புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 15

அத்தியாயம் 43

ரகு வந்த பின் , நிறைய புது வாடிக்கையாளர்கள் வர , அலுவலகத்தைப் பெரிதாக்க நினைத்தார்கள் . பக்கத்தில் இருந்து காலி இடத்தில் கட்டிடம் கட்ட  தொடங்கினர் .  எல்லா வசதிகளுடன் உடைய கட்டிடமாக , விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது .

இந்த புது கட்டிடத்தில் மாற்று திறனாளிகளுக்கும் ஏற்றார் போல் சக்கர நாற்காலியில் செல்ல ஏதுவாக  சறுக்கு பாதை ,  மாற்று திறனாளி கழிப்பறை , பெண்களுக்கு ஓய்வறை என்று எல்லா வசதிகளுடன் கட்டிடம் ரெடியாகியது .

கட்டிடத் திறப்பு விழாவிற்கு ரெடியாக , ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தைச்  சுற்றிப் பார்த்து விட்டு , இந்த வசதிகளை கண்டு ஆச்சரியப்பட்டனர் . 

எப்போதும் போல் ஹரிணி துடுக்குத்தனமாக, “ரகு ஸார் , உனக்காக தான் அனைத்தையும் செய்திருக்கிறார்..” என்று பேச , 

ரஞ்சனி சங்கடத்துடன் , “என்ன பேசுவது….?” என்று புரியாமல்  நிற்க,

பின்னால் வந்த ரகு , “ஆமாம் ரஞ்சனிக்காகத் தான்…”

ரஞ்சனி  ரகுவைப் பார்க்க , “ஆமாம் , எனக்கு ரஞ்சனியைப் பார்த்துத் தான் இந்த அறிவு வந்தது . மாற்றுத் திறனாளிகளைப் பற்றி யோசிக்காமல் நாம் எவ்வளவு பெரிய தப்பு செய்துள்ளோம் என்று புரிந்தது . அதனால் தான் இந்த ஏற்பாடு .மேலும், புது ஊழியர்களைத்  தேர்ந்தெடுக்கும் எண்ணத்தில் உள்ளோம் , அதனால் அவர்களையும் மனதில் வைத்து தான் இந்த முடிவு..” என்றான் நிதானமாக .

ரஞ்சனி  வேகமாக ரகு அருகில் வந்து , அவன் கையை பிடித்து குலுக்கி , “நன்றி ஸார் , மிக்க நன்றி . இந்த வேலைக்கு வரும் முன் மிகவும் பயந்தேன் , யோசித்தேன் . ஆனால் இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது ஸார் . உங்களைப் போல தீர்க்கமாக யோசிக்கும் தலைமை எல்லோருக்கும் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்….” என்று மனதார நன்றி சொன்னாள் .

இந்த காட்சியைக் கண்ட அனைவருக்கும் மாற்று திறனாளியின் கஷ்டம் புரிய , ரகுவின் முன்னெடுப்பைப் பாராட்டும் விதமாக , அனைவரும் கை தட்டினர் .

“சரி சரி , இதை பெரிய விசயமாக்காதீர்கள்…” என்று நகர்ந்தான் .

 அனைவரும் பேசியபடி கலைய , அப்போது ரஞ்சனி ஹரிணியிடம் , “நானாவது சற்று வசதியான குடும்பம் , என் தேவைகளைச் செய்ய , என் குடும்பம் இருக்கிறது . ஆனால் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களை நினைத்துப் பார்….”

எல்லா தனியார் அலுவலகங்களும் , அரசும் இப்படிப்பட்ட முன்னெடுப்பை  எடுக்க வேண்டும் . அது மாற்றுதிறனாளிகளுக்குப் பெரிய உதவியாக இருக்கும்….”

“ஆமாம்….” என ஹரிணியும்  ஒத்துக் கொண்டாள் . 

அலுவலக திறப்பு விழாவிற்கு அனைத்து வாடிக்கையாளர்களையும் அழைத்தனர் . திறப்பு விழாவைப் பெரிதாக நடத்தத் திட்டமிட்டனர் .

திறப்பு விழா கோலோகலமாகத் தொடங்கியது . சுவாமிநாதன் மகள் சௌமியாவும்  தன் குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாள் . 

