அப்படியே அந்த வழியில் வந்த நல்ல ஹோட்டலில் காரை நிறுத்தினாள் . கூட்டம் குறைவாகவே இருக்க , தனிமையான இடத்தில் போய் அமர்ந்தனர் .
மெனு கார்ட் வர , இனிப்புடன் ஆரம்பிப்போம் என சுடசுட வெளியே நெய்யில் குளித்துக் கொண்டிருந்த ஜிலேபியை ஆர்டர் செய்தான் .
“பின் மழைக்குச் சூப்பராக இருக்கும்…“என்று சப்புக் கொட்டி ரசித்துச் சொன்னான் . “பின் உனக்கும் ஒன்று சொல்லட்டுமா?” என்று கேட்க ,
அவன் சொன்ன விதத்திலே ஆசை வர , “சரி…” என்றாள் .
ஜிலேபியை ருசித்தபடியே மெனுகார்டை மேய்ந்தான் . “எனக்கு இடியாப்பம் , தேங்காய் பால் . உனக்கு ..,?” என்று மெனு கார்டை அவள் புறம் திருப்பினான். அவள் தோசை சொல்ல , இருவரும் பொது விசயங்களைப் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர் .
மீண்டும் கார் பயணம் தொடர , மழை விட்டிருந்தது .
ரஞ்சனி மெலிதாக இசையை ஒலிக்க விட , அந்த இரவு ஏகாந்தமாக இருந்தது .
அப்போது ரகு , “அந்த மரத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் வண்டியை ஓரம் கட்டு , கொஞ்சம் பேசனும் ரஞ்சனி…“
ரஞ்சனி குழம்பியபடி வண்டியை நிறுத்தி , ரகுவைப் பார்க்க , ரகு அவள் கண்களை நேராகப் பார்க்க , ரஞ்சனி படபடப்பானாள் .
“இதை இங்கே இப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை . ஆனால் இப்படியொரு அழகான தருணம் அமைந்த பின், இதை விட மனசில்லை ரஞ்சனி….”
ரஞ்சனி அவனையே விழி நகர்த்தாது பார்க்க , “ரஞ்சனி ஐ ஃபெல் இன் லவ் வித் யூ . ஐ லவ் யூ டீப்பலி அன்டு சின்சியர்லி” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல ,
ஒருபுறம் அவனுடைய குரல் மனதிற்குள் சென்று குறுகுறுக்க , மறுபுறம் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியாமல் , கண்களை அகல விரித்தாள் .
சிறிது நேரம் வண்டியில் அமைதியே நீடிக்க , “ரஞ்சனி …..” என்று மெலிதாக அழைத்தான் .
“இதை நான் எதிர்பார்க்கவில்லை…” என்றாள் கண்கலங்க ,
“ரஞ்சனி…” என்றான் மீண்டும் ஆழ்ந்த குரலில் .
அந்தக் குரலில் கவரப்பட்டு , ரஞ்சனி அவனை நிமிர்ந்து பார்க்க , “இதை நானே எதிர்பார்க்கவில்லை ரஞ்சனி . கிட்டதட்ட மூன்று வருடமாக ஒன்றாக பயணிக்கிறோம் . நான் இப்படியெல்லாம் சிந்தித்தது இல்லை .”
ரஞ்சனி ஆழ்ந்து கவனிக்க ,
“ நீ ராகவ் கல்யாணத்திற்கு விடுமுறை எடுத்த போது தான் , நீ அலுவலகத்தில் இல்லாத போது தான் எதையோ இழந்தது போல் உணர்ந்தேன் .”
“ நீ இல்லாத வெற்றிடத்தை , எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை . அலுவலகத்தில் உன்னுடைய இருப்பு எனக்குள் ஒரு நிம்மதியை, அமைதியை தந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன் . ஐ மிஸ்டு யு எ லாட் ரஞ்சனி .”
