புதுப்புது அர்த்தங்கள்… நாள் – 20 

அத்தியாயம் -57

வீட்டிற்கு வந்த ரஞ்சனி வானில் பறப்பதைப் போல் உணர்ந்தாள் . வரையறுக்க முடியாத , வார்த்தையில் வடிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்தாள் . 

பின் தன்னை நிதானித்து கொண்டு அப்பாவை அழைத்தாள் .

“சொல் ரஞ்சும்மா” என்றார் ராமநாதன் .

“அப்பா…..” என்று தயக்கத்துடன் அழைக்க , ராமதாதனுக்குப் பதட்டமாக , 

“டேய் ரஞ்சும்மா , ஏதாவது பிரச்சனையா?”

ரஞ்சனி நிலவரம் புரிந்து , “ஒரு பிரச்சனையும் இல்லைப்பா , ஒரு விசயம் பேசவேண்டும் , அதான்….” என்று இழுத்தாள் .

ஏற்கனவே ராமநாதனின் படபடப்பைக் கேட்டு , கோகிலா, ராகவ் மற்றும் வான்மதியும் அருகே வந்திருக்க ,

சற்று ஆசுவாசத்துடன் , “சொல்லுடா ..” என்றார் ராமநாதன் .

“அப்பா…..” என்று மீண்டும் தயங்க , ரஞ்சனியின்  தயக்கம் வீட்டில் அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது .

“சொல்லுடாம்மா…” என்று மீண்டும் ஊக்க ,

“ரகு ஸார் என்னைத் திருமணம் செய்யக் கேட்டார்…” என்று ஒருவாறு சொல்லி முடிக்க , 

அந்தப்பக்கம் அமைதியே நிலவ , “அப்பா….. , அப்பா…..” என்று ரஞ்சனி படபடக்க ,

“ தெளிவாகச் சொல்லு ரஞ்சும்மா…”

“ரகு ஸார் என்னை விரும்புவதாகச் சொன்னார் அப்பா” 

இங்கே வீட்டில் அனைவரும் திகைத்தனர் . “அடுத்து என்ன கேட்பது , பேசுவது…?” என்று புரியாமல் தடுமாறினர் . 

சற்று சுதாரித்த ராமநாதன் , “ நீ என்னடாம்மா சொன்னாய்?”

“யோசித்துச் சொல்கிறேன் என்று இருக்கிறேன் அப்பா.”

“ஓ …..!” என்று மட்டும் சொன்னவர் , “சரிம்மா , நாங்கள் நாளை காலை புறப்பட்டு வருகிறோம் . நேரில் பேசலாம்…” 

“அப்பா…” என்று தயங்க , 

“இதையெல்லாம் நேரில் தான் பேச வேண்டும் ரஞ்சிம்மா.” 

 “சரி அப்பா , நேரில் பேசுவோம்” என்று போனை வைத்தாள் .

“ காலையில் கிளம்ப வேண்டும் கோகிலா , அதற்கான ஏற்பாடுகளைப் பார் .  டிரைவருக்குச் சொல்லுப்பா” என்று அடுத்தடுத்து கட்டளைகளை இட ,

கோகிலா இடைமறித்து , “ரஞ்சனி என்ன சொல்வாள் ?” என்று ஆர்வமுடன் கேட்க ,

“நல்லதே நடக்கும் கோகிலா .”

“எப்படிங்க? அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்…?” என்று ஐயத்துடன் கேட்க,

“அவளுக்குப் பிரியமில்லை என்றால் இந்த விசயம் நம் காதிற்கே வந்திருக்காது .”

“ஆமாம் அம்மா , அப்பா சொல்வது சரிதான்.” என்று ராகவ் அவசரமாக ஆமோதித்தான் . 

கோகிலா மகிழ்வுடன் , “ நல்ல இடம் , நல்ல பையன் எல்லாம் நல்லபடியாக  கூடி வர வேண்டும் பெருமாளே….” என்று வேகமாகக் கடவுளுக்கு ஒரு வேண்டுதலை போட ,

அதை ஆமோதித்த ராமநாதன் , “நீ என்னடா ராகவ் நினைக்கிறாய்?”

“பக்குவமான குடும்பம் அப்பா , ரகு நிச்சயமாக நன்றாக பார்த்துக் கொள்வார் . எனக்கு முழு சம்மதம் .”

ராமநாதன் நிம்மதியானார் . “ சரிப்பா , நானும் அம்மாவும் போய் பேசிவிட்டு வருகிறோம்”

“நானும் வருகிறேன் அப்பா.”

