புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 26

அத்தியாயம் 75

விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் .

“அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன் ரகு? சந்தியாவைப் பார்க்கும் பொழுது , நான் அவளுக்குச் சரியான கணவனாக நடக்கவில்லையோ? என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது..” என்று புலம்பினான் .

பின், “என்னைப் பற்றி தப்பாக நினைக்கிறாயா ரகு? நான் எதையும் தெரிந்து செய்யவில்லை…” என்று வருத்தப்பட்டுச் சொல்ல ,

“நிச்சயமாக இல்லை , நாம் மனிதர்கள் தானே,  நமது முடிவுகள்  தவறாகப் போவது இயற்கை தான் . அனைவரும் சூழ்நிலை கைதிகள் தான் . எனக்குப் புரிகிறது….”  

“நன்றி ரகு…” என்று விஸ்வா கையைப் பிடித்தான் .

மெதுவாக ரகு , “நீ வளர்ந்த சூழ்நிலையால் பிரச்சனையின் அடித்தளம் புரியவே உங்களுக்கு நாளாகிவிட்டது . அதற்குள் அது மரமாக வளர்ந்து விட்டது . ஆனால் நீங்கள் கொஞ்சம் உங்கள் அப்பாவின் பேச்சைக் கேட்டிருக்கலாம் விஸ்வா. நீங்கள் கைக்குக் கிடைத்த உதவியை பிடிக்காமல் விட்டு விட்டீர்கள்.  பிடித்திருந்தால்… இந்த நிலைமை வந்திருக்காது..”

“புரிகிறது ரகு , எங்கள் வீட்டின் குடும்பப் பொறுப்பு முழுவதும் அம்மா கையில் தான் . எல்லா முடிவுகளும் அம்மா தான் எடுப்பார் . அப்பா பெரிதாக தலையிட மாட்டார் . என் விசயத்தில் அறவே கிடையாது . அதனால் அம்மாவைச் சார்ந்தே இருந்துவிட்டேன்.”

“ஏன் நம் வீட்டில் இப்படி நடக்கிறது என்று யோசிருக்கிறீர்களா?”

“இல்லை , நான் அப்படியே ஏற்று கொண்டேன் . பழகிவிட்டேன் .”

“இதைப்பற்றி அப்பாவிடம் கேளுங்கள் . அதே போல் உங்கள் விசயத்தையும் முதலில் அவரிடம் பேசுங்கள் . அவர் சரியாக வழி நடத்துவார் என்று தோன்றுகிறது” என்றான் ரகு .

“இல்லை அப்பா …” என்று தயங்க ,

“ நம் அப்பா தானே…. பேசுங்கள்…” என்று சிரிக்க ,

“சரி…” என்று தலையாட்டினான் விஸ்வா .

“எனக்கு ஒரு சின்ன யோசனை தோன்றுகிறது . உங்களுக்குச் சரியென்று பட்டால் முயற்சிக்கலாம் .”

“சொல்லு ரகு…” 

“உங்கள் மனைவிக்கு ரஞ்சனி மேல் மரியாதையும் அன்பும் இருக்கிறது . இருவரும் ஒத்த வயதினர் வேறு , நட்பு ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேச நிறைய வாய்ப்பு இருக்கிறது . 

மேலும், உங்கள் மனைவி மனம் திறந்து கொட்டினாலே பிரச்சனைகள் சரியாக வாய்ப்பு இருக்கிறது .  ரஞ்சனியும் பக்குவமாகக் கையாளுவாள் . சந்தியாவின் எண்ணங்களை தெரிந்து கொண்டால், உங்களுக்கும்  சந்தியாவை அணுகவும் வசதியாக இருக்கும் .”

விஸ்வா தர்மசங்கடமாக பார்க்க , “பழையதை மறந்து விடுங்கள் விஸ்வா . அது இறந்த காலம் . நாம் எதிர்காலத்தை தான் யோசிக்க வேண்டும் .”