“நீ இல்லாதது மனதிற்குள் ஒரு அலைப்புறுதலை ஏற்படுத்தினாலும் , அதைக் காதல் என்று வரையறுக்க முடியவில்லை . ஆனால் ராகவ் கல்யாணத்தில் , உன்னைப் பார்த்த பின் , நீ எனக்கானவள் என்பது தெளிவாகப் புரிந்தது…” என்று மென்னகைப் புரிய ,
அவன் சொல்வதை நம்ப முடியாமல் , விழிகள் தெறித்து விழும் அளவிற்கு , கண்களை விரித்திருந்தாள் .
“ரஞ்சனி….” என்று கையை மெல்ல தட்ட , கண்களை தாழ்த்திக் கொண்டாள் . அவன் சொல்வதை எதையும் நம்ப முடியாத நிலையில் இருந்தாள் .
“நான் சொல்வதை உன்னால் நம்ப முடியவில்லை அல்லவா? பின், சற்று வெட்கபட்டு , நீ மூன்று வருடத்திற்கு முன் உடுத்திய உடையின் நிறம் கூட ஞாபகத்தில் இருப்பதை யோசித்துப்பார் . அப்போதே என்னில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டாய்…” என்று கண்கள் சிரிக்க தலை கோதினான் .
அவன் பேசப் பேச ஏதேதோ இனம் புரியாத உணர்வுகளால் ஆட்பட்டாள் .
“அது க்ரஷ்…” என்று ரஞ்சனி மெல்ல வாய் திறக்க ,
“ஆமாம் , க்ரஷ் தான் . நீ என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் , அது அப்படியே மறைந்திருக்க கூடும் . ஆனால் அப்படி நடக்கவில்லையே , நீ அருகில் வந்தது விட்டாயே… “ என்று மயக்கும் புன்னகையைச் சிந்தினான் .
பின், “இது கடவுள் போட்ட முடிச்சு” என்று தோன்றுகிறது ரஞ்சனி .
ரஞ்சனி ஒருவித தயக்கத்துடன் பார்க்க ,
அவளைடைய சிந்தனையை புரிந்தவன் , “நிச்சயமாக ஒருவருக்கொருவர் பக்கத்தில் இருப்பதால் மட்டுமே க்ரஷ் காதலாக மாறாது , ஏன் சில நேரங்களில் அருகில் வந்தவுடன் க்ரஷ் கூட ஓடிப் போய் விடும் . ஆனால் நீ அப்படி இல்லை , நீ அருகில் வர வர மிகவும் பிடித்தது .உன்னோடு பழகிய பின் உன் அறிவு , திறமை , தைரியம் , விடாமுயற்சி , தன்னம்பிக்கை , கண்ணியம் என்று ஒரு பெரிய லிஸ்டே போடும் அளவிற்கு , உன்னிடம் நிறைய விசயங்கள் பிடித்தது…” என்று தெளிவாக பேசினான் .
ரஞ்சனி ஏதோ சொல்ல வர ,
“இரு ரஞ்சனி , நான் முடித்துவிடுகிறேன் . இந்த லிஸ்டில் கண்டிப்பாக கருணை , பரிதாபம் , பணம் போன்றவைகளுக்கு இடமே இல்லை . உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது , உன்னை நேசிக்கிறேன் . உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று அதிரடியாக ஆணித்தரமாக ,தன் காதலை தெரிவிக்க , ரஞ்சனி பேச்சற்றுப் போனாள் .
“கல்யாணம்…..” என்று குருவி வாயை திறப்பது போல் ரஞ்சனி வாயைத் திறந்து மூட ,
அந்த அழகில் சொக்கி நின்றான் . அவனை , அவன் பார்வை போகும் இடத்தைக் கவனித்தவள் , சிவந்தாள் .
அவள் சிவப்பேறிய கன்னங்களை , ரகு ரசிக்க ,
தனக்குள் நடக்கும் தவிப்பைத் தாங்க முடியாது , ரஞ்சனி ஜன்னல் பக்கம் திரும்பி , தன்னைச் சமன்படுத்திக் கொண்டு , “திருமணம் பெரிய விசயம் . பெரியவர்கள்…. “என்று தயங்க ,
எப்போது உன்னை திருமணத்தில் பார்த்து , ‘நீ எனக்கானவள்’ என்று தோன்றியதோ , அன்றே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து என் விருப்பத்தை பெற்றவர்களிடம் தெரிவித்துவிட்டேன் .
