புதுப்புது அர்த்தங்கள்…. நாள்   –  22

அத்தியாயம் 62

ரகு வந்து அழைத்ததாலும் , தொழில் ரீதியான சந்திப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதாலும் , கூட்டத்தில்  சந்தித்து விட்டால் பின்னால் சந்திக்க நேரிட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விஸ்வா வரவேற்பிற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான் .

மேலும் ரகு வரவேற்பிற்குச் செல்லவில்லை என்றால் சந்தியாவிற்குப் பதில் சொல்ல வேண்டும் . 

“எதற்குத் தேவையில்லாத பிரச்சனை? என்றும் யோசித்தான் . ரஞ்சனி பற்றிய விவரம் சொல்லாமல் , ரகுவின் திருமணம் என்றே முடித்துக் கொண்டான் . “

மேலும் ரஞ்சனியை சந்தோஷமாகப் பார்க்க அவன் மனம் விரும்பியது .

“ராஜி உடல்நிலை சரியில்லை..” என்று திருமணத்தை தவிர்த்து விட , 

மற்ற மூவரும் குழந்தையுடன் கிளம்ப , “ விஸ்வாவை இங்கே விட்டுப் போங்களேன் , எதற்கு கூட்டத்திற்கு …” என்று ஆட்சேபம் தெரிவிக்க ,

“குழந்தைக்கு வெளியே போன மாதிரி இருக்கும்..” என்று சொல்லி , சந்தியா  ஆகாஷைக் கூட்டி வந்தாள் 

 ரஞ்சனியின் குடும்பமும் இவர்களை அன்புடன் வரவேற்றனர் . ரஞ்சனியின் குடும்பத்தின் பக்குவத்தைக் கண்டு விஸ்வா வியந்தான் .

மேடையில் இருந்த ரஞ்சனியைப் பார்த்து சந்தியா ஆச்சரியப்பட்டாள் . 

பின் விஸ்வாவிடம் , இவர்களை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம் என்று சேலை கதையைக் கூற , 

சில நிமிடங்களே பார்த்தவங்களை எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய் ?என்று ஆச்சரியமாகக் கேட்க , 

“எனக்காக , என் முதல் திருமண நாளுக்காக , அவர்கள் தேர்ந்தெடுத்த சேலையை எனக்கு விட்டுக் கொடுத்தார்கள்  , அதனால் தான் நன்றாக நினைவிருக்கிறது…”

“ஏன்டா கேட்டோம்…?” என்று தோன்ற , விஸ்வா அமைதியானான் .

ஏனோதானோவென்று வரவேற்பிற்கு வந்திருந்த சந்தியா, இப்போது மகிழ்ச்சியுடன் பங்கேற்றாள் .  

ரஞ்சனிக்காக மணமக்கள் உட்கார்ந்து இருக்கும் படி மணமேடையை ஏற்பாடு செய்து கொண்டார்கள் . பெரியவர்கள் வந்தால் மட்டும் நின்றார்கள் . ரஞ்சனியைப் பற்றி தெரிந்தவர்கள் அவள் எழாமல் பார்த்துக் கொண்டார்கள் . 

இவர்கள் மேடையேற , சந்தியாவின் முகத்தைப் பார்த்தே பழைய விசயம் எதுவும் தெரியாது என்று ரஞ்சனி புரிந்து கொண்டாள் . மேலும் இவர்கள் வருவார்கள் என்பது தெரியுமென்பதால் இயல்பாகவே எதிர்கொண்டாள் . 

சந்தியாவிற்கு இவர்கள் உட்கார்ந்திருந்ததால் ரஞ்சனியின் கால் பற்றி தெரியவில்லை . அருகில் வந்து, “என்னை ஞாபகமிருக்கிறதா?”என்று வினவ ,

“அதெப்படி மறக்கமுடியும்…..” என்று கடையின் பெயரை சொல்லி , “சந்தியா….” என்று ரஞ்சனி சிரிக்க , 

 சந்தியா முகம் மலர்ந்தாள் . ரஞ்சனியின் மீது பிரியமும் சிநேகமும்  தோன்றியது .

 இரண்டு பேரும் மனமொத்த தம்பதிகளாக என்றென்றைக்கும்  இருக்க வேண்டும் என்று சங்கரன் வாழ்த்தினார் .