திறப்பு விழாவை ஒட்டி விடுமுறையை பிளான் செய்து கொண்டார்கள் . அவள்  ஐந்து வயது மகன் ஆத்விக் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான் .

சுந்தரியும் , சௌமியாவும் விளக்கேற்ற , விழா தொடங்கியது . 

ரகுவும் , சுவாமிநாதனும் சுற்றி சுற்றி வந்து அனைவரையும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்கள் . ஊழியர்கள் வாடிக்கையாளர்களை நன்றாக கவனித்து கொண்டார்கள் .

அன்று ஊழியர்கள் அனைவரும் பராம்பரிய உடையில் வர வேண்டும் என்று தீர்மானித்து , பெண்கள் அனைவரும் பட்டு சேலையில் , ஆண்கள் வேஷ்டி சட்டையில் வந்திருந்தனர் .

ரஞ்சனி பச்சை நிற பட்டில் , அதற்கேற்ற முத்து செட் அணிந்து ,  மெல்லிய மேக்கப்புடன் மிகவும் அழகாக வரவேற்பில் அமர்ந்து , அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தாள் .

 ஒவ்வொரு முறையும்,அவள் வரவேற்கும் விதமாக தலையாட்டும் பொழுது, அவள் சிமிக்கி ஆடுவது , அழகான காட்சியாக இருந்தது .

ரகு வாசலைப் பார்ப்பது போல் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் . இது தவறு என்று மனம் இடித்தாலும் , அவனால் தவிர்க்க முடியாமல் தவித்தான் . வலுக்கட்டாயமாக வேறு வேலையில் மனதைச் செலுத்தினாலும் பார்வை என்னமோ அவளை அடிக்கடி தழுவியது .

ராமலிங்கம் , சங்கரன் என்று  வாடிக்கையாளர்கள் பலர் வந்திருந்தனர் 

இருவரும் பார்த்து கொண்டால் ஏற்படும் சங்கடத்தைத் தவிர்க்க எண்ணி சங்கரன் நாசுக்காக விஸ்வாவை தவிர்த்து விட்டார் .  ரஞ்சனியிடம் சங்கரன் நலம் விசாரித்து விட்டு நகர , 

ராமலிங்கம்  ஆச்சரியமாகப் பார்த்தார் .

ரஞ்சனி விவரத்தைச் சொல்லி விட்டு , இந்த இடத்தில் வேலைக்கு சேர வலியுறுத்தியதற்கு  நன்றி தெரிவித்தாள் . ராமலிங்கமும் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என்றபடி உள்ளே சென்றார் .

விழா இனிதாக நடந்து கொண்டிருக்க , சுவாமிநாதனும் , ரகுவும் அம்மாவையும் தங்கையையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினர் . சும்மா வீட்டுப்பெண்களை அலங்காரப் பொருளாக அழைத்து வராமல் , அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து , அவர்களுக்கு அனைத்து விவரங்களையும் சொல்வதைப் பார்க்க , அவ்வளவு அழகாக இருந்தது .

 சுந்தரியும் தன்னுடைய குறைபாட்டைக் குறித்து எந்த கூச்சமும் , கவலையும் இல்லாமல் அனைவரிடமும் தன் சைகை மொழியில் பேசினார் .

பழைய ஊழியர்களுக்கு சுந்தரியைப் பற்றி தெரிந்திருக்க , ரஞ்சனிக்குத் தான் , இது அதிர்ச்சியாகவும் , ஆச்சரியமாகவும் இருந்தது 

ரஞ்சனி வரவேற்பு வேலையை முடித்துக் கொண்டு உள்ளே வர , சுந்தரி அவளை அழைத்தார் . ரஞ்சனியின் கையை  பிடித்துக் கொண்டார் . 

பின் நலம் விசாரிக்க ,ரஞ்சனி புரிந்தும் புரியாமலும் பதில் அளித்துக் கொண்டிருந்தாள் . அவள் தடுமாறுவதை கண்டு ரகு அருகில் வர, 

சுந்தரி அவனிடம் விளக்க , ரகு ரஞ்சனியிடம் , “உன்னை நினைத்தால்  பெருமையாக இருக்கிறது” என்று புகழ்கிறார்கள் .