“இல்லைடா , வான்மதி கர்ப்பமாக இருக்கிறாள் , அவளை அவ்வளவு தூரம் காரில் அழைத்துச் செல்வது சரி கிடையாது , அதே போல் தனியாக விடுவதும் சரி வராது” என்று முடித்தார் .

“இல்லை அப்பா , வான்மதிக்குத் துணையாக ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம் . மாமாகிட்ட பேசுகிறேன்….” 

“இல்லைடா ராகவா , நாங்கள் முதலில் போய் பேசுகிறோம் .”

“அப்பா …..” என்று இழுக்க ,

“இல்லைடா , நாம் எல்லோரும் ஒரே நேரம் போய் பேசி , அவள் ஏதாவது யோசனையில் மறுத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடும் .”

“அதுவே நீ தாமதித்து வந்தால் , மீண்டும் பேச்சைத் தொடங்கவும் , அழுத்தம் கொடுக்கவும் வசதியாக இருக்கும் . மேலும் வான்மதிக்கு மாற்று ஏற்பாடு செய்ய நேரமும் இருக்கும்.”

அப்பாவின் எண்ணம் சரியாகப் பட , “அப்படியே செய்வோம்” 

‘எல்லோரும் நாளை பொழுது நல்லபடியாக இருக்க வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் படுக்கச் சென்றனர் .

இங்கே ரஞ்சனியும் இன்றைய நிகழ்வுகளால் தூக்கம் வராது தவித்தாள் . ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓடியது .

 ரகு அருகில் இருக்கும் வரை எல்லாம் சரியாக தோன்றியது. இப்போது கலக்கத்தைக் கொடுத்தது . 

நாளை பெற்றோர் வந்தபின் என்ன நடக்கும்? என்ற யோசனையும் வரவும் , அப்படியே காற்றாடியை பார்த்தபடியே படுத்திருந்தாள் . 

அப்போது அவள் கைப்பேசியில் இருந்து , புதிய மெஸேஜ் வந்ததற்கான ஒலி வர , அதை எடுத்துப் பார்த்தாள் .

“நல்லதே நடக்கும் கண்ணம்மா , நிம்மதியாக தூங்கு” என்று ரகு அனுப்பியிருக்க ,

இனம்புரியாத நிம்மதியை உணர்ந்தாள் . “நல்லதே நடக்கும்” என்ற வாக்கியத்தை ஜபித்து கொண்டே உறங்கிப் போனாள் .

அத்தியாயம் 58

சந்தியா…..

சந்தியா  சென்னை வந்து சேர்ந்தாள் . “என்னதான் குழந்தைக்காக…” என்று மனதைத் தேற்றி வந்திருந்தாலும் உள்ளுக்குள் ஒருவித பயத்தோடே இருந்தாள் . 

அதே போல்  ஓரளவு உடம்பு தேறியிருந்தாலும் முழுவதுமாக பலம் பெறவில்லை . ஹீமோகுளோபின் அளவை ஏற்றுவதற்காக  உடனடி தீர்வாக இரத்தம் ஏற்றியிருந்தாலும் மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ,  இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் சாப்பாட்டு முறையில் சில மாற்றங்களை பரிந்துரைத்திருந்தனர் . அதை பின்பற்றிக் கொண்டிருந்தாள் . 

மேலும் ராஜியும், சந்தியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் அடக்கியே வாசித்தார் .நாட்கள்  ஓடியது.

 அப்பாவின் அறிவுரைபடி , காலையில் சந்தியாவுடன்  சாப்பிட்டான் . “சேர்ந்து உணவு அருந்த முடியாத வேளைகளில் , போனில் அழைத்து உண்டாயா?” என்று கேட்டான் .

என்னதான் அக்கறையுடன் விஸ்வா கவனித்துக் கொண்டாலும் சந்தியாவிற்கு  ஏனோ அவன் மீது நம்பிக்கை வரவில்லை . அதனால் சந்தியா பெரிதாக எதையும் பகிர்ந்து கொள்ள வில்லை, பெரும்பாலும் அமைதியாகவே இருந்தாள் .

விஸ்வா பேச்சைத் துவக்கினால் மட்டுமே பதில் பேசுவாள் . அவை பெரும்பாலும் ஆகாஷ் பற்றியவையாகவே இருக்கும் . 

