விஸ்வநாதன் திருமணம் குறித்துப் பேச சங்கரன் அதிர்ந்தார். “என்னை நம்பித் தான் என் குடும்பம்இருக்கிறது. இப்போது எனக்குத் திருமணம் என்ற எண்ணமே இல்லை…” என்று மறுத்தார் .
அதற்கு விஸ்வநாதன் , “என் வீட்டு மாப்பிள்ளையானால் , இதையெல்லாம் எளிதாக முடித்து விடலாம்…”
“இல்லை ஸார் , அவர்கள் வாழ்க்கை என் பொறுப்பு , அதை உங்கள் உழைப்பை வைத்து நிறைவேற்றநினைப்பது மிகவும் தவறு…” என்று விடாப்படியாக மறுக்க ,
இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, விஸ்வநாதன் தீர்மானமாக சங்கரன் தான் மாப்பிள்ளை என்று முடிவு செய்தார் .
“நல்ல வருங்காலத்தை வேண்டாம் என்று சொல்லாதே சங்கரா, நன்றாக யோசி. நாளை பேசலாம்..” என்று ஆறப்போட்டு நகர்ந்தார்.
“மறுநாள் வீட்டில் பேசினாயா சங்கரா? என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று விசாரிக்க ,
“இல்லை ஸார். வேண்டாம் , சரியாக வராது…” என்று சங்கரன் மறுக்க ,
விஸ்வநாதன் சங்கரனை அருகில் அமர்த்திக் கொண்டு , “இப்போது போல் நீ கடையைப் பொறுப்பாக நடத்து , அதற்கு சம்பளமும் பெற்றுக் கொள் . அதை வைத்து உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள் . இதனால் பணத்தால் நமக்குள் எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம் .”
“பணம் மட்டுமல்ல பிரச்சனை….” என்று இழுக்க ,
“என் பெண்ணுக்கும் இதில் முழுச் சம்மதம். நம் வீட்டில் நாம் மூன்று பேர் தான் , அதனால் உன் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் வராது…” என்று நம்பிக்கை தந்தார் .
“கரைப்பார் கரைக்கக் கல்லும் கரைந்தது , சங்கரனுக்கும் ஒரளவிற்குத் தயக்கங்கள் தீர , “என் பெற்றோரிடம் பேசி விட்டு சொல்கிறேன் ஸார்..” என்று சற்றுத் தள்ளிப் போட ,
‘நான் பேசுகிறேன் சங்கரா..” என்று விஸ்வநாதன் சொல்ல ,
“இல்லை நான் முதலில் பேசுகிறேன் , அப்புறம் நீங்கள் பேசுங்கள் ஸார் . அப்புறம் நான் உங்கள் பெண்ணிடமும் பேச வேண்டும்…” என்று தயக்கத்துடன் சொல்ல ,
“சரிப்பா , முதலில் உன் பெற்றோரிடம் பேசி விட்டு , விவரத்தைச் சொல் . அதற்கடுத்து என் பெண்ணிடம் பேசலாம்.”
சங்கரனுக்கும் அவர் சொல்வது சரியென்று பட , “அப்படியே செய்யலாம் ஸார்…”
சங்கரன் இரண்டு நாள் விடுப்பு வாங்கிக் கொண்டு ஊருக்கு சென்றார் .
பெற்றோர்களிடம் இதைப்பற்றி பேச , “அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . பின், “நீ என்ன சங்கரா நினைக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்க ,
“நம் குடும்ப நிலைமையைச் சொல்லி ஸாரிடம் மறுத்துப் பார்த்து விட்டேன் . அதற்கு அவர் தீர்வையும் சொல்லி , விடாப்பிடியாக நிற்கிறார் . மேலும், உங்களிடம் பேசுகிறேன் என்று நின்றார் . அதான் நான் முதலில் உங்களிடம் பேசி விட்டு வருகிறேன் என்று வந்து விட்டேன்…” என்று எல்லா விவரங்களையும் தெரிவித்தார் .
பின், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அப்பா ? .”
ஒரு நிமிடம் தயங்கியவர் , “நாங்கள் யோசித்து , கலந்து பேசி சொல்கிறோம் சங்கரா.”