“தனக்கு ஏதாவது பிடிமானம் கிடைக்காதா? என்று தவித்து கொண்டிருக்கும் வேளையில் , விஸ்வாவால் மறுக்க முடியவில்லை . உனக்குப் பெரிய மனசு ரகு…” என்று நெகிழ்ந்து சொன்னான் . பின், “ரஞ்சனி …” என்று தயங்க ,

“நிச்சயமாக உதவி செய்வாள் . அவளுக்கு அந்த தெளிவும் பக்குவமும் இருக்கிறது” என்றான் ரகு பெருமிதமாக ,

விஸ்வா தலைகுனிந்தபடி , “முயற்சிக்கலாம் ரகு….”

விஸ்வாவின் கைகளைத் தட்டிக் கொடுத்த ரகு , “உங்கள் மனைவியின் அலைபேசி நம்பரை எனக்கு அனுப்புங்கள் . நான் ரஞ்சனியைப் பேச சொல்கிறேன் .”

“ம்ம்….” என்றவன், ரகுவிற்கு அனுப்ப , 

அதைக் குறித்து கொண்டவன் . “நேரமாகிவிட்டது . நாம் கிளம்பலாம்.  நாளையே  அப்பாவிடம் பேசி விடுங்கள் . தள்ளிப் போடாதீர்கள்…” என்று எழுந்தான் . 

விஸ்வாவும் இணைந்து கொண்டான் .

விஸ்வாவிற்கும் மனமும் லேசாகியிருந்ததது . ஒரு நம்பிக்கை வந்திருந்தது . 

மறுநாள் மாலை ரஞ்சனி சந்தியாவை அழைக்க , சந்தியா முதலில் புதிய நம்பர் என்று எடுக்காமல் தவிர்த்தாள் . மீண்டும் மீண்டும் அழைக்க , எடுத்தாள் .

“குட் ஈவினிங் சந்தியா , நான் ரஞ்சனி….”

“ஓ…. !” என்றபடி, ரஞ்சனி மீது ஒரு இரக்கமும் , பாசமும் இருந்ததால் பேச்சைத் தொடர்ந்தாள்.

“எப்படி? உங்களுக்கு என் நம்பர் கிடைத்தது ?”

“நேற்று வரவேற்பில் , ரகு வாங்கி வந்தார் .”

“ஓ… !”என்று அமைதியானாள் சந்தியா .

“சந்தியா… சந்தியா ..” என்று அழைக்க ,

“ சொல்லுங்க ரஞ்சனி…”

“எனக்கு இப்போது, பிரசவம், குழந்தை என்று நிறைய குழப்பங்களும் , சந்தேகங்களும் வருகிறது . உங்ககிட்ட ஃப்ரியா பேசிக்கலாம் என்று நினைத்துதான் , போன் செய்தேன் . பேசலாம் தானே ? உங்களுக்கு தொந்தரவு இல்லையே?”

“இது என்ன கேள்வி? நான் நிச்சயமாக உதவி செய்கிறேன் .”

“நன்றி சந்தியா..” என்றவள் . இரண்டு மூன்று சந்தேகங்களைக் கேட்டு விட்டு ,  கொஞ்ச நேரம் பொது விசயங்களைப் பேசிவிட்டு , போனை வைத்தாள் ரஞ்சனி .

தன் உடல்நிலை பற்றி இல்லாது , அறிவுரைகள் இல்லாத போன் கால்,  சந்தியாவிற்கு நிம்மதியை கொடுத்தது . மேலும் மட்டம் தட்டியே காயப்பட்டிருந்த மனதிற்கு தன்னையும் மதித்து கேட்டது ,  தான் அவளுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்தியது , என்று  அனைத்தும் சந்தியாவிற்கு ஒரு பெருமிதத்தைக் கொடுக்க , 

ரஞ்சனியுடன் பேசுவதை விரும்பினாள் .

அத்தியாயம் 76

மறுநாள் சங்கரனிடம் , “கொஞ்சம் பேச வேண்டும்  அப்பா…” என்று வெளியே அழைத்தான் . இப்பொழுதாவது மகன் பேச அழைத்தானே , புத்தி வந்து விட்டது  என்று உடன் சென்றார் .

“முதலில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கு அப்பா . அதைக் கொஞ்சம் தீர்த்து வையுங்கள்…” என்று ஆரம்பித்தான் .

“சரி சொல்லப்பா….”

“ஏன் அப்பா , என்னை வளர்ப்பதிலும் , வீட்டு நிர்வாகத்திலும் தலையிடவே இல்லை….?”