இருவருக்கிடையே பெரிய இடைவெளி வந்து விட்டது  என்பதே விஸ்வா உணர்ந்தேயிருந்தான் .  சந்தியா உடல்நிலையை கருதி , இதைக் குறித்து பேசாமல் தள்ளி போட்டான் . 

பெரிய பிரச்சனைகளின்றி வாழ்க்கை சக்கரம் அமைதியாகவே ஓடிக் கொண்டிருந்தது .

என்ன தான் மருந்து மாத்திரைகள் கொடுத்தாலும் , நோயில் இருந்து சீக்கிரமாக  மீள்வதற்கு மனவலிமை மிகவும் அவசியம் . அதே போல் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணமும் , அதற்கான முனைப்பும் வேண்டும் . 

சந்தியா மனச்சோர்வோடு அதற்கான முனைப்பு இல்லாமல் இருந்தாள் . 

ஹீமோகுளோபின் குறைபாட்டால் சீக்கிரமே உடலாலும் சோர்வடைந்தாள் .  குழந்தையை முழுமையாகப்  பார்க்க முடியாமல் திணறினாள் . 

சந்தியாவால் குழந்தையை முழுமையாக கவனிக்க முடியவில்லை என்பதைக் கண்டு , சங்கரனிடம் ராஜி  புலம்ப ,  

இப்படியே விட்டால் மீண்டும் சந்தியாவிடம் போய் நிற்கும் என்பதை உணர்ந்தவர் , “அவள் சரியாகும் வரை நீ பாரேன் ராஜி . இரண்டு மாதம் சமாளித்தாய் என்றால் சரியாகி விடுவாள்….” 

“வேற வழி , என் பேரன் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?” என்று அங்கலாய்த்தபடியே பொறுப்பை எடுத்துக் கொண்டார் . 

 அந்த வயதிற்கேற்ற துறுதறுப்புடன் ஆகாஷ்  இருந்தான். இப்போதெல்லாம்  வெளியே போக மிகவும் பிரியப்பட்டான் . 

அப்பா , தாத்தா கிளம்பும் போது பிடிவாதம்  பிடிக்கத் தொடங்கியிருந்தான் , அவர்களும் அவனை வண்டியில் ஒரு சுற்று சுற்றி விட்டு ,  இறக்கிவிட்டு சென்றார்கள் .  

மாலை வேளையிலும் அடம்பிடித்தான் . ஆனால் குழந்தையை தனியாக வெளியே கூட்டிப் போக சந்தியா பயந்தாள் . குழந்தையோடு தனித்து இருக்கும் போது மயக்கம் ஏதும் வந்து விட்டால்  என்று யோசித்து வெளியே போவதைத்  தவிர்த்தாள் .

இதைக் கவனித்த  ராஜி , தினமும் வெளியே கூட்டிப் போக ஆரம்பித்தார் . பூங்கா , கோவில் என ஆகாஷோடு சுற்றினார் . 

குழந்தையோடு   இருப்பது மிகவும் சந்தோஷத்தை தர , அவனுடன் ஐக்கியமானார் . 

இரு மாதங்கள் போக , சந்தியாவின் உடல்நிலை சீராக ஆரம்பித்தது . ஆகாஷை முழுமையாகப் பார்த்துக் கொள்ள நினைத்தாள் . 

ஆனால் இடைப்பட்ட காலத்தில் , பாட்டியுடன் குழந்தை மிகவும் நெருக்கமாகி விட்டான் . எது வேண்டுமென்றாலும் ராஜியிடம் போய் நின்றான் .

ஞாயிறு மாலை விஸ்வா , சந்தியாவையும் குழந்தையையும் வெளியே கூட்டிப் போக திட்டமிட்டான் .

 கிளம்பும் வேலையில் விஸ்வாவிற்கு முக்கியமான அழைப்பு வர , வாசலில் ஷூவை அணிந்தபடி பேசிக் கொண்டிருந்தான் . 

இவன் ஷூ  அணிவதைப் பார்த்த ஆகாஷ் , அவனுடயதை எடுத்து வந்து கொடுக்க , “அம்மாவிடம் போய் போட்டுக் கொண்டு வா”

ஹாலில் ஒரு ஓரத்தில் இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு குழந்தைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டோமா.. ? என்று சரிபார்த்து பார்த்து கொண்டிருந்த  சந்தியா  , “ரொம்ப நேரமாகியும் ஆகாஷ் வரவில்லை…?” என்று  திரும்பிப் பார்க்க ,

ராஜியிடம் ஷூவைப்  போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்கவும் , ஏமாற்றம் அடைந்தாள் . கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள் . குழந்தை தன்னைத் தாண்டி , அவரிடம் சென்றதை சந்தியாவால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை . 

