …” என்று கட்டிக் கொண்டான்.
“ நான் தோற்றுப் போய்விட்டேன் அப்பா… இருவரையும் வருத்தப்படுத்துகிறேன் . என் கடமைகளை நான் சரியாக செய்யவில்லை. எனக்கே என்னைக் கண்டால் பிடிக்கவில்லை அப்பா…” என்று நொந்து சொல்ல ,
“என்னாச்சு விஸ்வாவிற்கு ? ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?”
“ஆறு மாதங்களாக அவன் பட்டபாடு, போராட்டம் என்று எல்லாம், உன்னிடம் உடைகிறது, வெளிப்படுகிறது ராஜி….”
ராஜி கலங்கிப் போய், “என்ன நடந்துச்சுங்க?”
“நான் சொல்வதை முதலில் பொறுமையாகக் கேள். சந்தியாவிற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனதல்லவா?”
“ம்ம்…” என்றபடியே அவரைப் பார்க்க ,
அவரைப் பரிசோதித்த மருத்துவர் , “இது மனம் சம்மந்தப்பட்ட விசயமாகப் படுகிறது . சந்தியா மன அழுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறாள் . இதை நீங்கள் சரியாகக் கையாளாவிட்டால் பெரும் சிக்காலாகி விடும்” என்று எச்சரித்தார் .
“ஐயோ , என் மகனுக்கு இப்படியொரு கஷ்டமா? தேடித்தேடி இப்படியொரு மனநோயாளியைக் கட்டி வைத்துவிட்டேனே…?”
“தப்பாகப் பேசாதே ராஜி….” என்று கடிந்தார் .
“உண்மையைத் தானே சொல்கிறேன்…” என்று படபடக்க ,
“ சில சூழ்நிலைகளைச் சமாளிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் மன அழுத்தம் அவ்வளவு தான்” என்று ராஜியை கூர்மையாகப் பார்த்தார் .
“நீங்கள் பதவீசாக சொல்கிறீர்கள் , நான் பளிச்சென்று சொல்கிறேன் , அவ்வளவு தான் வித்தியாசம்” என்று வேகமாகப் பதில் கொடுத்தவர், “நான் என்ன செய்ய? என் பிள்ளையை எப்படிக் காப்பாற்ற? எப்படி இந்தப் பிரச்சனையில் இருந்து விடுவிக்க? என்று புலம்பத் தொடங்க,
“ராஜி முதலில் நிதானமாக இரு….”
“எப்படி நிதானமாக இருக்க முடியும்? கஷ்டப்படுவது என் பிள்ளை யல்லவா? தேடித்தேடி ஒரு பைத்தியக்காரியைப் பிடித்து விட்டேனே?”
“வார்த்தைகளை விடாதே ராஜி… வெறும் மன அழுத்தம் தான்.”
“நீங்கள் மழுப்பாதீர்கள். காலையில் அவங்க வீட்டுக்கு போன் அடியுங்கள். இரண்டில் ஒன்று முடிவு செய்ய வேண்டும்…”
“இரண்டில் ஒன்று என்றால்?”
“எதற்குப் பைத்தியக்காரியை வைத்து மாறடிக்க வேண்டும்…?”
“ராஜி….” என்று கர்ஜிக்க,
ஒரு நிமிடம் அதிர்ந்தவர், “நீங்கள் என்ன சொன்னாலும், நான் கேட்கப் போவதில்லை. என் பிள்ளையின் நல்வாழ்க்கை தான் முக்கியம்.”
“இதற்கு நானும், விஸ்வாவும் ஒப்புக் கொள்ள மாட்டோம்…”
“ நீங்கள் போன முறை போல், அமைதியாக மட்டும் இருங்கள். நான் விஸ்வாவிடம் பேசிக் கொள்கிறேன்…” என்றார் ராஜி வேகமாக.
“ ரஞ்சனியுடனான திருமணம் நின்ற போது குறுக்கிடாததற்குக் காரணம். விஸ்வாவிற்கும் ரஞ்சனியைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்பதால் தான்” என்றார் அழுத்தமாக.