“சரி அப்பா , நான் என் நண்பர்களைப் பார்த்து விட்டு வருகிறேன்..” என்று கிளம்ப ,
“உன் முடிவு என்ன சங்கரா?” என்று அம்மா கேட்க ,
“இதென்ன கேள்வி அம்மா , உங்கள் முடிவு தான் என்னுடைய முடிவும்….” என்றார் ஆணித்தரமாக .
தங்கள் மகன் தங்கள் முடிவுக்காகக் காத்திருப்பதை நினைத்து மகிழ்ந்தார்கள். சம்பாதிக்கும் மகன், ‘இது தான் என் முடிவு’ என்று அறிவிக்காமல் , தங்களுடைய முடிவிற்காகக் காத்திருக்கிறான் என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இச்செயல் அவன் மீது நம்பிக்கையையும் விதைத்தது .
‘நிச்சயமாகத் தன் மகன் தன் வீட்டை விட்டுக் கொடுக்கமாட்டான்’ என்ற உறுதியையும் தர , தங்கள் மகனின் நல்வாழ்விற்காக ஒத்துக்கொள்ள முடிவு செய்தார்கள் .
மகன் வீடு வர , இவர்கள் சம்மதத்தைத் தெரிவிக்க ,
சங்கரன் அதிர்ந்தார் .
“அப்பா நன்றாக யோசித்துக் கொண்டீர்களா? இதனால் பல அசௌகரியங்களும் சங்கடங்களும் வரும், ஏற்ற தாழ்வுகள் வரும் . எவ்வளவு தூரம் நம் குடும்பத்தோடு இசைந்து இருப்பாள் என்று தெரியாது…” என்று அவர் வரிசையாக அடுக்க ,
கிராமத்து மனிதர்களாக இருந்தாலும் எதார்த்ததைப் புரிந்தவர்களாக , “எப்படியும் உன் வாழ்வு நகரத்தில் தான் . நாங்கள் அங்கே வரப்போவதில்லை . அப்புறம் என்னப்பா ? உன் கடமைகளில் இருந்து தவறமாட்டாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு உன் மீது இருக்கிறது சங்கரா . சந்தோஷமாக உன் வாழ்வைத் தொடங்கு…”என்று சம்மதம் தெரிவித்தனர் .
அத்தியாயம் 5
விஸ்வநாதனிடம் தகவலைத் தெரிவிக்க , அவர், “உடனே புறப்பட்டு வருகிறேன்…” என்றார்
“இல்லை சார் , உங்கள் பெண்ணிடம் பேச விட்டு முடிவு செய்யலாம்.”
அவன் தெளிவு பெற விரும்புகிறான் என்பதை உணர்ந்து , “நாளை காலை வீட்டுக்கு வாப்பா….”
மறுநாள் சங்கரன், ராஜியைப் பார்க்க வர , விஸ்வநாதன் அவனை வரவேற்று உட்கார வைத்தார் . சிறிது நேரத்தில் ராஜி வர , இருவரும் பார்த்து பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர் .
விஸ்வநாதன் எழுந்து போக முயல, “உட்காருங்கள் ஸார் , உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை”
ராஜியைப் பார்த்து , “நான் சங்கரன் . ஸார் என்னைப் பற்றி எல்லாம் சொல்லி இருப்பார் . ஆனாலும் நான் உங்களிடம் தெளிவாகப் பேசி விடவேண்டும் என்று நினைத்தேன்…” என்று ஆரம்பித்து ,
“தன் குடும்ப நிலைமை , தன் பெற்றோர் , தன் தங்கைகள் , தன் பொறுப்புகள் , அதில் தன் மனைவியின் பங்கு…” என்று அனைத்தையும் தெளிவுபடுத்தினார்.
விஸ்வநாதனும் தானும் பணம் விசயமாக முடிவு செய்ததைப் பற்றியும் , இந்தத் திருமணத்தைப் பணத்திற்காக நிச்சயமாகச் செய்யவில்லை , விஸ்வநாதன் ஸாருக்கு தரும் மரியாதையையே இந்தத் திருமணம்…” என்று விளக்கினார் .
