புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 29

அத்தியாயம் 81

விஸ்வாவும் ரகுவும் , ஒரே நாள் மருத்துவமனைக்குச் செக்கப் போவதற்குத் திட்டமிட்டு , அதைத் தற்செயல் போல் நடத்தி,  சந்தியா மீண்டும்  ரஞ்சனியை சந்திக்கும்படி செய்தனர் . 

மருத்துவரைப் பார்த்து விட்டு , நான்கு பேரும் மதிய உணவிற்குச் சேர்ந்து போனார்கள் .   மருத்துவமனைக்கு வேண்டாம் என்று ஆகாஷை ராஜியிடம் விட்டு வந்திருந்தனர் . அதனால் நிதானமாகப் பொறுமையாக ஊர் கதைகள் பேசி உண்டனர் 

விஸ்வாவும் மன்னிப்புக் கேட்டதில் இருந்து, பெரிதும் குற்ற உணர்ச்சியில் இருந்து மீண்டு இருந்தான் . அவனாலும் சகஜமாகப் பேச முடிந்தது . 

மொத்தத்தில் நல்ல இணக்கமான சூழ்நிலையாக இருந்தது .

சந்தியாவிற்குத் தன்னுடைய பிரச்சனைகளை விடுத்து , பொது விசயங்கள்  பேசியது இதமாக இருந்தது. நல்ல நட்பிற்கு அடித்தளம் போடப்பட்டது . 

இதைத் தொடர்ந்து சந்தியாவும் ரஞ்சனியும் போனில் அடிக்கடி பேசினர் .  மேலும் இரு குடும்பங்களும் திட்டமிட்டு சேர்ந்து வெளியே சென்றனர் . சில நேரம் வேறு  நண்பர்களையும் இணைத்துக் கொண்டனர் .

மூன்று மாதங்கள் ஓட ,  சந்தியாவும் ரஞ்சனியும் நல்ல தோழிகளானார்கள்  . 

சந்தியாவும் மெல்ல மெல்ல , தன் தயக்கங்களையும்  பயங்களையும் குடும்பச் சூழ்நிலையையும் பகிர ஆரம்பித்தாள் . தான் பட்ட அடிகளையும் , அவமானங்களையும் . வலிகளையும் மனம் விட்டு பேச ஆரம்பித்தாள் . 

சந்தியா  பேசப் பேச , அவளுக்கு ஆதரவாகவோ  இல்லை  குற்றம் சாட்டும் மனப்பான்மையோடு  இல்லாமல், அனைத்தையும் ரஞ்சனி  எந்த  முன்முடிவுகளும் இல்லாமல் பொறுமையாகவும்   அமைதியாகவும் உள்வாங்கிக் கொண்டாள்.   அதுவே சந்தியாவிற்கு அமைதியையும் நிம்மதியையும் தந்தது .

சந்தியாவிற்கும் பேசிய பிறகு, மனம் லேசானது. மேலும் ஒரு  சுதந்திர காற்றைச் சுவாசிப்பது போலவும் இருந்தது . 

மேலும் ரஞ்சனியும், அவளிடம் பேசிப் பேசி அவளுடைய வளர்ப்பு முறை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை  தெரிந்து கொண்டாள் . முக்கியமாக, உறவுகளை , பிரச்சினைகளைப் பார்க்கும் பார்வை , அணுகுமுறை என்று எல்லாவற்றையும் துருவி துருவிக் கேட்பது போல் இல்லாமல், இயல்பாகப் பேசி வாங்கிக் கொண்டாள் .