மேலும், “நீ நினைப்பது நடக்காது, உன் மகன் உன் பேச்சைக் கேட்பான் என்று நினைத்தால், உன்னை விட முட்டாள் யாருமில்லை…”
“இல்லை, என் பையன் என் பேச்சைக் கேட்பான்…” என்றார் இறுமாப்பாக.
சங்கரன் ஒரு எள்ளல் சிரிப்பைப் சிந்த,
மறுபடியும், “என் விஸ்வா, என் மகன்… கேட்பான்…” என்றார் ஆங்காரமாய்.
“அப்படியா?” என்றவர், “இவ்வளவு பெரிய விஷயம். அவன் வாழ்வில் நடந்து இருக்கிறது. உன்னிடம் சொன்னானா?”
ராஜி அதிர்ந்து நிற்க,
“உன் மகன் ஒத்துக்கொள்ள மாட்டான். அதனால் முன்பு போல் வெட்டிவிடுவது எளிதல்ல ராஜி…” என்று குத்தியவர். “மேலும் உன் சம்பந்தி இராமநாதன் அல்ல, பக்குவமாய் நகர்ந்து போக, தூத்துகுடிக்காரர், உன்னை ,என்னை, நம் மகனைச் சந்தி சிரிக்க வைத்துவிடுவார். அசிங்கப்படுத்திவிடுவார். கீழ் கோர்ட், மேல் கோர்ட், சுப்ரீம்கோர்ட் என்று விவாகரத்து வழக்கை எடுத்துக் கொண்டு போய், பத்துவருடமானாலும், விவாகரத்து கிடைக்க விடமாட்டார். உன் மகன் வாழ்க்கை அதோகதி தான். வாழ்க்கையை, வியாபாரத்தைப் பார்க்க முடியாமல், கோர்ட் படியேறிக் கொண்டிருக்க வேண்டியது தான்.. அவனுடைய இளமைக் காலம் முழுவதும் இப்படியே கழிய வேண்டியதுதான். மேலும் நீ வளர்த்த வளர்ப்பிற்கு, அவனுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க வேண்டும்.” என்றார் கோபமாய்.
ராஜி விக்கித்துப் பார்க்க,
சங்கரன், தன் கோபத்தை குறைத்துக் கொண்டு, மூச்சை இழுத்து விட்டு, மீண்டும் பேச்சைத் தொடங்கினார்
“ எதார்த்தத்தை புரிந்து கொள். அவன் உன் மகன் மட்டும் அல்ல, கணவன் மற்றும் தந்தையும் தான். உன் மகன், அவளோடு நான்கு வருடம் வாழந்திருக்கிறான். அவர்கள் அன்புக்குச் சாட்சியாக ஆகாஷும் இருக்கிறான். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதே… யோசி..”
இதுதான் சரியான நேரம் என்று அருகில் வந்தவர், “முதலில் நான் சொல்ல வருவதைப் பொறுமையாக கேள் ராஜி. ஒரு சின்ன விஷயத்தை , நீயாக ஏதேதோ கற்பனை செய்து பேசாதே…
இங்கே பார். சந்தியாவிற்கு வெறும் ‘ஸ்ட்ரெஸ்’ தான். அந்த ஸ்ட்ரெஸுக்கான காரணத்தை நீக்கி விட்டாள். பிரச்சனை சரியாகிவிடும்..”
“ஸ்ட்ரெஸை எப்படி நீக்குவது,? இத்தனை நாள் ஏன் செய்யவில்லை?” என்று வேகமாகக் கேட்க,
சங்கரன் அமைதியாக, ராஜியின் கண்களை ஊடுருவிப் பார்க்க ,
“என்னைச் சொல்கிறீர்களா? என்னால் தான் என்கிறீர்களா?” என்று கோபப்பட ,
“ஆம்…. உடைத்துப் பேசிவிடுவோம் ராஜி , உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் , உன் மகன் மீது நீ செலுத்தும் ஆதிக்கமும் , ஆகாஷ் மீதும், சந்தியா மீதும் அதையே செலுத்த முயன்ற காரணமும் என்று எல்லாம் சேர்ந்து தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டாள்…” என்று நிறுத்த ,
“என்னைக் கொடுமைக்கார மாமியார் போல் சித்தரிக்காதீர்கள் , நான் அன்பைத் தான் செலுத்தினேன்” என்றார் விடாப்பிடியாக.