இறுதியாக ராஜியை நேராகப் பார்த்து, “ உங்களுக்கு இதில் முழு சம்மதமா? இல்லை யோசிக்க நேரம் வேண்டுமா?”
ராஜிக்கு அப்பா மீது நம்பிக்கை இருந்தாலும், ‘பணத்திற்காகத் தானே’ என்ற நெருடல் இருந்து கொண்டே இருந்தது .
இப்போது சங்கரன் பேசிய பிறகு , “பெரிய இடம்… அடித்தது டா லக்கி பிரைஸ்” என்று நினைக்காமல் , நேர்மையாக நிறை குறைகளைப் பேசியது ராஜியை மிகவும் கவர்ந்தது. உடனே மனநிறைவுடன், “சம்மதம்…” என்றாள் .
சங்கரன் சற்றுத் தயங்கி , “யோசிக்க நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் . எதிர்காலத்தைப் பற்றி நன்றாகச் சிந்தித்து முடிவு செய்யுங்கள்…” எனத் தூண்ட ,
“தேவையில்லை. எனக்குச் சம்மதம்”
பின் தந்தையிடம் திரும்பி, “திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் அப்பா…”
“உங்களுக்கு விருப்பமா?” என்ற கேள்வியை ராஜியிடமிருந்து சங்கரன் எதிர்பார்த்திருக்க , அது வராமல் போக , சற்று யோசித்தவர் , “அதான் நாம் முதலிலே தெளிவுபடுத்தி விட்டோமே…” என்று கடந்தார் .
சங்கரனின் பெற்றோர்களிடம் விஸ்வநாதன் பேச ,
கல்யாண வேலைகள் தொடங்கி , ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் முடிந்தது .
அத்தியாயம் 6
இவர்கள் திருமண வாழ்வு இனிதே சென்றது . சங்கரன் மீது அன்பாக , பிரியமாகவே நடந்து கொண்டார் ராஜி .
திருமணமான கொஞ்ச நாட்களிலே ராஜியின் குணத்தைச் சங்கரன் நன்றாகப் புரிந்து கொண்டார் . அதன்பின் சங்கரன் கடைப் பொறுப்போடு ஒதுங்கிக் கொண்டார் . குடும்பப் பொறுப்புகளை எப்போதும் போல் ராஜி கையிலே இருக்க , அவர்களுக்குள் எந்தக் குழப்பமும் வராமல் வாழ்க்கைச் சக்கரம் சீராக ஓடியது .
சங்கரனின் பெற்றோரும் ‘பெரிய வீட்டு மருமகள்’ என்று அளவோடு இருந்து கொண்டார்கள் . தங்கைகள் அண்ணியைப் பிரமிப்போடு பார்த்தார்கள் . அதனால் தள்ளியே நின்றார்கள் .
அவர்களுடன் ராஜியால் நெருக்கமாக இணைந்து போக முடியவில்லை என்றாலும் எந்த வம்புதும்பும் இல்லாமல் உறவைச் சீராக வைத்துக் கொண்டார் . அதனால் பெரிய பிரச்சனையின்றி ஓடியது .
சங்கரனும் கொடுத்த வாக்குறுதிப்படி அவர் குடும்பத் தேவைகளை அவரே பார்த்துக் கொண்டார்.
‘தானே முதன்மையானவளாக இருக்கவே வேண்டும்’ என்ற ராஜியின் குணத்தால் நாத்தனார்களுக்கு நன்றாகவே செய்து திருமணத்தை முடித்து வைத்தார் .
அதன்பின் நாத்தனார்கள் அண்ணி சொல்லே மந்திரமென்றானார்கள் . எல்லோரும் ஊருக்கே அருகேயே திருமணம் முடித்திருக்க , பெற்றோர்களை அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.
ராஜி கல்யாணம் காட்சி என்றால் மட்டும் ஊருக்கு வருவார் . மற்றபடி சங்கரன் தான் அடிக்கடி வந்து தன் பெற்றோரையும் தங்கைகளையும் பார்த்து விட்டு , செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டு வருவார் .