“சந்தியா நேரமாகிவிட்டது , கிளம்பலாமா?” என்று விஸ்வா கேட்க ,  அவனுடன் கிளம்பினாள் . 

சந்தியாவிற்குக் கிளம்பும் போது இருந்த உற்சாகம் குறைந்தது . ஏதேதோ சிந்தனைகள் ஓட ,  சந்தியா ஒருவித அலைப்புறுதலுடன் இருந்தாள்.

சந்தியாவை கவனித்த விஸ்வா , என்னவென்று விசாரிக்க? ,

 “ஒன்றும் இல்லை , கொஞ்சம் அசதியாக இருக்கிறது” என்று சமாளித்தாள்.

“ஓ….  ! , குழந்தை ஏமாந்து விடுவான்.

“ம்ம்….” என்று நிறுத்தி கொண்டாள் .

அடுத்து வந்த நாட்களில் ,  ராஜியையும் ஆகாஷையும் ஆழ்ந்து கவனிக்க , இருவருக்குள்ளும் இருந்த நெருக்கத்தை உணர்ந்தாள் . ஆகாஷ் தன் தேவைகளுக்குப் பாட்டியையே அதிகம் சார்ந்து இருப்பதைக் கவனித்தாள் . 

மனதில் பயப்பந்து உருண்டது . சிந்தனைகள் தறிகெட்டு ஓடியது. 

தன் குழந்தை தான்  வாழ்வின் ஆதாரம் என்று இருக்க , அதுவும் தன்னை விட்டு நழுவிப் போய்விடுமோ என்ற பயம் பிடித்தது . எங்கே தன்னையும் குழந்தையையும் பிரித்து விடுவார்களோ என்று தப்பும் தவறுமான எண்ணங்கள் ஆட்டிவிக்க தொடங்கியது .

” இன்னொரு விஸ்வா உருவாகிவிடுவானோ…” என்று பயம் வந்தது .

பாட்டி தாத்தாக்கள் ,பேரன் பேத்தியோடு நெருக்கமாக , ஆசையாக இருப்பது இயல்பே . 

ஆனால் விஸ்வாவின் மீது ராஜியின் அதிக்கத்தை கண்டவளால் , இதைச் சாதாரணமாக நினைக்க முடியவில்லை . மேலும் குழந்தைதான் தன் பிடிப்பு என்று நினைத்திருக்க , அந்த எண்ணத்தில் இடி விழுந்ததை போல்  உணர்ந்தாள் .

உரிமைப் போராட்டம் தொடங்கியது .

தொடரும்….

அத்தியாயம் 59

சந்தியா…..

சந்தியா எப்போதும் ஒருவித பயத்திலும் பதட்டத்திலும் இருக்கத் தொடங்கினாள் . அதுவே குழந்தையை தன்னுடன் பிடித்து வைக்க தூண்ட , 

 குழந்தையுடன் அதிக நேரம் செலவளிக்க முயன்றாள் .முதல் கட்டமாக தன் அறையிலே வைத்துக் கொள்ள முயன்றாள் . 

இத்தனை நாளாக  எல்லோருடனும்  சுற்றி வந்த ஆகாஷால் ஒரே அறையில் விளையாட முடியாவில்லை , திணறினான் ., சிறிது நேரத்திலே வெளியே போக வேண்டும் என்றான் .

 சந்தியா  அதை அனுமதிக்காமல் அறைக்குள்ளே வைக்க, அவன் அடம் கூடியது . அழுது ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கினான்.

அன்று அதே போன்ற முயற்சியில்  அவன் அழுது கரைவதைக் கண்ட ராஜி , “ விடு சந்தியா ,  உன்னால் அவன் பின்னால் சுற்ற முடியவில்லை  என்று உள்ளே அடைக்காதே , வெளியே விடு , நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் “என்று உள்ளே புகுந்து , அவனைத் தூக்கினார் . 

‘உடல்நிலையை’ காரணம் காட்டி, தான் மீண்டும் மட்டம் தட்டப்பட்டதை நினைத்து மனம் வெம்பினாள் .

அடுத்து வந்த நாட்களில் ஆகாஷ் உஷாரானான் ,  உள்ளே போனால் அம்மா வெளியே விடமாட்டார் என்பதைப் புரிந்து கொண்டு , அறைக்குள் வர மறுத்தான் . 