சந்தியாவின் எதிர்பார்ப்பு மற்றும் விஸ்வா திருத்த வேண்டிய விசயங்களை மட்டும் அவனிடம் பகிர்ந்து கொண்டார்கள் . மற்றதை சென்ஸார் செய்தார்கள் . இதனால் விஸ்வா சந்தியா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அதே வேளையில் சந்தியாவிடமும் , அவளுடைய பிரச்சனைகளைப் பற்றி , அதை அணுகும் முறை  பற்றி , அறிவுரை போல் அல்லாது  பேச்சுவாக்கில் ஆங்காங்கே தெளிப்பது போலவும் , இதைவிட பெரிய கொடுமைகளில் மீண்டவர்கள் வாழ்க்கையில் நடந்த விசயங்களை விவாதிப்பது மூலமும் , சந்தியாவிற்குத் தெளிவை ஏற்படுத்த முயன்றார்கள்.

சந்தியாவிற்குப் புறச்சூழல் மாற ஆரம்பிக்க , இப்பேச்சுக்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள் .

 விஸ்வாவும் இவர்கள் அறிவுரை கேட்டு , நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் நடக்க , அவளும்  திடம் பெற்றாள் . 

ரஞ்சனி உடல்நிலை கருதி ,  கருவுற்றிருக்கும் இக்காலத்தில் ஓய்விலே இருக்கும்படி மருத்துவர்கள் சொல்லியிருக்க , ரஞ்சனிக்கு அதிக நேரம் இருந்ததால் , ஒவ்வொன்றையும் யோசித்து , திட்டமிட்டுச் செய்தாள் .

 கிட்டதட்ட  மனநல மருத்துவரின் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் . 

தான் எடுத்த பொறுப்பை உணர்ந்து , எல்லோரிடமும்  கலந்து ஆலோசித்து , முடிவு செய்து , செயல்படுத்தி வந்தாள் ரஞ்சனி. சில நேரம் தனக்கு உதவிய மனநல ஆலோசகரிடமும் உதவி பெற்று , ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

முதலில் ராமநாதன், கூட எதற்குத் தேவையில்லாத வேலை என்று தடுத்தார்  தான்.  இவர்களின் நட்பு , குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுமோ….? என்று கூட கோகிலா பயந்தார். 

நாளடைவில் பிள்ளைகள் இருவரும் சரியாகக் கையாளுவதில் நிம்மதியானார்கள் .  மேலும் ஒரு பெண்ணின் நல்வாழ்க்கைக்குப் பாடுபடுவதில் மகிழ்ச்சியே அடைந்தார்கள். 

எல்லாம் நல்லபடியாகப் போக , சந்தியா தேறி வந்தாள் . விஸ்வாவும் வாழ்க்கைப் பாடம் படித்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 82

விஸ்வாவின் செயல்களைப் பார்த்து , ராஜி முணுமுணுக்க , உடல்நிலையை காரணம் காட்டி ,‌  சங்கரன் சமாதனப்படுத்தினார் .

 முதலில் ராஜி முறுக்க , “அப்புறம் உன் பிள்ளை தான் மருத்துவமனைக்கு  அலைய வேண்டும் , யோசித்துக் கொள்…” என்று எச்சரித்தார் .

ராஜியும் விஸ்வாவிற்காகப் பொறுமை காத்தார் . 

ஆனால் நாட்கள் போகப்போக ,  சந்தியாவைக் கவனிப்பதைக் கண்டு எரிச்சலடைந்தார் .  தன்னுடைய முதன்மை இடம் நழுவுவது போல் உணர்ந்தார் . 

எவ்வளவு தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் மனித இயல்பு வெளிப்படத்தான் செய்தது , இருவருக்குள்ளும் மோதல்கள் வரத்தான் செய்தன . 

பெரும்பாலும் ஆகாஷ் விசயத்தில் மோதல்கள் வரும் பொழுது ,  “உங்கள் பையனை , உங்கள் இஷ்டப்படி வளர்த்த மாதிரி ,அவள் ஆசைப்படி அவள் பிள்ளையை வளர்த்துக் கொள்ளட்டும் அம்மா…” என்று கேலி போல் பேசி, பிரச்சனையை சரிகட்ட முயன்றான் விஸ்வா .