“நிச்சயமாக” என்பது போல் பார்த்துக் கொண்டார்கள் . 

விஸ்வா சின்ன புன்னகையோடு நகர்ந்தான் . 

அத்தியாயம் 63

அனைத்து நல் உள்ளங்களின் ஆசியுடன், இவர்கள் வாழ்க்கை இனிதே தொடங்கியது . தேன்நிலவுக்குக்  கோவாவை ஸர்பரைஸ் டிரிப்பாகாப் பிளான் செய்து அழைத்துச் சென்றான் .

பிரபல பீச் ரிசார்ட்டில் அறையை புக் செய்திருந்தான் . அந்த ஹோட்டலின் பிரைவேட் பீச் , அவர்கள் அறைக்கு மிக அருகில் இருக்குமாறு அறையைத் தேர்ந்தெடுத்திருந்தான்  . 

சென்னையில் இருந்து விமானம் மூலம் இரவு கோவா வந்தடைந்தனர் . அறையில் முடங்கினர் . தேனிலவைக் கொண்டாடினர் .

காலை ஐந்தரை மணிக்கு ரஞ்சனியை எழுப்ப , “கொஞ்ச நேரம் ரகு …”என்று கொஞ்ச , 

அந்த அழகில் மயங்கி , நெற்றியில் முத்தமிட்டான்.

அவள் தன் இருகைகளையும் காட்டி,”வா…” என்பது போல் அழைக்க ,

அவள் கைக்குள் அடங்கப் போனவன் , சுதாரித்து , 

“நோ..நோ… , என்னையும் கெடுத்து விடுவாய் போல , எந்திரிடா , உனக்கு ஒரு ஸர்பரைஸ்….” என்று வலை விரித்தான் .

“ரகு…” என்று சிணுங்க ,

“நோவே…” என்று அவளுடைய ஸிடிக்கை எடுத்துக் கொடுத்து , குளியலறைக்குள் தள்ளினான் . அவளும் ரெஃபிரஷ் செய்து வர ,

“வா போகலாம்…” என்று இழுத்தான் .

“இப்படியேவா ….”என்று தன் ஸிடிக்கையும் , உடையையும் காண்பிக்க , 

“டீசண்டாகத் தான் இருக்கிறாய்  , ஒன்றும் பிரச்சனையில்லை ,  வா .. நேரமாகிவிட்டது” என்று இழுத்துச் சென்றான் .

அவர்கள் அறைக்குப் பின்னால் போக , சுமாராக அரை கிமீ தூரத்தில் கடல் இருந்தது .

கண்கள் அகல அவனைப் பார்க்க , அவன் அப்படியே ஸிடிக்குடன்(கட்டை) அவளைத் தூக்கினான் . 

“ரகு .. முடியுமா? பார்த்து.. பார்த்து….” என்று ரஞ்சனி பதற ,

“இதைத் திட்டமிட்டுத் தானே, ஜிம்மெல்லாம் போய் உடம்பைத் தேற்றி வைத்துள்ளேன்..” என்று அட்டகாசமாகச் சிரித்தான் .

“ரகு யாராவது பார்க்க போகிறார்கள்…” என்று படபடக்க ,

“யாரும் பார்க்க கூடாது என்பதற்கு தானே பிரைவேட் பீச்…” என்று கண்சிமிட்டினான் . மேலும், “யார் பார்த்தாலும் எனக்குக் கவலையில்லை , என் பொண்டாட்டியைத் தானே தூக்கினேன்…” என்று கள்ளச் சிரிப்பைச் சிந்தினான் .

கடல் அருகே வந்துவிட , அங்கே ஏற்கனவே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன . அதில் அவளை உட்கார வைக்க , அலைகள் வந்து அவள் கால் நனைக்க , சிலிர்த்தாள் . 

ஒரு பிளாஸ்கில்  காபி இருக்க , அதை  கப்பில் ஊற்றிக் கொடுக்க , சூரியன் எட்டி பார்க்க , அவள் கண்களை அகல விரித்தபடி  உதயத்தை தரிசித்துக் கொண்டிருக்க , அன்றைய நாள் அழகாக விடிந்தது .