ரஞ்சனி சங்கோஜப்பட , அவளைத் தட்டிக் கொடுத்து , “தன்னம்பிக்கையான  இளைய தலைமுறையைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது…” 

“பின் தங்கள் பள்ளிக்கு ஒரு நாள் வந்து பிள்ளைகளிடம் பேச வேண்டும் . உங்களைப் போன்ற வெற்றியாளர்களைக் கண்டால் அவர்களின் தன்னம்பிக்கை கூடும்….”  என்று கோரிக்கை வைத்தார்.

“நிச்சயமாக வருகிறேன் மேடம்…” என்றாள்  ரஞ்சனி

இவர்கள் வெகு நேரம் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, சௌமியாவும் வர , பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். சிறிது நேரம் பேசி விட்டுக் கலைந்தனர் .

அன்று இரவு வெகு நேரம் , பெற்றோர்களிடம் , ரகுவின் குடும்பத்தைப் பற்றி ரஞ்சனி பெருமையாக  பேசிக் கொண்டிருந்தாள் .

அத்தியாயம் 44

சந்தியா அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்தாள் . வீட்டில் அனைவரும் கொண்டாடித்  தீர்த்தனர் . சுபயோக சுபதினத்தில் தொட்டில் போட்டு ,  ஆகாஷ் என்று பெயர் சூட்டினர் .

 சுக பிரசவமாகிப் போக  , மூன்று மாதத்தில் சென்னை வந்தாள் .

முதல் ஆறு மாதத்திற்குத் தாய்ப்பால் மட்டுமே என்றிருக்க , பெரிய பிரச்சனை இல்லாது வண்டி ஓடியது . குழந்தையும் பெரும்பாலும் பால் குடிக்க , தூங்க என்றிருக்க , வீட்டில் அமைதி நிலவியது . சந்தியாவிற்கும் குழந்தையோடே பொழுது சரியாக இருந்தது .

விஸ்வாவின் புது கிளையும் சூடு பிடிக்க ஆரம்பித்தது . அவனுக்கு வேலை அதிகமாக இருந்தது . புதுப்புது பிரச்சினைகள் , சவால்கள் என்று அவனுக்கு நேரம் இறக்கை கட்டிப் பறந்தது . 

தவறு ஏதேனும் நடக்கும் சூழ்நிலை வந்தால் மட்டுமே இறங்கலாம் என்று தள்ளி நின்று  சங்கரன் கண்காணித்தார் . விஸ்வா நன்றாகவே சமாளித்தான் . 

ஆறு மாதத்திற்குப் பிறகு , குழந்தை வெளி உணவு எடுத்துக் கொள்ளத் தொடங்க , பிரச்சனை வெடித்தது . 

சந்தியா தற்கால அம்மாவாக , யூடுயூப்பில் பார்த்து ஏதாவது முயற்சி செய்ய , அதை ராஜி கடுமையாக எதிர்த்தார் .

“பராம்பரிய உணவுகளே கொடுக்க வேண்டும்….” என்று கொடிபிடித்தார் . 

“சரி அத்தை ,  நீங்கள் செய்து தருவதையும் , இதையும் மாற்றி மாற்றி கொடுக்கலாம்…” என்று சமரசத்திற்கு முயல,

“யாரோ எவனோ யூடுயூப்பில் பேசுவதை நம்பி , அதைக் கொடுக்க வேண்டும் என்கிறாள் . ஆனால் குழந்தையின் பாட்டி அக்கறையுடன் சொல்வதை மறுக்கிறாள்….”  என்று ராஜி மகனிடம் பஞ்சாயத்தைக் கூட்டினார் . 

“யூடுயூப் நம்பத்தகுந்தது கிடையாது . பொய்களும் , புரளிகளுமே இதில் அதிகம் .  அம்மாவின் பேச்சைக் கேள்….” என்று வழக்கம் போல் ஒரு பக்க நியாயத்தை கேட்டு,  விஸ்வா தீர்ப்பு வழங்க ,

சந்தியா விறுவிறுவென அந்த இடத்தை விட்டு நகர , சங்கரன் விஸ்வாவைக் கோபமாக பார்த்து ,

“பிரச்சனையைச் சரியாகக் கையாள் இல்லையென்றால் பெரும் விளைவுகளைச் சந்திப்பாய்  விஸ்வா….” என்று எச்சரிக்க,