“அவளுக்கு அறிவு  பத்தாது…” என்று ராஜி பேச , 

சந்தியாவிற்கு கண்ணீர் வர ,  வேலை இருப்பது போல் திரும்பிக் கொள்ள ,

இதைக் கவனித்த விஸ்வா , “அம்மா நீங்கள் என்னைப் பொத்தி பொத்தி வளர்த்ததால் , பல இடங்களில் கஷ்டப்பட்டேன் . அதேபோல் சந்தியாவையும் ஆகாஷையும் பாதுகாக்காதீ ர்கள் ,  அவர்கள் அனுபவப்படட்டும் .”

விஸ்வாவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்தவர் , “ என் வளர்ப்பைக் குறை சொல்கிறாயா விஸ்வா?” 

“இல்லை அம்மா , அனுபவம் சிறந்த படிப்பினை என்கிறேன்…”

“விஸ்வா …..” என்று ராஜி ஆரம்பிக்க ,  

“நீங்களே முடிவு செய்யாதீர்கள் அம்மா , அவளுக்கும் வாய்ப்பு கொடுப்போம் , ஏதேனும் தவறு நேரிட்டால் கை கொடுங்கள் என்கிறேன்” 

மகனின் மாற்றத்தை ராஜி அதிர்ச்சியுடன் பார்த்தாள் . சங்கரன் மெச்சுதல் பார்வையைச் செலுத்தினார் .

விஸ்வா அங்கிருந்து நகர , “என்னங்க , இப்படி பேசுகிறான் ?”

“இப்போது தான் சரியான பாதையில் போகிறான் ராஜி.”

“என்னங்க…… ?”என்று பல்லைக் கடிக்க ,

“இங்க பார் ராஜி , விஸ்வாவின் வளர்ப்பில் என் அம்மா , அப்பாவோ  தலையிட்டிருந்தால் , நீ ஒத்துக் கொள்வாயா?”

ராஜி வேகமாக , “அவர்கள் கிராமம் . நான் அவர்களை விட அதிகம் படித்திருக்கிறேன் . மேலும் நகர வாழ்க்கையும் நன்றாக தெரியும்…” என்றார் இறுமாப்பாக .

“நான் சரியாக வளரவில்லையா?” என்று சங்கரன் கேட்க ,

“என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லை…?”

“இல்லை , என்னை வளர்த்தது , என் அம்மா , அப்பா என்கிறேன்…” என்றார் கோபமாக .

“இல்லை , நகர வாழ்க்கை …..” என்று இழுக்க ,

“அந்தக் கிராமத்துக்காரர்களிடம் இருக்கும் இங்கிதமும் , புரிதலும் கூட உனக்கு இல்லை ,  யோசி…” என்று நகர்ந்தார் .ரரர

முதலில் விஸ்வா இருவருக்கும் இடையே பேலன்ஸ் செய்ய தடுமாறினாலும் நாளடைவில் சங்கரன் மற்றும் ரகுவின் வழிகாட்டுதலோடு சரியாகவே செய்தான்.

“அதே வேளையில் விஸ்வாவிற்கு இதுதான் பிடிக்கும் , இது தான் செய்வான்” என்று ராஜி ஆணித்தரமாகப் பேசும் வேளையில் , விஸ்வா அம்மா பக்கமே நின்றான் .

ஆனால் சந்தியாவிடம், “அம்மா சொல்படியே இருந்துவிட்டேன். திடீரென மாறினால் அவர் தாங்கமாட்டார். அதனால் கொஞ்சம் காலம் கொடு, கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறேன்.” என்று சமாதானப்படுத்த முயன்றான்.

சந்தியா கலக்கத்துடன் பார்க்க,

அவள் கலக்கத்தைத் தீர்க்கும் பொருட்டு, “இப்போதைக்கு ஒரு உறுதி தருகிறேன், ஆகாஷ் விஷயத்தில் அம்மா தலையிடாமல் பார்த்துக் கொள்கிறேன். சரியா?”

முன்பு போல் மேம்போக்காக இல்லாமல், தீர்வுகளைத் தருவதால், சந்தியாவும் பதட்டத்தை விடுத்து, அமைதியானாள்.