ரஞ்சனி கண்கலங்க , “நான் பீச்சுக்கு வந்து மூன்று வருடமாகிவிட்டது ரகு”

அவன் அருகே வந்து அணைத்துக் கொண்டே , “இனி உனக்குப் பீச்சு பார்க்க வேண்டுமென்றால் சொல் , நான் கூட்டிப் போகிறேன்.” என்று சொல்லி முடிக்கும் முன்,

சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட , 

“இப்போது மட்டும் யாரும் பார்க்க மாட்டார்களா?”என்று வம்பு செய்ய ,

“எனக்கு ஒன்றும் பயமில்லை .நான் என் புருஷனைத்தானே முத்தமிட்டேன்” என்று சிரிக்க , 

“ஓ.. .! ,சரி , அப்ப இந்தக் கன்னத்திற்கு …”என்று மறுபக்கத்தைக் காட்ட , 

“அதெல்லாம் எனக்கே  தோன்ற வேண்டும்….” என்று கெத்து காட்ட,

“அப்படியா மேடம் , தோன்ற  வைத்துவிடுவோம்…” என்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அலைகள் மத்தியில் அமர வைத்தான் . பின்பு அவள் பாதுகாப்பிற்காக அருகிலேயே உட்கார்ந்தான் .

ரஞ்சனி அதிர்ச்சியில் பேச்சற்றிருந்தாள் . பின் சுதாரித்துப் பேச வர , பெரிய அலை வந்து மோத , 

அவள் சற்று தடுமாற , இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

இருவரும் முழுவதுமாக நனைந்திருக்க , “ரகு…” என்று திரும்ப , அவன் பார்வை ஈர உடலெங்கும்  மேய , 

“ரகு…” என்று சிணுங்கியவள், அவன் மீது மண்ணை போட , அவன் அங்கே ஓடி கொண்டிருந்த  நண்டை கையில் எடுத்து பயமுறுத்த என்று அங்கே குதுகலத்திற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது .

 சிறிது நேரம் விளையாடி விட்டு , திரும்பவும் தூக்கிக் கொண்டு வந்து நாற்காலியில் அமர வைத்தான் . பின் அவளை தோள் அணைத்து , நெற்றியில் முட்டி, “நம் வாழ்வில்  இனி என்றென்றும் மகிழ்ச்சி  மட்டும் தான் ரஞ்சனி…” 

ரஞ்சனி மொத்தமாக நெகிழ்ந்து போனாள் . சுற்றிப் பார்வையை சுழற்றினால், பின் யாரும் இல்லாததை உறுதி செய்தவள் , அவன் இதழில் ஒரு அவசர முத்தத்தை இட்டு விலக ,

“ரஞ்சனி…” என்று அவன் கண்கள் ஆச்சரியத்துடன் விரிய , 

ரஞ்சனி வெட்கப்பட ,  அவள் முகத்திற்கும் செவ்வானத்திற்கும் அங்கே ஒரு போட்டியே நடந்தது .

அவளை ரசித்தவன் , அவள் சங்கடத்தை மாற்ற , “காபி….” என்று கேட்டான் .

“ம்ம்…” , என்றாள் . இருவரும் மீண்டும் காபி அருந்தினர் . பின் படுக்கை வசதி கொண்ட நாற்காலி என்பதால் ஒரே நாற்காலியில் இடித்துக் கொண்டு படுத்தபடி ஏகாந்தமாக காதல் கதைகள் பேசிச் சிரித்தனர்  .

பின் இருவரும் அறைக்குச் சென்று, கிளம்பி , கோவாவைச் சுற்றினர் .

 ரகு அழகாக திட்டமிட்டு அவளை அழைத்துச் சென்றான் . அவளுக்குக் கால் வலியோ சோர்வோ ஏற்படாமல் பார்த்துக் கொண்டான் . காலையில் சுற்றினர் , இரவில்  திகட்டதிகட்ட  தேனிலவைக் கொண்டாடினர் . 

ரகுவின் ஒவ்வொரு செயலிலும் அன்பும் அக்கறையும் கவனமும் இருந்தது . ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தாள் . காதல் கணவன் மீது இன்னும் இன்னும் காதாலாகிப் போனாள் .  ஒரு வார தேனிலவிற்குப் பின் சென்னை திரும்பினர் . 

 இருவரும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர் . சீக்கிரமாகவே ரஞ்சனி ரகு வீட்டில் பொருந்திப் போனாள் . அவர்களும் தங்கள் பெண் போல் பார்த்துக் கொண்டனர் . வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்தது. 