“நான் என்ன தப்பாகச் சொல்லி விட்டேன் , எனக்கும் என் பிள்ளைக்கும் சிண்டு முடிகிறீர்களா? மருமகளிடம் என்னை விட்டு கொடுக்கிறீர்களா ?” என்று ராஜி கத்த ,

“ஏன் அப்பா?” என்று விஸ்வா பதற ,

“முதலில் நான் சொல்வதை பொறுமையாகக் கேள் ராஜி . ஒன்றும் இல்லாத விசயத்தைப் பெரிதாக்காதே . மருமகள் போன பின் தான் இந்தப் பேச்சையே நான் எடுத்தேன்…” என்று கடுமையான குரலில் சொல்ல ,

ராஜி அமைதியானாள் .

மேலும், “நீ தப்பு, சந்தியா சரியென்று நான் எதுவும் சொல்ல வில்லை . விஸ்வா பிரச்சனைகளைக் கையாலும் விதத்தில் எனக்குத் திருப்தி இல்லை என்று தந்தையாக அவனுக்கு எடுத்துச் சொல்கிறேன் .”

“என் மகன் சரியாக தான் பேசுகிறான்…” என்று அவனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வர ,

சங்கரனுக்கு அலுப்பு தட்டியது , வேறு ஒன்றும் பேச விருப்பமின்றி , 

“உன் அம்மாவை நான் எங்கும், எப்போதும் விட்டுக் கொடுத்தது இல்லை , யோசி….” என்று விட்டு நகர்ந்தார் .

விஸ்வா குழப்பமாக , அப்பாவை பார்த்துக் கொண்டு நிற்க ,

“ நீ தேவையில்லாமல் குழம்பாதே . அப்பா இப்படித் தான் தனிமனித சுதந்திரம் , உணர்வு, உரிமை என்றெல்லாம் பேசுவார் . அது குடும்பத்திற்கு ஒத்து வராது விஸ்வா . நீ சரியாகத் தான் பேசினாய் . யூடுயூப் முழுக்க குப்பைகள் தான்…” என்று ராஜி அடித்துப் பேச ,

விஸ்வாவிற்கு குழப்பம் இருந்த போதும், “வழக்கம் போல் சுலபமான வழியான  அம்மா சொல்வது தான் சரி..” என்ற வழியை தேர்ந்தெடுத்தான் . 

“மகன் வந்து பேசுவான்….” என்று சங்கரன் நினைத்திருக்க , அது நப்பாசையானது . 

சந்தியாவை நினைத்துச் சங்கரனால்  நீண்ட பெருமூச்சை மட்டுமே விட முடிந்தது .

அத்தியாயம் 45

சந்தியா…..

 அறைக்குள் வந்த விஸ்வா சந்தியாவை பார்க்க , அவன் வந்ததை ஏறெடுத்தும் பார்க்காமல் , குழந்தைக்கு துணி மாற்றினாள் .

“சந்தியா….” என்று அருகில் வந்து அமர்ந்து , அவள் தோளைத் தொட ,

“வேண்டாம் விடுங்கள் , கேட்டு கேட்டு சலித்து விட்டது…” என்று நகர்ந்து அமர்ந்தாள் .

“சந்தியா, யூ டுயூப் …….” என்று ஆரம்பிக்க ,

 “நான் படிக்காத தற்குறியா ? எனக்கு அறிவே கிடையாதா? யூ டூயூப்பில் எது உண்மை , எது பொய் என்று எனக்கு கண்டுபிடிக்க தெரியாதா?” என்று ஆவேசமாகக் கேட்டாள் .

விஸ்வா திகைக்க , “எப்போதும் போல அவர்கள் என்னை மட்டம் தட்டினார்கள் . நீங்கள்…, ‘ஆமாம்’ என்று ஒத்து கொண்டு வந்து விட்டீர்கள்…” என்று கோபம் அழுகையாக மாற ,

“சந்தியா….” என்று இழுக்க , 

“தயவுசெய்து பேசாதீர்கள் . இருபக்கத்தையும் கேளுங்கள் என்று எத்தனையோ முறை  சொல்லிவிட்டேன் . ஒன்றும் பிரயோஜனம் இல்லை …” என்று வெடிக்க ,

“ஸாரி சந்தியா , தப்புதான் …”என்று சரண்டரானான்.

