புதுப்புது அர்த்தங்கள்… நாள் – 14

அத்தியாயம் 40

சந்தியா……

மேலும் மூன்று மாதங்கள் போக , சந்தியா  மாசமானாள் . 

ஏற்கனவே ஒரு வருடமாகிவிட்டதே என்று ராஜி கவலைப்பட்டுக் கொண்டிருக்க , விசயம் அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர் . ராஜியைக் கையில் பிடிக்க முடியவில்லை . 

அன்று மாலையே  மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் . 

அவர் பரிசோதித்து விட்டு ,  கொஞ்சம் வீக்காக இருக்கிறாள்  ,   நன்றாக சாப்பிட வேண்டும் , இப்போதைக்கு எந்த பயணமும்  வேண்டாம் என்றார் .

“அம்மா வீட்டுக்கு…..” என்று சந்தியா இழுக்க ,

 “மூன்று மாதம் கழித்துத் போகலாம் . சந்தியாவிற்கு ஊருக்கு போக முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், “குழந்தைக்காக…” என்று சமாதானப்படுத்திக் கொண்டாள் .

அவள் வீட்டில் விஷயத்தைத் தெரிவிக்க , அனைவரும் மகிழ்ந்தனர் . 

அவர்கள் வந்து அழைத்துப் போவதாகச் சொல்ல ,டாக்டர் சொன்ன விவரத்தைக் கூற , 

அவர்களும்  சென்னை வந்து சந்தியாவைப் பார்த்து விட்டு மட்டும் சென்றார்கள் .

சந்தியாவை தான் பார்த்துக் கொள்வதாக  ராஜி பொறுப்பேடுத்துக் கொண்டார். 

சந்தியாவிற்குச்  சூப் , பழச்சாறு என்று ஏதாவது மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தார் .

சந்தியா பல நேரங்களில் சாப்பிட முடியாமல் திணறினாள். ராஜியிடம் லேசாக மறுப்பைத் தெரிவிக்க , 

அவர் அதை சட்டை செய்யாமல் , அனுசரணையாகச்  சொல்லாமல் ,“அதிகாரமாக இதைச் சாப்பிட்டே ஆக வேண்டும்” என்று வற்புறுத்தினார் . 

பலமுறை அவரிடம் எதிர்த்து வாதிட முடியாமல் சாப்பிட்டு வாந்தி தான் எடுத்தாள் சந்தியா . 

“அதற்கும்  எண்ணம் போல் நடக்கிறது…” என்று சந்தியாவை வசை பாட , 

சந்தியா சோர்ந்து போனாள் . 

“பிள்ளை நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை  இருந்தால் சாப்பிட்டது தங்கும்  ,  புலம்பிக் கொண்டே சாப்பிட்டால் , எது தங்கும்…..” என்று மகனிடம் நொடித்தார் . 

“மேலும் நீ வயிற்றில் இருக்கும் போது நான் எப்படி சாப்பிட்டேன் தெரியுமா? , என் உடம்பைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை, “

“ஆனால் இப்போது இருக்கும் பெண்கள், தங்கள் அழகைத் தான் பெரிதாக நினைக்கிறார்கள்  “என்று அவராக முடிவு செய்து மகனிடம் புலம்ப  ,

அதை அப்படியே மண்டையில் ஏற்றிக்கொண்டு ,  “என்ன சந்தியா? அம்மா உனக்காகவும் நம் குழந்தைக்காகவும் தானே சொல்கிறார்கள் . கொஞ்சம் கேட்டால் என்ன? உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பார்த்து பார்த்து அத்தனையும் செய்கிறார்கள் , நீ சாப்பிட்டால் என்ன?  அழகை பற்றி யோசிக்கிறாயா ?” என்று கடிய

சந்தியா அழ ஆரம்பிக்க ,

 உடனே விஸ்வா ,  அவள் அருகில் அமர்ந்து தோளை தடவிக்கொண்டே , “உன் நல்லதுக்குத் தானே…” என்று இழுக்க , 

“என்னை இவ்வளவு தான்  புரிந்து கொண்டீர்களா? நான் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவளா? குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லையா?” என்று தேம்ப ,

விஸ்வா செய்வதறியாது முழிக்க ,” எனக்குச் சில உணவுகள் பிடிக்கிறது , சில உணவு வகைகள் பிடிக்க மாட்டேங்கிறது , அதை அத்தையிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் .”