அத்தியாயம் 64

சந்தியா…..

மூன்று  மாதங்கள் ஓட ,  விஸ்வா வீட்டில் பெரும்பாலும் குழந்தையை வைத்தே பிரச்சனைகள் வெடித்தது. 

சந்தியாவின் பயத்தால் ஆகாஷை  முழுமையாக அவளே பார்த்துக் கொண்டாள் . ராஜியின் பங்களிப்பைக் குறைக்க முயன்றாள் .

 ராஜி குழந்தையைக் கேட்கும் போதோ, இல்லை தூக்க வரும் போதோ ஏதாவது காரணம் சொல்லி, தட்டிக் கழித்தாள் .

முதலில் இதைக் கவனிக்காத  ராஜி , பின்னால் இதைப் புரிந்து கொண்டார் .  அவரும் என் பேரன் என்று உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினார் . பிரச்சனைகள்  வர தொடங்கின . 

வழக்கம் போல் விஸ்வா பிரச்சனையின் காரணத்தை ஆராயாமல் மேம்போக்காக சமாதானம் செய்து வந்தான் .  “என்னடா வாழ்க்கை ?” என்று  அவனுக்கும் மனதில் ஒரு அலுப்புத் தட்டியிருந்தது .

அன்று மாலை  ராஜி , “ஆறு மணிக்கு ரெடியாகி விடு சந்தியா  ,  என்  தோழி வீட்டுக்குப் போக வேண்டும்”  

“எனக்கு ஓரே தலைவலி , நான் வரவில்லை அத்தை…” 

“ஓ….!, சரி , நீ ஓய்வு எடு , நான்  ஆகாஷை மட்டும் கூட்டிப் போகிறேன். 

“வேண்டாம் , அவன் இன்று மதியம் சரியாக தூங்க வில்லை , அங்கே வந்தால்’ நை..நை..’ என்று இருப்பான். படுத்துவான்…” என்று மறுக்க ,

“இல்லை , இன்று அவளின் பேரனின் பிறந்த நாள் நிகழ்ச்சி , தனியாகப் போனால் சரியாக வராது . நான் சமாளித்துக் கொள்கிறேன்  . நீ அவனைத் தயார்படுத்து..” என்று கட்டளை இட்டு விட்டு , ராஜி புடவை மாற்ற உள்ளே சென்றார் .

இன்று சந்தியாவிற்கு வீம்பு வந்து ஒட்டிக் கொள்ள , அவனைத் தயாராக்காமல் விட , ரெடியாகி வந்த ராஜி கடுப்பானார் . 

இதுவரை உடம்பிற்கு முடியாதவள் என்று ஒதுக்கி வைத்த கோபம், இன்று விஸ்வரூபம் எடுக்க ,

“நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் , உடம்பு முடியாதவள் என்று பொறுத்துப் போனால் நீ ஓவராக ஆடுகிறாய் . என் பேரனை நான் கூட்டிப் போவேன்..” என்று விறுவிறு  உள்ளே போனவர் , ஒரு உடையை எடுத்து வந்து அணிவிக்க , 

இங்கே சந்தியாவும் பதட்டமானாள் , “எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு எந்த உரிமையும்” என்று அவனை உள்ளே இழுத்துக் கொண்டு சென்று கதவடைத்தாள் .

ஆங்காரமடைந்த ராஜி , விஸ்வாவை வீட்டுக்கு வரும்படி போனில் அழைக்க ,

 “என்னம்மா? உடம்பிற்கு ஏதும் முடியவில்லையா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை , உடனே வா….” என்று போனை வைத்தார் .

வீட்டில் ஏதோ பூகம்பம் என்று உணர்ந்தவன் , அப்பாவை அழைத்தான் .

“சரிப்பா , நீ முன்னே போ , நான் வருகிறேன்” என்றார் சங்கரன்.

விஸ்வா வீட்டிற்குள் வர ,  “விஸ்வா…..” என்று  இன்று நடந்ததை அனைத்தையும் கொட்ட ,

விஸ்வா அதிர்ந்தான் . “நம்ம சந்தியாவா…?” என்று நம்பாமல் இருமுறை கேட்க , 

“நான் என்ன பொய்யா சொல்கிறேன் , நானே நொந்து வெந்து போயிருக்கிறேன் .  பாட்டிக்குப் பேரன் மீது உரிமையில்லையா?” என்று கண்கலங்க ,

 விஸ்வா கொஞ்ச நாளாக , சந்தியாவின் நடவடிக்கையில் இருக்கும் மாற்றத்தைக் கவனித்தே இருந்தான் . வழக்கம் போல் பிரச்சனை வராத வரைக்கும் ஓ.கே. என்று நினைத்திருந்தான் .