மேலும் விஸ்வா, அவளை நன்றாகக் கவனிப்பதும், அவளுடைய மற்ற பாஸிட்டிவ் விசயங்களைப் பாராட்டுவதும், ஒரு வித நம்பிக்கையைத் தர ,  விட்டுக் கொடுத்தாள் . 

வாழ்க்கைச்சக்கரம் ஓரளவு சீராக சென்றது .

விஸ்வா பார்த்துப் பார்த்து ஒவ்வொரு அடியாக வைத்தான். முக்கியமாக மீண்டும் ஒரு பெண் வாழ்க்கை, தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று  நினைத்தான்.

அத்தியாயம் 83

மேலும் இரண்டு மாதங்கள் ஓட , அன்று சுந்தரியும் , சுவாமிநாதனும் , ரகுவின் வளைகாப்பிற்கு அழைக்க வந்திருந்தனர் . 

சந்தியா மிகவும் பிரியத்துடன் அவர்களை வரவேற்றாள் . ரஞ்சனி மூலம் இவர்கள் மீது , சந்தியாவிற்குப் பெரிய மரியாதை ஏற்பட்டிருந்தது .

சந்தியாவின் நடவடிக்கைகளை யோசித்தப்படியே , ராஜி பட்டும் படாமல், வருகிறோம்  என்று முடித்துக் கொண்டார் .

அன்று இரவு உணவு மேஜையில் , விஸ்வாவிடம் , இன்று  ரகுவின் பெற்றோர் வந்து  வளைகாப்பிற்கு அழைத்தார்கள் என்ற விவரத்தை தெரிவித்து விட்டு ,

 “எப்படிப் போவது ? யாரெல்லாம் போகிறோம்?” என்று சந்தியா ஆர்வக்கோளாறில் பேச்சை ஆரம்பிக்க ,

இடை புகுந்த ராஜி , “அப்பா மட்டும் போகட்டும்…” 

சந்தியா மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததாலும் , ‘ரஞ்சனிக்காகக் கட்டாயம் போக வேண்டும்’ என்று நினைத்திருக்க , 

ராஜியின் முடிவு அதிர்ச்சி அளித்தது . 

“கணவன் ஏதாவது சொல்கிறானா?” என்று பார்க்க , 

அவன் அப்பாவைப் பார்க்க , 

இனிப் பேசாமல் இருந்தால் காரியம் நடக்காது என்பதை உணர்ந்து , இத்தனை நாள் கணவனின் நடவடிக்கையால், தைரியம் பெற்ற சந்தியா ,  

“நெருக்கமாகப்  பழகி விட்டு , போகாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும் அத்தை…” என்று ஆரம்பிக்க,

“என்னது நெருக்கமாகவா? என்ன விஸ்வா ?” என்று கூர்ந்து பார்க்க ,

அவன் என்ன சொல்வது? என்று யோசிக்கும் பொழுதே,  

“ரகு இவரோட நெருங்கிய நண்பர் . மேலும் நிறைய முறை நானும்  ரஞ்சனியும் வெளியே போயிருக்கோம் , எங்களுக்கிடையும் நல்ல நட்பு இருக்கிறது…” என்று சந்தியா முடிப்பதற்குள் ,

“விஸ்வா….. என்னடா சொல்கிறாள் ?” என்று ராஜி கர்ஜிக்க ,

‘ஐயோ, இவள் ஏன் பேச்சைத் தொடங்கினாள்’ என்று யோசித்தபடி,  விஸ்வா சந்தியாவைப் பார்க்க , அவள் முகத்தில் பதட்டத்தைக் கண்டான் , 

இப்போது தான் பேசியே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தான் . பதட்டமானான்.