ரஞ்சனி அசையாது அவனையே பார்த்தாள் . “பின், என்ன சொன்னார்கள்?”
“ரொம்ப நாளைக்கு அப்புறம் …” என்று ரகு ஒரு நொடி நிறுத்த ,
சத்தமாக சிரித்த ரகு , பின் , “அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் என் இரு கன்னங்களையும் தடவி , வாஞ்சையாக முத்தம் தந்தார்…,”
காருக்கு வெளியே இடி , மின்னல் , மழை நின்றுவிட்டது , ஆனால் அவை அனைத்தும் அவள் மனதிற்குள் நிகழ்ந்தது . அவர்களுடைய அன்பையும் , பெருந்தன்மையும் கண்டு ஸ்தம்பித்துப் போனாள் .
“என் காதலை உன்னிடம் தெரிவிப்பதாக எண்ணமே இல்லை , பத்திரிகை கொடுக்க வந்த போது , ராகவ் தன் திருமணம் நடைபெறுவதற்கான கண்டிஷனை தெரிவித்திருந்தான் , ஆகையால் உனக்கு எப்படியும் ஆறு மாதத்தில் வரன் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் . அப்போது நேராக உன் பெற்றோரிடம் என் விருப்பத்தை தெரிவிப்போம்…” என்று நினைத்திருந்தேன் .
“ஆனால் இந்த மழை இரவு , ஏகாந்த வேளை அருகில் என் மனதிற்கு பிடித்த பெண் என்று எல்லாம் சேர்ந்து என்னையும் மீறி வெளிபட்டுவிட்டது” என்று வெட்கப்பட்டான் .
நிகழ்வதை நம்ப முடியாமல் , அடுத்த என்ன செய்வது? என்று புரியாமல் , பேச்சற்று திகைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள் ரஞ்சனி.
“எனக்கு உன் நிலைமை நன்றாகவே புரிகிறது . நன்றாக யோசித்து , நல்ல பதிலாகச் சொல்..” என்றவன் , காரில் இருந்து இறங்கி , “இந்தப் பக்கம் வா ரஞ்சனி…”
“இல்லை நானே ஓட்டுகிறேன்….” என்று தயங்க ,
“இந்த மனநிலையில் வேண்டாம்….” என்று அன்புக் கட்டளையிட , ரஞ்சனியும் மாறி அமர்ந்தாள் .
காரை ரகு எடுக்க , ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி ரஞ்சனி வர , ரகுவும் அமைதியாகவே வந்தான் .
வீடு வர , இறங்கியவன் , “நல்ல பதிலாக எதிர்பார்க்கிறேன் ரஞ்சனி” என்று கண்சிமிட்டினான் .
பின் எதிரில் வந்த ஆட்டோவை பிடித்துக் கிளம்பினான் .
ரஞ்சனிக்கு எல்லாம் கனவு போல் இருந்தது . சரோஜம்மாவிடம் ஏதேதோ பதில் சொல்லி விட்டு , அறைக்குள் புகுந்து கொண்டாள் .
அத்தியாயம் 56
உடையை கூட மாற்றாமல் , அப்படியே கட்டிலில் விழுந்தாள் மனதில் இனம் புரியாத அலைபுறுதல்கள் , “ஐ லவ் யூ டீப்பலி” என்ற வார்தையையே காதிற்குள் மீண்டும் மீண்டும் ரிங்காரமிட,
‘அடுத்து என்ன செய்வது…?’ என்று தெரியாமல் தவித்தாள் . ஏதேதோ எண்ணங்கள் ஓட , அப்படியே கண் அயர்ந்தாள் .
காலையில் தாமதமாகவே கண் முழிக்க , மீண்டும் குழப்பம் வந்து ஒட்டி கொள்ள ,
‘அவனை எப்படிச் சந்திப்பது….?’ என்று தடுமாறினாள் .
முதலில் இதற்கான முடிவை எடுத்த பிறகு , அவனைச் சந்திப்போம் என்று முடிவு செய்தவள் , உடல்நிலை சரியில்லை என்று ஒரு நாள் விடுப்பு கேட்டு மெயில் அனுப்பினாள் .