சந்தியா அதிக பதட்டமானாள் . “குழந்தையை தன்னிடம் இருந்து பிரிந்து விடுவானோ….” என்று பயந்தாள் .  

பதட்டம் தப்பான செய்கைகளை விளைவிக்க ,  ஆகாஷை பிடித்து வைக்க , அடக்குமுறையை கையாள , அவன் வீம்பு பிடிக்க , 

அது  ஆகாஷை அடிப்பதில் போய் முடிந்தது .

ஆகாஷ் அடிவாங்குவதைப்  பார்த்த ராஜி , கொந்தளித்தார்  . 

“உனக்கு உடம்பு இடம் கொடுக்க வில்லையென்றாலோ உன்னால் பொறுமையாகப்  பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் விடு , நானும் சுதாவும் பார்த்துக் கொள்கிறோம்…” என்று கத்தியபடி தூக்க  , 

“என் குழந்தையை நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று ஆகாஷை வாங்கி சென்றாள் .

அப்போது விஸ்வா வர ,  ராஜி பொங்கினார் .

‘அய்யோ , என்னடா சோதனை ? இப்போது தான் வண்டி பிரச்சனையின்றி  ஓடிக் கொண்டிருந்தது’ என்ற எண்ணம் மனதில்  ஓட , சற்று குழப்பமான மனநிலையில் ஆழ்ந்து கேட்காமல் அப்படியே நின்றான் .

“விஸ்வா….” என்று ராஜி ஓங்கிக் குரல் கொடுக்க , “என்ன அம்மா?“

“னொன்னம்மா…. , நானே பிள்ளையை அடித்துவிட்டாள்…” என்று படபடத்துக் கொண்டிருக்கிறேன், “நீ என்னவென்றால் நான் சொல்வதில் கூட கவனமில்லாமல் இருக்கிறாய்…”என்று பொங்க,

‘சந்தியா அடித்து விட்டாளா?..’ என்று  திகைத்தான் . இத்தனை நாள் காப்பாற்றிய பொறுமை காற்றில் பறக்க ,” சந்தியா  , சந்தியா….. “என்று கத்தியபடி அறைக்குள் சென்றான் .

ஏற்கனவே ராஜியின் செயலால்,  சந்தியா படபடப்பானாள் . 

“புருஷன் வந்து  என்ன சொல்வானோ….? என்ற பதைபதைப்பில் இருந்தாள் , 

அறைக்குள் வந்த விஸ்வாவும் , “என்ன சந்தியா இப்படிச் செய்து இருக்கிறாய்?  சின்ன குழந்தையை போய் அடித்திருக்கிறாய் ? ச்ச… படக்கூடாத இடத்தில் பட்டால் என்னவாகும்…” என்று கத்த,

சந்தியா  கண்கலங்கினாள்.

உடனடியாக குரலை தழைத்தவன் , அவளைக் குற்றம் சொல்லும் தோணியில் இருந்து மாறி , “தன்மையாக ஆகாஷே தப்பு செய்தாலும் சொல்லிப்  புரிய வை , அடி பலமாகப் பட்டு விட்டால் அப்புறம் அம்மா என்றாலும் வராது அப்பா என்றாலும் வராது சந்தியா.”

சந்தியாவிற்கும் தன் தவறு புரிய , “ஏதோ வேகத்தில் செய்து விட்டேன்” என்று வருத்தப்பட்டாள்.

விஸ்வா மனதிற்குள்  , அப்பாடா… , நல்லபடியாக பிரச்சனையை கையாண்டு விட்டேன் என்று மகிழ்ந்தான் .. ஆனால் வழக்கம் போல் பிரச்சனையின் ஆணிவேரை அலசாமல் விட்டான் .

மறுநாள் காலை உணவு மேஜையில் ,  மீண்டும் ராஜி இதே பஞ்சாயத்தை இழுத்தார் , 

“இதுவரை எங்கள் இரண்டு பேரின் விரல் கூட விஸ்வா மீது பட்டது கிடையாது , நீ என்னவென்றால் …. , ச்ச….  கைத்தடமே பதிந்துவிட்டது” என்றார் ஆற்றாமையோடு .