“மேலும் மிக குறுகிய இடைவெளியில் ஏதாவது சாப்பிட கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் , நான் என்ன செய்ய..? , சொல்லுங்கள் . உங்களால் அப்படிச் சாப்பிட முடியுமா? , ஒரு பக்கத்தை மட்டும் கேட்டு விட்டு … ”என்று அழுக ,

“ஸாரி சந்தியா ,  குழந்தையை நினைத்து அம்மா பயப்பட்டார்களா…. அதான் நானும் கொஞ்சம் டென்ஷனாகி விட்டேன்….” என்று ஆறுதல் படுத்த , 

சந்தியா எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டாள் .

விஸ்வா இதைப் பற்றி ராஜியிடம் பேச முயல , “ உன் குழந்தையின் நன்மைக்காகத் தான் சொல்கிறேன்” என்று முடித்துவிட்டார் .

“உடனே விஸ்வாவும், “அம்மா நமக்காகத் தான் சொல்கிறார் . கொஞ்சம் முயற்சி செய்”  என்று வர,

வீட்டில் எந்த மாற்றமும்  ஏற்படவில்லை . 

தான் மாசமாக இருக்கும் இந்தத் தருணத்தில் கூட விஸ்வா தனக்கு அனுசரனையாக இருக்கவில்லை என்பது மிகவும் வருத்தியது . மொத்தத்தில் இந்த இருமாதங்களும் , சந்தியாவிற்குக் கொடுமையாகக் கடந்தது , 

அன்று செக்கப்பிற்கு செல்ல , மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு ,” என்னம்மா முகத்தில் மலர்ச்சியே இல்லை? எடையும் பெரிதாகக் கூடவில்லை” என்று கேட்க , 

“டாக்டர் என்னால் சாப்பிட முடியவில்லை , வீட்டில் வற்புறுத்தி உண்ண வைக்க முயலுகிறார்கள் , நானும் சாப்பிடத் தான் பார்க்கிறேன் , ஆனால் கடைசியில் வாந்தி எடுத்து விடுகிறேன். என்னால் முடியவில்லை….” என்று சந்தியா சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் முட்ட 

மேலும் சில கேள்விகளைத் தொடுத்து , சந்தியாவின் பிரச்சனையை முழுக்க  தெரிந்து கொண்டார் . 

“பின் கவலைப்படாதே சந்தியா , நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் மருத்துவர் .

“ராஜியும் , விஸ்வாவும் எப்படி இருக்கிறது குழந்தை” என்று விசாரிக்க ,

“வளர்ச்சி நன்றாக உள்ளது . பயப்பட வேண்டாம் . எடை தான் இன்னும் கொஞ்சம் கூட வேண்டும்” என்று சொல்லி முடிப்பதற்குள் …. 

“எங்கே சாப்பிடுகிறாள்….”. என்று ராஜி குறை சொல்ல தொடங்க , 

சந்தியா அவமானமாக உணர்ந்தாள் . மருத்துவர் பிரச்சனையைப் புரிந்து கொண்டார் . 

“மசக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் . சில பெண்களுக்கு முதல் மூன்று மாதம் வாந்தி இருக்கும் அப்புறம் சரியாகி விடும் , சிலருக்கு பத்து மாதமும் இருக்கும்.  ஒரு சிலர் அதிகம் சாப்பிடுவர் ,  சிலர் தூங்கிக் கொண்டே இருப்பார் , சிலருக்கு தாளிப்பு வாசம் , உலை கொதித்தல் வாசம் வந்தால் வாந்தி வரும். மற்றபடி சாதாரணமாக இருப்பர்… . அதனால் சந்தியா கேட்பதை , பிடித்ததைச் செய்து கொடுங்கள் . அப்புறம் இனி சந்தியா பயணம் மேற்கொள்ளலாம் .”என்று சொல்ல, 

சந்தியா கண்ணில் நன்றி பொங்கப் பார்த்தாள் .