பின் அமைதியாக நேற்றைய நிகழ்வுகளை அசை போட்டாள் . அப்படியே ரகுவைப் பற்றிய எண்ணங்கள் ஓட , அவனுடைய அன்பான குடும்பம் , ஆளுமை , முதிர்ச்சி , பக்குவம் , பெண்களை மதிக்கும் பாங்கு , தன்னிடம் பணிபுரிபவர்களை அரவணைக்கும் பாங்கு என்று அவனது குணநலன்கள் அனைத்தும் பிடித்தது .
“மொத்தத்தில் அன்பானவன் , அழகானவன் , அசராதவன்” என்று புரிந்தது . மெல்ல புன்னகைத்தாள் .
‘ஆனால் அவனுக்குத் தான் இணையாவோமா? பொருத்தமாக இருப்போமா ?’என்று யோசனை வந்தது . மேலும், ‘இதில் அவன் உறுதியாக இருக்கிறானா?’ என்ற சந்தேகமும் வந்தது .
அப்படியே யோசித்தபடியே படுத்துக் கிடக்க , பன்னிரண்டு மணிவாக்கில் அவனிடம் இருந்து , “ஆர் யூ ஓ.கே.? நீட் எனி ஹெல்ப்?”என்று குறுஞ்செய்தி வந்திருக்க ,
“ஐ ஆம் ஓ.கே. . ஜஸ்ட் டயர்ட்” என்று அடிக்க ,
“ஓ.கே. டேக் கேர்…” என்று முடித்து கொண்டான் .
இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபடுவதற்கு அவனிடம் தெளிவாகப் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள் . உங்களிடம் தனித்து பேச வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்ப ,
“மாலை ஐந்து மணிக்கு…” என்று ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தான் .
அங்கே இருவரும் சந்திக்க , “கொஞ்சம் பேச வேண்டும்… ” என்று ஆரம்பித்தாள் .
“ம்ம்…” என்று அவளையே பார்க்க ,
“நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்தீர்களா? அலுவலகத்தில் இருப்பது போல் எட்டு மணி நேரம் மட்டும் என் கூட இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தீர்களா? பல சங்கடங்களையும் , அசௌகரியங்களையும் , சில நேரம் அவமானங்களையும் , கேலி பார்வைகளையும் சந்திக்க வேண்டியது வரும் .” என்று வேகமாகப் பேசினாள்.
“இதையெல்லாம் யோசிக்காமலா ? உன்னிடம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறாய்” என்று அவனும் திருப்பிக் கேட்க ,
“இல்லை….” என்று தயங்கியவள் , “எவ்வளவு தூரம் ஆழ்ந்து யோசித்திருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை… “
“ ஓ…..! சரி , உன் சந்தேகத்தைக் கேள்.”
“என்னைப் போன்றவர்களைத் திருமணம் செய்து வாழ்வது எளிதான விசயமில்லை . அதன் பின்னான வாழ்க்கை….” என்று சற்று தயங்கி ,
“தாம்பத்தியம் , குழந்தை பிறப்பு , குழந்தை வளர்ப்பு என்று எல்லாம் யோசித்தீர்களா?”
“எல்லாம் யோசித்துத் தெளிவான பின் தான் உன்னிடம் தெரிவித்தேன்” என்றான் தீர்க்கமாக .
“ நிறைய விசயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் . நீங்கள் நினைக்கும் இடத்திற்கெல்லாம் போக முடியாது . உதாரணத்திற்கு டிரக்கிங் , நீச்சல் என்று பல விஷயங்கள்…. . ஏன் சாதாரண இடங்களுக்குச் செல்வதற்கே பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்…” என்று நிறுத்த ,
அவள் கண்களைப் பார்த்து , “நான் சாகாச விரும்பி இல்லை . அப்படியே பின்னாளில் ஆசை வந்தாலும் , அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வேன் . ஒரு மனிதன் இறப்பதற்குள் தான் நினைத்த அனைத்து இடங்களையும் பார்க்க முடியுமா? அதே போல் உன் காரணமாகச் சில இடங்களைப் பார்க்க முடியாவிட்டால் ஒன்றும் குடி மூழ்கிப் போகாது…” என்றான் தீர்க்கமாக .