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ராஜி . மேலும் மகனை விட்டுக் கொடுக்க முடியாமல் , நீயே உணராமல் பல நேரம் எல்லைகளைக் கடந்து விட்டாய் .”
“அவர்களுக்கு நல்லது தான் செய்ய முயன்றேன் . நான் அவளின் குறைகளைத் தானே சுட்டிக் காட்டினேன் . அதை ஏற்க முடியாமல் , மாற்ற முயற்சிக்காமல் , உடம்பையும் , மனத்தையும் கெடுத்துக் கொண்டால் நான் எப்படி பொறுப்பாவேன்…?”
“அப்படித் தப்பி விட முடியாது ராஜி , அதை எப்படிச் சொல்கிறோம்? என்பதில் தான் விசயமே உள்ளது . அதனால் அடுத்தவர் பாதிக்கப்படுகிறாரா? என்பதையும் கவனிக்க வேண்டும் . வீட்டின் பெரியவர்களாகப் பக்குவமாகத் தான் எடுத்துச் சொல்ல வேண்டும் .”
ராஜி இந்த வாதத்தை ஏற்க மறுக்க ,
“உன் மகனின் குறைகளை இப்படித்தான் கண்டிப்பாயா?” என்று நேராகக் குற்றஞ்சாட்ட,
“என் மகன் என்றுமே தனி தான். அதை இதோடு இணைத்துப் பேசாதீர்கள் . மேலும் அவளுடைய குறையை , என் மீது போடாதீர்கள்”
“இல்லை ராஜி , இந்தப் பிரச்சனைக்குப் புற அழுத்தங்கள் தான் காரணம்.. அதாவது நீயும், உன் மகனும் தான்” என்று சங்கரனும் விடாப்பிடியாக நிற்க ,
“எப்படி? எப்படி?”என்று ராஜி ஆவேசமாகக் கேட்க ,
“இரு. உனக்குப் புரியும்படி சொல்கிறேன். மாமா இறந்த காலத்தில், நீ எப்படி இருந்தாய்?”
“எப்படி இருந்தேன்?” என்று ராஜியும் திருப்பிக் கேட்க ,
“உன் உலகமே நின்று போனது போல், மிகுந்த மனச்சோர்வில் இருந்தாய் அல்லவா?”
‘ஆம்’ என்பது போல் அமைதியாக ராஜி இருக்க ,
“எத்தனை மருத்துவர்களைப் பார்த்திருப்போம் . கடைசியில் கடவுள் கொடுத்த வரமாய் விஸ்வா வந்தான் , எல்லாம் மாறியது . இப்போது சொல். புறச்சுழல் பங்கு வகிக்கவில்லையா?”
“நீங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்வோம். இதில் விஸ்வாவின் தப்பென்ன?”
“அவளுக்கும் உனக்குமான மோதல்களை, உன் மகன் உள்ளார்ந்து சிந்திக்காமல் , உன்னிடமும் அவளிடமும் பேசிப் பிரச்சனையின் மூலத்தை தீர்க்காமல் , மேம்போக்காக ஒரு பக்கமே பேசிச் சமாதனப்படுத்தியதன் விளைவு , சந்தியா பலமாக பாதிக்கப்பட்டு இருக்கிறாள். காயப்பட்டிருக்கிறாள்.