இரண்டு நாளில் சந்தியாவின் பெற்றோர்,  தூத்துகுடிக்கு அழைத்துப் போக வந்தனர்..

 கார் புறப்பட்டதும் , சந்தியா நிம்மதியாக உணர்ந்தாள்

அத்தியாயம் 41

அன்று தங்கள் கடை கணக்குப் பற்றிச் சில விசயங்களைப் பேச ,  சுவாமிநாதனின் ஆடிட்டர் அலுவலகத்திற்குச் சங்கரன் வர , அங்கு ரஞ்சனியைப் பார்த்து அதிர்ந்தார் .

ரஞ்சனியும் அவர் உள்ளே நுழையும் போதே பார்த்து விட்டாள் , தர்மசங்கடம் வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டாள் . 

“நல்லா இருக்கியாமா? “என்று அவரே வழிய வந்து நலம் விசாரிக்க ,

“நன்றாக இருக்கிறேன்….” என்று புன்னகைத்தாள் .

சங்கரன் கண்கலங்க , “உன்னை இங்கே பார்த்தது மிகவும் சந்தோஷம் . சி.ஏ.  பாஸாகி விட்டாயாமா?”

“முதல் முயற்சியிலே பாஸ் செய்து விட்டேன்” என்றாள் பெருமையாக .

“வாழ்த்துக்கள்  . வீட்டில் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லும்மா  . நீ எப்படி இருக்கிறாயோ…? என்ற  கவலை மனதில் இருந்து கொண்டே இருந்தது…”

“இன்று உன்னை இப்படிப் பார்க்கையில்…” என்று கண்ணில் ஒரு பெருமிதத்தோடு , 

“ நிம்மதியாக இருக்கிறதும்மா . “

ரஞ்சனியும்  அவருடைய உண்மையான தவிப்பையும் , அன்பையும் கண்ணில் பார்த்தாள் , புரிந்து கொண்டாள் . 

ரொம்ப நேரமாக இருவரும் பேசிக்கொண்டு இருப்பதைத் தன் அறையில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்த ரகு , “பிரச்சனையோ…?” என்று நினைத்து அருகில் வந்து ,  

“ஹலோ ஸார்….” என்றான் .

பின் ரஞ்சனியைப் பார்த்து , “ஏதாவது உதவி தேவையா?” என்று கேட்க ,

“இல்லை…..” என்றவள், பின் ரகுவிற்கு தன் முன் கதைச் சுருக்கம் தெரிந்து இருக்கும் என்று அனுமானித்தவள் , “உங்களுக்கு தெரியுமே  , சங்கரன் அங்கிள்… , ரொம்ப நாள் கழித்து…. , சற்றே தயங்கி என்னை இப்படிப் பார்க்கிறார் , அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் .”

சங்கரனும் மெலிதாகப் புன்னகைக்க , ரகுவிற்கு நிலைமை தெளிவாகப் புரிந்தது . 

அவனுக்கு சங்கரன்  பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் , ரஞ்சனிக்குத் தான் இருப்பதைக் காட்ட விரும்பினான் . அதனாலே தான் வேண்டும் என்றே வந்து இடைபுகுந்தான்  .

“ஓ.கே…, ஓ.கே….  நீங்கள் பேசுங்கள்….” என்று  இருவர் மீதும் ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசி விட்டு நகர்ந்தான்  .