மென்மையாகச் சிரித்த சங்கரன் , “யோசிக்க ஆரம்பித்து விட்டாய் போல….” 

“அப்பா…….”

“உன் அம்மா ஒற்றை பிள்ளையாய் , அப்பாவிற்குச் செல்லப்பிள்ளையாய் வளர்ந்துவிட்டாள் . சிறு வயது முதலே அவள் நினைத்ததைச் சாதித்து பழகிவிட்டாள் . மேலும் உன் அம்மா என் வீட்டுக்கு வரவில்லை .நான் தான் இங்கு வந்தேன். அதான் அவள் ராஜாங்கமே தொடர்கிறது .”

“சரிப்பா ,  இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது . ஆனால் ஏன் ?  என் வளர்ப்பில் பங்கு பெற வில்லை .”

“நீ உன் அம்மாவைச் சரியாகப் புரிந்துக் கொண்டால் இந்தக் கேள்வியே கேட்டிருக்க மாட்டாய் . உன் அம்மாவிற்குத் தான் எதிலும் முதன்மையாக இருக்கவேண்டும்  என்ற எண்ணம் உண்டு . அதனால் உனக்கும் அவள் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று கருதினாள் . நான் முதலில் வளர்ப்பில் உள்ளே வர முயன்றேன் , ஆனால் அதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை . வீட்டில் பிரச்சனைகள் வெடித்தது .

மேலும் அவளும் உனக்குப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சிறப்பாகச் செய்தாள் . அதனால் நானும் ஒதுங்கி கொண்டேன் .”

ஆனால் அது ஒரு கட்டத்திற்கு மேல் ,  “உன்னுடைய சிந்தனை , செயல் என்று எல்லாம் அவளே தீர்மானிக்க ஆரம்பிக்க , கவலை வந்தது . என் நேரிடையான தலையீட்டை அவள் விரும்பமாட்டாள் என்று தெரிந்தே , அவள் மூலமே , அவளுக்குப் புரிய வைத்து செயல்படுத்தப் பார்த்தேன் . ஆனால் பெரும்பாலும் தோல்வியே தழுவினேன் .”

“சரி, உனக்குப்  புரிகின்ற வயது வந்தவுடன் மறைமுகமாகவும் , நேரிடையாகவும்  பல முறை பேசினேன் , எச்சரித்தேன் .  அதற்குள்  ஏன் மண்டையைப் போட்டு உடைக்க வேண்டும்  , அம்மா பேச்சையே கேட்டு நடப்போம் என்ற சொகுசுக்கு நீ பழகிவிட்டாய்…”

“மேலும்,  ‘அம்மா நல்லது தான் செய்வார்’ என்ற தாரக மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாய்”  என்று கசந்த முறுவலைச் சிந்தினார் .

“அப்பா….” என்று மீண்டும் தயங்கி , “அம்மா எனக்கு நல்லது தானே செய்வார்கள் அப்பா?”

“நிச்சயமாக விஸ்வா . எல்லா நேரமும்  எல்லா முடிவுகளும் சரியாக அமையுமா? மேலும் அந்த முடிவுகள் அனைத்தும் உன் அம்மாவின் பார்வையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் . உன்னுடைய கருத்துக்கள் , ஆசைகளைக் கருத்தில் கொண்டு அல்ல…”

“அப்பா….”

“உன் அம்மாவின் எல்லையற்ற அன்பு , உனக்குத் தனியான சிந்தனைகளே இல்லாமல் செய்து விட்டது  என்பது எனக்கு பெரிய வருத்தம் விஸ்வா .”

“அப்பா…..” என்று இழுக்க , 

“ஆனால் வியாபார விசயத்தில் நீ எடுப்பார் கைபிள்ளையாகி விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன் . உன் அம்மாவிடம் போராடி , அவளுக்குப் புரிய வைத்து , தனி கடை ஆரம்பிக்க வைத்தேன்.

நீயும் முட்டி மோதி அதில் வெற்றியும் கண்டு விட்டாய் . தொழிலை பொறுத்தவரை , நீ வெற்றியாளனாகப் பயணிப்பாய் என்ற நம்பிக்கை இருக்கிறது , ஆனால் குடும்ப வாழ்வில்….” என்று நிறுத்த ,

 அப்பா சொல்ல வருவது புரிந்து , தலை குனிந்தான் . பின், “இன்னும் என்  வளர்ப்பு விசயத்தில்  போராடியிருக்கலாமே?”