 விஸ்வா வழக்கம் போல் அம்மாவிடம் பேசாமல் , அப்பாவைப் பாவமாக பார்க்க , சங்கரன் நிலைமையைச் சமாளிக்க , “ராஜி இந்த விஷயத்தை விடும்மா…”

 அப்படியே சந்தியாவிடம் திரும்பி , “இனிமேல் எதுவென்றாலும் குழந்தைக்குப் பொறுமையாகச் சொல்லி புரிய வை…” என்று முடிக்க முயன்றார்.

ராஜி இடைபுக , “ராஜி…” என்று சங்கரன் தடுக்க .,

“இருங்க , போன வாரமும் இதே கூத்து தான் நடந்தது . நான் ஏதும் சொன்னேன்னா ? ஏதோ உடம்பு முடியவில்லை என்று விட்டேன் தானே . அதே தொடர்ந்தால் என் பேச்சிற்கு என்ன மரியாதை?”

*சாப்பாட்டு முறைகளை யூ டுயூபில் தேடினாயே , அதேமாதிரி கொஞ்சம் குழந்தை வளர்ப்பையும் படி..” என்று நறுக்கென்று சொல்ல , 

“ராஜி , விடு..,” என்று சங்கரன் தடுக்க ,

“நான் என்ன தப்பாக சொல்லி விட்டேன் , உண்மையை தானே சொன்னேன் . சாப்பாடு விசயத்தில் அத்தனை பேச்சு பேசினாள்…” என்று நொடிக்க , 

சந்தியாவிற்கு பதில் பேச வரவில்லை , அழுகை முட்டிக் கொண்டு வர , வேகமாக உள்ளே சென்றாள்.

சங்கரன் விஸ்வாவிற்கு ஜாடை காட்ட ,

அவன் எழ முயல , “சாப்பிட்டுப் போ…” என்றார் ராஜி கண்டிப்புடன்.

விஸ்வா வேறு வழியின்றி , அம்மாவை மீறிப் போனால் , வேறு பிரச்சனைகள் வரும் என்பதை உணர்ந்து வேகமாக உண்டான் .

அறையில் சந்தியா , தான் மீண்டும் மட்டம் தட்டப்பட்டதையும் , கணவன் உதவிக்கு வரவில்லை என்பதையும் நினைத்து வேதனையுற்றாள் .

“இப்போதுதான் உடம்பு தேறி வருகிறாள் . பார்த்து நடந்து கொள் ராஜி . பின்னர் கஷ்டப்படப் போவது உன் பிள்ளை தான்” என்று எச்சரிக்கையோடு சங்கரன் நிறுத்தி கொண்டார் .

“எப்போதும் இதே சாக்கு” என்று ராஜி குமுறினார் .

பின்னர் விஸ்வாவிடமும் ,”பார்த்து நடந்து கொள்…” .

சந்தியா மெத்தையில் படுத்திருக்க , விஸ்வா அவளின் தோளை தொட , அவள் எந்த வெளிப்பாடும் அற்று அப்படியே படுத்திருந்தாள் .

விஸ்வா தயக்கத்துடன் ,  “ஆகாஷை அடித்ததால் அம்மாவிற்கு கொஞ்சம் டென்ஷன் , எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் . “

‘நேற்றே இதைப்பற்றிப் பேசியாகிவிட்டது அம்மா, ஏதோ கோபத்தில் செய்து விட்டாள் . இனி நடக்காது’ என்று சொல்லியிருந்தால் , சந்தியா சந்தோஷப்பட்டிருப்பாள் , அதே போல கணவன் மீது நம்பிக்கையும் வந்திருக்கும் . 

ஆனால் அங்கே  அமைதியாக இருந்து விட்டு , வழக்கம் போல் இங்கே வந்து சமாதானம் செய்கிறான் என்றதும் சலிப்பு தட்டியது . 

கணவன் மீண்டும் பொய்த்துப் கணவன் இரண்டாம் பட்சமாகிப் போனான் .போனான் . இனி,  மகன் தான் தனக்கு ஆதாரம் என்று உறுதியாக நம்பினாள்  . 

 தனக்கும் அவளுக்குமான இடைவெளி அதிகமாவதை உணர்ந்த போதிலும் வீட்டில் அமைதி நிலவினால் போதும் என்று விஸ்வா நினைத்தான் . அவளிடம் பேசிப் பிரச்சனையை முழுதாக உள்வாங்கி , அதைச் சரி செய்ய முயலாமல் தள்ளிப் போட்டான் .  இது ஒருநாள் பூதாகரமாக வெடிக்கும் என்பதை உணராமல் போனான்.

 

தொடரும்…..