“நன்றிம்மா,  என்றும் நான் உனக்கு  அங்கிள் தான்..” என்றவர் ,பின், ரகுவைக் கண்ணால் காண்பித்து ,” நீ நல்ல இடத்தில் தான் இருக்கிறாய் . நீ நன்றாக வருவாய்…” என்று வாழ்த்தி விட்டு கிளம்பினார் . 

சங்கரன் சொன்னதை யோசித்தபடியே ரகுவைப் பார்க்க , அதே நேரம் ரகுவிற்கும் உள்ளுணர்வு உந்த , அவனும் திரும்பிப் பார்க்க ,

 ஒரு சில விநாடிகள் இருவர் கண்களும் உரச , ரகுவின் பார்வையைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் , ரஞ்சனி பார்வையைத் திருப்ப ,

ரகு மனதில் ஒரு குறுகுறுப்பை உணர்ந்தான் . 

சங்கரனிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்து அமர்ந்தவன் . ரஞ்சனிக்காகப் பதட்டபட்டு , உள்ளே புகுந்த செயலை  என்னவென்று  யோசிக்க முயல , 

அதற்குள் போன் அடிக்க , அதில் கவனமானான் .

வழக்கம் போல் ஹரிணி தன் விசாரணையை  ஆரம்பிக்க , அப்பாவின் நண்பர் என்று மட்டும் சொன்னாள் . 

பின்னர், கால்களை காண்பித்து, “உணர்ச்சி வசப்பட்டு விட்டார்…” என்று முடித்துக் கொண்டாள் .

ரஞ்சனி அன்றே சங்கரனைப் பார்த்ததை  , நடந்த விசயங்களை வீட்டில் தெரிவித்தாள் . 

 “பார்த்துக்கலாம்….” என்று அவர்களும்  தைரியப்படுத்தினர் .

அத்தியாயம் 42

தூத்துக்குடியில் சந்தியா முதல் வாரம் நிம்மதியாகப் பிடித்ததை உண்டு உறங்கினாள் . 

சந்தியாவும் அதிகம் பேசாத குணம் என்பதால் மாமியாரைப் பற்றி போனில் லேசாக சொல்வதோடு நிறுத்தி கொள்வாள் . 

அப்படிச் சொல்லும் பொழுதும் எல்லா வீட்டிலும் நடப்பது தான் சீக்கிரம் சரியாகி விடும் என்று விடுவார் அம்பிகா.

சந்தியா சற்று தெம்பான பின் , யாரிடமாவது இதைப்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற , 

மெதுவாக, வீட்டில் நடக்கும் கதைகளை அம்மாவிடமும் தங்கையிடமும் பகிர ஆரம்பித்தாள்.

“உனக்கு எவ்வளவோ பரவாயில்லை , உன் பாட்டி ஏத்திவிட்டு , நான் பலமுறை  உன் அப்பாவிடம் அடியே வாங்கியிருக்கிறேன் . உன் புருஷன் தங்கம் , உன்னை அதிர்ந்து கூட திட்டுவதில்லை , அட்ஜெஸ்ட் செய்து போ…”  என்று அம்பிகா எழுந்து போய் விட்டார். 

தன் அம்மா தன்னுடைய வேதனைகளைக் கேட்க கூடத் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டாள் . சந்தியா தொடர்ந்து பேசாமல் அமைதியானாள். 

“அம்பிகாவோ  பிரச்சனை பெரிதாகிவிடுமோ…?” என்ற பயத்திலே முடிக்க நினைத்தாள் . 

விந்தியா அவள் கவலைகளைப் புரிந்து கொண்டாள் . அக்காவிற்கு ஆதரவாக தட்டிக் கொடுத்தாள் . 

பின் மெதுவாக , “எனக்கு உன் உணர்வுகள் நன்றாகப் புரிகிறது அக்கா…” என்று  ஆரம்பிக்க ,

சந்தியா உடைந்தாள் . 