“இப்போது சொல், நான் கேட்கிறேன்…..”

“ கேட்டு…..” என்று சந்தியா  நிறுத்த ,

“சந்தியா பிளீஸ்..” என்று கைப்பிடிக்க ,

கணவன் மீது ஒட்டிக் கொண்டிருந்த சின்ன நம்பிக்கையில் அனைத்தையும் விளக்க , 

“ஸாரி சந்தியா , நீ மறுத்து விட்டாயோ என நினைத்தேன்….” என்று இழுக்க , 

“சரி , இப்போது தெரிந்து கொண்டீர்களே , என்ன செய்யப் போகிறீர்கள்?”

“இல்லை சந்தியா , இது அம்மாவிற்குப் புரியாது , பேசினால் வீணான மனவருத்தம் தான் வரும் .  மேலும் அம்மாவும் நல்லதிற்குத் தானே சொல்கிறார்கள் . அந்த உணவும் நல்ல உணவுதானே , அதைச் சாப்பிட்டு தானே நாமெல்லாம் வளர்ந்தோம் , இந்த விஷயத்திற்காக ஏன் வீண் பிரச்சனை…?” என்று இழுக்க ,

சந்தியா விரக்தியாக பார்க்க ,

“சரி சரி , ஒன்று செய்வோம் .நீ இடையே இடையே நீ யோசித்ததைத்  தெரியாமல் ஊட்டி விடு . பின், அம்மாவிடம் , ஏதாவது ஒரு  காரணம் சொல்லிச்  சமாளிப்போம் . “

“ஏன்? இன்னும் என்னை ஏமாற்றுக்காரி , பொய்க்காரி என்று தான் உங்கள் அம்மா சொல்லவில்லை , அதையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிடுவீர்கள் போல , ரொம்ப சந்தோஷம்..  “ என்று பல்லைக் கடித்தவள், “என் பிள்ளைக்கே மறைத்து ஒளித்து கொடுக்கச் சொல்கிறீர்கள் .சபாஷ் , பிரமாதமான ஐடியா…” என்று விஸ்வா மீது ஒரு வெறுப்புப் பார்வையை வீசி விட்டு , குழந்தையை கட்டிக் கொண்டு திரும்பிப் படுத்தாள் .  

விஸ்வாவிற்கு, அப்பா சொல்ல வந்தது புரிந்தது . தப்பும் புரிந்தது. அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .

இந்த முறை சண்டை இரண்டு நாட்களுக்கு நீடித்தது . பின் ஒருவாறு கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தினான் . 

ஆனால், ராஜி விருப்பப்படி தான் பேரனுக்குச்  சாப்பாடு நடந்தது . 

சந்தியா மனதிற்குள் நொந்து போனாள் . யாரிடமும் தன் வருத்தங்களைப்  பகிர முடியாமல் மனதிற்குள்ளே  வைத்து குமைந்தாள் .

சந்தியா நன்றாக பேசுவது விஸ்வாவிடம் மட்டும் தான் . 

திருமணம் ஆன புதுதில் , அவனுடைய மென்மையான சுபாவத்தில் கவரப்பட்டு , மிகுந்த நம்பிக்கையோடு வெளிப்படையாகப் பேச துவங்கியிருந்தாள் . ஆனால் அவன் செயல்பாடுகளால் நம்பிக்கை குறைய , மீண்டும் கூட்டுக்குள் ஒடுங்க ,ஆரம்பித்திருந்தாள் ..

சங்கரன் இரண்டு மூன்று முறை சந்தியாவிடம் பேச முயன்றார் . ஆனால் சந்தியாவோ, ‘மாமனார்’ என்று தள்ளியே நிறுத்தினாள் . 

அவர் முயற்சி தோல்வியில் முடிய , வேறு வழியின்றி பார்வையாளராக மட்டுமே மாறிப் போனார் . 

இதில் சந்தியாவையும் குற்றம் சொல்ல முடியாது இயல்பாகவே அவள் அதிகம் பேசுபவள் கிடையாது . அதனால் இப்போது  பெரும்பாலும் கேள்விகளுக்குப்  பதில் சொல்ல மட்டுமே வாய் திறக்கிறாள் . 

தொடரும்……