அதனால், கழிவிரக்கம் , சுயபச்சாதாபம் போன்ற சுழல்களில் மாட்டிக்கொண்டு தவித்திருத்திருக்கிறாள்…”
ராஜி திகைத்து நிற்க,
“நீ அரணாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டதன் விளைவு , விஸ்வா இக்கட்டான சூழ்நிலையோ, துன்பமோ வந்தால், தப்பித்து கொள்ளத்தான் நினைக்கிறானே தவிர, எதிர்த்துப் போராட தயங்குகிறான்..” என்று மூச்சை இழுத்து விட்டவர், “அதனால் தான் இந்தப் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது. முளையிலே கிள்ளியிருந்தால், அவன் வாழ்க்கை சுமூகமாகவே இருந்திருக்கும். உன் மகனும் அல்லல்பட்டிருக்கமாட்டான்…
நல்லவேளை கடவுளின் அருளால், இப்போதுதான் உன் மகன் விழித்து , தன் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்கிறான். இப்போது தான் முதன்முறையாக பொறுப்பாக, அவனே களத்தில் குதித்துப் போராடுகிறான்..” என்று சங்கரன் அனைத்தையும் விளக்க ,
ராஜிக்கு உண்மை சுட, எதிர்த்து வாதிட முடியாமல் அமைதி காத்தார் .
பின் வேகமாக, “இப்போது சந்தியா எப்படி இருக்கிறாள்?”
“ஓ.கே தான்…”
ஆனாலும், சந்தேகம் தீராமல், “திரும்ப வராதே?”
“இப்போதைக்கு ஓ.கே. தான். ஆனால் இது தொடர வேண்டும் என்றால் அது உன்னிடம், விஸ்வாவிடமும் தான் இருக்கிறது..”
“ம்ம்….” என்று சிறிது நேரம் அமைதி காத்தவர், பின் முழுமையாக அறிந்து கொள்ளும் முயற்சியில் , “இதில் ரஞ்சனி எப்படி?” என்று ராஜி விசாரிக்க ,
மருத்துவமனைச் சந்திப்பையும் , அதன் பின்னால் நடந்த நிகழ்வுகளையும் சங்கரன் விளக்க ,
ராஜி அசந்து போனார் .
“ஆனால் எப்படிங்க? ஒரு தடவை மட்டும் பார்த்த பெண்ணிற்காக இவ்வளவு மெனக்கெடல்கள் , நம்ப முடியவில்லையே…?”
ஒரு எள்ளல் பார்வையோடு , “இந்தக் கருணையை , அன்பைத்தான் , ரஞ்சனிக்குக் கால் போன போது உன்னிடமும் , விஸ்வாவிடமும் எதிர்பார்த்தேன்.”
ராஜி பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காக்க , “அன்று சொன்னேன் இல்லையா? நிச்சயம் உங்களை மாதிரி நடந்து கொள்ளமாட்டார்கள் . இப்போது அது உண்மையாகி விட்டதா? நல்ல பக்குவமான குடும்பம் . உங்களுக்குக் கொடுப்பினை இல்லையே….” என்று பெருமூச்சு விட ,
பின் அவரே, “நல்ல வேலை உங்களை மாதிரி சுயநலவாதிகளிடம் மாட்டாமல் தப்பித்து விட்டாள்….”
ராஜி குன்றலுடன் சில நிமிடம் நின்றவர் , “விஸ்வாவை இந்தச் சிக்கலில் இருந்து எப்படி விடுவிப்பது?” என்று கவலையோடு கேட்க ,
“முதலில் இந்தச் சிந்தனையை விடு , மீன் பிடிக்கக் கற்று தர வேண்டுமே தவிர மீனையே பிடித்துக் கையில் தரக் கூடாது ராஜி .”
ராஜி மனசு கேளாமல் , “ஏங்க ?”என்று இழுக்க ,
“அவன் இப்போது ஒரு குடும்பத்திற்குத் தலைவன் . அக் குடும்பத்தின் நன்மை தீமைகள் அவனைச் சார்ந்தது . அவனே யோசித்து முடிவு செய்யட்டும் .”