“அது என்னுடைய வீடு என்ற உணர்வே  இல்லை விந்தியா . என் இஷ்டத்துக்கு எந்த விசயமும் செய்ய முடியாது . சின்ன சின்ன மாற்றங்கள் கூட செய்ய முடியாது . கணவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கக் கூட முடியாது , பரிமாற முடியாது . அப்படிச் செய்யாதே…, இப்படிச் செய்யாதே…. , என்று தினமும் குற்றம் குறைகள் இல்லை எங்கள் வீட்டில் இப்படித்தான் என்று கட்டளைகள்  ” சலித்து, அலுத்து விட்டது விந்தியா….. இப்படித்தான் ஒருமுறை , யூ டுயுப்பில் பார்த்துப் பாகற்காயை வறுவல்  செய்திருந்தேன்… .”

“ம்ம்….”

“ மாமாவுக்கும், அவருக்கும் பிடித்திருந்தது . மாமா கூட இதில் கசப்பு தெரியவில்லை, நன்றாகவே உள்ளது . இனி இப்படியே செய்யம்மா…” என்று பாராட்டினார் . இவரும் விரும்பி உண்டார் .

“ஆனால், அதன் பின் எங்கள் வீட்டில் பாகற்காயே வாங்குவதில்லை . நானும் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டேன் . பலன் என்னமோ பூஜ்ஜியம் தான் .”

“அத்தானிடம் பேச வேண்டியது தானே….”

“பல நேரம் என்னுடைய உணர்வுகள் அவருக்குப் புரிவதே இல்லை. அப்படியே புரிந்தாலும் இதெல்லாம் சின்ன விசயம் , விடு சந்தியா…” என்று முடித்து விடுகிறார்.

 “என் மகன், எனக்குத் தான் என்று தன் உரிமையை அதிகம் நிலைநாட்டப் பார்க்கிறார் . இவர்களெல்லாம் ஏன்தான் மகனுக்குத் கல்யாணம் செய்கிறார்கள்?” என்று சலித்தாள்.

“இது எல்லா ஒற்றை பிள்ளைகள் வீட்டிலும் நடக்கும் விசயம் தான் அக்கா .”

“புரிகிறது விந்தியா , அதைக் கூட பொருத்துப் போகலாம் பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது நிகழ்வது தான் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், தானே முதன்மை என்று காட்டுவதற்காக என்னை மட்டம் தட்டுவதைத் தான் தாங்க முடியவில்லை….” என்று கண்ணைத் துடைத்தவள்,

“ பட்டிக்காடு ,  ரசனை கிடையாது , விவரம் தெரியாது , முட்டாள்…”  என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை கேவலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

“இதற்கு அத்தான் என்ன சொல்கிறார்…?” என்று கடுப்புடன் கேட்க,

“பாதி நேரம் அவர்கள் மட்டம் தட்டுவது , இவருக்குப் புரிவதே இல்லை , அப்புறம் நான் விளக்கினால் இன்ஸ்டென்டாக ‘ஸாரி’ என்று ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார் . அதைச் சொல்லி சமாளித்து விடுவார் . “

“என் வலி அவருக்குப் புரியவே இல்லை . எனக்காக அம்மாவிடம் பேசுவோம் , அதைத் தீர்ப்போம் என்று எந்த முயற்சியும் கிடையாது . அம்மா பேச்சைக் கேட்கும் அம்மா பிள்ளை  . மொத்தத்தில் தலையாட்டும் பொம்மை…” என்றாள் விரக்தியாக .

“அக்கா……” என்று தங்கை வருத்தப்பட ,

“இதையெல்லாம் ஜீரணிக்க முயன்றாலும் , இந்த மூன்று மாதமும் அவர்கள் படுத்திய பாடு , தாங்க முடியவில்லை விந்தியா ….“

குழந்தை உண்டாகியிருக்கிறாளே , அவள் ஆசை என்ன? பிடித்தம் என்ன? என்ற கேள்விகளே கிடையாது , இது நல்லது , ஆரோக்கியமானது , சத்தானது என்ற கட்டளைகள் மட்டுமே . மறுத்தால் ஒரே பெரிய கதாகாலட்சேபமே நடை பெறும் . முடியவில்லை விந்தியா . எப்போது பிய்த்து கொண்டு வருவோம் , தப்பித்து வருவோம் என்று காத்திருந்தேன் . மீண்டும் அங்கே போக வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது… .”