“குழந்தை வளர்ப்பில் நிறைய பிரச்சனைகள் இருக்கும் . அவன் பின்னாடி ஓட முடியாது , விளையாட முடியாது…” என்று கண்கலங்க ,
“நம் பெற்றோர்கள் இருக்கிறார்கள் . மேலும் நாம் நமக்குள்ளே விசயங்களைப் பிரித்து கொள்ளலாம் . திட்டமிட்டு செயல்படலாம்….” என்று சிரித்தான்.
அவன் சிரிப்பில் மயங்கியவள் , “நீங்கள் நினைப்பது போல் இது எளிதான விசயமில்லை ….” என்று மீண்டும் வாதிட ,
“உன்னை விட எனக்கு இதில் அனுபவம் அதிகம் ரஞ்சனி . எப்படிபட்ட வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று எனக்கு நன்றாகவே தெரியும் . நீதான் ஏதேதோ கற்பனை செய்து பயப்படுகிறாய்….”
“இல்லை…..”
“உன் கவலைகள் புரிகிறது ரஞ்சனி. இருவரும் இணைந்து இதை எதிர் கொள்ளலாம் . நிச்சயமாகச் சில சறுக்கல்கள் வரும் தான் . இணைந்து கற்றுக் கொண்டு சரி செய்வோம் . அன்பும் , மரியாதையும் , நம்பிக்கையும் இருந்தால் எந்தத் தடையையும் தாண்டி விடலாம்” என்று அவள் கையை பிடிக்க ,
அவன் கைகளில் அவள் கண்ணீர் துளி விழுந்தது . ரஞ்சனி கையை உருவி , கண்ணீரைத் துடைத்தாள்.
மீண்டும் ரஞ்சனி பேச்சைத் தொடர , “ஆன்ட்டியின் குறைபாடும் என்னுடையதும் வேறு வேறானவை…”
“ஒரு நிமிடம்….” என்று ரஞ்சனியை தடுத்தவன் .
குறைபாடு பற்றிய பேச்சை விடு , நான் நன்றாக ஆலோசித்து , நன்மை தீமைகளை உணர்ந்து தான் , என் முடிவில் உறுதியான பின் தான், உன்னிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன் .ஆகையால் பெரிய குறை, சின்ன குறை என்பது எனக்கு பெரிய விசயமில்லை…”
“இந்த சின்ன விசயத்திற்காக உன்னை இழக்கக் கூடாது என்று நினைக்கிறேன் . நீ என் வாழ்வில் வந்தால் , என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நூறு சதவீதம் நம்புகிறேன் .”என்று கண்ணில் காதல் வழிய சொன்னான்.
ரஞ்சனி பேச முனைய , “ இரு..” என்பது போல் சைகை செய்தவன் ,
“ என்னை, என் குணத்தை , என் பழக்கவழக்கங்களை , என் குடும்பத்தைப் பிடிக்கவில்லை என்றால் பளிச் சென்று சொல்லி விடு , இப்படியொரு நிகழ்வு நடந்ததையே நீ மறந்து விடலாம் . நிச்சயமாக உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் , வற்புறுத்த மாட்டேன் . ஆனால் உப்பு சப்பில்லாத குறை , பயங்கள் போன்ற காரணங்களுக்காக உன்னை விட முடியாது . “
“ஐ லவ் யூ…, அண்ட் ஐ நீட் யூ ..” என்று அவள் கண்களை ஊடுருவினான் .
விஸ்வாவின் மறுப்பால் துவண்டு போயிருந்த மனதிற்குப் பூக்களைக் கொட்டியது போல் இருந்தது. மீண்டும் கண்கலங்க , அதைச் சிரித்தபடி உள்ளுக்குள் இழுத்தாள் .
அவள் முகமாற்றங்களை அமைதியாக கவனித்தான் .
அவனுடைய ஒவ்வொரு செயல்களும் ரஞ்சனிக்கு அவ்வளவு பிடித்தது . திணற அடித்தது .