ராஜி மகன் கஷ்டப்படுகிறானே என்று தவிக்க , “தள்ளி நின்று கவனிப்போம் . நம் உதவி தேவைப்பட்டால், கண்டிப்பாகத் துணை நிற்போம் . இதை எத்தனையோ முறை உனக்கு உணர்த்த முயற்சித்தேன் , ஆனால் நீ புரிந்து கொள்ள வில்லை.
இப்போது தான் சந்தியா விஷயத்தில், உன் பின்னால் ஒளியாமல், உன்னை நாடாமல், பெரிய மனிதனாகப் போராடுகிறான். இப்பொழுதுதாவது அவன் கையை விடு , அவனே நீச்சல் அடித்து மேலே வரட்டும்…” என்றார் தீர்க்கமாக ,
அவர் சொன்னது வலிக்க, மகன் தன் கையை விட்டு நழுவுகிறான் என்பது உரைக்க, ஏதேனும் அடாவடியாக இறங்கினால், தன் மகன் தன்னைவிட்டுப் போய் விடுவான் என்ற எதார்த்தம் புரிய,கண் கலங்க, அப்படியே சமைந்தார்.
“இது காலத்தின் கட்டாயம் ராஜி…. உன் மகனின் நல்வாழ்வை மட்டும் யோசி…”என்று தட்டிக் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, “அடுத்து என்ன செய்யலாம்?”
“நீயே யோசி , நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் குணநலன்களை எடை போட்டு , நீயே முடிவு செய்…” என்று படுத்தார்.
ராஜி சிறிது நேர அமைதிக்குப் பிறகு , “ஏன் என்னிடம் முதலிலே சொல்லவில்லை?” என்று ஆதங்கமாய் கேட்க ,
“முதலில் சொல்லியிருந்தால் உன் குணத்திற்கு , இதைச் சரியாகக் கையாண்டிருக்கமாட்டாய் .”
“என்னை நீங்களே கெட்டவள் நினைத்தால் , மற்றவர்கள்…?.” என்று குமற ,
“சரியாகப் புரிந்து கொள் ராஜி . நாங்கள் அப்படி உன்னைச் சத்தியமாக நினைக்கவில்லை . உன் மகன் மீது வைத்திருக்கும் அதீத பாசம் , அவன் கஷ்டப்படுவதைப் பார்த்து, ஆற்றாமையாக மாறும் , அது சந்தியாவின் மீது தான் பிரதிபலித்திருக்கும் .
அதுவும் சந்தியா இருந்த மனநிலையில் , பெரும் பிரச்சனையாகியிருக்கும் . என்கிறேன்.”
“அதனால்தான், ‘மகனிற்காக, மகனிற்காக’ என்று சொல்லி , உன்னைப் பொறுமையாகப் போகச் செய்தேன் . சந்தியா தேறிய பின் , ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லுவோம் என்று நினைத்திருந்தோம்.”
மகன் பேசியது ஒரு பக்கம் வலிக்க , தன் கணவன் சுட்டிக் காட்டிய தவறுகள் உறுத்த , தன்னால் சந்தியா பாதிக்கப்பட்டதும் வருத்த , மகனின் நிலை கவலைக்குள்ளாக்க என்று அனைத்தையும் ராஜி சிந்தித்தப்படி, அதே இடத்தில் அமர்ந்திருந்தார் .
சிறிது நேரத்தில், “இப்போது நான் என்ன செய்ய?” என்று ராஜி மீண்டும் கேட்க ,
சங்கரன் சிரித்தபடி , “என் மனைவி புத்திசாலி , மகனின் சந்தோஷமான வாழ்க்கையை. முன் நிறுத்தி, நல்ல முடிவாக எடுப்பாள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்று ராஜியைத் தன் அருகே படுக்க வைத்தார்.
கண்ணில் இருந்து நீர் வழிய, அதை சங்கரன் அறியாமல் ராஜி துடைக்க முயல,
அப்போது சங்கரன் ராஜியைத் திருப்பி, தன்னுடன் அணைத்துக் கொள்ள, ராஜி குலுங்கிக் குலுங்கி ,அழத் தொடங்கினாள்.
சங்கரன் எதுவும் பேசாது, மெதுவாக தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.