“சட்டென்று   ஏன் கத்துகிறீர்கள் அம்மா ? பொறுமை… , நான் அனைத்தையும் விவரமாகச் சொல்கிறேன்….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,

“என்னிடம் மறைத்து , என்னடா வேலை இது ? உன்னால் எப்படி முடிந்தது?” என்று கோபமாகப் பார்க்க,

“அம்மா…..” என்று விஸ்வா தயங்க ,

சங்கரன் இடை புகுந்து , “நிதானமாக இரு ராஜி….”

“என்னை அடக்காதீர்கள் . ‘தேவையில்லை , வேண்டாம்’ என்று ஒதுக்கிய பின் , என்ன பேச்சு? என்ன தொடர்பு? இவளும் அவளோடு சேர்ந்து சுற்றியிருக்கிறாள்…?” என்று தொடர்ந்து, எதையும் காதில் வாங்காமல் பேச ,

“இங்கே என்ன நடக்கிறது?” என்று நெஞ்சில் பயப்பந்து உழல, சந்தியா கேட்க ,

உடனே ராஜி , “விஸ்வாவிற்கு  முதலில் பார்த்த பெண் தான் ரஞ்சனி…” என்று ஆங்காரமாய்ச் சொல்ல ,

சந்தியா அதிர்ந்தாள் . ஒரு நிமிடம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாது , அதிர்ச்சியில் திக்கு பிரமைப் பிடித்தவள் போல் நின்றாள் .

விஸ்வா பயந்து அவள் அருகில் போய் உலுக்க , சுய நினைவு பெற்றவள் , “இது உண்மையா விஸ்வா?”

 ‘ஆம்’ என்று தலையாட்ட , 

சந்தியா விறுவிறுவென அறையை நோக்கி நடக்க, விஸ்வா  பின்தொடர்ந்தான் .

“விஸ்வா……” என்று ராஜி  அழைக்க ,

“ச்சா , என்ன அம்மா  ? இப்படிச் செய்துவிட்டீர்களே ?  இப்போது தான் கொஞ்ச நாளாக நன்றாக இருந்தாள் . இனி மீண்டும் முதலில் இருந்தா ?” என்று முகத்தில் ஒரு பிடித்தமின்மையைக் காண்பித்து விட்டு, நடந்தான் .

மகன் தன்னிடம் மறைத்தது மட்டுமில்லாமல் , தன்னைக் குற்றம் சாட்டியதையும் , எதிர்த்துப் பேசியதையும் , சந்தியா பின்னால் போவதையும்  தாங்க முடியாமல் சோபாவில் அப்படியே  சமைந்தார்  ராஜி .

சங்கரன் அருகில் வந்து அமர , “நம்ம விஸ்வா தான் இப்படிப் பேசினானா?  என் மகனா இப்படி…?” என்று கண்ணீர் உதிர்க்க,

ராஜியை சங்கரன் தட்டிக் கொடுக்க , “எப்படிங்க அவனால் முடிந்தது… . அவனுக்காக யோசித்து யோசித்து செய்தேனே? அவனுக்காகவே வாழ்ந்தேனே…?”

“விடு ராஜி , அவனுக்கு பல டென்ஷன் “ என்று சமாதானப்படுத்த முயல ,

“இல்லைங்க , கொஞ்ச நாளாகவே ,அவன் சரியில்லை . பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை , அதனால் அப்படி இருக்கிறான் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன் . ஆனால் இன்று ….”  என்று ராஜி அடுத்து எதையும் சிந்திக்க இயலாது , 

“என் விஸ்வா தானா இது?  என் மகனா இப்படி? என்ன நடக்குது இங்கே?” என்று அதையே புலம்ப  ,

“அவன் உனக்கு மகன் மட்டுமல்ல, சந்தியாவிற்குக் கணவனும் கூட…. அதனால்தான் இதெல்லாம்….. கொஞ்சம் பொறுமையாக இரு. காலையில் அவனிடம் பேசுவோம்” என்ற ராஜியை சமாதானப்படுத்தி , அறைக்குள் அழைத்து செல்ல முயல , 

“இல்லை…” என்று அவர் அப்படியே அங்கேயே உட்கார்ந்திருந்தார் .

தொடரும்…….