ஆனால் அதையும் மீறி அவளுடைய பயம் அவளைத் தடுத்தது . ஏமாற்றத்தால் அடி வாங்கியிருந்த மனது , நிகழ்வுகளை நம்ப மறுத்தது .
“எங்கே அனைத்தும் கனவு போல் மறைந்துவிடுமோ? மாறிவிடுமோ?”என்று பதைதைத்தது. நிதானிக்க தூண்டியது .
ரஞ்சனி லேசாக தொண்டையை செருமி , “எனக்கு யோசிக்க வேண்டும் . என் முடிவைச் சொல்ல கொஞ்சம் அவகாசம் வேண்டும் .”
“நிச்சயமாக ரஞ்சனி , ஆனால் நான் அத்தனை பொறுமைசாலி கிடையாது. காதல் என் தாக்கியவுடன் வீட்டில் பேசி அப்படியே உன்னிடம் பேசிவிட்டேன் . அதனால் ……” என்று இழுத்து குறும்பாக சிரித்தான் .
ரஞ்சனி கிளம்ப முனைய , “சின்ன விண்ணப்பம் .. .”என்று ரகு ஆரம்பிக்க , அவள் என்னவென்று பார்க்க ,
“என் மீது உனக்கு வெறுப்பு இல்லையென்றால் பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணமாகவும் இதை யோசிக்கலாம்” என்று கண்ணில் காதலோடு சொன்னான் .
ஏற்கனவே நெகிழ்ந்து இருந்தவளை , அவன் கண்ணில் இருந்த காதல் , அவளைப் போட்டு தாக்க , அவளையும் மீறி , அவள் பயங்களைக் கடந்து ,
அவன் கைகளை பிடித்து , “உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ரகு , ஆனால் பயமாக இருக்கிறது…” என்று கண்கலங்கினாள் .
உலகத்தை வென்ற உணர்வோடு நிம்மதி பெருமூச்சு விட்டவன்,
“என்னைக் காக்க வைக்காமல் பதில் சொன்னதற்கு நன்றி ரஞ்சனி” என்று அவள் கைகளை இறுக்கினான் .
பின் மெதுவாக ,”எனக்கு உன் பயங்கள் புரிகிறது ரஞ்சனி . இப்பயங்களைப் பேச்சினால் கடக்க முடியாது . வா வாழ்ந்து பார்க்கலாம்…” என்றான் நம்பிக்கையாக .
ரஞ்சனிக்கு அவன் பேச்சு ஆறுதலையும் நம்பிக்கையும் தந்தது . ‘சரி’ என்று தலையை ஆட்டினாள் . பின் மெதுவாக வீட்டில் பேச வேண்டும் என்று சொல்ல ,
“நான் பேசட்டுமா…?”
“வேண்டாம், நான் முதலில் பேசுகிறேன் . பின்னர் தேவையென்றால் நீங்கள் பேசுங்கள் .”
“ம்ம்…” என்றான் .
“சரி, நான் கிளம்புகிறேன்…” என்று ரஞ்சனி எழுந்து கொள்ள முயல
அவன் கைகளை விடாமல் , “ம்ம்…” என்றான் .
“ரகு …”என்று ரஞ்சனி மெதுவாக அழைக்க ,
கைகளை இறுக்கியவன் , “இன்னும் கொஞ்ச நேரம் ரஞ்சனி…” என்று சிணுங்க ,
ரஞ்சனி வெட்கத்துடன் , “ எல்லாம் ரொம்ப வேகமாக இருக்கிறது ரகு…” என்று தயங்க ,
“நானே பல்பு லேட்டாக எறிந்துவிட்டதே….” என்று வருத்தப்படுகிறேன் என்று முகத்தைப் பாவமாக வைக்க ,
ரஞ்சனியும் வெடித்துச் சிரித்தாள் .
அவள் சிரிப்பை மனநிறைவோடு பார்த்தவன் , “இப்போது கிளம்பலாம் ரஞ்சனி.”
அவளும் ஆமோதிக்க , இருவரும் மகிழ்வான வாழ்க்கையை எதிர் நோக்கி கிளம்பினர் .