இன்று வெடிக்க , “சந்தியா… , சந்தியா…. வெளியே வா..”என்று கத்த ,

ஒரு வேகத்தில் பேசி விட்ட சந்தியாவும் பதட்டமாக இருந்தாள். விஸ்வாவின் குரல் கேட்டு டென்ஷனின் உச்சத்திற்கே சென்றாள் .

தந்தையின் குரல் கேட்டு , ஆகாஷ் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய , சந்தியா வெளியே வர ,

விஸ்வா விறுவிறுவென வந்து, ஆகாஷை அம்மா கையில் தூக்கிக் கொடுத்தான் . 

“பின் பெரியவர்களை மதிக்க மாட்டாயா? நானும் உன் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் , ஒன்றும் சரியில்லை . உடம்பு முடியவில்லை என்று பொறுத்துப் போனால்…..” என்று பல்லைக் கடிக்க ,

‘தனக்காக இதுவரை பேசாத கணவன் , அம்மாவிற்காகப் பாய்ந்து வருவதைக் கண்டு , பிள்ளை தான் தனக்குப் பாதுகாப்பு’ என்று ஆணித்தரமாக நம்பினாள் . 

தன் குழந்தையை விடக் கூடாது என்ற ஆவேசம் தோன்ற , வேகமாகச் சென்று ஆகாஷை ராஜியின் மடியில் இருந்து தூக்க முயல , 

ராஜி இறுக்கிப் பிடிக்க , ஆகாஷ் அழ துவங்கினான் . 

“ஏய்….! சந்தியா…” என்று விஸ்வா வேகமாக வந்து அவளை பிடித்து இழுத்து , கையை ஓங்க ,

 சந்தியா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் .

ஏற்கனவே இருந்த படபடப்பு , இப்போது நடந்த சண்டை என்று எல்லாம் சேர , சந்தியா தடாலென மயங்கி விழுந்தாள் . விழும் போது சென்டர் டேபிளின் முனை நாடியில் இடிக்க , இரத்தத்தோடு விழுந்து கிடந்தாள் .

அனைவரும் பதைபதைப்பாக , அவளை எழுப்ப முயன்றனர் . 

குழந்தை பெருங்குரலெடுத்து அழ , அந்த இடமே களோபரமாகியது . 

சுதா வேகமாக தண்ணீர் கொண்டு வந்து தர , விஸ்வா குன்றலுடன் பெற்று கொண்டான்.

நீர் தெளிக்க , அவள் கண் முழித்தாள் . 

சற்று ஆசுவாசமடைந்தவன் , “வா , மருத்துவமனைக்குப் போகலாம்”  

அவள் மறுக்க முனைய , மீண்டும் தலை சுற்ற , அந்த டீப்பாவிலேயே  சாய்ந்தாள் .

கிளம்பும் வேளையில்  முக்கியமான நபர் வந்துவிட , சற்று தாமதமாக  கிளம்பி வந்த சங்கரன் , இக் காட்சியைக் கண்டு அதிர்ந்தார் .

விஸ்வா  சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்துப் போக , சங்கரனும் கூட சென்றார் . குழந்தையோடு  ராஜி வீட்டில் இருந்தார் .

மருத்துவமனையில் பரிசோதித்து விட்டு  , ரத்த அழுத்தம் (பிபி) கூடியதால் வந்த மயக்கம் என்றனர் . காயத்திற்கும் மருந்து போட்டு உள்ளோம் . இன்று ஒரு நாள் மருத்துவமனையில் இருக்கட்டும் , பிபி குறைந்தவுடன் போகலாம் என்றார் மருத்துவர் . 

மேலும் உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது . இரத்த நாளங்கள் வெடித்தால் , பெரிய பிரச்சனையாகி விடும் . அதனால் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் . முக்கியமாக மருந்துகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர் .

விஸ்வா ஓய்ந்து போய் அமர்ந்தான் . 

தொடரும்…..