இவர்கள் இல்லறவாழ்வு பெரிய பிரச்சனைகள் இல்லாமல் நன்றாகவே நடந்தது . ஆனால் பிள்ளைப் பேறு மட்டும் தள்ளிக் கொண்டே போனது .
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக விஸ்வநாதன் மாரடைப்பால் இறந்து போனார்.
அப்பாவின் மரணம் ராஜியைப் பெரிதும் பாதிக்க , ராஜி ஒடிந்து போனார் . சோர்ந்து போனார் .
சங்கரன் ராஜியைத் தாங்கினார் . நன்றாகக் கவனித்துக் கொண்டார் . ராஜியை இழப்பில் இருந்து வெளியே கொண்டு வர மிகவும் பாடுபட்டார் .
அவ்வேளையில் இறைவன் வரம் கொடுக்க , திருமணமாகி ஏழு வருடங்கள் கழித்து ராஜி உண்டாக , இழப்பில் இருந்து மீளத் தொடங்கினார் .
மகன் பிறந்தான் . விஸ்வநாதன் என்று பெயர் சூட்டினர் . கிடைப்பதற்கரிய பொக்கிஷமானான் .
விஸ்வா, ராஜியின் உலகமானான் . அவனை வளர்ப்பதில் ஐக்கியமானார் . கைக்குள்ளே வைத்துக் கொண்டார் .
அவனைப் பள்ளிக்கு அழைத்து செல்வது , கூட இருந்து படிக்க வைப்பது , பிற வகுப்புகளுக்கு அவரே கொண்டு விடுவது , கூட்டி வருவது என்று அனைத்துப் பொறுப்புகளையும் அவரே ஏற்று செய்தார் . மகனுக்கு அனைத்தையும் பெஸ்டாகக் கொடுக்க முயன்றார்.
சங்கரனும் விஸ்வாவும் நெருங்குவதைத் தடுத்தார் . ‘மகனுக்கு தானே முதன்மையாக இருக்க வேண்டும்’ என்று செயல்பட்டார் .
முதலில் சங்கரன் இதை மாற்ற முயன்றார் . ஆனால் அது வேறு பிரச்சனைகளை உண்டாக்க ,
‘வாழ்க்கைப் பயணம் சண்டை சச்சரவின்றி ஓடட்டும்’ என்று சங்கரன் ஒதுங்கி நின்றார் . ராஜியே விஸ்வா விசயத்தை முழுவதுமாக பார்த்துக் கொண்டார் .
விஸ்வாவளர வளர, ‘அவனின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் நின்றார். உண்ணும் உணவு , உடுத்தும் உடை, படிக்கும் படிப்பு’ என்று அனைத்து முடிவுகளையும் ராஜியே எடுத்தார் .
சிறு வயதில் விஸ்வா மறுத்தால் , முரண்டு பிடித்தால் , “அம்மா சொன்னால், செய்தால் சரியாகவே இருக்கும்…” என்று சொல்லிச் சொல்லி, அந்த எண்ணத்தை அவன் மனதில் ஆழப் பதித்தார் .
“அம்மா உனக்குப் பெஸ்டாகக் கொடுப்பேன் , எல்லாம் உன் நன்மைக்குத் தான்….” என்பதைத் தாரக மந்திரமாக்கினார்.
அதேபோல், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக , சிறந்த பள்ளி , சிறந்த கல்லூரி என்று தேடித் தேடித் தேர்ந்தெடுத்துக் கொடுக்க ,
விஸ்வாவிற்கு அம்மா சொல்லே மந்திரமென்றானது. அம்மா செய்தால் , சொன்னால் அப்படியே கண்மூடித்தனமாக ஒத்து கொண்டு செயல்படுத்தினான் விஸ்வா .
ராஜியும் அவன் மீது சிறு தூசி கூடப் படாது பார்த்துக் கொண்டார் . அவனுக்கு எந்தக் கடினமான சூழ்நிலையும் வராமல் அரணாக நின்றார் .
விஸ்வாவின் வாழ்க்கையும் எந்த மேடு பள்ளமில்லாமல் , அமைதியாகவே சென்றது .