“அக்கா உன் பிரச்சனை நன்றாகப் புரிகிறது . ஆனால் நீ ஒரு விசயத்தை யோசிக்க வேண்டும் . நம் அம்மா பழைய பஞ்சாங்கம் , அவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை . மேலும் அவர் குரல் எடுபடாது….“

இதை அப்பாவிடம் எடுத்துச் சென்றால் , அவருக்கு இந்த நுண்ணுணர்வுகளெல்லாம்  புரியும் என்று நம்பிக்கை எனக்கு இல்லை . அப்படியே புரிய வைத்தாலும் நம் அப்பாவோ வெட்டு ஒன்று  துண்டு இரண்டு  பேசும் ஆசாமி . இந்த விசயத்தை உன் வீட்டில் அவர் பேசினால் , ஏதாவது ஒருபக்க உறவு தான் உனக்கு கிடைக்கும்….” என்று வீட்டின் நிலைமையைப் பளிச்சென்று போட்டுடைத்தாள் .

 “மேலும் நம் பக்க உறவுகள் , எப்போதுடா வம்பு கிடைக்கும் அலையும் கோஷ்டிகள் . உன் விஷயம் வெறும் வாய்க்கு அவல் கொடுத்த மாதிரி ஆகிவிடும் . இதைப் பெரிய விசயமாக்கி விடுவார்கள் . அப்படியே இதை வைத்தே ,பொண்ணை  வளர்க்க  தெரியவில்லை என்று  அம்மாவையும் ஒரு வழி பண்ணிவிடுவார்கள் ….“

அனைத்தையும் கேட்டு சந்தியா திகைத்தாள் .

 தன்னுடைய நிலைமை பட்டவர்த்தனமாகப் புரிந்தது . தனக்கான கதவுகள் பிறந்த வீட்டில் மூடப்பட்டதைத் தெளிவாக உணர்ந்தாள் . மனம் வாடினாள் .

அக்காவையே பார்த்து கொண்டிருந்த விந்தியா , “கவலைப்படாதே அக்கா , நான் சொல்வதைக் கவனமாக கேள் . நீ விரும்பிய மாற்றத்தை அத்தான் இப்போதைக்கு நிகழ்த்தவில்லையென்றாலும் காது கொடுத்தாவது கேட்கிறார். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் , பொறுமையாக கையாள் . நிச்சயம் மாற்றம் நிகழும்… .”

“எனக்கு நம்பிக்கை இல்லை விந்தியா . அவருடைய நோக்கம் என்னை சமாளிப்பது மட்டுமே…” என்றாள் விரக்தியாக .

“சரி அப்படியே இருக்கட்டும் , உனக்கு ஒரு குழந்தை வரப் போகிறது , அதில் கவனத்தைச் செலுத்து , மற்றதெல்லாம் உனக்கு இரண்டாம் பட்சமாகிவிடும் . மேலும் அத்தானுக்கும் கொஞ்ச நாட்களில் என் பிள்ளை , என் குடும்பம் என்று பிடிப்பு வந்து சீக்கிரம் மாறுவார்” என்று நம்பிக்கை ஊட்டினாள்.

‘தன் குழந்தை தான் தன்னோட பிடிப்பு…’ என்று சந்தியாவிற்கு ஆணித்தரமாக மனதில் பதிந்தது . நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்நோக்க தயாரானாள் .

ஒரு மாதத்திற்குப் பின் சென்னை சென்றாள் . பிள்ளை என்ற பிடிப்பை மனதில் வைத்துச் சமாளித்து , ஏழாம் மாதம் வளைகாப்புச் செய்து , மீண்டும் தூத்துக்குடி வந்தாள் .

தொடரும்……