“இப்பவும் ஒளிந்து கொள்ளத் தான் பார்க்கிறாய்…” என்றார் கோபமாக. 

விஸ்வா பாவமாகப் பார்க்க,

 “சில விசயங்களைச் சூழ்நிலையும் தீர்மானிக்கிறது விஸ்வா . மேலும் உன் வளர்ப்பு விசயத்தில் விட்டுக் கொடுத்ததால் தான் ,  தொழில் விசயத்தில் சாதிக்க முடிந்தது  . மேலும் என் மகன் முட்டாள் கிடையாது என்ற நம்பிக்கையும் இருந்தது .”

மேலும் ராஜி , “உன்னை பிடிவாதக்காரனாகவோ , சோம்பேறியாகவோ , பணத்தின் அருமை தெரியாதவனோ , கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவனாகவோ வளர்க்க வில்லையே விஸ்வா . பிள்ளைக்கு கஷ்ட நஷ்டங்களை காண்பிக்காமல் , சொகுசாக , கைக்குள்ளே  தானே வளர்த்தாள்…” என்று மெலிதாகப் புன்னகைத்தார்.

“அம்மாவின் முதன்மையாக இருக்க வேண்டும் குணத்தை எப்படி அப்பா சமாளித்தீர்கள்?”

“அவள் தான், என் அன்புக்குரியவள், முதன்மையானவள் என்ற நம்பிக்கையை உண்டாக்கினேன்.”

“எப்படி அப்பா? புரியவில்லை…?”

“நீ பிறந்த பின்பும் , ராஜி மீது எப்போது தனி கவனம் செலுத்துவேன். அவள் சாப்பிட்டாளா? என்று மூன்று நேரமும் கேட்பேன். எங்கே சென்றாலும் அவளைத் தொடர்பு கொண்டு பேசி விடுவேன். அவள் தனியே வெளியே சென்றால் அவ்வப்போது விசாரித்துக் கொள்வேன்..எந்தப் பிரச்சனை வந்தாலும் , அவள் கூட நிற்பேன். தவறு இருப்பின் தன்மையாக பேசிப் புரிய வைப்பேன். சில நேரங்களில் விஷயம் சிறிதென்றால் விட்டுக் கொடுத்து விடுவேன்.”

விஸ்வா அப்பாவை ஆச்சரியமாகப் பார்க்க,

“உன் அம்மாவிற்கு உரிய மதிப்பும், அங்கீகாரமும், அன்பும்  கிடைத்ததால் தான், என் பக்க சொந்தகளிடம் கோபமோ? பயமோ ?அவளுக்கு எதுவும் இல்லை. அதனால் நான் நினைத்த மாதிரி என் குடும்பத்திற்கு எல்லாம் செய்ய முடிந்தது.இதில் முக்கியமான விஷயம் , அவர்களும் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டார்கள். 

நானும் இருபக்கமும் சரியாக பேலென்ஸ் செய்தேன். அதனால் நீ சந்திக்கும் பேராட்டங்கள் எனக்கு இல்லை.” 

விஸ்வா அசையாது பார்க்க,

“சின்ன சின்ன விசயங்கள் தான் விஸ்வா. சின்ன மெனக்கெடல்கள் பெரிய விஷயத்தைச் சாதிக்கும்.”

விஸ்வாவிற்கு தன்‌ தவறுகள் நன்றாகப் புரிந்தது. ‘அப்பா சொன்னதை முன்னாடியே கேட்டிருக்கலாமே…’என்று வருந்தினான் .

விஸ்வாவின் அமைதியை கலைத்து, “ என்ன விசயம்?  என்ன பிரச்சனை?” என்று சங்கரன் ‌கேட்க,

“அப்பா….” என்று தயங்க ,

“ஏதோ ஒரு பெரிய விசயம் , உன்னைப் போட்டு தாக்கியிருக்க வேண்டும் இல்லையென்றால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லையே…” என்று அதிரடி காட்ட , 

விஸ்வா கண்கலங்கி , ஆமோதித்தான் .

தொடரும்…..